திருமடத்துக் குடைவரைகள்

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டில் பழம் பெருமையுடன் விளங்கும் திருமடங்கள் பல உள்ளன. சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், சமணம் எனப் பல்வேறு சமயங்களைச் சார்ந்துள்ள அவற்றுள், குடைவரைக் கோயில்களைத் தங்கள் ஆளுகையின் கீழ்க் கொண்டுள்ள திருமடமாய்த் திகழ்வது திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடம்தான். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இலங்கும் இத்திருமடத்தின் கீழ்க் குன்றக்குடியில் மூன்றும் கோளக்குடியில் ஒன்றும் பிரான்மலையில் ஒன்றும் அரளிப்பட்டியில் ஒன்றுமாய் ஆறு குடைவரைகள் உள்ளன. இவை ஆறுமே தமிழ்நாட்டுக் குடைவரைக் கலைவரலாற்றில் தனிச்சிறப்புடன் பொலிபவை.

குடைவரை

மலையிலோ, குன்றிலோ, பாறையிலோ முன்னிருந்து பின்னாகக் குடைந்து உருவாக்கப்படும் கோயில்களே குடைவரைகள். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான குடைவரைகள் பாறை அல்லது சிறு குன்றுகளின் கீழ்ப்பகுதியில் அமைய, சிலவே பெரிய குன்றின் அல்லது மலைச்சரிவின் இடைப்பகுதியில் உள்ளன. 

குன்றக்குடிக் குடைவரைகள்

மகுடமற்ற பிள்ளையார்

குன்றக்குடித் திருமடத்தின் கீழுள்ள ஆறு குடைவரைகளில் குன்றக்குடியிலுள்ள மூன்றும் அங்குள்ள குன்றின் கீழ்ப்பகுதியில் அடுத்தடுத்துக் குடையப்பட்டுள்ளன. குடைவுகளுக்கு இடைப்பட்ட பாறைச்சரிவுகளில் இலிங்கத் திருமேனி, பிள்ளையார். மகுடமற்ற தலையுடன் விளங்கும் இப்பிள்ளையார் தனித்தன்மையர். மூன்று குடைவரைகளிலுமே கருவறையில் தாய்ப்பாறையில் உருவான இலிங்கத்திருமேனி.

முதலிரு குடைவரைகள்

விஷ்ணுவும் கருடனும்

குடைவரைக் காலச் சிற்பங்கள் ஏதுமற்ற முதல் குடைவரையில் இலிங்கத்தின் கோமுகத்தைக் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ள பூதம் தலையால் தாங்குகிறது. மசிலீச்சுரம் என்று கல்வெட்டுக் குறிக்கும் இரண்டாம் குடைவரை, முகப்பின் பக்கச்சுவர்களில் சிவபெருமானின் கருவிகளான மழுவையும் முத்தலை ஈட்டியையும் அடையாளப்படுத்துமாறு, அவற்றை மகுடத்திலும் தோள்களின் பின்னிருக்குமாறும் கொண்ட காவலர் இருவர் சிற்பங்களையும் மேற்குச்சுவர்க் கோட்டத்தில் விஷ்ணுவும் கருடனும் தோழமையுடன் நிற்கும் சிற்பக் காட்சியையும் கொண்டுள்ளது. கருடன் மனிதவடிவில் காட்டப்பட்டுள்ளார். தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் இதுபோல் மழுவடியாராகவும் சூலத்தேவராகவும் காவலர்களைக் காண்பது அரிதானது. 

சூலத்தேவர்

மூன்றாம் குடைவரை

மூன்றாம் குடைவரையின் முப்பக்கச் சுவர்களும் பேருருவச் சிற்பங்களால் நிறைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது இரண்டு கால்களையும் குறுக்கீடு செய்து எட்டுத் திருக்கைகளுடன் சிவபெருமான் ஆடும் அர்த்தஸ்வஸ்திகக் கரணம். செவல்பட்டிக் குடைவரையிலும் இக்கரணக் காட்சி இடம்பெற்றிருந்தாலும் இங்கு இசைக்கலைஞர்களும் உடனிருப்பது கூடுதல் சிறப்பு. 

