சுந்தர வாழ்க்கை

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டின் முப்பெரும் தேவாரப் பெருமக்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் சுந்தரர். சிவபெருமானைப் போற்றி அவர் பாடிய நூறு பதிகங்களே ஏழாம் திருமுறையின் உள்ளடக்கம். முதல் ஆறு திருமுறைகளைப் பாடிய சம்பந்தரும் அப்பரும் மண்ணுலகினர். சுந்தரரோ விண்ணுலகில் வாழ்ந்து, செய்த பிழைக்காக மண்ணுலக வாழ்வுக்கு அனுப்பப்பட்டவர். அவரது வாழ்க்கையை விரித்துரைக்கச் சேக்கிழாருக்கு உதவிய எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளில் இராஜராஜீசுவரத்துத் தூரிகைப் படப்பிடிப்பு முதன்மையானது எனலாம்.

சுந்தரர் வாழ்க்கை

‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்ற பெருமைமிகு அறிவிப்புடன் சோழப் பேரரசர் முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எழுப்பிய இராஜராஜீசுவரம், தமிழ்நாட்டுக் கட்டடக்கலை வரலாற்றில் ஒரு மைல் கல். கருவறையைச் சுற்றி இரண்டு சுவர்களும் அவற்றுக்கு இடைப்பட்டு நடைவழியும் கொண்டு உருவான சாந்தார விமானங்களில் இராஜராஜீசுவரம் தனித்தன்மையது. இங்கு மட்டுமே அந்த நடைவழி, அது அமைந்துள்ள விமானத்தின் இருதளங்களிலும் கலைப்படைப்புகளைப் பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள கீழ்த்தள நடைவழியில் சோழ, நாயக்கர் கால ஓவியங்களுடன் கூரைப்பகுதியில் ஆடற்சிற்பங்களும் உள்ளன. மேற்றள நடைவழி பரதரின் நாட்டியசாத்திரம் குறிப்பிடும் 108 ஆடற்கரணங்களில் 81க்கான சிற்பவடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.

கீழ்த்தள நடையின் நான்கு பெருஞ்சுவர்களில் முழுமையாகவும் பிற சுவர்களில் ஆங்காங்குமென வெளிப்பட்டுள்ள சோழ ஓவியங்களில் ஒன்றே, சுந்தரர் வாழ்க்கை பேசும் தடுத்தாட்கொண்ட புராணத்தை எழுதச் சேக்கிழாருக்குத் துணையானது எனில், இராஜராஜர் காலத்தில் வழக்கிலிருந்த தரவுகளும் பதிவுகளுமே நான்கு பெருஞ்சுவர்களுள் ஒன்றில் அந்த வாழ்க்கையின் வளமை காட்டச் சோழத் தூரிகைகளுக்கு உதவின எனலாம். சுந்தரர் வாழ்க்கையில் காதலும் பத்திமையும் இணைந்தே இருந்தன. பரவை, சங்கிலி எனும் இரு பெண்களுடன் அவருக்கு ஏற்பட்ட இணைவையும் பிரிவையும் தவிர்த்த சோழ ஓவியர்கள், தாம் அறிய நேர்ந்த சுந்தர வாழ்க்கையின் மூன்று திருப்புமுனை நிகழ்வுகளை மட்டுமே காட்சிகளாக்கினர்.

சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, ஓலை காட்டி அவரைத் தம் அடிமையென அறிவித்து, அதை வழக்குமன்றத்திலும் நிறுவி, தம் இருப்பிடம் கேட்டவர்களைத் திருவருட்துறைக்கு அழைத்துச்சென்று, அங்கு சுந்தரருக்குத் தம்மை வெளிப்படுத்தி, அவர் பாட ‘பித்தா’ எனச் சொல்லெடுத்துத் தந்த சிவபெருமானின் திருவிளையாட்டு முதல் நிகழ்வாகச் சுவரின் கீழ்ப்பகுதியில் பதிவாகியுள்ளது.

வழக்காடு மன்றம்

சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் இடையில் மலர்ந்த நட்புறவு இரண்டாம் நிகழ்வாகச் சுவரின் நடுப்பிரிவில் சுருக்கமாக அமைய, சுந்தரரும் சேரமான் பெருமாளும் மேற்கொண்ட கயிலைப் பயணமும் அங்கு இறைப் பார்வையில் அவர்களுக்குக் கிடைத்த தேவ வரவேற்பும் மேற்பகுதியில் விரிந்துள்ளன.

சோழர்கால அடுக்களை, மணவரங்கு, வழக்குமன்று, வழக்காடுமுறை, கோயில் என்று பொதுக்காலம் 10, 11ஆம் நூற்றாண்டுச் சமூக வாழ்வை முதல் பிரிவு ஓவியங்கள் வண்ணப் படப்பிடிப்பாய் வழங்க, இரண்டாம் பிரிவில் சேரமானின் அஞ்சைக்கள ஆடவல்லான் சிறக்க வடிக்கப்பட்டுள்ளார். இறைவனின் ஆனந்ததாண்டவத்தை உமையுடன் பிள்ளைகள் இருவரும் இடப்புறமிருந்து காண, குடமுழவில் தாளம் தருபவரும் காரைக்காலம்மையும் வீசிய திருவடியின் கீழ் வலப்புறம்.

சுந்தரர், சேரமான் பெருமாளின் கயிலைப் பயணம் சுவரையும் கடந்து தூணிலும் பரவியுள்ளது. வருபவர் சுந்தரர் என்பதால் அவரை வரவேற்க, விண்ணுலக நண்பர்கள் ஆடலும் பாடலுமாய்ச் சிறுசிறு குழுக்களாய் வழியெங்கும் பரவி அவரை வரவேற்கின்றனர். இந்தக் காட்சிப்பரப்பில் சோழர்காலக் கலைவளம், கருவிகளும் கலைஞர்களும் நிகழ்முறையும் ஒப்பனையுமெனக் கண்களை விரியச் செய்து தரவுகளைக் குவிக்கிறது.

சுந்தரரின் கயிலைப் பயணம்

யானைமீது சுந்தரரும் குதிரைமீது சேரமானும் கயிலை செல்லும் அந்தப் பெருவழியில், நீர்வாழ் இனங்கள் நீந்திப் பரவ, யானையின் கால்கள் கடல்நீரில். வான் வழிப் பயணத்தில் கடல் எங்கிருந்து வந்தது? யானையின் வாலைப் பற்றியவாறு சுந்தரரின் உடன்பயணியாய்ப் பின்னால் ஒருவர். யார் இவர்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுந்தரரின் நூறாம் பதிகம் விடை தருகிறது. சுந்தரரை அழைத்துவர யானையையும் வழிநடத்திவர தம் அடியார்களுள் ஒருவரான வாணனையும் இறைவன் அனுப்ப, பயணவழியில் கடலரசனான வருணன் வானவர் அனைவருக்கும் முன்னதாக வந்து மலர்கள் தூவித் தம்மை வணங்கி வரவேற்றதாக சுந்தரரே பேசுகிறார். கடலரசன் வணங்க, வழிதர வந்த வாணன் யானையின் வால் பிடித்துப் பின்வர, சேரமான் பெருமாள் முன் செல்ல, வானவ நண்பர்களின் வரவேற்பிற்கு இடையே சுந்தரர் கயிலையை அடைந்ததும் அங்கே இறைத்திருமுன் அவரும் சேரமானும் இணைந்து கண்ட ஆடல், பாடல் நிறைந்த அரங்க நிகழ்வும் கோடுகளும் வண்ணங்களுமாய்ச் சோழர்கால ஓவியர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அழகின் உச்சம்.

