பண்டிதரான படைத்தலைவர்

இரா. கலைக்கோவன்


ஒற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்

தமிழ்நாட்டு வரலாறு சங்க காலத்திலிருந்தே வீறுடைப் போர்க்களங்கள் பலவற்றைப் பார்த்துள்ளது. கரிகாலரின் வெண்ணிப்போரும் கோச்செங்கணானின் கழுமலப்போரும் இலக்கியங்களாகுமளவு வெற்றி கண்டன. ஒரு போர், அது எந்த நாடுகளுக்கிடையில் நடந்தாலும் எத்தகு அரச மரபுகளுக்கிடையில் நிகழ்ந்தாலும் விளைவு வெற்றி ஒருபக்கம், தோல்வி மற்றொரு பக்கம் என்பதாகத்தான் முடியும். அந்த வெற்றியும் தோல்வியும்தான் போரிடும் அரசுகளின் தொடர்ச்சியையோ, இறுதியையோ முடிவுசெய்கின்றன. திருப்புறம்பியத்தில் நிகழ்ந்த போர் அத்தகையது. பெருகியிருந்த பல்லவர்களைச் சுருட்டி வீசியும் சுருங்கியிருந்த சோழர்களை எழுச்சியுடன் பரவவும் வைத்த களமது! 

புறம்பியத்துக்கு முற்றிலும் நேர்மாறாக அமைந்த போர்களையும் தமிழ் மண் சந்தித்துள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பொதுக்காலம் 949இல் நிகழ்ந்த தக்கோலப் போர். முதற் பராந்தகர் ஆட்சியில் சோழர்களுக்கும் கன்னரதேவர் தலைமையில் இராஷ்டிரகூடர்களுக்கும் நிகழ்ந்த அப்பெரும் போரில், போரை எதிர்பார்த்துப் பல ஆண்டுக் காலம் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் படையுடன் தங்கியிருந்த சோழ இளவரசர் இராஜாதித்தர் யானைமேலிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார். கன்னரதேவரின் துணைக்கு வந்த கங்க அரசர் பூதுகன் இராஜாதித்தரின் யானை மேல் தாவியேறி அவரை அழித்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. சோழர் படை தோற்றது. கன்னரதேவர் வெற்றிப் பெருமையுடன் தொண்டை மண்டலத்தில் நுழைந்தமைக்கு அப்பகுதியில் கிடைக்கும் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன. 

கச்சியும் தஞ்சையும் கொண்டவராகக் கன்னரதேவர் தம்மைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டாலும், அவரது கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் வடபகுதியில் மட்டுமே பதிவாகியுள்ளன. போரில் கன்னரதேவர் வென்றிருந்தபோதும், சோழ அரியணையில் பராந்தகரே தொடர்ந்தார். சோழராட்சியின் கீழிருந்த ஒருபகுதிதான் கன்னரதேவரால் கைக்கொள்ளப்பட்டதே தவிர, தக்கோலப் போர் சோழர்களை வீழ்த்தவில்லை. தஞ்சாவூரும் கன்னரர் வயமாகவில்லை. 

தமிழ்நாட்டுப் போர்க்களங்களில் தங்கள் இன்னுயிரை இழந்த அரசர்கள் பலராவர். சோழ மரபிலேயே யானை மேல் துஞ்சியவர்களாக இருவர் உள்ளனர். ஒருவர் தக்கோலத்தில் கொல்லப்பட்ட இராஜாதித்தர். மற்றொருவர் கொப்பம் போரில் உயிரிழந்த முதல் இராஜாதிராஜர். போர்க்கள மரணம் வீரர்கள் பெருமைப்படுவதுதான் என்றாலும், அந்த இழப்பு, சிலருடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுகிறது. இராஜாதித்தருக்குத் தக்கோலத்தில் நிகழ்ந்த முடிவு ஒரு படைத்தலைவரைப் பண்டிதராக்கியது என்றால் நம்புவீர்களா? இது கதையல்ல வரலாறு.

