எறும்பீசுவரத்து வேதிபாதச் சிற்பங்கள்

மு. நளினி, இரா. கலைக்கோவன்

சிராப்பள்ளித் தஞ்சாவூர்ச் சாலையில் 15 கி. மீ. தொலைவில் உள்ளது எறும்பியூர். இவ்வூர்க் குன்றின் உச்சியிலுள்ள முற்சோழர் கோயில், சிராப்பள்ளி மாவட்டத்தின் சிறப்பான மலைக்கோயில்களுள் ஒன்றாகும். எறும்பீசுவரர் கோயிலாக அறியப்படும் இதன் இறையகம் (விமானம்) ஒருதள வேசரக் கற்றளியாக அமைந்துள்ளது.

உபானத்தின் மீது பாதபந்தத் தாங்குதளம் பெற்று, 5. 74 மீ. பக்கமுடைய சதுரமாக எழும் இறையகம், அதன் முன்னுள்ள முகமண்டபம் ஆகியவற்றின் சுவருக்கும் தாங்குதளத்திற்கும் இடைப்பட்டுள்ள உறுப்பு வேதிகைத்தொகுதி. கம்புகளுக்கு இடைப்பட்ட பாதங்களுடனான கண்டம் (உள்ளடங்கிய பகுதி), கீழ்நோக்குத் தாமரைவரி, வேதிகை என அமைந்துள்ள இத்தொகுதியின் பாதங்கள் சுவரில் அமையும் தூண்களின் கீழ்ப்பகுதிகளாகும். இப்பாதங்களில் பெரும்பாலன சிற்றுருவச் சிற்பங்கள் கொள்ள, சிலவற்றில் கொடிக்கருக்குகளும் பூக்களும் பறவை, விலங்குருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. விமானத்தின் உயரத்தை எழுச்சியுடன் கூட்டும் இவ்வேதிகைத் தொகுதியின் பாதச் சிற்பங்களை விரிவான அளவில் காணலாம்.

வேதிபாதச் சிற்பங்கள்

இறையகம், முகமண்டபம் இரண்டிலும் 60ஆக உள்ள வேதிபாதங்களில், 14 முகமண்டபப் பகுதியிலும் 46 விமானக் கட்டுமானத்திலும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள், விமானப்பகுதியில் இரண்டு பாதங்களும் முகமண்டபப் பகுதியில் நான்கு பாதங்களும் மட்டுமே செதுக்கல் ஏதுமின்றி வெறுமையாக உள்ளன. எஞ்சியவற்றுள் 33 பாதங்கள் சிற்பங்கள் பெற, 10 பாதங்கள் கொடிக்கருக்கு கொண்டுள்ளன. மூன்று பாதங்களில் உள்ள சிற்பங்கள் அடையாளப்படுத்த முடியாத அளவிற்குத் தேய்ந்துள்ளன. நான்கு பாதங்களில் நந்திகளும் இரண்டில் அன்னப்பறவையும் ஒன்றில் யானையும் மற்றொன்றில் யாளியும் செதுக்கப்பட்டுள்ளன.

கருவறையின் கிழக்குப்பாதங்களில் தனித்த நந்திகளும் முகமண்டபத் தெற்குப்பாதத்தில் இரட்டை நந்திகளும் வடக்குப் பாதத்தில் மூன்று நந்திகளும் காட்டப்பட்டுள்ளன. சிராப்பள்ளி மாவட்டத்தில் துடையூர் விஷமங்களேசுவரர் போன்ற ஒன்றிரண்டு சோழர் காலக் கோயில்களிலேயே நந்திகள் இத்தகு பெருமைநிலை பெற்றுள்ளன. கிழக்குப்பாத நந்தி கிரீவநந்திகளை ஒத்துள்ளமையும் இங்கு எண்ணத்தக்கது.

வேதிபாதச் சிற்பங்கள் உள்ள சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் எறும்பீசுவரமும் விஷமங்களேசுவரமும் மட்டுமே பதினொரு ஆடற்சிற்பங்களைக் கொண்டுள்ளன. எறும்பியூர்ச் சிற்பங்களுள் ஒன்று சிவபெருமானின் ஆடலாக அமைய, நான்கில் ஆண் இசைக்கலைஞராகவும் பெண் ஆடலரசியாகவும் காட்டப்பட்டுள்ளனர். சிலம்பின் அரங்கேற்றுகாதை குறிப்பிடும் பதினோராடல்களில் ஒன்றான குடக்கூத்து மூன்று பாதங்களில் மிளிர்வதும் தமிழ்நாட்டின் வேறெந்தத் திருக்கோயிலின் பாதச்சிற்பத் தொகுதிகளிலும் காணமுடியாத காட்சியாகும். தனித்த ஆடவர் ஆடல் மூன்று பாதங்களில் பதிவாகியுள்ளது.

பாகவதப் படப்பிடிப்புகளாக கருடன்மீதான விஷ்ணுவும் கண்ணன் உறியிலிருந்து வெண்ணெய் எடுப்பதும் ஆயர்களைப் பெருமழையிலிருந்து காக்க கோவர்த்தனமலையைக் குடையாகப் பிடிப்பதும் தன்னைக் கொல்ல வந்த காளை வடிவ அரக்கனை அடக்கி அழிக்கும் வீரமும் காட்டப்பட்டுள்ளன. இராமாயணப் பக்கங்களிலிருந்து சூர்ப்பனகையின் மூக்கறுப்பும் வாலி, சுக்ரீவப் போரும் வாலிமீது இராமன் அம்பெய்வதும் எடுக்கப்பட்டுள்ளன. வாலி, சுக்ரீவப்போர் மேற்கிலும் வடக்கிலும் இரண்டு முறை காட்டப்பட்டுள்ளமையும் இக்கோயிலுக்கே உரிய தனித்தன்மையதாக விளங்குகிறது.

தமிழ்நாட்டின் வேறெந்தச் சோழர் காலக் கோயிலின் பாதச்சிற்பங்களிலும் இடம்பெறாத அளவிற்கு எறும்பியூர்ப் பாதங்கள் பல்வேறு இறைவடிவங்களை, அவற்றுள் சிலவற்றை அவற்றின் வாகனங்களோடு தம்மில் கொண்டுள்ளன. சிம்மவாகினி, எருமையின் மேல் இயமன், மூஞ்சுறு தாங்கும் பிள்ளையார், குதிரையின் மேல் செண்டேந்திய ஐயனார், பேய் சுமக்கும் காளி, நந்தியின் மீது மழு ஏந்திய சிவபெருமான், இரட்டையர்களாய்க் கதிரும் நிலவும் ஆகியவற்றுடன் முத்தலைஈட்டியுடன் பாயும் காளியையும் இங்குப் பதிவு செய்துள்ளனர். இவை தவிர, சடைப்பாரத்துடன் நிற்கும் இருவரும் யாளிப் போர்வீரர் இருவரும் கருடாசன பூதமும் அமர்நிலை அரக்கரும் பத்மநிதியும் எந்தக் குழுவிலும் இணைக்கமுடியாத தனித்த சிற்பங்களாக எறும்பியூர்ப் பாதங்களை அலங்கரிக்கின்றனர்.

சிவபெருமானுக்குரியதான இக்கோயிலில் அவர் தொடர்பான தோற்றங்கள் இலிங்கவழிபாடு, யானையை அழித்தவர், சிவஆடல், நந்தி ஊர்தியர் என மிகமிகக் குறைந்த அளவிலேயே காட்டப்பட்டுள்ளமை அக்காலச் சமயப் பெரும்போக்கைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

ஆடற்சிற்பங்கள்

சிவபெருமானின் ஆடல்

மண்டலநிலையில் இருபாதங்களையும் பார்சுவத்தில் அமைத்து சிவபெருமான் ஆடும் ஆடலுக்கு, கீழே கால்களைக்குக் குறுக்கீடு செய்து வலப்புறம் திரும்பி அமர்ந்திருப்பவர் தம் மடியிலுள்ள குடமுழவை வாசித்தும் இறைவனைப் பார்த்தவாறு இடப்புறம் அமர்ந்திருப்பவர் தாளங்களை இயக்கியும் இசைகூட்ட, ஆடலைப் போற்றுமாறு வலப்புறம் மேலே உள்ள வானவர்
கையுயர்த்தியுள்ளார். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், இடைத்தொங்கல் பெற்ற சிற்றாடை கொண்டு நேர்ப்பார்வையராய் ஆடும் இறைவனின் பின் கைகளில் வலப்புறம் துடி, இடப்புறம் தீயகல். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை அர்த்தரேசிதமாகியுள்ளது. ஆடும் இறைவனின் இருபுறத்தும் கவரிகள்.

குடக்கூத்தாடும் பெண் கலைஞர்

குடக்கூத்துச் சிற்பங்கள் மூன்றனுள் இரண்டில் ஆடவர் தனித்தாட, பெண்ணாடும் குடக்கூத்து இசைக்கலைஞரைப் பெற்றுள்ளது. பாதங்களைப் பார்சுவத்தில் இருத்தி, இடக்கையை அர்த்தரேசிதமாக்கி, இடுப்பை இடப்புறம் நன்கு உயர்த்திச் சிற்பத்தளத்தின் மூன்றில் இரண்டு பகுதிகளில் பரவியுள்ள பெண் குடக்கூத்துக் கலைஞரின் வலக்கை மேற்பகுதியில் பானை. முழங்கையளவில் மடங்கியுள்ள அக்கையின் கீழ்ப்பகுதி மார்பருகே கடகமாக்கப்பட்டுள்ளது. உயர்த்தி முடித்த கொண்டை, சரப்பளி, கைவளைகள் கொண்டு ஆடும் பெண்ணின் வலப்புறம், அதே அமைப்பிலான கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, இடைத்தொங்கல் பெற்ற இடுப்புச் சிற்றாடையுடன் உடல் வலப்புறம் திரும்பியிருக்குமாறு செண்டுதாளக் கலைஞராக ஆடவர்.

ஆண் குடக்கூத்தர்களுள் ஒருவர் கரண இளைஞர். வலக்காலை ஊர்த்வஜாநு கரணத்தின் முதல் நிலையில் இருத்தி இடப்பாதத்தைப் பார்சுவமாக்கியுள்ள அவரது இடக்கை முழங்கையளவில் மடங்கி மார்பருகே பதாகமாய் அமைய, மார்பருகே தாழ்ந்துள்ள வலக்கையின் மேற்பகுதியில் பானை. தலையை இலேசாக இடப்புறம் சாய்த்து, வலப்பார்வையராக முக்கோண இடைத்தொங்கல் பெற்ற சிற்றாடையுடன் உச்சிக் கொண்டையும் சரப்பளியும் பெற்றாடும் அவரது பானையின் வாய் நன்கு அகன்றுள்ளது. இரண்டாமவரோ வலப்பாதத்தைப் பார்சுவமாகவும் இடப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் நிறுத்தி, இடக்கையை அர்த்தரேசிதத்தில் வீசி, மார்பருகே மடிந்து இறங்கியுள்ள வலக்கையின் மேற்புறத்தே பானை நிறுத்திக் குடக்கூத்து காட்டுகிறார். இதுவும் வாயகன்ற பானை என்ற போதும் கழுத்தின் குறுக்கம் உயரத்தைக் கூட்டுகிறது. நிறைவடையாத பாதச்சிற்பங்களில் இதுவும் ஒன்று.

தனியர் ஆடலைப் பதிவுசெய்துள்ள மூன்று பாதங்களுள் ஒன்றில் சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, கைவளைகள், முக்கோணத்தொங்கலுடனான இடைச்சிற்றாடை பெற்று மண்டலத்தில் பார்சுவப் பாதங்களுடன் ஆடும் ஆடவரின் இடக்கை மடிந்து மார்பருகே காட்சிதர, வலக்கை முழங்கை அளவில் மடிந்து மேலுயர்த்தப்பட்டுள்ளது. சுடர்முடி, பனையோலைக் குண்டலங்கள், சுவர்ணவைகாக்ஷம், கைவளைகள், முக்கோணத்தொங்கல் பெற்ற இடைச்சிற்றாடை கொண்டு ஆடும் மற்றோர் ஆடவரின் பாதங்கள் பார்சுவத்தில் அமைய, வலக்கை மேலுயர்த்திய பதாகமாக உள்ளது. இடக்கை நெகிழ்ந்துள்ளது. ஆடவரின் இடப்புறம் அழகிய தோரணம் காட்சிதர, இடையாடையின் முடிச்சுத்தொங்கல்கள் இடப்புறம் காட்டப்படுள்ளன. மூன்றாமவர் சிறுமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சுவர்ணவைகாக்ஷம், முடிச்சுத்தொங்கல்களுடனான இடைக்கட்டு இருத்தும் சிற்றாடை அணிந்து, மண்டலப் பார்சுவத்தில் வலக்கையில் பதாகம் காட்டி, இடக்கையை அர்த்தரேசிதமாக்கியுள்ளார். தலையின் இடச்சாய்வால் முகம் வலம் திரும்பியுள்ளது.

ஆண் இசைக்கலைஞருடன் பெண் ஆடற்கலைஞர்

நான்கு பாதங்களில் ஆண் இசைக்கலைஞருடன் பெண் ஆடற்கலைஞர் இணைந்தாடும் காட்சியைப் பார்க்கமுடிகிறது. அவற்றுள் நிறைவடையாதிருக்கும் பாதச்சிற்பத்தில் வலப்பாதத்தைப் பார்சுவத்தில் திருப்பி, இடக்காலை ஊர்த்வஜாநு கரண முதல் நிலையில் உயர்த்தியுள்ள ஆடற்காரிகையின் இடக்கை மேலுயர்த்திய பதாகமாக அமைய, வலக்கை தொடையில் இருத்தப்பட்டுள்ளது. மண்டலப் பார்சுவத்தில் இடுப்புக்கு மேற்பட்ட உடற்பகுதி வலச்சாய்வில் அமைய, இடத்தோளில் தொங்கும் இடக்கைக் கருவியை வலக்கையால் தட்டிக் கயிற்றுப்புரிகளை இடக்கையால் இளக்கியும் இறுக்கியும் இசைகூட்டுகிறார் ஆடற்பெண்ணின் வலப்புற ஆண் கலைஞர்.

தோரணங்கள் பின்னிருக்கத் தாளக்கலைஞர் வலப்புறத்தும் ஆடற்பெண் இடப்புறத்துமாய்க் காட்சிதரும் மற்றொரு சிற்பத்தில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடை கொண்டு சமபாதத்தில் நின்று ஆடற்கலைஞரை நோக்கியவாறு செண்டுதாளங்களை இயக்கும் இசைஞர் பாதத்தின் மூன்றில் ஒருபகுதியில் விளங்க, ஆடலர் இரண்டு பங்குகளில் பரவியுள்ளார். மண்டலப் பார்சுவத்தில் இடக்கையைத் தொடையில் இருத்தி, வலக்கையில் கடகம் காட்டி ஆடும் அவரும் பனையோலைக் குண்டலங்கள் அணிந்துள்ளார். இடைத் தொங்கலுடனான சிற்றாடையின் முடிச்சுத்தொங்கல்கள் வலக்காலின் புறத்தே ஆட்டநிலைக்கேற்ப நெகிழ்ந்துள்ளன.

ஆடற்பெண் வலப்புறத்தும் இடக்கைக் கலைஞர் இடப்புறத்துமாய் அமைந்த ஆடற்காட்சியில் பெண், சரப்பளி, பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை அணிந்து, பாதங்கள் இரண்டையும் பார்சுவத்தில் இருத்தி, வலக்கையைப் பதாகமாய் மார்பருகே நிறுத்தி, இடக்கையில் வியப்பு காட்ட, இடப்புறம் சவடியும் சிற்றாடையுமாய் இசையெழுப்பும் இடக்கைக்
கலைஞரும் பார்சுவப் பாதங்களுடன் மண்டலநிலையிலேயே காட்சிதருகிறார்.

இதே அமைப்பிலான மற்றொரு சிற்பத்தில் வலக்கை முழங்கையளவில் மடிந்து மேலுயர்த்திய பதாகமாக அமைய, இடக்கையைக் கடியவலம்பிதமாக்கி ஆடும் வலப்பெண் பனையோலைக் குண்டலங்கள், சவடி, இடைத்தொங்கலுடனான சிற்றாடை அணிந்துள்ளார். இடக்கை வாசிக்கும் இடப்புற ஆடவரோ கரண்டமகுடராய்ப் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி கொண்டு மண்டலநிலையில் பார்சுவப் பாதங்களுடன் காட்சிதருகிறார்.

ஊர்திகளில் இறைவடிவங்கள்

சோழர் கோயில்களின் பாதச்சிற்பங்களில் ஊர்திகளில் அமர்ந்தநிலையில் விஷ்ணு, முருகன் தவிர ஏனைய இறை வடிவங்களைப் பார்ப்பது அரிது. ஆனால், எறும்பியூர் வேதிபாதங்களில் சிவபெருமான், விஷ்ணு, காளி, கொற்றவை, பிள்ளையார், ஐயனார் ஆகியோருடன் எமனும்கூட எருமையில் அமர்ந்த நிலையில் பதிவாகியுள்ளார். வல முன் கை வாள் கொள்ள, இட முன் கை சிங்கத்தின் கழுத்தில் இருக்க, பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி சிம்மவாகினியாகக் காட்சிதரும் கொற்றவையின் தலையில் கரண்டமகுடம். பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சுவர்ணவைகாக்ஷம் அணிந்துள்ள இறைவியின் இடையில் பட்டாடை. முதுகு விரிப்புடன் உள்ள சிம்மம் வாலை உயர்த்தி வளைத்தபடி முன்னங்கால்களுள் ஒன்றை உயர்த்தி வாய்திறந்த நிலையில் உள்ளது.

காளியைத் தோளில் தாங்கும் பெண் பேய்

சடைப்பாரத்துடன், வலச்செவியில் பிணக்குண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம் அணிந்து, வல முன் கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இட முன் கையைக் கடகமாகத் தொடைமேல் இருத்தியுள்ள காளியைத் தன் தோளில் தாங்கும் பெண் பேய் கருடாசனத்தில் திரங்கிய மார்புகளுடன் அமைய, அதன் வலக்கை தொடைமீதுள்ளது. காளியின் வலக்கால் பேயின் வலப்பாதத்தில் அழுந்த, இடப்பாதம் அதன் தோள் மீதுள்ளது. பேயின் இடக்கை காளியின் இடக்காலைத் தழுவித் தாங்க உயர்ந்துள்ளது. காளியின் பின்கைக் கருவிகளை இனங்காண முடியவில்லை.

எருமையின் மீது எமன் ஒரு பாதத்திலும் நந்தியின் மீது சிவபெருமான் ஒரு பாதத்திலும் காட்சிதந்தபோதும் சிற்பங்கள் நிறைவடையாமையால் அவர்தம் தோற்றப்பொலிவை அறியக்கூடவில்லை. சிவபெருமானின் வலப் பின் கையில் மழு. எமன் கைக்கருவி கொடுவாளாகலாம். கருடாசனத்திலுள்ள கருடன் தோள்களில் உத்குடியாசனத்திலுள்ள விஷ்ணுவின் பின் கைகளில் சங்கு, சக்கரம். கிரீடமகுடம் அணிந்துள்ள அவரது வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை முழங்கால் மீது நெகிழ்ந்துள்ளது. கருடன் இருகைகளாலும் இறைவனின் திருவடிகளைத் தாங்கியுள்ள இச்சிற்பமும் நிறைவுறவில்லை.

பிள்ளையாரும் ஐயனாரும்

இவற்றினின்று மாறுபட்ட நிலையில் ஒரே பாதத்தில் இரு தெய்வங்களாகப் பிள்ளையாரும் ஐயனாரும் அவரவர் ஊர்திகளான மூஞ்சுறு, குதிரை மீதமர்ந்தவர்களாகக் காட்சிதருகின்றனர். கரண்டமகுடத்துடன் இடம்புரியாக உள்ள பிள்ளையாருக்கு மட்டும் இருபுறத்தும் கவரிகளும் மேலே குடையும். பின் கைகளில் அங்குசம், பாசம் கொண்டுள்ள அவரது வல முன் கையில் உடைந்த தந்தமும் இட முன் கையில் மோதகமும் உள்ளன. சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்களுடன் விளங்கும் ஐயனாரின் வலக்கையில் செண்டு. இடக்கை குதிரையின் கழுத்தைப் பற்றியுள்ளது. பிள்ளையாரின் ஊர்தியான மூஞ்சுறு அமர்நிலையில் காட்சிதர, ஐயனாரின் குதிரை நடைபயில்கிறது.

சிறப்புச் சிற்பங்கள்

ஆடல், ஊர்தி இறைகள் தவிர்த்த சிற்பங்களில் நான்கினை அவற்றின் செதுக்குத் திறத்துக்காகவும் தனித்தன்மைக்காகவும் விரிவாகப் பார்ப்பது பயன்தரும். சோழர் காலப் பாதச்சிற்பங்களில் அரிதாகக் காணப்படும் சூரிய, சந்திரர் இங்கு இணைந்த நிலையில் பறக்கும் கோலத்தில் மிகச் சிறந்த உடலமைப்புடன் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வலக்கையில் மலர் ஏந்தி, இடக்கையால் போற்றும் அவர்தம் தலை சுற்றி ஒளிவட்டம். இலேசான வலச்சாய்வுடன் முகமும் விண்ணுலாவிற்கேற்ப வளைவுகள் பெற்ற உடலமைப்பும் இச்சிற்பங்களில் மிக நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னிரு கைகளில் முத்தலைஈட்டி ஏந்தி, பின் கைகளில் வலப்புறம் கத்தியும் இடப்புறம் கேடயமும் கொண்டு அசுர வேகத்தில் செல்லும் சுடர்முடிக் காளியின் சுந்தரவடிவம் சின்னஞ்சிறு தூண் பாதத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. அம்மையின் நெற்றிப்பட்டமும் பனையோலைக் குண்டலங்களும் முடிச்சுத்தொங்கல்களுடன் இடையாடையை இருத்தும் இடைக்கட்டும் அவர் எழிலுக்கு எழில் சேர்க்கின்றன. முடிச்சுத்தொங்கல்களின் பரவல் காளியின் விரைவை உணர்த்துகின்றன.

