பனைமலை ஓவியம் பகிரும் உண்மைகள்

​அன்புள்ள வாருணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மடல். உன் பணிகள் வழக்கம்போல் இருக்குமென நம்புகிறேன். இல்லத்தில் அனைவரும் நலந்தானே. 6.8.2023 ஞாயிறன்று இந்து தமிழ் திசை இதழில், ‘ஒளிரும் பல்லவ ஓவியம்’ என்ற தலைப்பில் திரு சு. தியடோர் பாஸ்கரன் எழுதியிருந்த பனைமலை ஓவியம் குறித்த கட்டுரை படித்தேன். 90களில் நீயும் நானும் மேற்கொண்ட பனைமலைப் பயணம்தான் நினைவில் நிழலாடியது. இராஜசிம்மப் பல்லவரின் அந்த மணற்கல் தளியின் அழகில் மயங்கிப்போய் வெளிமண்டபத் தூணில் சாய்ந்து அமர்ந்தவாறே அவரது கற்றளிகளைப் பற்றி நாம் பேசியதெல்லாம் எனக்குள் மறுபதிவாய் மலர்ந்தன. அந்த நினைவு உலாவைத் தடுப்பது போல, ஒளிரும் பல்லவ ஓவியக் கட்டுரையில் கண்சிமிட்டிய சிலவற்றை உன்னிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

​காலந்தோறும் இருந்த தமிழர் ஓவியக்கலை பேசுமிடத்துக் கட்டுரையாசிரியர், ஓவியச் செந்நூலைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவதாக எழுதியிருந்தார். சிலப்பதிகாரம் நாட்டிய நன்னூலைக் குறிப்பிடுவது நாம் அறிவோம். ஓவியச் செந்நூல்? பனைமலையில் அதைப் பற்றியும் நாம் பேசியது நீ மறந்திருக்கமாட்டாய். சாத்தனாரின் இணையற்ற காப்பியமான மணிமேகலையில், ஊர் அலர் உரைத்த காதையின் 30-31ஆம் அடிகளே ஓவியச் செந்நூலைக் குறிக்கின்றன.

‘நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
வோவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்’ என அவ்வடிகள் செந்நூலை மட்டுமா சுட்டுகின்றன, அதற்கான உரைநூலையும் அல்லவா குறிக்கின்றன. இது போல் ஒவ்வொரு துறைசார்ந்தும் இருந்த புரவிநூல், மடைநூல், தேர்நூல், சிற்பநூல் முதலியவற்றிற்கும் உரைநூல்கள் இருந்திருக்கலாமோ என்று கருதுமாறு, ஓவியச்செந்நூலின் உரைநூல் கிடக்கை கருத்துக்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது வாருணி.

அவிநயத்தின் நான்கு களங்களான நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்கல் ஆகியவற்றையும் அவற்றின் மாறுபட்ட நிலைகளையும் அறிந்து தெளிவதற்கான வழிகாட்டு நூலாக இந்த ஓவியச்செந்நூலை அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுவது நோக்க, அவர் காலம்வரை இந்நூலின் பயன்பாடு அறியப்பட்டிருந்ததும் தெளிவாகிறதல்லவா!

​முதலாம் மகேந்திரவர்மரின் மாமண்டூர்க் கல்வெட்டுச் சுட்டும் விருத்தி, தட்சிண, சித்ர எனும் சொற்கள் கொண்டு, தட்சிணசித்திரமெனும் ஓவிய உரைநூல் ஒன்றை மகேந்திரவர்மர் எழுதியுள்ளதாகவும் வர்ணசதுர்த்த என்ற கல்வெட்டுச் சொல்லாட்சி மகேந்திரரின் ஓவிய ஆற்றலை வெளிப்படுத்துமாறு உள்ளதாகவும் டி.வி. மகாலிங்கம், மயிலை சீனி. வேங்கடசாமி, தி.நா. இராமச்சந்திரன் ஆகிய வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ளமை நினைக்கத்தத்தது. சித்திரகாரப்புலி என்று மகேந்திரர் தம்மைப் பெருமையுடன் அழைத்துக்கொள்வது எத்தனை பொருத்தம் என்று இந்தக் கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளைப் பரிமாறிப் பனைமலையில் நாம் பேசிக்கொண்டதை நீ மறந்திருக்கமாட்டாய். இலக்கியமில்லாத வரலாற்றுப் பார்வையும் வரலாறு தெரியாத இலக்கிய நுகர்வும் முழுமையற்ற கருத்து முடிவையே தரும் என்பது குறித்தும் நாம் விவாதித்ததை நினைவூட்டுகிறேன் வாருணி.

