திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ளது திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் அக்கோயிலில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்தனர்.
டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த பல வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
23/07/2022 அன்று ஒலிபரப்பான திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையின் ‘வசந்த அழைப்பு’ நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் உ.வே.சா. விருது பெற்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடலாக அமைந்தது.
கண் மருத்துவராகத் தொடங்கி வரலாற்றாய்வாளராக மாறிய தம் வாழ்வின் சுவையான நிகழ்வுகள் பலவற்றை டாக்டர் இரா. கலைக்கோவன் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆய்வுலகின் முன்னோடிகள், அவர்தம் நூல்கள், கோயில்கள், கல்வெட்டுக்கள், நூல் வாசிப்பு குறித்த பயனுள்ள தகவல்களை அவர் வழங்கினார்.
கோயில்கள் இன்றி வரலாறு இல்லை; வரலாறு இன்றி நம் அடையாளம் இல்லை; அத்தகைய கோயில்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மக்களின் கடமை என்பதைத் தெளிவாக விளக்கினார்.
தமிழ்நாடு நாள் விழா ஜூலை 18, 2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கு, அவர்தம் சீரிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.
2021ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது பெற்றமை குறித்து, திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையில், 19/07/2022 அன்று டாக்டர் இரா. கலைக்கோவன் உரையாற்றினார். அந்த உரையின் பதிவை இங்கே கேட்கலாம்.
சிராப்பள்ளியை அடுத்த சமயபுரத்திற்கு அருகிலுள்ள கண்ணனூர், பொதுக்காலம் 11 ஆம் நூற்றாண்டளவில் ஹொய்சள அரசர்களின் தலைநகரமாக விளங்கியது. சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜருக்கு உதவுவதற்காக மைசூர்ப்பகுதியிலிருந்து சோழநாட்டிற்கு வந்த ஹொய்சள அரசர்கள் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வூரைத் தங்கள் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தனர். அக்காலக்கட்டத்தில் இப்பகுதியில் உருவான பழங்கோயில்களுள் ஒன்று முக்தீசுவரம். கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்றுமாளிகை என ஒரு காலத்தில் எழுச்சியுடன் விளங்கிய இக்கோயில் இன்று அறநிலையத்துறைத் திருப்பணிக்காகக் காத்திருக்கிறது.
2020 இல், இக்கோயிலில் இணைஆணையர் திரு. க. பெ. அசோக்குமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு. நளினியும் முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் பொதுக்காலம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அளவுகோல்களையும் 14-18 ஆம் நூற்றாண்டளவில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுக்கள் சிலவற்றையும் கண்டறிந்தனர். களஆய்வின்போது சமயபுரம் கோயில் இளநிலைப் பொறியாளர் திரு. எம். அஜந்தன் உடனிருந்து உதவினர்.
இக்கல்வெட்டுக்களையும் அளவுகோல்களையும் நேரில் ஆய்வுசெய்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குனர் டாக்டர் இரா. கலைக்கோவன், இக்கோயில் சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜர் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும் பொதுக்காலம் 1221 ஏப்ரல் 14 ஆம் நாள் இவ்வளாகத்தில் பொறிக்கப்பட்ட அம்மன்னரின் 6 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இக்கோயில் இறைவனை, ‘கழுகிறை நாயனார்’ என்றழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இங்குக் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்கள் குறிப்பிடும் முத்தன் செட்டியார், திருச்சிராப்பள்ளித் தாயுமான செட்டியார், கழயடி மயிலேறும் பெருமாள் ஆகிய பெருமக்கள் அவர்தம் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள கட்டுமானப்பகுதிகளின் திருப்பணிக்கு உதவியவர்கள் ஆகலாம்.
‘கழயடி மயிலேறும் பெருமாள்’… என்ற குறிப்பு‘திருச்சிராப்பள்ளித் தாயுமான செட்டியார்’ …. என்ற குறிப்பு
ஆய்வின்போது கண்டறியப்பட்ட மூன்று அளவுகோல்களுள் 87 செ. மீ. அளவினதாக இரு கூட்டல் குறிகளுக்கிடையில் விமானத்தின் மேற்குப் பகுதியில் பதிவாகியுள்ள கோல் இக்கட்டுமானத்திற்குச் சிற்பிகள் பயன்படுத்திய தச்சக்கோலாகலாம். இதுவொத்த தச்சக்கோல்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் பனைமலை ஈசுவரம், தஞ்சாவூர் ராஜராஜீசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம் உள்ளிட்ட பல கோயில்களில் கண்டறியப்பட்டுள்ளன.