வடசென்னையின் புகழ் மிக்க கோயில்களுள் ஒற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலும் ஒன்று. பாடல் பெற்ற அத்திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள், சமஸ்கிருதத்திலும் தமிழிலுமாய்ப் பொறிக்கப்பட்டுள்ள இராஷ்டிரகூட அரசர் கன்னரதேவர் காலக் கல்வெட்டொன்று (பொதுக்காலம் 959), திருவொற்றியூர் மடத்தைச் சேர்ந்த சதுரானன பண்டிதர், தாம் பிறந்த அவிட்ட நட்சத்திரத்தின்போது கோயில் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் செலவினங்களுக்காக நரசிங்கமங்கலத்து சபையாரிடம் 100 பொன் அளித்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. கல்வெட்டின் தமிழ்ப்பகுதி இறைவழிபாடு பற்றிய விரிவான செய்திகளைச் சுட்ட, சமஸ்கிருதப் பகுதி பண்டிதரின் பழைய வரலாறு பேசுகிறது.

ஒற்றியூர் கல்வெட்டுக்கள்

பிறை சூடிய சிவபெருமானுக்கு முருகன் மகனானாற் போலக் கேரள இராஜசேகரனுக்கு இவர் மகனானார். இளமையிலேயே திறமைகளின் ஊற்றாய் விளங்கிய இவர், உலக நலத்திற்கு உழைக்க விழைந்தவராய்ச் சோழநாடு வந்து தம் வீரத்தாலும் ஆற்றலாலும் சோழ இளவரசரான இராஜாதித்தரின் உளம் உகந்த படைத்தலைவரானார். இளவரசரோடு இணைந்திருந்தபோதும் உரிய நேரத்தில் உடனிருக்க முடியாமல் போனமையால் போரில் மன்னரோடு உயிரிழக்கும் வாய்ப்பிழந்தார்.

தம் மரபுவழிக்கும் தகுதிக்கும் தாம் ஏற்றிருந்த பொறுப்பிற்கும் பொருந்தாத அச்செயலால் உளம் நொறுங்கிய அவர், உலக சுகங்களை வெறுத்தொதுக்கி கங்கையை அடைந்தார். அதில் மூழ்கிய பிறகே அவர் மனம் தெளிந்தது. நாடெங்கும் திரிந்து ஒற்றியூரிலிருந்த நிரஞ்சன குருவின் குகையில் தங்கியபோது ஞானம் பிறந்தது. அக்குகையை நிருவகிக்கும் பொறுப்பும் வந்தடைந்தது. ‘சதுரானன’ என்ற புதிய பெயருடன் மடத்தின் தலைவராக மறுபிறப்பெய்திய நிலையில்தான், ஒற்றியூர் இறைவனுக்குத் தம் பிறந்தநாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் கொடையை அவர் அளித்திருக்கிறார். 

தக்கோலத்தில் உயிரிழந்த இராஜாதித்தருடன் களத்தில் இருக்கமுடியாமைக்கு வருந்தி, நாடெல்லாம் சுற்றி, ஒற்றியூரில் ஞானம் பெற்றுப் பண்டிதரான இந்தக் கேரளப் படைத்தலைவரை அடையாளம் காணப் பெண்ணையாற்றங் கரையிலுள்ள கிராமம் எனும் சிற்றூரில் விளங்கும் சிவலோகநாதசாமி கோயிலுக்கு வரவேண்டும். பொதுக்காலம் 938இல் திருமுனைப்பாடிநாடு என்றழைக்கப்பட்ட இப்பகுதியில்தான் சோழ இளவரசர்களான இராஜாதித்தரும் அரிஞ்சயரும் பெரும் படையுடன் போரை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். போர் நிகழும்வரை திருமுனைப்பாடியில் தங்கியிருந்த சோழர்கள் பல அரும்பணிகளைச் செய்தனர்.

தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் பிறந்த திருநாவலூரிலுள்ள திருத்தொண்டீசுவரத்தை இராஜாதித்தர் கற்றளியாக்கினார். திருக்கோவலூர்க் கோயில் பணிக்கு அரிஞ்சயரின் படைகள் துணைநின்றன. கேரளத்துத் திருநந்திக்கரைப் புத்தூரில் பிறந்து, இராஜாதித்தரிடம் பெரும்படை நாயகராகப் பொறுப்பேற்றிருந்த வெள்ளங்குமரன், தம் தலைவர் போலவே அப்பர் பெருமான் பாடல் பெற்ற கிராமத்து சிவன் கோயிலாம் ஆற்றுத்தளியைக் கற்றளியாக்கி அறக்கட்டளை அமைத்தார். அவரது இரண்டு கல்வெட்டுகள் சிவலோகநாதசாமி கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. அவரோடு அவரது கேரளப் படை வீரர்கள் பலரும் கோயிலுக்குப் பலவாய் அறங்களைச் செய்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. 

