மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 1. புவனேசுவர விளக்கு

அன்புள்ள வாருணி, நலந்தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னோடு பேச வாய்த்துள்ளது. எழுத்துப் பேச்சாகுமா என்று நீ கேட்கலாம். உன்னோடு நிகழும் எதுவும் எனக்கு உரையாடல்தான். நண்பர் ஒருவர் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பற்றி நூல் உருவாக்குவதாகவும் அதில் என் பணியாய்ச் சில கட்டுரைகள் அமையவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் தந்தை மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையிலும் அம்மா பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையிலும் பணியாற்றிய காலத்து ஏறத்தாழ ஐந்தாண்டுகள் என் பள்ளிப் பருவ வாழ்க்கை மதுரையில்தான்.

மீனாட்சிக் கோயில் திருவள்ளுவர் மன்றத்தில் அப்பாவை அடிக்கடிப் பேச அழைப்பார்கள். அருமையான மலை வாழைப்பழம் உண்ணக் கிடைக்கும் என்பதால் நான் தவறாது உடன் செல்வேன். அந்த வயதில் கோயில் புரிந்ததில்லை என்றாலும், வளாகத்தில் சுற்றாத இடமில்லை. பொற்றாமரைக் குளமும் புதுமண்டபமும் இசைத்தூண்கள் உள்ள சுற்றுவெளியும் என்னால் மறக்கவே முடியாத விளையாட்டுக் களங்கள்.

1959இல் அப்பா சென்னைப் பல்கலைக்கு வந்தார். மதுரைத் தொடர்பு அன்றோடு முடிந்து சென்னை வாசியானேன். மருத்துவம் முடிக்கும்வரை சிங்காரச் சென்னைதான் என்னை வடிவமைத்தது. காதலும் திருமணமும் கண்மருத்துவப் பணியும் என்னைத் திருச்சிராப்பள்ளிக்கு நகர்த்தின. 1975இல் இருந்து இந்தக் காவிரி மண்தான் எனக்குள் கலை வளர்த்து வருகிறது. உறையூர்ப் பஞ்சவர்ணசாமி கோயிலில் நான் பார்த்து வியந்த சைக்கிள் சிற்பத்தின் வடிவில் வந்த வரலாறு என் பயணம் மாற்றிப் பாதையைத் திருப்பியது. கோயில்களோடு கையிணைத்த பிறகுதான் எது வரலாறு என்பதே எனக்குத் தெளிவானது.

வாருணி, எதையோ சொல்லத் தொடங்கி எங்கோ போய்விட்டேன். நண்பரின் மதுரைக் கோயில் நூலுக்கு எழுத ஒப்புக் கொண்டதும், அக்கோயிலில் ஒலி, ஒளிக் காட்சி அமைக்கக் கருதிய அரசின் வேண்டுகோளேற்று நானும் பேராசிரியர் மு. நளினியும் அங்குத் தொடராய்வுகள் மேற்கொண்டமை நினைவுக்கு வந்தது. என் எண்ணவோட்டம் அறிந்தவராய் நளினி கணினித் தொகுப்புகளைக் கண்முன் நிறுத்தினார். ஒவ்வொரு காட்சியும் என்னை எழுதத் தூண்டின.

மதுரையைப் பற்றி எவ்வளவோ கட்டுரைகளும் நூல்களும் வந்திருந்தபோதும் பார்க்காமல் விட்டதும் சொல்லாமல் போனதும் கோயில் முழுவதுமாய் நிறைந்திருப்பதை உணர்ந்தேன். எழுத நினைத்ததுமே நினைவில் நிறைந்தவர் கண்ணன் விக்கிரமன்தான். அவரது ஆசிரியத்தில் வெளிவரும் இலக்கியப் பீடத்தில் ஒரு தொடராக எழுத அனுமதி கேட்டேன். ‘உடனே தொடங்குங்கள்’ என்று உள்ளம் பூரித்தார் கண்ணன். தந்தையைப் போலவே துடிப்பான செயற்பாடுகள்.

வாருணி, ஒரு கோயிலின் சிற்பங்கள் குறித்து ஓர் இதழில் தொடராக எழுதப்போவது இதுவே முதல் முறை. என் பார்வைகளின் விளைவான படப்பிடிப்புகளை உன்னோடு பகிர்ந்து கொள்வது எப்போதுமே எனக்குப் பிடித்தமானது. உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்வுகளை, அவை வரலாறு தொட்டே வளர்ந்தபோதும் நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்திக் களிப்பது சுகந்தானே.

சம்பந்தரால், ‘கூடல் ஆலவாய்’ எனப் போற்றப்படும் இக்கோயில் வளாகத்திலுள்ள மண்டபங்கள் பலவாகும். அவற்றுள் மூன்று மண்டபங்கள் அவற்றின் வாயிலைத் தழுவியுள்ள விளக்கு மாலைகளால் சிறப்புப் பெறுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகளில் தீபமாலைகளாகச் சுட்டப் பெறும் இந்த அகல் அடுக்கிய அழகுத் தோரணங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கின்றன.

மீனாட்சிக் கோயிலின் சிற்பக்களஞ்சியமாக விளங்கும் சிறந்த மண்டபங்களில் கம்பத்தடி மண்டபமும் ஒன்று. மையப் பகுதிக் கூட்டுத்தூண்கள் ஒரு சதுரமாக வடிவமைக்கும் காட்சிக் கூடத்தின் முன் இந்த அகல்தோரணம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கீர்த்திமுகத் தலைப்புடனான மகர திருவாசியில் மூன்றடுக்கு அகல்கள். அவற்றைத் தழுவி மேலடுக்காய் இலை போல் மதலைகள். தோரணத் தலைப்பில் நெற்றிச்சுட்டிப் போலத் தொங்கல்.

இந்த மகரத்திருவாசியை இருபுறத்தும் தாங்கும் தூண்களிலும் அகல் வரிசைகள். தாங்கலின் மேற்பகுதியில் விரிந்த ஊமத்தம்பூவாய் அழகிய நாணுதல்கள். அவற்றின் கீழே தாவும் யாளிகள். தாங்கலின் கீழ்ப்பகுதியிலோ, பக்கத்திற்கு ஒருவராகக் கருவிகளுடன் காவலர். இந்தக் கம்பத்தடித் தோரணத்தின் வலப்புறம் மலர்ப் பதக்கங்களுடன் பொதுக்காலம் 1654 ஜெய ஆண்டு மாசி மாதம் 12ஆம் நாள் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை நம் பேராசிரியர் நளினிதான் கண்டறிந்து படித்தார்.

விசுவநாத நாயக்கர் மரபினரான திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகக் குப்பையாண்டிச் செட்டியார் எனும் பெரியவர், ‘புவனேசுவர விளக்கு’ என்ற பெயருடன் இந்த மகர தோரண விளக்கைச் செய்தளித்திருப்பது கல்வெட்டால் தெரிய வந்தது. இந்தத் தோரணம் கோயிலில் அமையத் துணை இருந்தவர் அப்போது இங்குப் பாரபத்தியமாகப் பணியிலிருந்த நாவாயி ஆனந்த வீரப்பச் செட்டியாராம்.

இதைவிடச் சிறப்பானவை வீரவசந்தராயர், மீனாட்சி நாயக்கர் மண்டபத் தோரணங்கள். அவற்றிலும் கல்வெட்டுகள். தகவல்கள் அடுத்த மடலில்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

பந்தவிளக்குகளும் பங்கேற்ற ஊர்களும்

இரா. கலைக்கோவன்

காலந்தோறும் வரலாற்றைப் பதிவுசெய்ய மக்கள் கையாண்ட முறைகளுள் எழுத்துப் பொறிப்புகள் ஒன்றாகும். எதிலெல்லாம் முடியுமோ அதிலெல்லாம் அவ்வக் காலத்து வழக்கிலிருந்த எழுத்துகளால் அறிந்தவற்றையும் நடந்தவற்றையும் எழுதத் தொடங்கியவர்களால் கல்லில் செதுக்கப்பட்ட பதிவுகளே கல்வெட்டுகள் என அறியப்படுகின்றன. இந்தியாவில் மிக அதிக அளவிலான கல்வெட்டுகள் தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே கிடைப்பதாக இதுவரை வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன. முறை சாரா திருப்பணிகளால் காலந்தோறும் அழிவுக்குள்ளான கல்வெட்டுகள் ஏராளம் என்றாலும், எஞ்சியிருப்பவை பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடர் நழுவாமால் பகிர்ந்துகொள்கின்றன. அத்தகு கல்வெட்டுகளுள் ஒன்றுதான், பந்தவிளக்குகளையும் அவற்றுக்கான பொறுப்பைப் பகிர்ந்துகொண்ட ஊர்களையும் வெளிச்சப்படுத்துகிறது.

திருமுதுகுன்றம் கோயில்

தமிழ்நாட்டின் பெருங்கோயில்களுள் ஒன்றைத் தக்கவைத்துள்ள தேவார ஊர்களுள் ஒன்றான திருமுதுகுன்றம் இன்றைக்கு விருத்தாசலமாக அறியப்படுகிறது. திருமுறைப் பாடல் பெற்ற இக்கோயில் இறைவனைப் பதிகங்கள் முதுகுன்றத்தார் என்றழைக்க, கோயில் வளாகக் கல்வெட்டுகள் திருமுதுகுன்றமுடைய நாயனார் என்கின்றன. சோழஅரசி செம்பியன்மாதேவியால் கற்றளியாக்கப்பட்ட பல கோயில்களில் முதுகுன்ற வளாகமும் ஒன்றாகும். இவ்வாளகத்துள்ள, ‘ஸ்ரீபராந்தக தேவரான பெரியசோழனார் மகனார் கண்டராதித்ததேவர் தேவியார் மழபெருமானடிகள் மகளார் ஸ்ரீஉத்தமசோழர் தங்கள் ஆச்சி செம்பியன்மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்டது ஸ்ரீகோயிலும் ஸ்நபனமண்டபமும் கோபுரமும் சுற்றாலையும் பரிவாரக் கோயில்களும்’ எனும் உத்தமசோழரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இங்குள்ள சிறப்பான பதிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மிகச் சில கல்வெட்டுகளே ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகையில் அவரது தலையாய உறவுமுறைகளை விதந்தோதுகின்றன. அந்த வகையில் பேறுபெற்றவர்களாய்ச் செம்பியன்மாதேவியையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்த பூதிஆதித்த பிடாரியையும் குறிக்கலாம். திருமுதுகுன்றம் கல்வெட்டு செம்பியன்மாதேவியாரின் தந்தை, மாமனார், கணவர், மகன் என மூன்று தலைமுறை ஆண் உறவுகளைப் பகிர்ந்துகொள்கிறது. அன்னையைக் குறிக்கும், ‘ஆச்சி’ என்ற அழகான தமிழ்ச் சொல்லும் கோயிற்கட்டடக்கலை சார்ந்த கலைச்சொற்களும் இக்கல்வெட்டின் கொடைகளாகும். இது குறிக்கும் சுற்றாலையே இன்று பிரகாரம் என மாறியுள்ளது. ‘கோபுரம்’ என்ற கோயில் நுழைவாயில் கட்டுமானத்தைக் குறிக்கும் மிகச் சில பழங்கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மறக்கமுடியாத வரலாற்று நாயகி செம்பியன்மாதேவியால் கட்டப்பெற்ற இக்கோயிலுக்குச் சோழ அரசர்கள் காலத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு அளப்பரிய கொடைகள் அளிக்கப்பட்டன. அவற்றுள் தனித்த சிறப்புடன் திகழும் கொடை, பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனான குலோத்துங்கசோழக் காடவராயரால் வழங்கப்பட்டது. இரண்டாம் குலோத்துங்கர் காலச் சிற்றரசரான இவர், குலோத்துங்கர் மகனான இரண்டாம் இராஜராஜர் காலத்தில் திருமுதுகுன்றம் கோயிலில், ‘குன்றப்பெருமாள்’ என்ற திருப்பெயரில் இறைத்திருமேனி ஒன்றை எழுந்தருளுவித்தார்.

அத்திருமேனிக்காகவும் வைகாசி, ஆவணிமாதக் கொண்டாட்டங்களாகவும் கோயிலில் 36 நாள்கள் நிகழ்ந்த விழாக்களில் பந்தவிளக்குகள் ஏற்ற ஆகும் செலவுகளுக்காகக் காடவராயர், கோயில் கருவூலத்தாரிடம் 2810 காசு கொடையாகத் தந்தார். இக்காசை வைப்புநிதியாகக் கொண்டு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியால் 36 நாள் விழாவிலும் நாளும் 562 பந்தவிளக்குகள் எரிக்கவேண்டும் என்பது திட்டம். கோயிலார் கொடைத்தொகையை 70 ஊர்களுக்குப் பகிர்ந்தளித்து, அதை முதலாகக் கொண்டு விளக்கேற்றும் பொறுப்பை அந்தந்த ஊராட்சி ஏற்குமாறு செய்தனர். ஒரு விளக்கிற்கு 5 காசு வைப்புநிதி எனக் கணக்கிடப்பட்டு 2810 காசும் 70 ஊராட்சியினரிடம் பிரித்துத் தரப்பட்டது. காசு பெற்ற ஊராட்சியினர் கொடையை முதலாகக் கொண்டு அதன் வட்டியில் விளக்கேற்றும் பொறுப்பேற்றனர்.

