திருமங்கலம் சோழா் கல்வெட்டு குறிக்கும் அயோத்தி ஆழ்வார் கோயில்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கச்சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுகளில், அயோத்தி ஆழ்வார் கோயில் என்ற புதிய கோயில் பற்றிய குறிப்புகள் கிட்டின. அதனைத் தொடர்ந்து, அயோத்தி ஆழ்வார் கோயிலைத் தேடும் அடுத்தக்கட்ட கள ஆய்வு தொடங்கியது. திருமங்கலத்தில் வரதராஜப் பெருமாள் பெயரால் விளங்கும் இன்றைய கோயிலைக் கண்டறிந்து அங்கு ஆய்வு செய்தபோது, மற்றுமொரு புதிய கல்வெட்டு கிடைத்தது. அக்கல்வெட்டு, கோயிலின் ஒரு பகுதியை ‘திருஅயோத்தி எம்பெரிமான் திருமுற்றம்’ என்று சுட்டியது வினாக்களுக்கு விடையளிக்குமாறு அமைந்தது.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கையில், “வரதராஜப் பெருமாள் கோயிலின் இன்றைய கட்டுமானம் அண்மைக் காலத்தது என்றபோதும், அது கட்டப்பட்டிருக்கும் இடம் திருமங்கலத்திலிருந்த அயோத்தி ஆழ்வார் கோயில் திருமுற்றமாகவே இருப்பது சிறப்பாகும்” என்று குறிப்பிட்டார்.

வரலாற்றுத் தகவல்களைத் தாங்கிய நாளிதழ்ச் செய்திக்குறிப்பு –

முக்தீசுவரத்தில் சோழர்கால நில அளவுகோல்கள் கண்டுபிடிப்பு

சிராப்பள்ளியை அடுத்த சமயபுரத்திற்கு அருகிலுள்ள கண்ணனூர், பொதுக்காலம் 11 ஆம் நூற்றாண்டளவில் ஹொய்சள அரசர்களின் தலைநகரமாக விளங்கியது. சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜருக்கு உதவுவதற்காக மைசூர்ப்பகுதியிலிருந்து சோழநாட்டிற்கு வந்த ஹொய்சள அரசர்கள் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வூரைத் தங்கள் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தனர். அக்காலக்கட்டத்தில் இப்பகுதியில் உருவான பழங்கோயில்களுள் ஒன்று முக்தீசுவரம். கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்றுமாளிகை என ஒரு காலத்தில் எழுச்சியுடன் விளங்கிய இக்கோயில் இன்று அறநிலையத்துறைத் திருப்பணிக்காகக் காத்திருக்கிறது.

2020 இல், இக்கோயிலில் இணைஆணையர் திரு. க. பெ. அசோக்குமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு. நளினியும் முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் பொதுக்காலம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அளவுகோல்களையும் 14-18 ஆம் நூற்றாண்டளவில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுக்கள் சிலவற்றையும் கண்டறிந்தனர். களஆய்வின்போது சமயபுரம் கோயில் இளநிலைப் பொறியாளர் திரு. எம். அஜந்தன் உடனிருந்து உதவினர்.

இக்கல்வெட்டுக்களையும் அளவுகோல்களையும் நேரில் ஆய்வுசெய்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குனர் டாக்டர் இரா. கலைக்கோவன், இக்கோயில் சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜர் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும் பொதுக்காலம் 1221 ஏப்ரல் 14 ஆம் நாள் இவ்வளாகத்தில் பொறிக்கப்பட்ட அம்மன்னரின் 6 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இக்கோயில் இறைவனை, ‘கழுகிறை நாயனார்’ என்றழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்குக் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்கள் குறிப்பிடும் முத்தன் செட்டியார், திருச்சிராப்பள்ளித் தாயுமான செட்டியார், கழயடி மயிலேறும் பெருமாள் ஆகிய பெருமக்கள் அவர்தம் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள கட்டுமானப்பகுதிகளின் திருப்பணிக்கு உதவியவர்கள் ஆகலாம்.

‘கழயடி மயிலேறும் பெருமாள்’… என்ற குறிப்பு

‘திருச்சிராப்பள்ளித் தாயுமான செட்டியார்’ …. என்ற குறிப்பு

ஆய்வின்போது கண்டறியப்பட்ட மூன்று அளவுகோல்களுள் 87 செ. மீ. அளவினதாக இரு கூட்டல் குறிகளுக்கிடையில் விமானத்தின் மேற்குப் பகுதியில் பதிவாகியுள்ள கோல் இக்கட்டுமானத்திற்குச் சிற்பிகள் பயன்படுத்திய தச்சக்கோலாகலாம். இதுவொத்த தச்சக்கோல்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் பனைமலை ஈசுவரம், தஞ்சாவூர் ராஜராஜீசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம் உள்ளிட்ட பல கோயில்களில் கண்டறியப்பட்டுள்ளன.

புன்செய், நன்செய் நிலங்களை அளப்பதற்காகச் சோழர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த நில அளவுகோல்கள் அந்தந்த ஊர்க் கோயில்களில் வெட்டி வைக்கப்பட்டன. இரண்டல்லது மூன்று கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்டனவாய் வெட்டப்பட்ட இந்த அளவுகோல்கள், சில கோயில்களில் நன்செய்க்கோல், புன்செய்க்கோல் எனும் பொறிப்புகளுடனும் சில கோயில்களில் அத்தகு அடையாளப் பொறிப்புகள் இல்லாமலும் காணப்படுகின்றன. முக்தீசுவரத்தின் பெருமண்டபத் தென்புறக் குமுதத்தில் வெட்டப்பட்டுள்ள 6.99 மீ. நீளமுள்ள அளவுகோல், அப்பகுதி சார்ந்த புன்செய் நிலங்களை அளக்கப் பயன்பட்ட அளவுகோலாகலாம்.

நன்செய் நிலங்களை அளக்க வழக்கிலிருந்த சோழர் கால நிலமளந்த கோல் முக்தீசுவரம் விமானத்தின் மேற்குப் பட்டிகையில் 3.76 மீ. நீளத்தில் வெட்டப்பட்டுள்ளது. பெரியகுறுக்கை சிவன்கோயிலில் மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்ட நன்செய்க்கோலும் இதே அளவினது என்பது இங்கு எண்ணத்தக்கது.

முக்தீசுவரத்திற்கு அருகிலுள்ள போசளீசுவரம் கோயிலிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அக்கோயில் கோபுரத்தின் உட்புற வடசுவரில் ‘நல்லதம்பி மகன் காவுடை நயினான்’ எனும் பெயர்ப் பொறிப்புக் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டுச் சுட்டும் காவுடை நயினார் கோயில் திருப்பணியில் பங்கேற்றவராகலாம்.