பந்தவிளக்குகளும் பங்கேற்ற ஊர்களும்

இரா. கலைக்கோவன்

காலந்தோறும் வரலாற்றைப் பதிவுசெய்ய மக்கள் கையாண்ட முறைகளுள் எழுத்துப் பொறிப்புகள் ஒன்றாகும். எதிலெல்லாம் முடியுமோ அதிலெல்லாம் அவ்வக் காலத்து வழக்கிலிருந்த எழுத்துகளால் அறிந்தவற்றையும் நடந்தவற்றையும் எழுதத் தொடங்கியவர்களால் கல்லில் செதுக்கப்பட்ட பதிவுகளே கல்வெட்டுகள் என அறியப்படுகின்றன. இந்தியாவில் மிக அதிக அளவிலான கல்வெட்டுகள் தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே கிடைப்பதாக இதுவரை வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன. முறை சாரா திருப்பணிகளால் காலந்தோறும் அழிவுக்குள்ளான கல்வெட்டுகள் ஏராளம் என்றாலும், எஞ்சியிருப்பவை பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடர் நழுவாமால் பகிர்ந்துகொள்கின்றன. அத்தகு கல்வெட்டுகளுள் ஒன்றுதான், பந்தவிளக்குகளையும் அவற்றுக்கான பொறுப்பைப் பகிர்ந்துகொண்ட ஊர்களையும் வெளிச்சப்படுத்துகிறது.

திருமுதுகுன்றம் கோயில்

தமிழ்நாட்டின் பெருங்கோயில்களுள் ஒன்றைத் தக்கவைத்துள்ள தேவார ஊர்களுள் ஒன்றான திருமுதுகுன்றம் இன்றைக்கு விருத்தாசலமாக அறியப்படுகிறது. திருமுறைப் பாடல் பெற்ற இக்கோயில் இறைவனைப் பதிகங்கள் முதுகுன்றத்தார் என்றழைக்க, கோயில் வளாகக் கல்வெட்டுகள் திருமுதுகுன்றமுடைய நாயனார் என்கின்றன. சோழஅரசி செம்பியன்மாதேவியால் கற்றளியாக்கப்பட்ட பல கோயில்களில் முதுகுன்ற வளாகமும் ஒன்றாகும். இவ்வாளகத்துள்ள, ‘ஸ்ரீபராந்தக தேவரான பெரியசோழனார் மகனார் கண்டராதித்ததேவர் தேவியார் மழபெருமானடிகள் மகளார் ஸ்ரீஉத்தமசோழர் தங்கள் ஆச்சி செம்பியன்மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்டது ஸ்ரீகோயிலும் ஸ்நபனமண்டபமும் கோபுரமும் சுற்றாலையும் பரிவாரக் கோயில்களும்’ எனும் உத்தமசோழரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இங்குள்ள சிறப்பான பதிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மிகச் சில கல்வெட்டுகளே ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகையில் அவரது தலையாய உறவுமுறைகளை விதந்தோதுகின்றன. அந்த வகையில் பேறுபெற்றவர்களாய்ச் செம்பியன்மாதேவியையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்த பூதிஆதித்த பிடாரியையும் குறிக்கலாம். திருமுதுகுன்றம் கல்வெட்டு செம்பியன்மாதேவியாரின் தந்தை, மாமனார், கணவர், மகன் என மூன்று தலைமுறை ஆண் உறவுகளைப் பகிர்ந்துகொள்கிறது. அன்னையைக் குறிக்கும், ‘ஆச்சி’ என்ற அழகான தமிழ்ச் சொல்லும் கோயிற்கட்டடக்கலை சார்ந்த கலைச்சொற்களும் இக்கல்வெட்டின் கொடைகளாகும். இது குறிக்கும் சுற்றாலையே இன்று பிரகாரம் என மாறியுள்ளது. ‘கோபுரம்’ என்ற கோயில் நுழைவாயில் கட்டுமானத்தைக் குறிக்கும் மிகச் சில பழங்கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மறக்கமுடியாத வரலாற்று நாயகி செம்பியன்மாதேவியால் கட்டப்பெற்ற இக்கோயிலுக்குச் சோழ அரசர்கள் காலத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு அளப்பரிய கொடைகள் அளிக்கப்பட்டன. அவற்றுள் தனித்த சிறப்புடன் திகழும் கொடை, பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனான குலோத்துங்கசோழக் காடவராயரால் வழங்கப்பட்டது. இரண்டாம் குலோத்துங்கர் காலச் சிற்றரசரான இவர், குலோத்துங்கர் மகனான இரண்டாம் இராஜராஜர் காலத்தில் திருமுதுகுன்றம் கோயிலில், ‘குன்றப்பெருமாள்’ என்ற திருப்பெயரில் இறைத்திருமேனி ஒன்றை எழுந்தருளுவித்தார்.

அத்திருமேனிக்காகவும் வைகாசி, ஆவணிமாதக் கொண்டாட்டங்களாகவும் கோயிலில் 36 நாள்கள் நிகழ்ந்த விழாக்களில் பந்தவிளக்குகள் ஏற்ற ஆகும் செலவுகளுக்காகக் காடவராயர், கோயில் கருவூலத்தாரிடம் 2810 காசு கொடையாகத் தந்தார். இக்காசை வைப்புநிதியாகக் கொண்டு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியால் 36 நாள் விழாவிலும் நாளும் 562 பந்தவிளக்குகள் எரிக்கவேண்டும் என்பது திட்டம். கோயிலார் கொடைத்தொகையை 70 ஊர்களுக்குப் பகிர்ந்தளித்து, அதை முதலாகக் கொண்டு விளக்கேற்றும் பொறுப்பை அந்தந்த ஊராட்சி ஏற்குமாறு செய்தனர். ஒரு விளக்கிற்கு 5 காசு வைப்புநிதி எனக் கணக்கிடப்பட்டு 2810 காசும் 70 ஊராட்சியினரிடம் பிரித்துத் தரப்பட்டது. காசு பெற்ற ஊராட்சியினர் கொடையை முதலாகக் கொண்டு அதன் வட்டியில் விளக்கேற்றும் பொறுப்பேற்றனர்.