புன்செய், நன்செய் நிலங்களை அளப்பதற்காகச் சோழர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த நில அளவுகோல்கள் அந்தந்த ஊர்க் கோயில்களில் வெட்டி வைக்கப்பட்டன. இரண்டல்லது மூன்று கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்டனவாய் வெட்டப்பட்ட இந்த அளவுகோல்கள், சில கோயில்களில் நன்செய்க்கோல், புன்செய்க்கோல் எனும் பொறிப்புகளுடனும் சில கோயில்களில் அத்தகு அடையாளப் பொறிப்புகள் இல்லாமலும் காணப்படுகின்றன. முக்தீசுவரத்தின் பெருமண்டபத் தென்புறக் குமுதத்தில் வெட்டப்பட்டுள்ள 6.99 மீ. நீளமுள்ள அளவுகோல், அப்பகுதி சார்ந்த புன்செய் நிலங்களை அளக்கப் பயன்பட்ட அளவுகோலாகலாம்.
நன்செய் நிலங்களை அளக்க வழக்கிலிருந்த சோழர் கால நிலமளந்த கோல் முக்தீசுவரம் விமானத்தின் மேற்குப் பட்டிகையில் 3.76 மீ. நீளத்தில் வெட்டப்பட்டுள்ளது. பெரியகுறுக்கை சிவன்கோயிலில் மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்ட நன்செய்க்கோலும் இதே அளவினது என்பது இங்கு எண்ணத்தக்கது.
முக்தீசுவரத்திற்கு அருகிலுள்ள போசளீசுவரம் கோயிலிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அக்கோயில் கோபுரத்தின் உட்புற வடசுவரில் ‘நல்லதம்பி மகன் காவுடை நயினான்’ எனும் பெயர்ப் பொறிப்புக் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டுச் சுட்டும் காவுடை நயினார் கோயில் திருப்பணியில் பங்கேற்றவராகலாம்.
திருச்சி- தஞ்சாவூா் சாலையில் வாழவந்தான்கோட்டையை அடுத்துள்ள திருநெடுங்களம், நெடுங்களநாதா் கோயிலில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதில் சோழா் காலக் கல்வெட்டுகள் சிலவற்றையும், அதே காலத்தைச் சோ்ந்த நிலமளக்கப் பயன்பட்ட அளவுகோலையும் கண்டறிந்தனா்.
இதுகுறித்து, டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் 18/05/2022 அன்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டார்.
அன்புள்ள வாருணி, நீயும் நானுமாய்க் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள தாராசுரத்திற்குச் சென்ற பயணங்கள் உனக்கு நினைவிருக்கலாம். அங்கு இரண்டாம் ராஜராஜ சோழரால் எடுப்பிக்கப்பெற்ற ராஜராஜ ஈசுவரம் சிற்பக்களஞ்சியமாக விளங்குவதைப் போகும் வழியெல்லாம் பேசிச் செல்வோம். பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் விளங்கிய பண்பாட்டுக் கூறுகளின் படப்பிடிப்புகளாகப் பல சிற்பங்களை அங்குக் காணமுடிவதை உன்னிடம் பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் சில சிற்பங்களைப் பார்ப்பதும் அவை பற்றிக் கலந்துரையாடுவதுமாகவே நம் பயணங்கள் நிறைந்திருக்கின்றன. நீ பலமுறை பார்த்துப் பல கேள்விகளுடன் என்னை நோக்கிய அந்தச் சிறப்பான சிற்பம் இன்றும் என் கண்முன் நிற்கிறது. அந்தச் சிற்பத்தையும் அது தொடர்பான உன் கேள்விகளுக்கான விடைகளையும் இம் மடல் வழிப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
மூன்று பெண்கள் இணைந்து நிகழ்த்துமாறு அமைந்த அந்தக் கோலாட்டச் சிற்பம் தனித்துக் குறிப்பிடத்தக்கதுதான். தமிழ்நாட்டிலுள்ள பழங்கோயில்களில் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டமைந்த சிற்பக் காட்சிகளில் கோலாட்டத்தைக் காணக்கூடவில்லை. ஆடற்சிற்பங்களின் காட்சியகமாக விளங்கும் துக்காச்சி விக்கிரமசோழீசுவரத்தில்கூடக் கோலட்டச் சிற்பத்தை நாம் பார்த்ததில்லை. நாம் அறிந்தவரையில், தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் முதல் கோலாட்டச் சிற்பமாகத் தாராசுரம் காட்சியே முன் நிற்கிறது.
