மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 5. பெரிய கூத்தும் பேயம்மையும்

அன்புள்ள வாருணி, ஆடற்போட்டியில் சிவபெருமான் காளியை வென்றதும் அதன் வழி ஆடல்நாயகரானதும் பத்திமைக் காலப் பதிகங்களில் சம்பந்தராலும் அப்பர் பெருமானாலும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. காளியை வெல்ல இறைவன் ஆடிய ஊர்த்வதாண்டவத்தைப் பெரிய கூத்து என்பார் சம்பந்தர். சொக்கம், நிருத்தம் என இறைவன் ஆடிய அனைத்து ஆடல்களிலும் இணைய ஆடி சமநிலையிலிருந்த காளியை, காலை உயர்த்திய ஆடலால் தோல்வியுறச் செய்தவர் சிவபெருமான். ‘சொக்கத்தே நிருத்தத்தே தொடர்ந்த மங்கை’ என்று இச்செய்தியை நிறுவுகிறது சம்பந்தரின் பதிக அடி. காளியைக் குணஞ்செய்த கூத்தாகவும் இந்த ஊர்த்வதாண்டவம் சம்பந்தரால் போற்றப்படுகிறது.

பல்லவர் கற்றளிகளில் பெருஞ்சிற்பமாகக் காட்டப்பட்டிருக்கும் சிவபெருமானின் ஊர்த்வதாண்டவக் கோலங்களின் அருகே காளியின் ஆடலும் சில தளிகளில் உள்ளமை பதிகங்களைப் பல்லவர்கள் பழுதறப் பின்பற்றியமை உணர்த்தும். பல்லவர்களும் பிற்சோழர்களும் பெரிதும் போற்றிய இப்பெரிய கூத்தை, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தூண் சிற்பங்களாக நந்திப்பந்தலிலும் ஆயிரங்கால், கம்பத்தடி மண்டபங்களிலும் இடம்பெறச் செய்தவர்கள் நாயக்கர்கள்.

கம்பத்தடி அம்மை

இம்மூன்று பதிவுகளுள் முதலிரண்டும் அளவில் சிறியன. கம்பத்தடிச் சிற்பம் பேரளவினது. அருகில் அதே அளவில் காளியின் ஆடலையும் உடன் கொண்டது. பல்லவ, பிற்சோழர் கால ஊர்த்வர்களுக்கு இல்லாத பெருமையாக, இங்கே அப்பன் ஆடல் காண, அவர் தாயும் உடனிருப்பதுதான். ஆம் வாருணி, கயிலை வந்த காரைக்காலம்மையை, ‘இவர் யார்’ என்று உமை கேட்க, ‘நம் அம்மை’ என்று சிவபெருமானே கூறியதாகச் சேக்கிழார் பதிவு செய்துள்ளார்.

நாயக்கர் கைவண்ணங்களில் பல தளிகளில் பேரளவுச் சிற்பங்களாய் ஊர்த்வதாண்டவர்களைப் பார்க்க முடிந்தாலும் அவற்றுள் சில காரைக்காலம்மையை உடன் கொண்டிருந்தாலும் மீனாட்சி ஊர்த்வரும் உடனிருக்கும் அம்மையும் தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் சிற்பப் புதையல்கள் எனலாம்.

இடப்புறம் தலைவைத்துப் படுத்திருக்கும் முயலகன் மீது இடப்பாதம் இருத்தி, வலக்காலை மார்புக்கு முன்னாக மேலுயர்த்தியுள்ளார் சிவபெருமான். அவரது சடைமகுட முகப்பில் மண்டையோட்டிற்கு மாற்றாக பைரவர் தலை. பத்துக் கைகளுடன் நிகழும் இந்த ஆடலில் மேலிருந்து கீழாக அவரது இடக்கைகள் தீயகல், மான், வில், கேடயம், வஜ்ரமணி கொள்ள, வலக்கைகளில் உடுக்கை, மழு, முத்தலைஈட்டி, குத்துவாள், அம்பு.

ஒரு பெருந்தூணின் முன்புறத்தே உருவாகியுள்ள இப்பெருஞ்சிற்பத்தின் தோற்றமும் எழுச்சியும் சொற்களில் வண்ணிக்க இயலாதவை. சிவபெருமானின் இடப்புறம் குடமுழவிசைப்பவராய் நந்திகேசுவரர். வலப்புறம் காரைக்காலம்மை. ஆனந்ததாண்டவருடன் அமர்நிலையில் காட்சிதரும் அம்மை இங்கே இறைவனின் ஊர்த்வத்திற்கேற்ப அதே எழுச்சியைத் தாமும் கொண்டவராய் எழுந்து நின்று குனித்தாடுகிறார். தாம் தரும் தாள இசைக்கேற்ற வளைந்த கோலமென்றாலும் முகம் பார்வையாளருக்காய்த் திரும்பியுள்ளது.