திருமுதுகுன்றம் விமானம்

‘விளக்கேற்றக் கொடை, அதைப் பெற்ற ஊராட்சி அதன் வட்டிகொண்டு விளக்கேற்ற ஒப்பியமை’ என்பதே இக்கல்வெட்டின் அடிநாதச் செய்தி. ஆனால், இக்கல்வெட்டு வழங்கும் சமூகப் பொருளாதாரத் தரவுகள் பலவாகும். கோயிலிலுள்ள ஏழிசைமோகன் திருமண்டபத்தின் வடசுவரில் தொடங்கப்பட்டு, அங்கு இடம்போதாமையின் தென்சுவரில் தொடரப்பட்ட இக்கல்வெட்டு, தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் மிக நீளமான கல்வெட்டுகளுள் ஒன்றாகும். எத்தனையோ வகையான விளக்குகள் பற்றிப் பேசும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில், மிக அரிதாகவே இக்கல்வெட்டுச் சுட்டும் பந்தவிளக்கு பயின்று வந்துள்ளது. முதுகுன்ற விழாக்களில் எரிந்த இவ்விளக்குகளின் 562 என்ற உயர் எண்ணிக்கையும் வியக்கவைக்கிறது. ஒரு விளக்கிற்கு 5 காசெனக் கொடைப்பணம் பெற்ற ஊர்களால், 12ஆம் நூற்றாண்டில் பெண்ணாகடம், இருங்கோளப்பாடி, முதுகுன்றம் எனும் மூன்றிடங்களைச் சுற்றிலுமிருந்த பல ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் பெயர்களுடன் பழைய ஊர்களாக 32 உள்ளன. பிராமணர் குடியிருப்புகளாக 11, வணிகக்குடியிருப்புகளாக 2, கோயில் நிலமிருந்த ஊர்களாக 5 அமைய, 20 ஊர்கள் பல்வேறு பின்னொட்டுகளோடு முடியும் பெயர்களில் இருந்தன.

பெற்ற காசுக்கும் அதற்கான பந்தவிளக்கிற்கும் ஒவ்வோர் ஊராட்சியிலும் பொறுப்பேற்றவர்கள் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவேண்டும். ஆனால், அவர்களில் சரிபாதியினர் எழுத்தறிவற்றவர்களாய் இருந்தமையால் அவர்களுக்காக வேறு சிலர் கையெழுத்திட்டுள்ளனர். எழுத்தறிவின்மையை, ‘சையிஜையானமை, கைமாட்டாமை’ என்ற தொடர்களால் கல்வெட்டு குறிக்கிறது. சில ஊர்களில் பொறுப்பாளர்கள் அனைவருக்குமே பிறர் கையெழுத்திட்டுள்ளனர். ஓரிரு ஊர்களில் பொறுப்பேற்ற அனைவர் சார்பிலும் ஒருவரே கையெழுத்திட்டுள்ளார். மிகச் சில ஊர்களிலேயே பொறுப்பேற்ற அனைவரும் எழுத்தறிவுள்ளவர்களாய் விளங்கியுள்ளனர். பொறுப்பேற்ற அனைவருமே ஆண்களாக இருப்பதால், ஊராட்சிப் பொறுப்பில் இந்த 70 ஊர்களில் பெண்கள் யாரும் இல்லாமை தெளிவு. புஞ்சி, குப்பை, பிச்சன், சோறன், பன்றி, ஆவணம், மாட்டத்தான் எனச் சிலர் பெயர் கொண்டிருக்க, குடிதாங்கி, அறம், திருவரைசு போன்ற பெயர்களும் மக்களுக்கு இருந்தன.

பொறுப்பேற்றவர்களுள் பலர் பல்வேறு ஊர்களில் பிறந்தவர்களாகவும் அங்கு நிலம் உடையவர்களாகவும் இருந்தமையால், அக்கால வழக்கப்படி தத்தம் பெயருக்கு முன் பிறப்பூரையும் சுட்டியுள்ளனர். இதன்வழிக் கூடுதலாக, 85 சோழர் கால ஊர்ப்பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் ஊர்கள் 41. ஒழுகை, வாழ்க்கை, வஞ்சிரம், போகுடி, கடுகா, வரகு, ஈசால் முதலிய ஊர்ப்பெயர்கள் கவனமீர்க்கின்றன. மத்தளங்குடி எனத் தோலிசைக்கருவியின் பெயராலும் ஓர் ஊர் இருந்துள்ளது.

155 ஊர்ப்பெயர்களையும் எண்ணற்ற மக்கள் பெயர்களையும் வழங்கும் இக்கல்வெட்டு, கொடை வழங்கப்பட்ட காலத்தே சமூகத்தில் நிலவிய படிப்பறிவின் நிலையையும் படம்பிடிக்கிறது. ஒரு தனி மனிதக் கொடைக்குப் பொறுப்பேற்று அதை நிறைவேற்ற உளங்கொண்ட 70 ஊர் மக்களின் மனப்பாங்கு அன்றிருந்த கூட்டுறவுப் பார்வையையும் அறச்செயல்களில் மக்கள் காட்டிய ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதுடன், கோயில் விழாக்கள் மக்கள் பங்களிப்புடன் பொலிந்ததையும் வெளிச்சப்படுத்துகிறது.

சுந்தர வாழ்க்கை

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டின் முப்பெரும் தேவாரப் பெருமக்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் சுந்தரர். சிவபெருமானைப் போற்றி அவர் பாடிய நூறு பதிகங்களே ஏழாம் திருமுறையின் உள்ளடக்கம். முதல் ஆறு திருமுறைகளைப் பாடிய சம்பந்தரும் அப்பரும் மண்ணுலகினர். சுந்தரரோ விண்ணுலகில் வாழ்ந்து, செய்த பிழைக்காக மண்ணுலக வாழ்வுக்கு அனுப்பப்பட்டவர். அவரது வாழ்க்கையை விரித்துரைக்கச் சேக்கிழாருக்கு உதவிய எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளில் இராஜராஜீசுவரத்துத் தூரிகைப் படப்பிடிப்பு முதன்மையானது எனலாம்.

சுந்தரர் வாழ்க்கை

‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்ற பெருமைமிகு அறிவிப்புடன் சோழப் பேரரசர் முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எழுப்பிய இராஜராஜீசுவரம், தமிழ்நாட்டுக் கட்டடக்கலை வரலாற்றில் ஒரு மைல் கல். கருவறையைச் சுற்றி இரண்டு சுவர்களும் அவற்றுக்கு இடைப்பட்டு நடைவழியும் கொண்டு உருவான சாந்தார விமானங்களில் இராஜராஜீசுவரம் தனித்தன்மையது. இங்கு மட்டுமே அந்த நடைவழி, அது அமைந்துள்ள விமானத்தின் இருதளங்களிலும் கலைப்படைப்புகளைப் பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள கீழ்த்தள நடைவழியில் சோழ, நாயக்கர் கால ஓவியங்களுடன் கூரைப்பகுதியில் ஆடற்சிற்பங்களும் உள்ளன. மேற்றள நடைவழி பரதரின் நாட்டியசாத்திரம் குறிப்பிடும் 108 ஆடற்கரணங்களில் 81க்கான சிற்பவடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.

கீழ்த்தள நடையின் நான்கு பெருஞ்சுவர்களில் முழுமையாகவும் பிற சுவர்களில் ஆங்காங்குமென வெளிப்பட்டுள்ள சோழ ஓவியங்களில் ஒன்றே, சுந்தரர் வாழ்க்கை பேசும் தடுத்தாட்கொண்ட புராணத்தை எழுதச் சேக்கிழாருக்குத் துணையானது எனில், இராஜராஜர் காலத்தில் வழக்கிலிருந்த தரவுகளும் பதிவுகளுமே நான்கு பெருஞ்சுவர்களுள் ஒன்றில் அந்த வாழ்க்கையின் வளமை காட்டச் சோழத் தூரிகைகளுக்கு உதவின எனலாம். சுந்தரர் வாழ்க்கையில் காதலும் பத்திமையும் இணைந்தே இருந்தன. பரவை, சங்கிலி எனும் இரு பெண்களுடன் அவருக்கு ஏற்பட்ட இணைவையும் பிரிவையும் தவிர்த்த சோழ ஓவியர்கள், தாம் அறிய நேர்ந்த சுந்தர வாழ்க்கையின் மூன்று திருப்புமுனை நிகழ்வுகளை மட்டுமே காட்சிகளாக்கினர்.

சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, ஓலை காட்டி அவரைத் தம் அடிமையென அறிவித்து, அதை வழக்குமன்றத்திலும் நிறுவி, தம் இருப்பிடம் கேட்டவர்களைத் திருவருட்துறைக்கு அழைத்துச்சென்று, அங்கு சுந்தரருக்குத் தம்மை வெளிப்படுத்தி, அவர் பாட ‘பித்தா’ எனச் சொல்லெடுத்துத் தந்த சிவபெருமானின் திருவிளையாட்டு முதல் நிகழ்வாகச் சுவரின் கீழ்ப்பகுதியில் பதிவாகியுள்ளது.

வழக்காடு மன்றம்

சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் இடையில் மலர்ந்த நட்புறவு இரண்டாம் நிகழ்வாகச் சுவரின் நடுப்பிரிவில் சுருக்கமாக அமைய, சுந்தரரும் சேரமான் பெருமாளும் மேற்கொண்ட கயிலைப் பயணமும் அங்கு இறைப் பார்வையில் அவர்களுக்குக் கிடைத்த தேவ வரவேற்பும் மேற்பகுதியில் விரிந்துள்ளன.

சோழர்கால அடுக்களை, மணவரங்கு, வழக்குமன்று, வழக்காடுமுறை, கோயில் என்று பொதுக்காலம் 10, 11ஆம் நூற்றாண்டுச் சமூக வாழ்வை முதல் பிரிவு ஓவியங்கள் வண்ணப் படப்பிடிப்பாய் வழங்க, இரண்டாம் பிரிவில் சேரமானின் அஞ்சைக்கள ஆடவல்லான் சிறக்க வடிக்கப்பட்டுள்ளார். இறைவனின் ஆனந்ததாண்டவத்தை உமையுடன் பிள்ளைகள் இருவரும் இடப்புறமிருந்து காண, குடமுழவில் தாளம் தருபவரும் காரைக்காலம்மையும் வீசிய திருவடியின் கீழ் வலப்புறம்.

சுந்தரர், சேரமான் பெருமாளின் கயிலைப் பயணம் சுவரையும் கடந்து தூணிலும் பரவியுள்ளது. வருபவர் சுந்தரர் என்பதால் அவரை வரவேற்க, விண்ணுலக நண்பர்கள் ஆடலும் பாடலுமாய்ச் சிறுசிறு குழுக்களாய் வழியெங்கும் பரவி அவரை வரவேற்கின்றனர். இந்தக் காட்சிப்பரப்பில் சோழர்காலக் கலைவளம், கருவிகளும் கலைஞர்களும் நிகழ்முறையும் ஒப்பனையுமெனக் கண்களை விரியச் செய்து தரவுகளைக் குவிக்கிறது.

சுந்தரரின் கயிலைப் பயணம்

யானைமீது சுந்தரரும் குதிரைமீது சேரமானும் கயிலை செல்லும் அந்தப் பெருவழியில், நீர்வாழ் இனங்கள் நீந்திப் பரவ, யானையின் கால்கள் கடல்நீரில். வான் வழிப் பயணத்தில் கடல் எங்கிருந்து வந்தது? யானையின் வாலைப் பற்றியவாறு சுந்தரரின் உடன்பயணியாய்ப் பின்னால் ஒருவர். யார் இவர்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுந்தரரின் நூறாம் பதிகம் விடை தருகிறது. சுந்தரரை அழைத்துவர யானையையும் வழிநடத்திவர தம் அடியார்களுள் ஒருவரான வாணனையும் இறைவன் அனுப்ப, பயணவழியில் கடலரசனான வருணன் வானவர் அனைவருக்கும் முன்னதாக வந்து மலர்கள் தூவித் தம்மை வணங்கி வரவேற்றதாக சுந்தரரே பேசுகிறார். கடலரசன் வணங்க, வழிதர வந்த வாணன் யானையின் வால் பிடித்துப் பின்வர, சேரமான் பெருமாள் முன் செல்ல, வானவ நண்பர்களின் வரவேற்பிற்கு இடையே சுந்தரர் கயிலையை அடைந்ததும் அங்கே இறைத்திருமுன் அவரும் சேரமானும் இணைந்து கண்ட ஆடல், பாடல் நிறைந்த அரங்க நிகழ்வும் கோடுகளும் வண்ணங்களுமாய்ச் சோழர்கால ஓவியர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அழகின் உச்சம்.

வாணன்

சிவபெருமானும் உமையும் மேடையில் அமர்ந்திருக்க, பின்னால் எழில்நிறை வடிவுடன் இறைவியின் விண்ணகத் தோழியர். அரங்கில் ஒழுங்குற அமர்ந்த பாடற்குழு. அவர்தம் பண்ணிசைப் பாடல்களுக்கு ஆடலரசிகளின் அவிநயம். உடன்கூட்டமாய்ப் பூதங்களின் இசைக்கோலத்துடன், பேரிசையாய்க் குடமுழவு. பார்வையாளர்களாய் சுந்தரரே சுட்டும் திருமால், நான்முகன், இந்திரன் உள்ளிட்ட தேவர்களும் பிறரும். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையை நினைவூட்டுமாறு விரிந்து பரவும் இந்தக் கயிலாயக் காட்சி சோழர் கால நிகழ்த்துக் கலைக்குக் கிடைத்த அரிதிலும் அரிதான வண்ணப்பதிவாகும்.

தவம், நட்பு, போர், பத்திமை எனும் நான்கை முதன்மைப்படுத்தி நான்கு பெருஞ்சுவர்களை வண்ணக் கலவைகளால் நிறைத்திருக்கும் சோழத் தூரிகைகள் இலக்கியம் பயின்றும் வரலாறு அறிந்துமே வரைவைச் செய்தன என்பதை சுந்தர வாழ்க்கையின் தேர்ந்தெடுத்த நிகழ்வுகளும் அவற்றை அவை பதிவுசெய்திருக்கும் பாங்கும் உள்ளங்கைக் கனியாய் உணர்த்துகின்றன. வாணன் வந்து வழி தந்து உடன் சென்றதும் கடலரசன் மலர் கொண்டு வாழ்த்தி வணங்கிப் பரவியதும் நம்பி ஆரூரருக்கு மட்டுமே வாய்த்த சுந்தரப் பெருமைகள்.

தள்ளாத வயதில் அப்பரும் தளிரான பருவத்தில் சம்பந்தரும் தலைக்கு மூன்று திருமுறைகள் கொள்ளுமளவிற்குப் பதிகங்கள் பாடியும் கருவறைச் சுவரோவியத்திற்கு சுந்தரர் வாழ்வை இராஜராஜர் தேர்ந்தது ஏன்? அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த தம்பிரான் தோழர் என்பதாலா? அப்பருக்கும் சம்பந்தருக்கும் கிடைக்காத இணையற்ற நண்பராய் சுந்தரருக்கு சேரமான் பெருமாள் வாய்த்ததாலா? ஊர்ப் பதிகங்களோடு நில்லாமல் வரலாற்றுத் தொடராய் தமக்கு முன்னும் தம் காலத்தும் வாழ்ந்த இறையடியார்களைத் தொகைப்படுத்தித் திருத்தொண்டத்தொகை தந்ததாலா? வரலாறு வளப்படுவதே கேள்விகளால்தான்.

புரட்சிக் கலைஞர் கோச்செங்கணான்

இரா. கலைக்கோவன்

‘பொதுவான இல்லம்’ எனும் பொருளில் அமைந்த பொதியில் என்ற சொல் சங்ககால இறையகங்களைக் குறிக்கும். எழுதணி கடவுளுடன் பொதியில், கந்துடைப் பொதியில், மண்டகப் பொதியில் முதலிய சங்க இலக்கியச் சொல்வழக்குகளும், ‘இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென’, ‘மரஞ்சோர் மாடம்’ எனும் சங்கத் தொடர்களும் அந்த இறையகங்களின் கட்டுமான அமைப்பைக் கண்முன் நிறுத்துகின்றன. நகர் என்றும் அழைக்கப்பட்ட அவற்றின் காலநிரலான அமைப்பு மாற்றங்களையும் அதற்கேற்ப உருவான பெயர்களையும் கோட்டம், கோயில் உள்ளிட்ட சிலப்பதிகாரச் சொல்வழக்குகளால் அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் இடம்பெறாத இறையகச் சொல்வழக்கொன்றைப் பத்திமை இலக்கியங்கள் முன்வைக்கின்றன. ‘மாடக்கோயில்’ என்ற அந்தச் சொல்லைக் கோச்செங்கணான் என்ற சோழவேந்தருடன் இணைத்துப் பேசும் பாங்கை மங்கையாழ்வாரின் திருநறையூர்ப் பாசுரத்திலும் ஞானசம்பந்தரின் வைகல் பதிகத்திலும் காணமுடிகிறது. அதைப் பெருங்கோயில் என்றும் அறிமுகப்படுத்துவார் சம்பந்தர். இத்தகு கோயில்கள் எழுபது இருந்ததாகவும் அவற்றைக் கட்டமைத்தவர் திருக்குலத்து வளச்சோழரான கோச்செங்கணானே என்றும் மங்கையாழ்வார் உறுதிபடப் பாடியுள்ளார். தம் காலத்தே தமிழ்நாட்டிலிருந்த கோயில் கட்டமைப்பு வகைகளைச் சுட்டுமிடத்து அவற்றைப் பெயரளவில் மட்டுமே குறிப்பிடும் அப்பர் பெருமான் அவற்றுள் ஒன்றான பெருங்கோயிலை மட்டும் எழுபத்தெட்டு என்று எண்ணிக்கையுடன் சொல்வார்.

குடவாயில்

கோச்செங்கணான் எனும் சோழஅரசரின் பெருவீரம் மங்கையாழ்வாரின் திருநறையூர்ப் பாசுரத்தில் பலபடப் பேசப்பட்டுள்ளது. வெண்ணியில் விறல் மன்னரையும் விளந்தையில் அதன் வேளையும் அழுந்தையில் படை மன்னர்களையும் போரில் வெற்றிகண்டு உலகமாண்ட தென்னாடராகக் கோச்செங்கணானைப் பாடிப் பரவுகிறார் மங்கையாழ்வார். இம்மன்னன் மீது பொய்கையாழ்வாரால் பாடப்பெற்ற களவழிநாற்பது எனும் கீழ்க்கணக்கு நூலொன்றும் மன்னரின் வீரம், அவருக்கும் சேர அரசர் ஒருவருக்கும் நிகழ்ந்த போர், அப்போரில் சேரஅரசர் உயிரிழந்தமை முதலிய பல வரலாற்றுத் தரவுகளை முன்வைக்கிறது.

சோழர் காலச் செப்பேடுகள் சிலவற்றில் சோழர் மரபுவழி கூறுமிடத்துச் சுட்டப்படும் இக்கோச்செங்கணானின் காலம் குறித்துப் பல கருத்துகள் முன்வைக்கப் பட்டாலும் நெடிய ஆய்வுகளுக்குப் பின் டாக்டர் மா. இராசமாணிக்கனார் செங்கணான் காலத்தைப் பொதுக்காலம் 5ஆம் நூற்றாண்டாகச் சுட்டியுள்ளமை பொருந்துவதாகவே உள்ளது.

பெருவேளூர்

சைவம், வைணவம் எனும் இருவேறு சமயஞ்சார் இலக்கியச் சான்றுகளால் கோச்செங்கணானோடு தொடர்புபடுத்தப்படும் மாடக்கோயில்கள் கட்டமைப்பில் புதியவை. அதனாலேயே, எத்தனையோ கோயில்களைப் பாடியுள்ள தேவார மூவரில் இருவரும் மங்கையாழ்வாரும் மாடக்கோயில்களைப் பாடுமிடத்து அவற்றை எழுப்பியவரையும் மறவாது அடையாளப்படுத்தியுள்ளனர். அதுநாள்வரை இருந்த கட்டமைப்புகளிலிருந்து மாடக்கோயில் மாறுபட்டு அமைந்ததாலேயே அதற்குப் புதிய பெயரும் கிடைத்தது. அதைக் கட்டியவருக்குப் பாடல் புகழும் அமைந்தது.

தமிழ்நாட்டில் இன்றும் பார்வைக்குக் கிடைக்கும் இம்மாடக்கோயில்களில் பெரும்பாலன நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலேயே அமைந்துள்ளன. அவற்றைக் கண்டறிந்து விரிவான அளவில் ஆய்வுசெய்து, ‘மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள்’ என்றொரு நூலையும் வெளியிட்டுள்ள டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்ற இறையகமே மாடக்கோயில் என்று வரையறை செய்துள்ளனர்.

தலைஞாயிறு

தளம் என்பது கட்டுமானஞ் சார்ந்த கலைச்சொல். இது தாங்குதளம், சுவர், கூரை எனும் மூன்று உறுப்புகள் கொண்ட அமைப்பாகும். இத்தளம் ஒரு மேடை போல, உள்ளீடின்றி அமையும்போது வெற்றுத்தளமாகிறது. இறையகங்கள் பொதுவாக நிலத்திலோ, பாறை அல்லது குன்றுகளின் மீதோ அமையுமாறு போல, மாடக்கோயில்கள் மூன்று உறுப்புகள் பெற்ற வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்றன. இந்த வெற்றுத்தளமே பிற கோயில் வகைகளிலிருந்து மாடக்கோயிலை வேறுபடுத்தி அதைப் பெருங்கோயிலாகவும் வடிவமைத்தது. வெற்றுத்தளத்தின் உயரமும் கட்டமைப்புத் திறனும் கோயிலுக்குக் கோயில் மாறுபட்டாலும், அதன் மீதிருக்கும் இறையகத்தை அடைய அனைத்து மாடக்கோயில்களும் படிவரிசை பெற்றுள்ளன. இப்படிவரிசையின் அமைப்பு, உயரம், படிகளின் எண்ணிக்கை என அனைத்துமே இடத்திற்கு இடம் மாறுபட்டுள்ளன.

பெரியஸ்ரீகோயில் என்றழைக்கப்படும் சிராப்பள்ளி மாவட்டத் திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர் கோயில் ஒரே திசையில் இரு படிவரிசைகள் பெற்ற மாடக்கோயிலாகும். அதன் வெற்றுத்தளக் கீழ்ப்பகுதியில் பிற்பல்லவர் காலச் சிற்பங்கள் தொடராக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பு. அது போலவே திருப்பேர்நகரிலுள்ள அப்பக்குடத்தான் மாடக்கோயிலும் முன்புறமொன்றும் பின்புறமொன்றுமாய் இரண்டு படிவரிசைகள் கொண்டுள்ளது. பாபநாசத்திற்கு அருகிலுள்ள திருநல்லூர் மணவழகர் மாடக்கோயிலின் இறையகமும் அதன் மேற்றளமும் இன்றும் பல்லவச் சுவடுகளுடன் மின்னுகின்றன. திருப்பணிகளுக்கு ஆட்பட்டுத் தண்டலைநீள்நெறி போன்ற சில மாடக்கோயில்கள் உருமாறியிருந்தாலும், சில கால வெள்ளத்தில் கரைந்துபோயிருந்தாலும் கோச்செங்கணான் பெயர் சொல்ல நாம் அறிந்தவரையில் 37 கோயில்கள் எஞ்சியுள்ளன.

ஆலம்பாக்கம்

இயல்பான இறையகங்களுக்கு மாற்றாக ஏன் இந்த வெற்றுத்தள மாடக்கோயில்கள் என்ற கேள்விக்கு விடைகாண முயன்றவர்கள் தொன்மங்களையும் பலவாய்க் காரணங்களையும் முன்வைத்தபோதும், பெருமழைக்கால வெள்ளப் பெருக்கில் அக்கால இறையகங்கள் கரைந்து மறைந்தமை கண்ட சூழலில், அந்நிலையிலிருந்து கட்டுமானங்களைக் காப்பதற்காகவே ஒரு தடுப்புச்சுவர் போல கோச்செங்கணான் காலக் கட்டுமான அறிஞர்களால் இந்த வெற்றுத்தள அமைப்பு உருவாக்கப்பட்டது என்ற அறிவியல் பார்வை ஏற்புடையதாக உள்ளது.

இம்மாடக்கோயில்களை உருவாக்கிய கோச்செங்கணானை நாயன்மார்களுள் ஒருவராக்கிச் சைவம் கொண்டாட, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மங்கையாழ்வாரோ நறையூர்ப் பாசுரப் பாடல்கள் அனைத்திலும் அவரைப் பல்வேறு சிறப்புச் சொற்களால் போற்றி மகிழ்ந்துள்ளார். கட்டுமானங்களுக்காகப் பாடலடிகளில் இப்படி இரு சமயப் பெரியவர்களின் போற்றல் பெற்ற ஒரே தமிழ் மன்னர் கோச்செங்கணான்தான்.

வழக்கமான, இயல்பான முறைகளிலிருந்து மாறுபட்டுப் புதிய கோணங்களை நோக்கிப் பயணிப்பது புரட்சி என்றால், கோச்செங்கணானின் மாடக்கோயில்களும் கலையுலகப் புரட்சிதான். தமிழ் மண்ணில் இது போல் தங்கள் கட்டுமான அமைப்புகளால் புதிய கண்ணோட்டங்களுக்கான வாயில்களைத் திறந்த முதலாம் மகேந்திரர், இராஜசிம்மப் பல்லவர், முதல் இராஜராஜர் என்ற புரட்சிக் கலைஞர்களின் வரிசையில் முதலடி எடுத்துவைத்தவரும் கோச்செங்கணான்தான்.

இராஜராஜர் தேவியின் தளிகளும் மகள்களும்

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் தமக்கெனத் தனி முத்திரை பதித்தவர்களில் அரசர்களைப் போலவே அரசியரும் இருந்தனர். எனினும், கண்டராதித்த சோழரின் தேவியும் உத்தமசோழரின் அன்னையுமான செம்பியன்மாதேவிக்குக் கிடைத்த வெளிச்சம் அவர்களில் பலருக்குக் கிடைக்காமலே போயிற்று. கணவர், மகன் என இருவரும் ஆட்சியில் இருந்ததும் அவர்களுக்கிடையிலும் பின்பும் ஆட்சியிலிருந்தவர்கள் மாதேவியிடம் செலுத்திய அன்புநிறை பத்திமையுமே செம்பியன்மாதேவியின் அரும்பணிகள் சிறக்கவும் தொடரவும் நிலைக்கவும் காரணிகளாயின. முதல் பராந்தகர் காலத்திலிருந்து முதல் இராஜராஜர் காலம்வரை சோழராட்சியைப் பார்த்த பெருமாட்டி அவர். அவர் போல் நெடிய வாழ்வும் பெருமிதப் புரப்பும் கிடைக்காத சூழலிலும் பெற்ற வாழ்க்கையின் சொற்ப காலத்தில் பெருமைக்குரியன செய்து இம்மண்ணின் கலைவளம் கூட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தந்திசத்திவிடங்கி.

சோழநாட்டின் பெருவேந்தராய் மிளிர்ந்த முதல் இராஜராஜரின் பட்டத்தரசியாக, உலகமாதேவி என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இப்பெருமாட்டி இரண்டு கலைக்கோயில்களை உருவாக்கியுள்ளார். இரண்டுமே பாடல் பெற்ற இரு காவிரிக்கரைக் கோயில்களில் அடங்கியுள்ளன. சுவாமிமலைக்கு அருகிலுள்ள வலஞ்சுழித் தளி, பெருவளாகமாய் விரிந்த பெருங்கோயில். அதன் முதலிரு கோபுரங்களுக்கு இடைப்பட்ட பெருவெளியில் தென்புறத்தே இலங்கும் ஒருதள விமானமும் முகமண்டபமும் பெற்ற சேத்திரபாலர் கோயில் தந்திசத்திவிடங்கியால் இராஜராஜரின் 6ஆம் ஆட்சியாண்டில் எழுப்பப்பட்டது. அப்பர் கயிலாயக் காட்சி பெற்ற திருவையாற்று ஐயாறப்பர் கோயிலுள் வடபுறத்தே விளங்கும் உலகமாதேவீசுவரமான வடகயிலாயம் இவ்வம்மையால் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டிற்குச் சற்று முன்பாக வடிவம் பெற்றது. இரண்டு கோயில்களுமே எழிலார்ந்த சிற்பங்களாலும் வளமான கல்வெட்டுகளாலும் நிறைந்துள்ளன.

வலஞ்சுழி சேத்திரபாலர் கோயில்

பல திருக்கோலங்களில் பல்வேறு திருப்பெயர்களுடன் விளங்கும் சிவபெருமானுக்கு ஆடையற்ற கோலங்களாய் அமைந்தவை மிகச் சிலவே. அவற்றுள் மிகப் பழைமையானது அவர் பிச்சையேற்கும் கோலம். நாயை ஊர்தியாகக் கொண்ட பைரவ வடிவம் அவரது மற்றோர் ஆடையற்ற கோலமாகும். இவ்விரண்டு கோலங்களிலும் முற்சோழர் சிற்பங்கள் பலவாய்க் கிடைத்துள்ளன. மூன்றாவதும் சிறப்புக்குரியதுமான வடிவமாக அமைந்த சேத்ரபாலரைத் தமிழ்நாட்டில் செழிக்கச் செய்தவர் தந்திசத்திவிடங்கி.

உத்தமசோழரின் ஆட்சிக்காலத்தில் உலகமாதேவியால் வலஞ்சுழிக் கோயிலில் உள்ளடக்கத் திருமேனியாய் அமைக்கப்பெற்ற சேத்ரபாலர், இராஜராஜர் ஆட்சிக் காலத்தே தனித் திருமுன் பெற்றுக் கற்றளித் தெய்வமாய் இடம்பெயர்ந்தமையைக் கல்வெட்டுகள் பெருமையோடு புகல்கின்றன. சேத்ரபாலர் என்றால், ‘ஊர்க்காவலர்’ என்று பொருள். ‘தாம் இருக்கும் இடத்தைக் காப்பவர்’ என்று இவரை ஆகமங்கள் அடையாளப்படுத்துகின்றன. வலஞ்சுழிக் கோயிலுக்குள் தென்கிழக்கில் மேற்குப் பார்வையாக அமைந்த இத்திருமுன்னே தமிழ்நாட்டில் சேத்ரபாலருக்காக எடுக்கப்பட்ட முதல் தனித் திருக்கோயிலாகும்.

வலஞ்சுழி சேத்திரபாலர்

தமிழ்நாட்டில் காணப்பெறும் மிகச் சிலவான இந்த ஊர்க்காவலர் சிற்பங்களில் தலையாயது உலகமாதேவியால் உருவாக்கப்பட்டது. எட்டுக் கைகளுடன் சுடர்முடி அழகராய் விளங்கும் வலஞ்சுழி ஊர்க்காவலரின் தலையில், இடுப்பில், திருவடியில் பாம்புகள். காவலுக்குரிய கருவிகள் கைகளில் இலங்கக் கோரைப்பற்களுடன் நெடிய திருமேனியராய் விளைந்த இந்தக் காவலருக்குப் பூசைக்கும் அழகூட்டலுக்கும் என உலகமாதேவியும் சோழப் பெருங்குடும்பமும் வாரி வழங்கிய கொடைகள் கல்வெட்டுகளாய் இந்தத் திருமுன் சுவர்களை நிறைத்துள்ளன. இராஜராஜப் பெருவேந்தர் தஞ்சாவூரில் எழுப்பிய இராஜராஜீசுவரத்தின் கொடையாளர் பட்டியலில்கூட இடம்பெறாத அவரது மூன்று திருமகள்களுள் குந்தவையும் நடுவிற் பெண்ணான மாதேவடிகளும் சேத்ரபாலருக்குத் தங்கம் தந்து மகிழ்ந்துள்ளனர். உலகமாதேவியின் வலஞ்சுழி அறிமுகம் சேத்ரபாலர் வழிபாட்டைச் சோழநாட்டில் செழிக்க வைத்தது.

உலகமாதேவீசுவரம், திருவையாறு

ஐயாற்று உலகமாதேவீசுவரம் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டிற்குச் சற்று முன்பாக உலகமாதேவியால் கற்றளியாய் எழுப்பப்பெற்றது. வலஞ்சுழி சேத்ரபாலர் போலவே இங்கும் சோழக் கொடைகள் கல்வெட்டுகளாய்க் கற்சுவர்களை நிறைத்துக் கண்சிமிட்டுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் முதல் இராஜராஜரின் மூன்றாம் மகள் அருமொழி சந்திரமல்லியான கங்கமாதேவியை வெளிச்சப்படுத்துகிறது. வலஞ்சுழி சேத்ரபாலருக்கு விருப்போடு பொன்னையும் நகைகளையும் அள்ளி வழங்கிய குந்தவை நங்கையை உலகமாதேவீசுவரம் கல்வெட்டுகளில் காணமுடியாதபோதும் மாதேவடிகள் வலஞ்சுழிக்கு அளித்தாற் போலவே இங்கும் கொடையாளியாய் ஒளிர்கிறார்.

உலகமாதேவீசுவரத்திற்கு அளிக்கப்பட்ட கொடைகளுள் குறிப்பிடத்தக்கது பாவைக்- கண்ணாடி. இதை, ‘செம்பின் மேல் பொன் அடுக்கிய பாவைக்கண்ணாடியில் ஆடுகிற பாவை ஒன்று, மத்தளம் கொட்டுகிற பாவை ஒன்று, உடுக்கை வாசிக்கிற பாவை ஒன்று, பாடுகிற பாவை ஒன்று, பீடம் ஒன்று உட்படக் காண்ணடி ஒன்று’ என விரித்துப் போற்றும் கல்வெட்டு, அந்நாளைய ஆடலுக்குத் தோல்கருவிகளே பேரிசைக் கருவிகளாய் விளங்கியமை சுட்டுவதுடன், சோழர் கைத்திறம், கலைத்திறம் இவற்றிற்கும் சான்றாய் நிற்கிறது.

வலஞ்சுழி சேத்ரபாலரை உருவாக்கிய சிற்பியின் பெயர் பதிவாகவில்லை என்றாலும், உலகமாதேவீசுவரச் சிற்பியை முதல் இராஜேந்திரரின் கல்வெட்டு அடையாளப்படுத்துகிறது. எழிலார்ந்த சிற்பங்களுடன் உருவான இக்கற்றளியை வடிவமைத்த செம்பியன்மாதேவிப் பெருந்தட்டாரின் உளித்திறம் போற்றித் தட்டாரக்காணியாக நிலம் வழங்கிப் பெருமைப்படுத்திய தந்திசத்திவிடங்கி இராஜராஜருக்குப் பிறகும் பெருமையுடன் வாழ்ந்திருந்தமை இங்குள்ள இராஜேந்திரர் கல்வெட்டுகளால் வெளிச்சமாகிறது.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயில்களிலும் கொடையாளிகளாய்த் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யாத இராஜராஜரின் மகள்கள் மூவரும் உலகமாதேவியின் திருப்பணிகளில் மட்டும் பங்கேற்றுள்ளமை அவர்களை அவ்வம்மையின் அன்புக்குரிய புதல்விகளாய் அடையாளப்படுத்துகிறது. இம்மூவருள் குந்தவை மட்டுமே விமலாதித்தரின் தேவியாய் அறிமுகமாகிறார். பிற இருவரும் இராஜராஜரின் திருமகள்களாக மட்டுமே கல்வெட்டுகளில் காட்டப்பெறுகின்றனர்.

வரலாற்றின் பாதை விசித்திரமானது. ‘நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்’ என்ற இராஜராஜரின் பெருமைக்குரிய தொடரில் அவர் திருமகள்கள் அடைக்கலமாகாமைக்கு எது காரணமோ அதுவே தந்திசத்திவிடங்கி போன்ற படைப்பாளிகளையும் மேகமாய் மறைத்து வேடிக்கை காட்டுகிறது.

திருமெய்யம் ஒப்பந்தம்

இரா. கலைக்கோவன்

புதுக்கோட்டைத் திருப்புத்தூர்ச் சாலையில் 20 கி. மீ. தொலைவிலுள்ளது திருமெய்யம். பொதுக்காலம் 7 – 8ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர்க் குன்றில் மூன்று குடைவரைகள் குடையப்பட்டன. ஒன்று குன்றின் மேற்பகுதியில் அமைய, குன்றின் கீழ்ப்பகுதியில் சிவபெருமானுக்கு ஒன்றும் விஷ்ணுவுக்கு ஒன்றுமாய் இரண்டு குடைவரைகள் அருகருகே உருவாயின. தமிழ்நாட்டளவில் பள்ளிகொண்ட பெருமாளுக்குப் பல குடைவரைகள் இருந்தபோதும் மெய்யம் குடைவரைதான் அளவிலும் உடனிருப்பாளர்களின் எண்ணிக்கையிலும் பெரியது. தாய்ப் பாறையிலான பள்ளிகொண்டவருடன் செய்தமைத்தவராய் நின்றருளிய பெருமாளும் இங்குள்ளார். அருகிலுள்ள சிவபெருமான் குடைவரையும் தான் கொண்டிருக்கும் பேரளவிலான லிங்கோத்பவர் வடிவத்தால் தமிழ்நாட்டின் தன்னிகரற்ற படைப்பாய் ஒளிர்கிறது. இரண்டு கோயில்களும் சமயப்பொறை நோக்குடன் அருகருகே அமைக்கப்பெற்று வாகான வருவாய் திட்டமிடப்பட்டிருந்தும் வருவாய்ப் பங்கீட்டில் நேர்ந்த இணக்கமற்ற சூழல்கள் குழப்பங்களாய்த் தொடங்கி, சச்சரவுகளாய் வெடித்து வழிபாட்டு நிறுத்தத்தில் முடிந்தன.

பள்ளிகொண்டவர்

எத்தனைக் காலம் இந்நிலை நீடித்தது என்பது தெரியாதபோதும் இதற்கான விடியல் பொ. கா. 1245இல் வந்ததை இங்குள்ள கல்வெட்டால் அறியமுடிகிறது. சோழர், பாண்டியர் பகையால் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த மைசூர் ஹொய்சளர் திருச்சிராப்பள்ளிக்கருகில் தலைநகர் உருவாக்கி ஆளத் தொடங்கிய காலமது. ஹொய்சள அரசர் வீரசோமேசுவரரின் படைத்தலைவர்கள் மெய்யத்தை உள்ளடக்கிய கானநாட்டை வென்றிருந்தனர். மெய்யத்தின் இரு கோயில் பூசல்களும் பூசை நிறுத்தமும் அவர்கள் கவனத்திற்கு வந்தபோது, உரியவாறு அதை நேர்செய்யக் கருதிப் பெருங்கூட்டமொன்றைக் கூட்டினர்.

மெய்யத்தை உள்ளடக்கிய கானநாடு என்று மட்டுமல்லாது, சுற்றிலுமுள்ள நாடுகள், நகரங்கள், ஊர்களின் ஆட்சிக் குழுவினருடன், இது சைவ, வைணவக் கோயில்களுக்கு இடையிலான சிக்கல் என்பதால் கானநாட்டுச் சைவ, வைணவப் பெரியவர்கள், அரசு உயர்அலுவலர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டனர். சைவர்கள் பக்கம் பேசத் திருக்கொடுங்குன்றம் சைவாச்சாரியார்களும் வைணவத்திற்குத் துணைநிற்கத் திருக்கோட்டியூர் திருப்பாணதாதர் குழுவினரும் வந்திருந்தனர். இரு கோயில் நிருவாகிகளும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு ஹொய்சளப் படைத்தலைவர்களான ரவிதேவரும் அப்பண்ணரும் முன்னிலை வகித்தனர்.

லிங்கோத்பவர்

‘என்ன சிக்கல்? ஏன் பூசைகள் நின்றன?’ என்ற கேள்விகளுக்கு, ‘வருவாய் இரு கோயில்களுக்கும் பொதுவாக இருந்ததால் பங்கிட்டுக்கொள்வதில் சிக்கல். ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்த சச்சரவுகளால் முதல்கள் அழிந்தன. பூசை நின்றது’ என்று நிருவாகம் விடையிறுக்க, இரு கோயில் கணக்குகளும் ஆராயப்பட்டன. சொத்து ஆவணங்கள் சோதிக்கப்பட்டன. இருப்பதும் இழந்ததும் தெரியவந்தது. இவர்களும் அவர்களுமாய்க் குறைகளை அடுக்கினாலும் இருந்தவரில் சார்பற்றோர் முடிவுகளை நோக்கிப் பேச்சை நகர்த்தினர். இரு கோயிலாரும் இணைங்கிய பிறகு படைத் தலைவர்கள் முன்னிலையில் திருமெய்யம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தின் முதல் கூறாய் வருவாய் திட்டமிடப்பட்டது. மெய்யத்திலும் அதற்கடங்கிய சிற்றூர்களிலும் பயிரிடப்பட்ட நிலவிளைச்சலில் கோயிற்கடமையாக வரவான நெல்வருவாய் ஐந்து கூறுகளாக்கப்பட்டு, பெருமாள்கோயிலுக்கு மூன்றும் சிவன்கோயிலுக்கு இரண்டுமாய்ப் பிரிக்கப்பட்டது. அருகருகே இருந்த இவ்விரு கோயில்களை அந்நாளில் வழக்கிலிருந்த தச்சன் முழக்கோலால், ஒரு முழம் கனத்தில் சுவரெடுத்துப் பிரிக்கவும் அச்சுவர் எங்கிருந்து, எப்படி, எதுவரை நீள்வது என்பது குறித்தும் முடிவுசெய்ததுடன், சுவர் நீளும் வழியிலுள்ள மரங்களை அகற்றவும் சுவரமைப்புச் செலவை இரு கோயில்களும் நெல் வருவாய் பெற்ற அதே விகிதத்தில் பகிர்ந்துகொள்வதென்றும் தீர்மானித்தனர். இரண்டு கோயில்களின் எல்லைகளும் முறையாக வரையறுக்கப்பட்டன.

அடுத்து, கோயில்களுக்கான நீர்நிலைகள் ஒதுக்கப்பட்டன. கிழக்குச் சுனை பெருமாளுக்கும் மேற்குக் கிணறு சிவபெருமானுக்குமாயின. நீர்நிலைகளில் தூர் எடுக்கும்போது அவ்வக்கோயில் உற்சவப் படிமங்களை எழுந்தருளுவித்துக் கொள்ள அனுமதியாயிற்று. ஊர் நிலப்பகுதி ஒன்று ஐந்து கூறுகளாக்கப்பட்டு மூன்றின் விளைவு பெருமாளுக்கும் இரண்டின் விளைவு சிவபெருமானுக்குமாய் ஒப்பந்தமானது. விஷ்ணு கோயிலுக்கான பழங்கொடைகளாக விளங்கிய அண்டக்குடி, பெருந்துறை நிலங்கள் அவர் பெயரிலேயே உறுதிசெய்யப்பட்டன.

இரு கோயில்களும் அவரவர் வருவாயில் கருவிக் கலைஞர்களைப் பணியமர்த்திக் கொள்ளவும் அந்தந்தக் கோயிலுக்கென அளிக்கப்பட்டிருந்த பழங் கொடைகள் பழநடை மாறாது நின்று நிலவவும் ஆணையானது. கானநாட்டு ஊற்றியூரில் பிராமணர் சிலர் விலைக்கு வாங்கி, வரியிறுக்க முடியாமல் நாட்டுப்பொதுவாக ஓலையெழுதித் தந்த மேலைப்பாதி நிலமும் அதன் வரி வருவாயும் இரு கோயில்களுக்கும் சரிபாதியாகப் பகிரப்பட்டது.

லிங்கோத்பவர்

இங்குள்ள மற்றொரு கல்வெட்டால், ‘வைஷ்ணவ மாகேசுவரம்’ என்று சுட்டப்படும் இந்தத் திருமெய்யம் ஒப்பந்தத்தின் இறுதிப்பகுதி முக்கியமானது. இரு கோயில் நிருவாகமும் அவரவர் கோயிலுக்குரிய கல்வெட்டுகள் அடுத்தவர் கோயிலில் இருந்தால் அவற்றைப் படியெடுத்துத் தத்தம் கோயிலில் பதிவுசெய்து கொள்ளலாம் என்பது இப்பகுதியின் முதற்கூறு. இக்கல்வெட்டுப் படிகளை ஏற்காதவர்கள், ‘ராஜ, மாத்ரு, நாட்டுத் துரோகிகளாய்க் கருதப்படுவர். அவர்களுக்குப் பிறப்பு, இறப்புத் துன்பங்கள் நேரும்’ என்று எச்சரிக்கும் ஒப்பந்தம், அவர்கள் அரசிற்கு 200 அச்சுத் தண்டமும் தரவேண்டும் என்கிறது.

இரண்டாம் கூறு இரு கோயில்களும் இரு வேறு வளாகங்களாகப் பிரிந்த நிலையில் இரண்டுக்கும் பொதுவான இடத்திலும் பிற பகுதிகளிலும் நேர்ந்த கல்வெட்டழிப்பு. சிவன்கோயிலில் மூன்று கல்வெட்டுகள் அழிக்கப்பட்டன. அவற்றுள், ‘பாஷை தெரியாத கல்வெட்டு’ என்ற சுட்டலுடன் இவர்களால் அழிக்கப்பட்ட கல்வெட்டு, புகழ்பெற்ற குடுமியான்மலை இசைக்கல்வெட்டொத்த அமைப்பில் இக்குடைவரை பெற்றிருந்த மற்றோர் இசைக்கல்வெட்டாகும். அதை அழித்த இடத்தில்தான் நாற்பது பேர் கையெழுத்திட்டுள்ள இந்தத் திருமெய்யம் ஒப்பந்தம் மறுசெதுக்கலாய்க் கண்சிமிட்டுகிறது. இவர்களின் அழிப்பையும் மீறி பழைய இசைக்கல்வெட்டின் எச்சங்கள் இந்தப் புதிய பொறிப்பினூடே ஆங்காங்கே தலைகாட்டுவது இவர்தம் செய்நேர்த்திக்குச் சான்றாம்.

இந்த ஒப்பந்தத்தால் இரு கோயில்களுக்குமிடையே அமைதி நிலவியதா என்றால், இல்லை என்கிறது இங்குள்ள இன்னொரு கல்வெட்டு. சிவன்கோயில் கருவிக் கலைஞர்களுக்கான நிலமளிப்பில் திருவேங்கடத்து நம்பி செந்தாமரைக் கண்ணரால் நேர்ந்த துன்பத்தை ஈடுசெய்ய, அக்கோயில் நிருவாகம் மீண்டும் நாடு, நகரம், ஊராட்சிகளை அணுக, அம்முறையீட்டில் உண்மை இருப்பது உணர்ந்த அப்பெருங்குழு, மெய்யம் சபைக்கு இச்சிக்கலைத் தீர்க்க ஆணையிட, ஒருவாறாக உரியது நடந்து தீர்வேற்பட்டது.

பகிர்ந்துகொள்ளும் பேரன்பு இறைவளாகங்களில்கூட இல்லாமல் போனமையால் இரு கோயில்கள் இழந்ததும் அந்த இழப்பை நேர்செய்ய ஊரும் நாடும் ஆட்சியாளரும் ஒன்றுகூடி உழைத்ததும் திருமெய்யம் ஒப்பந்தத்தின் நேர்ப்பார்வையென்றால், மரங்கள் வெட்டப்பட்டதும் வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுகள் அழிக்கப்பட்டதும் அதன் எதிர்ப்பார்வையாய் நிற்கின்றன.

இராஜராஜர் கால ஊதியக்குறைப்பு

இரா. கலைக்கோவன்

தமிழ்க் கல்வெட்டுகளில் எண்ணிக்கையிலும் தரவுகளைப் புதையலாய்க் கொண்டிருப்பதிலும் முதனிலையில் உள்ளவை சோழர் காலக் கல்வெட்டுகளே. பல வரலாற்றறிஞர்கள் அவற்றிலிருந்து அகழ்ந்தளித்திருக்கும் பன்முகப் பதிவுகளையும் தாண்டி, அவை அடைகாக்கும் வரலாற்றுச் செய்திகள் பலவாகும். அவற்றுள் ஒன்றுதான் முதல் இராஜராஜர் காலத்தே நிகழ்ந்த பணியாளர் ஊதியக்குறைப்பு.

சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகினாற் போலவே, அவற்றின் நடைமுறைகளும் பெருகின. வழிபாடு, படையலுக்கென ஏராளமான நிலத் தொகுதிகளும் பொன், வெள்ளி, காசு, கால்நடை முதலியனவும் வழங்கப்பெற்றன. இறைத்திருமேனிகளை அழகுபடுத்தவும் அவற்றுக்குப் பெருமை சேர்க்கவும் விலை மதிப்பற்ற அணிகலன்கள் வந்தடைந்தன. வரவு மிகுதியான நிலையில் நிதியம், நகைகள் காக்கக் கருவூலங்களும் அவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியமாயின. கோயிலின் வரவு செலவுக்கேற்ப வழிபாட்டு நடைமுறைகள் விரிவடையவே, பணியாளர் பட்டியலும் நீண்டது. முதல் இராஜராஜர் காலத்தே தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் 400 தளிப்பெண்டுகள் பணியிலிருந்தனர். இவர்கள் தவிர, 36 வகையான தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த 217 தொழிலர்களைக் கோயில் புரந்தது. அவர்களுள் 138 பேர் ஆடல், இசையுடன் தொடர்புடைய நுண்கலைஞர்கள்.

இராஜராஜீசுவரம் அளவிற்கு இல்லையென்றாலும் பல கோயில்களில் இத்தகு பணியாளர் பெருமளவில் இருந்தனர். பணியமர்த்தப்பட்டபோதே அவர்களுக்கான ஊதியம் நிலப்பங்காக அறிவிக்கப்பெற்றது. செய்யும் தொழிலுக்கேற்ப அப்பங்கின் அளவு அமைந்ததை இராஜராஜீசுவரத் தளிச்சேரிக் கல்வெட்டால் அறியமுடிகிறது. ஒரு பணிக்கென உறுதிசெய்யப்பெற்ற நிலப்பங்கு, கோயில் தேவைக்கேற்ப வேறு பணிக்கு மாற்றப்படுவதையும், சில நேரங்களில் அதே பணியில் புதியவர்கள் நுழையும்போது பங்கின் அளவு மாறுதலுக்கு உள்ளாவதையும் கல்வெட்டுகள் இனிதே உணர்த்துகின்றன.

பாச்சில் அவனீசுவரம்

ஆனால், ஒருவர் பணியிலமரும்போது முடிவாகும் நிலப்பங்கு, அவர் பணியிலிருக்கும்போதே கோயிலின் புதிய தேவைகளுக்காகக் குறைக்கப்படுவது அரிதினும் அரிதான நிகழ்வாகும். முதல் இராஜராஜர் காலத்தில் இத்தகு ஊதியக்குறைப்பு சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பாச்சில் மேற்றளி, பாச்சில் அவனீசுவரம், திருவாசி மாற்றுரை வரதீசுவரர் ஆகிய மூன்று கோயில்களில் நிகழ்ந்துள்ளது. இதை நிகழ்த்தியவர் நாடு வகை செய்யும் பணியிலிருந்த ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் என்ற அரசு அலுவலர். இவரை, ‘இராஜராஜரின் பணிமகன்’ என்கிறது கல்வெட்டு.

பணிக்கான நிலப்பங்குகளைக் குறைக்கும் முன், பங்கிலிருந்து கிடைக்கும் நெல் அளவு, அதில் பணியாளர் குடும்பத்திற்கு எந்த அளவு போதுமானது என்பதையெல்லாம் அவர்களிடமே கேட்டு ஆராய்ந்தே உத்தமன் ஊதியம் குறைத்ததை, ‘உண்டு வருகின்ற பங்கு வினவி, பங்கில் இவர்களுக்குப் பற்றும்படி நிறுத்தி (கூடுதலாக உள்ளதை) வாங்கி’ எனும் கல்வெட்டுத் தொடர் நிறுவுகிறது. இந்த ஊதியக்குறைப்பில் தொழில் சார்ந்த பாகுபாடு இல்லாமையையும் அறியமுடிகிறது.

‘ஏன் இந்தத் திடீர் ஊதியக்குறைப்பு’ என்ற வினாவுக்கு ஒவ்வொரு கோயிலும் ஒரு விடை வைத்திருந்தது. அவனீசுவரத்தில் இப்படிக் குறைக்கப்பட்ட பங்குகள் வழிக் கோயிலுக்கு 300 கலம் நெல் கிடைத்தது. அதில் 120 கலம் மாதந்தோறும் முதல் இராஜராஜரின் பிறந்த நட்சத்திரமான சதையத்தன்று இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்ய ஒதுக்கப்பெற்றது. எஞ்சிய 180 கலம் அவர் தமக்கை குந்தவையாரின் பிறந்த நட்சத்திரமான அவிட்டத்தன்று இறைவனுக்குத் திங்கள்தோறும் சிறப்பு வழிபாடு செய்யவும் அக்கொண்டாட்டத்தின்போது கோயிலில் 60 பேருக்கு உணவிடவும் பயன்பட்டது.

பாச்சில் மேற்றளி

பாச்சில் மேற்றளியில் நடந்த ஊதியக்குறைப்பால் வரவான 909 கலம் நெல் மேற்றளி ஊரில் முதல் இராஜராஜரின் ஜனநாதன் எனும் விருதுப்பெயரேற்று அமைந்திருந்த சாலையில் நாள்தோறும் 30 பிராமணர்களுக்கு உணவிட உதவியது. திருவாசியில் ஊதியக்குறைப்பால் பெறப்பட்ட 142 கலம் நெல் அக்கோயிலிலிருந்த உலாத்திருமேனியான இராஜராஜவிடங்கரின் பெயரில் வரவு வைக்கப்பெற்று அத்திருமேனிக்கு நாளும் ஒரு சந்தி வழிபாடு, படையல் அமைக்கத் துணையானது.

இந்த ஊதியக்குறைப்புக் கல்வெட்டுகளால் இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய தொழிலர், கலைஞர் சிலரை அறியமுடிவதுடன், இங்குப் பயன்பாட்டிலிருந்த இசைக்கருவிகளின் பட்டியலும் கிடைக்கிறது. அவனீசுவரத்திலும் திருவாசியிலும் மெராவியம், குழல் முதலிய கருவிகளை இசைத்தவர்களும் நட்டுவரும், கணக்கரும் பணியாற்ற, அவனீசுவரத்திலும் மேற்றளியிலும் சோதிடரும் மெய்மட்டு உள்ளிட்ட கருவிக்கலைஞர்களும் பணியிலிருந்தனர். காளம், செயகண்டிகை, கரடிகை முதலிய இசைக்கருவிகளை இயக்கியோர் மேற்றளியில் வாழ, வண்ணக்கர், நாவிசர், தச்சர், பரிசாரகர் முதலிய தொழிலர்கள் திருவாசியில் உழைத்தனர். மேற்றளியிலும் திருவாசியிலும் காவிதி என்ற பெயருடன் விளங்கிய கணக்கர்களையும் அவனீசுவரத்திலும் மேற்றளியிலும் இருந்த வழிபாடு நிகழ்த்தியவர்களையும் அடையாளப்படுத்தும் இக்கல்வெட்டு, மூன்று கோயில்களிலும் இருந்தவர்களாக மட்பாண்டம் வனையும் வேட்கோவர்களைத்தான் முன் நிறுத்துகிறது.

இப்பணியாளர்கள், கலைஞர்களின் ஊதியத்தில் உச்சமாக இரண்டு பங்கும் கீழாக அரைக்கால் பங்கும் குறைக்கப்பட்டது. இரண்டு பங்கு இழப்புப் பெற்றவர்கள் மேற்றளிக் கருவிக் கலைஞர்கள். ஒன்றரைப் பங்கை இழந்தவர்களும் மேற்றளியினரே. அவனீசுவரத்து நட்டுவரும் ஆசாரியரும் தலைக்கு ஒரு பங்கு இழக்க, அரைப்பங்கு இழப்பை மூன்று கோயில் பணியாளர்களில் பலர் சந்தித்தனர். மூன்று கோயில்களில் மிகையான குறைப்பு நேர்ந்ததும் மேற்றளியில்தான். அங்குப் பதினாறு பங்குகள் நீக்கப்பட்டன. மிகக் குறைவான பங்கிழப்பைப் பார்த்தது திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில். அங்கு உச்சக் குறைப்பே அரைப்பங்குதான். இராஜராஜீசுவரத் தளிச்சேரிக் கல்வெட்டுப்படி ஒரு பங்கு என்பது 100-120 கலம் நெல் விளைவு தந்த ஒரு வேலி நிலமாகும்.

மாற்றுரை வரதீசுவரர்

ஊதியக்குறைப்பை உழைப்போருக்கு நிகழ்த்தினாற் போல, இம்மூன்று கோயில்களிலும் ஒளிர்ந்த விளக்குகளுக்கான எண்ணெய்ச் செலவையும் உத்தமன் குறைத்துள்ளார். மேற்றளி விளக்குச் செலவில் அரைப்பங்கும் அவனீசுவரத்து எண்ணெய்ச் செலவில் கால்பங்கும் குறைத்த உத்தமன், திருவாசிக் கோயில் விளக்குகளை மட்டும் தொடவில்லை. அது மட்டுமன்று, இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய தேவரடியார், தளிப்பெண்டுகள், கூத்திகள், தலைக்கோலியர் ஊதியத்திலும் அவர் கைவைக்கவில்லை. சொல்லப்போனால், இந்த மூன்று கோயில்களுமே சோழர் காலத்து ஆடற்கலையை உயர்த்திப்பிடித்த பெண் கலைஞர்களின் வாழிடங்களாக விளங்கிய பெருமைக்குரியவை.

பார்வையிழப்பின் மூவருலா

இரா. கலைக்கோவன்

கதைக்கும் வரலாறுக்குமான இடைவெளி ஆய்வுகளால் மட்டுமே வெளிச்சமாகும். சில கதைகள் வரலாற்றின் வீச்சுப் போலவே முகங்காட்டினாலும், வரிக்குவரி கற்பனைப்பூச்சுடன் எழுதப்பட்டிருப்பதை நுணுக்கப் பார்வை தெளிவுபடுத்தும். வரலாறும் அப்படித்தான். உண்மைகளையே அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருந்தாலும் எழுத அல்லது சொல்லப்பட்டிருக்கும் முறையால், ‘இது கதையோ’ என்றுணர வைக்குமாறு அமைந்துவிடும். சொல்லப்போனால், சில கதைகள் சாகாவரம் பெற்று வரலாறாகவே வாழ்கின்றன. சில வரலாறுகள் சரியாக வெளிப்படாமையினால் கதைகளோ என்று மருளச்செய்கின்றன.

மூன்று பேர் வாழ்க்கையில் நேர்ந்த ஒரே நிகழ்வைப் புராணக்கதையாகவும் கல்வெட்டுச் சொல்லாடலாகவும் காலம் நம் முன் நிறுத்துகிறது. தேவாரமூவரில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானின் தோழராகக் கொண்டாடப்படுபவர். அவரது வாழ்க்கையை விளக்கும் திருத்தொண்டர் புராணம், ஒற்றியூரில் தாம் காதலித்து மணந்த சங்கிலிக்கு அளித்த வாக்குறுதியை மீறியதால் அவருக்கு நேர்ந்த பார்வையிழப்பையும் அதன் தொடர் விளைவுகளையும் விரிவாகப் பேசுகிறது.

‘உன்னைப் பிரியேன், ஒற்றியூரில் உன்னுடன் உறைவேன்’ என்று உறுதியளித்துச் சங்கிலியை மணந்த சுந்தரரைச் சின்னாட்களில் பரவை நங்கையுடன் அவர் வாழ்ந்த திருவாரூர் நினைவுகள் ஆட்கொண்டன. ஆரூர் வயப்பட்டவராய், சிவபெருமானறியத் தாம் சங்கிலிக்கு அளித்த உறுதிமொழி மறந்து, ஒற்றியூர் நீங்கிய சுந்தரருக்கு இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. தவறால் நேர்ந்த துன்பமிது என்பதை உணர்ந்த சுந்தரர் ஆரூர் இறைவனைப் பாடிப் பார்வை பெறுவேன் என்று பாடியவாறே பயணம் தொடர்ந்தார்.

பாடல்கள் வளர்ந்தன, பயணமும் நீண்டது. ஆனால், பார்வை வரவில்லை. திருவெண்பாக்கத்தை அடைந்து ஆற்றாமையால், ‘இறைவனே இங்குள்ளீரோ’ என்று கேட்டபோதும், ‘உளோம் போகீர்’ என்று மறுமொழித்து, தடுமாறாது நடக்க சுந்தரருக்கு ஊன்றுகோல் தந்தாராம் இறைவன். காஞ்சிபுரத்தில்தான் கடவுள் கருணை காட்டி, அவருக்கு இடக்கண் பார்வையை மீளத் தந்தார். வலக்கண் பார்வை சுந்தரருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. வழியெல்லாம் கதறியும் புலம்பியும் பாடிச்சென்றவருக்கு, மறு கண் பார்வை ஆரூரில்தான் கிடைத்தது.

இப்படிப் பார்வை போவதும் இறையருளால் மீளக் கிடைப்பதும் சுந்தரருக்கு மட்டுமே நிகழ்ந்ததன்று. சிராப்பள்ளி மாவட்டம் பெருங்குடி அகத்தீசுவரம் கோயிலிலும் புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டி ஆலத்தூர்த் தளியிலும் பொறிக்கப்பட்டிருக்கும் இரண்டு கல்வெட்டுகள் அவ்வூர்களில் வாழ்ந்த இருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டுச் சரியானதாகச் சொல்கின்றன.

பெருங்குடி அகத்தீசுவரம் கோயில்

சிராப்பள்ளிப் பகுதியைப் பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டளவில் ஆண்ட ஒய்சள மன்னர்களுள் ஒருவரான வீரராமநாதன் ஆட்சிக்காலத்தில், பெருங்குடி இருந்த பகுதி ஜகதேகவீரச்சதுர்வேதிமங்கலமாக அறியப்பட்டது. அங்கு வாழ்ந்த தட்டார் மருதாண்டார் அறச்சிந்தனையாளர். அகத்தீசுவரம் கோயிலில் அவர் காலத்தே திருப்பணி நிகழ்ந்தது. அதுபோழ்து அங்குப் பணியாற்றிய கல்தச்சர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப் போதுமான தொகை கோயிலாரிடம் இல்லை. நிருவாகத்திற்கு ஏற்பட்ட இச்சிக்கலான சூழலை அறிந்த மருதாண்டார், உடனே தம்மிடமிருந்த மூன்று கழஞ்சுப் பொன்னைத் தந்து உழைத்த தச்சர்கள் ஊதியம் பெறத் துணையானார்.

மருதாண்டாருக்கு நல்லமங்கை என்ற பெயரில் ஒரு பெண் இருந்தார். அவருக்குத் திடீரெனக் கண்பார்வை மங்கிப் பார்வையிழப்பு நேர்ந்தது. மகளின் பார்வையிழப்பால் உளம் சோர்ந்த மருதாண்டார் அகத்தீசுவரரிடம் முறையிட, இறையருளால் நல்லமங்கை பார்வை பெற்றதாகவும் அந்த மகிழ்வைக் கொண்டாட, மருதாண்டார் ஒரு கழஞ்சுப் பொன்னில் தங்கப்பட்டம் செய்து பெருங்குடி இறைவனுக்கு வழங்கியதாகவும் கோயிலில் பதிவாகியுள்ள கல்வெட்டுக் கூறுகிறது.

பல்லவ மன்னரான தந்திவர்மர் காலத்தில் குவாவன் சாத்தன் எனும் முத்தரையரால் மலையடிப்பட்டியில் குடையப்பெற்ற ஆலத்தூர்த் தளி சிறப்புக்குரிய குடைவரைக் கோயிலாகும். தமிழ்நாட்டின் மிகப் பழைமையான எழுவர்அன்னையர் சிற்பத்தொகுதிகளுள் ஒன்று இங்குள்ளது. வாகீசுவரர் கோயிலாகவும் கல்வெட்டொன்றால் அறியப்படும் இத்தளியில், வெகுதானிய ஆண்டு, தைத்திங்கள் 11ஆம் நாளில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, ஆவுடையாதேவன் என்பாருக்கு நேர்ந்த பார்வையிழப்பைப் பதிவுசெய்துள்ளது.

ஆலத்தூர்த் தளி

பூச்சிக்குடியைச் சேர்ந்தவர் ஆவுடையாதேவன். அவருக்கும் சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருநெடுங்களத்து விலைமாது ஒருவருக்கும் உறவிருந்தது. தேவன் அப்பெண்ணின் இல்லத்தில் தங்கியிருக்கையில், அப்பெண்மணி பிராமணர் ஒருவரையும் வரச்செய்து உறவாக்கிக் கொண்டமை ஆவுடையாதேவனைச் சினமுறச் செய்தது. உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத ஆவுடையான் இருவரையும் வெட்டிக் கொன்றார். பின் அங்கிருந்து மலையடிப்பட்டிக்கு வருகையில் அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வையிழப்பு நேர்கிறது.