தாராசுரத்துக் கோலாட்டம்
தாராசுரம்
துணைத்தளக் கண்டசிற்பமாக அமைந்துள்ள இக்கோலாட்டக் காட்சியில் மூன்று பெண்கள் இரண்டு கைகளிலும் கோல் கொண்டு ஆடுவதைக் காணமுடிகிறது. பெருங்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சுவர்ணவைகாக்ஷம், இடைவிரிப்புடனான சிற்றாடை, இடைக்கட்டு என ஒப்பனை நிறைத்து, கொண்டையை மீறிய சடைக்கற்றைகள் தோள்களில் நெகிழ ஆடும் இம்மூவரில் முதலிருவர் நேர்ப்பார்வையில் ஆட, மூன்றாமவர் ஒருக்கணிப்பிலும் சுழற்சியிலுமாய்க் கோலடிக்கிறார்.
இலேசான வலஒருக்கணிப்பில் இடப்பாதத்தை உத்கட்டிதத்திலும் வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி மண்டலநிலையில் காட்சிதரும் வலப்பெண்ணின் வலக்கை, கோலுடன் தலைக்குமேல் உயர்ந்துள்ளது. இடக்கைக் கோல் தொடையருகே நீண்டுள்ளது. அவரைப் போலவே லேசான வலஒருக்கணிப்பிலுள்ள நடுப்பெண் இருபாதங்களையும் உத்கட்டிதமாக்கி வலக்கையை உயர்த்தி அதிலுள்ள கோலால் முதல் பெண்ணின் வலக்கைக் கோலைத் தட்டுகிறார். இடமாய் ஒருக்கணித்து இளநடைபயில்வது போல் திரும்பியுள்ள மூன்றாம் பெண்ணின் வலக்கைக் கோல் நடுமங்கையின் இடக்கைக் கோலில் மோத, உடலின் சுழற்சியில் ஆட்ட விரைவைக் காட்டும் அவரது இடக்கைக் கோல் இடுப்பருகே நீண்டுள்ளது. மூவரில் நடுப்பெண்ணின் இரு கைக்கோல்களும் பிற இருவர் கோல்களுடன் இணைந்து ஒலியெழுப்ப முதல்வர், மூன்றாமவர் கைக் கோல்களில் ஓரிணை அடுத்த சுழலுக்காய்க் காத்துள்ளன.
கோலாட்டக் கோயில்கள்
முதல் கோலாட்டச் சிற்பமாகத் தாராசுரக் காட்சி கண்முன் கதை விரித்தபோதும் தமிழ்நாட்டில் கோலாட்டத்தைப் பரவலாக்கிய பெருமை விஜயநகர அரசர்களையே சாரும் வாருணி. ஹம்பிக் கோயில்களில் காணப்படுமாறு போலவே தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றிலும் கோலாட்டத்தில் தங்களுக்குள்ள ஆளுமையை விஜயநகரச் சிற்பிகள் பதிவுசெய்துள்ளமையை உன்னிடம் கூறியிருக்கிறேன். ஊர்வலக் காட்சிகள் போலவும் தனித்த கோலாட்ட நிகழ்வுகளாகவும் அவர்தம் செதுக்கல்களைச் சிராப்பள்ளி திருநெடுங்களநாதர், திருக்கோடிக்கா கோலக்கநாதர், காஞ்சிபுரம் கச்சபேசுவரர் – ஏகாம்பரேசுவரர் – வரதராஜப்பெருமாள், வேலூர் ஜலகண்டேசுவரர், வல்லம் விசுவநாதேசுவரர், மேலைச்சேரி திரௌபதி அம்மன் கோயில்களில் நான் பார்த்திருக்கிறேன். காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திகுன்றம் சமணக்கோயிலிலும் உத்தரகோசமங்கை ஆடவல்லான் மண்டபத்திலும் ஓவியக்காட்சியாகக் கோலாட்டம் காட்டப்பட்டுள்ளது.
