‘பல்லவ மன்னன் மகேந்திரர்: கலைஞர்களின் கலைஞர்’ என்ற தலைப்பிலான டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் பிப்ரவரி 19, 2023 அன்று வெளியானது. மகேந்திரர் பற்றிப் பலரும் அறியாத பல புதிய தகவல்களை இக்கட்டிரை வழங்குகிறது.
நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கச்சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுகளில், அயோத்தி ஆழ்வார் கோயில் என்ற புதிய கோயில் பற்றிய குறிப்புகள் கிட்டின. அதனைத் தொடர்ந்து, அயோத்தி ஆழ்வார் கோயிலைத் தேடும் அடுத்தக்கட்ட கள ஆய்வு தொடங்கியது. திருமங்கலத்தில் வரதராஜப் பெருமாள் பெயரால் விளங்கும் இன்றைய கோயிலைக் கண்டறிந்து அங்கு ஆய்வு செய்தபோது, மற்றுமொரு புதிய கல்வெட்டு கிடைத்தது. அக்கல்வெட்டு, கோயிலின் ஒரு பகுதியை ‘திருஅயோத்தி எம்பெரிமான் திருமுற்றம்’ என்று சுட்டியது வினாக்களுக்கு விடையளிக்குமாறு அமைந்தது.
டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கையில், “வரதராஜப் பெருமாள் கோயிலின் இன்றைய கட்டுமானம் அண்மைக் காலத்தது என்றபோதும், அது கட்டப்பட்டிருக்கும் இடம் திருமங்கலத்திலிருந்த அயோத்தி ஆழ்வார் கோயில் திருமுற்றமாகவே இருப்பது சிறப்பாகும்” என்று குறிப்பிட்டார்.