கார்த்திகைச் செல்வி கற்பகவல்லி

சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1006) பொறிக்கப்பட்டது கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லியின் கல்வெட்டு.

தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி குறித்தும் அவரளித்த அளப்பரிய கொடைகள் குறித்துமான மேலும் விரிவான தகவல்களை வழங்கும் டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘கார்த்திகைச் செல்வி கற்பகவல்லி’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-

கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லி

மு. நளினி, இரா. கலைக்கோவன்

திருப்பாச்சில் ஆச்சிராமம் என்று கல்வெட்டுகள் அழைக்கும் திருவாசி, சிராப்பள்ளி முசிறிச் சாலையில் 12 கி. மீ. தொலைவிலுள்ளது. சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பெற்ற இவ்வூர்க் கோயில் இறைவன் இப்போது மாற்றுரைவரதீசுவரராக அறியப்படுகிறார். பல காலக்கட்டங்களில் இங்கு ஆய்வுமேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தார் 17 புதிய கல்வெட்டுகளையும் பல துண்டுக் கல்வெட்டுகளையும் சில சதாசேவைக் கல்வெட்டுகளையும் கண்டறிந்துள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1006) பொறிக்கப்பட்டுள்ள கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லியின் கல்வெட்டு.

யார் இந்தக் கற்பகவல்லி?

வளாகத்தின் இரண்டாம் கோபுர மேற்குமுக வடசுவரில் தொடங்கி மேற்கு, தெற்குச்சுவர்களில் பரவி, தெற்குக் குமுதத்தில் தொடரும் இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி சுற்றுத்தரை உயர்வால் பார்வைக்கு மறைந்துள்ளது. கல்வெட்டின் பல பகுதிகளைப் படித்தறிய அடர்த்தியான சுண்ணாம்புப்பூச்சு இடையூறாக இருந்தமையால் முதலாய்வில் படிக்கப்பெற்ற சில பகுதிகள், தொடர்ச்சியற்ற நிலையிலும், அவற்றின் சிறப்புக் கருதி 1990இல் வரலாற்றாய்வு மையத்தின் பொறுப்பில் வெளிவந்த ஆவணம் முதல் இதழில் பதிவாயின.

காலப்போக்கில் சுண்ணாம்புப்பூச்சுகள் அகற்றப்பட்ட நிலையில், 2020 மார்ச்சுத் திங்கள் நிகழ்ந்த களஆய்வில் கல்வெட்டின் விடுபட்ட பகுதிகள் படித்தறியப்பட்டன. அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதிகளில் பல பிரிவுகளாக இக்கல்வெட்டுப் பதிவாகியிருந்தமையாலும் இருவேறு காலக்கட்டங்களில் அவை படிக்கப்பட்டமையாலும் சில பிரிவுப் பதிவுகளில் இடையிடையே எழுத்துக்கள் சிதைந்தும் விடுபட்டும் போயிருந்தமையாலும்  தொடர்புடைய பகுதிகளை இணைத்துப் பொருள் காண்பதில் சிக்கல்கள் இருந்தன. மையத்தின் மதிப்புறு இணைஇயக்குநர் பேராசிரியர் மு. நளினி அரிதின் முயன்று வரலாற்று நீரோட்டத்தில் கரைந்திருந்த கற்பகவல்லியைக் கரைசேர்த்திருக்கிறார். யார் இந்தக் கற்பகவல்லி?