​திரு. தியடோர் தம் கட்டுரையில் சித்திரகாரப் புலியாகச் சிம்மவிஷ்ணுவைக் குறிப்பிட்டிருக்கிறார். முதலாம் மகேந்திரர்தான் சித்திரகாரப் புலியாக அறியப்பட்டார் என்ற கல்வெட்டு உண்மையைப் பள்ளிப் பாடநூல்களே பகிர்ந்துகொள்ளும்போது தியடோர் அந்தப் பெருமையைச் சிம்மவிஷ்ணுவுக்கு மாற்றியிருப்பது துன்பமானது.

​பனைமலைக் கற்றளியின் வடக்குச் சாலைத் திருமுன் மேற்குச்சுவரில் துணுக்குகளாய் எஞ்சியிருக்கும் சிவபெருமானின் ஆடலும் வடக்குச் சுவரில் தப்பிப் பிழைத்திருக்கும் உமையின் தோற்றமும் நம் கண்களை நிறைத்தாற் போலவே திரு. தியடோரின் கண்களையும் கவர்ந்தன போலும். இரண்டைப் பற்றியும் அவரது ‘ஒளிரும் பல்லவ ஓவியம்’ மெல்லப் பேசுகிறது.

​வண்ண வரைவாய் விளங்கி இன்று சிறுசிறு பகுதிகளாய்த் தேடிக் காணும் நிலையிலுள்ள ‘நடராஜர்’ ஓவியத்தை அவரது கட்டுரையின் இரண்டாம் பத்தி, ‘சிவபெருமான் ஆடலை சந்தியாபாணி என்பர் வல்லுநர்’ என்று அடையாளப்படுத்துகிறது. ‘வலது காலைத் தரையில் வைத்து இடது காலை மண்டியிட்டு இடது கையைத் தலைக்கு மேல் வைத்து வலது கையை மார்புக்குக் குறுக்கே வீசி ஆடும் சிவன்’ என்று சிவபெருமானின் இந்த ஆடற்கோலத்தை வண்ணிப்பதுடன் ‘இந்த நடராஜரைச் சிற்ப வடிவில் மாமல்லபுரத்திலும் கயிலாசநாதர் கோயிலிலும் காணலாம்’ என்றும் கூறியிருக்கும் தியடோர், ஆடலை அடையாளப்படுத்துவதில் வல்லுநர்களைச் சார்ந்ததால் தவறியிருக்கிறார். வல்லுநர்கள் யார் என்பதை அவர் குறித்திருந்தால், அவ்வல்லுநர்கள் ஏன் அத்தகு முடிவை மேற்கொண்டனர் என்பதை அவர்களிடமே கேட்டு அறிந்திருக்கலாம். தியடோர் எழுதியுள்ளாற் போன்ற காலமைப்புகளை இன்று பனைமலை ஓவியத்தில் காணக்கூடவில்லை என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எஞ்சியிருக்கும் சிதறல்களைக் கூட்டி சிவபெருமானின் அந்த ஆடல் தோற்றத்தை பரதரின் நாட்டியசாத்திரம் பேசும் 108 கரணங்களுள் ஒன்றான குஞ்சிதமாக நாம் அடையாளப்படுத்தியதை நினைத்துப்பார்.

குஞ்சிதகரணம்

​இராஜசிம்மப் பல்லவரின் கைவண்ணமாக அவர் கட்டமைத்த பல கோயில்களில் இக்குஞ்சிதகரணம் பல அளவுகளில், கோயிலின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ளமை நான் விளக்க, நீ வியந்து கேட்டதை மறந்திருக்கமாட்டாய். இராஜசிம்மரின் கோயில்களில் குஞ்சிதம் போலவே சிவபெருமானின் ஊர்த்வதாண்டவமும் இருக்கையில், காலமைப்புத் தெளிவாகத் தெரியாத இறைவனின் இந்த ஆடல் தோற்றத்தை எப்படிக் குஞ்சிதமாகப் பிரித்தறிகிறீர்கள் என்று நீ கேட்டாய்.

​நாம் பார்த்த ஓவியக்காட்சியில் சிவபெருமானின் வலமுன் கை வேழக்கையாக நீண்டிருக்கும் அழகையும் அவரது மார்பின் வலப்பகுதி அமைப்பையும் உனக்கு விளக்கி, இராஜசிம்மர் பதிவு செய்திருக்கும் சிவபெருமானின் ஊர்த்வ, குஞ்சித கரணத் தோற்றங்களில் குஞ்சிதர் மட்டுமே முன்கையை வேழக்கையாக வீசியிருப்பதையும் ஊர்த்வர் அக்கையை அனைத்துச் சிற்பங்களிலும் பதாகத்தில் கொண்டிருப்பதையும் சுட்டி நான் பேசியபோது நீ பூரித்ததும், ஆய்வு எத்தனை நுட்பமாக அமையவேண்டும் என்பதை அன்று புரிந்துகொண்டதாகக் கூறியதும் என் உள்ளம் நிறைத்தது வாருணி.

​இறைவனின் ஆடலைக் காண்பவராய் ஒசிந்து நிற்கும் உமையின் தோற்றத்தில் திரு. தியடோர் தம்மை இழந்தார் போலும். அதனாலோ என்னவோ, ‘பார்வதியின் தலையை மஞ்சள் நிற கிரீடமகுடம் அணிசெய்கிறது’ என்று எழுதியுள்ளார். கிரீடமகுடம் தலையை முழுமையாக மூடுவதால் அதில் முடிக்கற்றைகள் தெரியாது. பல்லவர் கால விஷ்ணு, வைணவி சிற்பங்கள் கிரீடமகுடம் பெற்றுள்ளன. ஆனால், பல்லவர் கால உமைச் சிற்பங்களில் சடைத்திரள்கள் ஆங்காங்கே முடியப்பெற்றுக் கூம்பி உயர்வதையே பார்க்கமுடிகிறது. சிவபெருமான், நான்முகன் சிற்பங்களில் அமையும் சடைமகுடத்தினின்று உமையின் இத்தலையலங்காரம் சற்றே மாறுபட்டுள்ளது.

​சிற்பச் செந்நூலில் வை. கணபதி சிற்பி, சிற்பங்களுக்கு அமையும் தலையலங்காரங்களைக் குறிக்கையில், ‘கேசபந்தம்’ என்ற முடியமைப்பைப் படங்களுடன் விளக்கியிருப்பார். இராஜசிம்மப் பல்லவர் கோயில்களில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான உமைச் சிற்பங்களின் தலையலங்காரம் இக்கேசபந்த அமைப்பையே ஒத்துள்ளமையால் பனைமலை உமையின் முடியமைப்பைச் சடைமகுடமாகக் கொள்வதினும் கேசபந்தமாகக் கொள்வதுவே பொருந்தும். எப்படியிருப்பினும், நீ அதைக் கேசபந்தமாகவோ, சடைமகுடமாகவோ கொள்ளமுடியுமே தவிர கிரீடமகுடமாக அடையாளப்படுத்த முடியாது.

​திரு. தியடோர் தம் கட்டுரையின் இறுதியில், ‘மாமல்லபுரம் தருமராஜரதம், எல்லோரா கைலாசர் குடைவரை, காஞ்சி கயிலாசநாதர் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் ஆகிய எல்லாவற்றிலும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள். விமானங்கள் ஒரே மாதிரி உள்ளன’ என்று எழுதியுள்ளார். உபானத்திலிருந்து தூபி வரையிலான இறையகத்தின் முழுமையைச் சுட்டும் கலைச்சொல் விமானம். (‘The Shrine from upana to stupi – base to final is vimana’ K. R. Srinivasan, Cave Temples of the Pallavas, p. 189.) தியடோர் சுட்டியுள்ள நான்கு கோயில்களும் ஒன்று போல் அமைந்த விமான அமைப்புக் கொண்டவை அன்று. ஒன்றுக்கொன்று மாறுபட்ட விமான அமைப்புக் கொண்ட அவற்றுள், காஞ்சி கயிலாசநாதர் தவிர்த்த பிற மூன்றும் ஒருகல் தளிகள்.

​காஞ்சிபுரம் கயிலாசநாதர், கருவறைச் சுவர்களுக்கிடையில் உள்சுற்றுப் பெற்ற நாற்றளக் கலப்புத் திராவிட விமானம். தமிழ்நாட்டின் முதல் சாந்தார விமானமான அதன் கீழ்த்தளப் பத்திகள் தாய்ச்சுவரினின்று முன்னிழுக்கப்பட்டு ஏழு துணை விமானங்களாகி இறையகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் புதுமைக் கட்டுமானமாக உருவாகி அங்காலயம் எனப் பெயர்பெற்றது.

​பிற மூன்றும் ஒருகல் தளிகள் என்றாலும், ஒவ்வொன்றின் விமானமும் மாறுபட்ட அமைப்பின. மாமல்லபுரம் தருமராஜ ரத விமானம் அதன் மூன்று தளங்களிலும் இறையகம் கொண்ட மாடிக்கோயில். எல்லோரா கயிலாசநாதர் திரு. தியடோர் தம் கட்டுரையில் குறித்துள்ளாற் போல் குடைவரையன்று. அதன் விமானம் கலப்பு முத்தளத் திராவிடமாகச் செதுக்கப்பட்ட ஒருகல் தளி. கழுகுமலை வெட்டுவான் கோயில் நிறைவுறாத ஒருகல் தளி. சிகரம், கிரீவம், இரண்டாம் தளம், கீழ்த்தளாரம் மட்டுமே உருவான இவ்விமானம் இப்போதிருக்கும் நிலையில் இருதளக் கலப்புத் திராவிடமாக அறியப்படும்.

