ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச்சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர்.
நாம் இங்கு ஆராய எடுத்துக்கொண்ட பொருள், ‘தென் இந்தியாவில் காஞ்சிப் பல்லவர் காலத்தும் பிற்காலச் சோழப் பேரரசர் காலத்தும் (கி.பி. 300-1300) உண்டான சைவ சமய வளர்ச்சி’ என்பதாகும். இங்கு, வடவேங்கடம் தென் குமரிக்கு இடைப்பட்ட பழைய தமிழகத்தையே சிறப்பாகக் குறிப்பதாகக் கொண்டு, ஆராய்ச்சி நிகழ்த்தப்படுகிறது.
அழிந்த பழைய நகரங்கள் பல நம் தமிழகத்தில் உண்டு. அவை கொற்கை, காயல், புகார், உறையூர், வஞ்சி, மாமல்லபுரம் முதலியன. அவற்றில் மாணவர்க்கு ஒரு பற்று உண்டாகவும், தமிழ்நாட்டுப் பண்டை வரலாற்றின் பெரும்பகுதி இன்றளவும் மண்ணில் புதையுண்டுதான் கிடக்கின்றது என்பதை நம் சிறார் அறிந்தின்புறவும், தமிழகத்துச் சிறு மாணவர்க்கு எளிதில் விளங்கும்பொருட்டுத் தெள்ளிய எளிய நடையில் எழுதப்பட்டது இந்நூல்.
குடந்தைத் தஞ்சாவூர்ச் சாலையில் 6 கி. மீ. தொலைவிலுள்ள திருவலஞ்சுழிக் கோயிலை முழுமையாக ஆய்வுசெய்து எழுதப்பட்ட நூல். ஆய்வின்போது பல புதிய கல்வெட்டுகளும் சிற்பத்தொகுதிகளும் கண்டறியப்பட்டன. கல்வெட்டுகள் சுட்டும் பிடாரி ஏகவீரி அடையாளப்பட்டதுடன் அவர் கோயிலும் கண்டறியப்பட்டது. கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள், இலக்கியம் சார்ந்து உருவான நூல்.
திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் ‘எனைத்தானும் நல்லவை கேட்க நிகழ்ச்சியைத் தொடர்ப் பொழிவாக 02.07.24 செவ்வாய்முதல் டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கி வருகிறார். செவிவழி வரும் செய்திகளை அறிவுக்கான உணவு என்று அறிஞர்கள் கூறுவதைச் சுட்டி, அந்த அறிவை நெறிசார்ந்து வாழ்ந்தவர்கள் வாழ்க்கைவழி கேட்போர் பெற்றிட தம் பொழிவால் உதவுகிறார். அவ்வகையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வரலாறான பெருமக்களையும் அவர்தம் சீரிய பணிகளையும் சுவைமிகு செய்திகளாக நற்றமிழில் கேட்டு மகிழலாம்.
பொழிவு 1 – 02.07.24
திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள, பாடல்பெற்ற திருத்தலமான திருவெறும்பியூர்க் கோயிலைக் கற்றளியாக மாற்றிய செம்பியன் வேதிவேளானைப் பற்றியது இப்பொழிவு. செம்பியன் மாதேவியாரின் கணவர் கண்டராதித்த சோழர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த செம்பியன் வேதிவேளானின் கோயில்பணிகளும் அவற்றால் விளைந்த நன்மைகளும் குறித்துக் கிடைக்கும் கல்வெட்டுச் செய்திகளைப் பொழிவின்மூலன் அறிந்து கொள்ளலாம்.
பொழிவு 2 – 09.07.24
முதலாம் இராஜராஜரின் அரண்மனையில் பணியாற்றிய பணிப்பெண் குழுக்களில் பெரியவேளத்தைச் சேர்ந்த கற்பகவல்லி, சிராப்பள்ளி முசிறிச் சாலையிலுள்ள திருவாசி மாற்றுரைவரதீசுவர்பால் அளவற்ற பற்று கொண்டிருந்தார். இறைவனின் மகளாகத் தம்மைக் கருதிய கற்பகவல்லி, அறக்கட்டளைகள்மூலம் வழங்கிய கோயில் கொடைகள் பற்றி இப்பொழிவில் பேசுகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.
பொழிவு 3 – 16.07.24
‘சுங்கம் தவிர்த்த சோழர்’ என்று கல்வெட்டுக்கள் கொண்டாடும் முதற் குலோத்துங்கரின் 83 கல்வெட்டுக்கள் திருவரங்கத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரங்கத்து மடைப்பள்ளிக்கு நேர்ந்த சிக்கலான இடர்ப்பாடுகளும் அதை நேர்செய்ய குலோத்துங்கர் ஆட்சி அரங்கத்துடன் கையிணைத்தெடுத்த போர்க்கால நடவடிக்கைகளும் இப்பொழிவில் பேசப்பட்டுள்ளன.
பொழிவு 4 – 23.07.24
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் உத்தமநாதர் கோயில் மற்றும் திருஇறையான்குடி என்று முதல் இராஜராஜர் காலத்தில் அழைக்கப்பெற்ற விளாங்குடி திருவன்னியுடையார் கோயிலில், சோழர் காலத்தில் நிகழ்ந்தேறிய இரண்டு அருமையான செயற்பாடுகளைப் பற்றியது இப்பதிவு.
பொழிவு 5 – 30.07.24
சோழப் பேரரசின் விரிவாக்கத்திற்குழைத்த பழுவேட்டரையர்கள் என்ற சிற்றரச மரபினர் ஏறத்தாழ 139 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த இடம் அரியலூர் மாவட்டத்திலுள்ள பழுவூர். மேலப்பழுவூர் கீழப்பழுவூர் என்று இரு பிரிவுகளாக வி̀ளங்கிய இவ்வூரில், பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தெற்றிப் பெரியானைக் கீழப்பழுவூர் கோயில் கல்வெட்டொன்று அறிமுகப்படுத்துகிறது. திருமழபாடியிலும் தவத்துறைக்கருகிலுள்ள நத்தமாங்குடியிலும் கிடைக்கும் கல்வெட்டுக்கள்வழி தெற்றிப் பெரியானைப் பற்றிய அரிய தகவல்களை வழங்குகிறது இப்பொழிவு.