டாக்டர் இரா. கலைக்கோவன்

அண்மைக் காலத்தே அரசு விடுமுறைநாளாக அறிவிக்கப் பெற்ற தைப்பூசத் திருவிழா தேவாரம் பாடிய மூவருள் அப்பர், சம்பந்தர் பதிகங்களில் சிறக்கக் குறிக்கப்பட்டுள்ளது. பொதுக் காலம் 6ஆம் நூற்றாண்டிலேயே இவ்விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை அவர்தம் பாடல்கள் சுட்டுகின்றன. ‘பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த’ என்று போற்றுமளவு பெருமையுடன் நிகழ்ந்த இத்தைப்பூசவிழாவை மேலும் பெருமைப்படுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழராட்சியில் திருக்கூத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
வீரபாண்டியன் தலைகொண்ட பரகேசரிவர்மரான சோழஅரசர் ஆதித்தகரிகாலரின் 4ஆம் ஆட்சியாண்டின்போது திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயில் வளாகத்திருந்த நாடகசாலையில், அவ்வூரை நிருவகித்த நகரத்தார், அவ்வூரை உள்ளடக்கியிருந்த திரைமூர்நாட்டின் ஆட்சிக்குழுவினரான நாட்டார், கோயில் தேவகன்மிகள் ஆகியோர் கோயில் செயல்அலுவலரான பராந்தக மூவேந்தவேளார் தலைமையில் கூடி, தைப்பூசம், வைகாசித் திருவாதிரை விழாக்களின் போது கோயிலில் கூத்து நிகழ்த்த முடிவுசெய்தனர்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் சோழர் காலத்தே பலவகைக் கூத்துகள் ஆடப்பட்டன. சாந்திக்கூத்து, சாக்கைக்கூத்து, தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, விநோதக்கூத்து எனும் அவற்றுள், ஆரியக்கூத்தைத் தேர்ந்த கோயிலார் அக்கூத்தில் வல்லாராகத் திகழ்ந்த கீர்த்தி மறைக்காடனான திருவெள்ளறைச் சாக்கைக்குக் கூத்தாடும் வாய்ப்பை அளித்தனர்.
தைப்பூசத்தன்று ஒரு கூத்தும் இறைவன் தீர்த்தமாடிய மறுநாள் தொட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து மூன்று கூத்துகளும் அது போலவே திருவாதிரைக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து மூன்று கூத்துகள் ஆடவும் முடிவானது. ஒவ்வொரு கூத்தும் ஓர் அங்கமென ஏழங்கம் ஆரியக்கூத்தாட இசைந்த மறைக்காடனுக்குப் பிற செலவுகளுக்காகக் கோயில் பண்டாரத்திலிருந்து 14 கலம் நெல் அளிக்கப்பட்டதுடன், கோயிலுக்குச் சொந்தமான விளங்குடி நிலத்தில் ஒரு வேலி நிலம் வாழ்வூதியமாகத் தரப்பட்டது.


திருவிடைமருதூரில் நிகழ்ந்தாற் போலவே திருநள்ளாறு, திருவாவடுதுறை, வயலகம் கோயில்களிலும் ஆரியக்கூத்து ஆடப்பட்டது. திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயிலில் புரட்டாசித் திருவிழாவின்போது ஏழுநாட்கள் இக்கூத்து நிகழ்ந்தது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர், வயலகம் விசுவநாதசாமி கோயில்களில் ஆரியக்கூத்து நிகழ்த்தப்பட்டதையும் அதை ஆடும் உரிமை பெற்றிருந்த கூத்தர்களின் பெயர்களையும் அறிய முடிகிறதே தவிர, அக்கூத்து எப்போது நிகழ்த்தப்பட்டது என்பதற்குத் தகவல் இல்லை. இக்கட்டுரையாசிரியர் அறிந்தவரையில் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டாடப்பட்ட தைப்பூசத்திற்குத் தமிழ்நாட்டுத் திருக்கோயில் ஒன்றில் நான்குநாள் கூத்து நிகழ்த்தப்பட்டதைத் தெரிவிக்கும் கல்வெட்டுத் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மட்டுமே பதிவாகியுள்ளது.
