சுந்தர வாழ்க்கை

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டின் முப்பெரும் தேவாரப் பெருமக்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் சுந்தரர். சிவபெருமானைப் போற்றி அவர் பாடிய நூறு பதிகங்களே ஏழாம் திருமுறையின் உள்ளடக்கம். முதல் ஆறு திருமுறைகளைப் பாடிய சம்பந்தரும் அப்பரும் மண்ணுலகினர். சுந்தரரோ விண்ணுலகில் வாழ்ந்து, செய்த பிழைக்காக மண்ணுலக வாழ்வுக்கு அனுப்பப்பட்டவர். அவரது வாழ்க்கையை விரித்துரைக்கச் சேக்கிழாருக்கு உதவிய எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளில் இராஜராஜீசுவரத்துத் தூரிகைப் படப்பிடிப்பு முதன்மையானது எனலாம்.

சுந்தரர் வாழ்க்கை

‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்ற பெருமைமிகு அறிவிப்புடன் சோழப் பேரரசர் முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எழுப்பிய இராஜராஜீசுவரம், தமிழ்நாட்டுக் கட்டடக்கலை வரலாற்றில் ஒரு மைல் கல். கருவறையைச் சுற்றி இரண்டு சுவர்களும் அவற்றுக்கு இடைப்பட்டு நடைவழியும் கொண்டு உருவான சாந்தார விமானங்களில் இராஜராஜீசுவரம் தனித்தன்மையது. இங்கு மட்டுமே அந்த நடைவழி, அது அமைந்துள்ள விமானத்தின் இருதளங்களிலும் கலைப்படைப்புகளைப் பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள கீழ்த்தள நடைவழியில் சோழ, நாயக்கர் கால ஓவியங்களுடன் கூரைப்பகுதியில் ஆடற்சிற்பங்களும் உள்ளன. மேற்றள நடைவழி பரதரின் நாட்டியசாத்திரம் குறிப்பிடும் 108 ஆடற்கரணங்களில் 81க்கான சிற்பவடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.

கீழ்த்தள நடையின் நான்கு பெருஞ்சுவர்களில் முழுமையாகவும் பிற சுவர்களில் ஆங்காங்குமென வெளிப்பட்டுள்ள சோழ ஓவியங்களில் ஒன்றே, சுந்தரர் வாழ்க்கை பேசும் தடுத்தாட்கொண்ட புராணத்தை எழுதச் சேக்கிழாருக்குத் துணையானது எனில், இராஜராஜர் காலத்தில் வழக்கிலிருந்த தரவுகளும் பதிவுகளுமே நான்கு பெருஞ்சுவர்களுள் ஒன்றில் அந்த வாழ்க்கையின் வளமை காட்டச் சோழத் தூரிகைகளுக்கு உதவின எனலாம். சுந்தரர் வாழ்க்கையில் காதலும் பத்திமையும் இணைந்தே இருந்தன. பரவை, சங்கிலி எனும் இரு பெண்களுடன் அவருக்கு ஏற்பட்ட இணைவையும் பிரிவையும் தவிர்த்த சோழ ஓவியர்கள், தாம் அறிய நேர்ந்த சுந்தர வாழ்க்கையின் மூன்று திருப்புமுனை நிகழ்வுகளை மட்டுமே காட்சிகளாக்கினர்.

சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, ஓலை காட்டி அவரைத் தம் அடிமையென அறிவித்து, அதை வழக்குமன்றத்திலும் நிறுவி, தம் இருப்பிடம் கேட்டவர்களைத் திருவருட்துறைக்கு அழைத்துச்சென்று, அங்கு சுந்தரருக்குத் தம்மை வெளிப்படுத்தி, அவர் பாட ‘பித்தா’ எனச் சொல்லெடுத்துத் தந்த சிவபெருமானின் திருவிளையாட்டு முதல் நிகழ்வாகச் சுவரின் கீழ்ப்பகுதியில் பதிவாகியுள்ளது.

வழக்காடு மன்றம்

சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் இடையில் மலர்ந்த நட்புறவு இரண்டாம் நிகழ்வாகச் சுவரின் நடுப்பிரிவில் சுருக்கமாக அமைய, சுந்தரரும் சேரமான் பெருமாளும் மேற்கொண்ட கயிலைப் பயணமும் அங்கு இறைப் பார்வையில் அவர்களுக்குக் கிடைத்த தேவ வரவேற்பும் மேற்பகுதியில் விரிந்துள்ளன.