தேவனார்மகள்

1500 ஆண்டுகள் பழைமையானதான மாற்றுரைவரதீசுவரர் கோயில் வளாகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காலப் பழைமையது முதலாம் பராந்தகரின் பொ. கா. 919க்குரிய பதிவாகும். இங்குக் காணக்கிடைக்கும் கல்வெட்டுகளில் மிக நீளமானதும் (293 வரிகள்) மிக முதன்மையானதுமான முதலாம் ராஜராஜர் காலப் பதிவே கற்பகவல்லியைக் காட்சிக்குத் தருகிறது. நித்தவிநோதரான ராஜராஜரின் பெரியவேளத்தில் பணியிலிருந்த (பெண்டாட்டி) நக்கன் கற்பகவல்லி, பாச்சில் ஆச்சிராமத்து இறைவனின் மகளாகத் தம்மைக் கருதி, ‘தேவனார் மகள்’ என்று தம்மை விளித்துக் கொண்டவர். அக்காலத்தே இறைவனிடம் தங்களைத் தலைப்படுத்திக் கொண்ட அடியவர்கள், தங்கள் பெயருடன் இணைத்துக்கொண்ட சிவபெருமானின் திருப்பெயரே கற்பகவல்லியின் பெயருடனுள்ள நக்கன் என்னும் முன்னொட்டு. இப்பழக்கம், பொ. கா. 5ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ்நாட்டில் வழக்கிலிருந்தமை சித்தன்னவாசல் வட்டெழுத்துக் கல்வெட்டால் உறுதிப்படும்.

கற்பகவல்லியின் கல்வெட்டு

தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி, மாற்றுரைவரதீசுவரரிடம் மாற்றுக்குறையா அன்பு கொண்டிருந்தமை வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பதிவால் தெரியவருகிறது. பொ. கா. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவரளித்த 201 கழஞ்சுப் பொன்னும் 2மா முக்காணி நிலமும் வரதீசுவரர் வளாக வழிபாட்டையும் படையல்களையும் செழிப்பாக்கியதுடன், அத்தளியில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள், ஆடலரசியர், கோயில் அலுவலர்கள் எனப் பலரையும் அப்பணியில் பங்கேற்கச் செய்து பெருமைப்படுத்தியது. சுருங்கியும் விரிந்தும் சுவர்களில் பரவியுள்ள கற்பகவல்லியின் கல்வெட்டு, பாச்சில் ஆச்சிராமத்துப் பழங்கோயிலின் பதினோராம் நூற்றாண்டு வாழ்க்கையைப் படம்பிடிக்கிறது.

கற்பகவல்லியின் பொன், நிலக்கொடை

அந்நாளில் வழக்கிலிருந்த பாச்சில் கல்லால் நிறுக்கப்பெற்ற 201 கழஞ்சுப் பொன்னைக் கோயில் பண்டாரத்திற்களித்த இவ்வம்மை, 2மா முக்காணி நிலமும் கொடையாகத் தந்தார். இரண்டு துண்டுகளாக அமைந்த இந்நிலத்தில், 2மா நிலம் விளைச்சலுக்காகப் பண்படுத்தப்பட்ட தரிசாகும். ‘தென்னூர் 2 மா’ என்றழைக்கப்பெற்ற இந்நிலத்துண்டிற்கு எல்லைகளாக இறைவனின் அப்பச்செய் (அப்பப் படையலுக்காக அளிக்கப்பெற்ற நிலத்துண்டு), திணை எனும் பொறுப்பிலிருந்த ஊர் அலுவலரின் வயக்கல், ஊருக்கான வழி, தென்னந்தோப்பு ஆகியன அமைந்தன. கீழை முக்காணி எனச் சுட்டப்பெற்ற மற்றொரு நிலத்துண்டுக்கான எல்லைகளாகக் கணக்கர் பங்கு, தேவரடியாரான நக்கன் சோழங்கன் நிலம், இறைவன் நிலம், ஊர்வாய்க்கால் ஆகியன அமைந்தன. இவ்விரு நிலத்துண்டுகளின் விளைவாகக் கோயிலுக்கு ஆண்டுதோறும் 16 கலம் நெல் வரவானது.

