‘பொன்னியின் செல்வன்’ கதையா? வரலாறா?

அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’, சோழர் வரலாற்றைப் படம்பிடிக்கிறதா என்பது பற்றிய டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, சமீபத்தில் ‘இந்து தமிழ் திசை’ வலையொலிப் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ கதையா? வரலாறா?

இரா. கலைக்கோவன்

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டையாண்ட சோழர்கள் குறித்த விரிவான வரலாறு பேராசிரியர் நீலகண்டசாஸ்திரியால் ஆங்கிலத்தில் எழுதி வெளியிடப்பட்டது. விஜயாலய சோழரின் தஞ்சாவூர் வெற்றியுடன் தொடங்கும் அந்த இணையற்ற வரலாற்றைத் தமிழில் தந்தவர்களாக வை.சதாசிவ பண்டாரத்தாரையும் மா.இராசமாணிக்கனாரையும் குறிப்பிடலாம். தமிழ்நாட்டரசும் ‘சோழப் பெருவேந்தர்காலம்’ என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாகச் சோழர் வரலாற்றை வெளியிட்டுள்ளது. சோழர் கால நிலஉடைமை, பொருளாதாரம், நீர்ப்பாசனம், கலைகள் இவை குறித்தெல்லாம் பல நுண்ணாய்வுகளும் வெளிவந்துள்ளன.

தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் காலம் பெருஞ்சிறப்புக்குரியதாகக் கருதப்படுவதற்குக் காரணம் அவர்கள் விட்டுச்சென்றிருக்கும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளிலிருந்து கிடைக்கும் அளப்பரிய தரவுகள்தாம். முதல் ராஜராஜர், முதல் ராஜேந்திரர் காலத்தில் சோழர்ஆட்சி தென்னிந்தியப் பரப்பை உள்ளடக்கி இருந்ததோடு வடகிழக்கில் கலிங்கம் வரையிலும் பரவியிருந்தது. இலங்கையும் அவர்தம் ஆட்சியின் கீழ் இணைந்திருந்தது. கடல் கடந்த கீழ்த்திசை நாடுகளையும் பல வடபுலநாடுகளையும் சோழர்கள் போரில் வென்றிருந்தபோதும் அவை சோழப் பேராட்சியின் கீழ் இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

சோழர்களின் கலைவளம் மகத்தானது. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல பெருங்கோயில்கள் அவர்தம் காலத்தில்தான் உருப்பெற்றன. ஆயிரக்கணக்கான செங்கல் கோயில்கள் அவர்களால்தான் கற்றளியாக்கப்பட்டன. நான்கு நூற்றாண்டுக் காலத் தமிழர் பண்பாடும் வாழ்க்கையும் அக்கோயில்களில்தான் சிற்பங்களாகவும் கல்வெட்டுகளாகவும் உறைந்துள்ளன. எவ்வளவோ ஆய்வுகளுக்குப் பிறகும் சோழர் காலத் தமிழ்நாடு முற்றிலும் வெளிப்பட்டுவிட்டதாகக் கொள்ளமுடியாதபடி தரவுப்பொதிகள் தேங்கியுள்ளன. இந்நிலையில், அமரர் கல்கியின், ‘பொன்னியின்செல்வன்’, சோழர் வரலாற்றைப் படம்பிடிக்கிறதா என்ற வினா முன்வைக்கப்படுகிறது. இதற்கான விடையைத் தேடும் முன் சில தெளிவுகள் தேவைப்படுகின்றன.

வரலாறு உண்மைகளின் அடுக்கில் உருவாவது. அதில் வெளிப்படும் ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் சான்றுகள் தூண்களாய் நின்று தாங்கும். வரலாற்றைக் கட்டமைக்க ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஊகங்கள்கூடச் சான்றுகளின் நிழலில்தான் வடிவம்பெறும். அந்த ஊகங்கள்தான் ஆய்வாளர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் நேரக் காரணமாகி, நெடிய விவாதங்களை எதிர்கொண்டு, சரியானவை எனில் நிலைப்படும். தவறானவை எனில் தவிர்க்கப்படும் அல்லது திருத்தப்படும்.

வரலாற்றுப் புதினம் அப்படியன்று. தேவைக்கேற்ப வரலாற்று மாந்தர் சிலரைத் தேர்ந்து, கருவிலுள்ள கதைக்கேற்ப அவர்களுடன் கற்பனை மனிதர்களையும் இணைத்துச் சுவை குன்றா நிகழ்வுகளைக் கட்டமைத்துப் படிப்பவர் ஒவ்வொரு வரியிலும் ஒன்றுமாறு சொல்லடுக்கி, ஆர்வத்தைத் தூண்டுமாறு அடுக்கடுக்காகத் திருப்பங்கள் நிகழ்த்தி வெளிப்படுவதே வரலாற்றுப் புதினம். அதில் வரலாற்றின் வாசம் இருக்கும். வரலாறு எப்படி இருக்கும்? ஒரு புதினத்தில் வரலாற்றை எதிர்பார்ப்பதோ, அது வரலாறாக வடிவம் காட்டும் என்று நினைப்பதோ எப்படிப் பொருந்தும்?

