11/09/23 அன்று என்.ஜே. சன்ரைஸ் ரேடியோ (NJ Sunrise Radio)- தமிழ் அலைவரிசையில், டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்காணல் ஒளிபரப்பானது. பேராசிரியர் இ.ஜே. சுந்தர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் வரலாறு சார்ந்த வினாக்களுக்கு விடையளித்த டாக்டர் இரா. கலைக்கோவன், எளிய முறையில் பற்பல அரிய தகவல்களை வழங்கினார். அதிலும் குறிப்பாக, தமிழகக் கோயில்கள் பற்றிப் பரவிக் கிடக்கும் தவறான செய்திகளைத் திருத்தி நேர்ப்படுத்தும் தரவுகளை அளித்து, உண்மையான வரலாறைப் புரிந்துகொள்ளச் செய்த உரையாடலாகவும் அது அமைந்தது.
என்.ஜே. சன்ரைஸ் ரேடியோவின் இணையப் பதிவை இங்கு காணலாம்.
10/09/23 அன்று சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில், திரு. இராமநாதன் பழனியப்பன் அவர்களின் ‘கறைக்கண்டன் சேவடி சேர்ந்த காரைக்கால் அம்மையார்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் சிறப்புரையாற்றிய டாக்டர் இரா. கலைக்கோவன், காரைக்கால் அம்மை குறித்த காணொலிப் பொழிவொன்றை வழங்கினார்.
அன்றைய நிகழ்வின் இணையப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது. நேரம் 1:15:20 தொடங்கி 1:43:40 வரை டாக்டர் இரா. கலைக்கோவனின் பொழிவைக் காணலாம்.
நான் முதல்வன் என்று சொல்ல நினைக்கும்போதே பெருமிதம் பொங்குகிறது. எழுச்சியை உறுதிப்படுத்தும் நம்பிக்கைத் தொடர் அது. மாணவர் உயர்வுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சொல்லிணைவு கோயில்களுக்குப் பொருந்துமா? தமிழ்நாட்டுக் கோயில்களில் எவை எவை இப்படிப் பெருமையுடன் பூரிக்கமுடியும்? அந்தப் பெருமைகள் கலைவரலாற்று மெய்மைகளின் மேல் இவருமா? ‘உறுதியாக’ என்றுதான் உண்மைகள் அணிவகுக்கின்றன.
பல்லவர் மண்ணின் முதல் குடைவரையாக முதலாம் மகேந்திரரின் மண்டகப்பட்டு லக்ஷிதாயதனம் தன் மேனிக் கல்வெட்டைக் காட்டி நான் முதல்வன் என்று உரக்கப் பேசலாம். நாற்றிசையிலும் சுற்று மதிலொட்டிய இருதள விமானத் தொடர் என்னிடம் மட்டுமே என்று காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் நான் முதல்வனுக்கு உரிமை கோரலாம். விமானத்தின் நாற்புறத்தும் சுவரின் நடுப்பத்திகள் மட்டும் வெளியிழுக்கப்பட்டுத் தனித் திருமுன்களாய், முதன்மை விமான உடலோடு ஒட்டிய துணை விமானங்களாய் உருவாக்கப்பட்ட பெருமை எனக்குத்தான் முதலில் அமைந்தது என்று பனைமலை ஈசுவரம் நான்மு முதல்வன் வரிசைக்குப் போட்டியிடலாம்.
தமிழ்நாடு முழுவதும் இப்படிப் பல கோயில்கள் ஏதாவது ஒரு கட்டுமான உத்தியையோ, உறுப்பையோ முதலாவதாய்ப் பெற்றுச் சிறந்திருக்கும் பெருமை சுட்டி, அதில் நான் முதல்வன் என்று நம்பிக்கையோடு பேசமுடியும். ஆனால், ஒன்றல்ல, இரண்டல்ல பலவாய் முதல்களைச் சுமந்து கொண்டு அனைத்திலும் நானே முதல் எனச் சொல்லத்தக்க திருக்கோயில் தமிழ்நாட்டில் உள்ளதா எனின், நிமிர்த்திய தலையும் பூரித்த நெஞ்சுமாய், ‘ஆம்’ என்று மகிழ்ந்து சொல்ல நமக்கு வாய்த்திருக்கும் சிறப்புக்குரிய கோயில் இராஜராஜீசுவரம்!