ஆயிரக்கால் ஊர்த்வர்

ஆயிரக்கால் மண்டபத்திலும் நந்தி மண்டபத்திலும் உள்ள ஊர்த்வதாண்டவக் கோலங்களும் தூணோடு ஒட்டிப் பிறந்தவையே. ஆனால், அளவில் சிறியவை. இரண்டனுள் ஆயிரக்கால் சிற்பம் சற்றே பெரியது. இங்கும் இறைவனின் இடத்திருவடிக் கீழ் முயலகன். என்றாலும், அவன் படுத்திருக்கும் முறை மாறுபட்டுள்ளது. இறைவன் வலக்கால் மேலுயர நெடுஞ்சடை மகுடராய் 12 கைகளுடன் ஆடுகிறார். அவரது வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கையில் தீயகல். பின் கைகளுள் மேலிருப்பன ரேசித வீச்சில். பிற கைகளில் மணி, அம்பு, வில் உள்ளிட்ட பல பொருள்கள்.

இரு கைகளையும் ரேசிதமாக்கி ஊர்த்வம் நிகழ்த்தும் தமிழ்நாட்டின் ஒரே தாண்டவர் என்ற பெருமை ஆயிரக்கால் மண்டபத்தாருக்குக் கிடைத்துள்ளது. நாட்டிய சாத்திரம் பேசும் எண்ணற்ற அழகுக் கைகளுள் ஒன்றுதான் இந்த ரேசிதக் கை. நாயக்கர் காலத்திலும் நாட்டியசாத்திரம் வழக்கிலிருந்ததை இந்த ஊர்த்வக் கைகள் நன்கு உணர்த்துகின்றன.

இத்தொகுதியில் காரைக்காலம்மை கால்களை முழங்காலளவில் மடக்கி அவற்றையே இருக்கையாக்கி அமர்ந்துள்ளார். இந்த வியத்தகு அமர்வு அவர் இடம்பெற்றுள்ள ஆனந்ததாண்டவச் சிற்பத்திலும் உள்ளது. முகம் பார்வையாளருக்காய்த் திரும்பியிருந்தாலும் அம்மையின் கைத்தாளங்கள் தாளம் தருவதில் தவறவில்லை. இத்தொகுதியின் மற்றொரு சிறப்பாய் ஊர்த்வரின் இருபுறத்தும் வணங்கிய நிலையிலுள்ள முனிவர்களைச் சுட்டலாம்.

நந்திப்பந்தல் ஊர்த்வர்

நந்திப்பந்தல் ஊர்த்வரும் ஆயிரக்கால் ஊர்த்வர் போலவே பல கையினர். இத்தொகுதியின் தனித்துவமாக இறைவனின் இடப்பாதம் தளத்தில் இருப்பதைச் சுட்டலாம். ஆம், வாருணி, இங்கு முயலகன் இல்லை. இது போல் முயலகனற்ற இறையாடல் காட்சிகள் ஆங்காங்கே காணக் கிடைப்பினும் மீனாட்சிக் கோயிலில் இது ஒன்றே அத்தகு அமைப்பிலுள்ளது. இங்கு அம்மை, கம்பத்தடி மண்டபக் கோலத்தில் குனித்தாடிக் கண்களை மலர்விக்கிறார். கைகளில் செண்டு தாளங்கள்.

புதுமண்டப ஊர்த்வர்

மதுரையின் புதுமண்டபத்திலும் பேரளவிலான ஊர்த்வதாண்டவர் அதே அளவிலான காளியுடன் கண்களுக்கு விருந்தாகிறார். இங்கு இறைவனுக்கு 10 கைகள்தான். வலக்கைகளில் ஒன்று காக்கும் குறிப்பிலிருக்க, பிற கைகளில் முத்தலைஈட்டி, குத்துவாள், மழு, உடுக்கை. இடக்கைகளில் முன் கை வேழக்கையாய் வலப்புறம் வீசப்பட்டுள்ளது. மற்றொரு இடக்கையில் நந்திக் கொடித்தண்டு. ஆடும் இறைவனின் கைகளில் மிக அரிதாகவே இடம்பெறும் இந்நந்திக் கொடித்தண்டு பரங்குன்றம் ஆடவல்லான் கையில் முற்பாண்டியர் படைப்பாய் பளிச்சிடுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம் வாருணி.

இறைவன் இடுப்பின் இருபுறத்துமுள்ள மகரங்கள் அழகான திருவாசியை இறைவனுக்குப் பின்னணியாக்க, முயலகனின் கைப்பாம்பு நெடுக ஊர்ந்து இடப்புறம் நெளிந்து இறைவனின் இடக்காலருகே குடமுழவு வாசிக்கும் வாணனின் முழவுக்குத் தளமாகித் தலைவிரித்துள்ளது. இது மீனாட்சிக் கோயில் ஆனந்ததாண்டவப் பதிவினும் மாறுபட்ட விரிவாக்கமாகும்.

இத்தொகுதியிலும் அம்மை கம்பத்தடிக் கோலத்திலேயே காட்சியாகிறார். அதே எழுச்சி, அதே குனிப்பு, அதே பெருமிதம். கைகள் சிதைக்கப்பட்ட நிலையிலும் அம்மையின் பேரன்பை உடல்மொழியால் வெளிப்படுத்தும் இச்சிற்பம் நாயக்க முத்திரைகளுள் ஒன்றெனலாம்.

வாருணி, நாயக்கர் காலப் படைப்பாற்றல் யார் காலத்திற்கும் குறைந்ததன்று. கதைகள் பெருகியதால் காட்சிகள் விரிந்து படைப்புகளில் இறுக்கம், நெருக்கம் இருந்தாலும் காதலோடு காண்பாருக்கு அவை தரவல்ல சுகங்கள் பார்த்தவரே அறிதல் கூடும். அடுத்தமுறை மதுரை சென்றால் இந்தப் பெருங்கூத்துப் படைப்புகளை சம்பந்தர், நாவுக்கரசர், காரைக்காலம்மையின் பதிகப் பின்புலங்களோடு பார்த்துவிட்டு வா. இலக்கியம் இல்லாமல் கலையா? கலை இல்லாமல் வரலாறா? வரலாறு இல்லாமல் வாழ்க்கையா?

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 1. புவனேசுவர விளக்கு

அன்புள்ள வாருணி, நலந்தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னோடு பேச வாய்த்துள்ளது. எழுத்துப் பேச்சாகுமா என்று நீ கேட்கலாம். உன்னோடு நிகழும் எதுவும் எனக்கு உரையாடல்தான். நண்பர் ஒருவர் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பற்றி நூல் உருவாக்குவதாகவும் அதில் என் பணியாய்ச் சில கட்டுரைகள் அமையவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் தந்தை மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையிலும் அம்மா பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையிலும் பணியாற்றிய காலத்து ஏறத்தாழ ஐந்தாண்டுகள் என் பள்ளிப் பருவ வாழ்க்கை மதுரையில்தான்.

மீனாட்சிக் கோயில் திருவள்ளுவர் மன்றத்தில் அப்பாவை அடிக்கடிப் பேச அழைப்பார்கள். அருமையான மலை வாழைப்பழம் உண்ணக் கிடைக்கும் என்பதால் நான் தவறாது உடன் செல்வேன். அந்த வயதில் கோயில் புரிந்ததில்லை என்றாலும், வளாகத்தில் சுற்றாத இடமில்லை. பொற்றாமரைக் குளமும் புதுமண்டபமும் இசைத்தூண்கள் உள்ள சுற்றுவெளியும் என்னால் மறக்கவே முடியாத விளையாட்டுக் களங்கள்.

1959இல் அப்பா சென்னைப் பல்கலைக்கு வந்தார். மதுரைத் தொடர்பு அன்றோடு முடிந்து சென்னை வாசியானேன். மருத்துவம் முடிக்கும்வரை சிங்காரச் சென்னைதான் என்னை வடிவமைத்தது. காதலும் திருமணமும் கண்மருத்துவப் பணியும் என்னைத் திருச்சிராப்பள்ளிக்கு நகர்த்தின. 1975இல் இருந்து இந்தக் காவிரி மண்தான் எனக்குள் கலை வளர்த்து வருகிறது. உறையூர்ப் பஞ்சவர்ணசாமி கோயிலில் நான் பார்த்து வியந்த சைக்கிள் சிற்பத்தின் வடிவில் வந்த வரலாறு என் பயணம் மாற்றிப் பாதையைத் திருப்பியது. கோயில்களோடு கையிணைத்த பிறகுதான் எது வரலாறு என்பதே எனக்குத் தெளிவானது.

வாருணி, எதையோ சொல்லத் தொடங்கி எங்கோ போய்விட்டேன். நண்பரின் மதுரைக் கோயில் நூலுக்கு எழுத ஒப்புக் கொண்டதும், அக்கோயிலில் ஒலி, ஒளிக் காட்சி அமைக்கக் கருதிய அரசின் வேண்டுகோளேற்று நானும் பேராசிரியர் மு. நளினியும் அங்குத் தொடராய்வுகள் மேற்கொண்டமை நினைவுக்கு வந்தது. என் எண்ணவோட்டம் அறிந்தவராய் நளினி கணினித் தொகுப்புகளைக் கண்முன் நிறுத்தினார். ஒவ்வொரு காட்சியும் என்னை எழுதத் தூண்டின.

மதுரையைப் பற்றி எவ்வளவோ கட்டுரைகளும் நூல்களும் வந்திருந்தபோதும் பார்க்காமல் விட்டதும் சொல்லாமல் போனதும் கோயில் முழுவதுமாய் நிறைந்திருப்பதை உணர்ந்தேன். எழுத நினைத்ததுமே நினைவில் நிறைந்தவர் கண்ணன் விக்கிரமன்தான். அவரது ஆசிரியத்தில் வெளிவரும் இலக்கியப் பீடத்தில் ஒரு தொடராக எழுத அனுமதி கேட்டேன். ‘உடனே தொடங்குங்கள்’ என்று உள்ளம் பூரித்தார் கண்ணன். தந்தையைப் போலவே துடிப்பான செயற்பாடுகள்.

வாருணி, ஒரு கோயிலின் சிற்பங்கள் குறித்து ஓர் இதழில் தொடராக எழுதப்போவது இதுவே முதல் முறை. என் பார்வைகளின் விளைவான படப்பிடிப்புகளை உன்னோடு பகிர்ந்து கொள்வது எப்போதுமே எனக்குப் பிடித்தமானது. உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்வுகளை, அவை வரலாறு தொட்டே வளர்ந்தபோதும் நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்திக் களிப்பது சுகந்தானே.

சம்பந்தரால், ‘கூடல் ஆலவாய்’ எனப் போற்றப்படும் இக்கோயில் வளாகத்திலுள்ள மண்டபங்கள் பலவாகும். அவற்றுள் மூன்று மண்டபங்கள் அவற்றின் வாயிலைத் தழுவியுள்ள விளக்கு மாலைகளால் சிறப்புப் பெறுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகளில் தீபமாலைகளாகச் சுட்டப் பெறும் இந்த அகல் அடுக்கிய அழகுத் தோரணங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கின்றன.

மீனாட்சிக் கோயிலின் சிற்பக்களஞ்சியமாக விளங்கும் சிறந்த மண்டபங்களில் கம்பத்தடி மண்டபமும் ஒன்று. மையப் பகுதிக் கூட்டுத்தூண்கள் ஒரு சதுரமாக வடிவமைக்கும் காட்சிக் கூடத்தின் முன் இந்த அகல்தோரணம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கீர்த்திமுகத் தலைப்புடனான மகர திருவாசியில் மூன்றடுக்கு அகல்கள். அவற்றைத் தழுவி மேலடுக்காய் இலை போல் மதலைகள். தோரணத் தலைப்பில் நெற்றிச்சுட்டிப் போலத் தொங்கல்.

இந்த மகரத்திருவாசியை இருபுறத்தும் தாங்கும் தூண்களிலும் அகல் வரிசைகள். தாங்கலின் மேற்பகுதியில் விரிந்த ஊமத்தம்பூவாய் அழகிய நாணுதல்கள். அவற்றின் கீழே தாவும் யாளிகள். தாங்கலின் கீழ்ப்பகுதியிலோ, பக்கத்திற்கு ஒருவராகக் கருவிகளுடன் காவலர். இந்தக் கம்பத்தடித் தோரணத்தின் வலப்புறம் மலர்ப் பதக்கங்களுடன் பொதுக்காலம் 1654 ஜெய ஆண்டு மாசி மாதம் 12ஆம் நாள் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை நம் பேராசிரியர் நளினிதான் கண்டறிந்து படித்தார்.

விசுவநாத நாயக்கர் மரபினரான திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகக் குப்பையாண்டிச் செட்டியார் எனும் பெரியவர், ‘புவனேசுவர விளக்கு’ என்ற பெயருடன் இந்த மகர தோரண விளக்கைச் செய்தளித்திருப்பது கல்வெட்டால் தெரிய வந்தது. இந்தத் தோரணம் கோயிலில் அமையத் துணை இருந்தவர் அப்போது இங்குப் பாரபத்தியமாகப் பணியிலிருந்த நாவாயி ஆனந்த வீரப்பச் செட்டியாராம்.

இதைவிடச் சிறப்பானவை வீரவசந்தராயர், மீனாட்சி நாயக்கர் மண்டபத் தோரணங்கள். அவற்றிலும் கல்வெட்டுகள். தகவல்கள் அடுத்த மடலில்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்