பொன்னைப் பகிர்ந்து கொண்டவர்கள்

பாச்சிலிலுள்ள திருவாச்சிராமம், திருஅமலீசுவரம், மேற்றளிக் கோயில்களைச் சேர்ந்த தலைக்கோலியர், உவச்சர், கந்தருவர், மெய்மட்டி ஆகிய கோயில் கலைஞர்களும் தேவரடியார், பரிசாரகர், வண்ணக்கர், குயவர், தச்சர், சோதிடர், விளக்கேற்றுபவர் முதலிய பணியாளர்களும் தங்கள் பணிக்கான வருவாய்ப் பங்கை (காணி) முன்னிருத்தி (தலைச்சமாடாக), அப்பங்கின் தகுதிக்கேற்ப, கற்பகவல்லி அளித்த 201 கழஞ்சுப் பொன்னைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு, ஆண்டுதோறும் அதற்கான வட்டியாக ஒரு கழஞ்சுப் பொன்னுக்குக் கோயில் பண்டாரத்திருந்த ராஜாச்ரையன் எனும் மரக்காலால் ஒரு கலம் நெல் அளந்தனர். அதன் வழி ஆச்சிராமத்துக் கோயிலுக்கு 201 கலம் நெல் கிடைத்தது. கற்பகவல்லி அளித்த நிலத்திலிருந்து கிடைத்த 16 கலம் நெல்லுடன் இது சேர ஆண்டுதோறும் கோயிலுக்கு 217 கலம் நெல் வரவானது. அது கற்பகவல்லி இக்கோயிலில் அமைத்த ஐந்து அறக்கட்டளைகளுக்கும் முதலானது.

ஐந்து அறக்கட்டளைகள்

1. நாளும் சிறுகாலையில் முதன்மை இறைக்குப் போனகஅமுது.

2. நாளும் சிறுகாலையில் உலாத்திருமேனிக்குப் போனகஅமுது.

3. கார்த்திகை விழா

4. தைப்பூசத் திருநாள்

5. புதுக்குப்பணி

போனகஅமுது

கற்பகவல்லியின் முதலிரு அறக்கட்டளைகள் கோயில் முதன்மை, உலா இறைத்திருமேனி களுக்கு நாளும் படைக்கப்பெறும் சிறுகாலைப் போனகஅமுதாக அமைந்தன. உடையார் எனக் கல்வெட்டில் சுட்டப்படும் முதன்மை இறைத்திருமேனிக்கு நாளும் 4 நாழி போனகஅரிசி, 2 நாழி பயறு, நெய், சர்க்கரை கொண்டு போனகஅமுதும் உடன் பொரிக்கறியும் படையலிடப்பட்டன. அதற்கான போனகப்பானை, பொரிக்கறிச்சட்டி இட்ட குயவருக்கும் சமைப்பதற்கு விறகிட்டவருக்கும்  நெல்குற்றிய பெண்ணுக்கும் ஊதியமாக உரிய நெல் வழங்கப்பட்டது. பரமவிடங்கதேவர் எனும் பெயரிலிருந்த உலாவரும் திருமேனிக்கும் அது போலவே சிறுகாலைப்போதில் போனகம் வழங்கப்பட்டது. அதற்கான போனகஅரிசி, பருப்பு, நெய், தயிர், பாக்கு உள்ளிட்ட பொருள்களுக்கும் அமுதுக்கான கலங்கள் அளித்த குயவருக்குமாக உரிய நெல் தரப்பட்டது. இவ்விரண்டிற்குமாக ஓராண்டிற்கு 150 கலம், 2 தூணி, குறுணி, 2 நாழி நெல் செலவானது.

கார்த்திகை விழா

கற்பகவல்லி கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் பிறந்தவர் என்பதால், அந்நாளில் திருப்பாச்சில் ஆச்சிராமத்து இறைவனுக்கு நெய், பால், தயிர் உள்ளிட்ட ஆனைந்து, தேன் ஆகியன கொண்டு 108 குடங்களால் திருமுழுக்காட்ட அமைத்த அறக்கட்டளை திருப்பிண்டி, திருச்சுண்ணம், நூல்சூழ நிறுவப்பட்ட குடம், ஜலபவித்ரத்துப் புடவை, நமனதிரவியம், குடத்தின் கீழிடும் பொருள்கள் எனப் பலவும் கொண்டு உரிய சடங்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. முழுக்காட்டுக்குப் பிறகு பெரும்பயறுடன் கறியமுதும் நெல்லுச்சோறும் தயிர், நெய், பாக்கு உள்ளிட்டனவும் இறைமுன் படைக்க ஒரு பொன் ஒதுக்கப்பட்டது.

