மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 13. எது பெரிது? இது பெரிது!

அன்புள்ள வாருணி, நாயன்மார்களைப் பற்றிப் பேச முனைந்த காலங்களில் எல்லாம் நான் கண்ணப்பரைத் தனித்துக் குறிப்பிட்டுச் சொல்லியதை நினைவுபடுத்துகிறேன். சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் அறுபத்து மூவரையும் வரிசைப்படுத்தும்போது கண்ணப்பரை, ‘கலை மலிந்த சீர்நம்பி’ என்பார். அறுபத்து மூவரில் நாவுக்கரசராலும் சம்பந்தராலும் சிறக்க அறிமுகமாகும் பேறும் கண்ணப்பருக்குக் கிடைத்தது. அவரைக் குறித்துக் கல்லாடரும் நக்கீரதேவரும் பாடிய இரண்டு சிறப்பான இலக்கியங்கள் 11ஆம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் இராஜராஜன் திருவாயில் வடபுறத்தே கண்ணப்பரின் வாழ்க்கையைச் சிற்பக்களஞ்சியமாகப் படம்பிடித்துள்ளதை நாம் அங்குச் சென்றிருந்தபோது உனக்குக் காட்டியிருக்கிறேன். ‘கடும் பகலில் காதலொடு உடும்படித்து’ அவர் இறைவனுக்குப் படையலிட்டதாக நக்கீரர் குறிப்பதைத்தான், கலை மலிந்த சீர் நம்பியாகக் காட்டியிருக்கிறார் சுந்தரர். இலக்கியங்கள் ஒன்றோடொன்று எங்காவது இணைந்தோடும். அந்த இழைகளை அறிந்து இரசிக்க நாமும் கலை மலிந்த சீர் உள்ளம் பெறவேண்டும்.

என்னவோ தெரியவில்லை வாருணி, கண்ணப்பரைப் பற்றிப் பேசவோ, எழுதவோ தொடங்கினால் என் உள்ளம் அந்தக் காட்டு மனிதரின் இறைக்காதலில் கரைந்துபோகிறது. சேக்கிழாரைப் படித்திருந்தால் நீ என்னைப் புரிந்துகொள்வாய். சிவபெருமான் கண்ணில் குருதி கண்டதும் கண்ணப்பர் பட்ட பாடுகள்! கனியக்கனியக் காதல் இல்லையேல் அப்படியொரு தவிப்பும் துடிப்பும் இயலுவதா? சேக்கிழாரின் ஒவ்வொரு சொல்லும் கண்ணப்பரின் தூய அன்பு காட்டும் மின்மினிகள்.

காலந்தோறும் சிற்பிகளும் கண்ணப்பரை நினைவுகூர்ந்துள்ளனர். பல்லவப் படைப்பாய் நான் கண்ணப்பரைக் கண்டு மகிழ்ந்த முதல் இடம் தக்கோலம் கோயில்தான். கண்ணகழும் கண்ணப்பரை எப்படியாவது தம் படைப்பில் காட்டிவிட வேண்டும் என்ற தணியாத ஆசை, அந்தச் சிற்பியை இடம்தேடித் தவிக்க வைத்தது போலும்! சுவருக்கு மேல் வரும் கூரையுறுப்புகளில் சிவபெருமானின் பூதப்படையைக் காட்ட ஆகமங்கள் அனுமதித்திருக்கும் இடமான எழுதகம் அந்தச் சிற்பியின் தேவையை உணர்ந்து இடமளித்தது. முகமண்டப வாயிலுக்கு நேர் இருக்குமாறு கண்ணப்பர். ‘பல்லவர் கட்டுத்தளிகள்’ எனும் எங்கள் நூலில், அந்த அழகிய படைப்பை இருக்குமாறே காட்டியிருக்கிறேன், நீ படித்திருக்கலாம்.

சோழர்கள் கண்ணப்பரைக் கொண்டாடிக் கொண்டனர். சிற்றுருவச் சிற்பங்களாக அங்கே, இங்கே எனப் பார்வை படரும் இடமெல்லாம் காட்சியான கண்ணப்பரைக் கோபுரத் தொகுதியாக்கியவர் நித்தவிநோதரான இராஜராஜர். அவரைத் தொடர்ந்து அதே அமைப்பில் கண்ணப்பர் வாழ்க்கையைப் பிற்சோழர் கோயில்கள் சில படம்பிடித்தாலும், மதுரை மீனாட்சிக் கோயிலில் நான் கண்ட காட்சி, நாயக்கர்கள் அந்தத் திண்ணனாரை எப்படி நேசித்தனர் என்பதை உணர்த்தியது.

மீனாட்சிக் கோயிலின் மூலை முடுக்கெல்லாம் வரலாறு ஒளிந்திருக்கிறது என்றாலும், அது பேருருவாய் எழுந்து நிற்பது ஆயிரக்கால் மண்டபத்தில்தான். அங்கேதான் வாருணி, கண்ணப்பரும் வானளாவி நிற்கிறார். என் கோயில் வாழ்க்கையில் இந்த நாற்பதாண்டுக் காலத்தில் தமிழ்நாட்டின் வேறெந்த இடத்திலும் இப்படி ஒரு பெருவடிவினராய்க் கண்ணப்பரைக் கண்டதில்லை.