தஞ்சாவூரில் சோழப் பெருவேந்தர் முதலாம் இராஜராஜரால், ‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்ற தெளிவான முகவுரையுடன் பொதுக்காலம் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டமைக்கப்பட்ட இராஜராஜீசுவரம், நான் முதல்வன் என்று பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டுக் கலைவரலாறு சிலிர்த்தெழும் அளவிற்கு உண்மைகள் ஊர்வலமாகும். இன்று அரசு ஆவணங்களில் பிரகதீசுவரமாய்ப் பெயர் மாற்றப்பட்டிருக்கும் இராஜராஜரின் நெஞ்சுக்கு நெருக்கமான இந்த இராஜராஜீசுவரமே இரண்டு திருவாயில்களைப் பெற்ற தமிழ்நாட்டின் முதல் திருக்கோயில். அந்த இரண்டு வாயில்களுமே கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில் என்று கட்டியவர் பெயரேற்றுப் பெருமை கொண்டதும் அதுவே முதல்முறை.
கோபுரப் புறச்சுவர்கள் புராண, திருமுறைக் காட்சிகளைச் சிற்றுருவச் சிற்பத்தொடர்களாய்க் கொண்டமைந்த முதலிடம் இராஜராஜீசுவரம். இராஜராஜன் திருவாயிலின் நாற்புறச் சுவர்களிலும் சிவபெருமான் முப்புரம் எரித்தமை, அருச்சுனரோடு சண்டையிட்டமை உள்ளிட்ட பல புராணச் சித்தரிப்புகளும் நக்கீரதேவரின், ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ காட்டியிருக்குமாறே கண்ணப்பரின் வாழ்வியலும் சேரமான் பெருமாளின் கயிலாய ஞானஉலாக் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இராஜராஜர் காலத்தே வழக்கிலிருந்த கண்ணப்பர் கதை சேக்கிழாரால் எப்படித் திருத்தி அமைக்கப்பட்டது என்பதை இத்திருவாயில் செதுக்கல்களைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். காலத்தின் தேவைக்கேற்பப் புராணங்களில் நிகழும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும் இதன் வழி விளங்கிக் கொள்ளலாம்.
இராஜராஜீசுவரத்தின் திருச்சுற்று மாளிகை மாறுபட்டது. கோயில் கலை வரலாற்றில் முதன்முறையாக எண்திசைக் காவலர்களுக்கான இருதள விமானங்களை உள்ளடக்கி எழுந்த முதல் சுற்றுமாளிகை அதுதான். இராஜராஜரின் படைத்தலைவர் பொறுப்பேற்றுக் கட்டிய அம்மாளிகையின் எண்திசைக் காவலர்களுள் சிலர் இன்றும் காட்சியாகின்றனர். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் இராஜராஜருக்கு முன்னெழுந்த எந்தக் கோயிலும் இத்தகு பேரளவு திசைக்காவலர்களைப் பெறவில்லை. சோழர் காலச் சிற்பச் செழுமைகளான இக்காவலர்கள் கலைவரலாற்றில் உரிய இடம்பெறாமல் போனமை துன்பமான உண்மை.
இராஜராஜீசுவர விமானம் தமிழ்நாட்டின் தனிப்பெரும் முதல் கட்டுமானம். அதன் உயரமும் கம்பீரமும் தள எண்ணிக்கையும் இன்றளவும் முதல் நிலையிலேயே உள்ளன. இராஜராஜருக்குப் பின்னும் யாரும் அதை மீறமுடியவில்லை. விமானத்தில் அமையும் கருவறையைச் சுற்றி இருசுவரெடுத்து அவற்றிடையே உள்சுற்று அமைப்பது பல்லவப் பழைமையதுதான் எனினும், அதை இருதள நிலைக்கு உயர்த்தி இரண்டு சுற்றுகளாக மாற்றிப் பெற்ற முதல் கோயில் இராஜராஜீசுவரம்தான். இராஜராஜருக்கு முன்னும் பின்னும் இத்தகு சுற்று அமைந்தபோதும் இராஜராஜீசுவரமே அச்சுற்றுகளை வரலாற்றுக் களங்களாக்கிப் பெருமை கொண்டது.
உள்சுற்று ஓவியச் சுவர்
உள்சுற்று ஓவியச் சுவர் கீழ்ச்சுற்றில் சுவரெங்கும் சோழ ஓவியங்கள். ஒரு சுவரை நிறைத்து ஆலமர்அண்ணலின் காட்டுக் காட்சி. அடுத்த சுவரிலோ சுந்தரர் வாழ்க்கை. மூன்றாம் சுவர், பெருங்கோயிலும் வழிபடுவோரும் கோயில் நடைமுறைகளும் என விரிய, நான்காம் சுவரில் முப்புரம் எரித்த கதை. மேல் சுற்று, சிவபெருமானின் 108 கரணங்களுக்கான கற்பதிவுகள் பெற்று எண்பத்தொரு சிற்பங்களுடன் பொலிகிறது.
எந்தத் தாங்கலும் இல்லாமல், சட்டக அமைப்புகள் கொள்ளாமல் கற்களை அடுக்கி இத்தனை உயரத்தில் ஒரு விமானமா? இரண்டாம் தளத்தில் நின்று பார்ப்பவரின் கண்முன் விரியும் அந்தக் காட்சி, தமிழர் கட்டுமானப் பொறியியலின் உச்சம். ‘நான் முதல்வன்’ என்று இராஜராஜரும் இராஜராஜீசுவரமும் இணைந்து புன்னகைக்கும் இடம் அது. சுற்றில் நின்று பார்த்தாலும் உள்ளிருந்து நோக்கினாலும் எல்லாருக்கும் ஒரே கேள்விதான், இந்த முதல்வனை எப்படி எழுப்பினார்கள்! இந்தக் கேள்வியைச் சுற்றித்தான் சாரப்பள்ளம் உள்ளிட்ட எத்தனை வீறுடைக் கதைகள் வளர்ந்துள்ளன! அதிலும் இந்தக் கோயில் முதல்வனே!
சண்டேசுவரர் திருமுன்
தமிழ்நாட்டுக் கோயில்களில் மிகப் பெரிதாய் இலிங்கம் பெற்ற முதல் கருவறை இராஜராஜீசுவரம்தான். இருதள உயரத்திற்குக் கருவறை பெற்ற முதல் கோயிலும் அதுதான். சண்டேசுவரருக்குத் தனிக் கோயில் காலப் பழைமையது எனினும், அதைப் பெருங்கோயிலாய் இருதள விமானமாய் முதலில் பெற்றுப் பெருமிதமுற்றது இராஜராஜீசுவரம்தான். அதற்கிணையான மற்றொரு திருமுன் ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாம் இராஜராஜரால் தாராசுரத்தில் உருவாக்கப்பட்டது.
கல்லெழுத்துக்களைக் கலைநயத்தோடு பொறிப்பது பல்லவர் காலத்திலிருந்து தொடர்ந்தாலும் இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் அலங்காரம் தவிர்த்த அழகியல் பொளிவுகள். இந்தக் கல்வெட்டுகள்தான் வரலாற்றிலும் இந்தக் கோயில் பல முதல்களுடன் திகழ்ந்தமை பேசுகின்றன. தமிழ்நாட்டிலேயே 400 தளிப்பெண்கள் தனி வீடு பெற்று ஊதியமாய் 100 கலம் நெல்லும் பெற்றுக் கலைவளர்த்த முதல் கோயில் இதுதான். 48 பதிகப் பாடகர்கள் இறைத்திருமுன் தேவாரம் பாடிய ஒரே கோயில் இராஜராஜீசுவரம்தான். ‘நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்’ என்று மன்னன் முதல் மக்கள் ஈறாக அனைவரும் ஒரே நிலையில் ஒளிரும் சமத்துவப் பொறிப்பும் தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டுமே களம் கண்டது.
