ஓடிப்போனவர்களும் ஒற்றிவைத்தவர்களும்

இரா. கலைக்கோவன்

சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள திருப்பைஞ்ஞீலி நீலிவனேசுவரர் கோயில், குடைவரையும் கற்றளியும் பெற்ற வளாகமாகும். இக்கோயிலுக்கும் மக்களுக்குமான ஒன்பது நூற்றாண்டுக் கால வாழ்க்கை இவ்வளாகத்துள்ள 71 கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது. அவற்றுள் ஒன்றுதான், வரி கட்டாமல் சிலர் ஓடியதால், அந்த வரிக்குப் பொறுப்பானவர்கள் அவர்கள் நிலத்தை ஒற்றிவைத்து வரிகட்டிய வரலாற்றைப் பகிர்ந்துகொள்கிறது.

பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ நாடு மூன்றாம் இராஜராஜரின் ஆட்சியிலிருந்தது. திருப்பைஞ்ஞீலிக்கு அருகில் அதே மண்ணச்சநல்லூர் வட்ட ஊராக இன்றும் விளங்கும் துடையூர் அக்காலத்தே பிராமணக் குடியிருப்பாக விளங்கியது. அங்கு ஊராட்சியாக இருந்த சபையின் உறுப்பினர்களுள் அறுவர்தான் இக்கல்வெட்டு உருவாகக் காரணமானவர்கள்.

துடையூரிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்டுச் சிறுசாத்தமங்கலம் என்ற பெயரேற்றிருந்த சிற்றூரில் அவர்களுக்கு உரிமையுடைய விளைநிலம் இருந்தது. அக்காலத்தே வழக்கிலிருந்த வருவாய்ப் பதிவான பொத்தகப்படி இச்சிறுசாத்தமங்கலம் இறைவனுக்கு அளிக்கப்பட்ட தேவதான ஊராக, இறைவன் பெயரேற்று அவர் பெயரிலான காணியாக விளங்கியது.

நில உரிமையாளர்களிடம், ‘கடமை’ என்ற பெயரில் விளைவாகவோ, காசாகவோ வரி பெறப்பட்ட காலம் அது. அதை உரியவரிடம் பெற்று அரசுக்குச் செலுத்தும் பொறுப்பு ஊரவையைச் சார்ந்தது. துடையூர் நிலங்களுக்கான இந்தக் கடமை வரிக்குப் பொறுப்பேற்றிருந்தவர் ஊர் சபையின் உறுப்பினரான வீற்றிருந்தான் சீரிளங்கோ. விளைவு குன்றியதாலோ அல்லது வேறு காரணங்களாலோ இந்த உறுப்பினர் அறுவரில் மூவர் வரி செலுத்த முடியாமல் ஊரைவிட்டே ஓடிப்போயினர். ‘இவர்கள் பேரால் இவ்வூர்க் கடமைக்கு இவர்கள் முன்னின்று கடமையிறாதே ஓடிப்போகையில்’ என்று இச்செயலை வெளிச்சப்படுத்துகிறது கல்வெட்டு.

அதனால், வரித்தொகுப்பின் அளவு குறைந்து, ஊரவை சிலருக்குத் தர வேண்டியிருந்த தொகையைத் தரக்கூடவில்லை. ‘கூபகராமர் அடைப்பில் கோடுமலையாளருக்கு இவ்வூர்க் கடமையில் தர எழுதின காசு’ தரமுடியவில்லை என்று இதைக் கல்வெட்டு சுட்டுகிறது. துடையூர்க் கடமைக்குப் பொறுப்பேற்றிருந்து பற்றாளரான இளங்கோ, இவ்விழப்பை நேர்செய்வதற்காகச் சிறுசாத்தமங்கலத்தில் தமக்கும் பிற ஐவருக்கும் உரிமையுடையதாய் இருந்த நிலத்தைப் பைஞ்ஞீலிக் கோயில் நிருவாகத்திடம் ஒற்றிக்கு வைத்துக் கோயில் கருவூலத்திலிருந்து 2500 காசு பெற முடிவு செய்தார். ‘ஒற்றித் தீட்டு’ என்ற பெயரில் அதற்கான ஆவணம் எழுதப்பெற்றது.