வாணன்

சிவபெருமானும் உமையும் மேடையில் அமர்ந்திருக்க, பின்னால் எழில்நிறை வடிவுடன் இறைவியின் விண்ணகத் தோழியர். அரங்கில் ஒழுங்குற அமர்ந்த பாடற்குழு. அவர்தம் பண்ணிசைப் பாடல்களுக்கு ஆடலரசிகளின் அவிநயம். உடன்கூட்டமாய்ப் பூதங்களின் இசைக்கோலத்துடன், பேரிசையாய்க் குடமுழவு. பார்வையாளர்களாய் சுந்தரரே சுட்டும் திருமால், நான்முகன், இந்திரன் உள்ளிட்ட தேவர்களும் பிறரும். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையை நினைவூட்டுமாறு விரிந்து பரவும் இந்தக் கயிலாயக் காட்சி சோழர் கால நிகழ்த்துக் கலைக்குக் கிடைத்த அரிதிலும் அரிதான வண்ணப்பதிவாகும்.

தவம், நட்பு, போர், பத்திமை எனும் நான்கை முதன்மைப்படுத்தி நான்கு பெருஞ்சுவர்களை வண்ணக் கலவைகளால் நிறைத்திருக்கும் சோழத் தூரிகைகள் இலக்கியம் பயின்றும் வரலாறு அறிந்துமே வரைவைச் செய்தன என்பதை சுந்தர வாழ்க்கையின் தேர்ந்தெடுத்த நிகழ்வுகளும் அவற்றை அவை பதிவுசெய்திருக்கும் பாங்கும் உள்ளங்கைக் கனியாய் உணர்த்துகின்றன. வாணன் வந்து வழி தந்து உடன் சென்றதும் கடலரசன் மலர் கொண்டு வாழ்த்தி வணங்கிப் பரவியதும் நம்பி ஆரூரருக்கு மட்டுமே வாய்த்த சுந்தரப் பெருமைகள்.

தள்ளாத வயதில் அப்பரும் தளிரான பருவத்தில் சம்பந்தரும் தலைக்கு மூன்று திருமுறைகள் கொள்ளுமளவிற்குப் பதிகங்கள் பாடியும் கருவறைச் சுவரோவியத்திற்கு சுந்தரர் வாழ்வை இராஜராஜர் தேர்ந்தது ஏன்? அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த தம்பிரான் தோழர் என்பதாலா? அப்பருக்கும் சம்பந்தருக்கும் கிடைக்காத இணையற்ற நண்பராய் சுந்தரருக்கு சேரமான் பெருமாள் வாய்த்ததாலா? ஊர்ப் பதிகங்களோடு நில்லாமல் வரலாற்றுத் தொடராய் தமக்கு முன்னும் தம் காலத்தும் வாழ்ந்த இறையடியார்களைத் தொகைப்படுத்தித் திருத்தொண்டத்தொகை தந்ததாலா? வரலாறு வளப்படுவதே கேள்விகளால்தான்.

பார்வையிழப்பின் மூவருலா

இரா. கலைக்கோவன்

கதைக்கும் வரலாறுக்குமான இடைவெளி ஆய்வுகளால் மட்டுமே வெளிச்சமாகும். சில கதைகள் வரலாற்றின் வீச்சுப் போலவே முகங்காட்டினாலும், வரிக்குவரி கற்பனைப்பூச்சுடன் எழுதப்பட்டிருப்பதை நுணுக்கப் பார்வை தெளிவுபடுத்தும். வரலாறும் அப்படித்தான். உண்மைகளையே அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருந்தாலும் எழுத அல்லது சொல்லப்பட்டிருக்கும் முறையால், ‘இது கதையோ’ என்றுணர வைக்குமாறு அமைந்துவிடும். சொல்லப்போனால், சில கதைகள் சாகாவரம் பெற்று வரலாறாகவே வாழ்கின்றன. சில வரலாறுகள் சரியாக வெளிப்படாமையினால் கதைகளோ என்று மருளச்செய்கின்றன.