பொன்னியின் செல்வன் கதையை முடித்த கையோடு, அதற்கொரு முடிவுரையும் எழுதினார் கல்கி. அந்த முடிவுரையில் வரலாற்றுப் புதினங்கள் குறித்த தம் கருத்துரையாக, ‘பொதுவாக நாவல்கள் எழுதுவதற்கும் முக்கியமாகச் சரித்திர நவீனங்கள் எழுதுவதற்கும் சட்டதிட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் அவற்றை நான் படித்ததில்லை. ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய முறையை வகுத்துக்கொண்டு எழுதுகிறார்கள்,’ என்று தெளிவுபடச் சொல்லியிருக்கிறார். இந்தச் சொல்லாடல், அவர் படைப்பு எந்த வரையறைகளுக்கும் உட்பட்டதல்ல என்பதை மென்மையாக உணர்த்துகிறது.

‘பொன்னியின் செல்வன்’ தமிழ்நாட்டில் இதுநாள்வரையில் வெளியான வரலாற்றுப் புதினங்களில் விற்பனையில் முதல்நிலையில் உள்ள நூலாகும். அதைப் படித்தவர்கள் அதனுடன் ஒன்றினார்கள். அதைப் புதினமாக அவர்கள் பார்க்கவில்லை. வரலாறாகவே வரித்துக் கொண்டார்கள். அதுநாள்வரை அவர்கள் அறியாதிருந்த சோழர்களைப் பொன்னியின் செல்வன்அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. சோழர் வரலாறு ஒரு சாதாரண மனிதனுக்கு எவ்வளவு தெரிந்திருந்தால்போதுமோ, அந்த அளவுக்கு அது வழங்கியது. புதினம் வரலாறு பேசத் தொடங்கினால் படிப்பவர்கள் புத்தகத்தை மூடிவிடுவார்கள் என்பது பொன்னியின் செல்வனை எழுதியவருக்குத் தெரியாதிருக்குமா? மக்களின் நாடியறிந்த எழுத்தாளரல்லவா அவர்.!

வாழ்ந்த மனிதர்கள் குறித்து எழுதும்போது வரையறைகள் வட்டமிடும். எல்லைகளை மீறமுடியாது. அதனால்தான் கற்பனை மாந்தர்கள் வரலாற்றுப் புதினங்களில் பெருவாழ்வு பெறுகிறார்கள். பொன்னியின் செல்வன் புதினத்தை நகர்த்திச் செல்லும் ஆழ்வார்க்கடியான், நந்தினி, பூங்குழலி உள்ளிட்ட பலர் கற்பனைப் படைப்புகள். வந்தியத்தேவன், ஆதித்தகரிகாலர் ஆகிய இருவரும் சோழர் வரலாற்றில் பதிவாகியிருந்தபோதும் அவர்களைப் பற்றிய தரவுகள் குறைவே. ஆதித்தகரிகாலருக்குக் கிடைக்கும் அளவில்கூட வந்தியத்தேவனுக்குக் குறிப்புகள் இல்லை. அதனால்தான், அவரைப் பொன்னியின் செல்வனின் நாயகனாகக் கொண்டு கதை வளர்த்தார் கல்கி.

பொன்னியின் செல்வன் கதை சோழர்களை அடையாளம் காட்டுகிறது. அந்தப் புதினத்தால்தான் தமிழர்கள் வரலாற்றின்பால் ஈர்க்கப்பட்டார்கள். சோழர்கள், ராஜராஜர் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். அவ்வகையில் கல்கியின் எழுத்தாற்றல் போற்றத்தக்கது. ஒரு கதைசொல்லி வெற்றிபெறுவது அவர் சொல்லும் கதையின் நிலைபேற்றைப் பொறுத்தே அமைகிறது. அப்படியானால், பொன்னியின் செல்வனில் குறைகளே இல்லையா? அதைச் சோழர்களின் வரலாற்று முகமென்று ஏற்றுக்கொள்ளமுடியுமா?

அரசியல் சூழ்ச்சிகளும் அதற்கான ஆள்சேர்ப்புப் படலங்களும் தவறான உறவுகளும் நிறைந்திருந்த சமூகமாகவே சோழச்சமூகத்தைப் பொன்னியின் செல்வன் படம்பிடிக்கிறது. சிற்றரசர்களைப் பிரித்தாளும் முயற்சிகள், இளம் தலைவர்களைத் தன்வயப்படுத்த நந்தினியிடமிருந்து வெளிப்படும் கவர்ச்சி நிறைந்த மொழிவுகள், பெரிய பழுவேட்டரையர், வீரபாண்டியன், சுந்தரசோழர், மந்தாகினி இவர்களைச் சூழ்ந்த பொருந்தா உறவுகள் என இப்புதினம் சுவைக்காக வெளிப்படுத்தும் சூழல்கள்தான் சோழர் கால அரசியல் வாழ்க்கையாக அமைந்திருந்ததா என்ற கேள்வி வரலாற்றை நேசிப்பவர்களுக்கு எழாமல் இருக்கமுடியாது.

ஒரு வரலாற்றுப் புதினம் எந்தக் காலத்தைத் தழுவி எழுதப்படுகிறதோ, அந்தக் காலத்து மாந்தர்களையே அது கதைப் போக்கில் கொள்ளவேண்டும். கற்பனை மாந்தர்கள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் ஆங்காங்கே இணையலாம். ஆனால், வரலாற்று மனிதர்கள் காலப் பிறழ்ச்சிக்கு உள்ளாதல் சரியன்று. பொன்னியின் செல்வனில் இத்தகு காலப் பிறழ்வுகள் கண்சிமிட்டாமல் இல்லை.

புதினத்தின் தொடக்கத்திலேயே அறிமுகமாகும் சம்புவரையர்கள், சுந்தரசோழர் காலத்தில் வரலாற்றின் வாயிலுக்கே வரவில்லை. சாளுக்கியச் சோழர்களின் இரண்டாம் அரசரான விக்கிரமசோழர் காலத்திலேயே அவர்கள் சிற்றரசர் நிலையைப் பெறுகிறார்கள். அக்காலக்கட்டத்திலும் அவர்கள் வாழ்ந்திருந்த பகுதி திருவண்ணாமலை மாவட்டமும் அதைச் சுற்றியிருந்த சில ஊர்களும்தான். கதை நிகழும் காலத்திலிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று வெளிச்சம்பெறும் சம்புவரையர்களைக் கால நீரோட்டத்தில் முன்னிழுத்து, அவர்களுக்குச் சுந்தரசோழர் கால வாழ்வளித்ததுடன், அவர்தம் இருப்பிடத்தையும் மாற்றி வீரநாராயணபுரத்துக்கு அருகிலுள்ள கடம்பூராகக் காட்டியிருப்பதும் அவ்வூர் மாளிகையிலேயே கதையின் தலைமை நிகழ்வுகள் நடப்பதாகக் கதை புனைந்திருப்பதும் காலப் பிறழ்வான அமைப்பாகும்.

அது போலவே பெரிய, சின்னப் பழுவேட்டரையர்கள் என்று அண்ணனும் தம்பியுமாக இருவர் இக்கதையில் குறிக்கப்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் கதைக்களம் சுந்தரசோழர் காலத்தில் அமைகிறது. அவர் ஆட்சி ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகள் அமைந்தது. அப்போது பழுவூர் மன்னராக இருந்த பழுவேட்டரையர் மறவன்கண்டன். அவருக்குத் தம்பி யாருமில்லை. உத்தமசோழர் காலம்வரை மறவன்கண்டனே ஆட்சியில் இருந்ததைப் பழுவூர்க் கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், கதையில் பெரியபழுவேட்டரையர் உயிர் துறப்பதாகவும் சின்னப்பழுவேட்டரையர் பொறுப்பு நீங்குவதாகவும் கல்கி எழுதியுள்ளார்.

வரலாறு அதன் பதிவுப்படியே புதினத்தில் அமையவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், படிப்பார் அதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்குச் சுவை நிறைந்த கதை வேண்டும். எடுத்தால் முடிக்காமல் வைக்க முடியாத அளவிற்கு ஆர்வத்தைத் தூண்டுவதாக அக்கதை அமைய வேண்டும். பொன்னியின் செல்வன் அத்தகு புதினமாக மலர்ந்தது. அதுதான் அதனுடைய வெற்றி. காலநிரலற்ற சில வரலாற்று அமைப்புகளுக்காகவும் சமூகத்தின் குறைநிறைந்த காட்சிகளுக்காவும் பொன்னியின் செல்வனைத் தள்ளிவைக்கமுடியாது. அது ஆயிரமாயிரம் மக்கள் மனதில் தமிழ்நாட்டு வரலாற்றை வேர்விடச் செய்த புதினம். ‘வரலாறு’ என்ற சொல்லைப் பலரும் பேசுமாறு பழக்கிவிட்ட படைப்பு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: