மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும் – 4. அம்மன் கோயில் அம்மை

அன்புள்ள வாருணி, சிவபெருமான் 108 தாண்டவங்களை நிகழ்த்தியதாக ஆகமங்கள் பேசினாலும், அவற்றுள் ஆனந்ததாண்டவமும் ஊர்த்வதாண்டவமுமே தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாகக் காட்டப்பட்டுள்ளன. சிற்றுருவச் சிற்பந்தொட்டுப் பேரளவிலான படப்பிடிப்புவரை இவ்விரு தாண்டவக் கோலங்களும் பல்லவரில் தொடங்கி நாயக்கர் காலம்வரை ஏறத்தாழ 12 நூற்றாண்டுகளாகப் பல்வேறு அளவுகளில் தமிழ்நாட்டுக் கோயில்களில் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

இச்சிற்பங்களுள் சில ஆடல்நாயகராக சிவபெருமானை மட்டும் கொள்ள, சிலவற்றில் அந்த ஆடலைக் காண்பவராக உமையன்னையும் ஆடலுக்கு இசை கூட்டுபவர்களாக சிவபெருமானின் பூதகணங்களும் காட்சிதரக் காணலாம். இன்னும் சில சிற்பங்களில் இறையாடலைக் காண்பவர்களாகவும் அதற்கு இசை தருபவர்களாகவும் விஷ்ணு, நான்முகன் உள்ளிட்ட விண்ணுலகினரும் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையை இணைத்தவர் சோழஅரசி செம்பியன்மாதேவி.

ஆனந்ததாண்டவத்தில் சிவபெருமானின் வலக்கால் தரையிலோ அல்லது முயலகன் என்னும் குறளரக்கன் மீதோ ஊன்ற, இடக்கால் உயர்ந்து முழங்காலளவில் மடிக்கப்பட்டு வலப்புறம் வீசப்பட்டிருக்கும். இறைவனின் முன்னிருகைகளில் வலக்கை காக்கும் குறிப்பிலிருக்க, இடக்கை இடக்கால் போலவே வலப்புறம் வீசப்பட்டு வேழமுத்திரையில் அமையும். 

ஊர்த்வதாண்டவம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதில், இறைவனின் ஒருகால் தரையிலோ, முயலகன் மீதோ ஊன்றியிருக்கும். மற்றொரு காலோ மார்புக்கு முன் அல்லது பின்னிருக்குமாறு மேல் நோக்கி உயர்த்தப்பட்டிருக்கும். இத்தாண்டவத்திலும் வல முன் கை காக்கும் குறிப்பிலேயே அமையும். ஆனால், இட முன் கை மாறுபட்ட குறிப்புகளில் அமைவது சிற்பங்கள் காட்டும் காட்சியாகும்.

தமிழ்நாட்டிலுள்ள பல்லவக் கற்றளிகளில் சிவபெருமானின் ஊர்த்வதாண்டவம் இடம்பெற, விஜயாலய சோழர்களின் கட்டுமானங்களில் ஆனந்ததாண்டவம் கோலோச்சியது. சாளுக்கியச் சோழர் கோயில்கள் மீண்டும் ஊர்த்வதாண்டவத்திற்குத் திரும்ப, நாயக்கர்கள்அ அதைக் கொண்டாடிப் பின்பற்றினர். இப்படி ஆடல்நிலை மாறினாலும் பெரும்பாலான கோயில்களில் இரண்டு தாண்டவங்களில் ஒன்று தவறாமல் இடம்பெற்றது. மிகச் சில வளாகங்களே சிவபெருமானின் இரு ஆடற்கோலங்களையும் பெற்றுச் சிறந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது மதுரை மீனாட்சியம்மன் கோயில்.

இந்த வளாகத்தில் ஆய்வுசெய்தபோது சிவபெருமானின் இரண்டு அழகிய ஆனந்ததாண்டவச் சிற்பங்களையும் மூன்று ஊர்த்வதாண்டவச் சிற்பங்களையும் கண்டு மகிழ வாய்த்தது. இந்தக் கண்டுபிடிப்பின் கூடுதல் சிறப்பு, இவை ஐந்திலும் இறையாடலின் உடனிருப்பாகக் காரைக்கால் அம்மையும் இடம்பெற்றிருப்பதுதான். செம்பியன்மாதேவியால் இறையாடல் வடிப்புகளில் இடம்பெறத் தொடங்கிய அம்மை, விஜயாலய சோழமரபின் இறுதிவரை தொடர்ந்து காட்சியானார். சாளுக்கியச் சோழர்களின் இறையாடல் சிற்பங்கள் அவரை இழந்தபோதும், நாயக்கர்கள் அம்மையை விடவில்லை. மீண்டும் பற்றி, அதை இறுகிய பற்றாகவும் மாற்றினர். அதனால்தான், மீனாட்சி அம்மன் கோயிலில் இறைவன் ஆடுமிடமெல்லாம் இசைக்கலைஞராய் அம்மையும் உடனிருக்கிறார்.

