வீரநாராயணச்சேரி

மு. நளினி, இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டில் இதுநாள்வரை கிடைத்துள்ள செப்பேடுகளில் பெரும்பான்மையன பிராமணர்களுக்கோ, சமயஞ் சார்ந்த கோயில், மடம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கோ, நிலம் அல்லது ஊரை அரசர்கள் கொடையளித்த செய்திகளையே கொண்டுள்ளன. ‘தானப்பத்திரமாக’ விளங்கும் இத்தகு ஆவணம் வரலாற்றுக்கு எப்படி உதவமுடியும் என்ற கேள்வி மிக இயல்பானது. அந்தக் கேள்விக்கு விடை சொல்வதென்றால், ஏதேனும் ஒரு செப்பேட்டுடன் உறவாடவேண்டும். சோழர் செப்பேடுகளில் காலத்தால் பழைமையானதும் எளிய அமைப்பினதுமான உதயேந்திரம் செப்பேடுகள் இதற்கு உதவக்கூடும்.

முதல் பராந்தகரின் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

சோழ அரசமரபு

பழஞ்செப்பேடுகளுள் பெரும்பாலன இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன. சமஸ்கிருத சுலோகங்களால் எழுதப்பெற்ற முதற்பகுதி கொடையளிக்கும் அரசரின் மரபுவழி பேசுவதால் சிறப்புப் பெறுகிறது. அந்த மரபுவழியில் தேவர்கள், புராண அரசர்கள், இலக்கிய அரசர்கள் என நீளும் பட்டியலின் இறுதியில் வரலாற்று அரசர்களும் உள்ளனர்.

முதல் பராந்தக சோழரால் வழங்கப்பெற்ற உதயேந்திரம் செப்பேட்டின் மரபுவழிப் பட்டியலில் புராண அரசர்களாகச் சிபி உள்ளிட்ட மூவரும் இலக்கிய வழி அரசர்களாகக் கோக்கிள்ளி, கரிகாலர், கோச்செங்கணான் ஆகியோரும் இடம்பெற, வரலாற்று அரசர்களாகப் பராந்தகரின் பாட்டனார் விஜயாலயரும் தந்தை ஆதித்தரும் சுட்டப் பெற்றுள்ளனர்.

பராந்தகருக்கு முற்பட்ட கால இலக்கியங்கள் பேசும் சோழ அரசர்களுள் மூவரை மட்டுமே இச்செப்பேடு குறிப்பதால் சோழமரபு இம்மூவரையும் பெருமையுற நினைத்தமை உணரப்படும். பத்துப்பாட்டு இலக்கியங்களில் பட்டினப் பாலையும் மலைபடுகடாமும் கரிகாலரை முன்னிட்டு எழுந்தவை. கோச்செங்கணானோ அப்பர், சம்பந்தர், மங்கையாழ்வார் எனத் தமிழ்நாட்டின் இரு பெருஞ் சமயப் பதிக ஆசான்களால் புகழப்பட்டவர். மாடக்கோயில் எனும் புதிய கலைஉத்தியைத் தமிழ் மண்ணில் அறிமுகப்படுத்திய மாபெரும் கலைஞர். சோழர்கள் வெளியிட்ட வேறு சில செப்பேடுகளும் இம்மன்னர்களைக் குறிப்பது இங்கு நினைக்கத்தக்கது.

முதல் பராந்தகர்

மிக எளிய செப்பேடு என்பதால், வரலாற்று அரசர்களில் பராந்தகரைக் குறித்து மட்டுமே உதயேந்திரம் சில பயனுள்ள தரவுகளைப் பதிவுசெய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவையாக அவர் கோயில்களை எடுத்தமை, கேரள அரசர் மகளை மணந்தமை, இரண்டு பாண அரசர்களை வென்றமை, பாண்டிய அரசர் இராஜசிம்மனையும் அவருக்குத் துணையாக வந்த இலங்கைப் படையையும் தோற்கடித்து சங்கிராமராகவன் எனும் சிறப்புப் பெயர் ஏற்றமை ஆகியவற்றைக் குறிக்கலாம். இந்நான்கனுள், இடையிலுள்ள இரண்டு செய்திகளும் வேறெந்தச் சோழர் செப்பேட்டிலும் இடம்பெறாதவை. பராந்தகர் மணந்த கேரள அரசரின் மகளாக அருமொழிநங்கையையும் அவர் தந்தையாகப் பழுவேட்டரைய அரசர் குமரன் மறவனையும் கல்வெட்டுகளின் அடிப்படையில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் அடையாளப்படுத்தியுள்ளது. பராந்தகர் வென்ற பாண அரசர்களாக இரண்டாம் விக்கிரமாதித்தனையும் மூன்றாம் விஜயாதித்தனையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

கேட்டவரும் தந்தவரும்

உதயேந்திரம் செப்பேடு சோழ அரசமரபுடன் கங்கர்களைப் பற்றியும் விரித்துரைக்கிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது. உதயேந்திரச் சதுர்வேதிமங்கலத்தில் வாழ்ந்த பிராமணர்களுக்கு நிலத்துண்டுகளை உரிமையாக்கக் கருதி, அதற்கான கொடை வேண்டிப் பராந்தகரிடம் விண்ணப்பித்தவர் இந்த கங்க மரபில் தோன்றிய இரண்டாம் பிருதிவிபதி. அவர் கேட்டதால்தான் பராந்தகர் இக்கொடையில் ஈடுபட்டார்.

படுவூர்க் கோட்டத்தின் மேல்அடையாறு நாட்டிலிருந்த கடைக்கோட்டூரைக் கொடையாக வழங்கிய பராந்தகர், அதை உதயசந்திரமங்கலத்தோடு இணைத்து ஓரூராக்கி வீரநாராயணச்சேரி எனப் பெயரிட்டு, பிராமணர்களுக்கான இடமாக, பிரமதேயமாக்குமாறு தம் 15ஆம் ஆட்சியாண்டில், அதாவது, பொதுக்காலம் 922இல் உத்தரவிட அடித்தளம் இட்டவர் இரண்டாம் பிருதிவிபதி. அதனால்தான், அவரைப் பற்றியும் அவர் மரபு பற்றியும் விரிவாகப் பேசுகிறது செப்பேடு.

