நூலாசிரியர் இரா. கலைக்கோவன்
1. கலை வளர்த்த திருக்கோயில்கள், 1984, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி. டி. கே. சாலை, சென்னை – 600 018, பக்கங்கள் 179, விலை ரூ. 20.
– நூலாசிரியரின் முதல் ஆய்வு நூல் – மானம்பாடி நாகநாதர் – பழையாறைச் சோமநாதர் – குடந்தை நாகேசுவரர் – மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் – உறையூர்ப் பஞ்சவர்ணேசுவரர், நாச்சியார் – கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில்களுடன், குடந்தை ஆறைவடதளி – மேற்றளி, திருச்சத்திமுற்றம், குமாரவயலூர், சோழபுரம், கொரநாட்டுக் கருப்பூர், கங்கைகொண்டசோழபுரம், கண்ணனூர், அரிசிற்கரைப்புத்தூர் சிவன் கோயில் குறித்த பதினாறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ள இந்நூல் தமிழ்நாடு அரசின் முதற் பரிசு பெற்றது.
2. காட்டுக்குள் ஒரு கலைக்கோயில், 1986, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 196, விலை ரூ. 20.
– நூலாசிரியரின் இரண்டாம் படைப்பு – அல்லூர்ப் பசுபதீசுவரர், எலுமிச்சம்பாளையம் சக்கராயி, ஆலம்பாக்கம் கயிலாசநாதர் – மாடமேற்றளி, ஐயாறு வடகயிலாசம், முள்ளிக்கரும்பூர், பனமங்கலம் வாரணபுரீசுவரர், உறையூர்த் தான்தோன்றீசுவரம், முழையூர்ப் பரசுநாதர், கோயிலடி அப்பக்குடத்தான் ஆகிய கோயில்கள் குறித்த கட்டுரைகளுடன் திருமலைநாயக்கர் செப்பேடு, சண்டீசக் குழப்பம், கல்லில் வடித்த காதல் கவிதைகள் எனும் பொதுக்கட்டுரைகளும் அடக்கம். சண்டீசக் குழப்பம் நான்குமுக சண்டேசுவரர் திருமேனிகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பரிசு பெற்ற நூல்
3. எழில் கொஞ்சும் எறும்பியூர், 1987, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 218, விலை ரூ. 20.
– நூலாசிரியரின் மூன்றாம் படைப்பு – திருஎறும்பியூர் மலைக்கோயில், திருவாசி மாற்றுரை வரதீசுவரர், கோயிலடி திவ்யஞானேசுவரர், திருவரங்கம், பஞ்சவன்மாதேவீசுவரம் குறித்த கட்டுரைகளுடன் தாட்சாயணி, சதுரமும் லலிதமும், தாமரைத் திருவடிக்கீழ், நவகண்ட நடுகற்கள் முதலிய செப்புத்திருமேனி, சிற்பம் சார் கட்டுரைகளும் சமுதாயத்தில் திருமுறைத் தாக்கம், வாருங்கள் வலம் வருவோம், கல்வெட்டுகளில் இசைக்கருவிகள் – சமுதாயம் மறுபார்வை ஆகிய பொதுக் கட்டுரைகளும் அடக்கம்.
4. சுவடழிந்த கோயில்கள், 1987, பாரி நிலையம், 184, பிராடுவே, சென்னை- 600 108, பக்கங்கள் 196, விலை ரூ. 18.
– திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் ஒலிபரப்பிய மூன்று அரைமணிநேர உரைகள் (சுவடழிந்த கோயில்கள்-1984, அழிந்துகொண்டிருக்கும் அழகுக் கோயில்கள்-1985, காலத்தால் அழியாத கலைக்கோயில்-1986) மூன்று கட்டுரைகளாக அமைய, முள்ளிக்கரும்பூர் ஒரு வரலாற்று விடியல், கோனேரிராஜபுரத்துக் குழப்பங்கள், குடந்தைக் கீழ்க்கோட்டம் கல்வெட்டுகள் எனும் தலைப்புகளில் செந்தமிழ்ச் செல்வியில் வெளியான மூன்று ஆய்வுக் கட்டுரைகள் உடன் இணைய உருவான இந்நூல் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது.
