மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 5. பெரிய கூத்தும் பேயம்மையும்

அன்புள்ள வாருணி, ஆடற்போட்டியில் சிவபெருமான் காளியை வென்றதும் அதன் வழி ஆடல்நாயகரானதும் பத்திமைக் காலப் பதிகங்களில் சம்பந்தராலும் அப்பர் பெருமானாலும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. காளியை வெல்ல இறைவன் ஆடிய ஊர்த்வதாண்டவத்தைப் பெரிய கூத்து என்பார் சம்பந்தர். சொக்கம், நிருத்தம் என இறைவன் ஆடிய அனைத்து ஆடல்களிலும் இணைய ஆடி சமநிலையிலிருந்த காளியை, காலை உயர்த்திய ஆடலால் தோல்வியுறச் செய்தவர் சிவபெருமான். ‘சொக்கத்தே நிருத்தத்தே தொடர்ந்த மங்கை’ என்று இச்செய்தியை நிறுவுகிறது சம்பந்தரின் பதிக அடி. காளியைக் குணஞ்செய்த கூத்தாகவும் இந்த ஊர்த்வதாண்டவம் சம்பந்தரால் போற்றப்படுகிறது.

பல்லவர் கற்றளிகளில் பெருஞ்சிற்பமாகக் காட்டப்பட்டிருக்கும் சிவபெருமானின் ஊர்த்வதாண்டவக் கோலங்களின் அருகே காளியின் ஆடலும் சில தளிகளில் உள்ளமை பதிகங்களைப் பல்லவர்கள் பழுதறப் பின்பற்றியமை உணர்த்தும். பல்லவர்களும் பிற்சோழர்களும் பெரிதும் போற்றிய இப்பெரிய கூத்தை, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தூண் சிற்பங்களாக நந்திப்பந்தலிலும் ஆயிரங்கால், கம்பத்தடி மண்டபங்களிலும் இடம்பெறச் செய்தவர்கள் நாயக்கர்கள்.

கம்பத்தடி அம்மை

இம்மூன்று பதிவுகளுள் முதலிரண்டும் அளவில் சிறியன. கம்பத்தடிச் சிற்பம் பேரளவினது. அருகில் அதே அளவில் காளியின் ஆடலையும் உடன் கொண்டது. பல்லவ, பிற்சோழர் கால ஊர்த்வர்களுக்கு இல்லாத பெருமையாக, இங்கே அப்பன் ஆடல் காண, அவர் தாயும் உடனிருப்பதுதான். ஆம் வாருணி, கயிலை வந்த காரைக்காலம்மையை, ‘இவர் யார்’ என்று உமை கேட்க, ‘நம் அம்மை’ என்று சிவபெருமானே கூறியதாகச் சேக்கிழார் பதிவு செய்துள்ளார்.

நாயக்கர் கைவண்ணங்களில் பல தளிகளில் பேரளவுச் சிற்பங்களாய் ஊர்த்வதாண்டவர்களைப் பார்க்க முடிந்தாலும் அவற்றுள் சில காரைக்காலம்மையை உடன் கொண்டிருந்தாலும் மீனாட்சி ஊர்த்வரும் உடனிருக்கும் அம்மையும் தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் சிற்பப் புதையல்கள் எனலாம்.

இடப்புறம் தலைவைத்துப் படுத்திருக்கும் முயலகன் மீது இடப்பாதம் இருத்தி, வலக்காலை மார்புக்கு முன்னாக மேலுயர்த்தியுள்ளார் சிவபெருமான். அவரது சடைமகுட முகப்பில் மண்டையோட்டிற்கு மாற்றாக பைரவர் தலை. பத்துக் கைகளுடன் நிகழும் இந்த ஆடலில் மேலிருந்து கீழாக அவரது இடக்கைகள் தீயகல், மான், வில், கேடயம், வஜ்ரமணி கொள்ள, வலக்கைகளில் உடுக்கை, மழு, முத்தலைஈட்டி, குத்துவாள், அம்பு.