முதல் பராந்தகரின் அல்லூர் பசுபதீசுவரர் கோயில்

கங்க மரபு

கங்கப் பரம்பரையின் முதல் அரசர் தொடங்கிக் கருநாடக மாநிலம் கோலாரில் நிகழ்ந்த முடிசூட்டைக் காட்டி, அவ்வழியில் வந்த சிறந்த வீரரான முதலாம் பிருதிவிபதியை முன்னிருத்துகிறது செப்பேடு. அந்த இடத்தில்தான் தமிழ்நாட்டின் புகழ்வாய்ந்த போர்க்களங்களுள் ஒன்றான திருப்புறம்பியம் பேசப்படுகிறது. அப்போரில் தம்மை எதிர்த்து வந்த பாண்டிய அரசர் வரகுணரைப் பல்லவ வேந்தர் அபராஜிதர் எதிர்கொண்டார். அவருக்குத் துணையாகப் போரிட்டுக் களத்தில் உயிரிழந்தவர் முதல் பிருதிவிபதி. அவரது பெருமைக்குரிய பெயரர்தான் உதயேந்திரம் செப்பேடு உருவாகக் காரணமான இரண்டாம் பிருதிவிபதி. அவரது போர்த்திறமும் வீரமும் பாராட்டியே அவருக்குப் பராந்தகர், ‘மாவலிவாணராயர்’ பட்டமளித்துச் சிறப்பித்ததாகச் செப்பேடு கூறுகிறது.

திருவடி சூட்டியவர்

கடைக்கோட்டூரில் இரண்டு நிலத்துண்டுகள் ஏற்கனவே திகம்பர சமணர்களுக்குத் தரப்பட்டிருந்தமையால் அவற்றை நீக்கி, எஞ்சிய ஊர்ப்பகுதியே பிரமதேயமாக்கப்பட்டது. இந்த அறச்செயலை எதிர்கால அரசர்கள் காக்கவேண்டிடும் பராந்தகரைக் குறிக்கும் செப்பேடு, அவர் சிவபெருமானின் திருவடிகளைத் தம் தலையில் சூடியவர் என்று பெருமை பேசுகிறது.

இது போல் சிவபெருமானின் திருவடிகளைத் தலையில் சூடியவராகக் கல்வெட்டு வழித் தம்மை அறிவித்துக்கொண்ட முதல் தமிழ்நாட்டு மன்னராகப் பல்லவ அரசர் இராஜசிம்மரைக் குறிக்கலாம். ‘சிவசூடாமணி’ என்றே சிறப்புப் பெயர் கொண்டிருந்தவர் அவர். ‘இடைவிடாத ஈடுபாட்டால் புனிதப்படுத்தப்பட்ட தம் தலையில் சிவபெருமானின் திருவடிகளைச் சூடியவர்’ என்று அவரது பனைமலைக் கல்வெட்டு அவரைக் கொண்டாடுகிறது.

சோழமரபில் பராந்தகரைத் தொடர்ந்து சிவபெருமானின் திருவடிகளைத் தலையில் அணிந்தவராக அறியப்படும் முதலாம் இராஜராஜர், சிவபாதசேகரன் என்றே தம்மை அழைத்துக் கொண்டவர். அத்திருப்பெயரில் சிவபாதசேகர மங்கலம் என்று ஓர் ஊரே விளங்கியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர் மகன் இராஜேந்திரனோ தம்மை சிவசரணசேகரனாகக் காட்சிப்படுத்தி மகிழ்ந்தவர்.

வீரநாராயணச்சேரி

உதயேந்திரம் செப்பேட்டின் வடமொழிப்பகுதி, கடைக்கோட்டூர் என்ற பெயருள்ள பூமியை உதயசந்திரச் சதுர்வேதிமங்கலத்திற்கு அரசர் தானமாக அளித்தார் என்று கூற, தமிழ்ப்பகுதி, பெருமானடிகள் பெயரால் கடைக்கோட்டூர் வீரநாராயணச்சேரி என்ற பிரமதேயமாய் வழங்கப்பட்டதாகச் சொல்கிறது. வீரநாராயணன் பராந்தகரின் விருதுப் பெயர்களுள் ஒன்று என்பதும் அப்பெயரிலேயே இப்போது வீராணம் என்றழைக்கப்படும் வீரநாராயணன் ஏரி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

எல்லைகள்

வீரநாராயணச்சேரியின் எல்லைகளைச் சுட்டுகையில் பாலாறு, விண்ணமங்கலத் தெற்றேறி, விண்ணப்புலியன் ஏரி, கங்காயன் ஏரி, வயிர வாய்க்கால், சிராங்குட்டை, சிற்றறியூர், மலை, முப்பெண்டிர் குறுக்கு, மொட்டைக் குறுக்கு, குதிரை வடி, அதியமான் முண்டை, பிடாம்புழை, எருமைச்சரி, ஆலந்தொட்டை மேடு, கல்லாலிஒட்டை, கற்குறும்பு, வேம்பு-ஆலம்-மருதம்-எட்டி-துரிஞ்சில்-தணக்கு முதலிய மரங்கள் ஆகியன வெளிப்படுகின்றன. திசை விளக்கிச் சொல்லப்படும் இந்த எல்லை வண்ணிப்பு ஒரு கிராமத்தின் வரைபடத்தையே நமக்குத் தந்துவிடுகிறது.

அறையோலையும் ஆவணமும்

அரசாணை கிடைக்கப்பெற்ற படுவூர்க் கோட்டத்து சபையார், கடைக்கோட்டூர் எல்லைகளை வரையறுத்து அவற்றை அடையாளப்படுத்தக் கல்லும் கள்ளியும் நட்டுச் செய்தியை மக்கள் அறியுமாறு அறையோலை செய்ய, மாவலிவாணராயனான இரண்டாம் பிருதிவிபதி அதைச் செப்பேட்டு ஆவணமாக்கி ஊரைப் பெற்ற பிராமணர்களுக்கு உரிமையாக்கி மகிழ்ந்தார்.

கங்க மன்னர் வேண்டுகோள் ஏற்றுச் சோழ மன்னர் வழங்கிய ஒரே பிரமதேயக் கொடை இதுதான் என்பதாலும் பல அரிய வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாலும் உதயேந்திரம் செப்பேடு சிறப்புப் பெறுகிறது.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 11. தேவதேவி

அன்புள்ள வாருணி, தமிழ்நாட்டின் மிகச் சில கோயில்களிலேயே ஆயிரக்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சிற்பக் களஞ்சியங்களாக விளங்குபவை திருவரங்கம், தில்லை, மதுரைத் திருக்கோயில்களில் உள்ளவையே. இம்மூன்றனுள்ளும் ஆளுயரச் சிற்பங்களுடன் காண்போரைக் கவர்ந்திழுக்கும் கவினுறு கட்டுமானமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரக்கால் மண்டபத்தைக் குறிக்கலாம். மண்டப வாயிலிலும் வாயிலை அடுத்து விரியும் கூடத்தின் முதல் வரிசைத் தூண்களிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் விரிவான ஆய்வுக்குரியவை. அவற்றுள் தனித்துக் குறிக்கத்தக்கது கரணக்கோலத்திலுள்ள தேவதேவிச் சிற்பம்.

தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு எப்போது தோன்றியது என்பது குறித்த விரிவான ஆய்வுக்கட்டுரை எங்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, ‘பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளதை நீ அறிவாய். சங்க இலக்கியங்களிலோ, அடுத்தமைந்த காலக்கட்ட நூல்களான காப்பியங்களிலோ இடம்பெறாத பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்துவன திருமுறைகளே. சம்பந்தரும் அப்பரும் வழங்கியுள்ள குறிப்புகள் பிள்ளையார் தோற்றம் பற்றிய தெளிவான தரவுகளை முன்வைக்கின்றன.

தமிழ்நாட்டில் காணப்பெறும் பிள்ளையார் சிற்பங்களில் காலத்தால் முற்பட்டவை குடைவரைகளில் அமைந்துள்ளன. பிள்ளையார்பட்டிக் குடைவரையிலுள்ள கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு அக்குடைவரையை ஆறாம் நூற்றாண்டு அமைப்பாகக் கருதுகின்றனர். எனில், தமிழ்நாட்டின் முதல் பிள்ளையாராக அவரையே கொள்ளவேண்டியிருக்கும். பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் பரவலாக இடம்பெற்றுள்ள பிள்ளையாரைக் காலத்தால் முற்பட்ட வடதமிழ்நாட்டுப் பல்லவக் குடைவரைகளில் காணமுடியவில்லை. வல்லம் குடைவரைகளின் பக்கச்சுவர்களிலும் சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரையிலும் தோற்றம் காட்டும் பல்லவப் பிள்ளையார் கற்றளிக் காலத்தே சிறப்பிடம் பெறுவதைக் காணமுடிகிறது.

தமிழ்நாட்டின் குடைவரைக் காலப் பிள்ளையார்களில் நின்றகோலத்தில் காணக்கிடைப்பவர் சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரையில் உள்ளார். நான்முகன், முருகன், கதிரவன், கொற்றவைக்கு இணையாகப் பின்சுவர்க் கோட்டத்தில் இடம்பெற்றுள்ள இப்பிள்ளையார், பிற்பல்லவர் கற்றளிகளில் விமானத்திற்கு முன்னமைந்த முகமண்டபத் தெற்குக் கோட்டத்திற்கு மாற்றம் பெறுகிறார். இம்மாற்றம் சோழர் காலத்தில் நிலைபேறடைவதை அவர்தம் கற்றளிகள் கண்முன் நிறுத்துகின்றன.

குழந்தை போல் இரு கால்களையும் மடக்கிப் பாதங்கள் எதிர்ப்பட அமர்ந்த எளிய கோலம் தொடங்கி இலலிதாசனம், மகாராஜலீலாசனம் என வரையறுக்கப்பட்ட அமர்வுகளில் பிள்ளையார் சிற்பங்கள் பலவாய்க் கிடைக்கின்றன. சில ஊர்களில் நின்ற கோலத்திலும் சோழப் பிள்ளையார்களைக் காணமுடிகிறது. இதன் அடுத்த நிலையாகப் பிள்ளையாரை ஆடற்கோலத்தில் அமைக்கத் தொடங்கினார்கள். ஒரு காலைத் தரையில் ஊன்றி மற்றொரு காலை முழங்காலளவில் மடக்கி உயர்த்தும் (ஊர்த்வஜாநு, பார்சுவஜாநு) கரணக்கோலப் பிள்ளையார்களைப் பல கோயில்களில் காணமுடிகிறது. முழங்காலை முன்னால் உயர்த்துவது ஊர்த்வஜாநு. பக்கவாட்டில் உயர்த்தினால் பார்சுவஜாநு.

தொடக்கக் காலங்களில் தனித்தமைந்த பிள்ளையாரை அவரது தேவியுடன் இணைத்துக் காட்டும் சிற்பங்கள் அடுத்த நிலையின. சுகாசனப் பிள்ளையாரின் தொடையில் அமர்ந்தவராய் அம்மை காட்சிதரும் சிற்பங்களும் இருவரும் களிநிலை காணும் சிற்பங்களும் தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ளன. ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரக்கால் மண்டபத் தூண் அதுவரை நாங்கள் கண்டிராத புதிய காட்சியைக் கண்முன் நிறுத்தியது, வாருணி.

மண்டபத்துள் நுழைவார் ஒவ்வொருவரும் காணுமாறு முகப்பு வரிசைத் தூணில் இப்பெருஞ் சிற்பம் படைக்கப்பட்டுள்ளது. இதில், பிள்ளையார் பேரழகராய் ஊர்த்வஜாநு கரணத்தில் காட்சியாகிறார். அவரது வலப்பாதம் தளத்தில் நன்கு ஊன்ற, இடக்கால் முழங்காலளவில் மடித்து உயர்த்தப்பட்டுள்ளது. பத்துத் திருக்கைகளுடன் திகழும் அவரது மேலிரு கைகளில் சக்கரமும் தாமரையும் விளங்க, வல முன் கையில் உடைந்த தந்தம். வலம்புரியாய் வளைந்துள்ள துளைக்கையிலோ அமுதக்குடம். கழுத்தணிகள், தோளணிகள், கையணிகள், தொங்கு சரத்துடன் அடர்த்தியான வயிற்றுக்கட்டு, கால்களில் தண்டை, சிலம்பு, பெற்றுக் கரண்டமகுடத்துடன் கண்களுக்கு விருந்தாகும் அவரது இடையில் பதக்கஅணிகளும் குறங்குசெறியும் இருத்தும் அழகிய சிற்றாடை. அதன் தொங்கல்கள் கால்களுக்கிடையே விரிந்தும் மடிந்தும் நெகிழ்ந்திருக்கும் பாங்கு சிற்பிகளின் திறம் காட்டுகிறது.