செய்திக் குறிப்பைத் தாங்கிய ‘இந்து’ நாளிதழ்

இராஜாதித்தரின் உள்ளத்துக்கு நெருங்கியவராகவும் சோழர்களின் பெரும்படை நாயகராகவும் விளங்கிய வெள்ளங்குமரன், தக்கோலப் போர்க்களத்தில் இராஜாதித்தர் உயிரிழக்க நேர்ந்தபோது உடனிருக்க முடியாமல் போனமை எதனால் என்பதை வரலாறு நமக்குக் கூறவில்லை என்றாலும், அப்பேரிழப்புக் குமரனை எத்தகு துன்பத்திற்கு ஆளாக்கியது என்பதையும் அதனால், அவர் வாழ்வியலே மாறி ஒற்றியூர்ப் பண்டிதராய் அவர் மறுபிறப்புற்றதையும் கல்வெட்டாய் நின்று காட்டத்தான் செய்கிறது. இடைவெளிகள் இல்லாமல் வரலாறு இல்லை. ஆனால், அதனாலேயே, வரலாறு இடைவெளிகளால் ஆனதுதான் என்றும் நினைத்துவிடக் கூடாது.  

சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகள்

திருத்தோணிபுரம் என்று பத்திமை இலக்கியங்கள் குறிப்பிடும் சீர்காழியில் சமீபத்தில் தேவாரப் பாடல்கள் பொறிக்கப்பட்டச் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து டாக்டர் இரா. கலைக்கோவன் கருத்து தெரிவிக்கையில்-

“தேவாரப் பண்களைச் செப்பேடுகளில் எழுதுவது வழக்கில் இருந்ததை முதலாம் குலோத்துங்கன் மற்றும் அவன் மகன் விக்கிரமச் சோழன் ஆட்சிக் காலங்களில் படைத்தலைவனாக இருந்த நரலோக வீரன் கல்வெட்டுகளிலிருந்து அறியமுடிகிறது. சிதம்பரம் கோயிலுக்குச் செப்புத் திருமேனிகள் வழங்கியும், திருஞானசம்பந்தரின் தேவாரப் பண்கள் பாடுவதற்கென அழகியதோர் மண்டபம் அமைத்தும் கோயில் திருப்பணிகள் செய்த நரலோக வீரன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பண்களைச் செப்பேடுகளில் பதிக்கச் செய்தான்,” என்று தெரிவித்தார்.

கூடுதலாக, செப்பேடுகளின் எழுத்தமைதியைப் பார்க்கையில் அவை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கன் காலத்தவை என்று கூறலாம், என்றும் அவர் கருத்துரைத்தார்.

தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களின் செய்திக்குறிப்புகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன-

 

வரலாற்றறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தம் ‘பெரியபுராண ஆராய்ச்சி’ நூலில் நரலோக வீரன் பற்றி எழுதியுள்ள பக்கங்களைக் கீழே காணலாம்-

சோழர் கால ஊரார்

சோழர் காலத் தமிழ்நாட்டில் இருந்த மூன்று வகை ஊராட்சிகள்- பிராமணர் குடியிருப்புகளுக்கான பிரமதேய மகாசபை, வணிகர் பணிகளுக்கான நகரத்தார் கூட்டமைப்பு, வேளாண் பெருமக்கள் வாழ்ந்த ஊர்களுக்குரிய ஊரார் அவை என்பன.