தமிழ்நாட்டின் பல கோயில்கள் பல்லவர், சோழர் காலத்தும் தொடர்ந்த பிற மரபு அரசர் காலத்தும் வளமான இறைத் திருமேனிகளை உலாத்திருமேனிகளாகப் பெற்றுச் சிறந்தன. ஆனால், அவற்றுள் எந்தக் கோயிலும் இராஜராஜீசுவரம் போல் வழங்கப்பட்ட அனைத்துத் திருமேனிகளுக்கும் விரிவான வடிவ அமைப்பு விளக்கங்களைக் கல்வெட்டுப் பொறிப்புகளாய்க் கொள்ளவில்லை. அது மட்டுமன்று, இங்கு வழங்கப்பட்ட சில அரிய செப்புத்திருமேனிகள் வேறெங்கும் அமையவுமில்லை.
‘நான் முதல்வன்’ என்பது வெறும் பெருமைச் சொல்லாடல் அன்று. அப்படி வெறுமையாகச் சொல்லாடவும் முடியாது.
முதல்கள் இல்லாமல் முதல்வனாவது எப்படி? இராஜராஜீசுவரம் முடிவில்லாத முதல்களின் முதல்வன். கட்டி அமைக்கப்பட்ட காலத்தும் இன்று கண்டுகளிப்போரின் கருத்து நிறைக்கும் காலத்தும் இராஜராஜீசுவரத்துக்கு இணை இராஜராஜீசுவரம்தான். அது என்றென்றும் கோயில்களின் முதல்வன்.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் 2023இல் மூன்று புதிய நூல்களை வெளியிட்டுள்ளது. அல்லூர், வடகுடி, திருமங்கலம் சோழர் தளிகள் பற்றி ஒரு நூலும், திருநெடுங்களம், திருவாசி, நகர், கண்ணனூர் சோழர் தளிகள் பற்றி ஒரு நூலும், வரலாறு ஆய்விதழின் ஒருங்கிணைந்த தொகுதியும் (31-32) தற்போது வெளியாகியுள்ளன. 1993 தொடங்கி 30 ஆண்டுகளில் 30 தொகுதிகளாக மலர்ந்திருக்கும் ஆய்விதழ் வரலாறு என்பது வரலாற்றார்வலர்கள் அறிந்ததே.
அல்லூர் வடகுடி திருமங்கலம் சோழர் தளிகள் மூன்று
அல்லூர் நக்கன், வடகுடி மகாதேவர், திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில்களின் முழுமையான படப்பிடிப்பு, கல்வெட்டுத் தரவுகள், சிற்பச் சிறப்புகள், கோயிலமைப்பு ஆகியவற்றுடன் களஆய்வுகளில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளின் பாடங்களும் கொடும்பாளூர் வேளிர் மரபுவழிப் பட்டியலும் இணைக்கப்பட்ட நூல் இது.
சிராப்பள்ளி மாவட்டச் சோழர் காலத் தளிகள் ஐந்து
திருநெடுங்களம் நெடுங்களநாதர், திருவாசி மாற்றுரைவரதீசுவரர், நகர் அப்ரதீசுவரர், கண்ணனூர்ப் போசளீசுவரர், முக்தீசுவரர் கோயில்களின் கட்டமைப்பு, சிற்பச் செழிப்பு, கல்வெட்டுச் சிறப்புப் பேசும் தரவுப் பெட்டகம். இக்கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய தரவுகளும் கோயில்களின் தனிச் சிறப்புகளும் நூலை வளப்படுத்தியுள்ளன.
வரலாறு ஆய்விதழ்
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுமுடிவுகளையும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் 1993 ஆகஸ்டு 15ஆம் நாள் தோன்றிய ஆய்விதழ் ‘வரலாறு’. 2021, 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த இதழாக வரலாறு 31-32 தொகுதி அச்சில் வந்துள்ளது.
வரலாறு 31-32
நூல்கள் பெற விழைவோர் தொடர்புகொள்ள –
சி 87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி – 600 018
தமிழ்நாட்டு வரலாறு சங்க காலத்திலிருந்தே வீறுடைப் போர்க்களங்கள் பலவற்றைப் பார்த்துள்ளது. கரிகாலரின் வெண்ணிப்போரும் கோச்செங்கணானின் கழுமலப்போரும் இலக்கியங்களாகுமளவு வெற்றி கண்டன. ஒரு போர், அது எந்த நாடுகளுக்கிடையில் நடந்தாலும் எத்தகு அரச மரபுகளுக்கிடையில் நிகழ்ந்தாலும் விளைவு வெற்றி ஒருபக்கம், தோல்வி மற்றொரு பக்கம் என்பதாகத்தான் முடியும். அந்த வெற்றியும் தோல்வியும்தான் போரிடும் அரசுகளின் தொடர்ச்சியையோ, இறுதியையோ முடிவுசெய்கின்றன. திருப்புறம்பியத்தில் நிகழ்ந்த போர் அத்தகையது. பெருகியிருந்த பல்லவர்களைச் சுருட்டி வீசியும் சுருங்கியிருந்த சோழர்களை எழுச்சியுடன் பரவவும் வைத்த களமது!
புறம்பியத்துக்கு முற்றிலும் நேர்மாறாக அமைந்த போர்களையும் தமிழ் மண் சந்தித்துள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பொதுக்காலம் 949இல் நிகழ்ந்த தக்கோலப் போர். முதற் பராந்தகர் ஆட்சியில் சோழர்களுக்கும் கன்னரதேவர் தலைமையில் இராஷ்டிரகூடர்களுக்கும் நிகழ்ந்த அப்பெரும் போரில், போரை எதிர்பார்த்துப் பல ஆண்டுக் காலம் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் படையுடன் தங்கியிருந்த சோழ இளவரசர் இராஜாதித்தர் யானைமேலிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார். கன்னரதேவரின் துணைக்கு வந்த கங்க அரசர் பூதுகன் இராஜாதித்தரின் யானை மேல் தாவியேறி அவரை அழித்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. சோழர் படை தோற்றது. கன்னரதேவர் வெற்றிப் பெருமையுடன் தொண்டை மண்டலத்தில் நுழைந்தமைக்கு அப்பகுதியில் கிடைக்கும் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன.
கச்சியும் தஞ்சையும் கொண்டவராகக் கன்னரதேவர் தம்மைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டாலும், அவரது கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் வடபகுதியில் மட்டுமே பதிவாகியுள்ளன. போரில் கன்னரதேவர் வென்றிருந்தபோதும், சோழ அரியணையில் பராந்தகரே தொடர்ந்தார். சோழராட்சியின் கீழிருந்த ஒருபகுதிதான் கன்னரதேவரால் கைக்கொள்ளப்பட்டதே தவிர, தக்கோலப் போர் சோழர்களை வீழ்த்தவில்லை. தஞ்சாவூரும் கன்னரர் வயமாகவில்லை.
தமிழ்நாட்டுப் போர்க்களங்களில் தங்கள் இன்னுயிரை இழந்த அரசர்கள் பலராவர். சோழ மரபிலேயே யானை மேல் துஞ்சியவர்களாக இருவர் உள்ளனர். ஒருவர் தக்கோலத்தில் கொல்லப்பட்ட இராஜாதித்தர். மற்றொருவர் கொப்பம் போரில் உயிரிழந்த முதல் இராஜாதிராஜர். போர்க்கள மரணம் வீரர்கள் பெருமைப்படுவதுதான் என்றாலும், அந்த இழப்பு, சிலருடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுகிறது. இராஜாதித்தருக்குத் தக்கோலத்தில் நிகழ்ந்த முடிவு ஒரு படைத்தலைவரைப் பண்டிதராக்கியது என்றால் நம்புவீர்களா? இது கதையல்ல வரலாறு.