இது போல் ஊர்த்வஜாநு கரணத்தில் பல பிள்ளையார் சிற்பங்களைச் சோழர் காலத்தே காணமுடிந்தாலும் இது அளவில் பெரியதாகவும் அழகில் உச்சம் பெற்றதாகவும் அமைந்திருப்பதால் மட்டுமே இங்குக் குறிக்கப்படுவதாக நினைத்துவிடாதே வாருணி. அளவு, அழகு இரண்டினும் மேம்பட்ட புதிய சிந்தனை இச்சிற்பத்தில் கையாளப்பட்டுள்ளது. இதில், இறைவனின் உயர்த்தப்பட்ட கால் அவர் தேவிக்கு இருக்கையாகியுள்ளது. பிள்ளையாரின் இடத்தொடையில் கோயிலாரால் வல்லபை என்று அழைக்கப்பெறும் அவரது தேவி இனிதே அமர்ந்துள்ளார்.

அம்மையின் வலக்கை பிள்ளையாரின் முதுகு தழுவ, இடக்கையில் மலர். கரண்டமகுடம் உள்ளிட்ட பல அணிகலன்கள் அழகூட்டப் பட்டாடையும் கச்சும் அணிந்து இறைத்தழுவலில் இளகிக் காட்சிதரும் தேவியின் இடையைத் தம் இடக்கை ஒன்றால் பேரன்புடன் பற்றியுள்ளார் இந்தப் பேரழகர். ஆடும் நேரத்திலும் அந்தக் கோலத்திலும் தம்மில் நிறைந்திருக்கும் தேவியை உடன் கொண்ட இந்த அன்பின் விளைச்சலை என் கண்கள் வேறெங்கும் கண்டதில்லை வாருணி. அதனால்தான், இந்தத் தேவதேவி இலக்கியப்பீடப் பக்கங்களில் இனிதே பதிவாகிறார்.

தமிழ்நாட்டுச் சிற்பிகளின் எண்ண வண்ணங்கள் காலந்தோறும் கவிதைகள் போல் வெளிப்பட்டுத் தமிழ்நாட்டுக் கோயில்களில் நமக்காகவே காத்துக் கிடக்கின்றன. அவற்றைக் காணவும் அவை வழி விளையும் களிப்பில் நிறையவும் நாம்தான் முனைவதில்லை.

அன்புடன்,

இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில்  கண்டதும் கற்றதும்- 10. கழுவேற்றம்

அன்புள்ள வாருணி, நலந்தானே. ‘விளக்கேற்றலில் மகிழ்ந்தேன்; சிவபெருமானின் ஆடற்காட்சிகளிலும் காரைக்கால் அம்மையின் அன்பிலும் நெகிழ்ந்தேன்; மன்னர் திருமலையின் எளிமைப் பெருநோக்கில் உருகினேன்; இப்போதோ, தொடர்ந்து குற்றங்களும் தண்டனைகளுமாய்க் காட்சிப்படுத்துகிறீர்கள்! கோயில்கள் பதிவகங்கள் என்று பலமுறை நீங்கள் கூறியிருந்தபோதும், இவை எல்லாமும் அங்குக் காட்டப்பட்டுள்ளன என்பதை அறிய நேர்கையில், கோயிலைப் பற்றிய பார்வை விரியவேண்டும் என்பதை முற்றிலுமாய் உணர்கிறேன். பதிவகம் என்பதன் உட்பொருளும் அறிகிறேன்’ என்று நீ எழுதியுள்ளாற் போலவே, இத்தொடரைப் படிக்கும் அன்பர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர்.

கோயில்கள் பத்திமைக்காக எழுந்தவைதான் என்றாலும், அக்காலத்தே மக்கள் பெருமளவில் கூடுமிடங்களாகவும் அவை விளங்கியமையால், அவற்றைக் கட்டமைத்தவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் அறிவூட்டலுக்காகவே சமூகத்தின் அனைத்துப் பக்கங்களையும் அங்குப் பாடமாக்கினர். ஒவ்வொரு கோயிலும் அது உருவான, உருமாறிய காலங்களின் கண்ணாடியாகவே திகழ்வதைக் கோயிலுடன் உறவாடி வாழ்பவர்கள் அறியாதிருக்கமுடியாது. மீனாட்சிக் கோயிலில் வலம் வந்த ஒவ்வொரு நாளும், கோயில் எங்களுடனும் நாங்கள் கோயிலுடனும் கூடிக் கலந்ததாலேயே பலவும் பார்க்க முடிந்ததுடன், அவற்றின் பாடங்களும் உணர்ந்து கோயிலுடன் ஒன்றவும் இயன்றது.

மீனாட்சிக் கோயிலின் ஒவ்வோரிடமும் காலநிரலான வாழ்க்கைப் படப்பிடிப்புகளைப் பெற்றிருந்தாலும், கொண்டதும் இணைந்ததுமாய் அதன் ஆயிரங்கால் மண்டபம் உள்ளடக்கியிருக்கும் சிற்ப அற்புதங்கள் அதை வரலாற்றுக் களஞ்சியமாய் மாற்றியுள்ளன. மண்டபக்கூரையைத் தாங்கியிருக்கும் நெடுந்தூண்கள் ஒன்றின் கீழ்ப்பகுதியில் நாங்கள் பார்த்த சிற்பம் நாயக்கர்காலத் தண்டனைமுறைகளுள் ஒன்றான கழுவேற்றத்தின் படப்பிடிப்பாய்ப் புன்னகைத்தது.

‘கழுவேற்றல்’ என்ற அந்தத் தண்டனைமுறை தமிழ்நாட்டில் வழக்கிலிருந்ததைப் பதிகம் படித்த அனைவரும் அறிவர். தேவார மூவரில் ஒருவரான ஞானசம்பந்தரின் மதுரைப் பயணமும் அப்போது அங்கு நிகழ்ந்தனவும் அவற்றின் பலனாய் விளைந்த கழுவேற்றமும் சேக்கிழாரின் பெரிய புராணம் பயின்ற அனைவருக்கும் தெரியும். பொதுக்காலம் 6ஆம் நூற்றாண்டில் நிறைவேறிய அந்தக் கழுவேற்றம் சங்ககாலத்தில் இருந்ததா என்பதறிய இலக்கியப் பக்கங்களைப் புரட்டியபோது நான்கு சுட்டல்கள் கிடைத்தன. அவற்றுள் முதன்மையானது பெரும்பாணாற்றுப்படையின் பாடலடிகள் எனலாம். எயினர் குடியிருப்புகள் உள்ள ஊரின் வாயிலை வண்ணிக்க முற்பட்ட புலவர், நெடிய முனையுடைய வலிமையான கழுமரங்கள் அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பார். அவை பகைவரைக் குத்துவதற்குப் பயன்பட்டதாக இப்பாடலுக்கு உரையெழுதிய நச்சினார்கினியர் கூறுகிறார்.