இம்மூன்று உள்ளாட்சிகளில், சங்க காலம்முதலே நன்கு அறியப்பட்ட ஊரார் கூட்டாட்சி சோழர்காலத்திலும் தொடர்ந்துச் சிறப்புடன் இயங்கிவந்தமைக்குச் சோழர் கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும்  ஏப்ரல் 09, 2023 அன்று வெளியான டாக்டர் இரா. கலைக்கோவனின் ‘சோழர் கால ஊரார்’ என்ற தலைப்பிலான கட்டுரை- ஊரவைகளின் பணிகள், அவை தனித்து இயங்கியபோதும் தேவைக்கேற்பத் தத்தம் ஊரை அடுத்திருந்த பிரமதேய சபை, நகரத்தார் அவையுடன் இணைந்து செயற்பட்டச் சூழல், ஊரில் நில உரிமை கொண்டிருந்தவர்கள் தம் பெயருடன் இணைத்துக் கொண்ட சிறப்பொட்டுக்கள் போன்ற சுவையான பலச் செய்திகளை விளக்குகிறது.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-

அழுந்தூரின் ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு

“சில சுவையான கதைகள் வரலாறு போல வாழ்வதும் சில ஊர்களின் வரலாறு கதைகளைப் போல நிகழ்வுகளின் தொடரிணைப்பால் உருவாவதும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன”, என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் 12.03.2023 அன்று ‘வரலாறு ஒரு கதை போல…’ என்ற தலைப்பில் பதிவான அவருடைய கட்டுரை, இப்படித்தான் தொடங்குகிறது.

திருச்சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் உள்ள அழுந்தூர் என்ற சிற்றூரில் சிதைந்திருந்த பழங்காலக் கோயிலையும், அங்குப் புதைந்திருந்த சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் சமீபத்தில் ஆய்வு செய்தனர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர். அந்த ஆய்வுக் களம் கூட்டிச்சென்ற பாதைகளும், பாதைகள் காட்டிய சான்றுகளும், சான்றுகளால் கிட்டிய அழுந்தூரின் வரலாறும் பற்றியதுதான் ‘வரலாறு ஒரு கதை போல…’.

அழுந்தூர் கண்டுபிடிப்புகள் குறித்து நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-

பல்கலைக்கழக மானியக்குழுவின் தமிழ் ஆய்விதழ்ப் பட்டியல் 2023- தொடர்ந்து இடம்பெறும் ‘வரலாறு’ ஆய்விதழ்இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC), ஆய்வுப் படைப்புகளின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, நவம்பர் 2018இல் ‘Consortium for Academic and Research Ethics’ (CARE)/ சிஎஆர்இ-UGC என்ற அமைப்பை நிறுவியது.

முனைவர் பட்டம் பெறும்முன் ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வுத் தாள்களைப் பதிப்பிக்க, தரமான ஆய்விதழ்களை நாடுவர். அத்தகைய தரமான ஆய்விதழ்களின் பட்டியலை சிஎஆர்இ (CARE), ஆண்டிற்கு இருமுறை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 

அப்பட்டியலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் ஆண்டு ஆய்விதழ் ‘வரலாறு’ செப்டம்பர் 2019 முதல் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் 2023ஆம் ஆண்டிற்கான பட்டியலிலும் ‘வரலாறு’ ஆய்விதழ் தொடர்கிறது.

திருமங்கலம் சோழா் கல்வெட்டு குறிக்கும் அயோத்தி ஆழ்வார் கோயில்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கச்சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுகளில், அயோத்தி ஆழ்வார் கோயில் என்ற புதிய கோயில் பற்றிய குறிப்புகள் கிட்டின. அதனைத் தொடர்ந்து, அயோத்தி ஆழ்வார் கோயிலைத் தேடும் அடுத்தக்கட்ட கள ஆய்வு தொடங்கியது. திருமங்கலத்தில் வரதராஜப் பெருமாள் பெயரால் விளங்கும் இன்றைய கோயிலைக் கண்டறிந்து அங்கு ஆய்வு செய்தபோது, மற்றுமொரு புதிய கல்வெட்டு கிடைத்தது. அக்கல்வெட்டு, கோயிலின் ஒரு பகுதியை ‘திருஅயோத்தி எம்பெரிமான் திருமுற்றம்’ என்று சுட்டியது வினாக்களுக்கு விடையளிக்குமாறு அமைந்தது.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கையில், “வரதராஜப் பெருமாள் கோயிலின் இன்றைய கட்டுமானம் அண்மைக் காலத்தது என்றபோதும், அது கட்டப்பட்டிருக்கும் இடம் திருமங்கலத்திலிருந்த அயோத்தி ஆழ்வார் கோயில் திருமுற்றமாகவே இருப்பது சிறப்பாகும்” என்று குறிப்பிட்டார்.