முதலில் ஆனந்ததாண்டவச் சிற்பங்களைப் பார்ப்போம் வாருணி. இரண்டு இடங்களில் இவை உள்ளன. இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட சுவரில் மகரதிருவாசிக்கு நடுவில் வலக்காலை முயலகன் முதுகின் மீதும் உயர்த்தி வீசிய இடக்காலை அம்முயலகன் கையிலிருந்து சீறி வளர்ந்தோங்கி படம் விரித்திருக்கும் பாம்பின் மீதும் இருத்தி ஆனந்த நடமிடும் இறைவனின் இடமுழங்காலை மற்றொரு பாம்பு சுற்றிப் படமெடுத்துள்ளது. அதன் தலை தொட்டவாறே இறைவனின் இட முன் கை வேழக்கையாக வீசப்பட்டுள்ளது. பின்கைகளில் துடியும் தீயகலும் அமைய, வல முன் கையோ காக்கும் குறிப்பில்.

மலர்ந்த முகத்துடன் ஆடும் இறைவனின் இடப்புறத்தே அழகே உருவாய் உமை. அவரது வலப்புறம் குடமுழவுடன் நந்தியெம்பெருமான். இறைவனின் தூக்கிய திருவடிக்கருகில் தாம் விரும்பி ஏற்ற பேயுருவில் கைகளில் செண்டுதாளங்களுடன் காரைக்காலம்மை. இலலிதாசனத்தில் இடக்கால் மடித்து, வலக்காலைக் குத்துக்காலாக்கி முகமெல்லாம் மலர, தம் பேற்றுக்குத் தாமே மகிழ்ந்து அம்மை தாளமிசைக்கும் அருமையான படிப்பிடிப்பம்மா இது. 

வாருணி, இச்சிற்பத்தை அடியொற்றியே மற்றொரு பதிவும் அமைந்துள்ளது. எனினும், மாற்றங்கள் இல்லாமல் இல்லை. இதுவும் தூண்களுக்கிடையிலான சுவரில்தான் உள்ளது. ஆனால், அந்தத் தூண்களை யாளிகள் தாங்குகின்றன. நந்திகேசுவரரின் குடமுழவை இருத்தத் தன்னையே தளமாக்கிச் சுருண்டுள்ள பாம்பு முழவின் முன்பகுதியில் படமெடுத்துள்ளது. 

வலக்காலை நீட்டி, இடக்காலை மடக்கி மிக இயல்பாக அமர்ந்துள்ள நந்தியெம்பெருமான் சாய்ந்தாடி முழவிசைக்கும் அழகே அழகு. முதல் பதிவில் தாம் பாடினாற் போலவே செடித்தலைப் பேயாகக் கட்சிதரும் அம்மை, இதில் படியவாரிய தலையராய் வடிவம் மாறியுள்ளார். முதல் பதிவு இறையாடலில் மூழ்கி மகிழ்ந்திருக்கும் முத்தாய்ப்புக் கோலம் என்றால், இந்த இரண்டாம் பதிவை ஆடலில் மயங்கிய அம்மையின் பெருங்களிப்பு நிலையாகக் குறிக்கலாம்.

குடமுழவிற்குத் தளமாகி அந்தக் கருவி எழுப்பும் தாள ஒலிக்குப் படமெடுத்தாடும் இந்தப் பாம்புப் பதிவு தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் காணமுடியாதது வாருணி. சிற்பிகளின் கற்பனையாற்றல் எப்படியெல்லாம் பெருகிப் பாயும் என்பதற்கு இந்தப் பாம்புத் தளமும் அதன் தலைவிரிப்பும் சரியான சான்றுகளம்மா. 

​​அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

பந்தவிளக்குகளும் பங்கேற்ற ஊர்களும்

இரா. கலைக்கோவன்

காலந்தோறும் வரலாற்றைப் பதிவுசெய்ய மக்கள் கையாண்ட முறைகளுள் எழுத்துப் பொறிப்புகள் ஒன்றாகும். எதிலெல்லாம் முடியுமோ அதிலெல்லாம் அவ்வக் காலத்து வழக்கிலிருந்த எழுத்துகளால் அறிந்தவற்றையும் நடந்தவற்றையும் எழுதத் தொடங்கியவர்களால் கல்லில் செதுக்கப்பட்ட பதிவுகளே கல்வெட்டுகள் என அறியப்படுகின்றன. இந்தியாவில் மிக அதிக அளவிலான கல்வெட்டுகள் தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே கிடைப்பதாக இதுவரை வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன. முறை சாரா திருப்பணிகளால் காலந்தோறும் அழிவுக்குள்ளான கல்வெட்டுகள் ஏராளம் என்றாலும், எஞ்சியிருப்பவை பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடர் நழுவாமால் பகிர்ந்துகொள்கின்றன. அத்தகு கல்வெட்டுகளுள் ஒன்றுதான், பந்தவிளக்குகளையும் அவற்றுக்கான பொறுப்பைப் பகிர்ந்துகொண்ட ஊர்களையும் வெளிச்சப்படுத்துகிறது.