மூன்று பேர் வாழ்க்கையில் நேர்ந்த ஒரே நிகழ்வைப் புராணக்கதையாகவும் கல்வெட்டுச் சொல்லாடலாகவும் காலம் நம் முன் நிறுத்துகிறது. தேவாரமூவரில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானின் தோழராகக் கொண்டாடப்படுபவர். அவரது வாழ்க்கையை விளக்கும் திருத்தொண்டர் புராணம், ஒற்றியூரில் தாம் காதலித்து மணந்த சங்கிலிக்கு அளித்த வாக்குறுதியை மீறியதால் அவருக்கு நேர்ந்த பார்வையிழப்பையும் அதன் தொடர் விளைவுகளையும் விரிவாகப் பேசுகிறது.

‘உன்னைப் பிரியேன், ஒற்றியூரில் உன்னுடன் உறைவேன்’ என்று உறுதியளித்துச் சங்கிலியை மணந்த சுந்தரரைச் சின்னாட்களில் பரவை நங்கையுடன் அவர் வாழ்ந்த திருவாரூர் நினைவுகள் ஆட்கொண்டன. ஆரூர் வயப்பட்டவராய், சிவபெருமானறியத் தாம் சங்கிலிக்கு அளித்த உறுதிமொழி மறந்து, ஒற்றியூர் நீங்கிய சுந்தரருக்கு இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. தவறால் நேர்ந்த துன்பமிது என்பதை உணர்ந்த சுந்தரர் ஆரூர் இறைவனைப் பாடிப் பார்வை பெறுவேன் என்று பாடியவாறே பயணம் தொடர்ந்தார்.

பாடல்கள் வளர்ந்தன, பயணமும் நீண்டது. ஆனால், பார்வை வரவில்லை. திருவெண்பாக்கத்தை அடைந்து ஆற்றாமையால், ‘இறைவனே இங்குள்ளீரோ’ என்று கேட்டபோதும், ‘உளோம் போகீர்’ என்று மறுமொழித்து, தடுமாறாது நடக்க சுந்தரருக்கு ஊன்றுகோல் தந்தாராம் இறைவன். காஞ்சிபுரத்தில்தான் கடவுள் கருணை காட்டி, அவருக்கு இடக்கண் பார்வையை மீளத் தந்தார். வலக்கண் பார்வை சுந்தரருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. வழியெல்லாம் கதறியும் புலம்பியும் பாடிச்சென்றவருக்கு, மறு கண் பார்வை ஆரூரில்தான் கிடைத்தது.

இப்படிப் பார்வை போவதும் இறையருளால் மீளக் கிடைப்பதும் சுந்தரருக்கு மட்டுமே நிகழ்ந்ததன்று. சிராப்பள்ளி மாவட்டம் பெருங்குடி அகத்தீசுவரம் கோயிலிலும் புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டி ஆலத்தூர்த் தளியிலும் பொறிக்கப்பட்டிருக்கும் இரண்டு கல்வெட்டுகள் அவ்வூர்களில் வாழ்ந்த இருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டுச் சரியானதாகச் சொல்கின்றன.

பெருங்குடி அகத்தீசுவரம் கோயில்

சிராப்பள்ளிப் பகுதியைப் பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டளவில் ஆண்ட ஒய்சள மன்னர்களுள் ஒருவரான வீரராமநாதன் ஆட்சிக்காலத்தில், பெருங்குடி இருந்த பகுதி ஜகதேகவீரச்சதுர்வேதிமங்கலமாக அறியப்பட்டது. அங்கு வாழ்ந்த தட்டார் மருதாண்டார் அறச்சிந்தனையாளர். அகத்தீசுவரம் கோயிலில் அவர் காலத்தே திருப்பணி நிகழ்ந்தது. அதுபோழ்து அங்குப் பணியாற்றிய கல்தச்சர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப் போதுமான தொகை கோயிலாரிடம் இல்லை. நிருவாகத்திற்கு ஏற்பட்ட இச்சிக்கலான சூழலை அறிந்த மருதாண்டார், உடனே தம்மிடமிருந்த மூன்று கழஞ்சுப் பொன்னைத் தந்து உழைத்த தச்சர்கள் ஊதியம் பெறத் துணையானார்.

மருதாண்டாருக்கு நல்லமங்கை என்ற பெயரில் ஒரு பெண் இருந்தார். அவருக்குத் திடீரெனக் கண்பார்வை மங்கிப் பார்வையிழப்பு நேர்ந்தது. மகளின் பார்வையிழப்பால் உளம் சோர்ந்த மருதாண்டார் அகத்தீசுவரரிடம் முறையிட, இறையருளால் நல்லமங்கை பார்வை பெற்றதாகவும் அந்த மகிழ்வைக் கொண்டாட, மருதாண்டார் ஒரு கழஞ்சுப் பொன்னில் தங்கப்பட்டம் செய்து பெருங்குடி இறைவனுக்கு வழங்கியதாகவும் கோயிலில் பதிவாகியுள்ள கல்வெட்டுக் கூறுகிறது.

பல்லவ மன்னரான தந்திவர்மர் காலத்தில் குவாவன் சாத்தன் எனும் முத்தரையரால் மலையடிப்பட்டியில் குடையப்பெற்ற ஆலத்தூர்த் தளி சிறப்புக்குரிய குடைவரைக் கோயிலாகும். தமிழ்நாட்டின் மிகப் பழைமையான எழுவர்அன்னையர் சிற்பத்தொகுதிகளுள் ஒன்று இங்குள்ளது. வாகீசுவரர் கோயிலாகவும் கல்வெட்டொன்றால் அறியப்படும் இத்தளியில், வெகுதானிய ஆண்டு, தைத்திங்கள் 11ஆம் நாளில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, ஆவுடையாதேவன் என்பாருக்கு நேர்ந்த பார்வையிழப்பைப் பதிவுசெய்துள்ளது.

ஆலத்தூர்த் தளி

பூச்சிக்குடியைச் சேர்ந்தவர் ஆவுடையாதேவன். அவருக்கும் சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருநெடுங்களத்து விலைமாது ஒருவருக்கும் உறவிருந்தது. தேவன் அப்பெண்ணின் இல்லத்தில் தங்கியிருக்கையில், அப்பெண்மணி பிராமணர் ஒருவரையும் வரச்செய்து உறவாக்கிக் கொண்டமை ஆவுடையாதேவனைச் சினமுறச் செய்தது. உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத ஆவுடையான் இருவரையும் வெட்டிக் கொன்றார். பின் அங்கிருந்து மலையடிப்பட்டிக்கு வருகையில் அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வையிழப்பு நேர்கிறது.

தம் கொலைச்செயலுக்கு நேர்ந்த தண்டனையோ இது என்று உளம் மருகிய ஆவுடையான், பார்வை மீண்டால் தம் வயலை வாகீசுவர சுவாமிக்கு அளிப்பதாக வேண்டிக்கொள்ள, பார்வை திரும்பக் கிடைக்கிறது. இழந்த பார்வை மீளப்பெற்ற மகிழ்வில் தம் காணியான குடிகாட்டை வாகீசுவரருக்கு எழுதித் தந்த ஆவுடையான், அதை ஆலத்தூர்த் தளியில் கல்வெட்டாகவும் பொறிக்கச் செய்தார்.

சுந்தரர், நல்லமங்கை, ஆவுடையாதேவன் இம்மூவருக்குமே திடீரெனப் பார்வையிழப்பு நேர்ந்து சிறிது காலத்தில் அது மீளக்கிடைக்கிறது. சுந்தரர் நிகழ்வைக் கதையென்று ஒதுக்குவாருக்குப் பெருங்குடி, மலையப்பட்டிக் கல்வெட்டுகள் அது வரலாறாக இருக்க வாய்ப்புண்டு என்பதைக் கண்முன் காட்சியாக நிறுவுகின்றன.

கண்மருத்துவத்தில் அமோரோஸிஸ் பியுகாக்ஸ் (Amaurosis Fugax) என்றொரு நிலை பேசப்படுகிறது. பார்வைத்திரையாகப் பார்க்கப்படும் ரெட்டினாவுக்குத் திடீரென ஏற்படும் இரத்தஓட்டக் குறைவினால் ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலோ நேரும் தற்காலிகப் பார்வையிழப்பு நிலையே அமோரோஸிஸ் பியுகாக்ஸ். இது சில நிமிடங்களில் சரியாகக்கூடியது என்றாலும், சிலருக்கு உள்ளிருக்கும் பிற நோய்களால் தொடரலாம். சுந்தரர், நல்லமங்கை, ஆவுடையாதேவன் மூவருக்கும் நேர்ந்த பார்வையிழப்பு இதனால்தானா என்பதை யாரறிவார்? ஆனால், இந்த மூன்று நிகழ்வுகளும் கதையல்ல, வரலாற்றின் பதிவுகள்.

அடையாளத்தின் அடையாளம்

இரா. கலைக்கோவன்

‘புனிதவதி’ எனும் பெயர் கொண்டவரில் பலர் அப்பெயரின் பின்னிருக்கும் பெருமை அறிவதில்லை. புனிதவதி வெறும் பெயரன்று. பெண்ணாகப் பிறந்து தம்மைப் பேயாக மாற்றிக் கொண்ட ஓர் அம்மையின் முதற்கட்ட வாழ்க்கையே அந்தப் பெயருடன்தான் ஒட்டியுள்ளது. ஊர்ப்பெயருடன் சிவபெருமானால் வழங்கப்பட்ட அம்மை எனும் சிறப்புப் பெயர் இணையக் காரைக்கால் அம்மையாக அறியப்படும் இப்புனிதவதிப் பெருமாட்டி பல முதல்களின் சொந்தக்காரர்.

சிவபெருமானைப் போற்றி முதன்முதலாகப் பதிகம், வெண்பா, அந்தாதி, கட்டளைக்கலித்துறை பாடிய பெருமைக்குரிய இவர், தம் இறைப்பாடல்களால் திருமுறைகளில் இடம்பெற்று அறுபத்து மூவரிலும் ஒருவரான ஒரே பெண்மணி. அறுபத்து மூன்று தனியடியார் திருமுன்களில் அமர்ந்த திருக்கோலத்தவர் இவர் ஒருவரே. சிவபெருமானின் திருக்கூத்தை உளம் களிக்கப் பாடி, அந்த ஆடலின் களம், ஆடும்போது இறைவன் கொண்ட ஒப்பனை, கைகளில் கொண்ட கருவிகள், ஆடை, அணிகள், ஆடலுக்கு அமைந்த இசை, அதைத் தந்த கருவிகள், அவற்றை இயக்கிய பேய், பூதம் உள்ளிட்ட உடன்கூட்டத்தார், உடன் ஆடியவர்கள், அந்த ஆடலின் அமைவு, அதன் விளைவுகள், ஆடலைக் கண்ணுற்றார் என இறையாடல் நோக்கில் பதிகப் பெருவழியில் பயணப்பட்ட முதல் அடியாரும் அம்மைதான்.

பெருமைகள் சூழ உயர்ந்தோங்கி நிற்கும் இவ்வம்மையை முதன்முதலாக வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்ந்த பெருமை சுந்தரருக்கு உரியது. தம் காலத்தும் தமக்கு முன்னும் வாழ்ந்த இறையடியார்களின் பெயர்களைத் தொகுத்து அவர் பாடிய திருத்தொண்டத்- தொகையில்தான் புனிதவதியான காரைக்கால் அம்மை அறிமுகமாகிறார். அந்த அறிமுகமும் அவரது இயற்பெயராலோ, வழங்கு பெயராலோ அமையவில்லை. அவர் விரும்பி வேண்டிப் பெற்ற பேய்வடிவமே பெயராகிப் பேயாராகவே சுந்தரரால் பதிவுபெறுகிறார் அம்மை. ‘பெருமிழலைக் குறும்பனார்க்கும் பேயார்க்கும் அடியேன்’ என்பது சுந்தரர் வாய்மொழி.

