பூதி ஆதித்தபிடாரி

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருந்தபோதும் பொது வெளிச்சத்திற்கு வராத பெண்ணரசிகள் பலராவர். அவர்களுள் பூதி ஆதித்தபிடாரி குறிப்பிடத்தக்கவர். ‘கொடும்பை’ என்று சிலப்பதிகாரத்தால் சுட்டப்படும் கொம்பாளூரையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டிருந்த வேளிர்மரபின் குலக்கொழுந்து இவர். முதற் பராந்தகர் சோழநாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாம் ஆண்டிலேயே கொடும்பாளூர் அரசர் மறவம்பூதியின் மகளாகவும் பராந்தகரின் மருமகளாகவும் அவரது புதல்வர்களுள் ஒருவரான அரிஞ்சயசோழரின் தேவியாகவும் கல்வெட்டு வெளிச்சம் பெறும் இவ்வம்மையே சிராப்பள்ளிக் குழித்தலைப் பெருவழியில் காவிரியின் தென்கரையிலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக்கிய பெருமைக்குரியவர்.

திருச்செந்துறைக் கோயில்

பல்லவ அரசரான முதல் மகேந்திரர் தாம் எழுப்பிய கோயில்களைக் கல்வெட்டுகளில் தம் கட்டுமானங்களாக அடையாளம் காட்டினாற் போலவே ஆதித்தபிடாரியும், இரண்டு தளங்கள் பெற்ற இறையகமும் அதன் முன் முகமண்டபமும் எனத் தம்மால் எழுப்பப்பெற்ற திருச்செந்துறைக் கோயிலை ‘நான் எடுப்பித்த கற்றளி’என்று கல்வெட்டுப் பொறித்து அடையாளப்படுத்தியுள்ளார். இத்தகு மொழிதல்கள் இல்லாமற் போனதால்தான் தமிழ்நாட்டுக் கோயில்கள் பல யாரால், எக்காலத்தே உருவாக்கப்பட்டன என்பதை அறியமுடியாதுள்ளது.

பொதுக்காலம் 910இல் பூதி ஆதித்தபிடாரியால் கற்றளியான இக்கோயிலில் 59 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள், ஏறத்தாழ நான்கில் ஒரு பங்குக் கல்வெட்டுகள் இக்கோயிலுக்கும் இங்குப் பணியாற்றிய ஊழியர்களுக்கும் அவ்வம்மை கருதிச் செய்த ஏற்பாடுகளைச் செவ்வனே பதிவு செய்துள்ளன. இறைவனுக்கான வழிபாடு, படையல்கள், மலர்த் தேவைகள், விளக்குகள் ஆகியவை எக்காலத்தும் குறைவின்றி அமையச் செந்துறை வாழ் மக்களிடமும் அவ்வூரை நிருவகித்த ஊராட்சியினரிடமும் பல நிலத்துண்டுகளை விலைக்குப் பெற்று கோயில் ஆட்சியரிடம் ஒப்புவித்ததுடன், உரிய வைப்புத்தொகையை ஊராட்சிக்குச் செலுத்தி அந்நிலத்துண்டுகளை வரியற்றவையாக்கியவர் இவ்வம்மை.

இறைவனுக்கு அளிக்கப்படும் நிலம் தேவதானமாகவும் வரி நீக்கப்பட்ட நிலையில் அது இறையிலித் தேவதானமாகவும் கல்வெட்டுகளில் சுட்டப்படுகிறது. இந்நில வாங்கல்-வழங்கல்களால் சோழர் கால நிலவிற்பனை, நிலஞ்சார் வரியினங்கள், ஆவண நடைமுறைகள் ஆகியவற்றை அறியமுடிவதுடன், ஆட்சியாளரின் வருவாய்த்துறைச் செயற்பாடுகளையும் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஒவ்வோர் ஆவணத்திலும் விற்கப்பட்ட நிலத்துண்டுகளின் நாற்றிசை எல்லைகளும் கூறப்படுவதால், சோழர் காலத்தில் நிலப்பகுதிகள் எப்படி அடையாளப்பட்டன, அவற்றின் பாசன-வடிகால் வசதிகள் எப்படியிருந்தன, ஊர்த்தெருக்களின் அமைப்பு என எண்ணற்ற தரவுகள் வரலாற்றுக்கு வரவாகின்றன.

