விருது வழங்கல் மற்றும் நூல் வெளியீட்டு விழாக்கள்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையமும் வரலாறு.காம் இணைய இதழும் இணைந்து நடத்திய இரண்டு விழாக்கள் (விருது வழங்கல் மற்றும் நூல் வெளியீடு), 03.08.25 அன்று திருவிடைமருதூர் ஶ்ரீவத்சம் முதுமக்கள் குடியிருப்பிலுள்ள பிரேமி கேந்திரம் அரங்கில் நடைபெற்றன.

முதலில், இதழியல் இமயம் பேராசிரியர் முனைவர் மா. ரா. அரசு அறக்கட்டளையின் ‘இளம் ஆய்வாளர்’ விருது, வரலாறு.காம் இணைய இதழின் பொறுப்பாசிரியர் திரு சு. சீதாராமனுக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வரலாறு.காம் இணைய இதழின் பொறுப்பாசிரியர் திரு ச. கமலக்கண்ணனுடைய ‘ஜப்பானிய பழங்குறுநூறு’ நூலை டாக்டர் இரா. கலைக்கோவன் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

அன்றைய நிகழ்வின் இணையப் பதிவை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். 

💐விருது வழங்கல் & நூல் வெளியீட்டு விழாக்கள் 💐@Srivathsam on 03-08-2025

நான்காம் புத்தகத் திருவிழா 2025, நாகபட்டினம்


நாகபட்டினம் மாவட்ட நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் மூன்றாண்டுகளாக நடத்தி வரும் புத்தகத் திருவிழாவின் நான்காம் ஆண்டு (2025) நிகழ்வுகள், ஆகஸ்டு 01 முதல் 11 வரை நடைபெற்றன. எட்டாம் நாளான 08.08.25 அன்றைய கருத்தரங்கில் டாக்டர் இரா. கலைக்கோவன், ‘நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள்’ பற்றிய பொழிவை நிகழ்த்தினார்.

அன்றைய காணொலிப் பொழிவின் இணையப் பதிவை இங்கு காணலாம். 

முதலாம் இராஜேந்திரரின் கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம் பற்றி வரலாற்றுத் துறை அறிஞர்களின் கருத்துகள் தாங்கிய காணொலி, இந்து இதழின் மின்தளத்தில் 26/07/25 அன்று பதிவானது. அதில், முதலாம் இராஜராஜருக்கும் வானவன்மாதேவிக்கும் பிறந்த திருமகன் முதலாம் இராஜேந்திரர், தமிழ்நாட்டை மிக உயர்ந்த நிலைக்குத் தம்முடைய ஆட்சிக் காலத்தில் கொண்டு சென்ற வரலாறையும், வேறு எந்த இந்திய மன்னரும் நிகழ்த்திடாத அளவுக்குக் கடல் போர்கள் நிகழ்த்தி வெற்றி கண்ட முதல் இராஜேந்திரருடைய சிறப்பையும் சுருக்கமாக விளக்கினார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள்

நாகபட்டினம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நேர்க்காணலில், நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள் குறித்த செய்திகளை டாக்டர் இரா. கலைக்கோவன் விரிவாக விளக்கினார். நிகழ்ச்சி, அம்மாவட்ட நிர்வாகத்தின் வலையொலிப் பக்கத்தில் 10.07.2025 அன்று பதிவிடப்பட்டது.

பேசும் தலைமை/ நியூஸ் 7 தமிழ்

25.06.2017 அன்று ‘நியூஸ் 7 தமிழ்’ அலைவரிசையில் ஒளிபரப்பான டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்காணலை இங்கே காணலாம்.