காளை வடிவ அரக்கனை அடக்கும் கண்ணன்

காளை வடிவில் வந்த அரக்கனைக் கண்ணன் அழிக்கும் காட்சி பல கோயில்களில் காணப்பட்டாலும் எறும்பியூர்ப் பதிவு இணையற்றது. காளையின் தலையை வலக்கையால் இழுத்துத் தன் பக்கம் திருப்பிய நிலையில் இடக்கையை அதன் முதுகில் ஊன்றி அழுத்தும் கண்ணனின் கோலம் உடலமைப்பு, மெய்ப்பாடு இரண்டு நிலைகளிலும் உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு நிகழ்வை அது நடக்குமாறு போலவே சிற்பமாக்குவது எளிதானதன்று. தேர்ந்த உளித்திறம், கற்பனையாற்றல், நிகழ்வு பற்றிய செயல்தெளிவு ஆகியன இருந்தால்தான் பதிவு காலத்தை விஞ்சி நிற்கும். அவ்வகையில் இங்குள்ள கண்ணன் காளையழிக்கும் காட்சி தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயில் பதிவிலும் பார்க்கமுடியாத சிற்ப அற்புதமாக விளைந்துள்ளது.

சிராப்பள்ளி மாவட்டச் சோழர் கோயில்கள் பலவற்றில் வேதிபாதச் சிற்பங்களைக் காணமுடிந்தாலும் எறும்பியூர்ச் சிற்பங்கள் அவற்றின் ஆடல் காட்சிகளாலும் ஊர்திகளிலான இறை வடிவங்களாலும் தனித்துவம் பெற்றுள்ளன.

ஒரு கோபுரத்தின் கதை

இரா. கலைக்கோவன்

திருப்பைஞ்ஞீலி கோபுரம்

கோபுரங்களுக்குக்கூட கதை உண்டா எல்லாக் கோபுரங்களுக்கும் கதை இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், சில கோபுரங்களின் கதைகள் கல்வெட்டுகளாகக் கண்முன் வளர்கின்றன. பைஞ்ஞீலிக் கோபுரத்தின் கதை மூன்று கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது. கதைக்குள் போவதற்கு முன், ‘கோபுரம்’ எது என்பது தெரியவேண்டாமா? ஒரு கோயிலின் நுழைவாயிலும் அதன் மேலெழும் கட்டுமானமும்தான் கோபுரம். பலர் இறைவன் உள்ள கருவறைக் கட்டுமானத்தையும் கோபுரம் என்றே அழைக்கிறார்கள். ஆனால், அந்த அமைப்பிற்கு விமானம் என்று பெயர்.

‘திருப்பைஞ்ஞீலி’ என்று திருவுடன் இணையும் பைஞ்ஞீலி, சிராப்பள்ளி மாவட்ட மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள ஊராகும். முதல் இராஜராஜர் காலந்தொட்டுக் கல்வெட்டுகள் பெற்று விளங்கும் இக்கோயில் தேவார மூவரால் பாடப்பெற்றது. சூழவுள்ள வீதியையும் சேர்த்து நான்கு சுற்றுகள் கொண்டுள்ள இக்கோயிலின் மூன்றாம் சுற்றில் பொதுக்காலம் 8ஆம் நூற்றாண்டுக் குடைவரைக் கோயில் உள்ளது. தென்தமிழ்நாட்டிலுள்ள இரண்டே சோமாஸ்கந்தர் குடைவரைகளில் இது ஒன்று. தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய இக்குடைவரையில் மட்டும்தான் உமையன்னை வலப்புறமும் சிவபெருமான் இடப்புறமுமாய் இடையில் குழந்தை முருகனுடன் அமர்ந்துள்ளனர். வேறெந்தக் குடைவரையிலும் இந்த இட, வல மாற்றம் இல்லை.

இந்தச் சுற்றின் வாயிலாகவே எழுநிலைக் கோபுரம் ஒன்றமைக்கச் சோழர் கால மக்கள் விரும்பினர். அதற்கான பணி மூன்றாம் குலோத்துங்க சோழர் ஆட்சியில் பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்தது. திரிபுவன வீரதேவராகக் கல்வெட்டுகள் கொண்டாடும் இம்மூன்றாம் குலோத்துங்கர் அப்பெயரிலேயே கும்பகோணத்திற்கருகில் உருவாக்கிய திரிபுவன வீரேசுவரம் கோயிலின் முதற்கோபுரம் போலவே கருதப்பட்டுப் பைஞ்ஞீலிப் பணி வளரத் தொடங்கியது.

பேரளவினதாக ஏழுநிலைகள் கொண்டதாய் உருவாக்க எண்ணித் தொடங்கப்பட்ட இக்கோபுரத்தின் துணை, தாங்குதளங்களின் கட்டமைப்புப் பார்த்தாலே, எத்தகு எதிர்பார்ப்புடன் இக்கோபுரம் உயரத் தொடங்கியது என்பது புரிந்துவிடும். குலோத்துங்கரின் 31ஆம் ஆட்சியாண்டில் பதிவாகியுள்ள கல்வெட்டு, இக்கோபுரப் பணிக்கான செலவுகளைச் சந்திக்க, ஆதனூர் என்ற ஊரையே அதன் வருவாய், வரிகள் உட்பட மன்னர் அரசாணை வழிக் கோயிலுக்குக் கொடையளித்ததை உணர்த்துகிறது.

கீழ்த்தளம் எழும்போதே கட்டுமானச் செலவுகள் கைமீறிப் போனதால், ஆதனூர் வருவாய் போதாத நிலை ஏற்பட்டது. அதனால், தம் 36ஆம் ஆட்சியாண்டில் பெரியகள்ளிக்குடி என்னும் ஊரை அதன் வரி, விளைவு உட்படக் கோயிலுக்களித்து மற்றோர் அரசாணை மன்னரால் பிறப்பிக்கப்பட்டது.

கோபுரத்தின் வெளிப்புறத்தே காவலர் சிற்பங்கள் அமைந்தன. உட்பகுதியில் தெற்கிலும் வடக்கிலுமாய் 12 பெருந்தூண்கள் நிறுவி, ஒவ்வொரு தூணையும் பல சதுரங்களாக வரையறுத்த சிற்பிகள், ஒவ்வொரு சதுரத்திலும் அழகான சிற்பங்களைச் செதுக்கினர். சோழர் கால ஆடற்கோலங்கள், பூதங்களின் பல்வேறு அமர்வுகள், இறைவடிவங்கள் என அந்த 12 தூண்களில் அமைந்த 157 சிற்பங்களும் சோழர் கலைமுறைக்கும் சமயச் சிந்தனைகளுக்கும் சான்றுகளாயின. உட்பகுதியின் மேற்புறத்தே வடக்கில் கங்காளரையும் தெற்கில் சிவபெருமான் உமை இணையையும் பெருஞ்சிற்பங்களாய்க் காட்டிய சிற்பிகள், தூண்களுக்கு இடைப்பட்ட ஈரடுக்கு மாளிகையைத் தங்கள் கற்பனை வளத்தால் செழுமையாக்கினர். பிற்சோழர் கால ஆடற்கலைப் பெருமை விளம்பும் இந்த மாளிகைச் சிற்பங்களும் இதை அலங்கரிக்கும் தூண்களின் வடிவமைப்பும் கண்களில் நிற்கும் கலைச் சிறப்பின.

கோபுரத் தூண்கள்

மூன்றாம் குலோத்துங்கரை அடுத்து வந்த மூன்றாம் இராஜராஜர் காலத்தில் பாண்டியர் எழுச்சி ஏற்பட்டது. இராஜராஜருக்கு உதவ மைசூரிலிருந்து ஒய்சள அரசர் படை நகர்த்தினார். சோழ, பாண்டிய, ஒய்சளப் படைகளுக்கிடையே பைஞ்ஞீலியும் அதைச் சுற்றியிருந்த பாச்சில் கூற்றமும் பேரிழப்பைச் சந்தித்ததால், கோபுரப்பணி தடைபட்டது. குறைபணியாய் நின்ற இக்கோபுரத்தை முழுமையுறச் செய்யவேண்டும் எனும் அவா பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் இறுதியில், மாறவர்மர் குலசேகர பாண்டியரின் 27ஆம் ஆட்சியாண்டில் பெருந்தீயாய் எழுந்தது.

தவப்பெருமாள் முதலியாண்டான் என்பார் பொறுப்பேற்றார். சித்ரமேழிப் பெரியநாட்டார் துணையாயினர். நாட்டார் உறுப்பினர் ஒவ்வொருவரும் அவரவர் நிலங்களின் அளவுக்கேற்பப் பொருளோ, விளைவோ அளிக்க முடிவாயிற்று. அந்தப் பெருங்கருணையால் கீழ்நிலை முற்றுப்பெற்று இரண்டாம் நிலை தொடங்கப் பெற்றாலும் கோபுரப்பணி முடிவடையவில்லை.

ஈரடுக்கு மாளிகை

திரிபுவனவீரேசுவரத்தினும் சிறப்பான படைப்பாக விளங்கியிருக்க வேண்டிய இந்தப் பைஞ்ஞீலிக் கோபுரம், பலமுறை முயன்றும் இரண்டாம் தளத்துடன் நிறைவடையாமல் நின்றதற்குத் தொடர்ந்த போர்களும் நிலையற்ற அரசியலுமே காரணங்களாயின. முற்றுப்பெறாது போனாலும் தான் வளர்ந்த காலத்தின் சமூகப் பண்பாட்டுப் படப்பிடிப்பாய் 12 தூண்களும் 157 சோழச் சிற்பங்களுமாய் எழுச்சியோடு நிற்கும் இந்தக் கோபுரத்தின் கதை கண்களை நனைத்தாலும் இருக்கும் இந்த நிலையிலும் அது கவிதையாகவே உள்ளம் நிறைக்கிறது.

வரலாறு 16 (ஆய்விதழ்)

இந்த இதழுடன், ‘வரலாற்றின் வரலாறு’ இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்நல்லோரையில் அப்பெருந்தகையின் பாடுகளை நூலாக்கித் தரமுடிந்திருப்பதற்காகப் பெரிதும் உவக்கிறோம்.

