வீரநாராயணச்சேரி

மு. நளினி, இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டில் இதுநாள்வரை கிடைத்துள்ள செப்பேடுகளில் பெரும்பான்மையன பிராமணர்களுக்கோ, சமயஞ் சார்ந்த கோயில், மடம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கோ, நிலம் அல்லது ஊரை அரசர்கள் கொடையளித்த செய்திகளையே கொண்டுள்ளன. ‘தானப்பத்திரமாக’ விளங்கும் இத்தகு ஆவணம் வரலாற்றுக்கு எப்படி உதவமுடியும் என்ற கேள்வி மிக இயல்பானது. அந்தக் கேள்விக்கு விடை சொல்வதென்றால், ஏதேனும் ஒரு செப்பேட்டுடன் உறவாடவேண்டும். சோழர் செப்பேடுகளில் காலத்தால் பழைமையானதும் எளிய அமைப்பினதுமான உதயேந்திரம் செப்பேடுகள் இதற்கு உதவக்கூடும்.

முதல் பராந்தகரின் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

சோழ அரசமரபு

பழஞ்செப்பேடுகளுள் பெரும்பாலன இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன. சமஸ்கிருத சுலோகங்களால் எழுதப்பெற்ற முதற்பகுதி கொடையளிக்கும் அரசரின் மரபுவழி பேசுவதால் சிறப்புப் பெறுகிறது. அந்த மரபுவழியில் தேவர்கள், புராண அரசர்கள், இலக்கிய அரசர்கள் என நீளும் பட்டியலின் இறுதியில் வரலாற்று அரசர்களும் உள்ளனர்.

முதல் பராந்தக சோழரால் வழங்கப்பெற்ற உதயேந்திரம் செப்பேட்டின் மரபுவழிப் பட்டியலில் புராண அரசர்களாகச் சிபி உள்ளிட்ட மூவரும் இலக்கிய வழி அரசர்களாகக் கோக்கிள்ளி, கரிகாலர், கோச்செங்கணான் ஆகியோரும் இடம்பெற, வரலாற்று அரசர்களாகப் பராந்தகரின் பாட்டனார் விஜயாலயரும் தந்தை ஆதித்தரும் சுட்டப் பெற்றுள்ளனர்.

பராந்தகருக்கு முற்பட்ட கால இலக்கியங்கள் பேசும் சோழ அரசர்களுள் மூவரை மட்டுமே இச்செப்பேடு குறிப்பதால் சோழமரபு இம்மூவரையும் பெருமையுற நினைத்தமை உணரப்படும். பத்துப்பாட்டு இலக்கியங்களில் பட்டினப் பாலையும் மலைபடுகடாமும் கரிகாலரை முன்னிட்டு எழுந்தவை. கோச்செங்கணானோ அப்பர், சம்பந்தர், மங்கையாழ்வார் எனத் தமிழ்நாட்டின் இரு பெருஞ் சமயப் பதிக ஆசான்களால் புகழப்பட்டவர். மாடக்கோயில் எனும் புதிய கலைஉத்தியைத் தமிழ் மண்ணில் அறிமுகப்படுத்திய மாபெரும் கலைஞர். சோழர்கள் வெளியிட்ட வேறு சில செப்பேடுகளும் இம்மன்னர்களைக் குறிப்பது இங்கு நினைக்கத்தக்கது.