சோழர்கால அடுக்களை, மணவரங்கு, வழக்குமன்று, வழக்காடுமுறை, கோயில் என்று பொதுக்காலம் 10, 11ஆம் நூற்றாண்டுச் சமூக வாழ்வை முதல் பிரிவு ஓவியங்கள் வண்ணப் படப்பிடிப்பாய் வழங்க, இரண்டாம் பிரிவில் சேரமானின் அஞ்சைக்கள ஆடவல்லான் சிறக்க வடிக்கப்பட்டுள்ளார். இறைவனின் ஆனந்ததாண்டவத்தை உமையுடன் பிள்ளைகள் இருவரும் இடப்புறமிருந்து காண, குடமுழவில் தாளம் தருபவரும் காரைக்காலம்மையும் வீசிய திருவடியின் கீழ் வலப்புறம்.

சுந்தரர், சேரமான் பெருமாளின் கயிலைப் பயணம் சுவரையும் கடந்து தூணிலும் பரவியுள்ளது. வருபவர் சுந்தரர் என்பதால் அவரை வரவேற்க, விண்ணுலக நண்பர்கள் ஆடலும் பாடலுமாய்ச் சிறுசிறு குழுக்களாய் வழியெங்கும் பரவி அவரை வரவேற்கின்றனர். இந்தக் காட்சிப்பரப்பில் சோழர்காலக் கலைவளம், கருவிகளும் கலைஞர்களும் நிகழ்முறையும் ஒப்பனையுமெனக் கண்களை விரியச் செய்து தரவுகளைக் குவிக்கிறது.

சுந்தரரின் கயிலைப் பயணம்

யானைமீது சுந்தரரும் குதிரைமீது சேரமானும் கயிலை செல்லும் அந்தப் பெருவழியில், நீர்வாழ் இனங்கள் நீந்திப் பரவ, யானையின் கால்கள் கடல்நீரில். வான் வழிப் பயணத்தில் கடல் எங்கிருந்து வந்தது? யானையின் வாலைப் பற்றியவாறு சுந்தரரின் உடன்பயணியாய்ப் பின்னால் ஒருவர். யார் இவர்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுந்தரரின் நூறாம் பதிகம் விடை தருகிறது. சுந்தரரை அழைத்துவர யானையையும் வழிநடத்திவர தம் அடியார்களுள் ஒருவரான வாணனையும் இறைவன் அனுப்ப, பயணவழியில் கடலரசனான வருணன் வானவர் அனைவருக்கும் முன்னதாக வந்து மலர்கள் தூவித் தம்மை வணங்கி வரவேற்றதாக சுந்தரரே பேசுகிறார். கடலரசன் வணங்க, வழிதர வந்த வாணன் யானையின் வால் பிடித்துப் பின்வர, சேரமான் பெருமாள் முன் செல்ல, வானவ நண்பர்களின் வரவேற்பிற்கு இடையே சுந்தரர் கயிலையை அடைந்ததும் அங்கே இறைத்திருமுன் அவரும் சேரமானும் இணைந்து கண்ட ஆடல், பாடல் நிறைந்த அரங்க நிகழ்வும் கோடுகளும் வண்ணங்களுமாய்ச் சோழர்கால ஓவியர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அழகின் உச்சம்.

வாணன்

சிவபெருமானும் உமையும் மேடையில் அமர்ந்திருக்க, பின்னால் எழில்நிறை வடிவுடன் இறைவியின் விண்ணகத் தோழியர். அரங்கில் ஒழுங்குற அமர்ந்த பாடற்குழு. அவர்தம் பண்ணிசைப் பாடல்களுக்கு ஆடலரசிகளின் அவிநயம். உடன்கூட்டமாய்ப் பூதங்களின் இசைக்கோலத்துடன், பேரிசையாய்க் குடமுழவு. பார்வையாளர்களாய் சுந்தரரே சுட்டும் திருமால், நான்முகன், இந்திரன் உள்ளிட்ட தேவர்களும் பிறரும். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையை நினைவூட்டுமாறு விரிந்து பரவும் இந்தக் கயிலாயக் காட்சி சோழர் கால நிகழ்த்துக் கலைக்குக் கிடைத்த அரிதிலும் அரிதான வண்ணப்பதிவாகும்.

