
அன்புள்ள வாருணி, பெரியவர்களின் திருவடிகளில் தலையிருத்தி வணங்கி அவர்தம் வாழ்த்துப் பெறுவது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். எல்லார்க்கும் பெரியவராம் இறைவனின் திருவடிகள் தம் தலைமீது விளங்க வேண்டுமென்று விழைந்தவர்களில் தலையாயவர் நாவுக்கரசர். அந்தத் திருவடிப் பேற்றுக்காகவே ஏங்கிப் பதிகம் பாடி நல்லூர் வந்தவர் தலையில், தம் திருவடிகளைப் பதித்தார் சிவபெருமான். அந்த நினைவு போற்றியே தஞ்சாவூர் மாவட்டம் திருநல்லூர் மணவழகர் கோயிலில் வணங்க வருவாருக்கெல்லாம் இறையடி தலைமீது சூடும் பேறு இன்றளவும் தொடர்கிறது. தமிழ்நாட்டு சிவன்கோயில்களில் இங்கு மட்டும்தான் இந்தத் திருவடிப்பேறு தட்டாமல் கைகூடுகிறது.
சிவசூடாமணி, சிவசரணசேகரன் என்றெல்லாம் இறைவனைத் தம்முடன் இணைத்துப் பட்டம் சூடிய அரசர்களுக்கிடையே சிவபாதசேகரனாய் இறைத்திருவடியில் தலை சாய்த்து மகிழ்ந்தவர் நித்தவிநோதரான முதலாம் இராஜராஜர். சிவசரணசேகரனும் ஏறக்குறைய அதே பொருளில் அமைந்த பெயர்தான். அதைத் தமக்கான சிறப்புப் பெயராய்க் கொண்டிருந்தவர் இராஜராஜர் மகனான இராஜேந்திரன்.
பதிகப் பெருமக்களும் அரசஏறுகளும் சிவபெருமான் திருவடிகளைத் தலையில் தாங்க விழைந்து வேண்டிக் கொண்டிருந்த காலத்தே, ‘உங்கள் திருவடிகள் என் தலை மேலன’ என்று அறங்காப்பார் நோக்கி அன்போடு உரைத்தவர்கள் இந்த மண்ணின் எளிய மக்கள். கோயிலுக்கோ, மக்களுக்கோ பயன்படுமாறு அறச்செயலொன்றைத் தம் கொடையால்அ மைத்து, அச்செயலைக் கதிரவனும் நிலவும் உள்ளவரை காப்பாற்றித் தொடர்வார் திருவடிகளைத் தம் தலைமேல் சுமப்பதாகக் கல்வெட்டுகளில் வேண்டி நிற்கும் பெருமக்கள் ஓரிருவரல்லர்.
ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் தங்கள் அறச்செயல்களைக் காலத்துக்கும் காப்பாற்றுமாறு அறம் காப்போரை எதிர்நோக்கியிருக்கும் இத்தகு கொடையாளிகளின் கல்வெட்டுகளைப் படிக்கும்போது கண்கள் ஈரமாவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஒவ்வொரு கோயிலுக்குள்ளும் எனக்குத் தெரிவது இறைப்பற்றில் இழைந்து நிற்கும் இந்த மனிதர்கள்தான். இறைவன்கூட அடுத்த நிலையில்தான்.
அறம் தொடர அதைக் காப்பாற்றுவார் திருவடிகளைத் தலைமேல் கொள்ள விழையும் இப்பெருமக்களினும் ஒரு படி கூடுதலாக இன்னுஞ் சிலர், ‘உங்கள் திருவடிகள் என் மேலன’ என்ற அன்பான, அதே சமயம் அழுத்தமான வேண்டலுடன் தனித்தும் குடும்பத்துடனும் பலகைச் சிற்பங்களாகக் கோயில் சுற்றுகளிலும் திருமுன் வாயில்களிலும் காட்சியளிப்பதை நீ கண்டிருக்கலாம் வாருணி. கட்டமைப்புக்கான கொடையாளிகளாய்த் தூண்களிலும் தனித்தும் சிற்பங்களாகியுள்ள மானுடரினும் இவர்கள் வேறானவர்கள். இறைக்கோயிலை வலம் வரும் பத்திமையாளர் அனைவர் திருவடிகளும் தங்கள் மீது பதிந்து தொடரட்டும் என்ற தணியாத ஆவலுடன் இறைவனை வணங்குமாறு சிற்பமாகியுள்ள இணையர்களைப் பல கோயில்களில் காணலாம். செங்கற்பட்டு மாவட்டச் சிங்கப்பெருமாள்கோயில் சிறந்த சான்றாகும்.