​ஒன்று போல் அமைந்த விமானங்களாகத் தியடோர் சுட்டியுள்ள நான்கில் ஒன்று மாடிக்கோயில். ஒன்று நிறைவுறாத விமானம். காஞ்சி கயிலாசநாதர் ஏழு துணை விமானங்கள் முதன்மை விமானத்துடன் இணையப்பெற்ற பெருங்கற்றளி. எல்லோரா கயிலாசநாதர் இவற்றினின்றும் மாறுபட்ட முத்தள ஒருகல் தளி. இந்நான்கிலும் உள்ள ஒரே ஒற்றுமை இவற்றின் திராவிட சிகர அமைப்புதான். எண்முகம் பெற்ற இச்சிகரமும் நான்கு விமானங்களிலும் மாறுபட்ட அழகூட்டல்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

​கோயிற்கலை சார்ந்த செய்திகளை மக்களுடன் பகிர்ந்துகொள்வது சிறப்பாகும். அதனால், கோயில்களுக்குச் செல்வோர் அவ்வளாகத்தில் எதைப் பார்க்கலாம், அதை எப்படிப் பார்க்கலாம், அதிலிருந்து பெறக்கூடியதென்ன எனப் பல வழிகாட்டல்களைப் பெறமுடியும். அவரவர் பார்வை பொறுத்து பார்ப்பனவற்றிலிருந்து வரலாறும் பெறக்கூடும். அதனால், கோயிற்கலைக் கட்டுரைகளை எழுதும் பெருமக்கள் தாம் எழுதும் செய்திகளில் உரிய தெளிவு பெற்று எழுதுதல் நன்றாகும்.

​தியடோரின் கட்டுரையால் மீண்டும் பனைமலைப் பயணம் அமைந்தது. நாம் அங்கிருந்தபோது அளவுகோல் ஒன்றைக் கண்டறிந்தமை உனக்கு நினைவிருக்குமென நம்புகிறேன். ஓரிரு மாதங்களுக்கு முன் நானும் பேராசிரியர் நளினியும் அல்லூர் நக்கன் கோயிலில் மீளாய்வு மேற்கொண்டோம். கோயில் பெருமண்டப மேற்குச்சுவரில் அடர்த்தியான சுண்ணப்பூச்சின் பின் மறைந்திருந்த அருமையான தமிழ்க் கல்வெட்டை ஆய்வின்போது நளினி கண்டறிந்தார். எத்தனை முறை பார்த்த கோயில் அது. நீயும் நானும்கூட ஓரிருமுறை அக்கோயிலில் ஆய்வு செய்துள்ளோம். என்றாலும், நளினியின் கண்களில் காட்சியாகவேண்டும் என்பதற்காகவே அது காத்திருந்தது போலும். ‘ஒற்றிமதுராந்தகன் என்பது இம்மண்டபம். எடுப்பிச்சான் முனைச்சுடர் விரையாச்சிலை’ என்ற அக்கல்வெட்டால், கொடும்பாளூர் வேளிர் அரசரான ஒற்றிமதுராந்தகன் பெயரால் அப்பெருமண்டபம் வணிகர் முனைச்சுடர் விரையாச்சிலையால் எடுப்பிக்கப்பட்ட வரலாறு வெளிச்சமானது.

​அப்பெருமண்டபத்தின் மேற்குச்சுவரில் பதிவாகி, பின்னாளில் நேர்ந்த இடைநாழிகை இணைப்பால் இரு பிரிவுகளாகி, வெளிப்பிரிவு மட்டுமே இந்தியக் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்ட நிலையில், அதன் உள்பிரிவையும் அன்றைய ஆய்வின்போது நளினியின் கண்கள் தேடிப்பிடித்தன. கல்வெட்டுத் தொகுதியில் எட்டு வரிகளுடன் மிகவும் சிதைந்துள்ளது என்ற அடிக்குறிப்புடன் பதிவாகியுள்ள கண்டராதித்த சோழரின் அந்தக் கல்வெட்டை முழுமையாகப் படித்தறிந்தபோது, நக்கன் கோயிலில் முனைச்சுடர் விரையாச்சிலை உமையன்னையின் உலாத்திருமேனியை அமைத்து அதன் வழிபாட்டிற்கும் படையலுக்கும் நிலமளிக்க, அரசர் ஒற்றிமதுராந்தகர் ஆணைவழி ஊரார் அந்நிலத்தை அளந்து கொடையைப் பதிவுசெய்த வரலாறு கிடைத்தது.