திருமுதுகுன்றம் கோயில்

தமிழ்நாட்டின் பெருங்கோயில்களுள் ஒன்றைத் தக்கவைத்துள்ள தேவார ஊர்களுள் ஒன்றான திருமுதுகுன்றம் இன்றைக்கு விருத்தாசலமாக அறியப்படுகிறது. திருமுறைப் பாடல் பெற்ற இக்கோயில் இறைவனைப் பதிகங்கள் முதுகுன்றத்தார் என்றழைக்க, கோயில் வளாகக் கல்வெட்டுகள் திருமுதுகுன்றமுடைய நாயனார் என்கின்றன. சோழஅரசி செம்பியன்மாதேவியால் கற்றளியாக்கப்பட்ட பல கோயில்களில் முதுகுன்ற வளாகமும் ஒன்றாகும். இவ்வாளகத்துள்ள, ‘ஸ்ரீபராந்தக தேவரான பெரியசோழனார் மகனார் கண்டராதித்ததேவர் தேவியார் மழபெருமானடிகள் மகளார் ஸ்ரீஉத்தமசோழர் தங்கள் ஆச்சி செம்பியன்மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்டது ஸ்ரீகோயிலும் ஸ்நபனமண்டபமும் கோபுரமும் சுற்றாலையும் பரிவாரக் கோயில்களும்’ எனும் உத்தமசோழரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இங்குள்ள சிறப்பான பதிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மிகச் சில கல்வெட்டுகளே ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகையில் அவரது தலையாய உறவுமுறைகளை விதந்தோதுகின்றன. அந்த வகையில் பேறுபெற்றவர்களாய்ச் செம்பியன்மாதேவியையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்த பூதிஆதித்த பிடாரியையும் குறிக்கலாம். திருமுதுகுன்றம் கல்வெட்டு செம்பியன்மாதேவியாரின் தந்தை, மாமனார், கணவர், மகன் என மூன்று தலைமுறை ஆண் உறவுகளைப் பகிர்ந்துகொள்கிறது. அன்னையைக் குறிக்கும், ‘ஆச்சி’ என்ற அழகான தமிழ்ச் சொல்லும் கோயிற்கட்டடக்கலை சார்ந்த கலைச்சொற்களும் இக்கல்வெட்டின் கொடைகளாகும். இது குறிக்கும் சுற்றாலையே இன்று பிரகாரம் என மாறியுள்ளது. ‘கோபுரம்’ என்ற கோயில் நுழைவாயில் கட்டுமானத்தைக் குறிக்கும் மிகச் சில பழங்கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மறக்கமுடியாத வரலாற்று நாயகி செம்பியன்மாதேவியால் கட்டப்பெற்ற இக்கோயிலுக்குச் சோழ அரசர்கள் காலத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு அளப்பரிய கொடைகள் அளிக்கப்பட்டன. அவற்றுள் தனித்த சிறப்புடன் திகழும் கொடை, பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனான குலோத்துங்கசோழக் காடவராயரால் வழங்கப்பட்டது. இரண்டாம் குலோத்துங்கர் காலச் சிற்றரசரான இவர், குலோத்துங்கர் மகனான இரண்டாம் இராஜராஜர் காலத்தில் திருமுதுகுன்றம் கோயிலில், ‘குன்றப்பெருமாள்’ என்ற திருப்பெயரில் இறைத்திருமேனி ஒன்றை எழுந்தருளுவித்தார்.

அத்திருமேனிக்காகவும் வைகாசி, ஆவணிமாதக் கொண்டாட்டங்களாகவும் கோயிலில் 36 நாள்கள் நிகழ்ந்த விழாக்களில் பந்தவிளக்குகள் ஏற்ற ஆகும் செலவுகளுக்காகக் காடவராயர், கோயில் கருவூலத்தாரிடம் 2810 காசு கொடையாகத் தந்தார். இக்காசை வைப்புநிதியாகக் கொண்டு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியால் 36 நாள் விழாவிலும் நாளும் 562 பந்தவிளக்குகள் எரிக்கவேண்டும் என்பது திட்டம். கோயிலார் கொடைத்தொகையை 70 ஊர்களுக்குப் பகிர்ந்தளித்து, அதை முதலாகக் கொண்டு விளக்கேற்றும் பொறுப்பை அந்தந்த ஊராட்சி ஏற்குமாறு செய்தனர். ஒரு விளக்கிற்கு 5 காசு வைப்புநிதி எனக் கணக்கிடப்பட்டு 2810 காசும் 70 ஊராட்சியினரிடம் பிரித்துத் தரப்பட்டது. காசு பெற்ற ஊராட்சியினர் கொடையை முதலாகக் கொண்டு அதன் வட்டியில் விளக்கேற்றும் பொறுப்பேற்றனர்.