வடசென்னையின் புகழ் மிக்க கோயில்களுள் ஒற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலும் ஒன்று. பாடல் பெற்ற அத்திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள், சமஸ்கிருதத்திலும் தமிழிலுமாய்ப் பொறிக்கப்பட்டுள்ள இராஷ்டிரகூட அரசர் கன்னரதேவர் காலக் கல்வெட்டொன்று (பொதுக்காலம் 959), திருவொற்றியூர் மடத்தைச் சேர்ந்த சதுரானன பண்டிதர், தாம் பிறந்த அவிட்ட நட்சத்திரத்தின்போது கோயில் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் செலவினங்களுக்காக நரசிங்கமங்கலத்து சபையாரிடம் 100 பொன் அளித்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. கல்வெட்டின் தமிழ்ப்பகுதி இறைவழிபாடு பற்றிய விரிவான செய்திகளைச் சுட்ட, சமஸ்கிருதப் பகுதி பண்டிதரின் பழைய வரலாறு பேசுகிறது.
ஒற்றியூர் கல்வெட்டுக்கள்
பிறை சூடிய சிவபெருமானுக்கு முருகன் மகனானாற் போலக் கேரள இராஜசேகரனுக்கு இவர் மகனானார். இளமையிலேயே திறமைகளின் ஊற்றாய் விளங்கிய இவர், உலக நலத்திற்கு உழைக்க விழைந்தவராய்ச் சோழநாடு வந்து தம் வீரத்தாலும் ஆற்றலாலும் சோழ இளவரசரான இராஜாதித்தரின் உளம் உகந்த படைத்தலைவரானார். இளவரசரோடு இணைந்திருந்தபோதும் உரிய நேரத்தில் உடனிருக்க முடியாமல் போனமையால் போரில் மன்னரோடு உயிரிழக்கும் வாய்ப்பிழந்தார்.
தம் மரபுவழிக்கும் தகுதிக்கும் தாம் ஏற்றிருந்த பொறுப்பிற்கும் பொருந்தாத அச்செயலால் உளம் நொறுங்கிய அவர், உலக சுகங்களை வெறுத்தொதுக்கி கங்கையை அடைந்தார். அதில் மூழ்கிய பிறகே அவர் மனம் தெளிந்தது. நாடெங்கும் திரிந்து ஒற்றியூரிலிருந்த நிரஞ்சன குருவின் குகையில் தங்கியபோது ஞானம் பிறந்தது. அக்குகையை நிருவகிக்கும் பொறுப்பும் வந்தடைந்தது. ‘சதுரானன’ என்ற புதிய பெயருடன் மடத்தின் தலைவராக மறுபிறப்பெய்திய நிலையில்தான், ஒற்றியூர் இறைவனுக்குத் தம் பிறந்தநாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் கொடையை அவர் அளித்திருக்கிறார்.
தக்கோலத்தில் உயிரிழந்த இராஜாதித்தருடன் களத்தில் இருக்கமுடியாமைக்கு வருந்தி, நாடெல்லாம் சுற்றி, ஒற்றியூரில் ஞானம் பெற்றுப் பண்டிதரான இந்தக் கேரளப் படைத்தலைவரை அடையாளம் காணப் பெண்ணையாற்றங் கரையிலுள்ள கிராமம் எனும் சிற்றூரில் விளங்கும் சிவலோகநாதசாமி கோயிலுக்கு வரவேண்டும். பொதுக்காலம் 938இல் திருமுனைப்பாடிநாடு என்றழைக்கப்பட்ட இப்பகுதியில்தான் சோழ இளவரசர்களான இராஜாதித்தரும் அரிஞ்சயரும் பெரும் படையுடன் போரை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். போர் நிகழும்வரை திருமுனைப்பாடியில் தங்கியிருந்த சோழர்கள் பல அரும்பணிகளைச் செய்தனர்.
தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் பிறந்த திருநாவலூரிலுள்ள திருத்தொண்டீசுவரத்தை இராஜாதித்தர் கற்றளியாக்கினார். திருக்கோவலூர்க் கோயில் பணிக்கு அரிஞ்சயரின் படைகள் துணைநின்றன. கேரளத்துத் திருநந்திக்கரைப் புத்தூரில் பிறந்து, இராஜாதித்தரிடம் பெரும்படை நாயகராகப் பொறுப்பேற்றிருந்த வெள்ளங்குமரன், தம் தலைவர் போலவே அப்பர் பெருமான் பாடல் பெற்ற கிராமத்து சிவன் கோயிலாம் ஆற்றுத்தளியைக் கற்றளியாக்கி அறக்கட்டளை அமைத்தார். அவரது இரண்டு கல்வெட்டுகள் சிவலோகநாதசாமி கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. அவரோடு அவரது கேரளப் படை வீரர்கள் பலரும் கோயிலுக்குப் பலவாய் அறங்களைச் செய்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன.