ஒரு பெருந்தூணின் முன்புறத்தே உருவாகியுள்ள இப்பெருஞ்சிற்பத்தின் தோற்றமும் எழுச்சியும் சொற்களில் வண்ணிக்க இயலாதவை. சிவபெருமானின் இடப்புறம் குடமுழவிசைப்பவராய் நந்திகேசுவரர். வலப்புறம் காரைக்காலம்மை. ஆனந்ததாண்டவருடன் அமர்நிலையில் காட்சிதரும் அம்மை இங்கே இறைவனின் ஊர்த்வத்திற்கேற்ப அதே எழுச்சியைத் தாமும் கொண்டவராய் எழுந்து நின்று குனித்தாடுகிறார். தாம் தரும் தாள இசைக்கேற்ற வளைந்த கோலமென்றாலும் முகம் பார்வையாளருக்காய்த் திரும்பியுள்ளது.

ஆயிரக்கால் ஊர்த்வர்

ஆயிரக்கால் மண்டபத்திலும் நந்தி மண்டபத்திலும் உள்ள ஊர்த்வதாண்டவக் கோலங்களும் தூணோடு ஒட்டிப் பிறந்தவையே. ஆனால், அளவில் சிறியவை. இரண்டனுள் ஆயிரக்கால் சிற்பம் சற்றே பெரியது. இங்கும் இறைவனின் இடத்திருவடிக் கீழ் முயலகன். என்றாலும், அவன் படுத்திருக்கும் முறை மாறுபட்டுள்ளது. இறைவன் வலக்கால் மேலுயர நெடுஞ்சடை மகுடராய் 12 கைகளுடன் ஆடுகிறார். அவரது வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கையில் தீயகல். பின் கைகளுள் மேலிருப்பன ரேசித வீச்சில். பிற கைகளில் மணி, அம்பு, வில் உள்ளிட்ட பல பொருள்கள்.

இரு கைகளையும் ரேசிதமாக்கி ஊர்த்வம் நிகழ்த்தும் தமிழ்நாட்டின் ஒரே தாண்டவர் என்ற பெருமை ஆயிரக்கால் மண்டபத்தாருக்குக் கிடைத்துள்ளது. நாட்டிய சாத்திரம் பேசும் எண்ணற்ற அழகுக் கைகளுள் ஒன்றுதான் இந்த ரேசிதக் கை. நாயக்கர் காலத்திலும் நாட்டியசாத்திரம் வழக்கிலிருந்ததை இந்த ஊர்த்வக் கைகள் நன்கு உணர்த்துகின்றன.

இத்தொகுதியில் காரைக்காலம்மை கால்களை முழங்காலளவில் மடக்கி அவற்றையே இருக்கையாக்கி அமர்ந்துள்ளார். இந்த வியத்தகு அமர்வு அவர் இடம்பெற்றுள்ள ஆனந்ததாண்டவச் சிற்பத்திலும் உள்ளது. முகம் பார்வையாளருக்காய்த் திரும்பியிருந்தாலும் அம்மையின் கைத்தாளங்கள் தாளம் தருவதில் தவறவில்லை. இத்தொகுதியின் மற்றொரு சிறப்பாய் ஊர்த்வரின் இருபுறத்தும் வணங்கிய நிலையிலுள்ள முனிவர்களைச் சுட்டலாம்.

நந்திப்பந்தல் ஊர்த்வர்

நந்திப்பந்தல் ஊர்த்வரும் ஆயிரக்கால் ஊர்த்வர் போலவே பல கையினர். இத்தொகுதியின் தனித்துவமாக இறைவனின் இடப்பாதம் தளத்தில் இருப்பதைச் சுட்டலாம். ஆம், வாருணி, இங்கு முயலகன் இல்லை. இது போல் முயலகனற்ற இறையாடல் காட்சிகள் ஆங்காங்கே காணக் கிடைப்பினும் மீனாட்சிக் கோயிலில் இது ஒன்றே அத்தகு அமைப்பிலுள்ளது. இங்கு அம்மை, கம்பத்தடி மண்டபக் கோலத்தில் குனித்தாடிக் கண்களை மலர்விக்கிறார். கைகளில் செண்டு தாளங்கள்.