​வாருணி ஒரு பார்வையில் கோயில்கள் முழு வரலாற்றையும் தருவதில்லை. தேடத்தேடத்தான் அந்தத் தேடலின் தகைமை தெரிந்துதான் கதவுகள் திறக்கின்றன. காட்சிகள் தெரிகின்றன. அல்லூர் ஓர் எடுத்துக்காட்டு. பார்க்கச் சென்றபோது பார்த்த பார்வைகள் வேறு, நூலாக்கம் கருதி எதுவும் விடுபடலாகாது என்ற நோக்கில் தேடல் விரிந்தபோது திரைகள் ஒவ்வொன்றாய் விலகி வரலாற்றின் ஒளி வாழ்க்கையை நிறைத்தது. ஆய்வு வெறும் செயற்பாடன்று வாருணி. அது உள்ளத்தை நிறைக்கும் உழைப்பு.

​அன்புடன்,

​இரா. கலைக்கோவன்.

கோலாட்டம்

அன்புள்ள வாருணி, நீயும் நானுமாய்க் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள
தாராசுரத்திற்குச் சென்ற பயணங்கள் உனக்கு நினைவிருக்கலாம். அங்கு
இரண்டாம் ராஜராஜ சோழரால் எடுப்பிக்கப்பெற்ற ராஜராஜ ஈசுவரம்
சிற்பக்களஞ்சியமாக விளங்குவதைப் போகும் வழியெல்லாம் பேசிச் செல்வோம்.
பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் விளங்கிய பண்பாட்டுக்
கூறுகளின் படப்பிடிப்புகளாகப் பல சிற்பங்களை அங்குக் காணமுடிவதை
உன்னிடம் பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் சில
சிற்பங்களைப் பார்ப்பதும் அவை பற்றிக் கலந்துரையாடுவதுமாகவே நம்
பயணங்கள் நிறைந்திருக்கின்றன. நீ பலமுறை பார்த்துப் பல கேள்விகளுடன்
என்னை நோக்கிய அந்தச் சிறப்பான சிற்பம் இன்றும் என் கண்முன் நிற்கிறது.
அந்தச் சிற்பத்தையும் அது தொடர்பான உன் கேள்விகளுக்கான விடைகளையும்
இம் மடல் வழிப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

மூன்று பெண்கள் இணைந்து நிகழ்த்துமாறு அமைந்த அந்தக் கோலாட்டச்
சிற்பம் தனித்துக் குறிப்பிடத்தக்கதுதான். தமிழ்நாட்டிலுள்ள பழங்கோயில்களில்
12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டமைந்த சிற்பக் காட்சிகளில் கோலாட்டத்தைக்
காணக்கூடவில்லை. ஆடற்சிற்பங்களின் காட்சியகமாக விளங்கும் துக்காச்சி
விக்கிரமசோழீசுவரத்தில்கூடக் கோலட்டச் சிற்பத்தை நாம் பார்த்ததில்லை. நாம்
அறிந்தவரையில், தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் முதல் கோலாட்டச் சிற்பமாகத்
தாராசுரம் காட்சியே முன் நிற்கிறது.

தாராசுரத்துக் கோலாட்டம்

தாராசுரம்

துணைத்தளக் கண்டசிற்பமாக அமைந்துள்ள இக்கோலாட்டக் காட்சியில்
மூன்று பெண்கள் இரண்டு கைகளிலும் கோல் கொண்டு ஆடுவதைக்
காணமுடிகிறது. பெருங்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், தோள், கை
வளைகள், சுவர்ணவைகாக்ஷம், இடைவிரிப்புடனான சிற்றாடை, இடைக்கட்டு
என ஒப்பனை நிறைத்து, கொண்டையை மீறிய சடைக்கற்றைகள் தோள்களில்
நெகிழ ஆடும் இம்மூவரில் முதலிருவர் நேர்ப்பார்வையில் ஆட, மூன்றாமவர்
ஒருக்கணிப்பிலும் சுழற்சியிலுமாய்க் கோலடிக்கிறார்.

இலேசான வலஒருக்கணிப்பில் இடப்பாதத்தை உத்கட்டிதத்திலும்
வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி மண்டலநிலையில் காட்சிதரும்
வலப்பெண்ணின் வலக்கை, கோலுடன் தலைக்குமேல் உயர்ந்துள்ளது. இடக்கைக்
கோல் தொடையருகே நீண்டுள்ளது. அவரைப் போலவே லேசான
வலஒருக்கணிப்பிலுள்ள நடுப்பெண் இருபாதங்களையும் உத்கட்டிதமாக்கி
வலக்கையை உயர்த்தி அதிலுள்ள கோலால் முதல் பெண்ணின் வலக்கைக்
கோலைத் தட்டுகிறார். இடமாய் ஒருக்கணித்து இளநடைபயில்வது போல்
திரும்பியுள்ள மூன்றாம் பெண்ணின் வலக்கைக் கோல் நடுமங்கையின் இடக்கைக்
கோலில் மோத, உடலின் சுழற்சியில் ஆட்ட விரைவைக் காட்டும் அவரது
இடக்கைக் கோல் இடுப்பருகே நீண்டுள்ளது. மூவரில் நடுப்பெண்ணின் இரு கைக்கோல்களும் பிற இருவர் கோல்களுடன் இணைந்து ஒலியெழுப்ப முதல்வர்,
மூன்றாமவர் கைக் கோல்களில் ஓரிணை அடுத்த சுழலுக்காய்க் காத்துள்ளன.

கோலாட்டக் கோயில்கள்

முதல் கோலாட்டச் சிற்பமாகத் தாராசுரக் காட்சி கண்முன் கதை
விரித்தபோதும் தமிழ்நாட்டில் கோலாட்டத்தைப் பரவலாக்கிய பெருமை
விஜயநகர அரசர்களையே சாரும் வாருணி. ஹம்பிக் கோயில்களில்
காணப்படுமாறு போலவே தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றிலும்
கோலாட்டத்தில் தங்களுக்குள்ள ஆளுமையை விஜயநகரச் சிற்பிகள்
பதிவுசெய்துள்ளமையை உன்னிடம் கூறியிருக்கிறேன். ஊர்வலக் காட்சிகள்
போலவும் தனித்த கோலாட்ட நிகழ்வுகளாகவும் அவர்தம் செதுக்கல்களைச்
சிராப்பள்ளி திருநெடுங்களநாதர், திருக்கோடிக்கா கோலக்கநாதர், காஞ்சிபுரம்
கச்சபேசுவரர் – ஏகாம்பரேசுவரர் – வரதராஜப்பெருமாள், வேலூர்
ஜலகண்டேசுவரர், வல்லம் விசுவநாதேசுவரர், மேலைச்சேரி திரௌபதி அம்மன்
கோயில்களில் நான் பார்த்திருக்கிறேன். காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திகுன்றம்
சமணக்கோயிலிலும் உத்தரகோசமங்கை ஆடவல்லான் மண்டபத்திலும்
ஓவியக்காட்சியாகக் கோலாட்டம் காட்டப்பட்டுள்ளது.

கோலாட்டக் களங்கள்

கோயில் கட்டுமானத்தின் பல பகுதிகளில் இக்கோலாட்டக் காட்சிகளைக்
காணமுடிந்தாலும் வளாகச் சுற்றின் துணைத்தளக் கண்டத்திலேயே அவை
பரவலாக இடம்பெற்றுள்ளன. வேலூர்க் கோயிலில் தூண் கட்டிலுள்ள பட்டையில்
சிற்றுருவச் சிற்பத் தொகுதியாகக் காட்டப்பட்டுள்ள கோலாட்டம்,
மேலைச்சேரியில் உத்திரத்தில் காணப்படுகிறது. திருக்கோடிக்கா கோலாட்டம்
கோபுர உட்சுவரிலமைய, வல்லத்துக் கோலாட்டம் அங்குள்ள நீர்த்தொட்டிகளின்
பக்கப்பகுதிகளைச் சிறப்பிக்கிறது. ஓவியக் கோலாட்டமோ கூரைக்காட்சியாய்
மலர்ந்துள்ளது.

ஊர்வலக் கோலாட்டம்

திருநெடுங்களநாதர் கோலாட்டம்

திருநெடுங்களநாதர் ஊர்வலம்

நெடுங்களநாதர் வளாகத்துள்ள அம்மன்கோயில் பெருமண்டபத்
தென்முகத்தில் வெளித்தெரியும் துணைத்தளப் பகுதியில் மண்டப வாயிலின்
வலப்புறம் கோலாட்டமும் இடப்புறம் ஊர்வலமும் சிற்பத்தொடராகக்
காட்சியாகின்றன. ஊர்வலத்தில், முன்னால் ஒருவர் ஓங்கிய வாளுடன் நன்கு
அலங்கரித்த குதிரையை நடத்திச்செல்ல அதன் மேல் இவர்ந்துள்ளவர்
இடக்கையில் கடிவாளத்தைப் பிடித்தவாறு வலக்கையை நீட்டியுள்ளார்.
குதிரையின் பின்னால் குடை, கவரி, குடுவை, சந்தனக்கிண்ணம் ஆகியவற்றுடன்
பணியாட்கள் ஐவரும் வாள், கேடயம் கொண்டவர்களாய் வீரர்கள் மூவரும்
பின்தொடர்கின்றனர்.

இந்த ஊர்வலத்திற்கான முன்னோட்ட ஆடலாய் வாயிலின் வலப்புறம்
பத்துப் பெண்களின் கோலாட்டம். அனைவருமே அழகிய கொண்டையும்
பனையோலைக் குண்டலங்களும் கழுத்தாரமும் தோள், கை வளைகளும் நடுப்பட்டை கொண்ட இடையாடையும் பெற்றுள்ளனர். இடையாடையின் மேல்
அழகிய விரிப்பாய் அனைவருக்கும் தொடையளவிலான சுருக்கிக்கட்டிய
மடிப்பாடை. சிலர் நேர்ப்பார்வையிலும் சிலர் லேசான ஒருக்கணிப்பிலும்
உள்ளனர். ஆட்ட விரைவுக்கேற்பச் சிலர் தலையை வலம் அல்லது இடம் சாய்த்தும்
குனிந்தும் சற்றே நிமிர்ந்தும் அழகுடன் திகழ்கின்றனர். ஒரு கையின் கோல்,
உடலின் முன்புறம் நீண்டு வல அல்லது இட ஆடலரின் கோலுடன் மோத,
மற்றொரு கை தலையின் பின்புறம் கோலை நீட்டி, அடுத்துள்ள ஆடலரின் அதே
அமைப்பிலான கோலைத் தட்டுமாறு ஆடும் இவ்வழகியரின் பாதங்கள்
ஆட்டத்தின் போக்கிற்கேற்பப் பார்சுவம், சூசி, அக்ரதலசஞ்சாரம் எனப் பலவாறு
அமைய, சிலர் ஊர்த்வஜாநுவாய்க் காலை உயர்த்தியும் ஆடுகின்றனர் வாருணி.

திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள்

தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண், திருக்கோடிக்கா

திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள் ஒரு பாதத்தைப் பார்சுவமாக்கி, ஒரு
காலை ஊர்த்வஜாநுவாக உயர்த்திக் கோலாட்டம் அடிக்கின்றனர்.
பூட்டுக்குண்டலம், கழுத்தணிகள், தோள், கை வளைகள், நெற்றிச்சுட்டி,
நடுவிரிப்புடனான இடைப்பட்டாடை, சலங்கையுடன் இரு கைக் கோல்களும்
அடுத்துள்ளவர் கோல்களுடன் மோத, விரைந்தும் சுழன்றும் ஆடும்
அப்பெண்களின் திருமுகங்கள் பல கோணங்களில் திரும்ப, இதழ்களில் எழிலார்ந்த
புன்னகை. ஊர்வலத்தில் வாளும் கேடயமும் ஏந்திய வீரர்கள் பலராகவும் ஈட்டி,
குத்துவாள், கொடி, தண்டு, பானை கொண்டவர்கள் சிலராகவும் உள்ளனர். ஒரு
சிற்பம் தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண்ணைப் படம்பிடிக்க,
மற்றொன்றில் கோலாட்டக் காரிகைக்கு மத்தளத் தாளம் தரும் கலைஞர்.

வல்லத்துக் கோலாட்டம்

திருவல்லம் தொட்டி

வல்லம் கோலாட்டம் நீ அறிவாய். 1990லேயே அது குறித்த என் தினமணி
கதிர் கட்டுரையை உனக்குத் தந்திருக்கிறேன். அக்கோயிலிலுள்ள கலையெழில்
தொட்டிகள் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கோலாட்டம் மங்கல
நிகழ்வின்போது நிகழ்த்தப்பட்டதாகும். கருவுற்ற பெண் ஒருவர் அமர்ந்திருக்க,
அவருக்குப் பூச்சூட்டி ஒப்பனை செய்கிறார் தோழி. முன்னால் கோலாட்ட நிகழ்வு.
வளைந்தும் நிமிர்ந்தும் சாய்ந்தும் சரிந்தும் கோலாட்டமிடும் அழகியர்தம்
இடையாடைகள் அவர்தம் ஆட்டத்திற்கேற்ப விரிந்தும் சுருங்கியும் மடிப்புகளுடன்
விளங்க, இவ்வாட்டத்திற்கு மத்தளம் வழித் தாளம் தருகிறார் ஆடவக்கலைஞர்.
கோயில் மடைப்பள்ளியில் உள்ள மற்றொரு தொட்டியிலும் அதன் கீழ்ப்புறத்தே
கோலாட்டக் காட்சியும் அன்னங்களும் காட்டப்பட்டுள்ளதைப் பார்த்தது உனக்கு
நினைவிருக்கலாம்.