செய்திக் குறிப்பைத் தாங்கிய ‘இந்து’ நாளிதழ்
இராஜாதித்தரின் உள்ளத்துக்கு நெருங்கியவராகவும் சோழர்களின் பெரும்படை நாயகராகவும் விளங்கிய வெள்ளங்குமரன், தக்கோலப் போர்க்களத்தில் இராஜாதித்தர் உயிரிழக்க நேர்ந்தபோது உடனிருக்க முடியாமல் போனமை எதனால் என்பதை வரலாறு நமக்குக் கூறவில்லை என்றாலும், அப்பேரிழப்புக் குமரனை எத்தகு துன்பத்திற்கு ஆளாக்கியது என்பதையும் அதனால், அவர் வாழ்வியலே மாறி ஒற்றியூர்ப் பண்டிதராய் அவர் மறுபிறப்புற்றதையும் கல்வெட்டாய் நின்று காட்டத்தான் செய்கிறது. இடைவெளிகள் இல்லாமல் வரலாறு இல்லை. ஆனால், அதனாலேயே, வரலாறு இடைவெளிகளால் ஆனதுதான் என்றும் நினைத்துவிடக் கூடாது.
திருத்தோணிபுரம் என்று பத்திமை இலக்கியங்கள் குறிப்பிடும் சீர்காழியில் சமீபத்தில் தேவாரப் பாடல்கள் பொறிக்கப்பட்டச் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து டாக்டர் இரா. கலைக்கோவன் கருத்து தெரிவிக்கையில்-
“தேவாரப் பண்களைச் செப்பேடுகளில் எழுதுவது வழக்கில் இருந்ததை முதலாம் குலோத்துங்கன் மற்றும் அவன் மகன் விக்கிரமச் சோழன் ஆட்சிக் காலங்களில் படைத்தலைவனாக இருந்த நரலோக வீரன் கல்வெட்டுகளிலிருந்து அறியமுடிகிறது. சிதம்பரம் கோயிலுக்குச் செப்புத் திருமேனிகள் வழங்கியும், திருஞானசம்பந்தரின் தேவாரப் பண்கள் பாடுவதற்கென அழகியதோர் மண்டபம் அமைத்தும் கோயில் திருப்பணிகள் செய்த நரலோக வீரன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பண்களைச் செப்பேடுகளில் பதிக்கச் செய்தான்,” என்று தெரிவித்தார்.
கூடுதலாக, செப்பேடுகளின் எழுத்தமைதியைப் பார்க்கையில் அவை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கன் காலத்தவை என்று கூறலாம், என்றும் அவர் கருத்துரைத்தார்.
தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களின் செய்திக்குறிப்புகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன-
வரலாற்றறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தம் ‘பெரியபுராண ஆராய்ச்சி’ நூலில் நரலோக வீரன் பற்றி எழுதியுள்ள பக்கங்களைக் கீழே காணலாம்-
சோழர் காலத் தமிழ்நாட்டில் இருந்த மூன்று வகை ஊராட்சிகள்- பிராமணர் குடியிருப்புகளுக்கான பிரமதேய மகாசபை, வணிகர் பணிகளுக்கான நகரத்தார் கூட்டமைப்பு, வேளாண் பெருமக்கள் வாழ்ந்த ஊர்களுக்குரிய ஊரார் அவை என்பன.