இந்த எளிய மக்களைப் போல் அரசர்களும் விழுந்து வணங்கிய கோலத்தில் சுற்று வலம் கொள்ளும் மக்களின் திருவடிப்பேற்றைப் பெருமையோடு ஏற்றுச் சிற்பங்களாகியுள்ளனர். திருக்கழுக்குன்ற மலைப்பாதையில் வாளோடு விழுந்து வணங்கும் அரசரைக் காணலாம்.
மீனாட்சியம்மன் கோயிலில் நாங்கள் பார்த்த காட்சி இவை அனைத்தினின்றும் வேறானது வாருணி. மீனாட்சி யம்மனின் திருமுன் வெளிச்சுற்றில், திருமுன் வாயிலுக்கு இடப்புறத் தரையில் ஒரு பலகைச் சிற்பம் பதிவாகியுள்ளது. அந்தச் சுற்றில் நடக்கும் அனைத்து மக்களும் அந்தப் பலகைச் சிற்பத்தின் மீது, அது இருப்பதும் அதில் இருப்பவர்கள் யார் என்பதும் அறியாமலேயே திருவடி பதித்து நடந்து மகிழ்கின்றனர்.
நால்வர் இடம்பெற்றுள்ள அதில் பெருமிதத்துடன் நிற்கும் அரசர் யார் தெரியுமா வாருணி? நாயக்கமரபின் தலைநாயகராக வரலாறு யாரைக் கொண்டாடுகிறதோ அந்தத் திருமலைநாயக்கர்தான் அவர். அவரது இருபுறத்தும் பட்டத்தரசியர். அனைவருமே வணங்கிய கைகளுடன். வலப்புறம் செண்டுதாளத்துடன் உடனிருப்பவர் குமரகுருபரர் ஆகலாம். திருமலைநாயக்கர் காலத்தில்தான் அவர் மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இரண்டையும் பாடியதாக நாயக்கர் வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். குருபரர் இலக்கியம் பாட, அதைக் கேட்டவாறும் இறையிணையை வணங்கியவாறும் மன்னர் குடும்பம் உலாவரும் இந்தக் காட்சியைத் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாது.
தங்கள் மீதுதான் மக்கள் நடப்பார்கள் என்பதை நன்கறிந்த நிலையில்தான், திருமலை விழைந்தே இதைச் செய்திருக்க வேண்டும். முக்குறுணிப் பிள்ளையாரை வணங்குமாறு போலச் செப்புத்திருமேனியாக அத்திருமுன் வாயிலில் இது போலவே பட்டத்தரசியர் இருவருடன் பளிச்சிடும் மன்னர், புதுமண்டபத்திலும் அவர்களுடன் அரசகோலத்தில் அழகுறக் காட்சியாகிறார்.
ஆனால், மீனாட்சியன்னையின் திருச்சுற்றுத் தரையிலோ எளியருக்கும் எளியராய், மீனாட்சியை வணங்க வலம் வரும் அத்தனை பேருக்கும் உரியராய், ‘உங்கள் திருவடிகள் என் மேலன’ என்று குடும்பத்தோடு காத்திருக்கிறார், அம்மைத் தமிழ் கேட்டவாறே. என்ன அற்புதம் வாருணி! இதுதான் இந்த மண்ணின் பெருமை, வாசம்.
அன்புடன்,
இரா. கலைக்கோவன்.