டாக்டர் இரா. கலைக்கோவன்

காவிரிப் படுகையில் கிடைக்கப்பெற்ற புதிய கல்வெட்டும் சிற்பங்களும்

முசிறி அருகே காவிரி ஆற்றங்கரையில் பெரிய இலிங்கமும் கல்வெட்டும் சிற்பங்களும் இருந்த செய்தியறிந்து டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன், மையத்தைச் சேர்ந்த கல்வெட்டாய்வாளர்கள் பேராசிரியர் மு. நளினி மற்றும் பேராசிரியர் அர. அகிலா ஆகியோருடன் அவ்விடம் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு கூடியிருந்த செய்தியாளர்களுடன் அவர் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

கிடைக்கப் பெற்ற எழில்மிகு ஆலமர் அண்ணல் மற்றும் வீணாதாரர் சிற்பங்கள், முற்சோழர் காலத்தவை என்று கூறிய டாக்டர் கலைக்கோவன், கடினப் பாதையில் சென்று ஆய்வு நிகழ்த்திட, அன்பும் ஆர்வமும் கொண்டு ஊரார் செய்த உதவிகளை நன்றியுடன் குறிப்பிட்டார்.

டாக்டர் இரா. கலைக்கோவன் பகிர்ந்த விரிவான தகவல்களுடன் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட காணொலிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Musiri official Updates தளத்தில் –

Polimer News வெளியிட்ட விரிவான செய்தி இங்கே-

ஆற்றங்கரையில் 10-ம் நூற்றாண்டு சோழர் கால சிற்பங்கள்.. ஆய்வாளர்கள் சொன்ன தகவல்..

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 9. தொட்டான் . . பட்டான் . .

அன்புள்ள வாருணி, ‘பொதுவான இல்லம்’ என்ற பொருளுடன் தோன்றிய சங்ககாலப் பொதியில்கள், அந்தந்த ஊர்மக்களின் வழிபாட்டிடங்களாக விளங்கியதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் விரித்துப் பேசுகின்றன. ஊர்மக்களின் திரட்சிக்கேற்ப, அவர்கள் இருந்து வழிபட இடமளிப்பதற்காகவே அந்த எளிய பொதியில்கள் முன் மண்டபங்கள் பெறத் தொடங்கின. மக்கள் மண்டும் (கூடும்) இடம் என்ற பொருளில், ‘மண்டகம்’ என்று தொடக்கக் காலக் கல்வெட்டுகளில் அழைக்கப்பெறும் இம்மண்டபங்கள், காலத் தேவைக்கும் வழிபாட்டுப் பெருக்கத்துக்கும் ஏற்பப் பலவாய்ப் பெருகின.

குடைவரைக் காலத்திலேயே கருவறையாம் இறையகத்தின் முன் அகமண்டபம், முகமண்டபம் என இரண்டு மண்டபங்கள் உருவாயின. அவை கற்றளிக் காலத் தொடக்கத்தில் பெருகின. பெருமண்டபம், நிருத்தமண்டபம், நீராட்டு மண்டபம், திருவோலக்க மண்டபம் எனப் பலவாய்ப் பெயரேற்ற இக்கட்டுமானங்கள் பிற்சோழர் காலத்தில், கூரை தாங்கும் தூண்களின் எண்ணிக்கை அடிப்படையில் நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்களாய்ப் பேருருப் பெற்றன.

தமிழ்நாட்டில் பல்லாயிரமாய்க் கோயில்கள் இருந்தபோதும் மிகச் சிலவே இத்தகு பெருமண்டபங்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில். வேறெந்தக் கோயிலின் ஆயிரங்கால் மண்டபமும் பெறாத ஆளுயரச் சிற்பங்கள் இம்மண்டப முகப்பையும் உட்புறத்தையும் அணிசெய்கின்றன. நாயக்க மரபின் கலைச் செழுமையை அவர்தம் திருப்பணிகளுக்கு ஆளான தமிழ்நாட்டுக் கோயில்கள் சில கொண்டிருப்பினும், மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபப் பேருருவச் சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையன.

எங்கள் ஆய்வின்போது இம்மண்டபத் தூண்களை ஒன்றுவிடாமல் பார்த்தபோதுதான் பேராசிரியர் மு. நளினியின் பார்வையில்பட்டு அந்தச் சிற்பம் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் நாங்கள் அதுநாள்வரை கண்டிராத சிற்பமது. ஒரு பாலியல் குற்றவாளி நாயக்கர் ஆட்சியில் எப்படித் தண்டிக்கப்பட்டார் என்பதைப் படம்பிடித்துக் காட்டும் அச்சிற்பம் பெருந்தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது.

மூன்று நிகழ்வுகளின் கூட்டிணைவாக உள்ள அச்சிற்பத்தின் முதல் பிரிவான கீழ்ப்பகுதியில், ஓர் இளம்பெண் இடஒருக்கணிப்பில் சரிந்துள்ளார். அவரது கைகள் மார்பகங்களை மறைக்க முயலுமாறு மடிந்துள்ளன. அவருக்குப் பின்னுள்ள ஆடவர், அப்பெண்ணின் இடுப்பருகே தம் வலக்காலை இருத்தியவாறு அவரிடம் முறைதவறி நடக்கும் முயற்சியில் முனைந்துள்ளார்.

தாக்குதலுக்கு ஆளான பெண், தாக்கும் ஆடவர் இவர்கள் இருவருக்கும் பின்னால் நிற்பவர் நாயக்கர் காலக் காவலர். முடிச்சிடப்பட்ட தொப்பி போன்ற தலைப்பாகை, கழுத்தில் சரப்பளி, மார்பில் வீரத்தைக் குறிக்கும் சன்னவீரம், செவியணிகள், தோள்வளைகள் என கம்பீரமாகக் காட்சிதரும் அக்காவலர், தம் கையிலுள்ள கத்தியால் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயலும் ஆடவரின் பின்பகுதியில் குத்தியவாறே, இடக்கையால் அந்த ஆடவரைப் பிடிக்க முயற்சிக்கிறார். இரண்டாம் நிலையாகப் படமாகியுள்ள இக்காவலரின் செயற்பாடு, தவறு நிகழும் இடங்களில் மேற்கொள்ளப்படும் அக்காலக் காவல் நடவடிக்கையைக் கண்முன் நிறுத்துகிறது.

கோதண்டத்தில் மாட்டுவது என்றொரு தண்டனை முறை அக்காலத்தே இருந்ததாகச் செவிவழிக் கதைகள் சொல்கின்றன. வரலாற்றுப் புதினங்கள் பல படைத்த திரு. சாண்டில்யன் தம்முடைய, ‘மன்னன் மகள்’ கதையில், அத்தகு கோதண்டத்தையும் அதில் சிக்கிக் கொள்பவரையும் கதைப்போக்கில் காட்டியிருப்பார். மீனாட்சிக் கோயில் சிற்பத்தில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் காட்சி அக்கோதண்டத் தண்டனையை நினைவூட்டுகிறது.

சிற்பத்தின் மேலடுக்கில் உள்ளது கோதண்டத் தண்டனைக் கூடம். பெருஞ்சட்டகம் ஒன்றின் பக்கப்பகுதியில் கைகளும் கால்களும் இறுக்கப்பட்ட நிலையில் முறை தவறி நடந்த ஆடவர் கட்டப்பட்டுள்ளார். கயிறுகளால் இறுக்கப்பட்ட நிலையில் அசைக்கமுடியாதவாறு மேற்பலகையில் அவர் தலையும் பிணைக்கப்பட்டுள்ளது. ஆடைகளற்ற நிலையில் சட்டகத்தில் மாட்டப்பட்டிருக்கும் அப்பாலியல் குற்றவாளியின் ஆணுறுப்பைத் தாவிக் கவ்வியுள்ள விலங்கின் காட்சியே தண்டனை எப்படியிருந்தது என்பதை உணர்த்திவிடுகிறது.

நியாயமற்ற ஆசைகளும் நேர்மையற்ற உணர்வுகளும் தவறான செயல்களுக்குத் தூண்டுகோல்கள். காலந்தோறும் இது போல் வரம்பு மீறல்கள் நிகழ்வதையும் அவை குற்றங்களாகித் தண்டனைகளுக்கு உள்ளாவதையும் இலக்கியக் காட்சிகளாய் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணமுடிந்தாலும், கண்ணெதிர் நிகழ்வாய்க் கற்பனைக்கே இடமில்லாது, ஒரு குற்றமும் அது தண்டிக்கப்பட்ட முறையும் காட்சியாகச் செதுக்கப்பட்டிருப்பது அதைப் பதிவுசெய்த சிற்பாசிரியரின் சமூகப் பார்வைக்குச் சான்றாகும் வாருணி.

இச்சிற்பக் காட்சியைக் கண்ணுறும் எவருக்கும் பாலியல் வரம்பு மீறல் சிந்தனையே வர வாய்ப்பில்லை. பத்திமைக்கான இடங்கள்தான் என்றாலும், கோயில்கள் சமூகம் சந்திக்குமிடம் என்பதால், சொல்ல வேண்டியவற்றை, உணர்த்தக்கூடியவற்றை, வாழ்க்கையின் ஒழுகலாறுகளைக் கிடைக்குமிடங்களில் காட்டிவிடுவதைக் கடமையாகக் கொண்டியங்கிய இத்தகு சிற்பாசிரியர்களைக் கை கூப்பி வணங்கத் தோன்றுகிறது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 8. கழுதையேற்றமாய் ஊரகத் தண்டனை

அன்புள்ள வாருணி, தமிழரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது தேர். சங்க இலக்கியங்கள் விதந்து பேசும் காதல், வீரம் இரண்டுடனும் தொடர்புடைய அத்தேரையும் அதை இழுத்த புரவிகளையும் நன்கு அறிந்து தேர்ந்து கொள்வதற்கும் இயக்குவதற்குமாகவே சங்கத்தமிழர் தேர்நூல், புரவிநூல் என அறிவியல் சுவடிகளை ஆய்ந்து வைத்திருந்தனர். தேரோட்டிகள், தேர்த்தச்சர்கள் குறித்துப் பெரியதொரு நூலே படைக்குமளவு சங்கப்பாடல்கள் தரவுகள் கொண்டுள்ளன.

மானுடப் பழக்கத்திலிருந்த இத்தேர்கள் இறை ஊர்தியானமை எப்போதென்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், பத்திமைப் பாடல்களில் பேசப்படும் தேரோடும் வீதிகள், பல்லவர் படைப்புகளில் முப்புரம் எரித்த சிவபெருமானின் ஊர்தியாக வெளிப்படும் சிற்பத்தேர்கள் ஆகியவை பொதுக்காலம் 6ஆம் நூற்றாண்டளவில் இது நேர்ந்திருக்கலாம் என்று கண்காட்டுகின்றன.

தேர் என்றதும் என் நினைவுக்கு வருபவர் முதலாம் இராஜேந்திரசோழர்தான் வாருணி, தமிழ்நாட்டு மன்னர்களில் தம் அணுக்கியுடன் தேரூர்ந்து சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டவர் அவர் ஒருவர்தான். திருவாரூரில் அவரும் தானும் நின்ற இடங்களில், காலமெல்லாம் ஒளிருமாறு அவர் அணுக்கி பரவை விளக்கேற்றச் செய்தது வரலாறு. அந்தப் பொன்னாளை நினைந்து பூரித்தே, தியாகேசர் விமானத்தை அவ்வம்மை தங்கத்தகடுகளால் அழகுபடுத்தினார்.