கோளக்குடிக் குடைவரை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோளக்குடிக் குடைவரை அவ்வூர்க் குன்றின் நடுப்பகுதியில் உள்ளது. காலப்போக்கில் மலையின் அடிவாரத்திலும் இடைப்பகுதியிலும் மலைமேலும் எனப் பல கற்றளிகள் பெற்றுப் பெருவளாகமாக மாறியுள்ள கோளக்குடிக் குடைவரையின் மண்டபச் சுவர்களில் இருபுறத்தும் மலரேந்திய முனிவர்களின் சிற்பங்கள். அகத்தியர், புலத்தியர் என்று கோயிலாரால் அழைக்கப்படும் இத்தகு அருளாளர் சிற்பங்களைப் புதுக்கோட்டை மாவட்டத் தேவர்மலைக் குடைவரையிலும் காணமுடிகிறது. கோளக்குடியின் சிறப்புகளாகக் கருவறை வாயில் மேலுள்ள மகரதோரணத்தையும் குன்றின் ஒருபகுதியில் வெட்டப்பட்டுள்ள எழுவர் அன்னையர் சிற்பத்தொகுதியையும் சுட்டலாம்.

எழுவர் அன்னையர்

தமிழ்நாட்டின் தென்பகுதியில் மட்டுமே காணக்கிடைக்கும் குடைவரைக் கால எழுவர் அன்னையர் தொகுதிகளில், இங்கு மட்டுமே அன்னையருள் ஒருவரான சாமுண்டி, இயமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு, அவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர், அழகில் சிறந்தவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகள் கீழிறங்கிப் பிணக்குண்டலங்களுடன் தோள்களை வருட, கொண்டையின் முகப்பில் மண்டையோடு. மூன்று தலைகளைச் சுற்றியும் பெரிய ருத்திராக்கங்களாலான தலைமாலை அணிந்து, வலக்கையில் சுரைக்குடுவையுடன் இங்குள்ள நான்முகியின் சிற்பமும் தனித்தன்மையதே. குன்றக்குடி போலவே கோளக்குடியிலும் தாய்ப்பாறைப் பிள்ளையார் மலையின் தென்சரிவில் செதுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை வளாகம் கோளக்குடிதான். 

சாமுண்டி

பிரான்மலைக் குடைவரை

வள்ளல் பாரியின் பறம்புமலையாக அறியப்படும் பிரான்மலையிலுள்ள திருக்கொடுங்குன்றநாதர் கோயில்வளாகத்தின் அளவில் சிறிய குடைவரை, அதன் மண்டபவாயிற் கோட்டங்களில் காவற்பெண்டுகளைக் கொண்டுள்ளது. திருமடத்துக் குடைவரைகள் ஆறனுள் பிரான்மலையில் மட்டுமே தாய்ப்பாறைச் செதுக்கலாகப் பிள்ளையார் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கருவறையில் சிவபெருமானும் உமையன்னையும் இணையாக அருகருகே அமர்ந்துள்ள அழகுக் கோலம் கண்களை நிறைப்பது. தாய்ப்பாறையில் உருவானவையா, சுதைவடிவங்களா என்றறிய முடியாதவாறு அழகூட்டல்கள் பெற்றுள்ள இவ்விரு இறைத் திருமேனிகளும் கைத்திறன் வல்ல பாண்டிநாட்டுக் கவின்கலைஞர்களின் படைப்புகளாகும். இது ஒத்த இணைக்கோலம் சிவகங்கை மாவட்டத் திருமலைக் குடைவரைக் கருவறையிலும் இடம்பெற்றிருப்பினும் பிரான்மலை இணையரின் அழகு சொற்களை மீறிய சுகம்.

அரளிப்பட்டிக் குடைவரை

பிள்ளையார் லிங்கம்

அரளிப்பட்டி மஞ்சுவிரட்டுக்குப் பெயர் பெற்றிருக்குமாறே, அரவங்கிரிக் குன்றின்கீழ்ப் பகுதியிலுள்ள எளிய குடைவரைக்காகவும் அறியப்பட்ட ஊராகும். குடைவரையின் மண்டபச் சுவர்களில் வடபுறமுள்ள இலிங்கத்திருமேனி தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாத ‘பிள்ளையார் லிங்கமாக’ ஒன்றுக்குள் ஒன்றாய் இலிங்கபாணத்தில் பிள்ளையார் செதுக்கலைப் பெற்றுள்ளது. உற்றுநோக்குவாருக்கே வடிவம் புலப்படுமாறு, தந்தைக்குள் தனையனைப் பொருத்தமாய்ப் பொளிந்திருக்கிறார்கள். இயற்கை எழில் நிரம்பிய சூழலில் அமைந்திருக்கும் இக்குடைவரையின் தாய்ப்பாறை இலிங்கம் இத்திருமடக் குடைவரைகளிலேயே அளவில் சிறியதாகும். 

திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடத்தின் ஆளுகையிலுள்ள ஆறு குடைவரைகளும் அங்குள்ள பல்வேறு தாய்ப்பாறைச் செதுக்கல்களும் பொதுக் காலம் எட்டாம் நூற்றாண்டில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. இவையனைத்துமே ஏதேனும் ஒரு விதத்தில் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் தனித்துக் குறிக்குமளவு சிறப்புப் பெற்றுள்ளமை இவற்றை உருவாக்கிய கைகளின் வளமையையும் பின்னிருந்த உள்ளங்களின் செழுமையையும் காலம் உள்ளளவும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும். இக்குடைவரைகளில், பதிவாகியிருக்கும் கல்வெட்டுகளோ பாண்டிநாட்டு வரலாற்றின் சுவையான பக்கங்களைக் கருத்தோடு தேடுவாருக்குக் கனிவோடு வழங்கி மகிழ வல்லன.

கலை, இலக்கியத்தில் பேய், பிசாசு, பூதம்

இரா. கலைக்கோவன்

பேய், பிசாசு, பூதம் என்று சொல்லும் போதே ஒரு மெல்லிய நடுக்கம் உடலில் பரவும். கண்கள் நாற்புறமும் சுழன்று, ‘ஏதுமில்லையே’ என்பதை உறுதி செய்யும். அண்மைக் காலத்தே வெளியான பேய்ப்படங்களின் பசுமையான நினைவுகளுடன் பழம் பேய்ப்படங்களின் நிழலான பின்னணியும் மனத்திரையில் ஓடும். காலங்காலமாய் அச்சம் எனும் உணர்வுடன் இணைந்து பின்னப்பட்ட இந்த மூன்று சொற்களும் மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்தே உயிர் பெற்று உலா வருவதே இதற்கெல்லாம் காரணம்.

பேய்

பேய், பிசாசு, பூதம் எனும் இம்மூன்றனுள் தமிழர் இலக்கியத்தில் பெருவழக்குப் பெற்று மிளிர்பவை பேயும் பூதமும்தான். பேய் தொல்காப்பியப் பழைமையது. பொருளதிகாரக் காஞ்சித்திணை பேயின் செயற்பாடுகள் குறித்துப் பேசுகிறது. போரில் காயப்பட்டோரை நரி முதலியன கடித்துவிடாதவாறு, அவர்தம் உயிர் தானாகப் போகுமளவும் அருகிருந்து காக்குமாம் பேய். இதை, ‘பேய் ஓம்பல்’ என்றே இலக்கியம் பாராட்டுகிறது. உயிர் நீங்கிய உடலே பேய்க்கு உணவு. அதனால்தான், இந்தக் காவல். தன் உணவைப் பிற உயிர்கள் சேதப்படுத்திவிடக் கூடாதல்லவா! உண்ட மகிழ்வில் பேய் ஆடுவதும் உண்டு. அதைப் பேய்க் குரவையாகப் பார்க்கிறது சிலப்பதிகாரம். பேய்கள் ஆடி மகிழும் போர்க்களத்தைப் படம்பிடிக்கிறது பதிற்றுப்பத்து.

சாமுண்டியின் கீழ்ப் பிணமுண்ணும் பேய்

பேய்களைச் சிவபெருமானுடன் இணைத்து மகிழ்கின்றன பத்திமைக் கால இலக்கியங்கள். அவர் சுடுகாட்டில் ஆடுபவரல்லவா! சம்பந்தரும் அப்பரும் ஆறு திருமுறைகளிலும் காட்டியிருக்கும் பேய்க்காட்சிகள், ‘பேய் வரலாறு’ எழுதுமளவிற்குத் ததும்பி நிற்கின்றன. ஆடிவரும் பேய்கள், கூடி ஓடிவரும் பேய்கள், இசைக்கருவிகளை இயக்கியவாறே பாடிவரும் பேய்கள் எனப் பதிகங்களில் இறையாடலைக் கிளர்ச்சியுடன் காட்ட சம்பந்தருக்கும் அப்பருக்கும் பேய்கள் பெருந்துணையாகின்றன. அச்சமூட்டும் காட்சிகளும் இல்லாமல் இல்லை. அது போலவே பேய் வண்ணனைகளும் பதிகங்களில் விரவிக்கிடக்கின்றன.

