ஓடிப்போனவர்களும் ஒற்றிவைத்தவர்களும்

இரா. கலைக்கோவன்

சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள திருப்பைஞ்ஞீலி நீலிவனேசுவரர் கோயில், குடைவரையும் கற்றளியும் பெற்ற வளாகமாகும். இக்கோயிலுக்கும் மக்களுக்குமான ஒன்பது நூற்றாண்டுக் கால வாழ்க்கை இவ்வளாகத்துள்ள 71 கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது. அவற்றுள் ஒன்றுதான், வரி கட்டாமல் சிலர் ஓடியதால், அந்த வரிக்குப் பொறுப்பானவர்கள் அவர்கள் நிலத்தை ஒற்றிவைத்து வரிகட்டிய வரலாற்றைப் பகிர்ந்துகொள்கிறது.

பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ நாடு மூன்றாம் இராஜராஜரின் ஆட்சியிலிருந்தது. திருப்பைஞ்ஞீலிக்கு அருகில் அதே மண்ணச்சநல்லூர் வட்ட ஊராக இன்றும் விளங்கும் துடையூர் அக்காலத்தே பிராமணக் குடியிருப்பாக விளங்கியது. அங்கு ஊராட்சியாக இருந்த சபையின் உறுப்பினர்களுள் அறுவர்தான் இக்கல்வெட்டு உருவாகக் காரணமானவர்கள்.

துடையூரிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்டுச் சிறுசாத்தமங்கலம் என்ற பெயரேற்றிருந்த சிற்றூரில் அவர்களுக்கு உரிமையுடைய விளைநிலம் இருந்தது. அக்காலத்தே வழக்கிலிருந்த வருவாய்ப் பதிவான பொத்தகப்படி இச்சிறுசாத்தமங்கலம் இறைவனுக்கு அளிக்கப்பட்ட தேவதான ஊராக, இறைவன் பெயரேற்று அவர் பெயரிலான காணியாக விளங்கியது.

நில உரிமையாளர்களிடம், ‘கடமை’ என்ற பெயரில் விளைவாகவோ, காசாகவோ வரி பெறப்பட்ட காலம் அது. அதை உரியவரிடம் பெற்று அரசுக்குச் செலுத்தும் பொறுப்பு ஊரவையைச் சார்ந்தது. துடையூர் நிலங்களுக்கான இந்தக் கடமை வரிக்குப் பொறுப்பேற்றிருந்தவர் ஊர் சபையின் உறுப்பினரான வீற்றிருந்தான் சீரிளங்கோ. விளைவு குன்றியதாலோ அல்லது வேறு காரணங்களாலோ இந்த உறுப்பினர் அறுவரில் மூவர் வரி செலுத்த முடியாமல் ஊரைவிட்டே ஓடிப்போயினர். ‘இவர்கள் பேரால் இவ்வூர்க் கடமைக்கு இவர்கள் முன்னின்று கடமையிறாதே ஓடிப்போகையில்’ என்று இச்செயலை வெளிச்சப்படுத்துகிறது கல்வெட்டு.

அதனால், வரித்தொகுப்பின் அளவு குறைந்து, ஊரவை சிலருக்குத் தர வேண்டியிருந்த தொகையைத் தரக்கூடவில்லை. ‘கூபகராமர் அடைப்பில் கோடுமலையாளருக்கு இவ்வூர்க் கடமையில் தர எழுதின காசு’ தரமுடியவில்லை என்று இதைக் கல்வெட்டு சுட்டுகிறது. துடையூர்க் கடமைக்குப் பொறுப்பேற்றிருந்து பற்றாளரான இளங்கோ, இவ்விழப்பை நேர்செய்வதற்காகச் சிறுசாத்தமங்கலத்தில் தமக்கும் பிற ஐவருக்கும் உரிமையுடையதாய் இருந்த நிலத்தைப் பைஞ்ஞீலிக் கோயில் நிருவாகத்திடம் ஒற்றிக்கு வைத்துக் கோயில் கருவூலத்திலிருந்து 2500 காசு பெற முடிவு செய்தார். ‘ஒற்றித் தீட்டு’ என்ற பெயரில் அதற்கான ஆவணம் எழுதப்பெற்றது.

அதன்படி, துடையூர் ஊர்க்கடமைக்காகச் சிறுசாத்தமங்கல நிலம் புரட்டாசித் திங்களில் ஒற்றிக்கு வைக்கப்படுவதாகவும் இரண்டு திங்கள்களில், அதாவது கார்த்திகைத் திங்களுக்குள் இந்த ஒற்றிக்காகப் பெறப்படும் காசை அதற்கான வட்டியுடன் ஒற்றி வைப்பவர் கோயில் கருவூலத்தில் செலுத்துவதாகவும் ஆவணம் அமைந்தது.100காசுக்குத் திங்களுக்கு 4 காசென வட்டி முடிவானது.

கார்த்திகைக்குள் கருவூலப் பணத்தைச் செலுத்த முடியாது போனால், கோயிலே நிலத்தைக் கொள்ளலாம் என்றும், ஒற்றிக்காகப் பெறப்பட்ட முதலும் அதற்கான வட்டியுமே அந்நிலத்திற்கான விலையாகலாம் என்றும் ஒற்றி வைத்தவர் இசைவு தெரிவித்து ஆவணத்தில் கையெழுத்திடக் கருவூலம் தொகையளிக்க, துடையூர்க் கடமை முறைப்படிச் செலுத்தப்பட்டது.

இந்த ஆவணத்தில் இளங்கோவுடன் நிலஉரிமையாளர்களில் ஓடிப்போனவர்கள் தவிர்த்த பிற இரு நிலஉரிமையாளர்களும் கையெழுத்திட்டனர். ஆவணச் சான்றாளர்களில் இருவர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தமையால், அவர்கள் சார்பில் எழுதத் தெரிந்த வேறு இருவர் கையெழுத்திட்டனர்.

ஒற்றிப் பணம் திருப்பித்தரப்பட்டதா, நிலம் மீட்கப்பட்டதா என்பதெல்லாம் அறிய வழியில்லை என்றாலும், பைஞ்ஞீலிக் கோயிலில் கண்சிமிட்டும் இந்த ஆவணப் பதிவு, 13ஆம் நூற்றாண்டளவில் இப்பகுதியில் விளங்கிய ஊராட்சி, கோயிலாட்சி, வாழ்வியல் நடைமுறைகள், ஆவண-நாணய வழக்காறுகள், மக்களின் இயல்புகள் என எத்தனை வரலாற்றுத் தரவுகளை வழங்குகிறது! எனில், இத்தகு காலப் பதிவுகளைக் கருத்தாய்க் காக்காமல் திருப்பணிகளின் பெயரால் சிதறடிப்பது அறமாகுமா?