ஆடற் சிற்பங்களுடன் கோயிலின் மேற்பகுதி

கொடும்பாளூர் இளவரசி எடுப்பித்த கோயில் என்பதால் கொடும்பாளூர்க் குடும்பமே இக்கோயிலில் ஈடுபாடு கொண்டிருந்தது. மறவம்பூதி, அவர் தேவி நக்கன் விக்கிரமகேசரி, மகன் பூதி ஆதித்தபிடாரன் அவர் மகன்களான ஆதித்தன் பூதி, ஆதித்தன் ஒற்றி எனப் பலரைக் கல்வெட்டுகள் அடையாளப்படுத்துகின்றன. தாங்கள் பிறந்த நட்சத்திரங்களில் திங்கள் தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப் பூதி ஆதித்தபிடாரரும் ஆதித்தன்பூதியும் நிலமளிக்க, தம் திருமணக் கொடையாக ஆதித்தன் ஒற்றி அளித்த நிலவிளைவால் 12 நந்தாவிளக்குகள் இக்கோயிலில் ஒளிர்ந்தன. ஆதித்தன் பூதி தம் மகனான பூதிபராந்தகனுக்கு முதற்சோறு ஊட்டிய நாளில் இக்கோயில் இறைவனுக்கு நான்கு வேலி நிலமளித்தார். அதன் விளைச்சல் ஒரு வேலிக்கு நூறு கலம் நெல்லாக இக்கோயில் செயற்பாடுகளுக்கு உதவியது.

கோயிலை எழுப்பிய ஆதித்தபிடாரி இறைவனையும் வழிபாட்டையும் பற்றி மட்டுமே சிந்தனை கொள்ளாது, கோயில் ஊழியர்களின் நலத்தையும் கருதிச் செயற்பட்டதைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. செந்துறைக் கோயிலில் உழைத்த பல்வகைப் பணியாளர்களுக்கும் வாழிடம் உருவாக்க விழைந்த அவ்வம்மை, அதற்காகவே ஊர்மக்களிடம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளை இணைத்துக் கோயிலருகே, ‘மடவிளாகம்’ ஒன்றை அமைத்தார்.

அக்காலத்தே கோயில் வழிபாடுகளின்போது பல்வேறு இசைக்கருவிகளை இயக்கிய கலைஞர்கள் உவச்சர்கள் என்றழைக்கப்பட்டனர். செந்துறையில்தோல், காற்று, நரம்பு, கஞ்சக் கருவிகளுடன் வாய்ப்பாட்டும் சேர்ந்தமையும் இசைப் பெருக்கை ஐம்பேரொலியாக எழுப்பிய கலைஞர்களுக்கு வாழ்வூதியமாக ஊரவையாரிடமிருந்து தாம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளைத் தட்டழிப்புறம் என்ற பெயரில் வழங்கி மகிழ்ந்தவர் ஆதித்தபிடாரி. சோழர் காலத்தில் ஐம்பேரொலியுடன் வழிபாடு நடைபெற்ற கோயில்கள் மிகச்சிலவே. அவற்றுள் செந்துறையும் ஒன்றென்னும் பெருமை ஆதித்தபிடாரியால் விளைந்தது.

ஆதித்தபிடாரியின் கல்வெட்டு

கோயிற் செயற்பாடுகளுக்காகவும் கோயிலில் ஒளியூட்டிய விளக்குகளுக்காகவும் திருவிழா முதலிய கொண்டாட்டங்களுக்காகவும் தம்மாலும் பிறராலும் ஊரவையாலும் கோயிலுக்கு அளிக்கப்பெற்றிருந்த நிலங்களை உழுது பயிரிட்டுக் கோயிலுக்கு வளம் சேர்த்த உழுகுடிகளையும் பிடாரி மறந்தாரில்லை. அவர்களுக்கு இல்லிருக்கை அமைக்கப் பல நிலத்துண்டுகளை விலைக்குப்பெற்று உதவியவர், அந்நிலங்களின் மீது பின்னாளில் உரிமைச் சிக்கல்கள் நேரிடக்கூடாது என்பதற்காகவே, ‘நான் பெற்ற பரிசே குடுத்தேன்’ என்று நிலத்தின் மீதான உரிமைகளையும் விலக்குகளையும் தெளிவுபடுத்திக் கல்வெட்டாக்கினார்.