முழுக்காட்டு, உணவு ஆகியவற்றிற்கான கலங்களை அளித்த குயவர், போனகக்குருத்திடுவார், நெல்குற்றிய பெண், குடத்தை நிறுவியவர், விறகிட்டார், கோமயம் கொணர்ந்தார் ஆகிய அனை வருக்கும் ஊதியமாக நெல் தரப்பட்டது. முதன்மை இறைக்கு முழுக்காட்டு, படையல் முடிந்ததும் உலாத்திருமேனி திருவோலக்கம் கொண்டு அப்பஅமுது கொள்ள, அதற்குரிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களுக்கும் பாக்கு, வெற்றிலை வழங்கவும் நெல்குற்றும் பெண், மாவிடிப்பவர், அப்பம் சுட்டவர் அதற்கான விறகிட்டவர், படையலிடக் கலங்கள் தந்த குயவர் முதலியோருக்கான ஊதியமாகவும் உரிய நெல் ஒதுக்கப்பட்டது.

தைப்பூச விழா

தைப்பூசத்தன்று இறைவன் நீராடிப் பெருந்திருஅமுது கொள்ளத் தேவையான ஒரு கலம் தூணிப்பதக்குப் போனகஅரிசி, நெய், பருப்பு, பெரும்பயறு, தயிர், மிளகு, உப்பு, பாக்கு, கறியமுது ஆகியவற்றுக்கு நெல் ஒதுக்கப்பட்டது. போனகக்குருத்திடுவார், போனகம் இடுவார், நெல்குற்றிய பெண், விறகிட்டவர் ஆகியோருக்கும் ஊதியமாக நெல் வழங்கப்பட்டது. அந்நாளில் இறைவன் உச்சம்போது உணவு கொள்கையில் 50 சிவயோகிகளும் 50 தவசிகளும் கோயிலில் உணவருந்த ஓராளுக்கு நாழி உரி என 100 பேருக்கு 1 கலம் தூணிப்பதக்கு 6 நாழி அரிசி ஒதுக்கப்பட்டது. இவ்வுணவைச் சமைத்தவர், சமைக்க விறகிட்டவர், நெல்குற்றியவர், உண்ணவந்தாருக்கு இலையிட்டவர், உரிய கலங்களிட்ட குயவர் ஆகியோருக்கும் கொள்ளுக்குமென  நெல் தரப்பட்டதுடன், விழாவை முன்னிருத்தித் தேவர்கன்மிகளுக்கும் ஒரு கலம் நெல் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் சேரத் தைப்பூசத் திருவிழாவுக்காக ஆண்டுதோறும் 8 கலம் 2 தூணி 4 நாழி நெல் செலவானது.

புதுக்குப்பணி

இக்கோயிலிலுள்ள பெரிய திருமண்டபத்தைப் பழுது நீக்கிப் பராமரிக்கவும் உரிய வகையில் புதுக்கவும் ஆண்டுதோறும் 10 கலம் நெல் பயன்படுத்திக்கொள்ள கற்பகவல்லியின் ஐந்தாம் அறக்கட்டளை துணைநின்றது.

கலைஞர்களும் பணியாளர்களும்

நக்கன் கற்பகவல்லியின் கொடைக் கல்வெட்டு முதல் ராஜராஜர் காலத்தில் பாச்சில் திருஆச்சிராமம், அமலீசுவரம், மேற்றளி ஆகிய மூன்று கோயில்களில் பணியிலிருந்த கலைஞர்களையும் தொழிலர்களையும் பெயர் சுட்டி அறிமுகப்படுத்துகிறது.

திருஆச்சிராமம்

திருஆச்சிராமத்தில் பொ. கா. 1006ல் பணியிலிருந்தவர்களுள் 7 கலைஞர்களும் 15 தொழிலர்களும் இக்கல்வெட்டால் அறிமுகமாகின்றனர். நக்கன் அழகியான நக்கன் சோழத்தலைக்கோலி, நக்கன் மோடியான மும்முடிசோழத் தலைக்கோலி, நக்கன் கொற்றமான வீதிவிடங்கத் தலைக்கோலி ஆகிய மூவரும் இக்கோயிலில் ஆடலரசிகளாகத் திகழ்ந்தனர். ஆடல் வல்ல பெண்டிருக்கே அக்காலத்தில் தலைக்கோலிப் பட்டம் வழங்கப்பட்டமையால் இம்மூவரும் ஆடற்கலையில் தேர்ந்திருந்தமை தெளிவாகும். அவர்களுள் மும்முடிசோழமும் வீதிவிடங்கமும் கற்பகவல்லி அளித்த பொன்னில் தலைக்கு 10 கழஞ்சு கொண்டு 10 கலம் நெல்லளக்க, அழகி 5 கழஞ்சுப் பொன்னுக்கு 5 கலம் நெல்லளித்தார். 