.
5. பழுவூர்ப் புதையல்கள், 1989, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 322, விலை ரூ. 35.
– தமிழ்நாட்டின் ஒரு சிறு பகுதியை ஆண்ட சிற்றரச மரபினரான பழுவேட்டரையர்கள் குறித்த ஆய்வுநூல். புதிய பார்வையில் பழுவூர் உண்மைகள், காற்றில் கரைந்து கொண்டிருக்கும் காவியக் கோயில்கள் (பகைவிடை ஈசுவரம், அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம், ஆலந்துறையார் கோயில், மறவனீசுவரம்), கல்வெட்டுப் பார்வையில் பழுவூர் எனும் தலைப்புகளில் அமைந்த பழுவூர் மரபு குறித்த விரிவான நூல்.
6. பழுவூர் அரசர்கள், கோயில்கள், சமுதாயம், 2002, இலக்கியப்பீடம் பதிப்பகம், 3 ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033, பக்கங்கள் 299, விலை ரூ. 75.
– பழுவூர்ப் புதையல்களின் மீள் வடிவாக்கம். பழுவேட்டரையர் கட்டமைப்புகள் மிக விரிவான அளவில் படம்பிடிக்கப்பட்டுள்ளமை தனிச்சிறப்பு. இலக்கியப்பீடப் பரிசு பெற்ற நூல்.
7. சோழர் கால ஆடற்கலை, 2003, அலமு பதிப்பகம் (முதற் பதிப்பு), சேகர் பதிப்பகம், (இரண்டாம் பதிப்பு) 66, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர், சென்னை – 600 078, பக்கங்கள், 288, விலை ரூ. 225.
– விஜயாலய சோழர் தொடங்கி அதிராஜேந்திரர் காலம் வரை அமைந்த ஆடற்கலைச் சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை ஆய்வுசெய்து ஆடற்கல்வி, கலைஞர்களும் கருவிகளும், அரங்கம், ஆடற்கலைஞர்களும் அவர்தம் வாழ்க்கையும் எனும் நான்கு தலைப்புகளில் எழுதப்பட்ட கலை ஆய்வுநூல். தமிழ்நாடு அரசின் முதற் பரிசு பெற்றது.
8. தலைக்கோல், 2004, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 264, விலை ரூ. 115.
– நூலாசிரியரின் ஆடற்கலை சார்ந்த இரண்டாம் ஆய்வுப் படைப்பு. தலைக்கோல், அப்பரும் அவிநயமும், காந்தள், தேர்க்குரவைகள், முதல் திருமுறையில் ஆடல் குறிப்புகள், அப்பர் என்னும் அரிய மனிதர், சங்க காலத்தில் ஆடற்கலை, சங்கம் மருவிய காலத்தில் ஆடற்கலை, பல்லவர்-பாண்டியர் காலத்தில் ஆடற்கலை, புதிய பார்வையில் சார்ங்கபாணி கரணங்கள் ஆகிய கட்டுரைகள் அடங்கிய நூல்.
9. வரலாற்றின் வரலாறு, 2006, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி – 620 018, பக்கங்கள் 146, விலை ரூ. 100.
– இலக்கியம், வரலாறு இரண்டிலும் கோலோச்சி முத்திரை நூல்களைப் படைத்த பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கனாரின் வாழ்வையும் ஆய்வுகளையும் ஏழு தலைப்புகளின் கீழ் விரிவாகப் படம்பிடிக்கும் ஆய்வுநூல். பின் இணைப்புகளாக இராசமாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர் குடும்பம், அவர் நினைவு போற்றும் அமைப்புகள், காலநிரல்படி அவர் நூல்கள், அவர் தொடர்பான ஒளிப்படங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.