புலவர் தமிழகனை நீ அறிவாய் வாருணி. நாமிருவருமே அவரைச் சந்திக்க அவர் இல்லம் சென்றிருக்கிறோம். மெத்தப் படித்தவர். பெருநூலகம் கொண்டிருப்பவர். அங்குள்ள நூல்கள் அனைத்தும் அவர் கைப்பட்டு மனம் சென்றவை. அவரிடம் மீனாட்சிக் கோயில் சிற்பம் குறித்து உரையாடியபோது, ‘பழங்காலத் தண்டனைகள்’ என்ற தலைப்பில், தாம் குறிப்புகள் சேர்த்திருப்பதாகவும், அருட்பா, பிரபந்தம், திருவிளையாடல் புராணம் இவற்றிலும்கூடக் கழுவேற்றல் சுட்டப்பட்டுள்ளது என்றும் செய்தி தந்தார். இராமலிங்க அடிகளாரின், ‘இருங்கழுவில் ஏற்றினாலும்’ எனும் அருட்பா அடி குறிக்கத்தக்கது. பழமொழியில்கூட, ‘இனம்கழுவில் ஏற்றினார் இல்’ என்ற பாடம் உள்ளது. மதுரைக் கோட்டை வாயிலில் இருந்த கழுக்கோல்களைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

இலக்கிய ஆளுகை கழுவேற்றலைச் சங்கம்தொட்டுத் தொடரும் தண்டனையாகக் காட்டுவதால், சிற்ப வெளிப்பாடுகளாய் இது பதிவாகியுள்ளதா என்று தேடினோம். பல்லவக் கற்றளியாய்க் காஞ்சிபுரத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் வைகுந்தப் பெருமாளின் உள்சுற்றுச் சுவர் பல்லவர் வரலாறு பேசும் சிற்பத்தொகுதிகளைத் தொடராய்க் கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்றில் கழுவேற்றல் காணலாம். அரசர ஆணையிட நிறைவேற்றப்பட்ட தண்டனையாகப் பதிவாகியுள்ள அக்காட்சியில், இரண்டு குற்றவாளிகளைக் காணமுடிகிறது. ஒருவரைத் தலைகீழாகவும் மற்றவரைத் தலை மேலிருக்குமாறு நேராகவும் கழுவில் ஏற்றியுள்ளனர்.

காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் கழுவேற்றம்

மீனாட்சிக் கோயிலில் முற்றிலும் மாறுபட்ட காட்சி. இங்குக் கழுமரம் பெரும்பாணாற்றுப்படைப் பாடலடியை ஒட்டி நெடிய முனையுடன் உள்ளது. வைகுந்தப் பெருமாள் காட்சி போலன்றி இங்குக் குற்றவாளி வயிற்றில் கழுமுனை நுழையுமாறு தண்டிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்து துவண்டிருக்கும் அவர் உடலின் கீழ்ப்பகுதியை நரிகளும் நாய்களும் கடிக்க, மேற்பகுதியைப் பருந்தும் கழுகும் கொத்துகின்றன. இச்சிற்பத்தின் மேற்புறத்தில் மற்றொரு கழு. அதிலும் ஒரு குற்றவாளி. அவரது தலையருகே ஒரு நரி.

மீனாட்சிக் கோயில் கழுவேற்றம்

இறைவன் ஆடும் இடு, சுடுகாட்டுக் காட்சிகளை வண்ணிக்க முனைந்த காரைக்கால் அம்மையார், அப்பர் பெருமான், சம்பந்தர் ஆகியோர் அங்கு நரிகளும் பருந்து, கழுகு முதலிய பறவைகளும் இறந்தோர் உடலை உணவாய்க் கொள்ளும் காட்சிகளைப் பலபடக் காட்டியிருப்பர். பரஞ்சோதி முனிவரோ, திருவிளையாடல் புராணத்தில் இந்தச் சிற்பக் காட்சியை நேரில் கண்டவர்போல் வண்ணித்திருக்கிறார். பார்வையின் விளைவே பாடலடிகள் என்பதை மீனாட்சிக் கோயில் கழுவேற்றல் காட்சியும் இலக்கியப் பக்கங்களின் பதிவுகளும் உறுதி செய்கின்றன வாருணி. ஆவுடையார் கோயில் ஓவியங்களிலும் கழுவேற்றம் இடம்பெற்றுள்ளதை நினைவூட்டிய பேராசிரியர் மு. நளினி அந்தப் படங்களையும் காட்சிப்படுத்தினார்.

குற்றங்கள் இல்லாத சமுதாயம் எக்காலத்தும் இருந்ததில்லை. அது போலவே குற்றத்திற்கேற்பத் தண்டனைகள் வழங்குவதும் காலந்தோறுமான நிகழ்வாகவே இருந்து வந்துள்ளது. அவற்றுள் சில, கிடைக்கும் வாய்ப்பிற்கேற்ப எதிர்வரும் தலைமுறைகளுக்கு எச்சரிக்கையாகப் படைப்பாளிகளால் பதிவு செய்யப்படுகின்றன. பார்ப்பவர்கள் பகிர்வதும் கேட்பவர்கள் உணர்வதும் சமுதாயத் திருத்தங்களுக்கு வழிகோலும் என்ற நம்பிக்கையுடன்தான் அதைக்கருத்துடன் காப்பாற்றி வந்துள்ளது.

​​அன்புடன்,

​​இரா. கலைக்கோவன்.

குறிச்சி ஆவணங்கள்

மு. நளினி, இரா. கலைக்கோவன்

திருப்பைஞ்ஞீலி சோறுடைய நாயனார் கோயில்

சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டத்திலுள்ள பழைமையான ஊர் திருப்பைஞ்ஞீலி. வாழையின் பெயருடன் விளங்கும் இவ்வூரில், பதிகம் பெற்ற 1400 ஆண்டு வயதுடைய பெருங்கோயில் 71 கல்வெட்டுகளுடன் வாழ்கிறது. உள்ளிருக்கும் இறைவன் நீலிவனப்பெருமாள். இறைவி நீள்நெடுங்கண்ணி.