தவம், நட்பு, போர், பத்திமை எனும் நான்கை முதன்மைப்படுத்தி நான்கு பெருஞ்சுவர்களை வண்ணக் கலவைகளால் நிறைத்திருக்கும் சோழத் தூரிகைகள் இலக்கியம் பயின்றும் வரலாறு அறிந்துமே வரைவைச் செய்தன என்பதை சுந்தர வாழ்க்கையின் தேர்ந்தெடுத்த நிகழ்வுகளும் அவற்றை அவை பதிவுசெய்திருக்கும் பாங்கும் உள்ளங்கைக் கனியாய் உணர்த்துகின்றன. வாணன் வந்து வழி தந்து உடன் சென்றதும் கடலரசன் மலர் கொண்டு வாழ்த்தி வணங்கிப் பரவியதும் நம்பி ஆரூரருக்கு மட்டுமே வாய்த்த சுந்தரப் பெருமைகள்.

தள்ளாத வயதில் அப்பரும் தளிரான பருவத்தில் சம்பந்தரும் தலைக்கு மூன்று திருமுறைகள் கொள்ளுமளவிற்குப் பதிகங்கள் பாடியும் கருவறைச் சுவரோவியத்திற்கு சுந்தரர் வாழ்வை இராஜராஜர் தேர்ந்தது ஏன்? அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த தம்பிரான் தோழர் என்பதாலா? அப்பருக்கும் சம்பந்தருக்கும் கிடைக்காத இணையற்ற நண்பராய் சுந்தரருக்கு சேரமான் பெருமாள் வாய்த்ததாலா? ஊர்ப் பதிகங்களோடு நில்லாமல் வரலாற்றுத் தொடராய் தமக்கு முன்னும் தம் காலத்தும் வாழ்ந்த இறையடியார்களைத் தொகைப்படுத்தித் திருத்தொண்டத்தொகை தந்ததாலா? வரலாறு வளப்படுவதே கேள்விகளால்தான்.

நான் முதல்வன்

இரா. கலைக்கோவன்

இராஜராஜீசுவர விமானம்

நான் முதல்வன் என்று சொல்ல நினைக்கும்போதே பெருமிதம் பொங்குகிறது. எழுச்சியை உறுதிப்படுத்தும் நம்பிக்கைத் தொடர் அது. மாணவர் உயர்வுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சொல்லிணைவு கோயில்களுக்குப் பொருந்துமா? தமிழ்நாட்டுக் கோயில்களில் எவை எவை இப்படிப் பெருமையுடன் பூரிக்கமுடியும்? அந்தப் பெருமைகள் கலைவரலாற்று மெய்மைகளின் மேல் இவருமா? ‘உறுதியாக’ என்றுதான் உண்மைகள் அணிவகுக்கின்றன.

பல்லவர் மண்ணின் முதல் குடைவரையாக முதலாம் மகேந்திரரின் மண்டகப்பட்டு லக்ஷிதாயதனம் தன் மேனிக் கல்வெட்டைக் காட்டி நான் முதல்வன் என்று உரக்கப் பேசலாம். நாற்றிசையிலும் சுற்று மதிலொட்டிய இருதள விமானத் தொடர் என்னிடம் மட்டுமே என்று காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் நான் முதல்வனுக்கு உரிமை கோரலாம். விமானத்தின் நாற்புறத்தும் சுவரின் நடுப்பத்திகள் மட்டும் வெளியிழுக்கப்பட்டுத் தனித் திருமுன்களாய், முதன்மை விமான உடலோடு ஒட்டிய துணை விமானங்களாய் உருவாக்கப்பட்ட பெருமை எனக்குத்தான் முதலில் அமைந்தது என்று பனைமலை ஈசுவரம் நான்மு முதல்வன் வரிசைக்குப் போட்டியிடலாம்.

தமிழ்நாடு முழுவதும் இப்படிப் பல கோயில்கள் ஏதாவது ஒரு கட்டுமான உத்தியையோ, உறுப்பையோ முதலாவதாய்ப் பெற்றுச் சிறந்திருக்கும் பெருமை சுட்டி, அதில் நான் முதல்வன் என்று நம்பிக்கையோடு பேசமுடியும். ஆனால், ஒன்றல்ல, இரண்டல்ல பலவாய் முதல்களைச் சுமந்து கொண்டு அனைத்திலும் நானே முதல் எனச் சொல்லத்தக்க திருக்கோயில் தமிழ்நாட்டில் உள்ளதா எனின், நிமிர்த்திய தலையும் பூரித்த நெஞ்சுமாய், ‘ஆம்’ என்று மகிழ்ந்து சொல்ல நமக்கு வாய்த்திருக்கும் சிறப்புக்குரிய கோயில் இராஜராஜீசுவரம்!