இம்மூன்று உள்ளாட்சிகளில், சங்க காலம்முதலே நன்கு அறியப்பட்ட ஊரார் கூட்டாட்சி சோழர்காலத்திலும் தொடர்ந்துச் சிறப்புடன் இயங்கிவந்தமைக்குச் சோழர் கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் ஏப்ரல் 09, 2023 அன்று வெளியான டாக்டர் இரா. கலைக்கோவனின் ‘சோழர் கால ஊரார்’ என்ற தலைப்பிலான கட்டுரை- ஊரவைகளின் பணிகள், அவை தனித்து இயங்கியபோதும் தேவைக்கேற்பத் தத்தம் ஊரை அடுத்திருந்த பிரமதேய சபை, நகரத்தார் அவையுடன் இணைந்து செயற்பட்டச் சூழல், ஊரில் நில உரிமை கொண்டிருந்தவர்கள் தம் பெயருடன் இணைத்துக் கொண்ட சிறப்பொட்டுக்கள் போன்ற சுவையான பலச் செய்திகளை விளக்குகிறது.
நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-
“சில சுவையான கதைகள் வரலாறு போல வாழ்வதும் சில ஊர்களின் வரலாறு கதைகளைப் போல நிகழ்வுகளின் தொடரிணைப்பால் உருவாவதும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன”, என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும்12.03.2023 அன்று ‘வரலாறு ஒரு கதை போல…’ என்ற தலைப்பில் பதிவான அவருடைய கட்டுரை, இப்படித்தான் தொடங்குகிறது.
திருச்சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் உள்ள அழுந்தூர் என்ற சிற்றூரில் சிதைந்திருந்த பழங்காலக் கோயிலையும், அங்குப் புதைந்திருந்த சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் சமீபத்தில் ஆய்வு செய்தனர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர். அந்த ஆய்வுக் களம் கூட்டிச்சென்ற பாதைகளும், பாதைகள் காட்டிய சான்றுகளும், சான்றுகளால் கிட்டிய அழுந்தூரின் வரலாறும் பற்றியதுதான் ‘வரலாறு ஒரு கதை போல…’.
அழுந்தூர் கண்டுபிடிப்புகள் குறித்து நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC), ஆய்வுப் படைப்புகளின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, நவம்பர் 2018இல் ‘Consortium for Academic and Research Ethics’ (CARE)/ சிஎஆர்இ-UGC என்ற அமைப்பை நிறுவியது.
முனைவர் பட்டம் பெறும்முன் ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வுத் தாள்களைப் பதிப்பிக்க, தரமான ஆய்விதழ்களை நாடுவர். அத்தகைய தரமான ஆய்விதழ்களின் பட்டியலை சிஎஆர்இ (CARE), ஆண்டிற்கு இருமுறை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
அப்பட்டியலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் ஆண்டு ஆய்விதழ் ‘வரலாறு’ செப்டம்பர் 2019 முதல் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் 2023ஆம் ஆண்டிற்கான பட்டியலிலும் ‘வரலாறு’ ஆய்விதழ் தொடர்கிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கச்சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுகளில், அயோத்தி ஆழ்வார் கோயில் என்ற புதிய கோயில் பற்றிய குறிப்புகள் கிட்டின. அதனைத் தொடர்ந்து, அயோத்தி ஆழ்வார் கோயிலைத் தேடும் அடுத்தக்கட்ட கள ஆய்வு தொடங்கியது. திருமங்கலத்தில் வரதராஜப் பெருமாள் பெயரால் விளங்கும் இன்றைய கோயிலைக் கண்டறிந்து அங்கு ஆய்வு செய்தபோது, மற்றுமொரு புதிய கல்வெட்டு கிடைத்தது. அக்கல்வெட்டு, கோயிலின் ஒரு பகுதியை ‘திருஅயோத்தி எம்பெரிமான் திருமுற்றம்’ என்று சுட்டியது வினாக்களுக்கு விடையளிக்குமாறு அமைந்தது.
டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கையில், “வரதராஜப் பெருமாள் கோயிலின் இன்றைய கட்டுமானம் அண்மைக் காலத்தது என்றபோதும், அது கட்டப்பட்டிருக்கும் இடம் திருமங்கலத்திலிருந்த அயோத்தி ஆழ்வார் கோயில் திருமுற்றமாகவே இருப்பது சிறப்பாகும்” என்று குறிப்பிட்டார்.