இங்குள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் அழுத்தமான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டுள்ளன. அவற்றுள், நான்கு ஆவணங்கள் அடுத்தடுத்து சோழநாட்டை ஆண்ட இரண்டு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், ஓர் ஊர் கோயிலுக்கும் தனியர்களுக்குமாகப் பிரித்து விற்கப்பட்ட கதையைக் கூறுகின்றன. சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேறெந்தக் கோயிலிலும் இது போல் நான்கு விற்பனை ஆவணங்கள் பெற்ற ஓர் ஊர் காட்சியாகவில்லை.

‘குறிச்சி’ என்ற பின்னொட்டுடன் பதிவாகும் இந்த ஊரின் கதை பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகிறது. திரிபுவனவீரதேவராக அறியப்படும் மூன்றாம் குலோத்துங்கசோழரின் ஆட்சிக்காலத்தில் அறிமுகமாகும் இக்குறிச்சியின் முழுப்பெயர் பிள்ளையாண்டான்குறிச்சியான நானூற்றுவன்குறிச்சி. அக்குறிச்சியில் பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது.

முதல் ஆவணம்

சிராப்பள்ளி முசிறிச் சாலையில் ஏறத்தாழ 11 கி. மீ. தொலைவில் திருவாசியை அடுத்துள்ள துடையூர் அக்காலத்தே பிராமணர் குடியிருப்பாக, ‘தொடையூர்’ என்ற பெயருடன் திகழ்ந்தது. அவ்வூரில் வாழ்ந்த சிங்கப்பிள்ளை செந்தாமரைக்கண்ணர், திருவரங்கச் செல்வனான செல்வநம்பி, திருவரங்கப் பெருமாளான திருவரங்கபட்டன் ஆகிய மூவருக்கும் அக்குறிச்சியில் புன்செய் நிலமிருந்தது.

பைஞ்ஞீலி இறைவனின் வழிபாட்டுக்கெனப் பூந்தோட்டம் அமைக்க விழைந்த கோயில் அலுவலர் காத்தானுக்கு, இம்மூவரும் குறிச்சியில் தங்கள் காணியாக இருந்த 1600 குழிப் புன்செய் நிலத்தை 400 நற்காசுகளுக்கு விற்றனர். இந்நிலத்துண்டு குறிச்சியிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கும் அக்கோயில் நடைமுறைகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு மா அளவு நிலத்திற்கும் வடக்கில் இருந்தது. இதற்கான நிலவிலை ஆவணம் ஓலையாகவும் கோயிலில் கல்வெட்டாகவும் அமைந்தது.

பைஞ்ஞீலி, தென்சுற்று

இரண்டாம் ஆவணம்

மூன்றாம் குலோத்துங்கரின் மகனான மூன்றாம் இராஜராஜரின் ஆறாம் ஆட்சியாண்டில், அதாவது பொ. கா. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நடைமுறைக்கு வந்த இரண்டாவது விற்பனை ஆவணத்தில் இவ்வூரின் பெயர் முன்பின்னாக மாறி நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சியாகப் பதிவாகியுள்ளது. அக்காலத்தில் தொடையூர் சபை உறுப்பினர்களாய் விளங்கிய திருவரங்கப் பெருமாள் சிங்கப்பிள்ளையான செந்தாமரைக்கண்ணர், மண்டலபுருஷனான சூரியதேவன், வீற்றிருந்தான் திருவாலப்பிள்ளையான திருவரங்கமாளி, சுந்தரத்தோளுடையானான சீராமன் ஆகிய நால்வரும் அவ்விற்பனையை நிகழ்த்தியுள்ளனர்.

சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பழம்பெரும் ஊரான தவத்துறை(இலால்குடி)க்கு அருகிலுள்ள நகர் எனும் சிற்றூரைச் சேர்ந்த கல்லன் சதிரனான மழைநாட்டு விழுப்பரையனுக்கு இக்குறிச்சி நிலம் 40 வேலி 10, 300காசுக்கு இவர்களால் விற்கப்பட்டது. இந்நிலத்தைக் குறிக்கும் சபையின் விற்பனை ஆவணம், ‘நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சி நத்தமும் நீர்நிலைக் குளமும் இக்குளத்தால் விளையும் நிலமும் இது சூழ்ந்த புன்செயும் நிலக்குடியும்’ என்று விற்கப்பட்ட இடத்தின் வளம் குறிப்பதுடன், இப்பகுதியிலிருந்த பைஞ்ஞீலி இறைவனுக்கும் பிள்ளையாருக்கும் உரிமையுடைய நிலப்பரப்புகளைத் தவிர்த்தே இவ்விற்பனை நிகழ்ந்தமை கூறுகிறது. இவ்விற்பனை ஆவணத்தை எழுதியவர் அன்பிலைச் சேர்ந்த துடையூர் மத்தியஸ்தர். ஆவணத்தில் அரசு அலுவலர் விக்கிரமசோழ பிரும்மராயர் உள்ளிட்டவர், ‘இப்படி அறிவேன்’ என்று சான்றாளர்களாகக் கையெழுத்திட்டுள்ளனர்.

மூன்றாம் ஆவணம்

இப்பதிவின் தொடர்ச்சியாக உள்ள மூன்றாம் ஆவணம், இக்குறிச்சி நிலம் 40 வேலியை விலைக்குப் பெற்ற கல்லன் சதிரனை, பாண்டிய அரசர் முதலாம் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் மண்டல முதலிகளுள் ஒருவரான கேரளத்துக் காலடியைச் சேர்ந்த சங்கரன் மகனாகக் குறிப்பதுடன், கல்லன் சதிரன் இக்குறிச்சியில் தாம் வாங்கிய நிலத்தின் உரிமையை வாங்கிய விரைவில் கைமாற்றியதைப் பதிவு செய்துள்ளது.

சதிரன் வாங்கிய 40 வேலியைப் பைஞ்ஞீலி இறைவன் பெயரில் அவருக்கான திருநாமத்துக்காணியாக்க விரும்பிய தொடையூர் சபையார், சதிரனிடம் சபை உறுப்பினர் நால்வர் பெற்ற விலைத்தொகையைத் திருப்பியளிக்கச் செய்து, சதிரனை அந்த 40 வேலியையும் இறைவனுக்கான திருநாமத்துக்காணியாக மாற்றித்தருமாறு வேண்ட, சதிரன் அதையேற்று, பெற்ற கையோடு நிலத்தை விற்ற கையருமாயினார். இப்படி வாங்கியவுடன் நிலம் விற்கப்படுதல் திரிவிட்டுத் தருதலாகவும் அதற்கான ஆவணம் திரிவுத்தீட்டாகவும் அழைக்கப்பெற்றன. வாங்கியவுடன் விற்கும் இந்தப் பாங்கைப் பைஞ்ஞீலியின் வேறு கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது.

பைஞ்ஞீலி, வசந்த மண்டபம்

நான்காம் ஆவணம்

நானூற்றுவன்குறிச்சி பற்றிய நான்காம் ஆவணம் மூன்றாம் இராஜராஜரின் 11ஆம் ஆட்சியாண்டில் அமைந்தது. அதில் விற்பனையாளர்களாக அறிமுகமாகும் மூவருமே தொடையூர் சபையின் உறுப்பினர்கள். அவர்களை, ‘சபைக்குச் சமைந்த’ என்றழைத்தே ஆவணம் அறிமுகப்படுத்துகிறது. அவர்களுள் இருவர், கல்லன் சதிரனுக்கு நிலம் விற்ற ஆவணத்திலும் விற்பனையாளர்களாக இடம்பெற்றுள்ளனர். மூன்றாமவர், திருவரங்கப்பெருமாளாள செந்தாமரைக்கண்ணராக அறியப்படுகிறார். கல்லன் சதிரனின் தந்தையும் பாண்டிய அரசரான முதலாம் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் மண்டல முதலிகளில் ஒருவருமான கேரளத்தைச் சேர்ந்த காலடி சங்கரன் அழகனான மழவராயரே இந்த ஆவணம் வழி இக்குறிச்சியில் 60 வேலி நிலத்தை 6,000 காசுக்கு வாங்கியவராகக் காட்சியாகிறார். கல்லன் சதிரனுக்கு விற்பனையான 40 வேலி நிலம், பைஞ்ஞீலி இறைவனுக்கும் பிள்ளையாருக்கும் உரிமையுடைய நிலப்பகுதிகள் ஆகியன தவிர்த்த நிலையிலேயே இந்த 60 வேலி நிலம் விற்பனையானதாக அறியமுடிகிறது.

நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சியின் எல்லைகளாகக் கிழக்கில் மீசெங்கோடு, தெற்கில் பாண்டிகுலாசனிப்புரம், மேற்கில் நெல்வேலி, வடக்கில் பைஞ்ஞீலி ஆகிய ஊர்கள் இருந்தமையை இரண்டு ஆவணங்கள் படம்பிடிக்கின்றன. இந்த ஆவணத்தில் சான்றாளர்களாகத் தொடையூர் மத்தியஸ்தர் உய்யநின்றாடுவான் வாளவரிசன் கையெழுத்திட்டுள்ளார்.

நச்சினார்க்கினியனும் தற்குறிகளும்

இந்தக் குறிச்சி ஆவணங்களில் நம்மைக் கவர்வது நச்சினார்க்கினியன் என்ற அழகிய தமிழ்ப் பெயரும் அக்காலத்தே இப்பகுதியில் இருந்த பல ஊர்களின் பெயர்களுமாகும். கையெழுத்தாளர்களுள் சிலர் தற்குறிகளாக இருந்தமையால் எழுதத் தெரிந்த வேறு சிலர் அவர்களுக்காகக் கையெழுத்திட்டுள்ளனர். இப்படி மாற்றுக் கையெழுத்திட்டவர்கள், முன்னவர் ‘சயிஞ்ஞாதன்மை’ (தற்குறி) அதனால் இக்கையெழுத்து என்று தெளிவாகச் சுட்டியுள்ளனர்.

தொடையூர் சபை உறுப்பினர்கள் சிலரால் நானூற்றுவன் குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சி நிலம் நான்கு முறை விற்பனைக்கு ஆளாகியது. அந்நிலத்தொகுதிகளின் பெரும்பகுதியைத் தந்தையும் மகனுமான கேரளத்தவர்களே வாங்கியதையும் அவர்களுள் மகன், வாங்கிய கையோடு பைஞ்ஞீலிக் கோயிலுக்கு அதை உரிமை மாற்றம் செய்ததையும் வெளிச்சமிடும் இந்நான்கு ஆவணங்களும் பிற்சோழராட்சியின் இறுதிக் காலத்தே, இப்பகுதியில் நிலவிய சமூக, பொருளாதாரச் சூழல்களையும் கோயில் தொடர்ந்து நிலப்பற்றாளராகவே நீடித்ததையும் வெளிப்படுத்துவதோடு, அக்கால ஆவண நடைமுறைகளையும் கண்முன் வைக்கின்றன. காலம் காத்துத் தந்திருக்கும் இந்தக் குறிச்சி ஆவணங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றுக்குப் பைஞ்ஞீலிக் கோயிலின் கொடை என்றே சொல்லலாம்.

குடக்கூத்து

இராகலைக்கோவன்

பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடற்கலை பற்றி அதிகம் பேசும் நூலாகச் சிலப்பதிகாரத்தைச் சொல்லலாம். அரங்கேற்று காதை, கானல்வரி, ஊர்காண்காதை, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, நடுகற்காதை எனச் சிலம்பின் பல காதைகளில் ஆடற்கலைத் தரவுகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ‘பாட்டும் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து’ ஆடிய மாதவி, பதினோராடல்களையும் நிகழ்த்திப் பெருமிதமுற்றதைக் கடலாடு காதையில் காண்கிறோம். அந்தப் பதினோராடல்களில் ஒன்றுதான் குடக்கூத்து.

‘வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீள்நிலமளந்தோன் ஆடிய குடம்’ என்று இவ்வாடலை ஆடியவர், ஆடிய இடம் சுட்டும் சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து, ஆழ்வார் பெருமக்களும் இதை நிகழ்த்தியவர் திருமாலே என்பதை உறுதி செய்கின்றனர். ‘குடத்தை எடுத்தேறவிட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே’ என்று ஆண்டாளும், ‘குடமாடு கூத்தா’ என்று பெரியாழ்வாரும் கொண்டாடும் இந்தக் குடக்கூத்து விநோதக்கூத்து வகையைச் சேர்ந்தது.