வாயிற்புறப் பெருந்தூண் ஒன்றில் ஒன்றியுள்ள அவரது வேட்டுவக்கோலம் காதணிகள், கழுத்தணிகள், தோள், கையணிகள், இடுப்பணிகள் மிளிர அடர்த்தியான மீசையும் வீரக்கழலும் பெற்று ஒளிர்கிறது. இரண்டு திருவடிகளிலும் அவர் அணிந்துள்ள மிதியடிகள் மேம்பட்ட வடிவின. இருக்கையில் அமர்ந்தாற் போன்ற நிலையில் வலப்பாதம் தரையில் ஊன்ற, இடப்பாதம் கற்றளம் ஒன்றில் தாங்கலாக இருத்தப்பட்டுள்ளது. காட்டுவாசிகளுக்கே உரிய இறகுகள் பரவிய தலையணியுடன், முடிச்சிட்ட முடிக்கற்றை பெருங்கொண்டையாய் இடத்தோளில் சரிய, கண்ணப்பரின் வலத்தோள் பின்புறம் அம்புக்கூடு. இடத்தோளிலோ, மாட்டிய வில். வலக்கை அம்பு கண்ணகழ்ந்து முடித்த நிறைவிலிருக்க, இட உள்ளங்கையில் அகழப்பட்ட கண்.

கண்ணப்பரின் குறுந்தாடி பரவிய முகம் அவர் வலக்கண் இழந்திருப்பது காட்ட, அங்கு அலையடிக்கும் உணர்வுகளோ, இறைவனுக்கு உரியது செய்ய வாய்த்த பெருமிதத்தையும் ஈந்துவந்து நிற்கும் அவரது பேரின்பத்தையும் வெளிச்சப்படுத்தி ஈர்க்கின்றன. அவரது இடப்பாதம் தங்கியுள்ள கற்றளத்தின் பின் சதுர ஆவுடையாருடன் இலிங்கம். அந்த இலிங்கத்திற்குக் குடையாக ஐந்துதலைப் பாம்பு படம் விரித்துள்ளது.

வழக்கமாய்க் கண்ணப்பர் சிற்பங்களில் இலிங்கத்திலிருந்து கையொன்று வெளிப்பட்டு, அவரது கண் அகழும் முயற்சியைத் தடுக்குமாறு காட்சியமையும். ஆனால், இங்கு அப்படி எந்தத் தடுத்தலும் செய்யாது அமைதிகாக்கும் இலிங்கம். அது விளக்குவது இதைத்தான் வாருணி, கண்ணப்பர் இன்னமும் கண் அப்பவில்லை. கண்ணை அகழ்ந்து கையில் கொண்டவராய்க் காட்சிதரும் அவரது பேருள்ளம் காட்டவே, கை நீட்ட விரும்பாது தொடர்ந்து நிகழவிருப்பன காணக் காத்திருக்கிறார் இறைவன்.

அவருக்குத் தெரியாதது இல்லை. ஆனால், இந்த நாடகமெல்லாம் உள்ளப் பூசையின் உயர்வறியச் செய்யத்தானே! ஆகமப் பூசையினும் அருளாளரின் ஆன்ம வழிபாடே தமக்கு உகந்தது என்று உணர்த்தத்தானே! சேக்கிழாரின் பாடலடிகள் எப்படியெல்லாம் பின்னிப்பின்னி இவை பற்றிப் பேசுகின்றன. எண்ணிப்பார் வாருணி, இலக்கியம் நூறு அடிகளில் காட்டும் காட்சி, ஓர் உளியின் உயிர்த்துடிப்பில் கல்லைக் கனியாக்கிக் காட்சியுமாக்கிக் கருத்தில் நிறைப்பது அற்புதம்தானே!

அன்பு வாருணி, இந்தச் சிற்பம் என்னை ஈர்த்தமைக்கு இது மட்டும் காரணமல்ல. நாயக்கச் சிற்பியின் கைவிரல் அசைவுகள் பெரிதினும் பெரிது காட்டியுள்ளன. சிற்பக்காட்சியை ஒருமுறை பார். வானளாவிய கண்ணப்பர்! சிவலிங்கமோ சின்னஞ்சிறியதாய் அவர் முழங்காலளவு. கண்ணை அகழ வைத்தவர் கடுகாய்ச் சிறுக்க, கண்ணை அளித்தவர் மலையாய் நிமிர்ந்துள்ள இந்த நுணுக்கம்தான் சிற்பியை நமக்கு அடையாளப்படுத்துகிறது. எது பெரிது என்ற கேள்விக்கே இடமின்றி, இது பெரிது என்று காட்டியுள்ள இந்தப் படிநிலைதான் ஒரு சிற்பியைக் காலம் கடந்தும் வாழவைக்கிறது.