நக்கன் அகம், நக்கன் எதிரி, நக்கன் ஆவடுதுறை, நக்கன் மோடி ஆகிய நால்வரும் தேவரடியார்களாகப் பணியிலிருந்தனர். ஆவடுதுறை 5, எதிரி 15, அகம் 7, மோடி இரண்டரை எனக் கழஞ்சுகள் கொண்டு, அதற்கான வட்டியாக நெல்லளக்க, கோயில் உச்சவர் அணுக்கன் பொன்னன் பதின்மூன்றரைக் கழஞ்சு கொண்டு பதின்மூன்றரைக் கலம் நெல்லளந்தார். இங்குக் காளமிசைத்த ஆச்சன் இளம்பெருமானும் மற்றொரு காளக்கலைஞரான கந்தருவர் பொன்னையன் தில்லையடிகளும் தலைக்கு 10 கழஞ்சு கொண்டு 10 கலம் நெல்லளக்க, மெய்மட்டியாக விளங்கிய மற்றொரு கந்தருவரான ஐநூற்றுவன் விழுமியான் 2 கழஞ்சுப் பொன் கொண்டு 2 கலம் நெல் தந்தார்.

கலம் வனைந்து வழங்கிய டக்கன் (இப்பெயர் முழுமையாகக் கிடைக்கவில்லை), தெய்யன், கடம்பன் ஆகிய மூவரும் தலைக்கு 1 கழஞ்சு கொண்டு 3 கலம் நெல்லளக்க, வண்ணக்குப் பணியிலிருந்த இளங்குவனன் தில்லையழகன் 15 கழஞ்சுப் பொன் பெற்று 15 கலம் நெல்லளித்தார். தச்சுப்பணியாளர் காரி இரவி 3 கழஞ்சுப் பொன்னுக்கு 3 கலம் நெல் தர, இங்குப் பரிசாரகர்களாக விளங்கிய இரு குடும்பங்களைச் சேர்ந்த சிங்கன் பட்டாலகன், சிங்கன் சோழன், சிங்கன் பதியன், நெதிரன் ஐயன், நெதிரன் பரசுராமன், பொன்னன் நெதிரன் ஆகிய அறுவரும் 17 கழஞ்சுப் பொன்னைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு நெல்லளந்தனர்.

பாச்சில் அமலீசுவரம்

கோபுரப்பட்டியிலுள்ள பாச்சில் அமலீசுவரம் கல்வெட்டுகளில் அமனீசுவரமாகவும் அவனீசுவரமாகவும் அறியப்படும் அழகிய சிவத்தளியாகும். பொ. கா. 981க்குச் சற்று முன் கட்டமைக்கப்பட்ட இம்முற்சோழர் கோயில் இன்றளவும் சிறப்பான நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது (இக்கோயில் வரலாறு அறிய இக்கட்டுரையாசிரியர்களின் பாச்சில் கோயில்கள் நூல் உதவும். நூல் பெற: 9345111790). நக்கன் கற்பகவல்லியின் கொடைப்பொன்னில் 50 கழஞ்சுப் பொன்னை இத்தளிக் கலைஞர்கள் இருவரும் தொழிலர் இருவரும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு ஆண்டு வட்டியாக ஆச்சிராமத்தார் அளித்தவாறே 1 கழஞ்சுப் பொன்னுக்கு 1 கலம் நெல் ஆச்சிராமத்துக் கோயிலுக்கு அளந்தனர். அமலீசுவரத்து ஆடலரசியான திருவையாறு தலைக்கோலியும் அதே கோயில் கந்தருவரான கணவதி கங்காதிரனும் தலைக்கு 10 கழஞ்சுப் பொன் கொள்ள, அமலீசுவரத்தில் ஆச்சாரியம், பரிசாரகம் இரண்டும் பார்த்த கௌசியன் ஆச்சன் பொன்னன் 25 கழஞ்சுகள் பெற்று 25 கலமளிக்க, விளக்கேற்றும் பொறுப்பேற்றிருந்த குமரன் அம்பலவன் 5 கழஞ்சுப் பொன் பெற்று 5 கலம் நெல்லளந்தார்.

