மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 13. எது பெரிது? இது பெரிது!

அன்புள்ள வாருணி, நாயன்மார்களைப் பற்றிப் பேச முனைந்த காலங்களில் எல்லாம் நான் கண்ணப்பரைத் தனித்துக் குறிப்பிட்டுச் சொல்லியதை நினைவுபடுத்துகிறேன். சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் அறுபத்து மூவரையும் வரிசைப்படுத்தும்போது கண்ணப்பரை, ‘கலை மலிந்த சீர்நம்பி’ என்பார். அறுபத்து மூவரில் நாவுக்கரசராலும் சம்பந்தராலும் சிறக்க அறிமுகமாகும் பேறும் கண்ணப்பருக்குக் கிடைத்தது. அவரைக் குறித்துக் கல்லாடரும் நக்கீரதேவரும் பாடிய இரண்டு சிறப்பான இலக்கியங்கள் 11ஆம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் இராஜராஜன் திருவாயில் வடபுறத்தே கண்ணப்பரின் வாழ்க்கையைச் சிற்பக்களஞ்சியமாகப் படம்பிடித்துள்ளதை நாம் அங்குச் சென்றிருந்தபோது உனக்குக் காட்டியிருக்கிறேன். ‘கடும் பகலில் காதலொடு உடும்படித்து’ அவர் இறைவனுக்குப் படையலிட்டதாக நக்கீரர் குறிப்பதைத்தான், கலை மலிந்த சீர் நம்பியாகக் காட்டியிருக்கிறார் சுந்தரர். இலக்கியங்கள் ஒன்றோடொன்று எங்காவது இணைந்தோடும். அந்த இழைகளை அறிந்து இரசிக்க நாமும் கலை மலிந்த சீர் உள்ளம் பெறவேண்டும்.

என்னவோ தெரியவில்லை வாருணி, கண்ணப்பரைப் பற்றிப் பேசவோ, எழுதவோ தொடங்கினால் என் உள்ளம் அந்தக் காட்டு மனிதரின் இறைக்காதலில் கரைந்துபோகிறது. சேக்கிழாரைப் படித்திருந்தால் நீ என்னைப் புரிந்துகொள்வாய். சிவபெருமான் கண்ணில் குருதி கண்டதும் கண்ணப்பர் பட்ட பாடுகள்! கனியக்கனியக் காதல் இல்லையேல் அப்படியொரு தவிப்பும் துடிப்பும் இயலுவதா? சேக்கிழாரின் ஒவ்வொரு சொல்லும் கண்ணப்பரின் தூய அன்பு காட்டும் மின்மினிகள்.

காலந்தோறும் சிற்பிகளும் கண்ணப்பரை நினைவுகூர்ந்துள்ளனர். பல்லவப் படைப்பாய் நான் கண்ணப்பரைக் கண்டு மகிழ்ந்த முதல் இடம் தக்கோலம் கோயில்தான். கண்ணகழும் கண்ணப்பரை எப்படியாவது தம் படைப்பில் காட்டிவிட வேண்டும் என்ற தணியாத ஆசை, அந்தச் சிற்பியை இடம்தேடித் தவிக்க வைத்தது போலும்! சுவருக்கு மேல் வரும் கூரையுறுப்புகளில் சிவபெருமானின் பூதப்படையைக் காட்ட ஆகமங்கள் அனுமதித்திருக்கும் இடமான எழுதகம் அந்தச் சிற்பியின் தேவையை உணர்ந்து இடமளித்தது. முகமண்டப வாயிலுக்கு நேர் இருக்குமாறு கண்ணப்பர். ‘பல்லவர் கட்டுத்தளிகள்’ எனும் எங்கள் நூலில், அந்த அழகிய படைப்பை இருக்குமாறே காட்டியிருக்கிறேன், நீ படித்திருக்கலாம்.

சோழர்கள் கண்ணப்பரைக் கொண்டாடிக் கொண்டனர். சிற்றுருவச் சிற்பங்களாக அங்கே, இங்கே எனப் பார்வை படரும் இடமெல்லாம் காட்சியான கண்ணப்பரைக் கோபுரத் தொகுதியாக்கியவர் நித்தவிநோதரான இராஜராஜர். அவரைத் தொடர்ந்து அதே அமைப்பில் கண்ணப்பர் வாழ்க்கையைப் பிற்சோழர் கோயில்கள் சில படம்பிடித்தாலும், மதுரை மீனாட்சிக் கோயிலில் நான் கண்ட காட்சி, நாயக்கர்கள் அந்தத் திண்ணனாரை எப்படி நேசித்தனர் என்பதை உணர்த்தியது.

மீனாட்சிக் கோயிலின் மூலை முடுக்கெல்லாம் வரலாறு ஒளிந்திருக்கிறது என்றாலும், அது பேருருவாய் எழுந்து நிற்பது ஆயிரக்கால் மண்டபத்தில்தான். அங்கேதான் வாருணி, கண்ணப்பரும் வானளாவி நிற்கிறார். என் கோயில் வாழ்க்கையில் இந்த நாற்பதாண்டுக் காலத்தில் தமிழ்நாட்டின் வேறெந்த இடத்திலும் இப்படி ஒரு பெருவடிவினராய்க் கண்ணப்பரைக் கண்டதில்லை.

வாயிற்புறப் பெருந்தூண் ஒன்றில் ஒன்றியுள்ள அவரது வேட்டுவக்கோலம் காதணிகள், கழுத்தணிகள், தோள், கையணிகள், இடுப்பணிகள் மிளிர அடர்த்தியான மீசையும் வீரக்கழலும் பெற்று ஒளிர்கிறது. இரண்டு திருவடிகளிலும் அவர் அணிந்துள்ள மிதியடிகள் மேம்பட்ட வடிவின. இருக்கையில் அமர்ந்தாற் போன்ற நிலையில் வலப்பாதம் தரையில் ஊன்ற, இடப்பாதம் கற்றளம் ஒன்றில் தாங்கலாக இருத்தப்பட்டுள்ளது. காட்டுவாசிகளுக்கே உரிய இறகுகள் பரவிய தலையணியுடன், முடிச்சிட்ட முடிக்கற்றை பெருங்கொண்டையாய் இடத்தோளில் சரிய, கண்ணப்பரின் வலத்தோள் பின்புறம் அம்புக்கூடு. இடத்தோளிலோ, மாட்டிய வில். வலக்கை அம்பு கண்ணகழ்ந்து முடித்த நிறைவிலிருக்க, இட உள்ளங்கையில் அகழப்பட்ட கண்.

கண்ணப்பரின் குறுந்தாடி பரவிய முகம் அவர் வலக்கண் இழந்திருப்பது காட்ட, அங்கு அலையடிக்கும் உணர்வுகளோ, இறைவனுக்கு உரியது செய்ய வாய்த்த பெருமிதத்தையும் ஈந்துவந்து நிற்கும் அவரது பேரின்பத்தையும் வெளிச்சப்படுத்தி ஈர்க்கின்றன. அவரது இடப்பாதம் தங்கியுள்ள கற்றளத்தின் பின் சதுர ஆவுடையாருடன் இலிங்கம். அந்த இலிங்கத்திற்குக் குடையாக ஐந்துதலைப் பாம்பு படம் விரித்துள்ளது.

வழக்கமாய்க் கண்ணப்பர் சிற்பங்களில் இலிங்கத்திலிருந்து கையொன்று வெளிப்பட்டு, அவரது கண் அகழும் முயற்சியைத் தடுக்குமாறு காட்சியமையும். ஆனால், இங்கு அப்படி எந்தத் தடுத்தலும் செய்யாது அமைதிகாக்கும் இலிங்கம். அது விளக்குவது இதைத்தான் வாருணி, கண்ணப்பர் இன்னமும் கண் அப்பவில்லை. கண்ணை அகழ்ந்து கையில் கொண்டவராய்க் காட்சிதரும் அவரது பேருள்ளம் காட்டவே, கை நீட்ட விரும்பாது தொடர்ந்து நிகழவிருப்பன காணக் காத்திருக்கிறார் இறைவன்.

அவருக்குத் தெரியாதது இல்லை. ஆனால், இந்த நாடகமெல்லாம் உள்ளப் பூசையின் உயர்வறியச் செய்யத்தானே! ஆகமப் பூசையினும் அருளாளரின் ஆன்ம வழிபாடே தமக்கு உகந்தது என்று உணர்த்தத்தானே! சேக்கிழாரின் பாடலடிகள் எப்படியெல்லாம் பின்னிப்பின்னி இவை பற்றிப் பேசுகின்றன. எண்ணிப்பார் வாருணி, இலக்கியம் நூறு அடிகளில் காட்டும் காட்சி, ஓர் உளியின் உயிர்த்துடிப்பில் கல்லைக் கனியாக்கிக் காட்சியுமாக்கிக் கருத்தில் நிறைப்பது அற்புதம்தானே!

அன்பு வாருணி, இந்தச் சிற்பம் என்னை ஈர்த்தமைக்கு இது மட்டும் காரணமல்ல. நாயக்கச் சிற்பியின் கைவிரல் அசைவுகள் பெரிதினும் பெரிது காட்டியுள்ளன. சிற்பக்காட்சியை ஒருமுறை பார். வானளாவிய கண்ணப்பர்! சிவலிங்கமோ சின்னஞ்சிறியதாய் அவர் முழங்காலளவு. கண்ணை அகழ வைத்தவர் கடுகாய்ச் சிறுக்க, கண்ணை அளித்தவர் மலையாய் நிமிர்ந்துள்ள இந்த நுணுக்கம்தான் சிற்பியை நமக்கு அடையாளப்படுத்துகிறது. எது பெரிது என்ற கேள்விக்கே இடமின்றி, இது பெரிது என்று காட்டியுள்ள இந்தப் படிநிலைதான் ஒரு சிற்பியைக் காலம் கடந்தும் வாழவைக்கிறது.

யாருக்கும் தோன்றாத எக்காலத்தும் வடிவம் பெறாத இந்தப் புதிய சிந்தனை எந்த உள்ளத்தில் ஊற்றெடுத்ததோ, அந்த உள்ளமே பத்திமையின் முத்திரையாய் நம்மையும் நிறைக்கிறது, வரலாற்றையும் வாழவைக்கிறது. ஒரு கண்ணசைவில் இது போன்ற சிற்பங்களைக் கடந்துவிடமுடியாதபடி காலம் நம்மைக் கட்டிப் போடுகிறதே, அதுதான் வாருணி, அந்தச் சிற்பியின் வெற்றி.

அன்புடன், 

இரா. கலைக்கோவன்.

பின்னூட்டமொன்றை இடுக