மு. நளினி, இரா. கலைக்கோவன்
காஞ்சிபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ளது கூரம். பல்லவர் வரலாற்றில் சிறப்பிடம் பெறும் இவ்வூரில்தான் கூரம் செப்பேடு கண்டறியப்பட்டது.1 புகழ்மிக்க கூரம் ஊர்த்வஜாநு ஆடவல்லானும் இவ்வூரினர்தான்.2

விமானம்
பல்லவர் காலக் கோயில்கள்
இங்குப் பல்லவர் காலக் கோயில்கள் இரண்டு உள்ளன. ஒன்று வித்யாவிநீத பல்லவ பரமேசுவரகிருகமான சிவன்கோயில். மற்றொன்று ஆதிகேசவப்பெருமாள் கோயில். இரண்டனுள் முன்னது மிகச் சிதைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கூரம் செப்பேடு இக்கோயிலை எடுப்பித்தவராக வித்யாவிநீத பல்லவரசரைக் குறிக்கிறது. இவர் பல்லவ அரசரான முதல் பரமேசுவரர் ஆட்சியின் கீழியங்கிய சிற்றரசராவார். புதுப்பிக்கப்பட்டுள்ள இக்கோயிலில் இருந்து ஆறு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. ஆறுமே கோயில் உள்மண்டபத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளவையாகும்.3
சிவன்கோயில் கல்வெட்டுகள்
அவற்றுள் ஒரு கல்வெட்டு, ‘பல்லவ மாராசன் மாமல்லன்’ எனும் பெயரைத் தர, மற்றொரு தூண் கல்வெட்டு, அத்தூணை அளித்தவராகத் தட்டார் தொதவத்தியின் பெயரைத் தருகிறது.4 எஞ்சிய நான்கில், பல்லவ அரசர்களுடையது இரண்டு. ஒன்று இராட்டிரகூட அரசர் கன்னரதேவர் காலத்தது. நான்காம் கல்வெட்டு முதல் ஆதித்தராகக் கருதத்தக்க இராஜகேசரிவர்மரின் 27ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது.

கொற்றவை
பல்லவர் கல்வெட்டுகள்
‘நந்திவர்ம மகாராஜன் எழுத்து’ எனத் தொடங்கும் மூன்றாம் நந்திவர்மரின் கல்வெட்டு, ஊற்றுக்காட்டுக் கோட்டத்துக் கூரம் சபையாருக்கான ஆணையாக உள்ளது. தந்திவர்மர் தேவி அக்கள நிம்மடி கொடையளித்திருந்த ஆறுபட்டி நிலத்தை முன் பெற்றாரிடமிருந்து மாற்றி, இறைவனுக்கான அர்ச்சனாபோகமாக அறிவிக்கவும், அந்நிலவிளைவில் கோயில் வழிபாடு செய்பவர் வழிபாடு செய்து தாமும் உண்டுய்யவும் இவ்வாணை வழிசெய்தது.5
ஓய்மாநாட்டுப் பேராயூர் நாட்டு நல்லாயூரைச் சேர்ந்த ஒருவரளித்த பொற்கொடையைப் பெற்ற சபை அதன் வட்டியில் கோயிலுக்கான அறக்கட்டளையொன்றை நிறைவேற்றும் பொறுப்பேற்றதைக் கூறும் நிருபதுங்கவர்மரின் 21ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுச் சிதைந்துள்ளது.6

பிள்ளையார்
கன்னரதேவர் கல்வெட்டு
இராட்டிரகூட அரசரான கன்னரதேவரின் 15ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கூரம் ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வேளூர் நாட்டின் கீழிருந்தமை கூறுவதுடன், அவ்வூரினரான ஆசிரியன் ஆதிய்யணன் இக்கோயிலில் வைத்த பெருந்திருவமுதின் பொறுப்பைக் கோயில் திருவுண்ணாழிகை உடையாரில் பட்ட சிவரும் ஏறடு சிவரும் ஏற்றமை சொல்லிக் கோயிலைப்
பெருந்திருக்கோயிலாகவும் குறிக்கிறது.7 ஆதிகேசவப்பெருமாள் கோயிலிலுள்ள முதல் பராந்தகர் கல்வெட்டின் அருகிலுள்ள துண்டுக் கல்வெட்டும் இக்கோயிலை, ‘இவ்வூர்ப் பெருந்திருக்கோயில்’ எனச் சுட்டுவது குறிப்பிடத்தக்கது.8
முதல் ஆதித்தர் கல்வெட்டு
முதல் ஆதித்தரின் 27ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கூரம் சபையார் ஊர்த் தட்டார் ஸ்ரீகூவைமங்கலப் பெருந்தட்டாரிடம் பொன் கொண்டு, ஊர்ப் பெருந்திருக்கோயில் இறைவனுக்கு நாளும் உழக்கெண்ணெய் கொண்டு நந்தாவிளக்கேற்ற இசைந்தமை தெரிவிக்கிறது. இதற்கான ஆவணத்தை எழுதியவர் ஊர் மத்யஸ்தரான ஸ்ரீக்கவை ஏழாயிரவன்.9
பெருமாள் கோயில் கல்வெட்டுகள்
கூரம் ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலிருந்து 1900இல் ஐந்து கல்வெட்டுகளும் 1923இல் இரண்டு கல்வெட்டுகளும் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் ஐந்து கல்வெட்டுகளின் பாடங்கள் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி ஏழில் பதிவாகியுள்ளன.