திருமுதுகுன்றம் விமானம்

‘விளக்கேற்றக் கொடை, அதைப் பெற்ற ஊராட்சி அதன் வட்டிகொண்டு விளக்கேற்ற ஒப்பியமை’ என்பதே இக்கல்வெட்டின் அடிநாதச் செய்தி. ஆனால், இக்கல்வெட்டு வழங்கும் சமூகப் பொருளாதாரத் தரவுகள் பலவாகும். கோயிலிலுள்ள ஏழிசைமோகன் திருமண்டபத்தின் வடசுவரில் தொடங்கப்பட்டு, அங்கு இடம்போதாமையின் தென்சுவரில் தொடரப்பட்ட இக்கல்வெட்டு, தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் மிக நீளமான கல்வெட்டுகளுள் ஒன்றாகும். எத்தனையோ வகையான விளக்குகள் பற்றிப் பேசும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில், மிக அரிதாகவே இக்கல்வெட்டுச் சுட்டும் பந்தவிளக்கு பயின்று வந்துள்ளது. முதுகுன்ற விழாக்களில் எரிந்த இவ்விளக்குகளின் 562 என்ற உயர் எண்ணிக்கையும் வியக்கவைக்கிறது. ஒரு விளக்கிற்கு 5 காசெனக் கொடைப்பணம் பெற்ற ஊர்களால், 12ஆம் நூற்றாண்டில் பெண்ணாகடம், இருங்கோளப்பாடி, முதுகுன்றம் எனும் மூன்றிடங்களைச் சுற்றிலுமிருந்த பல ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் பெயர்களுடன் பழைய ஊர்களாக 32 உள்ளன. பிராமணர் குடியிருப்புகளாக 11, வணிகக்குடியிருப்புகளாக 2, கோயில் நிலமிருந்த ஊர்களாக 5 அமைய, 20 ஊர்கள் பல்வேறு பின்னொட்டுகளோடு முடியும் பெயர்களில் இருந்தன.

பெற்ற காசுக்கும் அதற்கான பந்தவிளக்கிற்கும் ஒவ்வோர் ஊராட்சியிலும் பொறுப்பேற்றவர்கள் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவேண்டும். ஆனால், அவர்களில் சரிபாதியினர் எழுத்தறிவற்றவர்களாய் இருந்தமையால் அவர்களுக்காக வேறு சிலர் கையெழுத்திட்டுள்ளனர். எழுத்தறிவின்மையை, ‘சையிஜையானமை, கைமாட்டாமை’ என்ற தொடர்களால் கல்வெட்டு குறிக்கிறது. சில ஊர்களில் பொறுப்பாளர்கள் அனைவருக்குமே பிறர் கையெழுத்திட்டுள்ளனர். ஓரிரு ஊர்களில் பொறுப்பேற்ற அனைவர் சார்பிலும் ஒருவரே கையெழுத்திட்டுள்ளார். மிகச் சில ஊர்களிலேயே பொறுப்பேற்ற அனைவரும் எழுத்தறிவுள்ளவர்களாய் விளங்கியுள்ளனர். பொறுப்பேற்ற அனைவருமே ஆண்களாக இருப்பதால், ஊராட்சிப் பொறுப்பில் இந்த 70 ஊர்களில் பெண்கள் யாரும் இல்லாமை தெளிவு. புஞ்சி, குப்பை, பிச்சன், சோறன், பன்றி, ஆவணம், மாட்டத்தான் எனச் சிலர் பெயர் கொண்டிருக்க, குடிதாங்கி, அறம், திருவரைசு போன்ற பெயர்களும் மக்களுக்கு இருந்தன.

பொறுப்பேற்றவர்களுள் பலர் பல்வேறு ஊர்களில் பிறந்தவர்களாகவும் அங்கு நிலம் உடையவர்களாகவும் இருந்தமையால், அக்கால வழக்கப்படி தத்தம் பெயருக்கு முன் பிறப்பூரையும் சுட்டியுள்ளனர். இதன்வழிக் கூடுதலாக, 85 சோழர் கால ஊர்ப்பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் ஊர்கள் 41. ஒழுகை, வாழ்க்கை, வஞ்சிரம், போகுடி, கடுகா, வரகு, ஈசால் முதலிய ஊர்ப்பெயர்கள் கவனமீர்க்கின்றன. மத்தளங்குடி எனத் தோலிசைக்கருவியின் பெயராலும் ஓர் ஊர் இருந்துள்ளது.

155 ஊர்ப்பெயர்களையும் எண்ணற்ற மக்கள் பெயர்களையும் வழங்கும் இக்கல்வெட்டு, கொடை வழங்கப்பட்ட காலத்தே சமூகத்தில் நிலவிய படிப்பறிவின் நிலையையும் படம்பிடிக்கிறது. ஒரு தனி மனிதக் கொடைக்குப் பொறுப்பேற்று அதை நிறைவேற்ற உளங்கொண்ட 70 ஊர் மக்களின் மனப்பாங்கு அன்றிருந்த கூட்டுறவுப் பார்வையையும் அறச்செயல்களில் மக்கள் காட்டிய ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதுடன், கோயில் விழாக்கள் மக்கள் பங்களிப்புடன் பொலிந்ததையும் வெளிச்சப்படுத்துகிறது.

இராஜராஜர் தேவியின் தளிகளும் மகள்களும்

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் தமக்கெனத் தனி முத்திரை பதித்தவர்களில் அரசர்களைப் போலவே அரசியரும் இருந்தனர். எனினும், கண்டராதித்த சோழரின் தேவியும் உத்தமசோழரின் அன்னையுமான செம்பியன்மாதேவிக்குக் கிடைத்த வெளிச்சம் அவர்களில் பலருக்குக் கிடைக்காமலே போயிற்று. கணவர், மகன் என இருவரும் ஆட்சியில் இருந்ததும் அவர்களுக்கிடையிலும் பின்பும் ஆட்சியிலிருந்தவர்கள் மாதேவியிடம் செலுத்திய அன்புநிறை பத்திமையுமே செம்பியன்மாதேவியின் அரும்பணிகள் சிறக்கவும் தொடரவும் நிலைக்கவும் காரணிகளாயின. முதல் பராந்தகர் காலத்திலிருந்து முதல் இராஜராஜர் காலம்வரை சோழராட்சியைப் பார்த்த பெருமாட்டி அவர். அவர் போல் நெடிய வாழ்வும் பெருமிதப் புரப்பும் கிடைக்காத சூழலிலும் பெற்ற வாழ்க்கையின் சொற்ப காலத்தில் பெருமைக்குரியன செய்து இம்மண்ணின் கலைவளம் கூட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தந்திசத்திவிடங்கி.