கோயில் நிலங்களையும் ஊர் நிலங்களையும் பழுதின்றி அளக்கக் கோயில்களில் அந்நாளில் அளவுகோல்கள் வெட்டப்பட்டிருந்தன. சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் பலவற்றில் நன்செய், புன்செய் நிலங்களை அளக்கப் பயன்படுத்திய நில அளவுகோல்கள் எழுத்துப் பொறிப்புடனும் பொறிப்பின்றியும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் புகழ்வாய்ந்த இரண்டு அளவுகோல்களை இக்கோயிலில் அமைத்த பெருமை ஆதித்தபிடாரிக்கே உரியது. ‘இது குழிக்கோல்’ என்ற எழுத்துப் பொறிப்புடன் இறையகத் தாங்குதளத்தின் மேல் வெட்டப்பட்டுள்ள 90 செ.மீ. அளவுகோல் அரிதினும் அரிதான சோழர் காலப்பொறிப்பாகும். முகமண்டபத் தென்பகுதியில் இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடையில் வெட்டப்பட்டுள்ள 4 மீ.நீள அளவுகோலை அங்குள்ள எழுத்துப் பொறிப்பு ‘நிலமளந்தகோல்’ என்கிறது.

நிலமளந்தகோல்

ஒரு கோயிலில் வெட்டப்பட்டிருக்கும் அளவுகோலை மற்றொரு கோயிலிலுள்ள கல்வெட்டுக் குறிப்பது மிகமிக அரிதான செய்தியாகும். செந்துறையில் ஆதித்தபிடாரியின் காலத்தில் வெட்டப்பட்ட இக்கோல்களுள் ஒன்றான நிலமளந்தகோலை, செந்துறையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள அந்தநல்லூர் வடதீர்த்தநாதர் கோயில் கல்வெட்டொன்று சுட்டுகிறது. முதல் இராஜராஜரின் ஏழாம் ஆட்சியாண்டில்(பொ.கா.992) பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு, ‘திருச்செந்துறை ஸ்ரீவிமானத்து வெட்டிக்கிடக்கும் பெருங்கோலால்’ என்று இந்நிலமளந்த கோலைக் குறிக்கிறது. அல்லூர்ப் பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டொன்றும் இக்கோலை முதன்மைப்படுத்திப் பேசுகிறது.

ஆதித்தபிடாரியால் கற்றளியான இக்கோயிலின் தலமரமான பலாவும் இங்குள்ள கல்வெட்டொன்றில் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். இம்மரத்தின் கீழிருந்து கோயிலாரும் கொடையாளரும் சான்றாளர் முன்னிலையில் ஓர் அறக்கட்டளை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டதை இக்கல்வெட்டு வழி அறியநேர்கையில் தலமரங்களுக்கு மக்கள் அளித்த பெருமையை உணரமுடிகிறது.

தமிழ்நாட்டில் பல பெண்ணரசிகள் கோயில்கள் எடுத்துப் புகழ் வளர்த்திருந்தாலும் நங்கை பூதி ஆதித்தபிடாரி வரலாற்றில் அழுந்தப் பதிவாவது கோயிற்குடிகளின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறையால்தான். அளவில் சிறியதாக இருந்தாலும் அழகுணர்ச்சியுடன் எடுக்கப் பெற்றிருக்கும் செந்துறைக் கோயில் சோழர் காலப் பொருளாதாரம், சமூக நடைமுறைகள், கலைகள் சார்ந்து கல்வெட்டுகளும் சிற்பங்களும் கொண்டு பொலிவது நங்கை பூதி ஆதித்தபிடாரியின் பெயரைக் காலங்கடந்தும் வாழவைக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக