குடக்கூத்து

இராகலைக்கோவன்

பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடற்கலை பற்றி அதிகம் பேசும் நூலாகச் சிலப்பதிகாரத்தைச் சொல்லலாம். அரங்கேற்று காதை, கானல்வரி, ஊர்காண்காதை, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, நடுகற்காதை எனச் சிலம்பின் பல காதைகளில் ஆடற்கலைத் தரவுகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ‘பாட்டும் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து’ ஆடிய மாதவி, பதினோராடல்களையும் நிகழ்த்திப் பெருமிதமுற்றதைக் கடலாடு காதையில் காண்கிறோம். அந்தப் பதினோராடல்களில் ஒன்றுதான் குடக்கூத்து.

‘வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீள்நிலமளந்தோன் ஆடிய குடம்’ என்று இவ்வாடலை ஆடியவர், ஆடிய இடம் சுட்டும் சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து, ஆழ்வார் பெருமக்களும் இதை நிகழ்த்தியவர் திருமாலே என்பதை உறுதி செய்கின்றனர். ‘குடத்தை எடுத்தேறவிட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே’ என்று ஆண்டாளும், ‘குடமாடு கூத்தா’ என்று பெரியாழ்வாரும் கொண்டாடும் இந்தக் குடக்கூத்து விநோதக்கூத்து வகையைச் சேர்ந்தது.

குடக்கூத்தின் பின்னணியில் ஒரு கதை உண்டு. வாணன் என்னும் அசுரனின் மகள் உழையிடம் மன்மதன் மகன் அநிருத்தனுக்குக் காதல். அதை விரும்பாத வாணன் அநிருத்தனைப் பிடித்துத் தம் தலைநகரில் சிறையிட்டார். அவனை மீட்கப் பல கடவுளர்கள், ‘சோ’ நகருக்கு வருகின்றனர். அனைவருமே, திரைப்படங்களில் காட்டுமாறு புனைவடிவங்கள் கொண்டு கூத்தாடுநர்கள்போல் ஆடியவாறே நகருக்குள் நுழைந்து அநிருத்தனை மீட்க முயல்கின்றனர். மாதவியின் பதினோராடல்களில் சில அவர்களால் இங்கு நிகழ்த்தப்பட்டவையே. அவற்றுள் குடக்கூத்து திருமால் ஆடியது. பல குடங்களுடன் அவர் ஆடியதைப் பெரியாழ்வார் பதிவு செய்துள்ளார்.

சிலப்பதிகாரம் அடையாளப்படுத்தும் பதினோராடல்களில், இக்குடக்கூத்தே தமிழ் மக்களால் போற்றி ஏற்கப்பட்ட கலை வடிவமாக அமைந்ததைத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாகக் கிடைக்கும் குடக்கூத்துச் சிற்பங்கள் நிறுவுகின்றன. பிற்பல்லவர் காலமான பொதுக்காலம் 8ஆம் நூற்றாண்டிலிருந்து பிற்சோழர் காலமான 12ஆம் நூற்றாண்டு வரையில் இவ்வாடல் தமிழ்ச் சமுதாயத்தில் பரவலாகப் பயிலப்பட்டது.

இதுநாள்வரை பார்வைக்குக் கிடைத்திருக்கும் தமிழ்நாட்டுக் குடக்கூத்துச் சிற்பங்களுள் காலத்தால் முற்பட்டது சிராப்பள்ளி மாவட்டம் திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர் கோயில் துணைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. கால்களைக் குறுக்கீடு செய்து கண்ணன் ஆடுமாறு போலக் காட்டப்பட்டுள்ள இதில், குடம் அவரது இடக்கையின் மேற்பகுதியில் உள்ளது. வலக்கை நெகிழ்கையாக, தலையை வலப்புறம் சாய்த்துக் கண்ணன் நிகழ்த்தும் இந்த ஆடல் திருக்கோலம் அழகின் உச்சமெனலாம்.

சிவலோகநாதர் கோயில், கிராமம், விழுப்புரம் மாவட்டம்

பல குடங்களுடன் ஆடுமாறு அமைந்த சிற்பம் விழுப்புரம் மாவட்டம் கிராமம் எனும் ஊரிலுள்ள சிவலோகநாதர் கோயிலில் அமைய, இக்குடங்கள் ஆடும் நிலையிலேயே தூக்கி எறியப்பட்டுத் தோளிலோ, மேற்கையிலோ கொள்ளப்பட்டமையை ஐயாறப்பர் கோயில் சுற்றுமாளிகைத் தூண் சிற்பம் வழி அறியமுடிகிறது. இதுநாள்வரை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தால் அறியப்பட்டிருக்கும் 40 குடக்கூத்துச் சிற்பங்களின் பரவலான ஆய்வு பல அரிய தரவுகளைத் தந்துள்ளது.

ஆடலுக்குப் பயன்பட்ட குடத்தின் அளவு, கூத்தில் குடத்தின் நிலை, கூத்து நிகழ்த்திய முறை,குடமேந்திய கை, குடமேந்தாக் கை இவற்றின் இசைவான அசைவுகள்வழி காக்கப்படும் உடலின் சமன்நிலை, கால்நிலை, தலைச்சாய்வு, ஆடையணிகள் உள்ளிட்ட ஒப்பனை, இக்கூத்துக்கு இசையளித்த கருவிகள், அவற்றை இயக்கிய கலைஞர்கள் என இச்சிற்பங்கள் அள்ளித்தரும் கலையியல் செய்திகள் அளப்பரியன. இச்சிற்பங்களில் பெரும்பாலன ஆடவர்களையே குடக்கூத்தர்களாகக் காட்டினாலும், சிலவற்றில் பெண்களும் குடமேந்தியுள்ளனர்.

குடக்கூத்தாடும் பெண்

இசையற்ற கூத்தாகவே இது நிகழ்த்தப்பட்டதை 28 சிற்பங்கள் உணர்த்த, 12 சிற்பங்களில் உடன்கூட்டமாகத் தாளம், உடுக்கை, இடக்கைக் கலைஞர்களைக் காணமுடிகிறது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்திலுள்ள குடக்கூத்துக் கலைஞர் குடமுழவின் தாளத்திற்கேற்ப ஆடுவது வேறெங்கும் காணாத சிறப்பாகும். அவரது ஒருகால் தரையில் ஊன்றியிருக்க, மற்றொரு கால் இடுப்பளவு உயர்ந்துள்ளது. இடப்புறம் சாய்ந்தாடும் அவரது இடக்கை உடலின் சமநிலை காக்க, நெகிழ்கையாய்த் தாழ்ந்துள்ளது. குடமோ வல முழங்கையில்.

குடக்கூத்துக் கலைஞர், தஞ்சாவூர்

கோயில்களின் பல கட்டுமான உறுப்புகளில் இடம்பெற்றுள்ள இக்குடக்கூத்துச் சிற்பங்கள் மிகுதியும் காணப்படுவது தாங்குதளத்தில் அல்லது கூரையுறுப்புகளில் ஒன்றான வலபியில்தான். இறைக்கோட்டங்களுக்கு மேலமையும் மகரதோரணங்களிலும் குடக்கூத்தர்களைக் காணலாம். கூரையின் முன்னிழுப்பான கபோதத்தின் கூடுகளிலும் இக்கூத்தர்கள் சிற்றுருவச் சிற்பங்களாய் இளநகை சிந்துகின்றனர்.

மாதவியின் ஆடல்களுள் ஒன்றான இக்குடக்கூத்து, சோழர் காலத்தில் மிகப் பரவலாக நிகழ்த்தப் பெற்றதைச் சிற்பப் பேராசான்களின் உளிச்செதுக்கல்கள் தெள்ளிதின் உணர்த்துகின்றன. கையின் மேற்பகுதி, முழங்கை அருகில், தோள் மீது எனப் பெரும்பாலான சிற்பங்களில் காட்சிதரும் குடம், தலைக்கு மாறிக் குடக்கூத்து கரகமான வரலாற்றையும் கும்பகோணம் அருகே திருச்சத்திமுற்றத்துக் கோயிலிலுள்ள நாயக்கர் காலத் தூண் சிற்பம் கண்முன் காட்சியாகக் காட்டிக் கண்சிமிட்டுகிறது.

பின்னூட்டமொன்றை இடுக