சோழநாட்டின் பெருவேந்தராய் மிளிர்ந்த முதல் இராஜராஜரின் பட்டத்தரசியாக, உலகமாதேவி என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இப்பெருமாட்டி இரண்டு கலைக்கோயில்களை உருவாக்கியுள்ளார். இரண்டுமே பாடல் பெற்ற இரு காவிரிக்கரைக் கோயில்களில் அடங்கியுள்ளன. சுவாமிமலைக்கு அருகிலுள்ள வலஞ்சுழித் தளி, பெருவளாகமாய் விரிந்த பெருங்கோயில். அதன் முதலிரு கோபுரங்களுக்கு இடைப்பட்ட பெருவெளியில் தென்புறத்தே இலங்கும் ஒருதள விமானமும் முகமண்டபமும் பெற்ற சேத்திரபாலர் கோயில் தந்திசத்திவிடங்கியால் இராஜராஜரின் 6ஆம் ஆட்சியாண்டில் எழுப்பப்பட்டது. அப்பர் கயிலாயக் காட்சி பெற்ற திருவையாற்று ஐயாறப்பர் கோயிலுள் வடபுறத்தே விளங்கும் உலகமாதேவீசுவரமான வடகயிலாயம் இவ்வம்மையால் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டிற்குச் சற்று முன்பாக வடிவம் பெற்றது. இரண்டு கோயில்களுமே எழிலார்ந்த சிற்பங்களாலும் வளமான கல்வெட்டுகளாலும் நிறைந்துள்ளன.

வலஞ்சுழி சேத்திரபாலர் கோயில்

பல திருக்கோலங்களில் பல்வேறு திருப்பெயர்களுடன் விளங்கும் சிவபெருமானுக்கு ஆடையற்ற கோலங்களாய் அமைந்தவை மிகச் சிலவே. அவற்றுள் மிகப் பழைமையானது அவர் பிச்சையேற்கும் கோலம். நாயை ஊர்தியாகக் கொண்ட பைரவ வடிவம் அவரது மற்றோர் ஆடையற்ற கோலமாகும். இவ்விரண்டு கோலங்களிலும் முற்சோழர் சிற்பங்கள் பலவாய்க் கிடைத்துள்ளன. மூன்றாவதும் சிறப்புக்குரியதுமான வடிவமாக அமைந்த சேத்ரபாலரைத் தமிழ்நாட்டில் செழிக்கச் செய்தவர் தந்திசத்திவிடங்கி.

உத்தமசோழரின் ஆட்சிக்காலத்தில் உலகமாதேவியால் வலஞ்சுழிக் கோயிலில் உள்ளடக்கத் திருமேனியாய் அமைக்கப்பெற்ற சேத்ரபாலர், இராஜராஜர் ஆட்சிக் காலத்தே தனித் திருமுன் பெற்றுக் கற்றளித் தெய்வமாய் இடம்பெயர்ந்தமையைக் கல்வெட்டுகள் பெருமையோடு புகல்கின்றன. சேத்ரபாலர் என்றால், ‘ஊர்க்காவலர்’ என்று பொருள். ‘தாம் இருக்கும் இடத்தைக் காப்பவர்’ என்று இவரை ஆகமங்கள் அடையாளப்படுத்துகின்றன. வலஞ்சுழிக் கோயிலுக்குள் தென்கிழக்கில் மேற்குப் பார்வையாக அமைந்த இத்திருமுன்னே தமிழ்நாட்டில் சேத்ரபாலருக்காக எடுக்கப்பட்ட முதல் தனித் திருக்கோயிலாகும்.

வலஞ்சுழி சேத்திரபாலர்

தமிழ்நாட்டில் காணப்பெறும் மிகச் சிலவான இந்த ஊர்க்காவலர் சிற்பங்களில் தலையாயது உலகமாதேவியால் உருவாக்கப்பட்டது. எட்டுக் கைகளுடன் சுடர்முடி அழகராய் விளங்கும் வலஞ்சுழி ஊர்க்காவலரின் தலையில், இடுப்பில், திருவடியில் பாம்புகள். காவலுக்குரிய கருவிகள் கைகளில் இலங்கக் கோரைப்பற்களுடன் நெடிய திருமேனியராய் விளைந்த இந்தக் காவலருக்குப் பூசைக்கும் அழகூட்டலுக்கும் என உலகமாதேவியும் சோழப் பெருங்குடும்பமும் வாரி வழங்கிய கொடைகள் கல்வெட்டுகளாய் இந்தத் திருமுன் சுவர்களை நிறைத்துள்ளன. இராஜராஜப் பெருவேந்தர் தஞ்சாவூரில் எழுப்பிய இராஜராஜீசுவரத்தின் கொடையாளர் பட்டியலில்கூட இடம்பெறாத அவரது மூன்று திருமகள்களுள் குந்தவையும் நடுவிற் பெண்ணான மாதேவடிகளும் சேத்ரபாலருக்குத் தங்கம் தந்து மகிழ்ந்துள்ளனர். உலகமாதேவியின் வலஞ்சுழி அறிமுகம் சேத்ரபாலர் வழிபாட்டைச் சோழநாட்டில் செழிக்க வைத்தது.

உலகமாதேவீசுவரம், திருவையாறு

ஐயாற்று உலகமாதேவீசுவரம் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டிற்குச் சற்று முன்பாக உலகமாதேவியால் கற்றளியாய் எழுப்பப்பெற்றது. வலஞ்சுழி சேத்ரபாலர் போலவே இங்கும் சோழக் கொடைகள் கல்வெட்டுகளாய்க் கற்சுவர்களை நிறைத்துக் கண்சிமிட்டுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் முதல் இராஜராஜரின் மூன்றாம் மகள் அருமொழி சந்திரமல்லியான கங்கமாதேவியை வெளிச்சப்படுத்துகிறது. வலஞ்சுழி சேத்ரபாலருக்கு விருப்போடு பொன்னையும் நகைகளையும் அள்ளி வழங்கிய குந்தவை நங்கையை உலகமாதேவீசுவரம் கல்வெட்டுகளில் காணமுடியாதபோதும் மாதேவடிகள் வலஞ்சுழிக்கு அளித்தாற் போலவே இங்கும் கொடையாளியாய் ஒளிர்கிறார்.

உலகமாதேவீசுவரத்திற்கு அளிக்கப்பட்ட கொடைகளுள் குறிப்பிடத்தக்கது பாவைக்- கண்ணாடி. இதை, ‘செம்பின் மேல் பொன் அடுக்கிய பாவைக்கண்ணாடியில் ஆடுகிற பாவை ஒன்று, மத்தளம் கொட்டுகிற பாவை ஒன்று, உடுக்கை வாசிக்கிற பாவை ஒன்று, பாடுகிற பாவை ஒன்று, பீடம் ஒன்று உட்படக் காண்ணடி ஒன்று’ என விரித்துப் போற்றும் கல்வெட்டு, அந்நாளைய ஆடலுக்குத் தோல்கருவிகளே பேரிசைக் கருவிகளாய் விளங்கியமை சுட்டுவதுடன், சோழர் கைத்திறம், கலைத்திறம் இவற்றிற்கும் சான்றாய் நிற்கிறது.

வலஞ்சுழி சேத்ரபாலரை உருவாக்கிய சிற்பியின் பெயர் பதிவாகவில்லை என்றாலும், உலகமாதேவீசுவரச் சிற்பியை முதல் இராஜேந்திரரின் கல்வெட்டு அடையாளப்படுத்துகிறது. எழிலார்ந்த சிற்பங்களுடன் உருவான இக்கற்றளியை வடிவமைத்த செம்பியன்மாதேவிப் பெருந்தட்டாரின் உளித்திறம் போற்றித் தட்டாரக்காணியாக நிலம் வழங்கிப் பெருமைப்படுத்திய தந்திசத்திவிடங்கி இராஜராஜருக்குப் பிறகும் பெருமையுடன் வாழ்ந்திருந்தமை இங்குள்ள இராஜேந்திரர் கல்வெட்டுகளால் வெளிச்சமாகிறது.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயில்களிலும் கொடையாளிகளாய்த் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யாத இராஜராஜரின் மகள்கள் மூவரும் உலகமாதேவியின் திருப்பணிகளில் மட்டும் பங்கேற்றுள்ளமை அவர்களை அவ்வம்மையின் அன்புக்குரிய புதல்விகளாய் அடையாளப்படுத்துகிறது. இம்மூவருள் குந்தவை மட்டுமே விமலாதித்தரின் தேவியாய் அறிமுகமாகிறார். பிற இருவரும் இராஜராஜரின் திருமகள்களாக மட்டுமே கல்வெட்டுகளில் காட்டப்பெறுகின்றனர்.

வரலாற்றின் பாதை விசித்திரமானது. ‘நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்’ என்ற இராஜராஜரின் பெருமைக்குரிய தொடரில் அவர் திருமகள்கள் அடைக்கலமாகாமைக்கு எது காரணமோ அதுவே தந்திசத்திவிடங்கி போன்ற படைப்பாளிகளையும் மேகமாய் மறைத்து வேடிக்கை காட்டுகிறது.

அடையாளத்தின் அடையாளம்

இரா. கலைக்கோவன்

‘புனிதவதி’ எனும் பெயர் கொண்டவரில் பலர் அப்பெயரின் பின்னிருக்கும் பெருமை அறிவதில்லை. புனிதவதி வெறும் பெயரன்று. பெண்ணாகப் பிறந்து தம்மைப் பேயாக மாற்றிக் கொண்ட ஓர் அம்மையின் முதற்கட்ட வாழ்க்கையே அந்தப் பெயருடன்தான் ஒட்டியுள்ளது. ஊர்ப்பெயருடன் சிவபெருமானால் வழங்கப்பட்ட அம்மை எனும் சிறப்புப் பெயர் இணையக் காரைக்கால் அம்மையாக அறியப்படும் இப்புனிதவதிப் பெருமாட்டி பல முதல்களின் சொந்தக்காரர்.

