மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 13. எது பெரிது? இது பெரிது!

அன்புள்ள வாருணி, நாயன்மார்களைப் பற்றிப் பேச முனைந்த காலங்களில் எல்லாம் நான் கண்ணப்பரைத் தனித்துக் குறிப்பிட்டுச் சொல்லியதை நினைவுபடுத்துகிறேன். சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் அறுபத்து மூவரையும் வரிசைப்படுத்தும்போது கண்ணப்பரை, ‘கலை மலிந்த சீர்நம்பி’ என்பார். அறுபத்து மூவரில் நாவுக்கரசராலும் சம்பந்தராலும் சிறக்க அறிமுகமாகும் பேறும் கண்ணப்பருக்குக் கிடைத்தது. அவரைக் குறித்துக் கல்லாடரும் நக்கீரதேவரும் பாடிய இரண்டு சிறப்பான இலக்கியங்கள் 11ஆம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் இராஜராஜன் திருவாயில் வடபுறத்தே கண்ணப்பரின் வாழ்க்கையைச் சிற்பக்களஞ்சியமாகப் படம்பிடித்துள்ளதை நாம் அங்குச் சென்றிருந்தபோது உனக்குக் காட்டியிருக்கிறேன். ‘கடும் பகலில் காதலொடு உடும்படித்து’ அவர் இறைவனுக்குப் படையலிட்டதாக நக்கீரர் குறிப்பதைத்தான், கலை மலிந்த சீர் நம்பியாகக் காட்டியிருக்கிறார் சுந்தரர். இலக்கியங்கள் ஒன்றோடொன்று எங்காவது இணைந்தோடும். அந்த இழைகளை அறிந்து இரசிக்க நாமும் கலை மலிந்த சீர் உள்ளம் பெறவேண்டும்.

என்னவோ தெரியவில்லை வாருணி, கண்ணப்பரைப் பற்றிப் பேசவோ, எழுதவோ தொடங்கினால் என் உள்ளம் அந்தக் காட்டு மனிதரின் இறைக்காதலில் கரைந்துபோகிறது. சேக்கிழாரைப் படித்திருந்தால் நீ என்னைப் புரிந்துகொள்வாய். சிவபெருமான் கண்ணில் குருதி கண்டதும் கண்ணப்பர் பட்ட பாடுகள்! கனியக்கனியக் காதல் இல்லையேல் அப்படியொரு தவிப்பும் துடிப்பும் இயலுவதா? சேக்கிழாரின் ஒவ்வொரு சொல்லும் கண்ணப்பரின் தூய அன்பு காட்டும் மின்மினிகள்.

காலந்தோறும் சிற்பிகளும் கண்ணப்பரை நினைவுகூர்ந்துள்ளனர். பல்லவப் படைப்பாய் நான் கண்ணப்பரைக் கண்டு மகிழ்ந்த முதல் இடம் தக்கோலம் கோயில்தான். கண்ணகழும் கண்ணப்பரை எப்படியாவது தம் படைப்பில் காட்டிவிட வேண்டும் என்ற தணியாத ஆசை, அந்தச் சிற்பியை இடம்தேடித் தவிக்க வைத்தது போலும்! சுவருக்கு மேல் வரும் கூரையுறுப்புகளில் சிவபெருமானின் பூதப்படையைக் காட்ட ஆகமங்கள் அனுமதித்திருக்கும் இடமான எழுதகம் அந்தச் சிற்பியின் தேவையை உணர்ந்து இடமளித்தது. முகமண்டப வாயிலுக்கு நேர் இருக்குமாறு கண்ணப்பர். ‘பல்லவர் கட்டுத்தளிகள்’ எனும் எங்கள் நூலில், அந்த அழகிய படைப்பை இருக்குமாறே காட்டியிருக்கிறேன், நீ படித்திருக்கலாம்.

சோழர்கள் கண்ணப்பரைக் கொண்டாடிக் கொண்டனர். சிற்றுருவச் சிற்பங்களாக அங்கே, இங்கே எனப் பார்வை படரும் இடமெல்லாம் காட்சியான கண்ணப்பரைக் கோபுரத் தொகுதியாக்கியவர் நித்தவிநோதரான இராஜராஜர். அவரைத் தொடர்ந்து அதே அமைப்பில் கண்ணப்பர் வாழ்க்கையைப் பிற்சோழர் கோயில்கள் சில படம்பிடித்தாலும், மதுரை மீனாட்சிக் கோயிலில் நான் கண்ட காட்சி, நாயக்கர்கள் அந்தத் திண்ணனாரை எப்படி நேசித்தனர் என்பதை உணர்த்தியது.

மீனாட்சிக் கோயிலின் மூலை முடுக்கெல்லாம் வரலாறு ஒளிந்திருக்கிறது என்றாலும், அது பேருருவாய் எழுந்து நிற்பது ஆயிரக்கால் மண்டபத்தில்தான். அங்கேதான் வாருணி, கண்ணப்பரும் வானளாவி நிற்கிறார். என் கோயில் வாழ்க்கையில் இந்த நாற்பதாண்டுக் காலத்தில் தமிழ்நாட்டின் வேறெந்த இடத்திலும் இப்படி ஒரு பெருவடிவினராய்க் கண்ணப்பரைக் கண்டதில்லை.

வாயிற்புறப் பெருந்தூண் ஒன்றில் ஒன்றியுள்ள அவரது வேட்டுவக்கோலம் காதணிகள், கழுத்தணிகள், தோள், கையணிகள், இடுப்பணிகள் மிளிர அடர்த்தியான மீசையும் வீரக்கழலும் பெற்று ஒளிர்கிறது. இரண்டு திருவடிகளிலும் அவர் அணிந்துள்ள மிதியடிகள் மேம்பட்ட வடிவின. இருக்கையில் அமர்ந்தாற் போன்ற நிலையில் வலப்பாதம் தரையில் ஊன்ற, இடப்பாதம் கற்றளம் ஒன்றில் தாங்கலாக இருத்தப்பட்டுள்ளது. காட்டுவாசிகளுக்கே உரிய இறகுகள் பரவிய தலையணியுடன், முடிச்சிட்ட முடிக்கற்றை பெருங்கொண்டையாய் இடத்தோளில் சரிய, கண்ணப்பரின் வலத்தோள் பின்புறம் அம்புக்கூடு. இடத்தோளிலோ, மாட்டிய வில். வலக்கை அம்பு கண்ணகழ்ந்து முடித்த நிறைவிலிருக்க, இட உள்ளங்கையில் அகழப்பட்ட கண்.

கண்ணப்பரின் குறுந்தாடி பரவிய முகம் அவர் வலக்கண் இழந்திருப்பது காட்ட, அங்கு அலையடிக்கும் உணர்வுகளோ, இறைவனுக்கு உரியது செய்ய வாய்த்த பெருமிதத்தையும் ஈந்துவந்து நிற்கும் அவரது பேரின்பத்தையும் வெளிச்சப்படுத்தி ஈர்க்கின்றன. அவரது இடப்பாதம் தங்கியுள்ள கற்றளத்தின் பின் சதுர ஆவுடையாருடன் இலிங்கம். அந்த இலிங்கத்திற்குக் குடையாக ஐந்துதலைப் பாம்பு படம் விரித்துள்ளது.

வழக்கமாய்க் கண்ணப்பர் சிற்பங்களில் இலிங்கத்திலிருந்து கையொன்று வெளிப்பட்டு, அவரது கண் அகழும் முயற்சியைத் தடுக்குமாறு காட்சியமையும். ஆனால், இங்கு அப்படி எந்தத் தடுத்தலும் செய்யாது அமைதிகாக்கும் இலிங்கம். அது விளக்குவது இதைத்தான் வாருணி, கண்ணப்பர் இன்னமும் கண் அப்பவில்லை. கண்ணை அகழ்ந்து கையில் கொண்டவராய்க் காட்சிதரும் அவரது பேருள்ளம் காட்டவே, கை நீட்ட விரும்பாது தொடர்ந்து நிகழவிருப்பன காணக் காத்திருக்கிறார் இறைவன்.

அவருக்குத் தெரியாதது இல்லை. ஆனால், இந்த நாடகமெல்லாம் உள்ளப் பூசையின் உயர்வறியச் செய்யத்தானே! ஆகமப் பூசையினும் அருளாளரின் ஆன்ம வழிபாடே தமக்கு உகந்தது என்று உணர்த்தத்தானே! சேக்கிழாரின் பாடலடிகள் எப்படியெல்லாம் பின்னிப்பின்னி இவை பற்றிப் பேசுகின்றன. எண்ணிப்பார் வாருணி, இலக்கியம் நூறு அடிகளில் காட்டும் காட்சி, ஓர் உளியின் உயிர்த்துடிப்பில் கல்லைக் கனியாக்கிக் காட்சியுமாக்கிக் கருத்தில் நிறைப்பது அற்புதம்தானே!

அன்பு வாருணி, இந்தச் சிற்பம் என்னை ஈர்த்தமைக்கு இது மட்டும் காரணமல்ல. நாயக்கச் சிற்பியின் கைவிரல் அசைவுகள் பெரிதினும் பெரிது காட்டியுள்ளன. சிற்பக்காட்சியை ஒருமுறை பார். வானளாவிய கண்ணப்பர்! சிவலிங்கமோ சின்னஞ்சிறியதாய் அவர் முழங்காலளவு. கண்ணை அகழ வைத்தவர் கடுகாய்ச் சிறுக்க, கண்ணை அளித்தவர் மலையாய் நிமிர்ந்துள்ள இந்த நுணுக்கம்தான் சிற்பியை நமக்கு அடையாளப்படுத்துகிறது. எது பெரிது என்ற கேள்விக்கே இடமின்றி, இது பெரிது என்று காட்டியுள்ள இந்தப் படிநிலைதான் ஒரு சிற்பியைக் காலம் கடந்தும் வாழவைக்கிறது.

யாருக்கும் தோன்றாத எக்காலத்தும் வடிவம் பெறாத இந்தப் புதிய சிந்தனை எந்த உள்ளத்தில் ஊற்றெடுத்ததோ, அந்த உள்ளமே பத்திமையின் முத்திரையாய் நம்மையும் நிறைக்கிறது, வரலாற்றையும் வாழவைக்கிறது. ஒரு கண்ணசைவில் இது போன்ற சிற்பங்களைக் கடந்துவிடமுடியாதபடி காலம் நம்மைக் கட்டிப் போடுகிறதே, அதுதான் வாருணி, அந்தச் சிற்பியின் வெற்றி.

அன்புடன், 

இரா. கலைக்கோவன்.

நான் முதல்வன்

இரா. கலைக்கோவன்

இராஜராஜீசுவர விமானம்

நான் முதல்வன் என்று சொல்ல நினைக்கும்போதே பெருமிதம் பொங்குகிறது. எழுச்சியை உறுதிப்படுத்தும் நம்பிக்கைத் தொடர் அது. மாணவர் உயர்வுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சொல்லிணைவு கோயில்களுக்குப் பொருந்துமா? தமிழ்நாட்டுக் கோயில்களில் எவை எவை இப்படிப் பெருமையுடன் பூரிக்கமுடியும்? அந்தப் பெருமைகள் கலைவரலாற்று மெய்மைகளின் மேல் இவருமா? ‘உறுதியாக’ என்றுதான் உண்மைகள் அணிவகுக்கின்றன.

பல்லவர் மண்ணின் முதல் குடைவரையாக முதலாம் மகேந்திரரின் மண்டகப்பட்டு லக்ஷிதாயதனம் தன் மேனிக் கல்வெட்டைக் காட்டி நான் முதல்வன் என்று உரக்கப் பேசலாம். நாற்றிசையிலும் சுற்று மதிலொட்டிய இருதள விமானத் தொடர் என்னிடம் மட்டுமே என்று காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் நான் முதல்வனுக்கு உரிமை கோரலாம். விமானத்தின் நாற்புறத்தும் சுவரின் நடுப்பத்திகள் மட்டும் வெளியிழுக்கப்பட்டுத் தனித் திருமுன்களாய், முதன்மை விமான உடலோடு ஒட்டிய துணை விமானங்களாய் உருவாக்கப்பட்ட பெருமை எனக்குத்தான் முதலில் அமைந்தது என்று பனைமலை ஈசுவரம் நான்மு முதல்வன் வரிசைக்குப் போட்டியிடலாம்.

தமிழ்நாடு முழுவதும் இப்படிப் பல கோயில்கள் ஏதாவது ஒரு கட்டுமான உத்தியையோ, உறுப்பையோ முதலாவதாய்ப் பெற்றுச் சிறந்திருக்கும் பெருமை சுட்டி, அதில் நான் முதல்வன் என்று நம்பிக்கையோடு பேசமுடியும். ஆனால், ஒன்றல்ல, இரண்டல்ல பலவாய் முதல்களைச் சுமந்து கொண்டு அனைத்திலும் நானே முதல் எனச் சொல்லத்தக்க திருக்கோயில் தமிழ்நாட்டில் உள்ளதா எனின், நிமிர்த்திய தலையும் பூரித்த நெஞ்சுமாய், ‘ஆம்’ என்று மகிழ்ந்து சொல்ல நமக்கு வாய்த்திருக்கும் சிறப்புக்குரிய கோயில் இராஜராஜீசுவரம்!

தஞ்சாவூரில் சோழப் பெருவேந்தர் முதலாம் இராஜராஜரால், ‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்ற தெளிவான முகவுரையுடன் பொதுக்காலம் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டமைக்கப்பட்ட இராஜராஜீசுவரம், நான் முதல்வன் என்று பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டுக் கலைவரலாறு சிலிர்த்தெழும் அளவிற்கு உண்மைகள் ஊர்வலமாகும். இன்று அரசு ஆவணங்களில் பிரகதீசுவரமாய்ப் பெயர் மாற்றப்பட்டிருக்கும் இராஜராஜரின் நெஞ்சுக்கு நெருக்கமான இந்த இராஜராஜீசுவரமே இரண்டு திருவாயில்களைப் பெற்ற தமிழ்நாட்டின் முதல் திருக்கோயில். அந்த இரண்டு வாயில்களுமே கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில் என்று கட்டியவர் பெயரேற்றுப் பெருமை கொண்டதும் அதுவே முதல்முறை.

கோபுரப் புறச்சுவர்கள் புராண, திருமுறைக் காட்சிகளைச் சிற்றுருவச் சிற்பத்தொடர்களாய்க் கொண்டமைந்த முதலிடம் இராஜராஜீசுவரம். இராஜராஜன் திருவாயிலின் நாற்புறச் சுவர்களிலும் சிவபெருமான் முப்புரம் எரித்தமை, அருச்சுனரோடு சண்டையிட்டமை உள்ளிட்ட பல புராணச் சித்தரிப்புகளும் நக்கீரதேவரின், ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ காட்டியிருக்குமாறே கண்ணப்பரின் வாழ்வியலும் சேரமான் பெருமாளின் கயிலாய ஞானஉலாக் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இராஜராஜர் காலத்தே வழக்கிலிருந்த கண்ணப்பர் கதை சேக்கிழாரால் எப்படித் திருத்தி அமைக்கப்பட்டது என்பதை இத்திருவாயில் செதுக்கல்களைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். காலத்தின் தேவைக்கேற்பப் புராணங்களில் நிகழும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும் இதன் வழி விளங்கிக் கொள்ளலாம்.

இராஜராஜீசுவரத்தின் திருச்சுற்று மாளிகை மாறுபட்டது. கோயில் கலை வரலாற்றில் முதன்முறையாக எண்திசைக் காவலர்களுக்கான இருதள விமானங்களை உள்ளடக்கி எழுந்த முதல் சுற்றுமாளிகை அதுதான். இராஜராஜரின் படைத்தலைவர் பொறுப்பேற்றுக் கட்டிய அம்மாளிகையின் எண்திசைக் காவலர்களுள் சிலர் இன்றும் காட்சியாகின்றனர். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் இராஜராஜருக்கு முன்னெழுந்த எந்தக் கோயிலும் இத்தகு பேரளவு திசைக்காவலர்களைப் பெறவில்லை. சோழர் காலச் சிற்பச் செழுமைகளான இக்காவலர்கள் கலைவரலாற்றில் உரிய இடம்பெறாமல் போனமை துன்பமான உண்மை.

இராஜராஜீசுவர விமானம் தமிழ்நாட்டின் தனிப்பெரும் முதல் கட்டுமானம். அதன் உயரமும் கம்பீரமும் தள எண்ணிக்கையும் இன்றளவும் முதல் நிலையிலேயே உள்ளன. இராஜராஜருக்குப் பின்னும் யாரும் அதை மீறமுடியவில்லை. விமானத்தில் அமையும் கருவறையைச் சுற்றி இருசுவரெடுத்து அவற்றிடையே உள்சுற்று அமைப்பது பல்லவப் பழைமையதுதான் எனினும், அதை இருதள நிலைக்கு உயர்த்தி இரண்டு சுற்றுகளாக மாற்றிப் பெற்ற முதல் கோயில் இராஜராஜீசுவரம்தான். இராஜராஜருக்கு முன்னும் பின்னும் இத்தகு சுற்று அமைந்தபோதும் இராஜராஜீசுவரமே அச்சுற்றுகளை வரலாற்றுக் களங்களாக்கிப் பெருமை கொண்டது.

உள்சுற்று ஓவியச் சுவர்

உள்சுற்று ஓவியச் சுவர் கீழ்ச்சுற்றில் சுவரெங்கும் சோழ ஓவியங்கள். ஒரு சுவரை நிறைத்து ஆலமர்அண்ணலின் காட்டுக் காட்சி. அடுத்த சுவரிலோ சுந்தரர் வாழ்க்கை. மூன்றாம் சுவர், பெருங்கோயிலும் வழிபடுவோரும் கோயில் நடைமுறைகளும் என விரிய, நான்காம் சுவரில் முப்புரம் எரித்த கதை. மேல் சுற்று, சிவபெருமானின் 108 கரணங்களுக்கான கற்பதிவுகள் பெற்று எண்பத்தொரு சிற்பங்களுடன் பொலிகிறது.