அதன்படி, துடையூர் ஊர்க்கடமைக்காகச் சிறுசாத்தமங்கல நிலம் புரட்டாசித் திங்களில் ஒற்றிக்கு வைக்கப்படுவதாகவும் இரண்டு திங்கள்களில், அதாவது கார்த்திகைத் திங்களுக்குள் இந்த ஒற்றிக்காகப் பெறப்படும் காசை அதற்கான வட்டியுடன் ஒற்றி வைப்பவர் கோயில் கருவூலத்தில் செலுத்துவதாகவும் ஆவணம் அமைந்தது.100காசுக்குத் திங்களுக்கு 4 காசென வட்டி முடிவானது.

கார்த்திகைக்குள் கருவூலப் பணத்தைச் செலுத்த முடியாது போனால், கோயிலே நிலத்தைக் கொள்ளலாம் என்றும், ஒற்றிக்காகப் பெறப்பட்ட முதலும் அதற்கான வட்டியுமே அந்நிலத்திற்கான விலையாகலாம் என்றும் ஒற்றி வைத்தவர் இசைவு தெரிவித்து ஆவணத்தில் கையெழுத்திடக் கருவூலம் தொகையளிக்க, துடையூர்க் கடமை முறைப்படிச் செலுத்தப்பட்டது.

இந்த ஆவணத்தில் இளங்கோவுடன் நிலஉரிமையாளர்களில் ஓடிப்போனவர்கள் தவிர்த்த பிற இரு நிலஉரிமையாளர்களும் கையெழுத்திட்டனர். ஆவணச் சான்றாளர்களில் இருவர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தமையால், அவர்கள் சார்பில் எழுதத் தெரிந்த வேறு இருவர் கையெழுத்திட்டனர்.

ஒற்றிப் பணம் திருப்பித்தரப்பட்டதா, நிலம் மீட்கப்பட்டதா என்பதெல்லாம் அறிய வழியில்லை என்றாலும், பைஞ்ஞீலிக் கோயிலில் கண்சிமிட்டும் இந்த ஆவணப் பதிவு, 13ஆம் நூற்றாண்டளவில் இப்பகுதியில் விளங்கிய ஊராட்சி, கோயிலாட்சி, வாழ்வியல் நடைமுறைகள், ஆவண-நாணய வழக்காறுகள், மக்களின் இயல்புகள் என எத்தனை வரலாற்றுத் தரவுகளை வழங்குகிறது! எனில், இத்தகு காலப் பதிவுகளைக் கருத்தாய்க் காக்காமல் திருப்பணிகளின் பெயரால் சிதறடிப்பது அறமாகுமா?

குறிச்சி ஆவணங்கள்

மு. நளினி, இரா. கலைக்கோவன்

திருப்பைஞ்ஞீலி சோறுடைய நாயனார் கோயில்

சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டத்திலுள்ள பழைமையான ஊர் திருப்பைஞ்ஞீலி. வாழையின் பெயருடன் விளங்கும் இவ்வூரில், பதிகம் பெற்ற 1400 ஆண்டு வயதுடைய பெருங்கோயில் 71 கல்வெட்டுகளுடன் வாழ்கிறது. உள்ளிருக்கும் இறைவன் நீலிவனப்பெருமாள். இறைவி நீள்நெடுங்கண்ணி.

இங்குள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் அழுத்தமான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டுள்ளன. அவற்றுள், நான்கு ஆவணங்கள் அடுத்தடுத்து சோழநாட்டை ஆண்ட இரண்டு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், ஓர் ஊர் கோயிலுக்கும் தனியர்களுக்குமாகப் பிரித்து விற்கப்பட்ட கதையைக் கூறுகின்றன. சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேறெந்தக் கோயிலிலும் இது போல் நான்கு விற்பனை ஆவணங்கள் பெற்ற ஓர் ஊர் காட்சியாகவில்லை.