புதுமண்டப ஊர்த்வர்

மதுரையின் புதுமண்டபத்திலும் பேரளவிலான ஊர்த்வதாண்டவர் அதே அளவிலான காளியுடன் கண்களுக்கு விருந்தாகிறார். இங்கு இறைவனுக்கு 10 கைகள்தான். வலக்கைகளில் ஒன்று காக்கும் குறிப்பிலிருக்க, பிற கைகளில் முத்தலைஈட்டி, குத்துவாள், மழு, உடுக்கை. இடக்கைகளில் முன் கை வேழக்கையாய் வலப்புறம் வீசப்பட்டுள்ளது. மற்றொரு இடக்கையில் நந்திக் கொடித்தண்டு. ஆடும் இறைவனின் கைகளில் மிக அரிதாகவே இடம்பெறும் இந்நந்திக் கொடித்தண்டு பரங்குன்றம் ஆடவல்லான் கையில் முற்பாண்டியர் படைப்பாய் பளிச்சிடுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம் வாருணி.

இறைவன் இடுப்பின் இருபுறத்துமுள்ள மகரங்கள் அழகான திருவாசியை இறைவனுக்குப் பின்னணியாக்க, முயலகனின் கைப்பாம்பு நெடுக ஊர்ந்து இடப்புறம் நெளிந்து இறைவனின் இடக்காலருகே குடமுழவு வாசிக்கும் வாணனின் முழவுக்குத் தளமாகித் தலைவிரித்துள்ளது. இது மீனாட்சிக் கோயில் ஆனந்ததாண்டவப் பதிவினும் மாறுபட்ட விரிவாக்கமாகும்.

இத்தொகுதியிலும் அம்மை கம்பத்தடிக் கோலத்திலேயே காட்சியாகிறார். அதே எழுச்சி, அதே குனிப்பு, அதே பெருமிதம். கைகள் சிதைக்கப்பட்ட நிலையிலும் அம்மையின் பேரன்பை உடல்மொழியால் வெளிப்படுத்தும் இச்சிற்பம் நாயக்க முத்திரைகளுள் ஒன்றெனலாம்.

வாருணி, நாயக்கர் காலப் படைப்பாற்றல் யார் காலத்திற்கும் குறைந்ததன்று. கதைகள் பெருகியதால் காட்சிகள் விரிந்து படைப்புகளில் இறுக்கம், நெருக்கம் இருந்தாலும் காதலோடு காண்பாருக்கு அவை தரவல்ல சுகங்கள் பார்த்தவரே அறிதல் கூடும். அடுத்தமுறை மதுரை சென்றால் இந்தப் பெருங்கூத்துப் படைப்புகளை சம்பந்தர், நாவுக்கரசர், காரைக்காலம்மையின் பதிகப் பின்புலங்களோடு பார்த்துவிட்டு வா. இலக்கியம் இல்லாமல் கலையா? கலை இல்லாமல் வரலாறா? வரலாறு இல்லாமல் வாழ்க்கையா?

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 3. மீனாட்சிநாயக்கர் விளக்குமாலை