எந்தத் தாங்கலும் இல்லாமல், சட்டக அமைப்புகள் கொள்ளாமல் கற்களை அடுக்கி இத்தனை உயரத்தில் ஒரு விமானமா? இரண்டாம் தளத்தில் நின்று பார்ப்பவரின் கண்முன் விரியும் அந்தக் காட்சி, தமிழர் கட்டுமானப் பொறியியலின் உச்சம். ‘நான் முதல்வன்’ என்று இராஜராஜரும் இராஜராஜீசுவரமும் இணைந்து புன்னகைக்கும் இடம் அது. சுற்றில் நின்று பார்த்தாலும் உள்ளிருந்து நோக்கினாலும் எல்லாருக்கும் ஒரே கேள்விதான், இந்த முதல்வனை எப்படி எழுப்பினார்கள்! இந்தக் கேள்வியைச் சுற்றித்தான் சாரப்பள்ளம் உள்ளிட்ட எத்தனை வீறுடைக் கதைகள் வளர்ந்துள்ளன! அதிலும் இந்தக் கோயில் முதல்வனே!

சண்டேசுவரர் திருமுன்

தமிழ்நாட்டுக் கோயில்களில் மிகப் பெரிதாய் இலிங்கம் பெற்ற முதல் கருவறை இராஜராஜீசுவரம்தான். இருதள உயரத்திற்குக் கருவறை பெற்ற முதல் கோயிலும் அதுதான். சண்டேசுவரருக்குத் தனிக் கோயில் காலப் பழைமையது எனினும், அதைப் பெருங்கோயிலாய் இருதள விமானமாய் முதலில் பெற்றுப் பெருமிதமுற்றது இராஜராஜீசுவரம்தான். அதற்கிணையான மற்றொரு திருமுன் ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாம் இராஜராஜரால் தாராசுரத்தில் உருவாக்கப்பட்டது.

கல்லெழுத்துக்களைக் கலைநயத்தோடு பொறிப்பது பல்லவர் காலத்திலிருந்து தொடர்ந்தாலும் இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் அலங்காரம் தவிர்த்த அழகியல் பொளிவுகள். இந்தக் கல்வெட்டுகள்தான் வரலாற்றிலும் இந்தக் கோயில் பல முதல்களுடன் திகழ்ந்தமை பேசுகின்றன. தமிழ்நாட்டிலேயே 400 தளிப்பெண்கள் தனி வீடு பெற்று ஊதியமாய் 100 கலம் நெல்லும் பெற்றுக் கலைவளர்த்த முதல் கோயில் இதுதான். 48 பதிகப் பாடகர்கள் இறைத்திருமுன் தேவாரம் பாடிய ஒரே கோயில் இராஜராஜீசுவரம்தான். ‘நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்’ என்று மன்னன் முதல் மக்கள் ஈறாக அனைவரும் ஒரே நிலையில் ஒளிரும் சமத்துவப் பொறிப்பும் தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டுமே களம் கண்டது.

தமிழ்நாட்டின் பல கோயில்கள் பல்லவர், சோழர் காலத்தும் தொடர்ந்த பிற மரபு அரசர் காலத்தும் வளமான இறைத் திருமேனிகளை உலாத்திருமேனிகளாகப் பெற்றுச் சிறந்தன. ஆனால், அவற்றுள் எந்தக் கோயிலும் இராஜராஜீசுவரம் போல் வழங்கப்பட்ட அனைத்துத் திருமேனிகளுக்கும் விரிவான வடிவ அமைப்பு விளக்கங்களைக் கல்வெட்டுப் பொறிப்புகளாய்க் கொள்ளவில்லை. அது மட்டுமன்று, இங்கு வழங்கப்பட்ட சில அரிய செப்புத்திருமேனிகள் வேறெங்கும் அமையவுமில்லை.

‘நான் முதல்வன்’ என்பது வெறும் பெருமைச் சொல்லாடல் அன்று. அப்படி வெறுமையாகச் சொல்லாடவும் முடியாது.

முதல்கள் இல்லாமல் முதல்வனாவது எப்படி? இராஜராஜீசுவரம் முடிவில்லாத முதல்களின் முதல்வன். கட்டி அமைக்கப்பட்ட காலத்தும் இன்று கண்டுகளிப்போரின் கருத்து நிறைக்கும் காலத்தும் இராஜராஜீசுவரத்துக்கு இணை இராஜராஜீசுவரம்தான். அது என்றென்றும் கோயில்களின் முதல்வன்.