மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 2. ரோஸ்பீட்டரும் சையது இஸ்மாயிலும்


அன்புள்ள வாருணி, நீயும் நானுமாய் மதுரைக் கோயிலைப் பார்த்தபோது, ‘எவ்வளவு பெரிய வளாகம்!’ என்று நீ வியந்தது உனக்கு நினைவிருக்கலாம். அப்பயணத்தின் போது மதுரையைப் பற்றி மிகுதியும் பேசியதை நினைவுகூர்கிறேன். நீ குறிப்பிட்டாற்போலத் தமிழ்நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான பேரூர்களில், சங்க இலக்கியம் ஒன்றுக்குத் தலைப்பாகும் பேறு மதுரைக்கு மட்டுமே வாய்த்தது. மறக்கக்கூடிய இலக்கியமா மதுரைக்காஞ்சி!

‘மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை’ என்றல்லவா அதில் மதுரையை வியந்திருக்கிறார் மாங்குடி மருதனார். அந்த மதுரையின் மகுடம்தான் மீனாட்சி சுந்தரேசுவரர் வளாகம். அதிலுள்ள பெருமண்டபங்களுள் ஒன்றே வீரவசந்தராயர் மண்டபமாய் அழைக்கப்படுகிறது. பொ.கா. 1611இல் மதுரை நாயக்க அரசமரபின் 6ஆம் பட்டமாகக் கருதப்படும் முத்து வீரப்ப நாயக்கரால் எழுப்பப்பட்ட இம்மண்டபத்தை மதுரைக் கோயில் திருப்பணிமாலை, ‘மண்டபக் குலதீபம், மண்டபங்களுக்கு நாயன், மண்டப சிரோ ரத்தினம்’ என்றெல்லாம் போற்றிக் களிக்கிறது.

புதுமண்டபத்தை ஒத்த நீளமுள்ள இந்த வீரவசந்தராயர் மண்டபத்தின் பின்பகுதியில்தான் பேச்சிமண்டப வாயிலுக்கு அழகூட்டுமாறு அமைந்துள்ளது இரண்டாம் விளக்குத்தோரணம். அதன் இருபுறப் பித்தளைத்தூண் தாங்கல்களும் 6. 13 மீ. உயரமுடையவை. 70 செ. மீ. அகலமுள்ள அவற்றைத் தந்தங்களில் பூண்கள், முகபடாம், மணிமாலைகள், தாள்செறிகளுடன் பக்கத்திற்கு ஒன்றாய் நிற்கும் எழிலார்ந்த யானைகள் தாங்க, மேற்றளங்களில் கால்களை சுவஸ்திகமாய் இருத்தியுள்ள காவலர். அவர்தம் கைகளில் ஒன்று கடகம் காட்ட, மற்றொன்றில் உருள்பெருந்தடி.

இந்தக் காவலர் மீது வளரும் அகல் அடுக்குகள் பிறைநிலவாய் வளைந்து உச்சியில் கீர்த்திமுகம் கொண்டு முடிகின்றன. கீர்த்திமுக வாயிலிருந்து வெளிப்படும் தீச்சுடர்கள் மகரங்களாக, பிறைவளைவில் கொடிக்கருக்குகள் தழுவிய தாவுயாளிகள். பக்கத்திற்குப் பதின்மூன்றாய் வளரும் அந்த யாளிகளும் அகல் தாங்கிகள்தான் வாருணி. தூண்கள் பிறையென வளையுமிடத்துப் பதக்கமாலையுடன் ஒரு கையில் அகலும் ஒரு கையில் மணியுமாய்ப் பக்கத்திற்கொரு வானவர்.

கீர்த்திமுகத்திற்கு நேர் கீழே தாமரைமலரில் அர்த்தபத்மாசனத்தில் பின் கைகளில் தாமரை மொட்டுகளுடன் யானைத்திருமகள். முன் கைகள் காப்பும் அருளும் காட்ட, அம்மையின் இருபுறத்தும் துளைக்கைகளில் நீர்க்குடங்களுடன் அலங்கரிக்கப்பட்ட யானைகள்.