நரசிம்மர்
பல்லவர் கல்வெட்டுகள்
கூரம் ஆதிகேசவப்பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் காலப் பழைமையானதான தந்திவர்மரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு முற்றுப்பெறாதுள்ளது. கூரம் சபையின் எழுத்தாவணமாக விளங்கும் இது, கூரம் உணங்கல்பூண்டியைக் குறிப்பதுடன் நிற்கிறது.10 நிருபதுங்கரின் 17ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, படுவூர்க் கோட்டத்துக் காரைநாட்டு வல்லவ நாராயண சதுர்வேதிமங்கல சபையார் பன்னிரு சாண்கோலால் அளக்கப்பெற்ற அவர்கள் ஊர் கற்கயம் 27,000 குழி நிலத்தை அதே கோட்டத்தைச் சேர்ந்த அமனிநாராயண சதுர்வேதிமங்கல ஆளுங்கணத்தாருள் ஒருவர் உள்ளிட்ட பிராமணர் சிலருக்கு உரிய விலைப்பொருள் பெற்று விற்றமை கூறுகிறது.11
பார்த்திவேந்திரவர்மரின் 11ஆம் ஆட்சியாண்டில் பதிவாகியுள்ள சிதைந்த கல்வெட்டு அம்பலம் அமைக்கவும் அதில் கோடை காலத்தில் தண்ணீர் வழங்கவும் தனியார் ஒருவருக்கு இறை நீக்கிய நிலத்துண்டொன்றைக கூரம் சபை விற்றதாகக் கூறுகிறது.12
சோழர் கல்வெட்டுகள்
முதல் பராந்தகரின் சிதைந்த 40ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கூரம் சபை அவ்வூரிலிருந்த திருவாய்ப்பாடி ஸ்ரீகூடத்தே கூடி ஊர் நிலங்களின் தரம், பாசனம், இறை குறித்து மேற்கொண்ட செயற்பாடுகளை முன்னிருத்துகிறது.13 இங்குள்ள முதல் இராஜராஜரின் இரண்டு பதிவுகளில் 10ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கச்சிப்பேட்டு அதிகாரிகள் மீனவன் மூவேந்த வேளாரின் விட்டவீட்டின் மேற்கிலிருந்த ஈசுவராலயத்துத் திருமுற்றத்தில் கூடிய கூரமாகிய விஜயாவிநீத சதுர்வேதி மங்கலத்தை ஆண்ட சபையாரின் திருமுகத்தைப் பற்றிப் பேசுகிறது.
கூரம் ஆளுங்கணத்தாருள் ஒருவரான இருங்கண்டிக் காளிதாச சோமாசியார் எடுப்பித்த மடத்தில் கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் தண்ணீர் வைக்கவும் மடத்தை நான்கு நாள்களுக்கு ஒருமுறை மெழுகுவதற்கும் மடத்திற்கு அழிவு நேராதவாறு ஆண்டுக்கொருமுறை மெழுகவும் கேசவபட்டன் ஊர்விடு நிலம் அரை, ரவிகேசுவ ஜன்மன் ஊர்விடு நிலம் அரை ஆக நிலம் ஒரு பட்டியை சபை மடப்புறமாக அறிவித்து ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எழுதியவர் ஊர் மத்யஸ்தர் மங்கலோத்தமன் மகனான கற்பகப்பிரியன்.14
முதல் இராஜராஜரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கூரம் நடுவில்ஸ்ரீகோயில் முகமண்டபத்தில் கூடிய சபையார், கூரம் சுப்பிரமணியதேவருக்கான திருவமுது குறித்துப் பேசியமை கூறுகிறது. இறைவனுக்கு சபை வைத்த உணங்கற்பிடியால் உச்சிச் சந்தியில் திருவமுது படைக்கப்பெற்றது. பிற இரண்டு சந்திகளில் திருவமுது வழங்க ஊர் ஆளுங்கணத்தாருள் ஒருவரும் ஊர் பிராமணர்கள் மூவரும் ஆளுக்கு ஒரு துண்டாக வழங்கிய ஒரு வேலி ஆறு மா காணி நிலம் துணையானது.
