அத்யந்தகாமம்

மாமல்லைக் கோயில் தொகுதியில் வியக்கவைக்கும் சாதனைகள் புரிந்தவர் இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மன் என்பதையும், தர்மராஜ ரதம் அவரால் உருவாக்கப்பட்டது என்பதையும் கட்டடக்கலை, கல்வெட்டு மற்றும் சிற்பச் சான்றுகளால் உறுதிசெய்து 2004இல் டாக்டர் இரா. கலைக்கோவன் வெளியிட்ட நூல் ‘அத்யந்தகாமம்’. தர்மராஜ ரதத்தில் கிடைத்த 39 வடமொழிக் கல்வெட்டுக்களில் இரண்டு, ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்’ என்று அக்கோயிலை அடையாளப்படுத்துகின்றன. ஆக, தர்மராஜ ரதத்திற்கு அதை உருவாக்கிய பல்லவ அரசர் வைத்த பெயர் ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்’.

தமிழ்நாட்டுக் கலை வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையெனக் கருதப்படும் தர்மராஜ ரதம் என்றழைக்கப்படும் ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தைப்’ பற்றி, 30.07.2005 அன்று திருவெறும்பியூரில் நடைபெற்ற ‘ஆவணம்’ இதழ் 16இன் வெளியீட்டு விழாவில் ‘அத்யந்தகாமம்’ என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் சொற்பொழிவு நிகழ்த்தியிருந்தார். அப்பொழிவின் அச்சுரு ‘ஆவணம் 17, 2006’ இதழில் வெளிவந்தது.

அக்கட்டுரை, அனைவரும் படித்துப் பயனுறும் வண்ணம், பதிவிறக்கம் செய்துகொள்ளும் கையடக்க ஆவணமாக இங்கே வழங்கப்பட்டுள்ளது.

மையத்தின் புதிய நூல்கள்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் 2023இல் மூன்று புதிய நூல்களை வெளியிட்டுள்ளது. அல்லூர், வடகுடி, திருமங்கலம் சோழர் தளிகள் பற்றி ஒரு நூலும், திருநெடுங்களம், திருவாசி, நகர், கண்ணனூர் சோழர் தளிகள் பற்றி ஒரு நூலும், வரலாறு ஆய்விதழின் ஒருங்கிணைந்த தொகுதியும் (31-32) தற்போது வெளியாகியுள்ளன. 1993 தொடங்கி 30 ஆண்டுகளில் 30 தொகுதிகளாக மலர்ந்திருக்கும் ஆய்விதழ் வரலாறு என்பது வரலாற்றார்வலர்கள் அறிந்ததே.

அல்லூர் வடகுடி திருமங்கலம் சோழர் தளிகள் மூன்று

அல்லூர் நக்கன், வடகுடி மகாதேவர், திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில்களின் முழுமையான படப்பிடிப்பு, கல்வெட்டுத் தரவுகள், சிற்பச் சிறப்புகள், கோயிலமைப்பு ஆகியவற்றுடன் களஆய்வுகளில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளின் பாடங்களும் கொடும்பாளூர் வேளிர் மரபுவழிப் பட்டியலும் இணைக்கப்பட்ட நூல் இது.

சிராப்பள்ளி மாவட்டச் சோழர் காலத் தளிகள் ஐந்து

திருநெடுங்களம் நெடுங்களநாதர், திருவாசி மாற்றுரைவரதீசுவரர், நகர் அப்ரதீசுவரர், கண்ணனூர்ப் போசளீசுவரர், முக்தீசுவரர் கோயில்களின் கட்டமைப்பு, சிற்பச் செழிப்பு, கல்வெட்டுச் சிறப்புப் பேசும் தரவுப் பெட்டகம். இக்கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய தரவுகளும் கோயில்களின் தனிச் சிறப்புகளும் நூலை வளப்படுத்தியுள்ளன.

வரலாறு ஆய்விதழ்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுமுடிவுகளையும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் 1993 ஆகஸ்டு 15ஆம் நாள் தோன்றிய ஆய்விதழ் ‘வரலாறு’. 2021, 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த இதழாக வரலாறு 31-32 தொகுதி அச்சில் வந்துள்ளது.

வரலாறு 31-32

நூல்கள் பெற விழைவோர் தொடர்புகொள்ள –

சி 87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி – 600 018

தொடர்பு எண்: +91 89036 11790

கிடைக்கும் நூல்கள்

நூல்களில் இப்போது கிடைப்பவை

(நூல்கள் பெற–   +91 93451 11790)

1. சங்கச்சாரல்

2. இருண்ட காலமா?

3. தவத்துறையும் கற்குடியும்

4. வாணன் வந்து வழி தந்து. . .

5.  பாச்சில் கோயில்கள்

6. எறும்பியூர் துடையூர் – சோழர் தளிகள்

7.  சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு

8. சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் ஏழு

9. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

10. மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்

11. கலை 66 (பணிப்பாராட்டு நூல்)