
ஜூன் 6, 2021 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்திய மெய்நிகர் நிகழ்வில், “வரலாறு- நீங்களும் நானும்” என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் ஆற்றிய சிறப்புரையின் பதிவு இது.
ஜூன் 6, 2021 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்திய மெய்நிகர் நிகழ்வில், “வரலாறு- நீங்களும் நானும்” என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் ஆற்றிய சிறப்புரையின் பதிவு இது.
ஜூலை 18, 2021 அன்று மேலைச்சிவபுரி வள்ளுவர் மன்றம் நடத்திய மெய்நிகர் நிகழ்வில், “உங்கள் திருவடிகள் என் தலை மேலன” என்ற தலைப்பில், மரு.இரா.கலைக்கோவன் நிகழ்த்திய பொழிவின் பதிவு இது.
‘ஆடவல்லான்’ என்ற தலைப்பில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் இரா. கலைக்கோவன், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் வழங்கிய இலக்கியப் பேருரையின் பதிவு இது.
ஆடல்கலையின் தனிப்பெரும் தெய்வமாக, சிவன் மாற்றபட்டதும் உயர்த்தப்பட்டதுமான வரலாறு குறித்தும், மற்ற தெய்வங்களின் பெருமைக்குரிய உடைமையாக இருந்த ‘ஆடல்கலையின் மணிமகுடம்’ சிவனாரின் தலையில் பொருத்தப்பட்டதுமான நீண்ட வரலாற்றை, நற்றமிழில் விளக்கமுற வழங்கியிருக்கிறார் டாக்டர். கலைக்கோவன்.
10ஆம் நூற்றாண்டுத் தமிழகக் கோயில் படிமவியலில் சிவனுடைய ஆடல், ‘ஆனந்த தாண்டவம்’ என்று பார்போற்றும் வியத்தகு ஆடல் தோற்றநிலையாக மாறும் பரிணாம வளர்ச்சியை, மெய்நிகர்ப் பயணமாகக் காலக்கருவியில் அமரச்செய்து, காட்டிச் செல்கிறார்.
‘ஆடவல்லான்’ என்ற டாக்டர். இரா. கலைக்கோவனின் வானொலிப் பொழிவு, அவர்தம் கருத்துக்களோடு தொடர்புடைய தமிழகக் கோயில் சிற்பங்களின் பின்னணியில், குறும்படம்போல் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் இரா. கலைக்கோவன்
அண்மைக் காலத்தே அரசு விடுமுறைநாளாக அறிவிக்கப் பெற்ற தைப்பூசத் திருவிழா தேவாரம் பாடிய மூவருள் அப்பர், சம்பந்தர் பதிகங்களில் சிறக்கக் குறிக்கப்பட்டுள்ளது. பொதுக் காலம் 6ஆம் நூற்றாண்டிலேயே இவ்விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை அவர்தம் பாடல்கள் சுட்டுகின்றன. ‘பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த’ என்று போற்றுமளவு பெருமையுடன் நிகழ்ந்த இத்தைப்பூசவிழாவை மேலும் பெருமைப்படுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழராட்சியில் திருக்கூத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
வீரபாண்டியன் தலைகொண்ட பரகேசரிவர்மரான சோழஅரசர் ஆதித்தகரிகாலரின் 4ஆம் ஆட்சியாண்டின்போது திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயில் வளாகத்திருந்த நாடகசாலையில், அவ்வூரை நிருவகித்த நகரத்தார், அவ்வூரை உள்ளடக்கியிருந்த திரைமூர்நாட்டின் ஆட்சிக்குழுவினரான நாட்டார், கோயில் தேவகன்மிகள் ஆகியோர் கோயில் செயல்அலுவலரான பராந்தக மூவேந்தவேளார் தலைமையில் கூடி, தைப்பூசம், வைகாசித் திருவாதிரை விழாக்களின் போது கோயிலில் கூத்து நிகழ்த்த முடிவுசெய்தனர்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் சோழர் காலத்தே பலவகைக் கூத்துகள் ஆடப்பட்டன. சாந்திக்கூத்து, சாக்கைக்கூத்து, தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, விநோதக்கூத்து எனும் அவற்றுள், ஆரியக்கூத்தைத் தேர்ந்த கோயிலார் அக்கூத்தில் வல்லாராகத் திகழ்ந்த கீர்த்தி மறைக்காடனான திருவெள்ளறைச் சாக்கைக்குக் கூத்தாடும் வாய்ப்பை அளித்தனர்.
தைப்பூசத்தன்று ஒரு கூத்தும் இறைவன் தீர்த்தமாடிய மறுநாள் தொட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து மூன்று கூத்துகளும் அது போலவே திருவாதிரைக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து மூன்று கூத்துகள் ஆடவும் முடிவானது. ஒவ்வொரு கூத்தும் ஓர் அங்கமென ஏழங்கம் ஆரியக்கூத்தாட இசைந்த மறைக்காடனுக்குப் பிற செலவுகளுக்காகக் கோயில் பண்டாரத்திலிருந்து 14 கலம் நெல் அளிக்கப்பட்டதுடன், கோயிலுக்குச் சொந்தமான விளங்குடி நிலத்தில் ஒரு வேலி நிலம் வாழ்வூதியமாகத் தரப்பட்டது.