என்.ஜே. சன்ரைஸ் ரேடியோ (NJ Sunrise Radio)- நேர்காணல்

11/09/23 அன்று என்.ஜே. சன்ரைஸ் ரேடியோ (NJ Sunrise Radio)- தமிழ் அலைவரிசையில், டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்காணல் ஒளிபரப்பானது. பேராசிரியர் இ.ஜே. சுந்தர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் வரலாறு சார்ந்த வினாக்களுக்கு விடையளித்த டாக்டர் இரா. கலைக்கோவன், எளிய முறையில் பற்பல அரிய தகவல்களை வழங்கினார். அதிலும் குறிப்பாக, தமிழகக் கோயில்கள் பற்றிப் பரவிக் கிடக்கும் தவறான செய்திகளைத் திருத்தி நேர்ப்படுத்தும் தரவுகளை அளித்து, உண்மையான வரலாறைப் புரிந்துகொள்ளச் செய்த உரையாடலாகவும் அது அமைந்தது.

என்.ஜே. சன்ரைஸ் ரேடியோவின் இணையப் பதிவை இங்கு காணலாம்.

‘கறைக்கண்டன் சேவடி சேர்ந்த காரைக்கால் அம்மையார்’- நூல் வெளியீட்டு விழாவில் டாக்டர் இரா. கலைக்கோவனின் காணொலிப் பொழிவு

10/09/23 அன்று சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில், திரு. இராமநாதன் பழனியப்பன் அவர்களின் ‘கறைக்கண்டன் சேவடி சேர்ந்த காரைக்கால் அம்மையார்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் சிறப்புரையாற்றிய டாக்டர் இரா. கலைக்கோவன், காரைக்கால் அம்மை குறித்த காணொலிப் பொழிவொன்றை வழங்கினார்.

அன்றைய நிகழ்வின் இணையப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது. நேரம் 1:15:20 தொடங்கி 1:43:40 வரை டாக்டர் இரா. கலைக்கோவனின் பொழிவைக் காணலாம்.

நூல் வெளியீட்டு இணையப் பதிவு-

புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில்,  தஞ்சாவூரிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பசுபதிகோயில் என்ற சிற்றூர்.  9-10ஆம் நூற்றாண்டுகளில் புள்ளமங்கலம் என்று அழைக்கப்பட்ட இன்றைய பசுபதிகோயிலில் உள்ளது முதலாம் பராந்தகர் காலத்ததான ஆலந்துறையார் கோயில். 

புள்ளமங்கை ஆலந்துறையார் பற்றிய குறும்படம் ஒன்று ‘மீட்பியம்’ குழுவினரால் வெளியிடப்பட்டது.

ஐந்து பகுதிகளாக வழங்கப்பட்ட காணொலியில், கட்டடக்கலை, சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என்ற மூன்று நிலைகளிலும்  சிறப்பு வாய்ந்த அக்கோயில் பற்றிய  விரிவான தகவல்களை வழங்கியிருக்கிறார்  டாக்டர் மா.இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன். 

காணொலியின் இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.



‘கலாட்டா தமிழ்’ – நேர்க்காணல்

04/10/22 அன்று கலாட்டா தமிழ் அலைவரிசையில் டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்க்காணல் இடம்பெற்றது.

சோழர்கள், அவர்தம் வரலாறு, சோழர் மண்ணில் கலைகளின் வளர்ச்சி, சோழச் சிற்பங்களில் இராமாயணமும் மகாபாரதமும், தமிழி மற்றும் வட்டெழுத்து எழுத்துமுறைகள், தம்மை வரலாற்றுப் பாதைக்குக் கொணர்ந்த முதல் சிற்பம், சமீபத்திய திருமங்கலம் திருமழுவுடையநாயனார் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு என்பன பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கினார்.

கூடுதலாக, களப்பிரர் காலம் உண்மையில் இருண்ட காலமா? கருவூர்த் தேவர் யார்? திரைப்படமாக எடுக்கப்பட்ட அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ சோழர் வரலாற்றைப் படம்பிடிக்கிறதா? என்ற கேள்விகளுக்கான விடைகளையும் நேர்க்காணல் மூலம் அறிந்கொள்ளலாம்.

‘கலாட்டா தமிழ்’ நிகழ்வு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.