சிவபெருமானைப் போற்றி முதன்முதலாகப் பதிகம், வெண்பா, அந்தாதி, கட்டளைக்கலித்துறை பாடிய பெருமைக்குரிய இவர், தம் இறைப்பாடல்களால் திருமுறைகளில் இடம்பெற்று அறுபத்து மூவரிலும் ஒருவரான ஒரே பெண்மணி. அறுபத்து மூன்று தனியடியார் திருமுன்களில் அமர்ந்த திருக்கோலத்தவர் இவர் ஒருவரே. சிவபெருமானின் திருக்கூத்தை உளம் களிக்கப் பாடி, அந்த ஆடலின் களம், ஆடும்போது இறைவன் கொண்ட ஒப்பனை, கைகளில் கொண்ட கருவிகள், ஆடை, அணிகள், ஆடலுக்கு அமைந்த இசை, அதைத் தந்த கருவிகள், அவற்றை இயக்கிய பேய், பூதம் உள்ளிட்ட உடன்கூட்டத்தார், உடன் ஆடியவர்கள், அந்த ஆடலின் அமைவு, அதன் விளைவுகள், ஆடலைக் கண்ணுற்றார் என இறையாடல் நோக்கில் பதிகப் பெருவழியில் பயணப்பட்ட முதல் அடியாரும் அம்மைதான்.

பெருமைகள் சூழ உயர்ந்தோங்கி நிற்கும் இவ்வம்மையை முதன்முதலாக வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்ந்த பெருமை சுந்தரருக்கு உரியது. தம் காலத்தும் தமக்கு முன்னும் வாழ்ந்த இறையடியார்களின் பெயர்களைத் தொகுத்து அவர் பாடிய திருத்தொண்டத்- தொகையில்தான் புனிதவதியான காரைக்கால் அம்மை அறிமுகமாகிறார். அந்த அறிமுகமும் அவரது இயற்பெயராலோ, வழங்கு பெயராலோ அமையவில்லை. அவர் விரும்பி வேண்டிப் பெற்ற பேய்வடிவமே பெயராகிப் பேயாராகவே சுந்தரரால் பதிவுபெறுகிறார் அம்மை. ‘பெருமிழலைக் குறும்பனார்க்கும் பேயார்க்கும் அடியேன்’ என்பது சுந்தரர் வாய்மொழி.

திருத்தொண்டத்தொகையை உள்வாங்கி நம்பியாண்டார் நம்பியால் சற்றே விரிவுசெய்யப்பட்ட அடியார்களின் வரலாறுதான் திருத்தொண்டர் திருவந்தாதி. அதில்தான் அம்மையைப் பற்றிய இரண்டு புதிய செய்திகள் கிடைக்கின்றன. சிவபெருமானைக் காண அம்மை கயிலை சென்றதாகவும் அங்குக் கால்பதித்து நடப்பதை விழையாமல் தலையால் நடந்து சென்றதாகவும் அது கண்ட உமை சிவபெருமானிடம் யாரிவர் எனக் கேட்டதாகவும் கூறும் அந்தாதி, இறைவன், ‘இவர் நம் அம்மை’ என்று மகிழ்ந்துரைத்தாகச் சொல்கிறது.

சிவபெருமானால் அம்மை என்றழைக்கப்பட்ட பெருமையுடன் காரைக்கால் குலதனமாகவும் நம்பியால் அம்மை உயர்த்தப்பட்டுள்ளார். கயிலையில் அம்மை தலைகீழாக நடைபயின்ற காட்சியைத் தாராசுரம் கோயில் விமானம் சிற்பச் செதுக்கலாய்ப் பதிவுசெய்துள்ளது. சென்னை அருங்காட்சியக வாயிலிலுள்ள சோழர் காலச் சிற்பத்தொகுதியொன்றும் கயிலை நடையைக் கொண்டுள்ளது.

0 Ammaiyin Kayilai Nadai Darasuram

அம்மையின் கயிலை நடை, தாராசுரம்

அம்மையின் வரலாறு பேசும் மூன்றாவது நூல் சேக்கிழாரின் பெரியபுராணம். அதில்தான், பல பாடல்கள் வழி அம்மையின் முழுமையான வரலாற்றைச் சேக்கிழார் பகிர்ந்து கொள்கிறார். தம்மைக் காணவந்த அம்மையிடம் சிவபெருமான், ‘உமக்கு வேண்டுவது கேட்க’ என்றதும், இன்ப அன்பு, பிறவாமை, பிறந்தால் இறைவனை மறவாமை கேட்ட அம்மை, மிகச் சிறப்பான ஒன்றையும் வேண்டிப் பெற்றார். ‘பெருமானே, நீ ஆடும்போது உன் திருவடிக்கீழ் நான் இருக்கவேண்டும்’. காரைக்கால் அம்மையின் இந்த வேண்டுகோளைச் சேக்கிழார் எப்படி அறிந்திருக்கமுடியும்? பெரியபுராணத்தைப் பல கோணங்களில் ஆய்வுசெய்த பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கனார் சேக்கிழாரை வரலாற்று ஆய்வாளராக அடையாளப்படுத்துவார். அது உண்மையே என்பதை அம்மையின் வரலாற்றுத் தடங்கள் நிறுவுகின்றன.