‘குறிச்சி’ என்ற பின்னொட்டுடன் பதிவாகும் இந்த ஊரின் கதை பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகிறது. திரிபுவனவீரதேவராக அறியப்படும் மூன்றாம் குலோத்துங்கசோழரின் ஆட்சிக்காலத்தில் அறிமுகமாகும் இக்குறிச்சியின் முழுப்பெயர் பிள்ளையாண்டான்குறிச்சியான நானூற்றுவன்குறிச்சி. அக்குறிச்சியில் பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது.

முதல் ஆவணம்

சிராப்பள்ளி முசிறிச் சாலையில் ஏறத்தாழ 11 கி. மீ. தொலைவில் திருவாசியை அடுத்துள்ள துடையூர் அக்காலத்தே பிராமணர் குடியிருப்பாக, ‘தொடையூர்’ என்ற பெயருடன் திகழ்ந்தது. அவ்வூரில் வாழ்ந்த சிங்கப்பிள்ளை செந்தாமரைக்கண்ணர், திருவரங்கச் செல்வனான செல்வநம்பி, திருவரங்கப் பெருமாளான திருவரங்கபட்டன் ஆகிய மூவருக்கும் அக்குறிச்சியில் புன்செய் நிலமிருந்தது.

பைஞ்ஞீலி இறைவனின் வழிபாட்டுக்கெனப் பூந்தோட்டம் அமைக்க விழைந்த கோயில் அலுவலர் காத்தானுக்கு, இம்மூவரும் குறிச்சியில் தங்கள் காணியாக இருந்த 1600 குழிப் புன்செய் நிலத்தை 400 நற்காசுகளுக்கு விற்றனர். இந்நிலத்துண்டு குறிச்சியிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கும் அக்கோயில் நடைமுறைகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு மா அளவு நிலத்திற்கும் வடக்கில் இருந்தது. இதற்கான நிலவிலை ஆவணம் ஓலையாகவும் கோயிலில் கல்வெட்டாகவும் அமைந்தது.

பைஞ்ஞீலி, தென்சுற்று

இரண்டாம் ஆவணம்

மூன்றாம் குலோத்துங்கரின் மகனான மூன்றாம் இராஜராஜரின் ஆறாம் ஆட்சியாண்டில், அதாவது பொ. கா. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நடைமுறைக்கு வந்த இரண்டாவது விற்பனை ஆவணத்தில் இவ்வூரின் பெயர் முன்பின்னாக மாறி நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சியாகப் பதிவாகியுள்ளது. அக்காலத்தில் தொடையூர் சபை உறுப்பினர்களாய் விளங்கிய திருவரங்கப் பெருமாள் சிங்கப்பிள்ளையான செந்தாமரைக்கண்ணர், மண்டலபுருஷனான சூரியதேவன், வீற்றிருந்தான் திருவாலப்பிள்ளையான திருவரங்கமாளி, சுந்தரத்தோளுடையானான சீராமன் ஆகிய நால்வரும் அவ்விற்பனையை நிகழ்த்தியுள்ளனர்.

சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பழம்பெரும் ஊரான தவத்துறை(இலால்குடி)க்கு அருகிலுள்ள நகர் எனும் சிற்றூரைச் சேர்ந்த கல்லன் சதிரனான மழைநாட்டு விழுப்பரையனுக்கு இக்குறிச்சி நிலம் 40 வேலி 10, 300காசுக்கு இவர்களால் விற்கப்பட்டது. இந்நிலத்தைக் குறிக்கும் சபையின் விற்பனை ஆவணம், ‘நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சி நத்தமும் நீர்நிலைக் குளமும் இக்குளத்தால் விளையும் நிலமும் இது சூழ்ந்த புன்செயும் நிலக்குடியும்’ என்று விற்கப்பட்ட இடத்தின் வளம் குறிப்பதுடன், இப்பகுதியிலிருந்த பைஞ்ஞீலி இறைவனுக்கும் பிள்ளையாருக்கும் உரிமையுடைய நிலப்பரப்புகளைத் தவிர்த்தே இவ்விற்பனை நிகழ்ந்தமை கூறுகிறது. இவ்விற்பனை ஆவணத்தை எழுதியவர் அன்பிலைச் சேர்ந்த துடையூர் மத்தியஸ்தர். ஆவணத்தில் அரசு அலுவலர் விக்கிரமசோழ பிரும்மராயர் உள்ளிட்டவர், ‘இப்படி அறிவேன்’ என்று சான்றாளர்களாகக் கையெழுத்திட்டுள்ளனர்.