தமிழ்நாட்டிலேயே ஊர், கோயில் என இரண்டும் ஒரு மன்னரின் அணுக்கியின் பெயரால் அமைந்ததெனில், அது இராஜேந்திரரின் பரவைநங்கைக்கு மட்டுமே கிடைத்த பேறெனலாம். பரவைப்புரத்து (இன்றைய விழுப்புரம் மாவட்டப் பனையவரம்) பரவை ஈசுவரமுடையார் கோயிலில், இராஜேந்திரரின் இரண்டாம் மகன் இரண்டாம் இராஜேந்திரர் காலத்தில், இராஜேந்திரசோழர் – பரவைநங்கை திருமேனிகளின் முன் விளக்கேற்றப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.

தேர் இறை ஊர்தியாகித் தெருவலம் வந்ததை நல்லூர் வில்வாரண்யேசுவரர் கோயில் கல்வெட்டுகள் படம் பிடிக்கின்றன. சாளுக்கியச் சோழர்கள் காலத்தில்தான் தேருலாக் கல்வெட்டுகளும், இறைக்கோயிலே தேர்வடிவில் வெளிப்பட்டதும் நிகழ்ந்தன. இறைவன் தேருடன் நடக்கவும் இறைவனுடன் தேரிலிருந்து பயணிக்கவுமான உரிமைகள் நல்லூர்க் கோயில் தேவரடியாருக்குக் கோயிலாரால் விற்பனை செய்யப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

முதற் குலோத்துங்கர் காலத்தில் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில் விமானம் தேர் வடிவில் உருவானது. தொடர்ந்து வந்தவர்கள் தேர்மண்டபங்களை உருவாக்கினர். தாராசுரத்து இராஜராஜேசுவரம் கோயில் இராஜகம்பீரன் மண்டபம் குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயிலில் தேர் வடிவிலான ஆடரங்கு உள்ளது. திருக்கோடிக்காவில்தான் முதல் முறையாகக் கோயில் தேர்களைச் சிற்பங்களாகக் காணமுடிகிறது.

தேரின் சுவையான இந்த வரலாற்றுக்கும் மீனாட்சிக் கோயிலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கக் தோன்றுகிறதா வாருணி? இருக்கிறது, இல்லாமலா இவ்வளவு தரவுகளும்! தேர் எப்படி வந்தது, எப்படியெல்லாம் அதன் பயன்பாடுகள் வளர்ந்தன என்பது போலவே, அந்தத் தேரில் எவைஎவை பதிவாயின என்பதும் வியப்பூட்டும் செய்தியாகவே உள்ளது. தேரின் நாற்புறத்தும் இறைவடிவங்களையும் புராணக்கதைகளையும் ஆடல் தோற்றங்களையும் மரச்சிற்பங்களாகக் காட்டுமாறே, பாலுணர்வு நிலைகளையும் இலைமறை காயாக அதே தேரின் பக்கப்பகுதிகளில் படைத்துள்ளனர் நம் தேர்த்தச்சர்கள்.

மீனாட்சிக் கோயில் அம்மன் திருத்தேரைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அளவில் சிறிதானாலும் அருமையான தேர். இறைச்சிற்பங்களும் திருவிளையாடல் புராணக் காட்சிகளாய்ச் சில சிற்பங்களும் அதில் கண்டோம். சிற்பங்களை இரசித்தவாறே தேரைச் சுற்றிவந்த நிலையில், தேரின் மேற்பகுதியில் பேராசிரியர் நளினி ஒரு சிற்பத்தைச் சுட்டிக் காட்டினார். நிமிர்ந்து பார்த்தபோதுதான், எத்தனை அரிய பதிவைக் காண வாய்த்தது என மகிழ்ந்தேன். ஊரகத் தண்டனை ஒன்றைச் சிற்பி அத்தேரில் காட்சியாக்கியிருந்தார்.

தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில் தேர்களை ஆய்வு செய்திருந்தபோதும், இத்தகு காட்சி எங்குமே கண்டதில்லை வாருணி. ‘கரும்புள்ளிச் செம்புள்ளி குத்திக் கழுதை மேலேற்றி’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தேரில் அதைக் காட்சியாகக் கண்டோம். சிற்பத்தில், முதலிரண்டும் தெரியாது என்பதால் வேறு தண்டனைகளை இணைத்துள்ளனர். அவையும் ஊரகத் தண்டனைகளாய் அறியப்படுபவைதான்.

சிறிய குடுமியும் தொங்குமீசையும் இடையில் சுருக்கிய ஆடையுமாய், ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்பது போல் கைகளைக் கூப்பிய நிலையில் கழுதைமேல் அமர்ந்துள்ளார் ஆடவர் ஒருவர். அவர் என்ன தவறு செய்தார் என்பது சுற்றியுள்ள மூன்று பெண்களைப் பார்த்தாலே புரிந்துவிடும். அப்பெண்களுள் ஒருவர் கழுதையின் முன்னும் மற்றவர் பின்னுமாக நிற்கின்றனர். பின்னுள்ளவர்களுள் ஒருவர் உயர்த்திப் பிடித்த சட்டியிலிருந்து எதையோ, (சாணக்கரைசல்?) அந்த ஆடவரின் தலையில் ஊற்றுகிறார். இரண்டாம் பெண்காலியான சட்டியை இடக்கையில் பிடித்தவாறு, வலக்கைத் துடைப்பத்தால் அந்த ஆடவரை அடிப்பதுபோல் உள்ளார். வலமுள்ள பெண் தம் கையிலுள்ள மிதியடி போன்ற பொருளால் ஆடவரின் தலையில் அடிக்க முனைகிறார். இந்தத் தண்டனைக் காட்சியைப் பார்த்தவாறு வலப்புறம் ஒரு சிறுவன்!

தண்டிக்கும் பெண்கள் மூவருமே சேலை அணிந்துள்ளனர். செவியணிகள், தோள், கை வளைகள், கழுத்தணிகள் பெற்றுள்ள அப்பெண்களின் இதழ்க்கடையில் எள்ளல் புன்னகை. இத்தேர் செய்யப்பட்ட காலத்தே பாலியல் குற்றவாளிகளை ஊரகப்பகுதிகளில் இது போல்தான் தண்டித்திருப்பார்களோ என நினைக்குமாறு உள்ள இச்சிற்பத்தில், சிறுவன் இடம்பெற்றிருப்பது சிந்தனையைத் தூண்டுகிறது.

பெண்மைக்கு இழிவு செய்வார் எந்நிலைக்கு ஆளாவார் என்பதைக் கண்ணெதிர்க் காட்சியாகக் காட்டி, பெண்மைக்கு மதிப்பளிக்கும் உணர்வோடு ஆண்மகன் வளரவேண்டும் என்பதைச் சிறுவனின் இருப்பால் மென்மையாக உணர்த்தியிருக்கும் இந்த ஊரக அறிவுறுத்தல் உன்னதம் வாருணி. பாலியல் சீண்டல்களில் முனைவோர் தலையில் சாணியைக் கரைத்து ஊற்றி, அவர்களைத் துடைப்பம், மிதியடி ஆகியவற்றால் தாக்கித் தண்டிக்கும் நாயக்கர் கால ஊரகப் பழக்கம் ஒரு மரத்தச்சரின் வரலாற்று நோக்கால் நமக்குப் பாடமாகப் பகிரப்பட்டுள்ளது. பெண்ணிடம் பழகிவிட்டு இல்லையென்று சொன்ன சங்ககாலப் பொய்யரைக் கள்ளூர் ஊரார் மரத்தில் கட்டிவைத்து அவர் மேல் சுண்ணாம்பு நீரூற்றிய ஊரகத் தண்டனையின் வளர்நிலைதான் மீனாட்சிக் கோயிலின் இந்தப் பதிவு.

தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும், அத்தண்டனையும் தவறுக்கு ஆளானவர்களாலேயே தரப்படவேண்டும் என்பது போல் பதிவாகியுள்ள இந்தக் கழுதையேற்றச் சிற்பம் காலத்துக்கும் பாலியல் குற்றவாளிகளுக்குப் பாடமாக நிற்கும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 7. கொல் களிறு

மீனாட்சிக் கோயில் கொல்களிறு

அன்புள்ள வாருணி, ஒளியும் கலையும்; அருளுமாய் ஆறு திங்கள்கள் ஓடிவிட்டன. வாழ்க்கையில் ஒளிநிறைந்த பக்கங்கள் மட்டுமா சுடர்விடுகின்றன? இருளான பகுதிகளும் இருக்கத்தானே செய்கின்றன. மீனாட்சியம்மன் கோயில் விதிவிலக்காகுமா?வரலாற்றைப் பதிவு செய்யும் சிற்பாசிரியர்கள் தங்கள் கைப்போக்கில் நல்லன காட்டுமாறு போலவே கண்களில் பதிவான அல்லனவற்றையும் கிடைக்குமிடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தேடுவாருக்கு மட்டுமே தெரியுமாறு விட்டுச் செல்கிறார்கள். எங்கள் ஆய்வில் அவையும் வெளிச்சமாயின. அவற்றுள் ஒன்றுதான் யானைகாலால் இடறிக் கொல்லும் மரணதண்டனை.

திருச்சுற்றுடனுள்ள மீனாட்சியம்மன் திருமுன், இறைவி எழுந்தருளியுள்ள விமானம், நீளமான முகமண்டபம், இடைநாழிகை என அமைந்துள்ளது. இருதள நாகரமாக உள்ள அம்மன் விமானத்தின் துணைத்தளமும் தாங்குதளமும்போ கபோதபந்த வடிவின. துணைத்தளம் சிற்பக் களஞ்சியமாக மாறியுள்ளது. தாங்குதளம் சிற்பங்கள் பெறாவிடினும் அதன் மேலுறுப்பான கபோதம், தன் வளைவுக்கூடுகளில் இயல்புக்கு மாறான சிற்பங்களைப் பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்றுதான் குற்றமிழைத்தவரை யானைகாலால் இடறி அழிக்கும் காட்சி.