முதல் பராந்தகர்

மிக எளிய செப்பேடு என்பதால், வரலாற்று அரசர்களில் பராந்தகரைக் குறித்து மட்டுமே உதயேந்திரம் சில பயனுள்ள தரவுகளைப் பதிவுசெய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவையாக அவர் கோயில்களை எடுத்தமை, கேரள அரசர் மகளை மணந்தமை, இரண்டு பாண அரசர்களை வென்றமை, பாண்டிய அரசர் இராஜசிம்மனையும் அவருக்குத் துணையாக வந்த இலங்கைப் படையையும் தோற்கடித்து சங்கிராமராகவன் எனும் சிறப்புப் பெயர் ஏற்றமை ஆகியவற்றைக் குறிக்கலாம். இந்நான்கனுள், இடையிலுள்ள இரண்டு செய்திகளும் வேறெந்தச் சோழர் செப்பேட்டிலும் இடம்பெறாதவை. பராந்தகர் மணந்த கேரள அரசரின் மகளாக அருமொழிநங்கையையும் அவர் தந்தையாகப் பழுவேட்டரைய அரசர் குமரன் மறவனையும் கல்வெட்டுகளின் அடிப்படையில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் அடையாளப்படுத்தியுள்ளது. பராந்தகர் வென்ற பாண அரசர்களாக இரண்டாம் விக்கிரமாதித்தனையும் மூன்றாம் விஜயாதித்தனையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

கேட்டவரும் தந்தவரும்

உதயேந்திரம் செப்பேடு சோழ அரசமரபுடன் கங்கர்களைப் பற்றியும் விரித்துரைக்கிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது. உதயேந்திரச் சதுர்வேதிமங்கலத்தில் வாழ்ந்த பிராமணர்களுக்கு நிலத்துண்டுகளை உரிமையாக்கக் கருதி, அதற்கான கொடை வேண்டிப் பராந்தகரிடம் விண்ணப்பித்தவர் இந்த கங்க மரபில் தோன்றிய இரண்டாம் பிருதிவிபதி. அவர் கேட்டதால்தான் பராந்தகர் இக்கொடையில் ஈடுபட்டார்.

படுவூர்க் கோட்டத்தின் மேல்அடையாறு நாட்டிலிருந்த கடைக்கோட்டூரைக் கொடையாக வழங்கிய பராந்தகர், அதை உதயசந்திரமங்கலத்தோடு இணைத்து ஓரூராக்கி வீரநாராயணச்சேரி எனப் பெயரிட்டு, பிராமணர்களுக்கான இடமாக, பிரமதேயமாக்குமாறு தம் 15ஆம் ஆட்சியாண்டில், அதாவது, பொதுக்காலம் 922இல் உத்தரவிட அடித்தளம் இட்டவர் இரண்டாம் பிருதிவிபதி. அதனால்தான், அவரைப் பற்றியும் அவர் மரபு பற்றியும் விரிவாகப் பேசுகிறது செப்பேடு.

முதல் பராந்தகரின் அல்லூர் பசுபதீசுவரர் கோயில்

கங்க மரபு

கங்கப் பரம்பரையின் முதல் அரசர் தொடங்கிக் கருநாடக மாநிலம் கோலாரில் நிகழ்ந்த முடிசூட்டைக் காட்டி, அவ்வழியில் வந்த சிறந்த வீரரான முதலாம் பிருதிவிபதியை முன்னிருத்துகிறது செப்பேடு. அந்த இடத்தில்தான் தமிழ்நாட்டின் புகழ்வாய்ந்த போர்க்களங்களுள் ஒன்றான திருப்புறம்பியம் பேசப்படுகிறது. அப்போரில் தம்மை எதிர்த்து வந்த பாண்டிய அரசர் வரகுணரைப் பல்லவ வேந்தர் அபராஜிதர் எதிர்கொண்டார். அவருக்குத் துணையாகப் போரிட்டுக் களத்தில் உயிரிழந்தவர் முதல் பிருதிவிபதி. அவரது பெருமைக்குரிய பெயரர்தான் உதயேந்திரம் செப்பேடு உருவாகக் காரணமான இரண்டாம் பிருதிவிபதி. அவரது போர்த்திறமும் வீரமும் பாராட்டியே அவருக்குப் பராந்தகர், ‘மாவலிவாணராயர்’ பட்டமளித்துச் சிறப்பித்ததாகச் செப்பேடு கூறுகிறது.

திருவடி சூட்டியவர்

கடைக்கோட்டூரில் இரண்டு நிலத்துண்டுகள் ஏற்கனவே திகம்பர சமணர்களுக்குத் தரப்பட்டிருந்தமையால் அவற்றை நீக்கி, எஞ்சிய ஊர்ப்பகுதியே பிரமதேயமாக்கப்பட்டது. இந்த அறச்செயலை எதிர்கால அரசர்கள் காக்கவேண்டிடும் பராந்தகரைக் குறிக்கும் செப்பேடு, அவர் சிவபெருமானின் திருவடிகளைத் தம் தலையில் சூடியவர் என்று பெருமை பேசுகிறது.

இது போல் சிவபெருமானின் திருவடிகளைத் தலையில் சூடியவராகக் கல்வெட்டு வழித் தம்மை அறிவித்துக்கொண்ட முதல் தமிழ்நாட்டு மன்னராகப் பல்லவ அரசர் இராஜசிம்மரைக் குறிக்கலாம். ‘சிவசூடாமணி’ என்றே சிறப்புப் பெயர் கொண்டிருந்தவர் அவர். ‘இடைவிடாத ஈடுபாட்டால் புனிதப்படுத்தப்பட்ட தம் தலையில் சிவபெருமானின் திருவடிகளைச் சூடியவர்’ என்று அவரது பனைமலைக் கல்வெட்டு அவரைக் கொண்டாடுகிறது.

சோழமரபில் பராந்தகரைத் தொடர்ந்து சிவபெருமானின் திருவடிகளைத் தலையில் அணிந்தவராக அறியப்படும் முதலாம் இராஜராஜர், சிவபாதசேகரன் என்றே தம்மை அழைத்துக் கொண்டவர். அத்திருப்பெயரில் சிவபாதசேகர மங்கலம் என்று ஓர் ஊரே விளங்கியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர் மகன் இராஜேந்திரனோ தம்மை சிவசரணசேகரனாகக் காட்சிப்படுத்தி மகிழ்ந்தவர்.

வீரநாராயணச்சேரி

உதயேந்திரம் செப்பேட்டின் வடமொழிப்பகுதி, கடைக்கோட்டூர் என்ற பெயருள்ள பூமியை உதயசந்திரச் சதுர்வேதிமங்கலத்திற்கு அரசர் தானமாக அளித்தார் என்று கூற, தமிழ்ப்பகுதி, பெருமானடிகள் பெயரால் கடைக்கோட்டூர் வீரநாராயணச்சேரி என்ற பிரமதேயமாய் வழங்கப்பட்டதாகச் சொல்கிறது. வீரநாராயணன் பராந்தகரின் விருதுப் பெயர்களுள் ஒன்று என்பதும் அப்பெயரிலேயே இப்போது வீராணம் என்றழைக்கப்படும் வீரநாராயணன் ஏரி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

எல்லைகள்

வீரநாராயணச்சேரியின் எல்லைகளைச் சுட்டுகையில் பாலாறு, விண்ணமங்கலத் தெற்றேறி, விண்ணப்புலியன் ஏரி, கங்காயன் ஏரி, வயிர வாய்க்கால், சிராங்குட்டை, சிற்றறியூர், மலை, முப்பெண்டிர் குறுக்கு, மொட்டைக் குறுக்கு, குதிரை வடி, அதியமான் முண்டை, பிடாம்புழை, எருமைச்சரி, ஆலந்தொட்டை மேடு, கல்லாலிஒட்டை, கற்குறும்பு, வேம்பு-ஆலம்-மருதம்-எட்டி-துரிஞ்சில்-தணக்கு முதலிய மரங்கள் ஆகியன வெளிப்படுகின்றன. திசை விளக்கிச் சொல்லப்படும் இந்த எல்லை வண்ணிப்பு ஒரு கிராமத்தின் வரைபடத்தையே நமக்குத் தந்துவிடுகிறது.

அறையோலையும் ஆவணமும்

அரசாணை கிடைக்கப்பெற்ற படுவூர்க் கோட்டத்து சபையார், கடைக்கோட்டூர் எல்லைகளை வரையறுத்து அவற்றை அடையாளப்படுத்தக் கல்லும் கள்ளியும் நட்டுச் செய்தியை மக்கள் அறியுமாறு அறையோலை செய்ய, மாவலிவாணராயனான இரண்டாம் பிருதிவிபதி அதைச் செப்பேட்டு ஆவணமாக்கி ஊரைப் பெற்ற பிராமணர்களுக்கு உரிமையாக்கி மகிழ்ந்தார்.

கங்க மன்னர் வேண்டுகோள் ஏற்றுச் சோழ மன்னர் வழங்கிய ஒரே பிரமதேயக் கொடை இதுதான் என்பதாலும் பல அரிய வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாலும் உதயேந்திரம் செப்பேடு சிறப்புப் பெறுகிறது.

மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்

செங்கல், கருங்கல், மணற்கல் இவற்றுள் ஏதேனும் ஒன்றையோ, இரண்டையோ கலந்து அடுக்கிக் கட்டப்பட்டுள்ள கட்டுத் தளிகளே தமிழ்நாட்டில் மிகுதியாகக் காணப்படுகின்றன. கட்டுத்தளிகள் நிலத்திலோ, பாறை அல்லது குன்றுகளின் மீதோ அமைக்கப்பட்டன. இவ்விரு நிலைகளில் இருந்தும் வேறுபட்டுத் தளம் ஒன்றின்மீது அமைக்கப்பட்ட விமானங்களையே மாடக்கோயில்கள் என்கிறோம்.

டாக்டர் இரா. கலைக்கோவன்

புரட்சிக் கலைஞர் கோச்செங்கணான்

இரா. கலைக்கோவன்

‘பொதுவான இல்லம்’ எனும் பொருளில் அமைந்த பொதியில் என்ற சொல் சங்ககால இறையகங்களைக் குறிக்கும். எழுதணி கடவுளுடன் பொதியில், கந்துடைப் பொதியில், மண்டகப் பொதியில் முதலிய சங்க இலக்கியச் சொல்வழக்குகளும், ‘இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென’, ‘மரஞ்சோர் மாடம்’ எனும் சங்கத் தொடர்களும் அந்த இறையகங்களின் கட்டுமான அமைப்பைக் கண்முன் நிறுத்துகின்றன. நகர் என்றும் அழைக்கப்பட்ட அவற்றின் காலநிரலான அமைப்பு மாற்றங்களையும் அதற்கேற்ப உருவான பெயர்களையும் கோட்டம், கோயில் உள்ளிட்ட சிலப்பதிகாரச் சொல்வழக்குகளால் அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் இடம்பெறாத இறையகச் சொல்வழக்கொன்றைப் பத்திமை இலக்கியங்கள் முன்வைக்கின்றன. ‘மாடக்கோயில்’ என்ற அந்தச் சொல்லைக் கோச்செங்கணான் என்ற சோழவேந்தருடன் இணைத்துப் பேசும் பாங்கை மங்கையாழ்வாரின் திருநறையூர்ப் பாசுரத்திலும் ஞானசம்பந்தரின் வைகல் பதிகத்திலும் காணமுடிகிறது. அதைப் பெருங்கோயில் என்றும் அறிமுகப்படுத்துவார் சம்பந்தர். இத்தகு கோயில்கள் எழுபது இருந்ததாகவும் அவற்றைக் கட்டமைத்தவர் திருக்குலத்து வளச்சோழரான கோச்செங்கணானே என்றும் மங்கையாழ்வார் உறுதிபடப் பாடியுள்ளார். தம் காலத்தே தமிழ்நாட்டிலிருந்த கோயில் கட்டமைப்பு வகைகளைச் சுட்டுமிடத்து அவற்றைப் பெயரளவில் மட்டுமே குறிப்பிடும் அப்பர் பெருமான் அவற்றுள் ஒன்றான பெருங்கோயிலை மட்டும் எழுபத்தெட்டு என்று எண்ணிக்கையுடன் சொல்வார்.

குடவாயில்

கோச்செங்கணான் எனும் சோழஅரசரின் பெருவீரம் மங்கையாழ்வாரின் திருநறையூர்ப் பாசுரத்தில் பலபடப் பேசப்பட்டுள்ளது. வெண்ணியில் விறல் மன்னரையும் விளந்தையில் அதன் வேளையும் அழுந்தையில் படை மன்னர்களையும் போரில் வெற்றிகண்டு உலகமாண்ட தென்னாடராகக் கோச்செங்கணானைப் பாடிப் பரவுகிறார் மங்கையாழ்வார். இம்மன்னன் மீது பொய்கையாழ்வாரால் பாடப்பெற்ற களவழிநாற்பது எனும் கீழ்க்கணக்கு நூலொன்றும் மன்னரின் வீரம், அவருக்கும் சேர அரசர் ஒருவருக்கும் நிகழ்ந்த போர், அப்போரில் சேரஅரசர் உயிரிழந்தமை முதலிய பல வரலாற்றுத் தரவுகளை முன்வைக்கிறது.

சோழர் காலச் செப்பேடுகள் சிலவற்றில் சோழர் மரபுவழி கூறுமிடத்துச் சுட்டப்படும் இக்கோச்செங்கணானின் காலம் குறித்துப் பல கருத்துகள் முன்வைக்கப் பட்டாலும் நெடிய ஆய்வுகளுக்குப் பின் டாக்டர் மா. இராசமாணிக்கனார் செங்கணான் காலத்தைப் பொதுக்காலம் 5ஆம் நூற்றாண்டாகச் சுட்டியுள்ளமை பொருந்துவதாகவே உள்ளது.

பெருவேளூர்

சைவம், வைணவம் எனும் இருவேறு சமயஞ்சார் இலக்கியச் சான்றுகளால் கோச்செங்கணானோடு தொடர்புபடுத்தப்படும் மாடக்கோயில்கள் கட்டமைப்பில் புதியவை. அதனாலேயே, எத்தனையோ கோயில்களைப் பாடியுள்ள தேவார மூவரில் இருவரும் மங்கையாழ்வாரும் மாடக்கோயில்களைப் பாடுமிடத்து அவற்றை எழுப்பியவரையும் மறவாது அடையாளப்படுத்தியுள்ளனர். அதுநாள்வரை இருந்த கட்டமைப்புகளிலிருந்து மாடக்கோயில் மாறுபட்டு அமைந்ததாலேயே அதற்குப் புதிய பெயரும் கிடைத்தது. அதைக் கட்டியவருக்குப் பாடல் புகழும் அமைந்தது.

தமிழ்நாட்டில் இன்றும் பார்வைக்குக் கிடைக்கும் இம்மாடக்கோயில்களில் பெரும்பாலன நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலேயே அமைந்துள்ளன. அவற்றைக் கண்டறிந்து விரிவான அளவில் ஆய்வுசெய்து, ‘மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள்’ என்றொரு நூலையும் வெளியிட்டுள்ள டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்ற இறையகமே மாடக்கோயில் என்று வரையறை செய்துள்ளனர்.

தலைஞாயிறு

தளம் என்பது கட்டுமானஞ் சார்ந்த கலைச்சொல். இது தாங்குதளம், சுவர், கூரை எனும் மூன்று உறுப்புகள் கொண்ட அமைப்பாகும். இத்தளம் ஒரு மேடை போல, உள்ளீடின்றி அமையும்போது வெற்றுத்தளமாகிறது. இறையகங்கள் பொதுவாக நிலத்திலோ, பாறை அல்லது குன்றுகளின் மீதோ அமையுமாறு போல, மாடக்கோயில்கள் மூன்று உறுப்புகள் பெற்ற வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்றன. இந்த வெற்றுத்தளமே பிற கோயில் வகைகளிலிருந்து மாடக்கோயிலை வேறுபடுத்தி அதைப் பெருங்கோயிலாகவும் வடிவமைத்தது. வெற்றுத்தளத்தின் உயரமும் கட்டமைப்புத் திறனும் கோயிலுக்குக் கோயில் மாறுபட்டாலும், அதன் மீதிருக்கும் இறையகத்தை அடைய அனைத்து மாடக்கோயில்களும் படிவரிசை பெற்றுள்ளன. இப்படிவரிசையின் அமைப்பு, உயரம், படிகளின் எண்ணிக்கை என அனைத்துமே இடத்திற்கு இடம் மாறுபட்டுள்ளன.