திருத்தொண்டத்தொகையை உள்வாங்கி நம்பியாண்டார் நம்பியால் சற்றே விரிவுசெய்யப்பட்ட அடியார்களின் வரலாறுதான் திருத்தொண்டர் திருவந்தாதி. அதில்தான் அம்மையைப் பற்றிய இரண்டு புதிய செய்திகள் கிடைக்கின்றன. சிவபெருமானைக் காண அம்மை கயிலை சென்றதாகவும் அங்குக் கால்பதித்து நடப்பதை விழையாமல் தலையால் நடந்து சென்றதாகவும் அது கண்ட உமை சிவபெருமானிடம் யாரிவர் எனக் கேட்டதாகவும் கூறும் அந்தாதி, இறைவன், ‘இவர் நம் அம்மை’ என்று மகிழ்ந்துரைத்தாகச் சொல்கிறது.

சிவபெருமானால் அம்மை என்றழைக்கப்பட்ட பெருமையுடன் காரைக்கால் குலதனமாகவும் நம்பியால் அம்மை உயர்த்தப்பட்டுள்ளார். கயிலையில் அம்மை தலைகீழாக நடைபயின்ற காட்சியைத் தாராசுரம் கோயில் விமானம் சிற்பச் செதுக்கலாய்ப் பதிவுசெய்துள்ளது. சென்னை அருங்காட்சியக வாயிலிலுள்ள சோழர் காலச் சிற்பத்தொகுதியொன்றும் கயிலை நடையைக் கொண்டுள்ளது.

0 Ammaiyin Kayilai Nadai Darasuram

அம்மையின் கயிலை நடை, தாராசுரம்

அம்மையின் வரலாறு பேசும் மூன்றாவது நூல் சேக்கிழாரின் பெரியபுராணம். அதில்தான், பல பாடல்கள் வழி அம்மையின் முழுமையான வரலாற்றைச் சேக்கிழார் பகிர்ந்து கொள்கிறார். தம்மைக் காணவந்த அம்மையிடம் சிவபெருமான், ‘உமக்கு வேண்டுவது கேட்க’ என்றதும், இன்ப அன்பு, பிறவாமை, பிறந்தால் இறைவனை மறவாமை கேட்ட அம்மை, மிகச் சிறப்பான ஒன்றையும் வேண்டிப் பெற்றார். ‘பெருமானே, நீ ஆடும்போது உன் திருவடிக்கீழ் நான் இருக்கவேண்டும்’. காரைக்கால் அம்மையின் இந்த வேண்டுகோளைச் சேக்கிழார் எப்படி அறிந்திருக்கமுடியும்? பெரியபுராணத்தைப் பல கோணங்களில் ஆய்வுசெய்த பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கனார் சேக்கிழாரை வரலாற்று ஆய்வாளராக அடையாளப்படுத்துவார். அது உண்மையே என்பதை அம்மையின் வரலாற்றுத் தடங்கள் நிறுவுகின்றன.

பேய், காரைக்கால் குலதனம், கயிலையில் தலைகீழ் நடை எனும் தொடக்க அடையாளங்களுடன் வெளிப்படும் அம்மையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேண்டுகோளைக் கண்முன் காட்சியாக்கியவரும் ஓர் அம்மைதான். பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் பெருவாழ்வு வாழ்ந்த இவ்வம்மையை வரலாறு மழவரையர் மகளாகக் கொண்டாடுகிறது. கண்டராதித்த சோழரின் தேவியாகவும் உத்தமசோழரின் அன்னையாகவும் தம்மைக் கல்வெட்டுகளில் அடையாளப்படுத்திக் கொள்ளும் செம்பியன்மாதேவி எனும் இவ்வம்மையும் காரைக்கால் அம்மை போல் பல முதல்களின் முதல்வர். இவர் காலத்தில்தான் கோயில்களில் மண்டபங்களும் அவற்றில் இறைக்கோட்டங்களும் பெருகின. செப்புத்திருமேனிகள் பலவாய் உருவாயின. பழங்கோயில்கள் புதுப்பிக்கப்பெற்றபோது அங்கிருந்த கல்வெட்டுகள் கருத்தோடு படியெடுக்கப்பட்டு, ‘இதுவும் ஒரு பழங்கற்படி’ என்ற குறிப்புடன் புதிய கட்டுமானத்தில் பதிக்கப்பெற்றன.