10. மா. இராசமாணிக்கனார், 2006, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018. பக்கங்கள் 132 விலை ரூ. 25.
– இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் குறித்த படைப்பு. இலக்கியம், சமயம், வரலாறு, கோயிற்கலைகள், கல்வெட்டு ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை உடையவரும் ஆய்வு நெறிமுறையிலும் அணுகு முறைகளிலும் புதிய சிந்தனைகளை விதைத்தவரும் சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கத் தம் எழுத்தாலும் பேச்சாலும் பாடுபட்டவரும் மாந்தநேயமும் மொழி, நாடு இவற்றில் தளராப் பற்றும் கொண்டு உழைத்து உயருமாறு இளைய தலைமுறையை ஆற்றுப்படுத்தியவரும் பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, பத்துப்பாட்டு ஆராய்ச்சி, பெரியபுராண ஆராய்ச்சி, சைவ சமய வளர்ச்சி, தமிழ் மொழி இலக்கிய வரலாறு முதலிய காலம் கடந்து நிற்கும் அரிய நூல்களைப் படைத்தவருமான பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் எளிமை, இனிமை, உண்மை, உழைப்பு ஆகியவற்றை உரிய தளங்களில் பதிவு செய்திருக்கும் நூல்.
11. வாருணிக்கு எழுதிய வரலாற்று மடல்கள், 2010, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 224, விலை ரூ. 200.
– வரலாறு டாட் காம் மின்னிதழிலும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வரலாறு ஆண்டு ஆய்விதழிலும் எழுதிய பதின்மூன்று மடல் வடிவக் கட்டுரைகளின் தொகுப்பு. பரங்குன்றம் வடகுடைவரை வளாகப் புதிய கண்டுபிடிப்புகள், எனக்கு இந்தியா வேண்டாம், கட்டடக்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும், முல்லை நிலத்தில் ஒரு நாள், மகுடாகமம்-பரசிவம்-தங்கவிமானம், மெய்ப்பொருள் காண்பதறிவு, ஞாலவெளியில் ஒரு கால நடை, உண்மைகள் சுடும், காலந்தோறும் கல்வெட்டுத் தமிழ்நடை, பாராட்டுவோம், ஒரு மனிதன்-ஒரு கோயில்-ஒரு புத்தகம்- ஒரே குழப்பம், அழகாகுமா?, பெருமைச் சுவடுகள் ஆகிய கட்டுரைகள் பதிவாகியுள்ள நூல்.
12. சங்கச்சாரல், 2015, டாக்டர் மா. இராச மாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி – 620 018. பக்கங்கள் 224, விலை ரூ. 250.
– சங்ககாலத்தின் காலம்? சங்க இலக்கியங்களில் ஆடற்கலை, சமூகத்தரவுகள், பத்துப்பாட்டில் கட்டடக்கலை, தமிழமுதம், தேர்க்குரவைகள், காந்தள், ஐந்தொகை காட்டும் தமிழர் சமயமும் கட்டடக்கலையும், மன்றத்துப் புன்னையும் மாமன்னர் அப்பரும் எனும் ஒன்பது கட்டுரைகள் வழிச் சங்கச் செழுமையைக் காட்டும் நூல்.
13. இருண்ட காலமா?, 2016, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி – 620 018. பக்கங்கள் 224, விலை ரூ. 250.
– இருண்ட காலமா? பல்லவர்களின் பிராகிருதச் செப்பேடுகள், சிம்மவர்மரின் சமஸ்கிருதச் செப்பேடுகள், ஓங்கோடும் சுராவும், கோச்செங்கணானும் மாடக்கோயில்களும், சங்கம் மருவிய கால ஆடற்கலை, அரங்கேற்றுகாதையும் நாட்டியசாத்திரமும், குன்றக்குரவை – சில புதிய பரிமாணங்கள், சாந்திக்கூத்து. குடக்கூத்து, பிள்ளையார்பட்டிக் குடைவரை, மகேந்திரர் குடைவரைகள் ஓர் ஒப்பாய்வு, பத்திமைக்கால ஆடற்கலை எனும் 13 கட்டுரைகளும் இருண்ட காலத்தை வெளிச்சப்படுத்துகின்றன.
நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்
14. தளிச்சேரிக் கல்வெட்டு, 2002, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 261, விலை ரூ. 100.
– தஞ்சாவூர் ராஜராஜீசுவரம் திருக்கோயிலில் காணப்படும் ஆடல், இசை, கோயிற் பணிகள் தொடர்பான 56 மீட்டர் நீளத் தமிழ்க் கல்வெட்டின் மறு படிப்பில் விளைந்த விரிவான ஆய்வுக்கட்டுரை. இக்கல்வெட்டுக்குத் தளிச்சேரிக் கல்வெட்டு என்ற பெயரைச் சூட்டியவர்கள் இந்நூலாசிரியர்கள். திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர், பெருமுடி ஈசுவரர், கபிலர்மலைக் கோயில், தழுதாழைச் சிவன் கோயில் குறித்த ஆய்வுக்கட்டுரைகளுடன் சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் குறித்த விரிவான ஆய்வும் இடம்பெற்றுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுடன் குமாரவயலூர்க் கோயில் மீளாய்வுக் கட்டுரையாக, நத்தம் ஆதிமூலநாதப் பெருமாள் கோயிலில் கிடைத்த தனித்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் நத்தத்தில் பழையதும் புதியதும் என்ற தலைப்பில் பதிவாகியுள்ளன. கல்பாளையத்தில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சந்தியப்பன் கல்லில் சரித்திரச் சுவடுகளாக வடிவெடுத்துள்ளது.
15. அத்யந்தகாமம், 2004, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 186, விலை ரூ. 90.
– மாமல்லபுரம் ஒருகல் தளிகளில் (பஞ்சபாண்டவர் ரதங்கள்) கட்டட, சிற்ப, கல்வெட்டுச் சிறப்பு வாய்ந்த முத்தள ஒருகல் தளியான அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம் (தருமராஜரதம்) குறித்த முழுமையான ஆய்வுநூல். சிற்ப, கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் இதைக் கட்டமைத்தவர் இராஜசிம்மப் பல்லவரே என்பதை நிறுவும் நூல்.
16. மகேந்திரர் குடைவரைகள், 2004, அலமு பதிப்பகம் (முதற் பதிப்பு), சேகர் பதிப்பகம் (இரண்டாம் பதிப்பு), பக்கங்கள் 286, விலை ரூ. 225.
– தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த பல்லவப் பேரரசர் முதலாம் மகேந்திரவர்மரின் கலையாற்றல் பேசும் நூல். மண்டகப்பட்டு இலக்ஷிதாயதனம், பல்லாவரம் குடைவரை, மாமண்டூர்-நரசமங்கலம் குடைவரைகள், மகேந்திரவாடி மகேந்திர விஷ்ணுகிருகம், சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவரம், தளவானூர் சத்ருமல்லேசுவராலயம், சிராப்பள்ளி லளிதாங்குர பல்லவேசுவர கிருகம் ஆகிய ஏழு குடைவரைகள் குறித்த விரிவான ஆய்வுக்கட்டுரைகள். மகேந்திரர் குடைவரைகள் ஓர் ஒப்பாய்வு என்ற தலைப்பில் குடைவரைகளைப் பற்றிய திறனாய்வு. மகேந்திரரின் ஆளுமை ஆய்வாகப் பேரறிவாளர் என்ற தலைப்பில் தனிக் கட்டுரை. வல்லம், குரங்கணில் முட்டம், மேலைச்சேரிக் குடைவரைகள் மகேந்திரர் காலக் குடைவரைகளாக விளக்கம் பெறல். குடைவரைகளைப் பற்றித் தமிழில் வெளிவந்த முதல் விரிவான நூல்.
17. பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், 2005, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 248, விலை ரூ. 120.
– பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளும் பெண் தெய்வங்களின் தொன்மையான சிற்பங்கள், காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள் எனும் சிற்ப ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டறிக்கைகள் பதிப்பும் பயன்பாடும், கல்வெட்டுகள் தேடல்-தெளிதல்-பதிப்பித்தல்-சிக்கல்களும் தீர்வுகளும், கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் ஆகிய ஆய்வியல் பதிவுகளும் தலைப்பறை-மத்தளம்-சிரட்டைக் கின்னரி ஆகிய இசைக்கருவிகள் குறித்த ஆய்வுக் கட்டுரையும் உள்ளன. அரும்பாவூர்க் கோயில், சதுர்வேதிமங்கலம் உருத்திரகோடீசுவரர் கோயில் குறித்த புதிய கண்டுபிடிப்புகளுடனான விரிவான பதிவுகளும் பெற்றுள்ள நூல்.
18. வலஞ்சுழி வாணர், 2005, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 244, விலை ரூ. 120.
– குடந்தைத் தஞ்சாவூர்ச் சாலையில் 6 கி. மீ. தொலைவிலுள்ள திருவலஞ்சுழிக் கோயிலை முழுமையாக ஆய்வுசெய்து எழுதப்பட்ட நூல். ஆய்வின்போது பல புதிய கல்வெட்டுகளும் சிற்பத்தொகுதிகளும் கண்டறியப்பட்டன. கல்வெட்டுகள் சுட்டும் பிடாரி ஏகவீரி அடையாளப்பட்டதுடன் அவர் கோயிலும் கண்டறியப்பட்டது. கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள், இலக்கியம் சார்ந்து உருவான இந்நூல் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.
19. கோயில்களை நோக்கி . . . , 2006, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 228, விலை ரூ. 120.
– சிராப்பள்ளி வானொலியில் 12 வாரங்கள் தொடர்ந்து கோயில்களின் மேன்மை, அவை வரலாற்றுக் களங்கள் என்பன குறித்து மக்களிடம் பகிர்ந்த தரவுகளை ஒருங்கிணைத்துத் தலைமைக் கட்டுரையாக்கிப் பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளுடன் சேர்த்து உருவாக்கிய நூல். பல்லவர்களின் பிராகிருதச் செப்பேடுகள், சிம்மவர்மரின் சமஸ்கிருதச் செப்பேடுகள், ஓங்கோடு-சுராச் செப்பேடுகள், காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரம் குறித்த அம்ம அழகிதே, தேவதேவிக் கல்வெட்டுகள் ஆகிய கட்டுரைகளும் திருவலஞ்சுழிக் கோயில் ஆய்வுக்காலப் பதிவுகள் பேய்த்தொழிலாட்டி, யார் காரணம், மன்றத்துப் புன்னையும் மாமனிதர் அப்பரும், சில நேரங்களில் சில கேள்விகள், தட்டாத கதவுகள் திறப்பதில்லை, என்றைக்கு விழிப்பது, சாந்திக்கூத்து, வரலாறு காத்திருக்கிறது, ஆத்மாவின் அடையாளங்கள் எனும் பொதுக் கட்டுரைகளும் நகர் அப்பிரதீசுவரர் கோயில் தொடர்பான சமய சாசனம், நன்றியுடன் நகரிலிருந்து ஆகிய கட்டுரைகளும் திருநெடுங்களம் கோயில் ஆய்வில் வெளிப்பட்ட நெடுங்களத்தில் புதிய கல்வெட்டுகள், ஸ்ரீபுறக்குடிப்பள்ளி ஆகிய பதிவுகளும் மீட்டுருவாக்கத்திற்கு ஆளாகி இடம்பெற்ற நூல்.
20. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள், 2007, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 208, விலை ரூ. 100.
– தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடர்பான நூலாசிரியர்களின் ஆய்வுப் படைப்புகளில் இது இரண்டாம் தொகுதி. குன்றக்குடித் திருமடத்தின் ஆளுகையிலுள்ள குன்றக்குடிக் குடைவரைகள், பிரான்மலைக் குடைவரை, அரளிப்பட்டிக் குடைவரை, திருக்கோளக்குடிக் குடைவரை வளாகம் ஆகியன குறித்த விரிவான ஆய்வுநூல். இந்நான்கு இடங்களிலும் அகழப்பட்டுள்ள குடைவரைகள், செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் ஒப்பீடும் இடம்பெற்றுள்ள நூல்.
21. மதுரை மாவட்டக் குடைவரைகள், 2007, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 272, விலை ரூ. 150.
– தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடர்பான நூலாசிரியர்களின் மூன்றாம் ஆய்வுப் படைப்பு. அரிட்டாபட்டி, மாங்குளம், குன்றத்தூர், ஆனைமலை, பரங்குன்றம் ஆகிய இடங்களிலுள்ள அனைத்துக் குடைவரைகள், குடைவுத் திருமுன்கள், சிற்பங்கள் குறித்த முழுமையான ஆய்வுநூல். மதுரை மாவட்டக் குடைவரைகள் தொடர்பான ஒப்பீடும் இடம் பெற்றுள்ள நூல்.
22. தென்மாவட்டக் குடைவரைகள், 2009, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 208, விலை ரூ. 200.
– தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடரில் நூலாசிரியர்களின் நான்காம் ஆய்வுப் படைப்பு. தமிழ்நாட்டுத் தென்மாவட்டக் குடைவரைகளான திருமலை, கூத்தம்பூண்டியான் வலசு, மூவரைவென்றான், புதுப்பட்டி, திருத்தங்கல், பாறைக்குளம், செவல்பட்டி, கழுகுமலை, மலையடிக்குறிச்சி, வீரசிகாமணி, திருமலைப்புரம், சொக்கம்பட்டி, ஆண்டிச்சிப்பாறை, ஆனையூர், குரத்தியறை, சிவகிரி, விழிஞம், நந்திக்கரை ஆகிய 18 குடைவரைகள் குறித்த கட்டுரைகளுடன் அவை சார்ந்த ஒப்பீடும் இடம்பெற்றுள்ள நூல்.
23. புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், 2010, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 400, விலை ரூ. 300.
– தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடரில் நூலாசிரியர்களின் ஐந்தாம் ஆய்வுப் படைப்பு. புதுக்கோட்டை மாவட்ட மலையடிப்பட்டி, குன்றாண்டார்கோயில், மெய்யம், நகரத்தார்மலை, மலையக்கோயில், கோகர்ணம், தேவர்மலை, பூவாலைக்குடி, ஆய்ங்குடி, மாங்குடி, குலாலக்கோட்டையூர், குடுமியான்மலை, சிற்றண்ணல்வாயில் ஆகிய இடங்களிலுள்ள 20 குடைவரைகள் குறித்த கட்டுரைகளும் அவற்றின் ஒப்பீடும் உள்ள நூல்.
24. மாமல்லபுரம் குடைவரைகள், 2012, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 248, விலை ரூ. 250.
– தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடரில் நூலாசிரியர்களின் ஆறாம் ஆய்வுப் படைப்பு. மாமல்லபுரம், கழுக்குன்றம் குடைவரைகள் முதல்முறையாக நிறைவடையாக் குடைவரைகள், கருவறைத் தெய்வமற்ற குடைவரைகள், கருவறைத் தெய்வம் பெற்ற குடைவரைகள் என்ற முப்பிரிவுகளின் கீழ் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இக்குடைவரைகள் குறித்த ஒப்பீடும் இவற்றை உருவாக்கியவர் குறித்த கருதுகோள்களும் இடம்பெற்றுள்ள நூல்.
25. பல்லவர்-பாண்டியர்-அதியர் குடைவரைகள், 2012, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 352, விலை ரூ. 300.
– தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடரில் நூலாசிரியர்களின் ஏழாம் ஆய்வுப் படைப்பு. முதல் ஆறு தொகுதிகளில் இடம்பெறாத 20 குடைவரைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் பல்லவர் குடைவரைகள், அதியர் குடைவரைகள், பாண்டியர் குடைவரைகள் எனும் பெருந்தலைப்புகளின் கீழ்ப் பதிவாகியுள்ளன. சிங்கப்பெருமாள் கோயில் பாண்மலை, ஆவூர், சிங்கவரம், திரைக்கோயில், கீழ்மாவிலங்கை, அறையணிநல்லூர், பைஞ்ஞீலி ஆகிய ஊர்களிலுள்ள குடைவரைகளுடன் சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை, திருவெள்ளறைக் குடைவரைகள், தான்தோன்றிமலைக் குடைவரைகள் ஆகியன பல்லவர் குடைவரைகளாக அமைய, அதியேந்திர விஷ்ணு கிருகமும் நரசிம்மர் குடைவரையும் அதியர் குடைவரைகளாக இடம்பெற்றுள்ளன. பிள்ளையார்பட்டி, மகிபாலன்பட்டி, மணப்பாடு, பூதப்பாண்டி, குற்றாலம், திருச்செந்தூர் ஆகிய இடங்களிலுள்ள குடைவரைகள் பாண்டியர் குடைவரைகளாகப் பதிவாகியுள்ளன. 20 குடைவரைகள் குறித்த ஒப்பீடுமுள்ள நூல்.
26. தவத்துறையும் கற்குடியும், 2016, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 184, விலை ரூ. 200.
– சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் தொடரில் வெளிவந்த இம்முதல் நூலில் லால்குடி சப்தரிஷீசுவரர் கோயில், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில் குறித்த கட்டுமான, சிற்ப, கல்வெட்டுத் தரவுகள் அரிய ஒளிப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
27. வாணன் வந்து வழி தந்து . . . , 2016, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டிச் சாலை, கோயம்புத்தூர் – 641 048, பக்கங்கள் 284, விலை ரூ, 400.
– ‘வாணன் வந்து வழி தந்து’ எனும் 75 பக்கத் தலைப்புக் கட்டுரை ராஜராஜர் கால ஓவியப்பதிவின் வழிச் சுந்தரர் வாழ்க்கை காட்டும் பதிவு. அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப, கிராதார்ச்சுனர் கட்டுரைகள் தஞ்சாவூர் ராஜராஜீசுவரச் சிற்பத்தொகுதிகள் குறித்த விளக்கப் பதிவுகள். கல்வெட்டுகளின் அடிப்படையில் அமைந்த ராஜராஜரின் புதல்வியர் மூவர் வரலாற்றுலகிற்குப் புதிய செய்தி. இராஜராஜீசுவரம், கசிந்துருகிக் காதலாகிக் கண்ணீர் மல்கி ஆகிய இரு கட்டுரைகளும் தஞ்சாவூர்க் கோயிலின் பெருமை பேசுவன. பிற கட்டுரைகளாக வலஞ்சுழி சேத்ரபாலர், மாடக்கோயிலான திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர், நகரத்தார்மலை விஜயாலய சோழீசுவரம் ஆகியன உள்ளன.
இந்நூல்களில் இப்போது கிடைப்பவை
1. சங்கச்சாரல்
2. இருண்ட காலமா?
3. தவத்துறையும் கற்குடியும்
4. வாணன் வந்து வழி தந்து. . .
நூல்கள் பெற– +91 93451 11790