தம் கொலைச்செயலுக்கு நேர்ந்த தண்டனையோ இது என்று உளம் மருகிய ஆவுடையான், பார்வை மீண்டால் தம் வயலை வாகீசுவர சுவாமிக்கு அளிப்பதாக வேண்டிக்கொள்ள, பார்வை திரும்பக் கிடைக்கிறது. இழந்த பார்வை மீளப்பெற்ற மகிழ்வில் தம் காணியான குடிகாட்டை வாகீசுவரருக்கு எழுதித் தந்த ஆவுடையான், அதை ஆலத்தூர்த் தளியில் கல்வெட்டாகவும் பொறிக்கச் செய்தார்.

சுந்தரர், நல்லமங்கை, ஆவுடையாதேவன் இம்மூவருக்குமே திடீரெனப் பார்வையிழப்பு நேர்ந்து சிறிது காலத்தில் அது மீளக்கிடைக்கிறது. சுந்தரர் நிகழ்வைக் கதையென்று ஒதுக்குவாருக்குப் பெருங்குடி, மலையப்பட்டிக் கல்வெட்டுகள் அது வரலாறாக இருக்க வாய்ப்புண்டு என்பதைக் கண்முன் காட்சியாக நிறுவுகின்றன.

கண்மருத்துவத்தில் அமோரோஸிஸ் பியுகாக்ஸ் (Amaurosis Fugax) என்றொரு நிலை பேசப்படுகிறது. பார்வைத்திரையாகப் பார்க்கப்படும் ரெட்டினாவுக்குத் திடீரென ஏற்படும் இரத்தஓட்டக் குறைவினால் ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலோ நேரும் தற்காலிகப் பார்வையிழப்பு நிலையே அமோரோஸிஸ் பியுகாக்ஸ். இது சில நிமிடங்களில் சரியாகக்கூடியது என்றாலும், சிலருக்கு உள்ளிருக்கும் பிற நோய்களால் தொடரலாம். சுந்தரர், நல்லமங்கை, ஆவுடையாதேவன் மூவருக்கும் நேர்ந்த பார்வையிழப்பு இதனால்தானா என்பதை யாரறிவார்? ஆனால், இந்த மூன்று நிகழ்வுகளும் கதையல்ல, வரலாற்றின் பதிவுகள்.

பூதி ஆதித்தபிடாரி

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருந்தபோதும் பொது வெளிச்சத்திற்கு வராத பெண்ணரசிகள் பலராவர். அவர்களுள் பூதி ஆதித்தபிடாரி குறிப்பிடத்தக்கவர். ‘கொடும்பை’ என்று சிலப்பதிகாரத்தால் சுட்டப்படும் கொம்பாளூரையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டிருந்த வேளிர்மரபின் குலக்கொழுந்து இவர். முதற் பராந்தகர் சோழநாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாம் ஆண்டிலேயே கொடும்பாளூர் அரசர் மறவம்பூதியின் மகளாகவும் பராந்தகரின் மருமகளாகவும் அவரது புதல்வர்களுள் ஒருவரான அரிஞ்சயசோழரின் தேவியாகவும் கல்வெட்டு வெளிச்சம் பெறும் இவ்வம்மையே சிராப்பள்ளிக் குழித்தலைப் பெருவழியில் காவிரியின் தென்கரையிலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக்கிய பெருமைக்குரியவர்.

திருச்செந்துறைக் கோயில்

பல்லவ அரசரான முதல் மகேந்திரர் தாம் எழுப்பிய கோயில்களைக் கல்வெட்டுகளில் தம் கட்டுமானங்களாக அடையாளம் காட்டினாற் போலவே ஆதித்தபிடாரியும், இரண்டு தளங்கள் பெற்ற இறையகமும் அதன் முன் முகமண்டபமும் எனத் தம்மால் எழுப்பப்பெற்ற திருச்செந்துறைக் கோயிலை ‘நான் எடுப்பித்த கற்றளி’என்று கல்வெட்டுப் பொறித்து அடையாளப்படுத்தியுள்ளார். இத்தகு மொழிதல்கள் இல்லாமற் போனதால்தான் தமிழ்நாட்டுக் கோயில்கள் பல யாரால், எக்காலத்தே உருவாக்கப்பட்டன என்பதை அறியமுடியாதுள்ளது.

பொதுக்காலம் 910இல் பூதி ஆதித்தபிடாரியால் கற்றளியான இக்கோயிலில் 59 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள், ஏறத்தாழ நான்கில் ஒரு பங்குக் கல்வெட்டுகள் இக்கோயிலுக்கும் இங்குப் பணியாற்றிய ஊழியர்களுக்கும் அவ்வம்மை கருதிச் செய்த ஏற்பாடுகளைச் செவ்வனே பதிவு செய்துள்ளன. இறைவனுக்கான வழிபாடு, படையல்கள், மலர்த் தேவைகள், விளக்குகள் ஆகியவை எக்காலத்தும் குறைவின்றி அமையச் செந்துறை வாழ் மக்களிடமும் அவ்வூரை நிருவகித்த ஊராட்சியினரிடமும் பல நிலத்துண்டுகளை விலைக்குப் பெற்று கோயில் ஆட்சியரிடம் ஒப்புவித்ததுடன், உரிய வைப்புத்தொகையை ஊராட்சிக்குச் செலுத்தி அந்நிலத்துண்டுகளை வரியற்றவையாக்கியவர் இவ்வம்மை.

இறைவனுக்கு அளிக்கப்படும் நிலம் தேவதானமாகவும் வரி நீக்கப்பட்ட நிலையில் அது இறையிலித் தேவதானமாகவும் கல்வெட்டுகளில் சுட்டப்படுகிறது. இந்நில வாங்கல்-வழங்கல்களால் சோழர் கால நிலவிற்பனை, நிலஞ்சார் வரியினங்கள், ஆவண நடைமுறைகள் ஆகியவற்றை அறியமுடிவதுடன், ஆட்சியாளரின் வருவாய்த்துறைச் செயற்பாடுகளையும் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஒவ்வோர் ஆவணத்திலும் விற்கப்பட்ட நிலத்துண்டுகளின் நாற்றிசை எல்லைகளும் கூறப்படுவதால், சோழர் காலத்தில் நிலப்பகுதிகள் எப்படி அடையாளப்பட்டன, அவற்றின் பாசன-வடிகால் வசதிகள் எப்படியிருந்தன, ஊர்த்தெருக்களின் அமைப்பு என எண்ணற்ற தரவுகள் வரலாற்றுக்கு வரவாகின்றன.

ஆடற் சிற்பங்களுடன் கோயிலின் மேற்பகுதி

கொடும்பாளூர் இளவரசி எடுப்பித்த கோயில் என்பதால் கொடும்பாளூர்க் குடும்பமே இக்கோயிலில் ஈடுபாடு கொண்டிருந்தது. மறவம்பூதி, அவர் தேவி நக்கன் விக்கிரமகேசரி, மகன் பூதி ஆதித்தபிடாரன் அவர் மகன்களான ஆதித்தன் பூதி, ஆதித்தன் ஒற்றி எனப் பலரைக் கல்வெட்டுகள் அடையாளப்படுத்துகின்றன. தாங்கள் பிறந்த நட்சத்திரங்களில் திங்கள் தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப் பூதி ஆதித்தபிடாரரும் ஆதித்தன்பூதியும் நிலமளிக்க, தம் திருமணக் கொடையாக ஆதித்தன் ஒற்றி அளித்த நிலவிளைவால் 12 நந்தாவிளக்குகள் இக்கோயிலில் ஒளிர்ந்தன. ஆதித்தன் பூதி தம் மகனான பூதிபராந்தகனுக்கு முதற்சோறு ஊட்டிய நாளில் இக்கோயில் இறைவனுக்கு நான்கு வேலி நிலமளித்தார். அதன் விளைச்சல் ஒரு வேலிக்கு நூறு கலம் நெல்லாக இக்கோயில் செயற்பாடுகளுக்கு உதவியது.

கோயிலை எழுப்பிய ஆதித்தபிடாரி இறைவனையும் வழிபாட்டையும் பற்றி மட்டுமே சிந்தனை கொள்ளாது, கோயில் ஊழியர்களின் நலத்தையும் கருதிச் செயற்பட்டதைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. செந்துறைக் கோயிலில் உழைத்த பல்வகைப் பணியாளர்களுக்கும் வாழிடம் உருவாக்க விழைந்த அவ்வம்மை, அதற்காகவே ஊர்மக்களிடம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளை இணைத்துக் கோயிலருகே, ‘மடவிளாகம்’ ஒன்றை அமைத்தார்.

அக்காலத்தே கோயில் வழிபாடுகளின்போது பல்வேறு இசைக்கருவிகளை இயக்கிய கலைஞர்கள் உவச்சர்கள் என்றழைக்கப்பட்டனர். செந்துறையில்தோல், காற்று, நரம்பு, கஞ்சக் கருவிகளுடன் வாய்ப்பாட்டும் சேர்ந்தமையும் இசைப் பெருக்கை ஐம்பேரொலியாக எழுப்பிய கலைஞர்களுக்கு வாழ்வூதியமாக ஊரவையாரிடமிருந்து தாம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளைத் தட்டழிப்புறம் என்ற பெயரில் வழங்கி மகிழ்ந்தவர் ஆதித்தபிடாரி. சோழர் காலத்தில் ஐம்பேரொலியுடன் வழிபாடு நடைபெற்ற கோயில்கள் மிகச்சிலவே. அவற்றுள் செந்துறையும் ஒன்றென்னும் பெருமை ஆதித்தபிடாரியால் விளைந்தது.

ஆதித்தபிடாரியின் கல்வெட்டு

கோயிற் செயற்பாடுகளுக்காகவும் கோயிலில் ஒளியூட்டிய விளக்குகளுக்காகவும் திருவிழா முதலிய கொண்டாட்டங்களுக்காகவும் தம்மாலும் பிறராலும் ஊரவையாலும் கோயிலுக்கு அளிக்கப்பெற்றிருந்த நிலங்களை உழுது பயிரிட்டுக் கோயிலுக்கு வளம் சேர்த்த உழுகுடிகளையும் பிடாரி மறந்தாரில்லை. அவர்களுக்கு இல்லிருக்கை அமைக்கப் பல நிலத்துண்டுகளை விலைக்குப்பெற்று உதவியவர், அந்நிலங்களின் மீது பின்னாளில் உரிமைச் சிக்கல்கள் நேரிடக்கூடாது என்பதற்காகவே, ‘நான் பெற்ற பரிசே குடுத்தேன்’ என்று நிலத்தின் மீதான உரிமைகளையும் விலக்குகளையும் தெளிவுபடுத்திக் கல்வெட்டாக்கினார்.

கோயில் நிலங்களையும் ஊர் நிலங்களையும் பழுதின்றி அளக்கக் கோயில்களில் அந்நாளில் அளவுகோல்கள் வெட்டப்பட்டிருந்தன. சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் பலவற்றில் நன்செய், புன்செய் நிலங்களை அளக்கப் பயன்படுத்திய நில அளவுகோல்கள் எழுத்துப் பொறிப்புடனும் பொறிப்பின்றியும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் புகழ்வாய்ந்த இரண்டு அளவுகோல்களை இக்கோயிலில் அமைத்த பெருமை ஆதித்தபிடாரிக்கே உரியது. ‘இது குழிக்கோல்’ என்ற எழுத்துப் பொறிப்புடன் இறையகத் தாங்குதளத்தின் மேல் வெட்டப்பட்டுள்ள 90 செ.மீ. அளவுகோல் அரிதினும் அரிதான சோழர் காலப்பொறிப்பாகும். முகமண்டபத் தென்பகுதியில் இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடையில் வெட்டப்பட்டுள்ள 4 மீ.நீள அளவுகோலை அங்குள்ள எழுத்துப் பொறிப்பு ‘நிலமளந்தகோல்’ என்கிறது.

நிலமளந்தகோல்

ஒரு கோயிலில் வெட்டப்பட்டிருக்கும் அளவுகோலை மற்றொரு கோயிலிலுள்ள கல்வெட்டுக் குறிப்பது மிகமிக அரிதான செய்தியாகும். செந்துறையில் ஆதித்தபிடாரியின் காலத்தில் வெட்டப்பட்ட இக்கோல்களுள் ஒன்றான நிலமளந்தகோலை, செந்துறையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள அந்தநல்லூர் வடதீர்த்தநாதர் கோயில் கல்வெட்டொன்று சுட்டுகிறது. முதல் இராஜராஜரின் ஏழாம் ஆட்சியாண்டில்(பொ.கா.992) பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு, ‘திருச்செந்துறை ஸ்ரீவிமானத்து வெட்டிக்கிடக்கும் பெருங்கோலால்’ என்று இந்நிலமளந்த கோலைக் குறிக்கிறது. அல்லூர்ப் பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டொன்றும் இக்கோலை முதன்மைப்படுத்திப் பேசுகிறது.

ஆதித்தபிடாரியால் கற்றளியான இக்கோயிலின் தலமரமான பலாவும் இங்குள்ள கல்வெட்டொன்றில் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். இம்மரத்தின் கீழிருந்து கோயிலாரும் கொடையாளரும் சான்றாளர் முன்னிலையில் ஓர் அறக்கட்டளை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டதை இக்கல்வெட்டு வழி அறியநேர்கையில் தலமரங்களுக்கு மக்கள் அளித்த பெருமையை உணரமுடிகிறது.