கோலாட்டக் களங்கள்
கோயில் கட்டுமானத்தின் பல பகுதிகளில் இக்கோலாட்டக் காட்சிகளைக் காணமுடிந்தாலும் வளாகச் சுற்றின் துணைத்தளக் கண்டத்திலேயே அவை பரவலாக இடம்பெற்றுள்ளன. வேலூர்க் கோயிலில் தூண் கட்டிலுள்ள பட்டையில் சிற்றுருவச் சிற்பத் தொகுதியாகக் காட்டப்பட்டுள்ள கோலாட்டம், மேலைச்சேரியில் உத்திரத்தில் காணப்படுகிறது. திருக்கோடிக்கா கோலாட்டம் கோபுர உட்சுவரிலமைய, வல்லத்துக் கோலாட்டம் அங்குள்ள நீர்த்தொட்டிகளின் பக்கப்பகுதிகளைச் சிறப்பிக்கிறது. ஓவியக் கோலாட்டமோ கூரைக்காட்சியாய் மலர்ந்துள்ளது.
ஊர்வலக் கோலாட்டம்
திருநெடுங்களநாதர் கோலாட்டம்
திருநெடுங்களநாதர் ஊர்வலம்
நெடுங்களநாதர் வளாகத்துள்ள அம்மன்கோயில் பெருமண்டபத் தென்முகத்தில் வெளித்தெரியும் துணைத்தளப் பகுதியில் மண்டப வாயிலின் வலப்புறம் கோலாட்டமும் இடப்புறம் ஊர்வலமும் சிற்பத்தொடராகக் காட்சியாகின்றன. ஊர்வலத்தில், முன்னால் ஒருவர் ஓங்கிய வாளுடன் நன்கு அலங்கரித்த குதிரையை நடத்திச்செல்ல அதன் மேல் இவர்ந்துள்ளவர் இடக்கையில் கடிவாளத்தைப் பிடித்தவாறு வலக்கையை நீட்டியுள்ளார். குதிரையின் பின்னால் குடை, கவரி, குடுவை, சந்தனக்கிண்ணம் ஆகியவற்றுடன் பணியாட்கள் ஐவரும் வாள், கேடயம் கொண்டவர்களாய் வீரர்கள் மூவரும் பின்தொடர்கின்றனர்.
இந்த ஊர்வலத்திற்கான முன்னோட்ட ஆடலாய் வாயிலின் வலப்புறம் பத்துப் பெண்களின் கோலாட்டம். அனைவருமே அழகிய கொண்டையும் பனையோலைக் குண்டலங்களும் கழுத்தாரமும் தோள், கை வளைகளும் நடுப்பட்டை கொண்ட இடையாடையும் பெற்றுள்ளனர். இடையாடையின் மேல் அழகிய விரிப்பாய் அனைவருக்கும் தொடையளவிலான சுருக்கிக்கட்டிய மடிப்பாடை. சிலர் நேர்ப்பார்வையிலும் சிலர் லேசான ஒருக்கணிப்பிலும் உள்ளனர். ஆட்ட விரைவுக்கேற்பச் சிலர் தலையை வலம் அல்லது இடம் சாய்த்தும் குனிந்தும் சற்றே நிமிர்ந்தும் அழகுடன் திகழ்கின்றனர். ஒரு கையின் கோல், உடலின் முன்புறம் நீண்டு வல அல்லது இட ஆடலரின் கோலுடன் மோத, மற்றொரு கை தலையின் பின்புறம் கோலை நீட்டி, அடுத்துள்ள ஆடலரின் அதே அமைப்பிலான கோலைத் தட்டுமாறு ஆடும் இவ்வழகியரின் பாதங்கள் ஆட்டத்தின் போக்கிற்கேற்பப் பார்சுவம், சூசி, அக்ரதலசஞ்சாரம் எனப் பலவாறு அமைய, சிலர் ஊர்த்வஜாநுவாய்க் காலை உயர்த்தியும் ஆடுகின்றனர் வாருணி.
திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள்தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண், திருக்கோடிக்கா
திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள் ஒரு பாதத்தைப் பார்சுவமாக்கி, ஒரு காலை ஊர்த்வஜாநுவாக உயர்த்திக் கோலாட்டம் அடிக்கின்றனர். பூட்டுக்குண்டலம், கழுத்தணிகள், தோள், கை வளைகள், நெற்றிச்சுட்டி, நடுவிரிப்புடனான இடைப்பட்டாடை, சலங்கையுடன் இரு கைக் கோல்களும் அடுத்துள்ளவர் கோல்களுடன் மோத, விரைந்தும் சுழன்றும் ஆடும் அப்பெண்களின் திருமுகங்கள் பல கோணங்களில் திரும்ப, இதழ்களில் எழிலார்ந்த புன்னகை. ஊர்வலத்தில் வாளும் கேடயமும் ஏந்திய வீரர்கள் பலராகவும் ஈட்டி, குத்துவாள், கொடி, தண்டு, பானை கொண்டவர்கள் சிலராகவும் உள்ளனர். ஒரு சிற்பம் தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண்ணைப் படம்பிடிக்க, மற்றொன்றில் கோலாட்டக் காரிகைக்கு மத்தளத் தாளம் தரும் கலைஞர்.
வல்லத்துக் கோலாட்டம்
திருவல்லம் தொட்டி
வல்லம் கோலாட்டம் நீ அறிவாய். 1990லேயே அது குறித்த என் தினமணி கதிர் கட்டுரையை உனக்குத் தந்திருக்கிறேன். அக்கோயிலிலுள்ள கலையெழில் தொட்டிகள் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கோலாட்டம் மங்கல நிகழ்வின்போது நிகழ்த்தப்பட்டதாகும். கருவுற்ற பெண் ஒருவர் அமர்ந்திருக்க, அவருக்குப் பூச்சூட்டி ஒப்பனை செய்கிறார் தோழி. முன்னால் கோலாட்ட நிகழ்வு. வளைந்தும் நிமிர்ந்தும் சாய்ந்தும் சரிந்தும் கோலாட்டமிடும் அழகியர்தம் இடையாடைகள் அவர்தம் ஆட்டத்திற்கேற்ப விரிந்தும் சுருங்கியும் மடிப்புகளுடன் விளங்க, இவ்வாட்டத்திற்கு மத்தளம் வழித் தாளம் தருகிறார் ஆடவக்கலைஞர். கோயில் மடைப்பள்ளியில் உள்ள மற்றொரு தொட்டியிலும் அதன் கீழ்ப்புறத்தே கோலாட்டக் காட்சியும் அன்னங்களும் காட்டப்பட்டுள்ளதைப் பார்த்தது உனக்கு நினைவிருக்கலாம்.
பிற கோலாட்டங்கள்
கச்சபேசுவரர் கோலாட்டம்
ஏகாம்பரநாதர் கோயில் சுற்றுமாளிகைத் துணைத்தளக் கோலாட்டப் பெண்கள் அனைவரும் ஒருபாதத்தைப் பார்சுவத்திலிருத்தி, மற்றொரு காலின் முழங்காலை இடுப்பளவு உயர்த்தியுள்ளனர். அனைவருமே பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், பட்டாடை, இடைவிரிப்புக் கொண்டவர்களாய் ஒருவர் வலமும் ஒருவர் இடமுமாய் ஒருக்கணித்தாடுகின்றனர். கோலாட்டங்களின் தாளத்திற்கு மத்தள இசை துணைநிற்கிறது. வேலூர்க் கோயில் தூண் கட்டுப் பெண்கள் ஊர்த்வஜாநுவின் பல நிலைகளில் ஒரு கால் உயரக் கோலாட்டமடிக்கின்றனர். அவர்தம் கைக்குச்சிகளின் நீளம் சற்றே குறைந்துள்ளது. இக்கோயில் துணைத்தளக் கண்டக் கோலாட்டக் குழுவினர் கோடிக்காக் குழுவினரை ஒத்துள்ளனர். இங்கும் மத்தள வாசிப்பைக் காணமுடிகிறது. கச்சபேசுவரர், வரதராஜர், மேலைச்சேரி கோலாட்டக் காட்சிகளும் இவற்றைப் பின்பற்றியுள்ளன.