அன்புள்ள வாருணி, நீ எழுதியிருப்பது சரிதான். தேவார மூவரில் நீண்ட காலம் மதுரையில் தங்கியவரும் அதைப் பாடிப் பதிகம் வளர்த்தவரும் சம்பந்தர்தான். அதனால்தான், ஆலவாய்க்கு 9 பதிகங்கள் வாய்த்துள்ளன. சம்பந்தருக்கும் மதுரைக்கும் உள்ள உறவைச் சேக்கிழார் விரிவாகப் பேசியிருக்கிறார். அது தொடர்பான பெரியபுராணக் காட்சிகள் படிக்கத் தக்கவை. பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியின் அழைப்பேற்று அரசரின் வெப்புநோய் தீர்த்ததுடன், சைவத்தின் பேரெழுச்சியைப் பதிவுசெய்தவர் சம்பந்தர். அவரது பதிகங்களே அதற்குச் சான்று. நாவுக்கரசரும் மதுரைக் கோயிலைப் பாடியுள்ளார். சுந்தரர் பதிகந்தான் கிடைக்கவில்லை. என்றாலும், சேக்கிழாரின் கூற்றை ஏற்றால் சுந்தரரும் ஆலவாய் வந்தமை புலப்படும்.

பத்திமைக் காலத்தில் பாண்டியநாட்டின் தனிப்பெருங் கோயிலாய்த் திகழ்ந்த ஆலவாய் தொடர்ந்து வந்த அரசமரபுகளால் புரக்கப்பட்டாலும், அதன் மலர்ச்சி குன்றிய காலமும் இருக்கத்தான் செய்தது. அதனால்தான், கோயில் வளாகத்தில் பழங்கல்வெட்டுகளைக் காணக்கூடவில்லை. நடுவணரசின் தொல்லியல்துறை இவ்வளாகத்திலிருந்து படியெடுத்துள்ள 64 கல்வெட்டுகளில் முதலாம் சடையவர்மர் குலசேகரபாண்டியரின் கல்வெட்டே (பொ. கா. 1194) காலத்தால் முற்பட்டது.

வாருணி, மதுரைக் கோயில் என்றாலே நம் நினைவுக்கு வருபவர்கள் நாயக்க அரசர்கள்தான். ஆனால், வரலாற்றுச் சான்றுகளைப் புரட்டினால், இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலமே இக்கோயிலை வளப்படுத்தியதென்பது புலப்படும். இங்குள்ள 44 கல்வெட்டுகள் அவர்தம் கொடையுள்ளம் காட்டுகின்றன. நடுவணரசின் கணக்குப்படி விஜயநகர நாயக்க அரசர்களின் பதிவுகளாய் இங்குள்ளவை 19தான். இந்தச் சூழலில்தான் வாருணி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை எங்கள் ஆய்வுமையம் அணுகியது.

ஒலி ஒளிக் காட்சிக்கான கருத்துருவைப் பெறக் கோயில் முழுவதும் உலாவந்தோம். அங்குலம் அங்குலமாக அவ்வளாகத்தை ஆராய்ந்த சூழலில்தான், அதுவரை வெளிச்சம் காணாத பல காட்சிகள் எங்களுக்காகவே காத்திருந்தாற் போல் பளிச்சென்று தோற்றம் தந்தன. கோயிலின் எல்லாப் பகுதிகளிலும் இப்படி இலைமறை காயாக இருந்து கண்காட்டியவற்றுள் இந்த விளக்குத்தோரணங்களும் அடக்கம்.

நாயக்க அரசமரபின் நாயகராக விளங்கிய திருமலை நாயக்கரைக் கேள்விப்படாதவர் இருக்கமுடியாது. அவருடைய அமைச்சர்களுள் ஒருவராக வாழ்ந்தவர்தான் மூன்றாம் மீனாட்சி நாயக்கர். அவரை ஆதிமீனாட்சிநாயக்கர் என்று பெருமைப்படுத்துகிறது கல்வெட்டு. ஆலவாய்க் கோயிலைத் திருமலைநாயக்கர் விரிவாக்கம் செய்தபோது தம் பணியாக ஒரு மண்டபத்தை எடுப்பித்தார் இவ்வமைச்சர். அவர் பெயராலேயே இன்றும் விளங்கும் அம்மண்டபத்தின் பின்பகுதியில் அதையடுத்துள்ள இருட்டுமண்டபமாம் முதலிப்பிள்ளை மண்டபத்தின் முன்னுள்ளது மூன்றாவது விளக்குத்தோரணம். அதில் நம் பேராசிரியர் நளினி கண்டறிந்த 82 வரிகளில் அமைந்த தமிழ் எழுத்துப் பொறிப்பு இந்த விளக்குமாலையை, ‘ஆதிமீனாட்சி நாயக்கர் உபயம்’ என்கிறது.

ரோஸ்பீட்டர் தோரணம் போலவே கீழே யானைகள் மேலே காவலர்கள் கொண்டெழும் இந்தத் தோரணம், இருபுறத்தும் 6. 89 மீ. உயர்ந்து, பிறைநிலவாய் வளைந்து, கீர்த்திமுகத் தலைப்பில் முடிகிறது. வளைவின் தொடக்கத்தில் பக்கத்திற்கு ஒருவராக உச்சிக்கொண்டையிட்ட வானவமகளிர் ஒரு கையில் அகலும் மறு கையில் மணியுமாய் நிற்க, இருபுறத்தும் அவர்களைத் தொடர்பவர்களாய் உயர்த்திய முழங்காலுடன் ஊர்த்வஜாநு கரணத்தில் பக்கத்திற்கு 13 அழகியர். இரு கைகளிலும் மலர் கொண்ட இந்தக் கரணச் செல்விகளால் நாயக்கர் தோரணம் ரோஸ்பீட்டர் படைப்பை அழகில் விஞ்சி நிற்கிறது. செல்வியர் தலைக்கருகே நீளும் தண்டுகள் அகலேந்த, கீர்த்திமுகத்திற்குக் கீழிருக்குமாறு யானைத்திருமகள்.

மீனாட்சிநாயக்கரின் ஆதிதோரணம் சிதைந்ததால் பொ. கா. 1898 நவம்பர் 21ஆம் நாள் சிவகங்கை ஜமீன்தார் கௌரி வல்லபதேவர், மீனாட்சி நாயக்கரின் வாரிசு பங்காரு திருமலைசாமி மேலாண்மையில் செய்து வைக்கப்பட்ட இத்தோரணம் ஆவியூரை உள்ளடக்கிய 5 ஊர்களின் வருவாயில் உருவானது. 1300 அகல்களுடன் எண்ணிக்கையிலும் வடிவமைப்பிலும் கம்பீரத்திலும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விளக்குமாலைகளையும் விஞ்சி ஒளிரும் இந்த அழகிய தோரணத்தைச் செய்த பெருமைக்குரியவர் திருநெல்வேலி முத்துசாமி ஆசாரியின் மகனான திரு. இராசகோபால் ஆசாரி.

கலைத்திறன் படைத்த அவரது கைவளமும் கற்பனையாற்றலும் மின்னி மிளிரும் இந்த விளக்குமாலை 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த பித்தளைப் படைப்புகளின் செழுமைக்குச் சான்றாய் நம் கண்முன் நிற்கிறது. இதிலுள்ள எழுத்துப் பொறிப்பு இத்தோரணத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட பித்தளையின் அளவைத் தருவதுடன், தாங்கல்கள், மரஏணி ஆகியவற்றிற்கான செலவினங்களையும் கணக்குச் சுத்தமாகப் பதிவுசெய்துள்ளது.

இந்த எழுத்துப்பொறிப்பு இல்லாது போயிருந்தாலோ அல்லது கண்டறியப்படாதிருந்தாலோ தோரணத்தின் வரலாறே இருளடைந்திருக்கும். ஒளி உமிழவே உருவாக்கப்பட்ட இந்த அகல்தோரணத்தில், அதன் வரலாற்றைப் பொறித்தவர்களுக்கும் அதைத் தம் கடினஉழைப்பால் கண்டறிந்து வெளிப்படுத்தியவருக்கும் நன்றி சொல்வோம் வாருணி. இது போன்ற பதிவுகள்தான் நமக்கு வரலாறு தருகின்றன. அதனால், இத்தகு பதிவுகளை உருவாக்குவதுடன் உருக்குலையாமல் காப்பதும் நம் கடமை.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.