திருமுதுகுன்றம் விமானம்

‘விளக்கேற்றக் கொடை, அதைப் பெற்ற ஊராட்சி அதன் வட்டிகொண்டு விளக்கேற்ற ஒப்பியமை’ என்பதே இக்கல்வெட்டின் அடிநாதச் செய்தி. ஆனால், இக்கல்வெட்டு வழங்கும் சமூகப் பொருளாதாரத் தரவுகள் பலவாகும். கோயிலிலுள்ள ஏழிசைமோகன் திருமண்டபத்தின் வடசுவரில் தொடங்கப்பட்டு, அங்கு இடம்போதாமையின் தென்சுவரில் தொடரப்பட்ட இக்கல்வெட்டு, தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் மிக நீளமான கல்வெட்டுகளுள் ஒன்றாகும். எத்தனையோ வகையான விளக்குகள் பற்றிப் பேசும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில், மிக அரிதாகவே இக்கல்வெட்டுச் சுட்டும் பந்தவிளக்கு பயின்று வந்துள்ளது. முதுகுன்ற விழாக்களில் எரிந்த இவ்விளக்குகளின் 562 என்ற உயர் எண்ணிக்கையும் வியக்கவைக்கிறது. ஒரு விளக்கிற்கு 5 காசெனக் கொடைப்பணம் பெற்ற ஊர்களால், 12ஆம் நூற்றாண்டில் பெண்ணாகடம், இருங்கோளப்பாடி, முதுகுன்றம் எனும் மூன்றிடங்களைச் சுற்றிலுமிருந்த பல ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் பெயர்களுடன் பழைய ஊர்களாக 32 உள்ளன. பிராமணர் குடியிருப்புகளாக 11, வணிகக்குடியிருப்புகளாக 2, கோயில் நிலமிருந்த ஊர்களாக 5 அமைய, 20 ஊர்கள் பல்வேறு பின்னொட்டுகளோடு முடியும் பெயர்களில் இருந்தன.

பெற்ற காசுக்கும் அதற்கான பந்தவிளக்கிற்கும் ஒவ்வோர் ஊராட்சியிலும் பொறுப்பேற்றவர்கள் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவேண்டும். ஆனால், அவர்களில் சரிபாதியினர் எழுத்தறிவற்றவர்களாய் இருந்தமையால் அவர்களுக்காக வேறு சிலர் கையெழுத்திட்டுள்ளனர். எழுத்தறிவின்மையை, ‘சையிஜையானமை, கைமாட்டாமை’ என்ற தொடர்களால் கல்வெட்டு குறிக்கிறது. சில ஊர்களில் பொறுப்பாளர்கள் அனைவருக்குமே பிறர் கையெழுத்திட்டுள்ளனர். ஓரிரு ஊர்களில் பொறுப்பேற்ற அனைவர் சார்பிலும் ஒருவரே கையெழுத்திட்டுள்ளார். மிகச் சில ஊர்களிலேயே பொறுப்பேற்ற அனைவரும் எழுத்தறிவுள்ளவர்களாய் விளங்கியுள்ளனர். பொறுப்பேற்ற அனைவருமே ஆண்களாக இருப்பதால், ஊராட்சிப் பொறுப்பில் இந்த 70 ஊர்களில் பெண்கள் யாரும் இல்லாமை தெளிவு. புஞ்சி, குப்பை, பிச்சன், சோறன், பன்றி, ஆவணம், மாட்டத்தான் எனச் சிலர் பெயர் கொண்டிருக்க, குடிதாங்கி, அறம், திருவரைசு போன்ற பெயர்களும் மக்களுக்கு இருந்தன.

பொறுப்பேற்றவர்களுள் பலர் பல்வேறு ஊர்களில் பிறந்தவர்களாகவும் அங்கு நிலம் உடையவர்களாகவும் இருந்தமையால், அக்கால வழக்கப்படி தத்தம் பெயருக்கு முன் பிறப்பூரையும் சுட்டியுள்ளனர். இதன்வழிக் கூடுதலாக, 85 சோழர் கால ஊர்ப்பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் ஊர்கள் 41. ஒழுகை, வாழ்க்கை, வஞ்சிரம், போகுடி, கடுகா, வரகு, ஈசால் முதலிய ஊர்ப்பெயர்கள் கவனமீர்க்கின்றன. மத்தளங்குடி எனத் தோலிசைக்கருவியின் பெயராலும் ஓர் ஊர் இருந்துள்ளது.

155 ஊர்ப்பெயர்களையும் எண்ணற்ற மக்கள் பெயர்களையும் வழங்கும் இக்கல்வெட்டு, கொடை வழங்கப்பட்ட காலத்தே சமூகத்தில் நிலவிய படிப்பறிவின் நிலையையும் படம்பிடிக்கிறது. ஒரு தனி மனிதக் கொடைக்குப் பொறுப்பேற்று அதை நிறைவேற்ற உளங்கொண்ட 70 ஊர் மக்களின் மனப்பாங்கு அன்றிருந்த கூட்டுறவுப் பார்வையையும் அறச்செயல்களில் மக்கள் காட்டிய ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதுடன், கோயில் விழாக்கள் மக்கள் பங்களிப்புடன் பொலிந்ததையும் வெளிச்சப்படுத்துகிறது.