மூன்றாம் ஆவணம்

இப்பதிவின் தொடர்ச்சியாக உள்ள மூன்றாம் ஆவணம், இக்குறிச்சி நிலம் 40 வேலியை விலைக்குப் பெற்ற கல்லன் சதிரனை, பாண்டிய அரசர் முதலாம் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் மண்டல முதலிகளுள் ஒருவரான கேரளத்துக் காலடியைச் சேர்ந்த சங்கரன் மகனாகக் குறிப்பதுடன், கல்லன் சதிரன் இக்குறிச்சியில் தாம் வாங்கிய நிலத்தின் உரிமையை வாங்கிய விரைவில் கைமாற்றியதைப் பதிவு செய்துள்ளது.

சதிரன் வாங்கிய 40 வேலியைப் பைஞ்ஞீலி இறைவன் பெயரில் அவருக்கான திருநாமத்துக்காணியாக்க விரும்பிய தொடையூர் சபையார், சதிரனிடம் சபை உறுப்பினர் நால்வர் பெற்ற விலைத்தொகையைத் திருப்பியளிக்கச் செய்து, சதிரனை அந்த 40 வேலியையும் இறைவனுக்கான திருநாமத்துக்காணியாக மாற்றித்தருமாறு வேண்ட, சதிரன் அதையேற்று, பெற்ற கையோடு நிலத்தை விற்ற கையருமாயினார். இப்படி வாங்கியவுடன் நிலம் விற்கப்படுதல் திரிவிட்டுத் தருதலாகவும் அதற்கான ஆவணம் திரிவுத்தீட்டாகவும் அழைக்கப்பெற்றன. வாங்கியவுடன் விற்கும் இந்தப் பாங்கைப் பைஞ்ஞீலியின் வேறு கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது.

பைஞ்ஞீலி, வசந்த மண்டபம்

நான்காம் ஆவணம்

நானூற்றுவன்குறிச்சி பற்றிய நான்காம் ஆவணம் மூன்றாம் இராஜராஜரின் 11ஆம் ஆட்சியாண்டில் அமைந்தது. அதில் விற்பனையாளர்களாக அறிமுகமாகும் மூவருமே தொடையூர் சபையின் உறுப்பினர்கள். அவர்களை, ‘சபைக்குச் சமைந்த’ என்றழைத்தே ஆவணம் அறிமுகப்படுத்துகிறது. அவர்களுள் இருவர், கல்லன் சதிரனுக்கு நிலம் விற்ற ஆவணத்திலும் விற்பனையாளர்களாக இடம்பெற்றுள்ளனர். மூன்றாமவர், திருவரங்கப்பெருமாளாள செந்தாமரைக்கண்ணராக அறியப்படுகிறார். கல்லன் சதிரனின் தந்தையும் பாண்டிய அரசரான முதலாம் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் மண்டல முதலிகளில் ஒருவருமான கேரளத்தைச் சேர்ந்த காலடி சங்கரன் அழகனான மழவராயரே இந்த ஆவணம் வழி இக்குறிச்சியில் 60 வேலி நிலத்தை 6,000 காசுக்கு வாங்கியவராகக் காட்சியாகிறார். கல்லன் சதிரனுக்கு விற்பனையான 40 வேலி நிலம், பைஞ்ஞீலி இறைவனுக்கும் பிள்ளையாருக்கும் உரிமையுடைய நிலப்பகுதிகள் ஆகியன தவிர்த்த நிலையிலேயே இந்த 60 வேலி நிலம் விற்பனையானதாக அறியமுடிகிறது.

நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சியின் எல்லைகளாகக் கிழக்கில் மீசெங்கோடு, தெற்கில் பாண்டிகுலாசனிப்புரம், மேற்கில் நெல்வேலி, வடக்கில் பைஞ்ஞீலி ஆகிய ஊர்கள் இருந்தமையை இரண்டு ஆவணங்கள் படம்பிடிக்கின்றன. இந்த ஆவணத்தில் சான்றாளர்களாகத் தொடையூர் மத்தியஸ்தர் உய்யநின்றாடுவான் வாளவரிசன் கையெழுத்திட்டுள்ளார்.

நச்சினார்க்கினியனும் தற்குறிகளும்

இந்தக் குறிச்சி ஆவணங்களில் நம்மைக் கவர்வது நச்சினார்க்கினியன் என்ற அழகிய தமிழ்ப் பெயரும் அக்காலத்தே இப்பகுதியில் இருந்த பல ஊர்களின் பெயர்களுமாகும். கையெழுத்தாளர்களுள் சிலர் தற்குறிகளாக இருந்தமையால் எழுதத் தெரிந்த வேறு சிலர் அவர்களுக்காகக் கையெழுத்திட்டுள்ளனர். இப்படி மாற்றுக் கையெழுத்திட்டவர்கள், முன்னவர் ‘சயிஞ்ஞாதன்மை’ (தற்குறி) அதனால் இக்கையெழுத்து என்று தெளிவாகச் சுட்டியுள்ளனர்.

தொடையூர் சபை உறுப்பினர்கள் சிலரால் நானூற்றுவன் குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சி நிலம் நான்கு முறை விற்பனைக்கு ஆளாகியது. அந்நிலத்தொகுதிகளின் பெரும்பகுதியைத் தந்தையும் மகனுமான கேரளத்தவர்களே வாங்கியதையும் அவர்களுள் மகன், வாங்கிய கையோடு பைஞ்ஞீலிக் கோயிலுக்கு அதை உரிமை மாற்றம் செய்ததையும் வெளிச்சமிடும் இந்நான்கு ஆவணங்களும் பிற்சோழராட்சியின் இறுதிக் காலத்தே, இப்பகுதியில் நிலவிய சமூக, பொருளாதாரச் சூழல்களையும் கோயில் தொடர்ந்து நிலப்பற்றாளராகவே நீடித்ததையும் வெளிப்படுத்துவதோடு, அக்கால ஆவண நடைமுறைகளையும் கண்முன் வைக்கின்றன. காலம் காத்துத் தந்திருக்கும் இந்தக் குறிச்சி ஆவணங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றுக்குப் பைஞ்ஞீலிக் கோயிலின் கொடை என்றே சொல்லலாம்.

ராச்சாண்டார் திருமலைக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள்

திருச்சிராப்பள்ளி-அரவக்குறிச்சி பெருவழியில் உள்ள விரையாச்சிலை நாயனார் கோயிலில், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி தலைமையில், முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலாவும், தேசியக் கல்லூரி வரலாற்றுத்துறை விரிவுரையாளர் செல்வி ஹேமலைலாவும் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் பயனாகப் படியெடுக்கப்படாத பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து, அவை மூன்றாம் குலோத்துங்கர் மற்றும் மூன்றாம் இராஜராஜர் காலத்தவை என அவர்கள் தெளிவுபடுத்தினர்.

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ராச்சாண்டார் திருமலை என்னும் சிற்றூரின் சிறு குன்றின்மீது அமைந்துள்ள இந்தச் சோழர் காலக் கோயில், கல்வெட்டுகளில் குன்றணிநல்லூரென்று அழைக்கப்பட்டுள்ளது.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கையில், ராச்சாண்டார் திருமலைக் கோயில் பொதுக்காலம் 13 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் இறுதிக் கட்டத்தில் உருவாகியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இச்செய்தி குறித்த முழு தகவல்களுக்கு, மின்னிதழ் இணைப்பைக் கீழே காணலாம்-

ராச்சாண்டார் திருமலைக் கோயிலில் சோழர்கால வரியினங்களை அறியும் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

வரலாற்றுத் தகவல்களைத் தாங்கிய தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்ச் செய்திக்குறிப்புகள் –