குடக்கூத்தின் பின்னணியில் ஒரு கதை உண்டு. வாணன் என்னும் அசுரனின் மகள் உழையிடம் மன்மதன் மகன் அநிருத்தனுக்குக் காதல். அதை விரும்பாத வாணன் அநிருத்தனைப் பிடித்துத் தம் தலைநகரில் சிறையிட்டார். அவனை மீட்கப் பல கடவுளர்கள், ‘சோ’ நகருக்கு வருகின்றனர். அனைவருமே, திரைப்படங்களில் காட்டுமாறு புனைவடிவங்கள் கொண்டு கூத்தாடுநர்கள்போல் ஆடியவாறே நகருக்குள் நுழைந்து அநிருத்தனை மீட்க முயல்கின்றனர். மாதவியின் பதினோராடல்களில் சில அவர்களால் இங்கு நிகழ்த்தப்பட்டவையே. அவற்றுள் குடக்கூத்து திருமால் ஆடியது. பல குடங்களுடன் அவர் ஆடியதைப் பெரியாழ்வார் பதிவு செய்துள்ளார்.

சிலப்பதிகாரம் அடையாளப்படுத்தும் பதினோராடல்களில், இக்குடக்கூத்தே தமிழ் மக்களால் போற்றி ஏற்கப்பட்ட கலை வடிவமாக அமைந்ததைத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாகக் கிடைக்கும் குடக்கூத்துச் சிற்பங்கள் நிறுவுகின்றன. பிற்பல்லவர் காலமான பொதுக்காலம் 8ஆம் நூற்றாண்டிலிருந்து பிற்சோழர் காலமான 12ஆம் நூற்றாண்டு வரையில் இவ்வாடல் தமிழ்ச் சமுதாயத்தில் பரவலாகப் பயிலப்பட்டது.

இதுநாள்வரை பார்வைக்குக் கிடைத்திருக்கும் தமிழ்நாட்டுக் குடக்கூத்துச் சிற்பங்களுள் காலத்தால் முற்பட்டது சிராப்பள்ளி மாவட்டம் திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர் கோயில் துணைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. கால்களைக் குறுக்கீடு செய்து கண்ணன் ஆடுமாறு போலக் காட்டப்பட்டுள்ள இதில், குடம் அவரது இடக்கையின் மேற்பகுதியில் உள்ளது. வலக்கை நெகிழ்கையாக, தலையை வலப்புறம் சாய்த்துக் கண்ணன் நிகழ்த்தும் இந்த ஆடல் திருக்கோலம் அழகின் உச்சமெனலாம்.

சிவலோகநாதர் கோயில், கிராமம், விழுப்புரம் மாவட்டம்

பல குடங்களுடன் ஆடுமாறு அமைந்த சிற்பம் விழுப்புரம் மாவட்டம் கிராமம் எனும் ஊரிலுள்ள சிவலோகநாதர் கோயிலில் அமைய, இக்குடங்கள் ஆடும் நிலையிலேயே தூக்கி எறியப்பட்டுத் தோளிலோ, மேற்கையிலோ கொள்ளப்பட்டமையை ஐயாறப்பர் கோயில் சுற்றுமாளிகைத் தூண் சிற்பம் வழி அறியமுடிகிறது. இதுநாள்வரை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தால் அறியப்பட்டிருக்கும் 40 குடக்கூத்துச் சிற்பங்களின் பரவலான ஆய்வு பல அரிய தரவுகளைத் தந்துள்ளது.

ஆடலுக்குப் பயன்பட்ட குடத்தின் அளவு, கூத்தில் குடத்தின் நிலை, கூத்து நிகழ்த்திய முறை,குடமேந்திய கை, குடமேந்தாக் கை இவற்றின் இசைவான அசைவுகள்வழி காக்கப்படும் உடலின் சமன்நிலை, கால்நிலை, தலைச்சாய்வு, ஆடையணிகள் உள்ளிட்ட ஒப்பனை, இக்கூத்துக்கு இசையளித்த கருவிகள், அவற்றை இயக்கிய கலைஞர்கள் என இச்சிற்பங்கள் அள்ளித்தரும் கலையியல் செய்திகள் அளப்பரியன. இச்சிற்பங்களில் பெரும்பாலன ஆடவர்களையே குடக்கூத்தர்களாகக் காட்டினாலும், சிலவற்றில் பெண்களும் குடமேந்தியுள்ளனர்.

குடக்கூத்தாடும் பெண்

இசையற்ற கூத்தாகவே இது நிகழ்த்தப்பட்டதை 28 சிற்பங்கள் உணர்த்த, 12 சிற்பங்களில் உடன்கூட்டமாகத் தாளம், உடுக்கை, இடக்கைக் கலைஞர்களைக் காணமுடிகிறது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்திலுள்ள குடக்கூத்துக் கலைஞர் குடமுழவின் தாளத்திற்கேற்ப ஆடுவது வேறெங்கும் காணாத சிறப்பாகும். அவரது ஒருகால் தரையில் ஊன்றியிருக்க, மற்றொரு கால் இடுப்பளவு உயர்ந்துள்ளது. இடப்புறம் சாய்ந்தாடும் அவரது இடக்கை உடலின் சமநிலை காக்க, நெகிழ்கையாய்த் தாழ்ந்துள்ளது. குடமோ வல முழங்கையில்.

குடக்கூத்துக் கலைஞர், தஞ்சாவூர்

கோயில்களின் பல கட்டுமான உறுப்புகளில் இடம்பெற்றுள்ள இக்குடக்கூத்துச் சிற்பங்கள் மிகுதியும் காணப்படுவது தாங்குதளத்தில் அல்லது கூரையுறுப்புகளில் ஒன்றான வலபியில்தான். இறைக்கோட்டங்களுக்கு மேலமையும் மகரதோரணங்களிலும் குடக்கூத்தர்களைக் காணலாம். கூரையின் முன்னிழுப்பான கபோதத்தின் கூடுகளிலும் இக்கூத்தர்கள் சிற்றுருவச் சிற்பங்களாய் இளநகை சிந்துகின்றனர்.

மாதவியின் ஆடல்களுள் ஒன்றான இக்குடக்கூத்து, சோழர் காலத்தில் மிகப் பரவலாக நிகழ்த்தப் பெற்றதைச் சிற்பப் பேராசான்களின் உளிச்செதுக்கல்கள் தெள்ளிதின் உணர்த்துகின்றன. கையின் மேற்பகுதி, முழங்கை அருகில், தோள் மீது எனப் பெரும்பாலான சிற்பங்களில் காட்சிதரும் குடம், தலைக்கு மாறிக் குடக்கூத்து கரகமான வரலாற்றையும் கும்பகோணம் அருகே திருச்சத்திமுற்றத்துக் கோயிலிலுள்ள நாயக்கர் காலத் தூண் சிற்பம் கண்முன் காட்சியாகக் காட்டிக் கண்சிமிட்டுகிறது.