இந்தச் சிற்பத்தில் தரையில் கிடக்கும் மனிதன் குற்றம் செய்தவன் போலும்! இரு கைகளையும் உயர்த்தி வலித் துன்பத்தால் துடிக்கும் அவன் முகம் யானைக்கு அஞ்சி வலத்திருப்பமாய் உள்ளது. முகபடாமும் முதுகில் விரிப்பும் பின் கால்களில் சதங்கைகளும் பெற்றுள்ள அரச யானையின் முன் கால்களுள் ஒன்று, அம்மனிதனின் தலையை நசுக்க உயர்ந்துள்ளது. மற்றொரு கால் அவனை உதைக்கும் முயற்சியில். தலையைக் குனிந்து, துதிக்கை சுருண்டு மேலேகுமாறு, தந்தங்களை அவன் உடலில் பாய்ச்சிக் கிழிக்கும் அந்த வேழத்தின் மேல், அதை அச்செயலுக்கு இயக்கிக் கொண்டிருக்கும் பாகன். யானையின் சினப்போக்கை அதன் கண்களிலும் தலையை அது குனித்துள்ள பாங்கிலும் வாலை வளைத்து உயர்த்தியுள்ள அமைப்பிலும் சிற்பி நன்கு அடையாளப்படுத்திவிடுகிறார். மரணதண்டனைதான் எப்படியெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது வாருணி!

மீனாட்சிக் கோயில் கொல்களிறு

அம்மன் திருமுன் சுற்றிலுள்ள தூண்களைப் பார்வையிட்டபோது தென்புறத் தூணொன்றில் இதுபோன்ற மற்றொரு சிற்பக்காட்சியைப் பேராசிரியர் அர.அகிலா கண்டறிந்தார். முதற் சிற்பத்திற்கும் இதற்குமிடையே இரண்டு வேறுபாடுகளைக் காணமுடிந்தது. இதில், குற்றவாளியின் இடக்கையை யானை தன் துளைக்கையால் வளைத்துப் பிடித்துள்ளது. முதல் சிற்பத்திலுள்ள பாகன் இதில் இல்லை. அம்மன் திருமுன்னில் இரண்டு இடங்களில் கண்டறியப்பட்ட இப்பதிவு, நாயக்கர் காலத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான அரச தண்டனைகளுள் ஒன்றாக இது விளங்கியதை உணர்த்தும்.

சங்ககாலந்தொட்டே குற்றம் இழைத்தவர்களை யானையை ஏவிக் கொல்லும் பழக்கம் வழக்கிலிருந்ததைப் புறநானூற்றால் அறியலாம். மலையமான் பிள்ளைகளைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அதுபோல் கொல்ல முயன்றபோது, கோவூர் கிழார் எனும் பெரும் புலவர் தம் அறிவார்ந்த பாடலால் அச்செயலைத் தடுத்து நிறுத்தினாராம் வாருணி. சோழர் காலத்திலும் இத்தண்டனை முறை தொடர்ந்ததைச் சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள துடையூர் விஷமங்களேசுவரர், திருப்பைஞ்ஞீலி நீலிவனநாதர், உய்யக்கொண்டான் திருமலை விழுமியநாதர் கோயில்களில் ஆய்வு மேற்கொண்ட நம் பேராசிரியர் மு. நளினி கண்டறிந்த சிற்பங்களால் அறியமுடிந்தது. இம்மூன்றனுள், தரையில் கிடக்கும் குற்றவாளியின் தலையை மேலிருக்கும் பாகனின் ஏவலுக்கேற்பக் காலால் மிதித்துத் தன் கூரிய தந்தங்களால் அவர் உடலைக் குத்திக் கிழிக்கும் பஞ்ஞீலி யானை மிகத் தெளிவாகப் படமாகியுள்ளது.

திருப்பைஞ்ஞீலி கொல்களிறு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உசிலம்பட்டிச் சாலையிலுள்ள குன்றுவரன் கோட்டையில் ஊருக்கு வெளியே உள்ள இடிந்த கோயிலின் வாயில் மேல்நிலையாக விளங்கிய கற்பலகையில் இதே போன்றதொரு சிற்பத்தைக் காணமுடிந்தது. பொதுக்காலம் 14ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க அதில், இம்மரணதண்டனையைப் போற்றிக் கொண்டாடுவார் போல மூன்று ஆடவர்கள். முதலாவதாகவும் மூன்றாவதாகவும் உள்ளவர்கள் மத்தளம் போன்ற தோல்கருவியை இயக்கியவாறே ஆட, இடையிலுள்ளவர் வலக்கையில் செண்டேந்தி இடக்கையை அர்த்தரேசிதமாக்கி ஆடுகிறார். இதுவரை கிடைத்துள்ள கொல் களிறு காட்சிகளில், அதைக் கொண்டாடுமாறு ‘பொருநர் ஆட்டம்’ காட்டப்பட்டிருப்பது குன்றுவரன்கோட்டையில் மட்டுமே.

குன்றுவரன்கோட்டை கொல்களிறும் பொருநர் ஆட்டமும்

போர்க்களங்களில் எதிரிகள் தோல்வியுறும்போது பொருநர்கள் என்றழைக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் தங்கள் கருவிகளை இயக்கியபடியே வென்றவர்களைப் போற்றிக் கொண்டாடிய சங்கமரபின் தொடர்ச்சியாகவே இந்தத் தண்டனைக்கள ஆடலையும் கொள்ளலாம் வாருணி.

எங்களுக்கு வியப்பு என்னவென்றால், காலந்தோறும் இத்தண்டனைக் காட்சி பதிவாகியுள்ளதுடன், மீனாட்சிக் கோயிலையும் இது தழுவிக்கொண்டதுதான். பல இடங்களில் ஓரிடக் காட்சியாக மட்டுமே உள்ள இப்பதிவு, இங்கு மட்டுமே இரண்டு இடங்களில் அழுந்தக் காட்டப்பட்டுள்ளது. யானை எல்லோருக்கும் பிடித்த விலங்கு. குழந்தைகள் கூட நேசிக்கும் அதை ஒருகாலத்தே கொலைக் கருவியாகவும் பயன்படுத்தியுள்ளனர். எதுவும் யார் கைப்படுகிறதோ, எதன் வயப்படுகிறதோ அவர் வழியில், அதன் முறையில்தான் அமையும் போலும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 6. உங்கள் திருவடிகள் என் மேலன . . .

அன்புள்ள வாருணி, பெரியவர்களின் திருவடிகளில் தலையிருத்தி வணங்கி அவர்தம் வாழ்த்துப் பெறுவது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். எல்லார்க்கும் பெரியவராம் இறைவனின் திருவடிகள் தம் தலைமீது விளங்க வேண்டுமென்று விழைந்தவர்களில் தலையாயவர் நாவுக்கரசர். அந்தத் திருவடிப் பேற்றுக்காகவே ஏங்கிப் பதிகம் பாடி நல்லூர் வந்தவர் தலையில், தம் திருவடிகளைப் பதித்தார் சிவபெருமான். அந்த நினைவு போற்றியே தஞ்சாவூர் மாவட்டம் திருநல்லூர் மணவழகர் கோயிலில் வணங்க வருவாருக்கெல்லாம் இறையடி தலைமீது சூடும் பேறு இன்றளவும் தொடர்கிறது. தமிழ்நாட்டு சிவன்கோயில்களில் இங்கு மட்டும்தான் இந்தத் திருவடிப்பேறு தட்டாமல் கைகூடுகிறது.

சிவசூடாமணி, சிவசரணசேகரன் என்றெல்லாம் இறைவனைத் தம்முடன் இணைத்துப் பட்டம் சூடிய அரசர்களுக்கிடையே சிவபாதசேகரனாய் இறைத்திருவடியில் தலை சாய்த்து மகிழ்ந்தவர் நித்தவிநோதரான முதலாம் இராஜராஜர். சிவசரணசேகரனும் ஏறக்குறைய அதே பொருளில் அமைந்த பெயர்தான். அதைத் தமக்கான சிறப்புப் பெயராய்க் கொண்டிருந்தவர் இராஜராஜர் மகனான இராஜேந்திரன்.

பதிகப் பெருமக்களும் அரசஏறுகளும் சிவபெருமான் திருவடிகளைத் தலையில் தாங்க விழைந்து வேண்டிக் கொண்டிருந்த காலத்தே, ‘உங்கள் திருவடிகள் என் தலை மேலன’ என்று அறங்காப்பார் நோக்கி அன்போடு உரைத்தவர்கள் இந்த மண்ணின் எளிய மக்கள். கோயிலுக்கோ, மக்களுக்கோ பயன்படுமாறு அறச்செயலொன்றைத் தம் கொடையால்அ மைத்து, அச்செயலைக் கதிரவனும் நிலவும் உள்ளவரை காப்பாற்றித் தொடர்வார் திருவடிகளைத் தம் தலைமேல் சுமப்பதாகக் கல்வெட்டுகளில் வேண்டி நிற்கும் பெருமக்கள் ஓரிருவரல்லர்.

ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் தங்கள் அறச்செயல்களைக் காலத்துக்கும் காப்பாற்றுமாறு அறம் காப்போரை எதிர்நோக்கியிருக்கும் இத்தகு கொடையாளிகளின் கல்வெட்டுகளைப் படிக்கும்போது கண்கள் ஈரமாவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஒவ்வொரு கோயிலுக்குள்ளும் எனக்குத் தெரிவது இறைப்பற்றில் இழைந்து நிற்கும் இந்த மனிதர்கள்தான். இறைவன்கூட அடுத்த நிலையில்தான்.

அறம் தொடர அதைக் காப்பாற்றுவார் திருவடிகளைத் தலைமேல் கொள்ள விழையும் இப்பெருமக்களினும் ஒரு படி கூடுதலாக இன்னுஞ் சிலர், ‘உங்கள் திருவடிகள் என் மேலன’ என்ற அன்பான, அதே சமயம் அழுத்தமான வேண்டலுடன் தனித்தும் குடும்பத்துடனும் பலகைச் சிற்பங்களாகக் கோயில் சுற்றுகளிலும் திருமுன் வாயில்களிலும் காட்சியளிப்பதை நீ கண்டிருக்கலாம் வாருணி. கட்டமைப்புக்கான கொடையாளிகளாய்த் தூண்களிலும் தனித்தும் சிற்பங்களாகியுள்ள மானுடரினும் இவர்கள் வேறானவர்கள். இறைக்கோயிலை வலம் வரும் பத்திமையாளர் அனைவர் திருவடிகளும் தங்கள் மீது பதிந்து தொடரட்டும் என்ற தணியாத ஆவலுடன் இறைவனை வணங்குமாறு சிற்பமாகியுள்ள இணையர்களைப் பல கோயில்களில் காணலாம். செங்கற்பட்டு மாவட்டச் சிங்கப்பெருமாள்கோயில் சிறந்த சான்றாகும்.

இந்த எளிய மக்களைப் போல் அரசர்களும் விழுந்து வணங்கிய கோலத்தில் சுற்று வலம் கொள்ளும் மக்களின் திருவடிப்பேற்றைப் பெருமையோடு ஏற்றுச் சிற்பங்களாகியுள்ளனர். திருக்கழுக்குன்ற மலைப்பாதையில் வாளோடு விழுந்து வணங்கும் அரசரைக் காணலாம்.