தஞ்சாவூரில் சோழப் பெருவேந்தர் முதலாம் இராஜராஜரால், ‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்ற தெளிவான முகவுரையுடன் பொதுக்காலம் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டமைக்கப்பட்ட இராஜராஜீசுவரம், நான் முதல்வன் என்று பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டுக் கலைவரலாறு சிலிர்த்தெழும் அளவிற்கு உண்மைகள் ஊர்வலமாகும். இன்று அரசு ஆவணங்களில் பிரகதீசுவரமாய்ப் பெயர் மாற்றப்பட்டிருக்கும் இராஜராஜரின் நெஞ்சுக்கு நெருக்கமான இந்த இராஜராஜீசுவரமே இரண்டு திருவாயில்களைப் பெற்ற தமிழ்நாட்டின் முதல் திருக்கோயில். அந்த இரண்டு வாயில்களுமே கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில் என்று கட்டியவர் பெயரேற்றுப் பெருமை கொண்டதும் அதுவே முதல்முறை.

கோபுரப் புறச்சுவர்கள் புராண, திருமுறைக் காட்சிகளைச் சிற்றுருவச் சிற்பத்தொடர்களாய்க் கொண்டமைந்த முதலிடம் இராஜராஜீசுவரம். இராஜராஜன் திருவாயிலின் நாற்புறச் சுவர்களிலும் சிவபெருமான் முப்புரம் எரித்தமை, அருச்சுனரோடு சண்டையிட்டமை உள்ளிட்ட பல புராணச் சித்தரிப்புகளும் நக்கீரதேவரின், ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ காட்டியிருக்குமாறே கண்ணப்பரின் வாழ்வியலும் சேரமான் பெருமாளின் கயிலாய ஞானஉலாக் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இராஜராஜர் காலத்தே வழக்கிலிருந்த கண்ணப்பர் கதை சேக்கிழாரால் எப்படித் திருத்தி அமைக்கப்பட்டது என்பதை இத்திருவாயில் செதுக்கல்களைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். காலத்தின் தேவைக்கேற்பப் புராணங்களில் நிகழும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும் இதன் வழி விளங்கிக் கொள்ளலாம்.

இராஜராஜீசுவரத்தின் திருச்சுற்று மாளிகை மாறுபட்டது. கோயில் கலை வரலாற்றில் முதன்முறையாக எண்திசைக் காவலர்களுக்கான இருதள விமானங்களை உள்ளடக்கி எழுந்த முதல் சுற்றுமாளிகை அதுதான். இராஜராஜரின் படைத்தலைவர் பொறுப்பேற்றுக் கட்டிய அம்மாளிகையின் எண்திசைக் காவலர்களுள் சிலர் இன்றும் காட்சியாகின்றனர். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் இராஜராஜருக்கு முன்னெழுந்த எந்தக் கோயிலும் இத்தகு பேரளவு திசைக்காவலர்களைப் பெறவில்லை. சோழர் காலச் சிற்பச் செழுமைகளான இக்காவலர்கள் கலைவரலாற்றில் உரிய இடம்பெறாமல் போனமை துன்பமான உண்மை.

இராஜராஜீசுவர விமானம் தமிழ்நாட்டின் தனிப்பெரும் முதல் கட்டுமானம். அதன் உயரமும் கம்பீரமும் தள எண்ணிக்கையும் இன்றளவும் முதல் நிலையிலேயே உள்ளன. இராஜராஜருக்குப் பின்னும் யாரும் அதை மீறமுடியவில்லை. விமானத்தில் அமையும் கருவறையைச் சுற்றி இருசுவரெடுத்து அவற்றிடையே உள்சுற்று அமைப்பது பல்லவப் பழைமையதுதான் எனினும், அதை இருதள நிலைக்கு உயர்த்தி இரண்டு சுற்றுகளாக மாற்றிப் பெற்ற முதல் கோயில் இராஜராஜீசுவரம்தான். இராஜராஜருக்கு முன்னும் பின்னும் இத்தகு சுற்று அமைந்தபோதும் இராஜராஜீசுவரமே அச்சுற்றுகளை வரலாற்றுக் களங்களாக்கிப் பெருமை கொண்டது.

உள்சுற்று ஓவியச் சுவர்

உள்சுற்று ஓவியச் சுவர் கீழ்ச்சுற்றில் சுவரெங்கும் சோழ ஓவியங்கள். ஒரு சுவரை நிறைத்து ஆலமர்அண்ணலின் காட்டுக் காட்சி. அடுத்த சுவரிலோ சுந்தரர் வாழ்க்கை. மூன்றாம் சுவர், பெருங்கோயிலும் வழிபடுவோரும் கோயில் நடைமுறைகளும் என விரிய, நான்காம் சுவரில் முப்புரம் எரித்த கதை. மேல் சுற்று, சிவபெருமானின் 108 கரணங்களுக்கான கற்பதிவுகள் பெற்று எண்பத்தொரு சிற்பங்களுடன் பொலிகிறது.

