பண்டிதரான படைத்தலைவர்

இரா. கலைக்கோவன்


ஒற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்

தமிழ்நாட்டு வரலாறு சங்க காலத்திலிருந்தே வீறுடைப் போர்க்களங்கள் பலவற்றைப் பார்த்துள்ளது. கரிகாலரின் வெண்ணிப்போரும் கோச்செங்கணானின் கழுமலப்போரும் இலக்கியங்களாகுமளவு வெற்றி கண்டன. ஒரு போர், அது எந்த நாடுகளுக்கிடையில் நடந்தாலும் எத்தகு அரச மரபுகளுக்கிடையில் நிகழ்ந்தாலும் விளைவு வெற்றி ஒருபக்கம், தோல்வி மற்றொரு பக்கம் என்பதாகத்தான் முடியும். அந்த வெற்றியும் தோல்வியும்தான் போரிடும் அரசுகளின் தொடர்ச்சியையோ, இறுதியையோ முடிவுசெய்கின்றன. திருப்புறம்பியத்தில் நிகழ்ந்த போர் அத்தகையது. பெருகியிருந்த பல்லவர்களைச் சுருட்டி வீசியும் சுருங்கியிருந்த சோழர்களை எழுச்சியுடன் பரவவும் வைத்த களமது! 

புறம்பியத்துக்கு முற்றிலும் நேர்மாறாக அமைந்த போர்களையும் தமிழ் மண் சந்தித்துள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பொதுக்காலம் 949இல் நிகழ்ந்த தக்கோலப் போர். முதற் பராந்தகர் ஆட்சியில் சோழர்களுக்கும் கன்னரதேவர் தலைமையில் இராஷ்டிரகூடர்களுக்கும் நிகழ்ந்த அப்பெரும் போரில், போரை எதிர்பார்த்துப் பல ஆண்டுக் காலம் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் படையுடன் தங்கியிருந்த சோழ இளவரசர் இராஜாதித்தர் யானைமேலிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார். கன்னரதேவரின் துணைக்கு வந்த கங்க அரசர் பூதுகன் இராஜாதித்தரின் யானை மேல் தாவியேறி அவரை அழித்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. சோழர் படை தோற்றது. கன்னரதேவர் வெற்றிப் பெருமையுடன் தொண்டை மண்டலத்தில் நுழைந்தமைக்கு அப்பகுதியில் கிடைக்கும் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன. 

கச்சியும் தஞ்சையும் கொண்டவராகக் கன்னரதேவர் தம்மைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டாலும், அவரது கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் வடபகுதியில் மட்டுமே பதிவாகியுள்ளன. போரில் கன்னரதேவர் வென்றிருந்தபோதும், சோழ அரியணையில் பராந்தகரே தொடர்ந்தார். சோழராட்சியின் கீழிருந்த ஒருபகுதிதான் கன்னரதேவரால் கைக்கொள்ளப்பட்டதே தவிர, தக்கோலப் போர் சோழர்களை வீழ்த்தவில்லை. தஞ்சாவூரும் கன்னரர் வயமாகவில்லை. 

தமிழ்நாட்டுப் போர்க்களங்களில் தங்கள் இன்னுயிரை இழந்த அரசர்கள் பலராவர். சோழ மரபிலேயே யானை மேல் துஞ்சியவர்களாக இருவர் உள்ளனர். ஒருவர் தக்கோலத்தில் கொல்லப்பட்ட இராஜாதித்தர். மற்றொருவர் கொப்பம் போரில் உயிரிழந்த முதல் இராஜாதிராஜர். போர்க்கள மரணம் வீரர்கள் பெருமைப்படுவதுதான் என்றாலும், அந்த இழப்பு, சிலருடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுகிறது. இராஜாதித்தருக்குத் தக்கோலத்தில் நிகழ்ந்த முடிவு ஒரு படைத்தலைவரைப் பண்டிதராக்கியது என்றால் நம்புவீர்களா? இது கதையல்ல வரலாறு.

வடசென்னையின் புகழ் மிக்க கோயில்களுள் ஒற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலும் ஒன்று. பாடல் பெற்ற அத்திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள், சமஸ்கிருதத்திலும் தமிழிலுமாய்ப் பொறிக்கப்பட்டுள்ள இராஷ்டிரகூட அரசர் கன்னரதேவர் காலக் கல்வெட்டொன்று (பொதுக்காலம் 959), திருவொற்றியூர் மடத்தைச் சேர்ந்த சதுரானன பண்டிதர், தாம் பிறந்த அவிட்ட நட்சத்திரத்தின்போது கோயில் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் செலவினங்களுக்காக நரசிங்கமங்கலத்து சபையாரிடம் 100 பொன் அளித்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. கல்வெட்டின் தமிழ்ப்பகுதி இறைவழிபாடு பற்றிய விரிவான செய்திகளைச் சுட்ட, சமஸ்கிருதப் பகுதி பண்டிதரின் பழைய வரலாறு பேசுகிறது.