கருந்திட்டைக்குடி ஆனந்ததாண்டவரும் காரைக்கால் அம்மையும்

மாதேவியின் சாதனைகளின் சிகரமாய், முற்சோழர்களின் தொடக்கக்காலக் கோயில்களில் கண் தழுவாத இடங்களில் ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சிவபெருமானைத் தாம் திருப்பணிசெய்த கோயில்களில் மண்டபக்கோட்டத்தில் பேருருவினராய் ஆடச்செய்தமையைக் குறிக்கலாம். இந்தச் சிற்பப் பதிவுகள் அனைத்திலும் மாதேவியின் மகத்தான முத்திரையாக சிவபெருமானின் திருவடிக் கீழோ, அருகிலோ காரைக்கால் அம்மை இடம்பெற்றார். கைத்தாளமிடுமாறோ, கைகளைக் கொட்டுமாறோ, பாடியநிலையிலோ, ஆடலைப்போற்றி மகிழுமாறோ அம்மையின் பேயுரு அடையாளமானது. கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயில் ஆனந்ததாண்டவக் காட்சியிலுள்ள அம்மையின் வடிவம் ஈடுஇணையற்ற சிற்பப்பதிவாகும்.

ஆனந்ததாண்டவரும் காரைக்கால் அம்மையும் – கூகூர் மற்றும் திருக்கோடிக்கா

செம்பியன்மாதேவி அடையாளப்படுத்துவதில் முதன்மையர். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் இவர் ஒருவரே தம் கணவரைப் பெயர்சுட்டி சிற்பக் காட்சியாக்கியிருப்பவர். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கோனேரிராஜபுரம் உமைக்குநல்லவர் கோயிலில் கண்டராதித்தர் இறைவனை வழிபடும் காட்சி கல்வெட்டுடன் பதிவாகியுள்ளது. அதே காட்சி அம்மை திருப்பணி செய்த சித்தீசுவரம், ஆனாங்கூர், ஆடுதுறை உள்ளிட்ட வேறு சில கோயில்களிலும் மீள்பதிவாகியுள்ளது. அடையாளத்தின் அடையாளமாய் வாழ்ந்த செம்பியன்மாதேவியே சேக்கிழாருக்குக் காரைக்கால் அம்மையின் வேண்டுகோளைத் தாம் அமைத்த சிற்பக்காட்சிகளின் வழி அடையாளப்படுத்தியவர்.

கோனேரிராஜபுரம் கண்டராதித்தர்

சுந்தரர், நம்பியின் சுட்டல்களாலும் தம் காலத்து வழங்கிய செய்திகளாலும் ஈர்க்கப்பட்டே காரைக்கால் அம்மையின் வேண்டுகோளுக்கு இத்தகு முத்திரைப்பதிவைச் செம்பின்மாதேவி வழங்கியிருக்கிறார். அறுபத்து மூன்று அடியார்களில் சிற்பக்காட்சிகள் வழிப் பல்லவர் காலத்திலேயே இறைவனோடு இணையும் பேறு பெற்ற முதல் அடியவர் சண்டேசுவரர் என்றால், இறையாடலோடு நெருங்கிய முதல் அடியவராகக் காரைக்கால் அம்மையைக் குறிக்கலாம். ஆடலைப் பாடிய முதல் அடியவர் என்ற பெருமையோடு அவ்வாடலை அருகிருந்து காணும் ஒரே அடியவர் என்ற சிறப்பும் என்றென்றும் அம்மைக்கே.

வரலாறு இலக்கிய ஏடுகளிலோ, கல்வெட்டு வரிகளிலோ மட்டுமில்லை. அது கோயில்களில் சிற்பக்காட்சிகளாகவும் கண்சிமிட்டுகிறது. தொடரிழைகளைக் கண்டு தொடர்புபடுத்திக் கொள்பவர்களே வரலாற்றை வளப்படுத்துகிறார்கள்.