வரலாற்றுத் தகவல்களைத் தாங்கிய நாளிதழ்ச் செய்திக்குறிப்பு –

பழுவேட்டரையர்கள் யார்?

அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ புதினம் திரைப்படமாக வெளிவந்ததைத் தொடர்ந்து, சோழர்கால வரலாற்று மாந்தர்கள் குறித்த தேடல்கள் தொடர்கின்றன. அப்படிப்பட்ட மாந்தர்களுள் ஒருவர் பெரிய பழுவேட்டரையர்.

‘பொன்னியின் செல்வன்’ கதையா? வரலாறா?’ என்ற இந்து தமிழ் வலையொலிப் பக்கத்தில், பழுவேட்டரையர் குறித்து டாக்டர் இரா. கலைக்கோவன்-

“பெரிய, சின்னப் பழுவேட்டரையர்கள் என்று அண்ணனும் தம்பியுமாக இருவர் இக்கதையில் குறிக்கப்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் கதைக்களம் சுந்தரசோழர் காலத்தில் அமைகிறது. அவர் ஆட்சி ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகள் அமைந்தது. அப்போது பழுவூர் மன்னராக இருந்த பழுவேட்டரையர் மறவன்கண்டன். அவருக்குத் தம்பி யாருமில்லை. உத்தமசோழர் காலம்வரை மறவன்கண்டனே ஆட்சியில் இருந்ததைப் பழுவூர்க் கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், கதையில் பெரியபழுவேட்டரையர் உயிர் துறப்பதாகவும் சின்னப்பழுவேட்டரையர் பொறுப்பு நீங்குவதாகவும் கல்கி எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர், பழுவேட்டரையர்கள் குறித்த விளக்கமான வரலாற்றுத் தகவல்களை -‘பழுவேட்டரையர்கள் யார்?’ என்ற கட்டுரையில் வழங்கியிருக்கிறார். அக்டோபர் 2, 2022 அன்று வந்த  ‘இந்து தமிழ் திசை’ இதழில் கட்டுரை வெளியானது.

முழுமையான கட்டுரையைப் படித்திட, இதழின் இணைய இணைப்பை இங்கே காணலாம்-

‘பழுவேட்டரையர்கள் யார்?’

கட்டுரையின் வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாயக்கர் கால மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டிக்கும் குரும்பப்பட்டிக்கும் இடையிலுள்ள மாங்குளக்கரையில் இரண்டு மடைத்தூண்களில், நாயக்கர் காலத்துக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மடைத்தூண்கள் குறித்த செய்தியறிந்து, சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

மடைத்தூண்கள் குறித்தும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு குறித்தும், டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

செய்திக்குறிப்பைத் தாங்கிய நாளிதழ்கள் –

திருச்சிராப்பள்ளி புத்தகத் திருவிழாவில் விருது

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகமும் தேசிய நூல் அறக்கட்டளையும் (National Book Trust of India) இணைந்து நடத்தும் ‘புத்தகத் திருவிழா’, திருச்சிராப்பள்ளி ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 16, 2022 அன்று தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இந்நூல் கண்காட்சியின் இரண்டாம் நாளான செப்டம்பர் 17 அன்று, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கு, அவர்தம் ஆய்வுப் பணிகளைப் பாராட்டி நிகழ்ச்சி அமைப்பாளர்களால் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்த செய்திக் குறிப்பு

திருமங்கலத்து ராமாயண உளி உன்னதங்கள்

திருச்சிராப்பள்ளி லால்குடிச் சாலையில் உள்ளது திருமங்கலம். இது 63 திருத்தொண்டர்களுள் ஒருவரான ஆனாயரின் ஊராகும். திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில் காணப்படும் ராமாயணச் சிற்பங்கள் பற்றிய டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘திருமங்கலத்து ராமாயண உளி உன்னதங்கள்’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.

நாளிதழில்…

மின்னிதழில்…

கட்டுரையின் வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.