ஓவியக் கோலாட்டம்
திருப்பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம்
பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம் நாம் பார்த்ததுதான். பிற இடக் கோலாட்டக் காட்சிகளிலிருந்து இது மாறுபட்டுள்ளது. இப்பெண்கள் முந்தானை விரிந்த புடவையும் மேற்சட்டையும் அணிந்தவர்களாய்க் கோலாட்டமாடுகின்றனர். அவர்தம் நீள்சடை ஆட்டவளைவுக்கேற்பச் சுழன்றும் நெகிழ்ந்தும் காட்சிதர, நிமிர்ந்த தலையினராய் ஒருவரையொருவர் பார்த்தவாறு அவர்கள் கோலடிக்கும் அழகு சிறப்பானது. இதே அமைப்பிலான கோலாட்டம் உத்தரகோசமங்கையிலும் ஓவியமாக்கப்பட்டுள்ளது. பருத்திக்குன்றம் போலல்லாது இங்கு புடவையின் தலைப்பு ஆடுவோரின் மார்புப்பகுதியை மறைத்துள்ளது.
மாமல்லபுரம் செங்கல்பட்டுச் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் நாம் பார்த்த காட்சி உனக்கு நினைவிருக்கலாம். இருபதுக்கும் மேற்பட்ட ஆடவர்கள் கோலாட்டமாடிக் கொண்டே ஊர்வலமாகச் சாலையில் சென்றனர். அவர்கள் சற்று ஓய்வெடுத்தபோது நாம் அவர்களை நெருங்கி உரையாடினோம். கோலாட்டமாடிக்கொண்டே திருப்பதிக்கு நடைப்பயணம் செல்வதாக அப்பெருமக்கள் தெரிவித்தது உனக்கு நினைவிருக்கலாம்.
பிற்சோழர் காலத்தே ஒற்றைக் காட்சியாய்க் கண்காட்டும் கோலாட்டம் விஜயநகர வேந்தர்களின் தழுவல் பெற்ற தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் தொடராகவும் தனித்தும் காட்டப்பட்டிருப்பதுடன் ஊர்வலம், தேரோட்டம் ஆகியவற்றின் சிறப்பு நிகழ்வாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளமை இப்போது உனக்குத் தெளிவாகியிருக்கும். இன்றைக்குத் தமிழகத்தில் ஆண், பெண் இருவருக்குமான பொதுவான ஆடல்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோலாட்டம் பிற்சோழர், விஜயநகரத்தார் காலத்தில் பெண்களால் மட்டுமே இம்மண்ணில் நிகழ்த்தப்பட்டது போல் இதுவரை கிடைத்துள்ள சிற்பக்காட்சிகள் கண்காட்டுகின்றன. உன்னுடைய ஆய்வுப் பயணங்களில் வேறெங்கேனும் கோலாட்டக் காட்சிகள் கண்டிருப்பின் எனக்கு எழுது. கோலாட்டம் ஆய்வு நிறைவுற அது உதவும்.
ஜூன் 6, 2021 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்திய மெய்நிகர் நிகழ்வில், “வரலாறு- நீங்களும் நானும்” என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் ஆற்றிய சிறப்புரையின் பதிவு இது.
ஜூலை 18, 2021 அன்று மேலைச்சிவபுரி வள்ளுவர் மன்றம் நடத்திய மெய்நிகர் நிகழ்வில், “உங்கள் திருவடிகள் என் தலை மேலன” என்ற தலைப்பில், மரு.இரா.கலைக்கோவன் நிகழ்த்திய பொழிவின் பதிவு இது.
‘ஆடவல்லான்’ என்ற தலைப்பில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் இரா. கலைக்கோவன், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் வழங்கிய இலக்கியப் பேருரையின் பதிவு இது.
ஆடல்கலையின் தனிப்பெரும் தெய்வமாக, சிவன் மாற்றபட்டதும் உயர்த்தப்பட்டதுமான வரலாறு குறித்தும், மற்ற தெய்வங்களின் பெருமைக்குரிய உடைமையாக இருந்த ‘ஆடல்கலையின் மணிமகுடம்’ சிவனாரின் தலையில் பொருத்தப்பட்டதுமான நீண்ட வரலாற்றை, நற்றமிழில் விளக்கமுற வழங்கியிருக்கிறார் டாக்டர். கலைக்கோவன்.
10ஆம் நூற்றாண்டுத் தமிழகக் கோயில் படிமவியலில் சிவனுடைய ஆடல், ‘ஆனந்த தாண்டவம்’ என்று பார்போற்றும் வியத்தகு ஆடல் தோற்றநிலையாக மாறும் பரிணாம வளர்ச்சியை, மெய்நிகர்ப் பயணமாகக் காலக்கருவியில் அமரச்செய்து, காட்டிச் செல்கிறார்.
‘ஆடவல்லான்’ என்ற டாக்டர். இரா. கலைக்கோவனின் வானொலிப் பொழிவு, அவர்தம் கருத்துக்களோடு தொடர்புடைய தமிழகக் கோயில் சிற்பங்களின் பின்னணியில், குறும்படம்போல் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலத்தே அரசு விடுமுறைநாளாக அறிவிக்கப் பெற்ற தைப்பூசத் திருவிழா தேவாரம் பாடிய மூவருள் அப்பர், சம்பந்தர் பதிகங்களில் சிறக்கக் குறிக்கப்பட்டுள்ளது. பொதுக் காலம் 6ஆம் நூற்றாண்டிலேயே இவ்விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை அவர்தம் பாடல்கள் சுட்டுகின்றன. ‘பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த’ என்று போற்றுமளவு பெருமையுடன் நிகழ்ந்த இத்தைப்பூசவிழாவை மேலும் பெருமைப்படுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழராட்சியில் திருக்கூத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
வீரபாண்டியன் தலைகொண்ட பரகேசரிவர்மரான சோழஅரசர் ஆதித்தகரிகாலரின் 4ஆம் ஆட்சியாண்டின்போது திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயில் வளாகத்திருந்த நாடகசாலையில், அவ்வூரை நிருவகித்த நகரத்தார், அவ்வூரை உள்ளடக்கியிருந்த திரைமூர்நாட்டின் ஆட்சிக்குழுவினரான நாட்டார், கோயில் தேவகன்மிகள் ஆகியோர் கோயில் செயல்அலுவலரான பராந்தக மூவேந்தவேளார் தலைமையில் கூடி, தைப்பூசம், வைகாசித் திருவாதிரை விழாக்களின் போது கோயிலில் கூத்து நிகழ்த்த முடிவுசெய்தனர்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் சோழர் காலத்தே பலவகைக் கூத்துகள் ஆடப்பட்டன. சாந்திக்கூத்து, சாக்கைக்கூத்து, தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, விநோதக்கூத்து எனும் அவற்றுள், ஆரியக்கூத்தைத் தேர்ந்த கோயிலார் அக்கூத்தில் வல்லாராகத் திகழ்ந்த கீர்த்தி மறைக்காடனான திருவெள்ளறைச் சாக்கைக்குக் கூத்தாடும் வாய்ப்பை அளித்தனர்.
தைப்பூசத்தன்று ஒரு கூத்தும் இறைவன் தீர்த்தமாடிய மறுநாள் தொட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து மூன்று கூத்துகளும் அது போலவே திருவாதிரைக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து மூன்று கூத்துகள் ஆடவும் முடிவானது. ஒவ்வொரு கூத்தும் ஓர் அங்கமென ஏழங்கம் ஆரியக்கூத்தாட இசைந்த மறைக்காடனுக்குப் பிற செலவுகளுக்காகக் கோயில் பண்டாரத்திலிருந்து 14 கலம் நெல் அளிக்கப்பட்டதுடன், கோயிலுக்குச் சொந்தமான விளங்குடி நிலத்தில் ஒரு வேலி நிலம் வாழ்வூதியமாகத் தரப்பட்டது.
திருவிடைமருதூரில் நிகழ்ந்தாற் போலவே திருநள்ளாறு, திருவாவடுதுறை, வயலகம் கோயில்களிலும் ஆரியக்கூத்து ஆடப்பட்டது. திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயிலில் புரட்டாசித் திருவிழாவின்போது ஏழுநாட்கள் இக்கூத்து நிகழ்ந்தது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர், வயலகம் விசுவநாதசாமி கோயில்களில் ஆரியக்கூத்து நிகழ்த்தப்பட்டதையும் அதை ஆடும் உரிமை பெற்றிருந்த கூத்தர்களின் பெயர்களையும் அறிய முடிகிறதே தவிர, அக்கூத்து எப்போது நிகழ்த்தப்பட்டது என்பதற்குத் தகவல் இல்லை. இக்கட்டுரையாசிரியர் அறிந்தவரையில் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டாடப்பட்ட தைப்பூசத்திற்குத் தமிழ்நாட்டுத் திருக்கோயில் ஒன்றில் நான்குநாள் கூத்து நிகழ்த்தப்பட்டதைத் தெரிவிக்கும் கல்வெட்டுத் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மட்டுமே பதிவாகியுள்ளது.
தைப்பூசம் தமிழ்நாட்டின் பல கோயில்களில் பெருவிழாவாக நிகழ்ந்தமை சுட்டும் கல்வெட்டுகள் பரவலாகக் கிடைத்தபோதும் நித்தவிநோதரான முதலாம் ராஜராஜரின் பெரியவேளத்தில் பணியிலிருந்த (பெண்டாட்டி) நக்கன் கற்பகவல்லி, 1500 ஆண்டுகள் பழைமையானதான திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில் (பாச்சில் ஆச்சிராமம்) வளாகத்தில் பொ. கா. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பதிவுசெய்திருக்கும் கல்வெட்டு குறிப்பிடத்தக்கதாய் ஒளிர்கிறது. அக்கோயில் இறைவனின் மகளாகத் தம்மைக் கருதி, ‘தேவனார் மகள்’ என்று தம்மைப் பெருமையுடன் விளித்துக் கொண்ட கற்பகவல்லி, அவ்விறைவனிடம் தம்மைத் தலைப்படுத்திக் கொண்டமை சுட்டவே, அக்கால வழக்காறு ஒட்டி ‘நக்கன்’ என்னும் முன்னொட்டையும் தம் பெயரின் முன் கொண்டிருந்தார்.
தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி, மாற்றுரைவரதீசுவரரிடம் மாற்றுக்குறையா அன்பு கொண்டிருந்தமையால், வரதீசுவரர் வளாக வழிபாட்டையும் படையல்களையும் செழிப்பாக்க 201 கழஞ்சுப் பொன்னும் 2மா முக்காணி நிலமும் கொடையளித்து 5 அறக்கட்டளைகளை அங்கு நிறுவினார். அவற்றுள் ஒன்றே தைப்பூசத் திருவிழா. அத்திருநாளன்று இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்து அவருக்குப் பெருந்திருஅமுது படையலிடத் தேவையான ஒரு கலம் தூணிப்பதக்குப் போனகஅரிசி, நெய், பருப்பு, பெரும்பயறு, தயிர், மிளகு, உப்பு, பாக்கு, கறியமுது ஆகியவற்றுக்குக் கற்பகவல்லி கொடையிலிருந்து வரவான நெல் ஒதுக்கப்பட்டது.
போனகக்குருத்திடுவார், போனகம் இடுவார், நெல்குற்றிய பெண், விறகிட்டவர் ஆகியோருக்கான ஊதியம், அந்நாளில் இறைவன் உச்சம்போது உணவு கொள்கையில் 50 சிவயோகிகளும் 50 தவசிகளும் கோயிலில் உணவருந்த ஓராளுக்கு நாழி உரி என 100 பேருக்கு 1 கலம் தூணிப்பதக்கு 6 நாழி அரிசி, இவ்விருந்தைச் சமைத்தவர், சமைக்க விறகிட்டவர், நெல்குற்றியவர், உண்ணவந்தாருக்கு இலையிட்டவர், உரிய கலங்களிட்ட குயவர் ஆகியோருக்கும் கொள்ளுக்குமான நெல், விழாவை முன்னிருத்தித் தேவர்கன்மிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு கலம் நெல் ஆகிய அனைத்துச் செலவினங்களுக்குமாய் ஒதுக்கப்பட்ட நெல்லுமாகத் தைப்பூசத் திருவிழாவுக்காக ஆண்டுதோறும் 8 கலம் 2 தூணி 4 நாழி நெல் கணக்கிடப்பட்டுக் கொள்ளப்பட்டது.
விழாவில் இறைவழிபாடு, படையல் என்பதோடு நின்றுவிடாது, தவசிகளையும் யோகிகளையும் நினைந்தூட்டிய சிறப்பும் விருந்துக்காய் உழைத்தவர்களை உவப்போடு சிறப்பித்த பாங்கும் கற்பகவல்லியின் அன்புள்ளம் காட்டும் காலப் பதிவுகள். தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைக்கும் விழாக்காலக் கல்வெட்டுகளை ஒருங்கிணைத்துப் பார்த்தால் அக்காலச் சமூகப்போக்கும் சமயஞ்சார் சிந்தனைகளின் மக்கள் நோக்கும் வெளிப்படும் வாய்ப்புண்டு.