
1993-2021
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுமுடிவுகளையும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் 1993 ஆகஸ்டு 15ஆம் நாள் தோன்றியதே வரலாறு ஆய்விதழ். தொடக்கத்தில் அரையாண்டிதழாக ஐந்து இதழ்கள் வெளியாயின. 1996இல் ஆண்டிதழாக மாறிய வரலாறு இதுநாள்வரை 30 இதழ்களைக் கண்டுள்ளது. வரலாறு 25ஆம் தொகுதியின் வெளியீட்டு விழா 31.10.2015 அன்று வரலாறு டாட் காம் மின்னிதழ்க் குழுவினரால் சென்னையில் வெள்ளிவிழாவாக நடத்தப்பெற்றது. 25 தொகுதிகளின் வழி வரலாறு ஆய்விதழ் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளதை இதழின் தலையங்கப் பக்கம் பகிர்ந்துகொண்டது.
‘25 தொகுதிகளின் வழி வரலாறு இதழ் சாதித்திருப்பது என்ன? தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட 570 கல்வெட்டுகளை இந்த இதழ் பதிவுசெய்துள்ளது. பல கோயில்களிலிருந்து நடுவணரசால் படியெடுக்கப்பட்டுப் பாடம் வெளியாகாதிருக்கும் 408 கல்வெட்டுகளின் முழுமையான பாடங்களைப் ‘பதிப்பிக்கப்படாத பாடங்கள்’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு பதிப்பித்துள்ள கல்வெட்டுகள் சிலவற்றின் விட்டுப்போன தொடர்ச்சிகளைக் களஆய்வுகளில் கண்டறிந்து பதிவுசெய்துள்ளது. செப்பேடுகள் சிலவற்றை வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது.
ஆய்வுக்கட்டுரைகள் என்ற தலைப்பின் கீழ் இலக்கியம் சார்ந்து 17 கட்டுரைகளும் குடைவரைகள், ஒருகல் தளிகள், கற்றளிகள் ஆகியவற்றின் விரிவான ஆய்வின் வெளிப்பாடாக 85 கட்டுரைகளும் வரலாற்றின் பல்வேறு பிரிவுகள் சார்ந்து 48 கட்டுரைகளும் இந்த 25 இதழ்களில் பதிவாகியுள்ளன. பெருமைச்சுவடுகளாக இந்த மண்ணின் அறிவுவளத்தைப் பெருக்கியவர்கள் இதழ்தோறும் வெளிப்பட்டிருக்கிறார்கள். வரலாறு இதழின் வாழ்க்கைப் பயணத்தில் உள்ளத்தைத் தொட்டவர்கள், உண்டாலம்ம இவ்வுலகம் என்று நெகிழச் செய்து அதன் பக்கங்களாகியிருக்கிறார்கள். இலக்கியங்களின் சில முத்திரைப்பதிவுகள் பெட்டிச் செய்திகளாக வரலாற்றின் ஒவ்வோர் இதழையும் ஒப்பனை செய்துள்ளன. அத்யந்தகாமம், வரலாற்றின் வரலாறு, வலஞ்சுழி வாணர் எனும் மூன்று ஆய்வு நூல்கள் வரலாறு இதழின் உடன்பிறப்புகளாக முகிழ்த்துள்ளன.
ஓர் ஆய்வாளனின் பிறப்பும் வளர்ச்சியும் பற்றிய பதிவுகள் வரலாற்றிற்கும் வரும் தலைமுறை ஆய்வாளர்களுக்கும் வழிகாட்ட உதவும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்டதே திரும்பிப்பார்க்கிறோம் தொடர். ஒன்பதாண்டுகளாக ஆயிரம் பக்கங்களைக் கடந்த நிலையில் ஆய்வுவாழ்க்கையின் படப்பிடிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த அனுபவப் பதிவு, வாழ்க்கை வரலாற்றின் ஒரு புதிய முகம். ஓர் ஆய்விதழ் 25 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்து எண்ணம் கொண்டிருந்தோமோ அவற்றில் சிலவற்றையேனும் செம்மையாகச் செய்திருக்கிறோம் என்ற நிறைவோடு இந்த வெள்ளி இதழை உங்கள் கைகளில் வழங்குகிறோம்.
23 ஆண்டுகளில் 25 இதழ்கள். பாடுகளுக்கு எப்போதுமே பயன்கள் உண்டு. உடனிருந்து உழைத்தவர்களுக்கும் வரலாறு இதழின் 11ஆம் தொகுதி முதற்கொண்டு இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் நல்கை இதழுக்குக் கிடைக்குமாறு துணைநின்ற வரலாற்றறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், எம். ஜே. எஸ். நாராயணன் ஆகியோருக்கும் வரலாறு இதழ் கடப்பாடுடையது.
உண்மைகளின் பாதை துன்பமானதுதான்; தளர்ச்சி தருவதுதான். என்றாலும், உழைப்பு அவற்றை நேர்செய்கிறது. வரலாறு என்னும் பேரண்டத்தில் சில துகள்களையேனும் எங்களால் உலவவிட முடிந்திருப்பதே உறவுகள் உடன்நின்ற ஊக்கத்தால்தான். இந்த 25 இதழ்ப் பயணத்தில் கையிணைத்த நல்ல உள்ளங்களை நன்றியோடு வணங்குவதினும் வேறென்ன செயவல்லோம்.’