கம்பீரமும் கவர்ச்சியுமாய்த் தாமரை அடுக்கென விரிந்து கண்களை நிறைக்கும் இந்த விளக்குமாலையிலும் இரண்டு எழுத்துப் பொறிப்புகளை நளினி கண்டறிந்தார். பொ. கா. 1819இல் செதுக்கப்பட்டுள்ள அவற்றுள், மத நல்லிணக்கப் பார்வையில் அமைந்திருக்கும் வலப்புறப் பொறிப்பு அக்காலத்தே மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக விளங்கிய ஆங்கிலேயரான ரோஸ்பீட்டரின் ஆணைக்கிணங்க, மதுரை மாடக்குள வட்டாட்சியர் பொறுப்பிலிருந்த திரு. சையது இஸ்மாயில் அனைத்து மக்களுக்குமாக இந்த விளக்குத்தோரணத்தை அமைத்ததாக அறிவிக்கிறது.

பூசநட்சத்திரம் விளங்கிய பிரமாதி ஆண்டு ஆவணி 30இல் மீனாட்சிசுந்தரேசுவரர் திருமுன்னில் வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைக்கப்பட்ட இம்மகரதோரண விளக்குமாலையில் 616 விளக்குகள் இருப்பதாகக் கூறும் இப்பதிவு, இதற்கான வெண்கலம், மெழுக்கு வகையறா, சில்லறை சாமான், கூலி இவற்றிற்காக 1500 பணம் செலவழிக்கப்பட்டதாகச் சொல்வதுடன், இவ்விளக்குத்தோரணம் எந்நாளும் சுடர்விட்டு ஒளிர வேண்டுவதுடன், இதைக் காணும் மக்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் அருளைச் சிந்திக்கவேண்டும் என்றும் இறைஞ்சுகிறது.

புகழ் பெற்ற இந்துக் கோயிலில் மக்கள் இறையருள் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கிறிஸ்துவ ஆட்சியரும் இசுலாமிய வட்டாட்சியரும் செய்தமைத்த இந்த மகரதோரண விளக்கு, சிலம்பம் மாம்பழம் ஆசாரி மகன் முத்து வயிரவன் ஆசாரி, காமாட்சி ஆசாரி தம்பி பரிமணம் ஆசாரி, அம்மமுத்து ஆசாரி மகன் சொக்கலிங்க ஆசாரி ஆகியோர் கைவண்ணத்தில் உருவானதென இரண்டாம் செதுக்கல் கூறுகிறது.

இத்தோரணத்தின் பின்புற வாயில்நிலைக் கீழ்ப்படியை மூடியுள்ள பித்தளைத்தகட்டின் முகப்பில் வலப்புறம் நால்வரும் இடப்புறம் ஐவருமாய்க் கோயிலுக்கு வருபவர்களை வரவேற்பார்போலக் கூப்பிய கைகளுடன் ஆடவர்கள்.

ஒரு மண்டபத்தில் அமைந்து மற்றொரு மண்டப வாயிலை அலங்கரிக்கும் இந்த வீரவசந்தராயர் விளக்குமாலை அதில் இடம்பெற்றிருக்கும் கனிவான வேண்டுகோளால் பெருஞ் சிறப்புப் பெறுகிறது. தமிழ்நாட்டுக் கோயில்களில் இது ஒத்த எழிலார்ந்த விளக்குமாலைகள் பலவாய் இருந்தபோதும் ரோஸ் பீட்டர், இஸ்மாயில் கூட்டுறவில் அமைந்ததே இதற்கு நிகரற்ற பெருமை சேர்க்கிறது.

வாருணி, அடுத்த முறை மதுரை போனால், இந்த விளக்குத் தோரணத்தைக் கட்டாயம் பார். இதைச் செய்தமைத்தவர்களையும் வரவேற்பவர்களையும் நீ அறிந்தவர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்து. மீனாட்சி நாயக்கர் மண்டபத் தோரணம் அடுத்த மடலில்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.