தைப்பூசம் தமிழ்நாட்டின் பல கோயில்களில் பெருவிழாவாக நிகழ்ந்தமை சுட்டும் கல்வெட்டுகள் பரவலாகக் கிடைத்தபோதும் நித்தவிநோதரான முதலாம் ராஜராஜரின் பெரியவேளத்தில் பணியிலிருந்த (பெண்டாட்டி) நக்கன் கற்பகவல்லி, 1500 ஆண்டுகள் பழைமையானதான திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில் (பாச்சில் ஆச்சிராமம்) வளாகத்தில் பொ. கா. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பதிவுசெய்திருக்கும் கல்வெட்டு குறிப்பிடத்தக்கதாய் ஒளிர்கிறது. அக்கோயில் இறைவனின் மகளாகத் தம்மைக் கருதி, ‘தேவனார் மகள்’ என்று தம்மைப் பெருமையுடன் விளித்துக் கொண்ட கற்பகவல்லி, அவ்விறைவனிடம் தம்மைத் தலைப்படுத்திக் கொண்டமை சுட்டவே, அக்கால வழக்காறு ஒட்டி ‘நக்கன்’ என்னும் முன்னொட்டையும் தம் பெயரின் முன் கொண்டிருந்தார்.
தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி, மாற்றுரைவரதீசுவரரிடம் மாற்றுக்குறையா அன்பு கொண்டிருந்தமையால், வரதீசுவரர் வளாக வழிபாட்டையும் படையல்களையும் செழிப்பாக்க 201 கழஞ்சுப் பொன்னும் 2மா முக்காணி நிலமும் கொடையளித்து 5 அறக்கட்டளைகளை அங்கு நிறுவினார். அவற்றுள் ஒன்றே தைப்பூசத் திருவிழா. அத்திருநாளன்று இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்து அவருக்குப் பெருந்திருஅமுது படையலிடத் தேவையான ஒரு கலம் தூணிப்பதக்குப் போனகஅரிசி, நெய், பருப்பு, பெரும்பயறு, தயிர், மிளகு, உப்பு, பாக்கு, கறியமுது ஆகியவற்றுக்குக் கற்பகவல்லி கொடையிலிருந்து வரவான நெல் ஒதுக்கப்பட்டது.
போனகக்குருத்திடுவார், போனகம் இடுவார், நெல்குற்றிய பெண், விறகிட்டவர் ஆகியோருக்கான ஊதியம், அந்நாளில் இறைவன் உச்சம்போது உணவு கொள்கையில் 50 சிவயோகிகளும் 50 தவசிகளும் கோயிலில் உணவருந்த ஓராளுக்கு நாழி உரி என 100 பேருக்கு 1 கலம் தூணிப்பதக்கு 6 நாழி அரிசி, இவ்விருந்தைச் சமைத்தவர், சமைக்க விறகிட்டவர், நெல்குற்றியவர், உண்ணவந்தாருக்கு இலையிட்டவர், உரிய கலங்களிட்ட குயவர் ஆகியோருக்கும் கொள்ளுக்குமான நெல், விழாவை முன்னிருத்தித் தேவர்கன்மிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு கலம் நெல் ஆகிய அனைத்துச் செலவினங்களுக்குமாய் ஒதுக்கப்பட்ட நெல்லுமாகத் தைப்பூசத் திருவிழாவுக்காக ஆண்டுதோறும் 8 கலம் 2 தூணி 4 நாழி நெல் கணக்கிடப்பட்டுக் கொள்ளப்பட்டது.
விழாவில் இறைவழிபாடு, படையல் என்பதோடு நின்றுவிடாது, தவசிகளையும் யோகிகளையும் நினைந்தூட்டிய சிறப்பும் விருந்துக்காய் உழைத்தவர்களை உவப்போடு சிறப்பித்த பாங்கும் கற்பகவல்லியின் அன்புள்ளம் காட்டும் காலப் பதிவுகள். தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைக்கும் விழாக்காலக் கல்வெட்டுகளை ஒருங்கிணைத்துப் பார்த்தால் அக்காலச் சமூகப்போக்கும் சமயஞ்சார் சிந்தனைகளின் மக்கள் நோக்கும் வெளிப்படும் வாய்ப்புண்டு.
அருமை ஐயா நிறைய கருத்துக்கள் தெரிந்து கொண்டோம். தைப்பூசம் சிறப்பு இந்த காலகட்டத்தில் மாந்தர்
அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி🙏💕🙏💕🙏💕
LikeLike
எப்பொழுதும்போல மிகச்சிறந்த ஆய்வுக்கட்டுரை . பாராட்டுகள்.
LikeLike
அருமையான ஆய்வுக்கட்டுரை
LikeLike
பேரறிஞர் இராஜமாணிக்கனார், பெரியபுராணம் துணை கொண்டு, அக்காலக்கட்ட நிலைபாட்டை மனதிலேற்றி, ஆய்வு மேற்கொண்டார் என அறிந்துள்ளேன். அன்னாரது பணி செயற்கரியது. அவரது மகனும் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
LikeLike