பிற கோலாட்டங்கள்

கச்சபேசுவரர் கோலாட்டம்

ஏகாம்பரநாதர் கோயில் சுற்றுமாளிகைத் துணைத்தளக் கோலாட்டப்
பெண்கள் அனைவரும் ஒருபாதத்தைப் பார்சுவத்திலிருத்தி, மற்றொரு காலின்
முழங்காலை இடுப்பளவு உயர்த்தியுள்ளனர். அனைவருமே பனையோலைக்
குண்டலங்கள், தோள், கை வளைகள், பட்டாடை, இடைவிரிப்புக்
கொண்டவர்களாய் ஒருவர் வலமும் ஒருவர் இடமுமாய் ஒருக்கணித்தாடுகின்றனர்.
கோலாட்டங்களின் தாளத்திற்கு மத்தள இசை துணைநிற்கிறது. வேலூர்க் கோயில் தூண் கட்டுப் பெண்கள் ஊர்த்வஜாநுவின் பல நிலைகளில் ஒரு கால் உயரக்
கோலாட்டமடிக்கின்றனர். அவர்தம் கைக்குச்சிகளின் நீளம் சற்றே
குறைந்துள்ளது. இக்கோயில் துணைத்தளக் கண்டக் கோலாட்டக் குழுவினர்
கோடிக்காக் குழுவினரை ஒத்துள்ளனர். இங்கும் மத்தள வாசிப்பைக்
காணமுடிகிறது. கச்சபேசுவரர், வரதராஜர், மேலைச்சேரி கோலாட்டக் காட்சிகளும்
இவற்றைப் பின்பற்றியுள்ளன.

ஓவியக் கோலாட்டம்

திருப்பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம்

பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம் நாம் பார்த்ததுதான். பிற இடக்
கோலாட்டக் காட்சிகளிலிருந்து இது மாறுபட்டுள்ளது. இப்பெண்கள் முந்தானை
விரிந்த புடவையும் மேற்சட்டையும் அணிந்தவர்களாய்க் கோலாட்டமாடுகின்றனர்.
அவர்தம் நீள்சடை ஆட்டவளைவுக்கேற்பச் சுழன்றும் நெகிழ்ந்தும் காட்சிதர,
நிமிர்ந்த தலையினராய் ஒருவரையொருவர் பார்த்தவாறு அவர்கள் கோலடிக்கும்
அழகு சிறப்பானது. இதே அமைப்பிலான கோலாட்டம் உத்தரகோசமங்கையிலும்
ஓவியமாக்கப்பட்டுள்ளது. பருத்திக்குன்றம் போலல்லாது இங்கு புடவையின்
தலைப்பு ஆடுவோரின் மார்புப்பகுதியை மறைத்துள்ளது.

மாமல்லபுரம் செங்கல்பட்டுச் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் நாம்
பார்த்த காட்சி உனக்கு நினைவிருக்கலாம். இருபதுக்கும் மேற்பட்ட ஆடவர்கள்
கோலாட்டமாடிக் கொண்டே ஊர்வலமாகச் சாலையில் சென்றனர். அவர்கள் சற்று
ஓய்வெடுத்தபோது நாம் அவர்களை நெருங்கி உரையாடினோம்.
கோலாட்டமாடிக்கொண்டே திருப்பதிக்கு நடைப்பயணம் செல்வதாக
அப்பெருமக்கள் தெரிவித்தது உனக்கு நினைவிருக்கலாம்.

பிற்சோழர் காலத்தே ஒற்றைக் காட்சியாய்க் கண்காட்டும் கோலாட்டம்
விஜயநகர வேந்தர்களின் தழுவல் பெற்ற தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில்
தொடராகவும் தனித்தும் காட்டப்பட்டிருப்பதுடன் ஊர்வலம், தேரோட்டம்
ஆகியவற்றின் சிறப்பு நிகழ்வாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளமை இப்போது
உனக்குத் தெளிவாகியிருக்கும். இன்றைக்குத் தமிழகத்தில் ஆண், பெண்
இருவருக்குமான பொதுவான ஆடல்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோலாட்டம்
பிற்சோழர், விஜயநகரத்தார் காலத்தில் பெண்களால் மட்டுமே இம்மண்ணில்
நிகழ்த்தப்பட்டது போல் இதுவரை கிடைத்துள்ள சிற்பக்காட்சிகள்
கண்காட்டுகின்றன. உன்னுடைய ஆய்வுப் பயணங்களில் வேறெங்கேனும்
கோலாட்டக் காட்சிகள் கண்டிருப்பின் எனக்கு எழுது. கோலாட்டம் ஆய்வு
நிறைவுற அது உதவும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்