பேய் எப்படியிருக்கும்?

காளியுடன் பேய்கள்

நீண்டு விரிந்த செந்நிறக் கூந்தல், வேனிற் கால முருக்கமரத்தின் முற்றிய நெற்றுப் போல் கைவிரல்கள், அகலத்திறந்த வாய், கோரைப் பற்கள், குழிந்த கண்கள், சுழன்றும் சுற்றியும் வரும் நடை என்று இலக்கியப் பேய்கள் கண்காட்டுகின்றன. பேய்கள் எங்கிருக்கும், எப்போது நடமாடத் தொடங்கும் என்பதைக்கூட இலக்கியங்கள் இடஞ்சுட்டிப் பொருள் விளக்கியுள்ளன. சிவபெருமானின் மகளே பேய்த்தொழிலாட்டிதானே!

பூதம்

சங்க இலக்கியங்கள் பேய்க்கு நெருக்கமாக விளங்க, காப்பியங்களும் பத்திமை இலக்கியங்களும் பூதத்தை இமய உச்சிக்குக் கொண்டு செல்கின்றன. பாழ் மன்றத்திலும் போர்க்களத்திலும் மட்டுமே உலவும் பேய்களுக்கு மாறாகப் பூதங்கள் நகர் நடுவில் இடம்பிடித்துத் தீமைகளைக் கண்டித்தன. தவறு செய்தாரைப் பிடித்துண்ணவும் செய்தன. காவல் பூதங்களாகவும் சதுக்கப் பூதங்களாகவும் மக்களால் மகிழ்ந்து போற்றப்பட்ட அவற்றைப் படையாகக் கொண்டவரே சிவபெருமான் என்று அப்பரும் சம்பந்தரும் கொண்டாடுகின்றனர்.

பூதத்தின் தோற்றம்

​குள்ள வடிவின, பெருத்த வயிறின, சிறுகண் உடையன, இருண்டு அகன்ற வாயின, கூட்டமாய் இயங்கும் பண்பின என்று பூதங்களை வண்ணிக்கும் பதிக ஆசிரியர்கள் சிவபெருமான் ஆடும்போது அதற்குப் பாடுவதும் உடன் ஆடுவதும் கருவியிசை சேர்ப்பதும் அவற்றின் அரும்பணி என்று போற்றுகின்றனர். சிவபெருமான் பிச்சையேற்கும் பெம்மானாய் முனிவர் தவச்சாலைகளை அணுகும்போது அவரது பிச்சைக் கலத்தைத் தலையில் சுமந்து முன் நகர்பவை இவையே. இறைவனின் இத்தகு நகர் உலாக்களில் பேய்களுக்கு இடமில்லை. அவை காட்டோடு நின்றுவிடும்.

மக்கள் வழக்கில் பேயும் பூதமும்

பாடல்களில் இடம்பெற்றாற் போலவே மக்கள் உள்ளங்களிலும் நிறைந்து சிலரது பெயராகவே இவை மாறின. பேய்மகள் இளவெயினியும் பூதங்கண்ணனாரும் சங்கக் கவிஞர்கள். பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் முதலாழ்வார் மூவருள் இருவர். பூதப்பாண்டியன் மனைவி இலக்கியப் பாடல் ஈந்தவர். பேயுரு எடுத்துத் தம்மை பேயார் என்று அழைத்துக் கொண்டவர் காரைக்காலம்மை.

சிற்பக் காட்சிகளாய்ப் பேயும் பூதமும்

குடைவரைகளின் நுழைவாயிலான முகப்புகளின் தூண்கள் தாங்கும் கூரையுறுப்புகளில் ஒன்றுதான் எழுதகம். சிற்ப நூல்கள், ‘வலபி’ என்று குறிப்பிடும் இந்த வளைமுகப் பகுதியைத்தான் தங்கள் எண்ணம் போல் கைத்திறன் காட்டும் இடமாய்த் தேர்ந்தனர் சிற்பிகள். தமிழ்நாட்டிலுள்ள 106 குடைவரைகளில் மிகச் சிலவற்றிலேயே எழுதகம் உள்ளது. பல்லவர்ப் பகுதியில் குறிப்பிடத்தக்கது சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை. கொங்குப் பகுதியில் முன்னணியில் நிற்பது கரூர்த் தான்தோன்றீசுவரம். பாண்டியர் பகுதியின் குறிக்கத்தக்க எழுதகம் உள்ள இடமாய் ஒருகல் தளியான கழுகுமலை வெட்டுவான் கோயிலைக் குறிக்கலாம். சோழர்கள் இந்த எழுதகக் கலையைத் தங்கள் கற்றளிகளில் போற்றி வளர்த்து உச்சத்திற்குக் கொண்டு சென்றனர்.

வெட்டுவான்கோயில் கலைப் பூதங்கள்

பலவாய்ப் பூதங்களும் ஒரு சிலவாய்ப் பேய்களும் என இந்த எழுதகக் காட்சிகள் அமைந்தன. மனித வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளை இவற்றின் வழிச் சிற்பிகள் வரலாறாக்கினர். தமிழ்நாட்டில் அன்று வழக்கிலிருந்த இசைக்கருவிகளை இங்குப் பூதங்கள் இசைக்கக் காணலாம். போர்முறைகள், ஆடல்வகைகள், ஒப்பனை, ஆடை- அணிகலன்கள், தலையலங்காரம், அன்றாட நடைமுறைகள், உடற்பயிற்சிகள், குறும்புகள், விளையாட்டுகள், பறவை-விலங்கு வளர்ப்பியல் என இங்குக் காட்டப்பட்டிருக்கும் தமிழர் வாழ்வியல் இன்றளவும் முறையான ஆய்வுகளைச் சந்திக்கவில்லை.

புள்ளமங்கைப் பூதங்கள்

எழுதகத் தொடராக மட்டுமல்லாது, தனிச் சிற்பங்களாகவும் அளவில் பெரியனவாகவும் அமையும் பெருமை பூதங்களுக்கே கிடைத்தது. பரங்குன்றத்து இராவண அருள்மூர்த்தித் தொகுதிப் பூதங்கள் பேரளவின. கயிலையை அசைக்கும் இராவணனை எதிர்க்கும் போர்க்கோலத்தின. உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் தாங்குதளப் பூதம் நரம்பிசைக்கருவியின் நயம் காட்ட, புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் முகமண்டபக் கூரைப் பூதங்களோ வீணையும் தாளமும் சிரட்டைக்கின்னரியும் உடுக்கையும் இயக்கும் அழகின. எழுவர்அன்னையருள் ஒருவரான சாமுண்டியின் சிற்பங்களிலும் காளி அரக்கர்களை அழிக்கும் படப்பிடிப்புகளிலும் பேய்கள் உடனிருப்பாய் உள்ளன. திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், திருத்தணி வீரட்டானேசுவரம் என இவை காட்சிதரும் இடங்களும் கண்களை நிறைப்பவையே.

கல்வெட்டுகளில்

பூதர், பூதபலி எனும் தொடர்களால் பூதமும், ‘விழிகட்பேய்’ என்ற தொடர்வழிப் பேயும் கல்வெட்டுகளில் கண்காட்டினாலும் இலக்கிய ஆளுகை போல் பெருவழக்குப் பெறாமை குறிப்பிடத் தக்கது.  

பிசாசு

பேய், பூதம் சரி. பிசாசு?அகராதிகள் சில பேயே பிசாசு என்கின்றன. பழைய இலக்கியங்களில் கலித்தொகை மட்டுமே பிசாசைச் சுட்டுகிறது. திருக்கோளக்குடிக் கல்வெட்டொன்றும் பிசாசைக் காட்டுகிறது. அந்த ஊர் ஊருணிக்குச் சோழர் காலத்தில் மூவேந்தன் என்னும் பிசாசின் பெயரை மக்கள் சூட்டியிருந்தனராம். நிருவாகத்தால் சுரங்கமாய்க் கருதப்பட்ட்கோயில் நிலவறையில் துணிந்து இறங்கி இந்தக் கல்வெட்டைக் கண்டறிந்தவர் பேராசிரியர் மு. நளினி. நல்லவேளை அவர் இறங்கியபோது அந்த நிலவறையில் கல்வெட்டு மட்டுமே இருந்தது. மூவேந்தன் இல்லை.