தமிழ்நாட்டில் பல பெண்ணரசிகள் கோயில்கள் எடுத்துப் புகழ் வளர்த்திருந்தாலும் நங்கை பூதி ஆதித்தபிடாரி வரலாற்றில் அழுந்தப் பதிவாவது கோயிற்குடிகளின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறையால்தான். அளவில் சிறியதாக இருந்தாலும் அழகுணர்ச்சியுடன் எடுக்கப் பெற்றிருக்கும் செந்துறைக் கோயில் சோழர் காலப் பொருளாதாரம், சமூக நடைமுறைகள், கலைகள் சார்ந்து கல்வெட்டுகளும் சிற்பங்களும் கொண்டு பொலிவது நங்கை பூதி ஆதித்தபிடாரியின் பெயரைக் காலங்கடந்தும் வாழவைக்கும்.

இராவணப் பதிவுகள்

இரா. கலைக்கோவன்

இராமாயணத்தின் தலைநாயகர்களுள் இராவணனும் ஒருவர். தமிழிலக்கிய வரலாற்றில் இராவணனை முதன்முதலாக அடையாளப்படுத்துவது கலித்தொகையே. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக அறியப்பட்டாலும் காலத்தால் அதுவும் பரிபாடலும் பிற்பட்டவை என்பது அறிஞர் முடிபு. கலித்தொகை சுட்டும் மிகச் சிலவான சிவக்கோலங்களில், இராவணன் கயிலையை அகற்ற முயன்றபோது அம்மலையில் உமையுடன் இருந்த சிவபெருமானின் திருவடிவமும் ஒன்றாகும். இராவணன் யார், அவர் ஏன் கயிலைமலையை அகற்ற முயன்றார், அம்முயற்சியின் விளைவுகள் எப்படியிருந்தன என்ற கேள்விகளுக்கெல்லாம் கலித்தொகையில் விடையில்லை. தேவாரமூவரில் காலத்தால் மூத்த அப்பர் பெருமானும் சம்பந்தருமே தங்கள் பதிகங்களில் இவ்வினாக்களுக்கான விரிவான விளக்கங்களைத் தருகின்றனர். என்றாலும், சம்பந்தரினும் அப்பர் பெருந்தகையே கயிலை அசைத்த இராவண வாழ்க்கையைப் படக்காட்சிகளெனப் புலப்படுத்தி மகிழ்கிறார்.

அப்பரின் பதிக இராவணன்

கடலால் சூழப்பெற்ற தென்னிலங்கை வேந்தர், பெருவீரர், குபேரனை வென்று புட்பகம் பெற்றவர் என்றெல்லாம் இராவணனைப் பெருமைப்படுத்தும் அப்பர், ‘அரக்கன்’ என்ற அடையாளத்தையும் முத்திரையாகப் பொறிக்கத் தவறவில்லை. அப்பரின் திருமுறைகளை அடியொற்றிப் பின்பற்றினால் இராவணன் கதையை பெருமளவிற்கு அறியமுடியும்.

தன் தேரில் உலாவந்த இராவணனின் வழியில் கயிலைமலை குறுக்கிட்டது. ‘கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது’ என்று தேர்ப்பாகன் கூற, அது கேளாது இராவணன் வீரமொழி பேசிப் பாகனை முடுக்க, தேர் கயிலை நெருங்கி நின்றது. வழித்தடையாகும் அம்மலையைப் பெயர்த்து அகற்றக் கருதித் தேரிலிருந்து இறங்கிய இராவணன், தம் இருபது கைகளாலும் மலையைப் பற்றி அசைத்தார். மலை அசைவதும் ஆடுவதும் உணர்ந்த கயிலை வாழ் முனிவர்களும் இறைவனின் பூதப்படையும் நடுக்குற, உமையும் அஞ்சியது கண்ட சிவபெருமான் தம் கால்விரலை அழுத்தி ஊன்றினார்.

இராவணனின் துன்பம்

கைகளாலும் தோள்களாலும் கயிலைமலையைத் தூக்க முயன்ற இராவணன் சிவபெருமான் தந்த அழுத்தம் தாங்காது, கைகளும் தோள்களும் தலைகளும் நசுக்குறக் கண்களில் குருதி கசிய அலறித் துவண்டார். இராவணனின் இந்தத் துன்பநிலையை அப்பர் போலவே சம்பந்தரும் பலபட விரித்துரைக்கிறார். ‘அலறித் துடித்தான், வாய்விட்டு அலறினான், மிகக் கடுத்து அலறி வீழ்ந்தான், இறையருள் கேட்டு மன்றாடினான்’ என்றெல்லாம் இராவணன் துன்பம் காட்டும் பாடலடிகள், இறைவனிடம் அவன் மன்றாடியதையும் சொல்கின்றன.

இராவணன் என்ற பெயர்

நரம்பையே வீணையிழையாக்கிய இராவணன், முக்தேசுவரம்

இழைத்த தவறுக்கு வருந்தி அழுத இராவணனைப் பொறுத்தருளும் முன், அவர் இசைவளம் கேட்க இறைவன் உளம் கொண்டார். அதை அறிந்தவராய் இறைவனைப் பாடிப் பரவிய இராவணன் தம் கை நரம்புகளையே வீணை இழைகளாகக் கொண்டு இருக்கிசைப் பாடல்களும் வேதகீதங்களும் இசைத்ததாகவும் இராவணனின் பண்திறம் கேட்டுகந்த இறைவன், அதுவரை வாளரக்கன் என்றே அறியப்பட்டிருந்த அவருக்கு இராவணன் என்ற பெயரைத் தந்ததுடன் நெடிது வாழும் சிறப்பையும் தம் கொற்றவாளையும் தந்து வாழ்த்தியனுப்பியதாகவும் அப்பரின் பதிகப் பாடல்கள் தெளிவுறத் தெரிவிக்கின்றன.

பல்லவ இராவணச் சிற்பங்கள்

மலை அசைத்த இராவணன், முக்தேசுவரம்

கலித்தொகை ஐந்து அடிகளில் குறிப்பாய்ச் சுட்டும் இராவணத் தொன்மம் பதிகக் காலத்தில் பலபட விரிந்து பாடலடிகளாய் மலர்ந்து பொதுக்காலம் எட்டாம் நூற்றாண்டில் சிற்பக்காட்சிகளாய்த் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள் நுழைந்தது. பல்லவர் பகுதியான தொண்டைநாட்டில் இத்தொன்மத்தை மக்கள் பார்வைக்குக் காட்சியாக்கிய பெருமைக்குரியவர் இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மப் பல்லவர். அவர் உருவாக்கிய கற்றளிகளில் முக, அகமண்டபக் காட்சியாகவோ, சுவர்க் கோட்டப் படப்பிடிப்பாகவோ இராவணன் கயிலையை அசைக்கும் முயற்சி பேரளவுச் சிற்பமாகப் பொலிந்தது. அப்பர் பதிகங்களின் விளக்கம் போலவே அமைந்த அவற்றில், சிவபெருமான் உமை இணையுடன், மலைவாழ் பூதங்கள், அடியவர்களின் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. மலையின் முன் ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில் மலையசைக்கும் முயற்சியுடன் இராவணனைக் காணமுடிகிறது. காஞ்சிபுரம் முக்தேசுவரத்தில் மட்டும் முகமண்டபத் தென்சுவரில் இராவணன் மலையசைப்பதும் வடசுவரில் அவர் கைநரம்புகளை மீட்டிப் பண்திறல் காட்டுவதும் படமாகியுள்ளன.

பரங்குன்றத்து இராவணத் தொடர்

ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில் பாண்டியர் பகுதியிலும் இராவணத் தொன்மம் முத்திரை பதித்தது. மதுரைக்கு அருகிலுள்ள பரங்குன்றத்தின் வடக்கு வளாகத்தில், குன்றின் இடைப்பகுதியில், அன்னபூரணித் திருமுன்னின் வலப்புறம் ‘இருட்டுக்கொட்டகை’ என்றழைக்கப்படும் பாறைப்பகுதி உள்ளது. மேற்றளக் கருவறைகள், முருகன், பிள்ளையார் திருமுன்களின் திருமஞ்சண நீர் வெளியேறும் வழியாக உள்ள இந்தக் கொட்டகையின் உட்புறத்தேதான் குன்றின் சரிவுப்பகுதியில் இராவண வரலாறு தொடர்கதை போலக் கிழக்கிலிருந்து மேற்காகச் சிற்பப் பொளிவுகளின் துணையுடன் சொல்லப்பட்டுள்ளது.

அலறும் இராவணன், பரங்குன்றம்

பின்னாளில் நேர்ந்த கட்டமைப்பு மாற்றங்களால் எழிலார்ந்த இந்தச் சிற்பத்தொடர் பல நிலைகளில் மறைக்கப்பட்டிருந்தாலும், இறைவன் கால்விரல் அழுத்தத்தால் மலையின் கீழ் நசுக்குண்டு இராவணன் வாய்விட்டு அலறும் காட்சி, பாண்டியர் கைநேர்த்தியில், அப்பர் பாடலடிகளை அப்படியே கண் முன் நிறுத்துகிறது. இராவணனின் வலப்புறத்தும் இடப்புறத்தும் அவனை எதிர்க்கும் பேரளவிலான கயிலைப் பூதங்கள். தமிழ்நாட்டின் வேறெந்தப்பகுதியிலும் இராவணத்தொன்மத்தில் இத்தகு வீரப்பூதங்களைக் காணக்கூடவில்லை. உருள்பெருந்தடி, கேடயம், ஈட்டி, வில், அம்பு, கல் என அக்காலத்திய அனைத்துவிதமான போர்க்கருவிகளையும் ஏந்திப் பெருவீரத்துடன் இராவணனைக் குறிபார்க்கும் பரங்குன்றப் பூதங்கள் பேரெழிலின.

தேரும் வாளும்

தேரில் இராவணன், பரங்குன்றம்

இறைவனைத் தம் இசையால் மகிழ்வித்த இராவணனுக்கு வாளும் வாழ்நாளும் பெயரும் அளித்துகந்த இறைவனை இங்குக் காணமுடியவில்லை என்றாலும், இறையருள் பெற்ற இராவணன் தேரில் செல்லும் காட்சி தென்முகப் பாறையில் ஒளிர்கிறது. இடக்கையை மார்பருகே கொண்டு வலக்கையால் இறைவனைப் போற்றியவாறே செல்லும் இராவணனின் தேருக்குள் இறைவனளித்த கொற்ற வாளையும் மறக்காமல் காட்டியிருக்கிறார் பாண்டியச் சிற்பி. இராவணனுக்கு இந்தத் தேரையும் இறைவனே அளித்ததாக சம்பந்தரின் பதிகம் ஒன்று கண்சிமிட்டுகிறது.

சோழப் பதிவு

சோழர் பதிவு, திருப்பூந்துருத்தி

பத்திமைக் காலத்திற்குப் பின் வந்த ஆகமங்கள் இந்தத் தொன்மத்தைச் சில பல வேறுபாடுகளுடன் பதிவுசெய்து, இராவணனுக்கு அருளியவராய் சிவபெருமானைப் போற்றுகின்றன. பல்லவ, பாண்டியர்களைத் தொடர்ந்த சோழர்களும் இந்தத் தொன்மத்தைக் கைவிடவில்லை. பேரளவுச் சிற்பங்களாய் இல்லாவிடினும் சிற்றுருவச் சிற்பங்களாய் இராவண அருளராய் சிவபெருமான் சோழர்களால் தொடர்ந்து அடையாளப்பட்டார்.

சோழர் பதிவுகளில் சற்றே மாறுபட்ட இராவண அருள் மூர்த்தி வடிவத்தைத் திருப்பூந்துருத்திக் கோபுரத்தில் காணமுடிகிறது. இங்கு இராவணனை விரட்டப் புதிய முயற்சியொன்றில் பூதமொன்று ஈடுபட்டதைக் காட்டியுள்ளனர். இந்தியாவின் வடபகுதிகளில் காணப்படும் பெரும்பாலான இராவண அருள்மூர்த்தி சிற்பங்களில் பூதங்கள் இரண்டு இராவணனின் இருபுறத்தும் குனிந்து நின்று தம் வயிற்றுக்காற்றைப் பின்வழி வெளியேற்றி அவனைத் திக்குமுக்காடச் செய்வதைக் காணமுடிகிறது. பூந்துருத்திச் சிற்பத்தொகுதியின் மேற்பகுதியிலோ இராவணனுக்காய்த் திரும்பி நிற்கும் பூதமொன்று காற்றுக்குப் பதில் வயிற்றுக் கழிவை வெளித்தள்ளித் தன் வெறுப்பையும் சினத்தையும் புலப்படுத்துகிறது.

கலித்தொகைத் தொன்மம் ஒன்று பத்திமைக் காலத்தில் பதிக வாழ்க்கை பெற்றுப் பேரரசுக் காலங்களில் சிற்பங்களாகப் பதிவாகி, சிவபெருமானின் அருள்பெற்ற தென்னிலங்கை இராவணனை மக்கள் உள்ளங்களில் நிலைபேறு கொள்ளச் செய்துள்ளமை கலையும் இலக்கியமும் கையிணைக்கும்போது நிகழும் பேரதிசயங்களுள் ஒன்றெனலாம்.