திருவிடைமருதூரில் நிகழ்ந்தாற் போலவே திருநள்ளாறு, திருவாவடுதுறை, வயலகம் கோயில்களிலும் ஆரியக்கூத்து ஆடப்பட்டது. திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயிலில் புரட்டாசித் திருவிழாவின்போது ஏழுநாட்கள் இக்கூத்து நிகழ்ந்தது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர், வயலகம் விசுவநாதசாமி கோயில்களில் ஆரியக்கூத்து நிகழ்த்தப்பட்டதையும் அதை ஆடும் உரிமை பெற்றிருந்த கூத்தர்களின் பெயர்களையும் அறிய முடிகிறதே தவிர, அக்கூத்து எப்போது நிகழ்த்தப்பட்டது என்பதற்குத் தகவல் இல்லை. இக்கட்டுரையாசிரியர் அறிந்தவரையில் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டாடப்பட்ட தைப்பூசத்திற்குத் தமிழ்நாட்டுத் திருக்கோயில் ஒன்றில் நான்குநாள் கூத்து நிகழ்த்தப்பட்டதைத் தெரிவிக்கும் கல்வெட்டுத் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மட்டுமே பதிவாகியுள்ளது.
தைப்பூசம் தமிழ்நாட்டின் பல கோயில்களில் பெருவிழாவாக நிகழ்ந்தமை சுட்டும் கல்வெட்டுகள் பரவலாகக் கிடைத்தபோதும் நித்தவிநோதரான முதலாம் ராஜராஜரின் பெரியவேளத்தில் பணியிலிருந்த (பெண்டாட்டி) நக்கன் கற்பகவல்லி, 1500 ஆண்டுகள் பழைமையானதான திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில் (பாச்சில் ஆச்சிராமம்) வளாகத்தில் பொ. கா. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பதிவுசெய்திருக்கும் கல்வெட்டு குறிப்பிடத்தக்கதாய் ஒளிர்கிறது. அக்கோயில் இறைவனின் மகளாகத் தம்மைக் கருதி, ‘தேவனார் மகள்’ என்று தம்மைப் பெருமையுடன் விளித்துக் கொண்ட கற்பகவல்லி, அவ்விறைவனிடம் தம்மைத் தலைப்படுத்திக் கொண்டமை சுட்டவே, அக்கால வழக்காறு ஒட்டி ‘நக்கன்’ என்னும் முன்னொட்டையும் தம் பெயரின் முன் கொண்டிருந்தார்.
தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி, மாற்றுரைவரதீசுவரரிடம் மாற்றுக்குறையா அன்பு கொண்டிருந்தமையால், வரதீசுவரர் வளாக வழிபாட்டையும் படையல்களையும் செழிப்பாக்க 201 கழஞ்சுப் பொன்னும் 2மா முக்காணி நிலமும் கொடையளித்து 5 அறக்கட்டளைகளை அங்கு நிறுவினார். அவற்றுள் ஒன்றே தைப்பூசத் திருவிழா. அத்திருநாளன்று இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்து அவருக்குப் பெருந்திருஅமுது படையலிடத் தேவையான ஒரு கலம் தூணிப்பதக்குப் போனகஅரிசி, நெய், பருப்பு, பெரும்பயறு, தயிர், மிளகு, உப்பு, பாக்கு, கறியமுது ஆகியவற்றுக்குக் கற்பகவல்லி கொடையிலிருந்து வரவான நெல் ஒதுக்கப்பட்டது.
போனகக்குருத்திடுவார், போனகம் இடுவார், நெல்குற்றிய பெண், விறகிட்டவர் ஆகியோருக்கான ஊதியம், அந்நாளில் இறைவன் உச்சம்போது உணவு கொள்கையில் 50 சிவயோகிகளும் 50 தவசிகளும் கோயிலில் உணவருந்த ஓராளுக்கு நாழி உரி என 100 பேருக்கு 1 கலம் தூணிப்பதக்கு 6 நாழி அரிசி, இவ்விருந்தைச் சமைத்தவர், சமைக்க விறகிட்டவர், நெல்குற்றியவர், உண்ணவந்தாருக்கு இலையிட்டவர், உரிய கலங்களிட்ட குயவர் ஆகியோருக்கும் கொள்ளுக்குமான நெல், விழாவை முன்னிருத்தித் தேவர்கன்மிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு கலம் நெல் ஆகிய அனைத்துச் செலவினங்களுக்குமாய் ஒதுக்கப்பட்ட நெல்லுமாகத் தைப்பூசத் திருவிழாவுக்காக ஆண்டுதோறும் 8 கலம் 2 தூணி 4 நாழி நெல் கணக்கிடப்பட்டுக் கொள்ளப்பட்டது.