பேய், காரைக்கால் குலதனம், கயிலையில் தலைகீழ் நடை எனும் தொடக்க அடையாளங்களுடன் வெளிப்படும் அம்மையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேண்டுகோளைக் கண்முன் காட்சியாக்கியவரும் ஓர் அம்மைதான். பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் பெருவாழ்வு வாழ்ந்த இவ்வம்மையை வரலாறு மழவரையர் மகளாகக் கொண்டாடுகிறது. கண்டராதித்த சோழரின் தேவியாகவும் உத்தமசோழரின் அன்னையாகவும் தம்மைக் கல்வெட்டுகளில் அடையாளப்படுத்திக் கொள்ளும் செம்பியன்மாதேவி எனும் இவ்வம்மையும் காரைக்கால் அம்மை போல் பல முதல்களின் முதல்வர். இவர் காலத்தில்தான் கோயில்களில் மண்டபங்களும் அவற்றில் இறைக்கோட்டங்களும் பெருகின. செப்புத்திருமேனிகள் பலவாய் உருவாயின. பழங்கோயில்கள் புதுப்பிக்கப்பெற்றபோது அங்கிருந்த கல்வெட்டுகள் கருத்தோடு படியெடுக்கப்பட்டு, ‘இதுவும் ஒரு பழங்கற்படி’ என்ற குறிப்புடன் புதிய கட்டுமானத்தில் பதிக்கப்பெற்றன.

கருந்திட்டைக்குடி ஆனந்ததாண்டவரும் காரைக்கால் அம்மையும்

மாதேவியின் சாதனைகளின் சிகரமாய், முற்சோழர்களின் தொடக்கக்காலக் கோயில்களில் கண் தழுவாத இடங்களில் ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சிவபெருமானைத் தாம் திருப்பணிசெய்த கோயில்களில் மண்டபக்கோட்டத்தில் பேருருவினராய் ஆடச்செய்தமையைக் குறிக்கலாம். இந்தச் சிற்பப் பதிவுகள் அனைத்திலும் மாதேவியின் மகத்தான முத்திரையாக சிவபெருமானின் திருவடிக் கீழோ, அருகிலோ காரைக்கால் அம்மை இடம்பெற்றார். கைத்தாளமிடுமாறோ, கைகளைக் கொட்டுமாறோ, பாடியநிலையிலோ, ஆடலைப்போற்றி மகிழுமாறோ அம்மையின் பேயுரு அடையாளமானது. கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயில் ஆனந்ததாண்டவக் காட்சியிலுள்ள அம்மையின் வடிவம் ஈடுஇணையற்ற சிற்பப்பதிவாகும்.

ஆனந்ததாண்டவரும் காரைக்கால் அம்மையும் – கூகூர் மற்றும் திருக்கோடிக்கா

செம்பியன்மாதேவி அடையாளப்படுத்துவதில் முதன்மையர். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் இவர் ஒருவரே தம் கணவரைப் பெயர்சுட்டி சிற்பக் காட்சியாக்கியிருப்பவர். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கோனேரிராஜபுரம் உமைக்குநல்லவர் கோயிலில் கண்டராதித்தர் இறைவனை வழிபடும் காட்சி கல்வெட்டுடன் பதிவாகியுள்ளது. அதே காட்சி அம்மை திருப்பணி செய்த சித்தீசுவரம், ஆனாங்கூர், ஆடுதுறை உள்ளிட்ட வேறு சில கோயில்களிலும் மீள்பதிவாகியுள்ளது. அடையாளத்தின் அடையாளமாய் வாழ்ந்த செம்பியன்மாதேவியே சேக்கிழாருக்குக் காரைக்கால் அம்மையின் வேண்டுகோளைத் தாம் அமைத்த சிற்பக்காட்சிகளின் வழி அடையாளப்படுத்தியவர்.

கோனேரிராஜபுரம் கண்டராதித்தர்

சுந்தரர், நம்பியின் சுட்டல்களாலும் தம் காலத்து வழங்கிய செய்திகளாலும் ஈர்க்கப்பட்டே காரைக்கால் அம்மையின் வேண்டுகோளுக்கு இத்தகு முத்திரைப்பதிவைச் செம்பின்மாதேவி வழங்கியிருக்கிறார். அறுபத்து மூன்று அடியார்களில் சிற்பக்காட்சிகள் வழிப் பல்லவர் காலத்திலேயே இறைவனோடு இணையும் பேறு பெற்ற முதல் அடியவர் சண்டேசுவரர் என்றால், இறையாடலோடு நெருங்கிய முதல் அடியவராகக் காரைக்கால் அம்மையைக் குறிக்கலாம். ஆடலைப் பாடிய முதல் அடியவர் என்ற பெருமையோடு அவ்வாடலை அருகிருந்து காணும் ஒரே அடியவர் என்ற சிறப்பும் என்றென்றும் அம்மைக்கே.

வரலாறு இலக்கிய ஏடுகளிலோ, கல்வெட்டு வரிகளிலோ மட்டுமில்லை. அது கோயில்களில் சிற்பக்காட்சிகளாகவும் கண்சிமிட்டுகிறது. தொடரிழைகளைக் கண்டு தொடர்புபடுத்திக் கொள்பவர்களே வரலாற்றை வளப்படுத்துகிறார்கள்.