மேற்றளி

முற்சோழர் காலத்தில் பாச்சிலில் எழுச்சியுடன் திகழ்ந்த மூன்று தளிகளுள் ஆச்சிராமம், அமலீசுவரம் போலவே மேற்றளியும் அடங்கும். பல்லவர் காலத் தளியான இக்கோயில் தொல்லியல் துறையால் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தன் பழைமையைப் பெரிதும் இழந்து கல்வெட்டுகளுடன் காட்சிதருகிறது (இக்கோயில் வரலாறு அறிய இக்கட்டுரையாசிரியர்களின் பாச்சில் கோயில்கள் நூல் உதவும். நூல் பெற: 9345111790). கற்பகவல்லி அளித்த பொற்கழஞ்சுகளைக் கொண்டவர்களுள் இருவர் பாச்சிலைச் சேர்ந்த இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய பெருமையுடையவர்கள். நக்கன் குராவியான திருவரங்கத் தலைக்கோலி மூன்று கோயில்களிலும் ஆடல்நிகழ்த்திய கலைஞர். இவ்வம்மை 20 கழஞ்சுப் பொன் கொண்டு வட்டியாக 20 கலம் நெல்லும் அவர் போலவே 3 கோயில்களுக்கும் சோதிடராக விளங்கிய சிச்சல் அரையன் 3 கழஞ்சுப் பொன்னுக்கு 3 கலம் நெல்லும் அளந்தனர்.

கற்பகவல்லியின் தனிச்சிறப்பு

சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் மகளிர் கொடைகளைச் சுட்டும் கல்வெட்டுகள் பலவாகப் படித்தறியப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பான்மையன அவ்வக்கோயில்களில் கலைஞர்களாகவோ, பணியாளர்களாகவோ இருந்தவர்தம் கொடைகளாகவே அமைந்துள்ளன. சில கொடைகள் அரசமரபுசார் பெண்களாலும் கோயில்களைக் கட்டியவர்களாலும் வழங்கப்பட்டவை. வேறு சிலவோ வேற்றூர் மகளிர் விழைந்து தந்தவை. தஞ்சாவூர் அரண்மனை வேளத்தில் பணியாற்றிய நக்கன் கற்பகவல்லி இந்த வட்டங்களைத் தாண்டியவராய்ப் பாச்சில் ஆச்சிராமத்து இறைவனிடம் பேரன்பு கொண்டிருந்தார். அதுவே இருவருக்கும் இடையில் தந்தை மகள் உறவைப் பின்ன, அதன் விளைவாகவே கற்பகவல்லியின் ஐந்து அறக்கட்டளை அமைப்பும் அதற்கான கொடையும் பிறந்தன. இந்தக் கொடையால் கற்பகவல்லியின் உள்ளம் மட்டுமன்று, ஆச்சிராமத்து வரலாறும் வெளிச்சப்படுவதுதான் மிகு சிறப்பு. மூன்று கோயில்களின் கலைஞர்கள், பணியாளர்கள் என ஒரு பட்டியலும் கோயில் வழிபாடு, படையல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தவர் பட்டியலும் கிடைப்பதுடன், கோயில்சார் சடங்குகளும் அவற்றுக்கமைந்த செலவினங்களும் அந்நாள் பொன், நெல் மதிப்பீடுகளும் என்று வரலாற்றை வளப்படுத்தும் தரவுகளும் பலவாய் இக்கல்வெட்டில் பொதிந்துள்ளன. சுருங்கச் சொல்லின் கார்த்திகையில் பிறந்த நக்கன் கற்பகவல்லியின் இந்தக் கொடைக் கல்வெட்டால் ஆச்சிராம வரலாற்றின் பொன்னான பக்கமொன்று பொதுவெளிக்கு வந்துள்ளது.