எந்தத் தாங்கலும் இல்லாமல், சட்டக அமைப்புகள் கொள்ளாமல் கற்களை அடுக்கி இத்தனை உயரத்தில் ஒரு விமானமா? இரண்டாம் தளத்தில் நின்று பார்ப்பவரின் கண்முன் விரியும் அந்தக் காட்சி, தமிழர் கட்டுமானப் பொறியியலின் உச்சம். ‘நான் முதல்வன்’ என்று இராஜராஜரும் இராஜராஜீசுவரமும் இணைந்து புன்னகைக்கும் இடம் அது. சுற்றில் நின்று பார்த்தாலும் உள்ளிருந்து நோக்கினாலும் எல்லாருக்கும் ஒரே கேள்விதான், இந்த முதல்வனை எப்படி எழுப்பினார்கள்! இந்தக் கேள்வியைச் சுற்றித்தான் சாரப்பள்ளம் உள்ளிட்ட எத்தனை வீறுடைக் கதைகள் வளர்ந்துள்ளன! அதிலும் இந்தக் கோயில் முதல்வனே!

சண்டேசுவரர் திருமுன்

தமிழ்நாட்டுக் கோயில்களில் மிகப் பெரிதாய் இலிங்கம் பெற்ற முதல் கருவறை இராஜராஜீசுவரம்தான். இருதள உயரத்திற்குக் கருவறை பெற்ற முதல் கோயிலும் அதுதான். சண்டேசுவரருக்குத் தனிக் கோயில் காலப் பழைமையது எனினும், அதைப் பெருங்கோயிலாய் இருதள விமானமாய் முதலில் பெற்றுப் பெருமிதமுற்றது இராஜராஜீசுவரம்தான். அதற்கிணையான மற்றொரு திருமுன் ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாம் இராஜராஜரால் தாராசுரத்தில் உருவாக்கப்பட்டது.

கல்லெழுத்துக்களைக் கலைநயத்தோடு பொறிப்பது பல்லவர் காலத்திலிருந்து தொடர்ந்தாலும் இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் அலங்காரம் தவிர்த்த அழகியல் பொளிவுகள். இந்தக் கல்வெட்டுகள்தான் வரலாற்றிலும் இந்தக் கோயில் பல முதல்களுடன் திகழ்ந்தமை பேசுகின்றன. தமிழ்நாட்டிலேயே 400 தளிப்பெண்கள் தனி வீடு பெற்று ஊதியமாய் 100 கலம் நெல்லும் பெற்றுக் கலைவளர்த்த முதல் கோயில் இதுதான். 48 பதிகப் பாடகர்கள் இறைத்திருமுன் தேவாரம் பாடிய ஒரே கோயில் இராஜராஜீசுவரம்தான். ‘நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்’ என்று மன்னன் முதல் மக்கள் ஈறாக அனைவரும் ஒரே நிலையில் ஒளிரும் சமத்துவப் பொறிப்பும் தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டுமே களம் கண்டது.

தமிழ்நாட்டின் பல கோயில்கள் பல்லவர், சோழர் காலத்தும் தொடர்ந்த பிற மரபு அரசர் காலத்தும் வளமான இறைத் திருமேனிகளை உலாத்திருமேனிகளாகப் பெற்றுச் சிறந்தன. ஆனால், அவற்றுள் எந்தக் கோயிலும் இராஜராஜீசுவரம் போல் வழங்கப்பட்ட அனைத்துத் திருமேனிகளுக்கும் விரிவான வடிவ அமைப்பு விளக்கங்களைக் கல்வெட்டுப் பொறிப்புகளாய்க் கொள்ளவில்லை. அது மட்டுமன்று, இங்கு வழங்கப்பட்ட சில அரிய செப்புத்திருமேனிகள் வேறெங்கும் அமையவுமில்லை.

‘நான் முதல்வன்’ என்பது வெறும் பெருமைச் சொல்லாடல் அன்று. அப்படி வெறுமையாகச் சொல்லாடவும் முடியாது.

முதல்கள் இல்லாமல் முதல்வனாவது எப்படி? இராஜராஜீசுவரம் முடிவில்லாத முதல்களின் முதல்வன். கட்டி அமைக்கப்பட்ட காலத்தும் இன்று கண்டுகளிப்போரின் கருத்து நிறைக்கும் காலத்தும் இராஜராஜீசுவரத்துக்கு இணை இராஜராஜீசுவரம்தான். அது என்றென்றும் கோயில்களின் முதல்வன்.