விழாவில் இறைவழிபாடு, படையல் என்பதோடு நின்றுவிடாது, தவசிகளையும் யோகிகளையும் நினைந்தூட்டிய சிறப்பும் விருந்துக்காய் உழைத்தவர்களை உவப்போடு சிறப்பித்த பாங்கும் கற்பகவல்லியின் அன்புள்ளம் காட்டும் காலப் பதிவுகள். தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைக்கும் விழாக்காலக் கல்வெட்டுகளை ஒருங்கிணைத்துப் பார்த்தால் அக்காலச் சமூகப்போக்கும் சமயஞ்சார் சிந்தனைகளின் மக்கள் நோக்கும் வெளிப்படும் வாய்ப்புண்டு.
(2001இல் நிறுவியவர் கல்வெட்டறிஞர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன்)
இதுவரை நிகழ்ந்த பொழிவுகள்
(அறக்கட்டளைப் பொழிவுகள் பதிவாகியுள்ள வரலாறு தொகுதிகளின் எண்கள் அடைப்புக்குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன.)
1 விமானங்களின் தோற்றமும் வளர்ச்சியும்-கணபதி சிற்பி (9-10)
2 எறிவீரபட்டினம்-எ.சுப்பராயலு (11)
3 அழகன்குளம்அகழ்வு-அ. அப்துல் மஜீது (12-13)
4 Architecture of Kerala temples -T.Satyamurthi (14-5)
5 பண்டைய ஓவியங்களின் மீட்டுருவாக்கம்-சிக்கல்களும் தீர்வுகளும்-சே.கோகுல் (16)
6 வரலாற்றுக் கால உருவாக்கம்-சில சிந்தனைகள்-கா.ராஜன் (17)
7 மதுரையில் சமணசமயம்-வெ.வேதாசலம் (18)
8 தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்-சு.இராசவேலு (19)
9 காரைக்கால் அம்மை யார்?-மா.ரா.அரசு (20)
10 பிரமதேயங்கள் உருவாக்கம், செயற்பாடுகள், இயல்புகள்-சு.சுவாமிநாதன் (21)
11 இந்தியக் கடல்சார் தொல்லியல்-செய்தனவும் செய்யவேண்டியனவும்-ந.அதியமான் (22)
12 கல்வெட்டுகள் வழித் தமிழ்நாட்டுப் பெண்கள்-நா.மார்க்சியகாந்தி (23)
13 தாஜ்மஹால்-பராமரிப்பும் நிருவாகமும்-து.தயாளன் (24)
14 திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ.கா.500-1300)-மு.நளினி (25)
15 காலப்போக்கில் தமிழகக் கல்வெட்டுகள்-சு. இராஜகோபால் (26).
16 தமிழரின் மூன்று நூற்றாண்டுக் காலப் பண்பாட்டு வரலாறு (பொ.கா.250-550)-கோ.வேணிதேவி (27).
17 பாச்சில் கோயில்கள்-அர.அகிலா (28).
18 இராஜசிம்மர் காலக் கற்றளிகள்-சீ.கீதா ராமமூர்த்தி (29-30).
19 புறநானூற்றில் போர்மறுப்புச் சிந்தனைகள்-இ.ஜே.சுந்தர் (31)
(2007இல் நிறுவியவர் மருத்துவர் சு.பழனியாண்டி)
விருது பெற்ற பெருமக்கள்
1 வெ. வேதாசலம் (2007)
2 சு. இராசவேலு (2008)
3 மா. ரா. அரசு (2009)
4 சூ. சுவாமிநாதன் (2010)
5 ந. அதியமான் (2011)
6 நா. மார்க்சியகாந்தி (2012)
7 து. தயாளன் (2013)
8 மு. நளினி (2014)
9 சு. இராஜகோபால் (2015).
10 கோ. வேணிதேவி (2016).
11 அர. அகிலா (2017).
12 சீ. கீதா ராமமூர்த்தி (2018).
13 இ. ஜே. சுந்தர் (2020)
(2019இல் நிறுவியவர்கள் –
பேராசிரியர்கள் கோ.வேணிதேவி, சீ. கீதா, மு.நளினி, ஆய்வு மைய இயக்குநர் இரா.கலைக்கோவன்.)
இவ்வறக்கட்டளையின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் வரலாற்றாய்வு மையத்தின் வரலாறு ஆய்விதழில் முற்றிலும் களப்பணி சார்ந்த தரவுகளின் அடிப்படையில் முத்திரைக் கட்டுரை இடம்பெறும்.
முத்திரைக் கட்டுரைகள்
1. புள்ளமங்கை ஆலந்துறையார் கல்வெட்டுகள் (வரலாறு 29-30)
(2020இல் நிறுவியவர்கள்-
பேராசிரியர் மு.நளினி, திருவாளர்கள் ம.ராமச்சந்திரன், ச.கமலக்கண்ணன், சு.சீதாராமன்.)
2021
முதல் பரிசு: செல்வி க. மதுபாலா, முதுகலை வரலாறு, அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி, முசிறி.
இரண்டாம் பரிசு: செல்வி ரெ. ஹேமலைலா, முதுகலை வரலாறு, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
(2021இல் நிறுவியவர்கள்-
டாக்டர் இரா.கலைக்கோவன், பேராசிரியர் மு.நளினி)