மீனாட்சியம்மன் கோயிலில் நாங்கள் பார்த்த காட்சி இவை அனைத்தினின்றும் வேறானது வாருணி. மீனாட்சி யம்மனின் திருமுன் வெளிச்சுற்றில், திருமுன் வாயிலுக்கு இடப்புறத் தரையில் ஒரு பலகைச் சிற்பம் பதிவாகியுள்ளது. அந்தச் சுற்றில் நடக்கும் அனைத்து மக்களும் அந்தப் பலகைச் சிற்பத்தின் மீது, அது இருப்பதும் அதில் இருப்பவர்கள் யார் என்பதும் அறியாமலேயே திருவடி பதித்து நடந்து மகிழ்கின்றனர்.

நால்வர் இடம்பெற்றுள்ள அதில் பெருமிதத்துடன் நிற்கும் அரசர் யார் தெரியுமா வாருணி? நாயக்கமரபின் தலைநாயகராக வரலாறு யாரைக் கொண்டாடுகிறதோ அந்தத் திருமலைநாயக்கர்தான் அவர். அவரது இருபுறத்தும் பட்டத்தரசியர். அனைவருமே வணங்கிய கைகளுடன். வலப்புறம் செண்டுதாளத்துடன் உடனிருப்பவர் குமரகுருபரர் ஆகலாம். திருமலைநாயக்கர் காலத்தில்தான் அவர் மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இரண்டையும் பாடியதாக நாயக்கர் வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். குருபரர் இலக்கியம் பாட, அதைக் கேட்டவாறும் இறையிணையை வணங்கியவாறும் மன்னர் குடும்பம் உலாவரும் இந்தக் காட்சியைத் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாது.

தங்கள் மீதுதான் மக்கள் நடப்பார்கள் என்பதை நன்கறிந்த நிலையில்தான், திருமலை விழைந்தே இதைச் செய்திருக்க வேண்டும். முக்குறுணிப் பிள்ளையாரை வணங்குமாறு போலச் செப்புத்திருமேனியாக அத்திருமுன் வாயிலில் இது போலவே பட்டத்தரசியர் இருவருடன் பளிச்சிடும் மன்னர், புதுமண்டபத்திலும் அவர்களுடன் அரசகோலத்தில் அழகுறக் காட்சியாகிறார்.

ஆனால், மீனாட்சியன்னையின் திருச்சுற்றுத் தரையிலோ எளியருக்கும் எளியராய், மீனாட்சியை வணங்க வலம் வரும் அத்தனை பேருக்கும் உரியராய், ‘உங்கள் திருவடிகள் என் மேலன’ என்று குடும்பத்தோடு காத்திருக்கிறார், அம்மைத் தமிழ் கேட்டவாறே. என்ன அற்புதம் வாருணி! இதுதான் இந்த மண்ணின் பெருமை, வாசம்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 5. பெரிய கூத்தும் பேயம்மையும்

அன்புள்ள வாருணி, ஆடற்போட்டியில் சிவபெருமான் காளியை வென்றதும் அதன் வழி ஆடல்நாயகரானதும் பத்திமைக் காலப் பதிகங்களில் சம்பந்தராலும் அப்பர் பெருமானாலும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. காளியை வெல்ல இறைவன் ஆடிய ஊர்த்வதாண்டவத்தைப் பெரிய கூத்து என்பார் சம்பந்தர். சொக்கம், நிருத்தம் என இறைவன் ஆடிய அனைத்து ஆடல்களிலும் இணைய ஆடி சமநிலையிலிருந்த காளியை, காலை உயர்த்திய ஆடலால் தோல்வியுறச் செய்தவர் சிவபெருமான். ‘சொக்கத்தே நிருத்தத்தே தொடர்ந்த மங்கை’ என்று இச்செய்தியை நிறுவுகிறது சம்பந்தரின் பதிக அடி. காளியைக் குணஞ்செய்த கூத்தாகவும் இந்த ஊர்த்வதாண்டவம் சம்பந்தரால் போற்றப்படுகிறது.

பல்லவர் கற்றளிகளில் பெருஞ்சிற்பமாகக் காட்டப்பட்டிருக்கும் சிவபெருமானின் ஊர்த்வதாண்டவக் கோலங்களின் அருகே காளியின் ஆடலும் சில தளிகளில் உள்ளமை பதிகங்களைப் பல்லவர்கள் பழுதறப் பின்பற்றியமை உணர்த்தும். பல்லவர்களும் பிற்சோழர்களும் பெரிதும் போற்றிய இப்பெரிய கூத்தை, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தூண் சிற்பங்களாக நந்திப்பந்தலிலும் ஆயிரங்கால், கம்பத்தடி மண்டபங்களிலும் இடம்பெறச் செய்தவர்கள் நாயக்கர்கள்.

கம்பத்தடி அம்மை

இம்மூன்று பதிவுகளுள் முதலிரண்டும் அளவில் சிறியன. கம்பத்தடிச் சிற்பம் பேரளவினது. அருகில் அதே அளவில் காளியின் ஆடலையும் உடன் கொண்டது. பல்லவ, பிற்சோழர் கால ஊர்த்வர்களுக்கு இல்லாத பெருமையாக, இங்கே அப்பன் ஆடல் காண, அவர் தாயும் உடனிருப்பதுதான். ஆம் வாருணி, கயிலை வந்த காரைக்காலம்மையை, ‘இவர் யார்’ என்று உமை கேட்க, ‘நம் அம்மை’ என்று சிவபெருமானே கூறியதாகச் சேக்கிழார் பதிவு செய்துள்ளார்.

நாயக்கர் கைவண்ணங்களில் பல தளிகளில் பேரளவுச் சிற்பங்களாய் ஊர்த்வதாண்டவர்களைப் பார்க்க முடிந்தாலும் அவற்றுள் சில காரைக்காலம்மையை உடன் கொண்டிருந்தாலும் மீனாட்சி ஊர்த்வரும் உடனிருக்கும் அம்மையும் தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் சிற்பப் புதையல்கள் எனலாம்.

இடப்புறம் தலைவைத்துப் படுத்திருக்கும் முயலகன் மீது இடப்பாதம் இருத்தி, வலக்காலை மார்புக்கு முன்னாக மேலுயர்த்தியுள்ளார் சிவபெருமான். அவரது சடைமகுட முகப்பில் மண்டையோட்டிற்கு மாற்றாக பைரவர் தலை. பத்துக் கைகளுடன் நிகழும் இந்த ஆடலில் மேலிருந்து கீழாக அவரது இடக்கைகள் தீயகல், மான், வில், கேடயம், வஜ்ரமணி கொள்ள, வலக்கைகளில் உடுக்கை, மழு, முத்தலைஈட்டி, குத்துவாள், அம்பு.

ஒரு பெருந்தூணின் முன்புறத்தே உருவாகியுள்ள இப்பெருஞ்சிற்பத்தின் தோற்றமும் எழுச்சியும் சொற்களில் வண்ணிக்க இயலாதவை. சிவபெருமானின் இடப்புறம் குடமுழவிசைப்பவராய் நந்திகேசுவரர். வலப்புறம் காரைக்காலம்மை. ஆனந்ததாண்டவருடன் அமர்நிலையில் காட்சிதரும் அம்மை இங்கே இறைவனின் ஊர்த்வத்திற்கேற்ப அதே எழுச்சியைத் தாமும் கொண்டவராய் எழுந்து நின்று குனித்தாடுகிறார். தாம் தரும் தாள இசைக்கேற்ற வளைந்த கோலமென்றாலும் முகம் பார்வையாளருக்காய்த் திரும்பியுள்ளது.

ஆயிரக்கால் ஊர்த்வர்

ஆயிரக்கால் மண்டபத்திலும் நந்தி மண்டபத்திலும் உள்ள ஊர்த்வதாண்டவக் கோலங்களும் தூணோடு ஒட்டிப் பிறந்தவையே. ஆனால், அளவில் சிறியவை. இரண்டனுள் ஆயிரக்கால் சிற்பம் சற்றே பெரியது. இங்கும் இறைவனின் இடத்திருவடிக் கீழ் முயலகன். என்றாலும், அவன் படுத்திருக்கும் முறை மாறுபட்டுள்ளது. இறைவன் வலக்கால் மேலுயர நெடுஞ்சடை மகுடராய் 12 கைகளுடன் ஆடுகிறார். அவரது வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கையில் தீயகல். பின் கைகளுள் மேலிருப்பன ரேசித வீச்சில். பிற கைகளில் மணி, அம்பு, வில் உள்ளிட்ட பல பொருள்கள்.

இரு கைகளையும் ரேசிதமாக்கி ஊர்த்வம் நிகழ்த்தும் தமிழ்நாட்டின் ஒரே தாண்டவர் என்ற பெருமை ஆயிரக்கால் மண்டபத்தாருக்குக் கிடைத்துள்ளது. நாட்டிய சாத்திரம் பேசும் எண்ணற்ற அழகுக் கைகளுள் ஒன்றுதான் இந்த ரேசிதக் கை. நாயக்கர் காலத்திலும் நாட்டியசாத்திரம் வழக்கிலிருந்ததை இந்த ஊர்த்வக் கைகள் நன்கு உணர்த்துகின்றன.

இத்தொகுதியில் காரைக்காலம்மை கால்களை முழங்காலளவில் மடக்கி அவற்றையே இருக்கையாக்கி அமர்ந்துள்ளார். இந்த வியத்தகு அமர்வு அவர் இடம்பெற்றுள்ள ஆனந்ததாண்டவச் சிற்பத்திலும் உள்ளது. முகம் பார்வையாளருக்காய்த் திரும்பியிருந்தாலும் அம்மையின் கைத்தாளங்கள் தாளம் தருவதில் தவறவில்லை. இத்தொகுதியின் மற்றொரு சிறப்பாய் ஊர்த்வரின் இருபுறத்தும் வணங்கிய நிலையிலுள்ள முனிவர்களைச் சுட்டலாம்.

நந்திப்பந்தல் ஊர்த்வர்

நந்திப்பந்தல் ஊர்த்வரும் ஆயிரக்கால் ஊர்த்வர் போலவே பல கையினர். இத்தொகுதியின் தனித்துவமாக இறைவனின் இடப்பாதம் தளத்தில் இருப்பதைச் சுட்டலாம். ஆம், வாருணி, இங்கு முயலகன் இல்லை. இது போல் முயலகனற்ற இறையாடல் காட்சிகள் ஆங்காங்கே காணக் கிடைப்பினும் மீனாட்சிக் கோயிலில் இது ஒன்றே அத்தகு அமைப்பிலுள்ளது. இங்கு அம்மை, கம்பத்தடி மண்டபக் கோலத்தில் குனித்தாடிக் கண்களை மலர்விக்கிறார். கைகளில் செண்டு தாளங்கள்.

புதுமண்டப ஊர்த்வர்

மதுரையின் புதுமண்டபத்திலும் பேரளவிலான ஊர்த்வதாண்டவர் அதே அளவிலான காளியுடன் கண்களுக்கு விருந்தாகிறார். இங்கு இறைவனுக்கு 10 கைகள்தான். வலக்கைகளில் ஒன்று காக்கும் குறிப்பிலிருக்க, பிற கைகளில் முத்தலைஈட்டி, குத்துவாள், மழு, உடுக்கை. இடக்கைகளில் முன் கை வேழக்கையாய் வலப்புறம் வீசப்பட்டுள்ளது. மற்றொரு இடக்கையில் நந்திக் கொடித்தண்டு. ஆடும் இறைவனின் கைகளில் மிக அரிதாகவே இடம்பெறும் இந்நந்திக் கொடித்தண்டு பரங்குன்றம் ஆடவல்லான் கையில் முற்பாண்டியர் படைப்பாய் பளிச்சிடுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம் வாருணி.

இறைவன் இடுப்பின் இருபுறத்துமுள்ள மகரங்கள் அழகான திருவாசியை இறைவனுக்குப் பின்னணியாக்க, முயலகனின் கைப்பாம்பு நெடுக ஊர்ந்து இடப்புறம் நெளிந்து இறைவனின் இடக்காலருகே குடமுழவு வாசிக்கும் வாணனின் முழவுக்குத் தளமாகித் தலைவிரித்துள்ளது. இது மீனாட்சிக் கோயில் ஆனந்ததாண்டவப் பதிவினும் மாறுபட்ட விரிவாக்கமாகும்.

இத்தொகுதியிலும் அம்மை கம்பத்தடிக் கோலத்திலேயே காட்சியாகிறார். அதே எழுச்சி, அதே குனிப்பு, அதே பெருமிதம். கைகள் சிதைக்கப்பட்ட நிலையிலும் அம்மையின் பேரன்பை உடல்மொழியால் வெளிப்படுத்தும் இச்சிற்பம் நாயக்க முத்திரைகளுள் ஒன்றெனலாம்.

வாருணி, நாயக்கர் காலப் படைப்பாற்றல் யார் காலத்திற்கும் குறைந்ததன்று. கதைகள் பெருகியதால் காட்சிகள் விரிந்து படைப்புகளில் இறுக்கம், நெருக்கம் இருந்தாலும் காதலோடு காண்பாருக்கு அவை தரவல்ல சுகங்கள் பார்த்தவரே அறிதல் கூடும். அடுத்தமுறை மதுரை சென்றால் இந்தப் பெருங்கூத்துப் படைப்புகளை சம்பந்தர், நாவுக்கரசர், காரைக்காலம்மையின் பதிகப் பின்புலங்களோடு பார்த்துவிட்டு வா. இலக்கியம் இல்லாமல் கலையா? கலை இல்லாமல் வரலாறா? வரலாறு இல்லாமல் வாழ்க்கையா?

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும் – 4. அம்மன் கோயில் அம்மை

அன்புள்ள வாருணி, சிவபெருமான் 108 தாண்டவங்களை நிகழ்த்தியதாக ஆகமங்கள் பேசினாலும், அவற்றுள் ஆனந்ததாண்டவமும் ஊர்த்வதாண்டவமுமே தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாகக் காட்டப்பட்டுள்ளன. சிற்றுருவச் சிற்பந்தொட்டுப் பேரளவிலான படப்பிடிப்புவரை இவ்விரு தாண்டவக் கோலங்களும் பல்லவரில் தொடங்கி நாயக்கர் காலம்வரை ஏறத்தாழ 12 நூற்றாண்டுகளாகப் பல்வேறு அளவுகளில் தமிழ்நாட்டுக் கோயில்களில் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

இச்சிற்பங்களுள் சில ஆடல்நாயகராக சிவபெருமானை மட்டும் கொள்ள, சிலவற்றில் அந்த ஆடலைக் காண்பவராக உமையன்னையும் ஆடலுக்கு இசை கூட்டுபவர்களாக சிவபெருமானின் பூதகணங்களும் காட்சிதரக் காணலாம். இன்னும் சில சிற்பங்களில் இறையாடலைக் காண்பவர்களாகவும் அதற்கு இசை தருபவர்களாகவும் விஷ்ணு, நான்முகன் உள்ளிட்ட விண்ணுலகினரும் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையை இணைத்தவர் சோழஅரசி செம்பியன்மாதேவி.

ஆனந்ததாண்டவத்தில் சிவபெருமானின் வலக்கால் தரையிலோ அல்லது முயலகன் என்னும் குறளரக்கன் மீதோ ஊன்ற, இடக்கால் உயர்ந்து முழங்காலளவில் மடிக்கப்பட்டு வலப்புறம் வீசப்பட்டிருக்கும். இறைவனின் முன்னிருகைகளில் வலக்கை காக்கும் குறிப்பிலிருக்க, இடக்கை இடக்கால் போலவே வலப்புறம் வீசப்பட்டு வேழமுத்திரையில் அமையும். 

ஊர்த்வதாண்டவம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதில், இறைவனின் ஒருகால் தரையிலோ, முயலகன் மீதோ ஊன்றியிருக்கும். மற்றொரு காலோ மார்புக்கு முன் அல்லது பின்னிருக்குமாறு மேல் நோக்கி உயர்த்தப்பட்டிருக்கும். இத்தாண்டவத்திலும் வல முன் கை காக்கும் குறிப்பிலேயே அமையும். ஆனால், இட முன் கை மாறுபட்ட குறிப்புகளில் அமைவது சிற்பங்கள் காட்டும் காட்சியாகும்.

தமிழ்நாட்டிலுள்ள பல்லவக் கற்றளிகளில் சிவபெருமானின் ஊர்த்வதாண்டவம் இடம்பெற, விஜயாலய சோழர்களின் கட்டுமானங்களில் ஆனந்ததாண்டவம் கோலோச்சியது. சாளுக்கியச் சோழர் கோயில்கள் மீண்டும் ஊர்த்வதாண்டவத்திற்குத் திரும்ப, நாயக்கர்கள்அ அதைக் கொண்டாடிப் பின்பற்றினர். இப்படி ஆடல்நிலை மாறினாலும் பெரும்பாலான கோயில்களில் இரண்டு தாண்டவங்களில் ஒன்று தவறாமல் இடம்பெற்றது. மிகச் சில வளாகங்களே சிவபெருமானின் இரு ஆடற்கோலங்களையும் பெற்றுச் சிறந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது மதுரை மீனாட்சியம்மன் கோயில்.

இந்த வளாகத்தில் ஆய்வுசெய்தபோது சிவபெருமானின் இரண்டு அழகிய ஆனந்ததாண்டவச் சிற்பங்களையும் மூன்று ஊர்த்வதாண்டவச் சிற்பங்களையும் கண்டு மகிழ வாய்த்தது. இந்தக் கண்டுபிடிப்பின் கூடுதல் சிறப்பு, இவை ஐந்திலும் இறையாடலின் உடனிருப்பாகக் காரைக்கால் அம்மையும் இடம்பெற்றிருப்பதுதான். செம்பியன்மாதேவியால் இறையாடல் வடிப்புகளில் இடம்பெறத் தொடங்கிய அம்மை, விஜயாலய சோழமரபின் இறுதிவரை தொடர்ந்து காட்சியானார். சாளுக்கியச் சோழர்களின் இறையாடல் சிற்பங்கள் அவரை இழந்தபோதும், நாயக்கர்கள் அம்மையை விடவில்லை. மீண்டும் பற்றி, அதை இறுகிய பற்றாகவும் மாற்றினர். அதனால்தான், மீனாட்சி அம்மன் கோயிலில் இறைவன் ஆடுமிடமெல்லாம் இசைக்கலைஞராய் அம்மையும் உடனிருக்கிறார்.

முதலில் ஆனந்ததாண்டவச் சிற்பங்களைப் பார்ப்போம் வாருணி. இரண்டு இடங்களில் இவை உள்ளன. இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட சுவரில் மகரதிருவாசிக்கு நடுவில் வலக்காலை முயலகன் முதுகின் மீதும் உயர்த்தி வீசிய இடக்காலை அம்முயலகன் கையிலிருந்து சீறி வளர்ந்தோங்கி படம் விரித்திருக்கும் பாம்பின் மீதும் இருத்தி ஆனந்த நடமிடும் இறைவனின் இடமுழங்காலை மற்றொரு பாம்பு சுற்றிப் படமெடுத்துள்ளது. அதன் தலை தொட்டவாறே இறைவனின் இட முன் கை வேழக்கையாக வீசப்பட்டுள்ளது. பின்கைகளில் துடியும் தீயகலும் அமைய, வல முன் கையோ காக்கும் குறிப்பில்.

மலர்ந்த முகத்துடன் ஆடும் இறைவனின் இடப்புறத்தே அழகே உருவாய் உமை. அவரது வலப்புறம் குடமுழவுடன் நந்தியெம்பெருமான். இறைவனின் தூக்கிய திருவடிக்கருகில் தாம் விரும்பி ஏற்ற பேயுருவில் கைகளில் செண்டுதாளங்களுடன் காரைக்காலம்மை. இலலிதாசனத்தில் இடக்கால் மடித்து, வலக்காலைக் குத்துக்காலாக்கி முகமெல்லாம் மலர, தம் பேற்றுக்குத் தாமே மகிழ்ந்து அம்மை தாளமிசைக்கும் அருமையான படிப்பிடிப்பம்மா இது. 

வாருணி, இச்சிற்பத்தை அடியொற்றியே மற்றொரு பதிவும் அமைந்துள்ளது. எனினும், மாற்றங்கள் இல்லாமல் இல்லை. இதுவும் தூண்களுக்கிடையிலான சுவரில்தான் உள்ளது. ஆனால், அந்தத் தூண்களை யாளிகள் தாங்குகின்றன. நந்திகேசுவரரின் குடமுழவை இருத்தத் தன்னையே தளமாக்கிச் சுருண்டுள்ள பாம்பு முழவின் முன்பகுதியில் படமெடுத்துள்ளது. 

வலக்காலை நீட்டி, இடக்காலை மடக்கி மிக இயல்பாக அமர்ந்துள்ள நந்தியெம்பெருமான் சாய்ந்தாடி முழவிசைக்கும் அழகே அழகு. முதல் பதிவில் தாம் பாடினாற் போலவே செடித்தலைப் பேயாகக் கட்சிதரும் அம்மை, இதில் படியவாரிய தலையராய் வடிவம் மாறியுள்ளார். முதல் பதிவு இறையாடலில் மூழ்கி மகிழ்ந்திருக்கும் முத்தாய்ப்புக் கோலம் என்றால், இந்த இரண்டாம் பதிவை ஆடலில் மயங்கிய அம்மையின் பெருங்களிப்பு நிலையாகக் குறிக்கலாம்.

குடமுழவிற்குத் தளமாகி அந்தக் கருவி எழுப்பும் தாள ஒலிக்குப் படமெடுத்தாடும் இந்தப் பாம்புப் பதிவு தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் காணமுடியாதது வாருணி. சிற்பிகளின் கற்பனையாற்றல் எப்படியெல்லாம் பெருகிப் பாயும் என்பதற்கு இந்தப் பாம்புத் தளமும் அதன் தலைவிரிப்பும் சரியான சான்றுகளம்மா. 

​​அன்புடன்,
இரா. கலைக்கோவன்.