ஒற்றியூர் கல்வெட்டுக்கள்

பிறை சூடிய சிவபெருமானுக்கு முருகன் மகனானாற் போலக் கேரள இராஜசேகரனுக்கு இவர் மகனானார். இளமையிலேயே திறமைகளின் ஊற்றாய் விளங்கிய இவர், உலக நலத்திற்கு உழைக்க விழைந்தவராய்ச் சோழநாடு வந்து தம் வீரத்தாலும் ஆற்றலாலும் சோழ இளவரசரான இராஜாதித்தரின் உளம் உகந்த படைத்தலைவரானார். இளவரசரோடு இணைந்திருந்தபோதும் உரிய நேரத்தில் உடனிருக்க முடியாமல் போனமையால் போரில் மன்னரோடு உயிரிழக்கும் வாய்ப்பிழந்தார்.

தம் மரபுவழிக்கும் தகுதிக்கும் தாம் ஏற்றிருந்த பொறுப்பிற்கும் பொருந்தாத அச்செயலால் உளம் நொறுங்கிய அவர், உலக சுகங்களை வெறுத்தொதுக்கி கங்கையை அடைந்தார். அதில் மூழ்கிய பிறகே அவர் மனம் தெளிந்தது. நாடெங்கும் திரிந்து ஒற்றியூரிலிருந்த நிரஞ்சன குருவின் குகையில் தங்கியபோது ஞானம் பிறந்தது. அக்குகையை நிருவகிக்கும் பொறுப்பும் வந்தடைந்தது. ‘சதுரானன’ என்ற புதிய பெயருடன் மடத்தின் தலைவராக மறுபிறப்பெய்திய நிலையில்தான், ஒற்றியூர் இறைவனுக்குத் தம் பிறந்தநாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் கொடையை அவர் அளித்திருக்கிறார். 

தக்கோலத்தில் உயிரிழந்த இராஜாதித்தருடன் களத்தில் இருக்கமுடியாமைக்கு வருந்தி, நாடெல்லாம் சுற்றி, ஒற்றியூரில் ஞானம் பெற்றுப் பண்டிதரான இந்தக் கேரளப் படைத்தலைவரை அடையாளம் காணப் பெண்ணையாற்றங் கரையிலுள்ள கிராமம் எனும் சிற்றூரில் விளங்கும் சிவலோகநாதசாமி கோயிலுக்கு வரவேண்டும். பொதுக்காலம் 938இல் திருமுனைப்பாடிநாடு என்றழைக்கப்பட்ட இப்பகுதியில்தான் சோழ இளவரசர்களான இராஜாதித்தரும் அரிஞ்சயரும் பெரும் படையுடன் போரை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். போர் நிகழும்வரை திருமுனைப்பாடியில் தங்கியிருந்த சோழர்கள் பல அரும்பணிகளைச் செய்தனர்.

தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் பிறந்த திருநாவலூரிலுள்ள திருத்தொண்டீசுவரத்தை இராஜாதித்தர் கற்றளியாக்கினார். திருக்கோவலூர்க் கோயில் பணிக்கு அரிஞ்சயரின் படைகள் துணைநின்றன. கேரளத்துத் திருநந்திக்கரைப் புத்தூரில் பிறந்து, இராஜாதித்தரிடம் பெரும்படை நாயகராகப் பொறுப்பேற்றிருந்த வெள்ளங்குமரன், தம் தலைவர் போலவே அப்பர் பெருமான் பாடல் பெற்ற கிராமத்து சிவன் கோயிலாம் ஆற்றுத்தளியைக் கற்றளியாக்கி அறக்கட்டளை அமைத்தார். அவரது இரண்டு கல்வெட்டுகள் சிவலோகநாதசாமி கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. அவரோடு அவரது கேரளப் படை வீரர்கள் பலரும் கோயிலுக்குப் பலவாய் அறங்களைச் செய்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. 

செய்திக் குறிப்பைத் தாங்கிய ‘இந்து’ நாளிதழ்

இராஜாதித்தரின் உள்ளத்துக்கு நெருங்கியவராகவும் சோழர்களின் பெரும்படை நாயகராகவும் விளங்கிய வெள்ளங்குமரன், தக்கோலப் போர்க்களத்தில் இராஜாதித்தர் உயிரிழக்க நேர்ந்தபோது உடனிருக்க முடியாமல் போனமை எதனால் என்பதை வரலாறு நமக்குக் கூறவில்லை என்றாலும், அப்பேரிழப்புக் குமரனை எத்தகு துன்பத்திற்கு ஆளாக்கியது என்பதையும் அதனால், அவர் வாழ்வியலே மாறி ஒற்றியூர்ப் பண்டிதராய் அவர் மறுபிறப்புற்றதையும் கல்வெட்டாய் நின்று காட்டத்தான் செய்கிறது. இடைவெளிகள் இல்லாமல் வரலாறு இல்லை. ஆனால், அதனாலேயே, வரலாறு இடைவெளிகளால் ஆனதுதான் என்றும் நினைத்துவிடக் கூடாது.  

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: