‘பல்லவ மன்னன் மகேந்திரர்: கலைஞர்களின் கலைஞர்’ என்ற தலைப்பிலான டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் பிப்ரவரி 19, 2023 அன்று வெளியானது. மகேந்திரர் பற்றிப் பலரும் அறியாத பல புதிய தகவல்களை இக்கட்டிரை வழங்குகிறது.
நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கச்சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுகளில், அயோத்தி ஆழ்வார் கோயில் என்ற புதிய கோயில் பற்றிய குறிப்புகள் கிட்டின. அதனைத் தொடர்ந்து, அயோத்தி ஆழ்வார் கோயிலைத் தேடும் அடுத்தக்கட்ட கள ஆய்வு தொடங்கியது. திருமங்கலத்தில் வரதராஜப் பெருமாள் பெயரால் விளங்கும் இன்றைய கோயிலைக் கண்டறிந்து அங்கு ஆய்வு செய்தபோது, மற்றுமொரு புதிய கல்வெட்டு கிடைத்தது. அக்கல்வெட்டு, கோயிலின் ஒரு பகுதியை ‘திருஅயோத்தி எம்பெரிமான் திருமுற்றம்’ என்று சுட்டியது வினாக்களுக்கு விடையளிக்குமாறு அமைந்தது.
டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கையில், “வரதராஜப் பெருமாள் கோயிலின் இன்றைய கட்டுமானம் அண்மைக் காலத்தது என்றபோதும், அது கட்டப்பட்டிருக்கும் இடம் திருமங்கலத்திலிருந்த அயோத்தி ஆழ்வார் கோயில் திருமுற்றமாகவே இருப்பது சிறப்பாகும்” என்று குறிப்பிட்டார்.
சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1006) பொறிக்கப்பட்டது கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லியின் கல்வெட்டு.
தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி குறித்தும் அவரளித்த அளப்பரிய கொடைகள் குறித்துமான மேலும் விரிவான தகவல்களை வழங்கும் டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘கார்த்திகைச் செல்வி கற்பகவல்லி’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.
நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-
“பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் ஒரு கோயிலின் வாழ்க்கை எப்படியிருந்தது என்றறிய விழைவாருக்கு முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எடுப்பித்த இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் கைப்பிடித்து வழிகாட்டும்”, என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.
குறிப்பாக, ஆடற்கலை வளர்த்த உறைவிடப் பள்ளிகளான தளிச்சேரிகள் பற்றிய விரிவான செய்திகள் வழங்குவது இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிக் கல்வெட்டு.
இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு பற்றிய டாக்டர் இரா. கலைக்கோவனின் விரிவான கட்டுரை, ‘இராஜராஜரின் தளிச்சேரிக் கல்வெட்டு’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.
நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-
அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ புதினம் திரைப்படமாக வெளிவந்ததைத் தொடர்ந்து, சோழர்கால வரலாற்று மாந்தர்கள் குறித்த தேடல்கள் தொடர்கின்றன. அப்படிப்பட்ட மாந்தர்களுள் ஒருவர் பெரிய பழுவேட்டரையர்.
“பெரிய, சின்னப் பழுவேட்டரையர்கள் என்று அண்ணனும் தம்பியுமாக இருவர் இக்கதையில் குறிக்கப்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் கதைக்களம் சுந்தரசோழர் காலத்தில் அமைகிறது. அவர் ஆட்சி ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகள் அமைந்தது. அப்போது பழுவூர் மன்னராக இருந்த பழுவேட்டரையர் மறவன்கண்டன். அவருக்குத் தம்பி யாருமில்லை. உத்தமசோழர் காலம்வரை மறவன்கண்டனே ஆட்சியில் இருந்ததைப் பழுவூர்க் கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், கதையில் பெரியபழுவேட்டரையர் உயிர் துறப்பதாகவும் சின்னப்பழுவேட்டரையர் பொறுப்பு நீங்குவதாகவும் கல்கி எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர், பழுவேட்டரையர்கள் குறித்த விளக்கமான வரலாற்றுத் தகவல்களை -‘பழுவேட்டரையர்கள் யார்?’ என்ற கட்டுரையில் வழங்கியிருக்கிறார். அக்டோபர் 2, 2022 அன்று வந்த ‘இந்து தமிழ் திசை’ இதழில் கட்டுரை வெளியானது.
முழுமையான கட்டுரையைப் படித்திட, இதழின் இணைய இணைப்பை இங்கே காணலாம்-
திருச்சிராப்பள்ளி கரூர் சாலையில் உள்ள அல்லூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது முதலாம் பராந்தகச் சோழர் காலத்ததான பசுபதீசுவரர் கோயில்.
அக்கோயிலில், அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா், புதிய கல்வெட்டு ஒன்றையும் ஏற்கனவே படியெடுக்கப்பட்டப் பழைய கல்வெட்டுகளின் பிற பகுதிகளையும் கண்டறிந்தனர்.
கல்வெட்டு குறித்து டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-
தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில், தஞ்சாவூரிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பசுபதிகோயில் என்ற சிற்றூர். 9-10ஆம் நூற்றாண்டுகளில் புள்ளமங்கலம் என்று அழைக்கப்பட்ட இன்றைய பசுபதிகோயிலில் உள்ளது முதலாம் பராந்தகர் காலத்ததான ஆலந்துறையார் கோயில்.
புள்ளமங்கை ஆலந்துறையார் பற்றிய குறும்படம் ஒன்று ‘மீட்பியம்’ குழுவினரால் வெளியிடப்பட்டது.
ஐந்து பகுதிகளாக வழங்கப்பட்ட காணொலியில், கட்டடக்கலை, சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என்ற மூன்று நிலைகளிலும் சிறப்பு வாய்ந்த அக்கோயில் பற்றிய விரிவான தகவல்களை வழங்கியிருக்கிறார் டாக்டர் மா.இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன்.
உலகச் சுற்றுலா நாளை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் ஜமால் முகம்மது கல்லூரியுடன் இணைந்து, இந்தியத் தொல்லியல் துறை (திருச்சி வட்டம்), பல்வேறு நிகழ்ச்சிகளைத் திருச்சிராப்பள்ளியில நடத்தியது.
அதன் ஒரு பகுதியாக, மலைக்கோட்டையின் கீழ்க்குடைவரையில் ‘தென்தமிழகத்தில் மரபுவளங்கள்’ என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றது.
முன்னதாக நடந்த தொடக்க நிகழ்வில், டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், மரபுவளங்கள் மற்றும் சுற்றுலா குறித்துச் சிறப்புரை ஆற்றினார்.
செய்திகளைத் தாங்கிய இதழ்களின் வெளியீடு இணைக்கப்பட்டுள்ளது.
04/10/22 அன்று கலாட்டா தமிழ் அலைவரிசையில் டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்க்காணல் இடம்பெற்றது.
சோழர்கள், அவர்தம் வரலாறு, சோழர் மண்ணில் கலைகளின் வளர்ச்சி, சோழச் சிற்பங்களில் இராமாயணமும் மகாபாரதமும், தமிழி மற்றும் வட்டெழுத்து எழுத்துமுறைகள், தம்மை வரலாற்றுப் பாதைக்குக் கொணர்ந்த முதல் சிற்பம், சமீபத்திய திருமங்கலம் திருமழுவுடையநாயனார் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு என்பன பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கினார்.
கூடுதலாக, களப்பிரர் காலம் உண்மையில் இருண்ட காலமா? கருவூர்த் தேவர் யார்? திரைப்படமாக எடுக்கப்பட்ட அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ சோழர் வரலாற்றைப் படம்பிடிக்கிறதா? என்ற கேள்விகளுக்கான விடைகளையும் நேர்க்காணல் மூலம் அறிந்கொள்ளலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டிக்கும் குரும்பப்பட்டிக்கும் இடையிலுள்ள மாங்குளக்கரையில் இரண்டு மடைத்தூண்களில், நாயக்கர் காலத்துக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மடைத்தூண்கள் குறித்த செய்தியறிந்து, சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
மடைத்தூண்கள் குறித்தும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு குறித்தும், டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.