2016இல் வெளியான வரலாறு 26ஆம் தொகுதி தவத்துறை சப்தரிஷீசுவரர், பூரத்தூர் முக்தீசுவரம், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளையும் உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதரில் படியெடுக்கப்பட்டுப் பாடம் வெளியாகாத கல்வெட்டுகளையும் பதிவுசெய்துள்ளது. ஆய்வில் கண்டறியப்பட்ட தவத்துறை சப்தரிஷீசுவரர், திருஎறும்பியூர் எறும்பீசுவரர்க் கோயில் கல்வெட்டுகள் சிலவற்றின் விடுபட்ட பகுதிகள் விட்டுப்போன தொடர்ச்சிகளாக இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
சங்க காலத்தின் காலம்? வெள்ளறைக் குடைவரை, குடக்கூத்து, தவத்துறைக் கல்வெட்டுகள்-1, நகரி மாடக்கோயில், குலாலகோட்டையூர்க் குடைவரை, முழங்கால் (ஜாநு), திருப்பேர் நகர், இராஜராஜரின் புதல்வியர் மூவர் எனும் 9 ஆய்வுக்கட்டுரைகள் வரலாறு 26இல் பதிவாகியுள்ளன.
2017இல் வெளியான வரலாறு 27ஆம் தொகுதியில் கூத்தப்பார் மருதீசர், பாச்சில் மேற்றளி-ஆதிநாயகப் பெருமாள் கோயில்களிலும் உறையூர்க் குளத்திலும் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளுடன் பாச்சில் அவனீசுவரம் – மேற்றளிக் கோயில்களிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்களும் எறும்பியூர்க் கோயில் கல்வெட்டொன்றின் விட்டுப்போன தொடர்ச்சியும் பதிவாகியுள்ளன.
கழுகுமலைக் குடைவரை, கூத்தப்பார் மருதீசர், தவத்துறைக் கல்வெட்டுகள் -2, புதுப்பட்டிக் குடைவரை, பெருமுடியீசுவரம் மீளாய்வு, அரிட்டாபட்டிக் குடைவரை, தமிழமுதம்-1, மணப்பாடு குடைவரை, ஐந்தொகை காட்டும் தமிழர் சமயமும் கட்டடக்கலையும், நங்கவரம் சுந்தரேசுவரர், பசுபதிகோயில் எனும் 11 ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழில் இணைந்துள்ளன.
2018இல் வெளியான வரலாறு 28ஆம் தொகுதியில் உத்தமசீலிச் செங்கனிவாய்ப் பெருமாள், செந்துறைப் பெருமானடிகள், பாலைத்துறை மகாதேவர், எறும்பியூர் எறும்பீசுவரர் கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள், பாலைத்துறை மகாதேவர், துடையூர் விஷமங்களேசுவரர் கோயில்களில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்கள் ஆகியவற்றுடன் பாலைத்துறை மகாதேவர்கோயில் கல்வெட்டொன்றின் விட்டுப்போன தொடர்ச்சியும் இடம்பெற்றுள்ளது.
தமிழமுதம்-2, சேய்ஞலூர் மாடக்கோயில், சோழமாதேவி கயிலாசநாதர், சிங்கப்பெருமாள் குடைவரை, பாச்சில் கல்வெட்டுகள், வைகல் மாடக்கோயில், அகச்சாரல், கற்குடிக் கோயில் கல்வெட்டுகள்-1, வெள்ளறை வடஜம்புநாதர் எனும் தலைப்புகளில் 9 ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழில் உள்ளன.
2020இல் வெளியான வரலாறு ஆய்விதழ் 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த தொகுதியாக (29-30) திகழ்ந்தது. சிங்களாந்தகபுரம் அமரேசுவரம், எறும்பியூர் எறும்பீசுவரம், பேட்டைவாய்த்தலை மதுராந்தக ஈசுவரம், பாப்பாப்பட்டி, பத்தாளப்பேட்டை, கோட்டாரப்பட்டி, பனங்காட்டங்குடி ஆகிய இடங்களில் கண்டறிந்த புதிய கல்வெட்டுகள், கொல்லிமலை நடுகல் கல்வெட்டு, அமரேசுவரம், மதுராந்தக ஈசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம், பைஞ்ஞீலி நீலிவனநாதர் கோயில் கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்கள் ஆகியவற்றுடன் கட்டங்கம் கையதே, வட, தென்பரங்குன்றக் குடைவரைகள், மல்லூர் அரங்கநாதர், கற்குடிக் கோயில் கல்வெட்டுகள்-2 எனும் 5 ஆய்வுக்கட்டுரைகளும் இவ்விதழில் பதிவாயின.
இப்போது கிடைக்கும் வரலாறு தொகுதிகள்
1. வரலாறு 27

2. வரலாறு 28

3. வரலாறு 29-30