கோயில் சிவபிராமணன் விஜ்ஜாவிநீதபடியான் மகன் கோவிந்த சிவனான ஸ்ரீசாலைப் பட்டுடையான், இந்நிலத்திற்கு வரிநீக்கப் பொருள் தந்தார். சபையார் தங்கள் பொறுப்பிலிருந்த பொத்தகப்படி, இந்நிலங்களைப் பங்கீடு செய்து கொடையை அர்ச்சனாபோகமாக அறிவித்துக் கோயிலில் கல்வெட்டாகவும் பதிவுசெய்தனர். இந்நில விளைவில் மூன்று சந்திக்கும் சுப்பிரமணியருக்குத் திருவமுது காட்டவும் சந்திவிளக்கெரிக்க வட்டி நாழி எனும் வரியினத்தைக் கொள்ளவும் கோயில் சிவபிராமணர் கோவிந்தன் அங்காடிசிவனையும் அவர் தம்பிகளையும் பொறுப்பாக்கிய சபையார், சபைப் பொத்தகப்படி கோயில் திருவிழாவிற்கென ஒதுக்கப்பட்டிருந்த நிலம் அதற்கெனத் தொடரவும் உறுதி செய்தனர்.15
திருப்பணிக் கல்வெட்டு
பொ. கா. 1795இல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு கூரத்தாழ்வார், ஆதிகேசவப்பெருமாள் கோயில்களில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் குறித்துப் பேசுகிறது.16
முடிவுரை
கூரம் சிவன், விஷ்ணு கோயில்களிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுகளால், கூரத்தை நிருவகித்த சபை கூடிய இடங்கள், கூட்டங்களில் அது மேற்கொண்ட செயற்பாடுகள், நில மேலாண்மையில் சபை காட்டிய அக்கறை, அதற்கெனப் பொத்தகம் என்ற பெயரில் சபையிலிருந்த தரவுப் பதிவேடு எனப் பல செய்திகளை அறியமுடிகிறது. கோயில் வழிபாட்டிலும் ஊர் மடத்தைப் புரப்பதிலும் சபை காட்டிய அக்கறையையும் கல்வெட்டுகள் பகிர்ந்துகொள்கின்றன. இப்பகுதியில் பயன்பாட்டிலிருந்த பன்னிருசாண்கோல் வெளிச்சத்திற்கு வருவதுடன், இங்குள்ள சிவன்கோயில் அக்காலத்தே பெருந்திருக்கோயிலாக அறியப்பட்ட அரிய தகவலும் இக்கல்வெட்டுத் தொகுப்பால் தெரியவருகிறது. பெருந்திருக்கோயிலைக் குறிக்கும் பெருங்கோயில் என்ற சொல்லாட்சியைத் தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் முதன்முதலாகப் பயன்படுத்திய அருளாளர் அப்பர் பெருமானாவார். அவரைப் பின்பற்றி சுந்தரரும் நன்னிலம் கோயிலைப் பெருங்கோயில் என்றழைத்துள்ளார்.17 பின்னாளைய கல்வெட்டுகளிலும் பெருந்திருக்கோயில், பெரியஸ்ரீகோயில் எனப் பலவாறாகப் பயின்று வரும் இக்கலைச்சொல்18 மாடக்கோயிலைச் சுட்டுவதால், வித்யாவிநீத பல்லவ பரமேசுவரம் மாடக்கோயிலாக எழுப்பப்பெற்றதா என்ற ஐயம் எழுந்துள்ளது.
குறிப்புகள்
- பல்லவர் செப்பேடுகள் முப்பது, பக். 33-60.
- இரா. கலைக்கோவன், முழங்கால், வரலாறு 26, பக். 130-146.
- SII 7: 37-42.
- SII 7: 42, 38.. பல்லவ மாராசன் மாமல்லன் என்று கல்வெட்டுச் சுட்டும் அரசர் பல்லவமல்லனாக வைகுந்தப்பெருமாள் கல்வெட்டுக் குறிக்கும் இரண்டாம் நந்திவர்மராகலாம். T.V. Mahalingam, Insriptions of the Pallavas, p. 326.
- SII 7: 40.
- SII 7: 39.
- SII 7: 37.
- SII 7: Foot note 1, p. 15
- SII 7: 41.
- SII 7: 36.
- SII 7: 33.
- ARE 1923: 105.
- SII 7: 35.
- SII 7: 34.
- SII 7: 32.
- ARE 1923: 106.
- ஆறாம் திருமுறை, அடைவுத் திருத்தாண்டகம், ப. 521; ஏழாம் திருமுறை, ப. 798. இரா.கலைக்கோவன், தலைக்கோல், ப. 113.
- ARE 1925: 204, 208. கோ.வேணிதேவி, இரா.கலைக்கோவன், மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள், ப. 207. மு.நளினி, இரா.கலைக்கோவன், வாணன் வந்து வழி தந்து, ப. 183.





