பெரியஸ்ரீகோயில் என்றழைக்கப்படும் சிராப்பள்ளி மாவட்டத் திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர் கோயில் ஒரே திசையில் இரு படிவரிசைகள் பெற்ற மாடக்கோயிலாகும். அதன் வெற்றுத்தளக் கீழ்ப்பகுதியில் பிற்பல்லவர் காலச் சிற்பங்கள் தொடராக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பு. அது போலவே திருப்பேர்நகரிலுள்ள அப்பக்குடத்தான் மாடக்கோயிலும் முன்புறமொன்றும் பின்புறமொன்றுமாய் இரண்டு படிவரிசைகள் கொண்டுள்ளது. பாபநாசத்திற்கு அருகிலுள்ள திருநல்லூர் மணவழகர் மாடக்கோயிலின் இறையகமும் அதன் மேற்றளமும் இன்றும் பல்லவச் சுவடுகளுடன் மின்னுகின்றன. திருப்பணிகளுக்கு ஆட்பட்டுத் தண்டலைநீள்நெறி போன்ற சில மாடக்கோயில்கள் உருமாறியிருந்தாலும், சில கால வெள்ளத்தில் கரைந்துபோயிருந்தாலும் கோச்செங்கணான் பெயர் சொல்ல நாம் அறிந்தவரையில் 37 கோயில்கள் எஞ்சியுள்ளன.

ஆலம்பாக்கம்

இயல்பான இறையகங்களுக்கு மாற்றாக ஏன் இந்த வெற்றுத்தள மாடக்கோயில்கள் என்ற கேள்விக்கு விடைகாண முயன்றவர்கள் தொன்மங்களையும் பலவாய்க் காரணங்களையும் முன்வைத்தபோதும், பெருமழைக்கால வெள்ளப் பெருக்கில் அக்கால இறையகங்கள் கரைந்து மறைந்தமை கண்ட சூழலில், அந்நிலையிலிருந்து கட்டுமானங்களைக் காப்பதற்காகவே ஒரு தடுப்புச்சுவர் போல கோச்செங்கணான் காலக் கட்டுமான அறிஞர்களால் இந்த வெற்றுத்தள அமைப்பு உருவாக்கப்பட்டது என்ற அறிவியல் பார்வை ஏற்புடையதாக உள்ளது.

இம்மாடக்கோயில்களை உருவாக்கிய கோச்செங்கணானை நாயன்மார்களுள் ஒருவராக்கிச் சைவம் கொண்டாட, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மங்கையாழ்வாரோ நறையூர்ப் பாசுரப் பாடல்கள் அனைத்திலும் அவரைப் பல்வேறு சிறப்புச் சொற்களால் போற்றி மகிழ்ந்துள்ளார். கட்டுமானங்களுக்காகப் பாடலடிகளில் இப்படி இரு சமயப் பெரியவர்களின் போற்றல் பெற்ற ஒரே தமிழ் மன்னர் கோச்செங்கணான்தான்.

வழக்கமான, இயல்பான முறைகளிலிருந்து மாறுபட்டுப் புதிய கோணங்களை நோக்கிப் பயணிப்பது புரட்சி என்றால், கோச்செங்கணானின் மாடக்கோயில்களும் கலையுலகப் புரட்சிதான். தமிழ் மண்ணில் இது போல் தங்கள் கட்டுமான அமைப்புகளால் புதிய கண்ணோட்டங்களுக்கான வாயில்களைத் திறந்த முதலாம் மகேந்திரர், இராஜசிம்மப் பல்லவர், முதல் இராஜராஜர் என்ற புரட்சிக் கலைஞர்களின் வரிசையில் முதலடி எடுத்துவைத்தவரும் கோச்செங்கணான்தான்.