யாருக்கும் தோன்றாத எக்காலத்தும் வடிவம் பெறாத இந்தப் புதிய சிந்தனை எந்த உள்ளத்தில் ஊற்றெடுத்ததோ, அந்த உள்ளமே பத்திமையின் முத்திரையாய் நம்மையும் நிறைக்கிறது, வரலாற்றையும் வாழவைக்கிறது. ஒரு கண்ணசைவில் இது போன்ற சிற்பங்களைக் கடந்துவிடமுடியாதபடி காலம் நம்மைக் கட்டிப் போடுகிறதே, அதுதான் வாருணி, அந்தச் சிற்பியின் வெற்றி.

அன்புடன், 

இரா. கலைக்கோவன்.

சோழங்கநல்லூரின் கதை

மு. நளினி, இரா. கலைக்கோவன்

சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ளது திருப்பைஞ்ஞீலி. ‘காதல் செய்பவர் பெறுவதென், சொலும் ஆரணீயவிடங்கரே’ என்று ஏழாம் திருமுறையில் சுந்தரர் கேள்விகேட்டு, மறுமொழிக்காய் நின்றது இவ்வூர் நீலிவனநாதர் கோயிலில்தான். அப்பருக்குச் சோறூட்டியதால் சோறுடைநாயனாராய் அறியப்படுபவரும் இக்கோயில் இறைவன்தான். சம்பந்தரின் பிள்ளைத் திருவடிகளும் இவ்வளாகத்தில் பதிகம் பாடப் பதிந்து சென்றன. தேவார மூவராலும் பாடப்பெற்ற தமிழ்நாட்டின் பெருமை மிகு சில கோயில்களுள் இப்பைஞ்ஞீலிப் பெருங்கோயிலும் ஒன்று.

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களின் களஆய்வுகள் இங்குப் பதிவாகியுள்ள 71 கல்வெட்டுகளின் பாடங்களையும் வெளிக் கொணர்ந்துள்ளன. ‘திருப்பைஞ்ஞீலி – கோயிலும் கல்வெட்டுகளும்’ என்ற அம்மையத்தின் அண்மை வெளியீட்டில் கண்கள் பரவிய போதுதான் சோழங்கநல்லூரின் கதை வடிவமானது.

திருப்பைஞ்ஞீலிக் கோயிலில் இரண்டு அம்மன் திருமுன்கள் உள்ளன. இரண்டிலும் நீள்நெடுங்கண்ணி என்ற திருப்பெயருடனேயே இறைவி எழுந்தருளியுள்ளார். புதியவர் வடகிழக்கிலும் பழையவர் வடமேற்கிலும் திருமுன் பெற்றுள்ளனர். சோழங்கநல்லூரின் வரலாறு பேசும் கல்வெட்டுகளுள் இரண்டு, பழைய அம்மன் திருமுன் வடசுவரில் பதிவாகியுள்ளன. தெற்கில் செட்டிமங்கலம், உலகளங்காறநல்லூர் எல்லைகளாக, மேற்கில் சிற்றாம்பூரும் கிழக்கில் பைஞ்ஞீலியும் சோழங்கநல்லூரின் எல்லைகளாக இருந்தன.

இவ்வூரின் வடக்கு எல்லையாகப் பைஞ்ஞீலிக் கோயிலின் தேவதான ஊர்களான குன்றத்தூரும் குளக்குடியும் அமைந்தன. இந்த நான்கு திசை ஊர்களுக்கும் இடையிலிருந்த சோழங்கநல்லூரின் நிலம், குடியிருப்பான நத்தம், குளம் உட்பட்ட அனைத்தும், சுருங்கச் சொல்லின் மொத்த ஊரும் நெடுங்காலத்திற்கு முன்பே இறைவன் பெயரில் திருநாமத்துக்காணியாகக் கோயிலாரால் விலைக்குப் பெறப்பட்டு கோயிலுக்கு உரிமையுடைய ஊராக அவர்கள் பயன்பாட்டில் இருந்தது. வெங்காநத்தம் என்ற இவ்வூரின் பழம்பெயர் சோழங்கநல்லூரானது இந்த விற்பனைக்குப் பிறகுதான். புதிய பெயரேற்றபோதும் வெங்காநத்தம் முன்னொட்டாகவே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது.

இறைவன் பெயரில் கோயில் நிலமாக விளங்கியபோதும் இவ்வூருக்கான வரிகளைக் கோயில் செலுத்தவேண்டியிருந்தது. மூன்றாம் குலோத்துங்கசோழர் ஆட்சிக்காலத்தில் (பொ. கா. 1178-1218) அரசு அலுவலராக இருந்த சோழகோன் என்பார் இக்கோயில் மீது மிகுந்த அக்கறை கொண்டதை இங்குப் பதிவாகியுள்ள கல்வெட்டுகள் சிலவற்றால் அறியமுடிகிறது. அவரே நேரடியாகவும் சில போதுகளில் தம்மினும் அரசருக்கு அண்மையராக இருந்த மற்றோர் உயர் அலுவலரான வாணாதராயர் வழியாகவும் மன்னரிடம் பரிந்துரைத்து இக்கோயில் நிலத்தொகுதிகள் சிலவற்றுக்கு வரி நீக்க ஆணை பெற்றுள்ளார்.

சோழங்கநல்லூர் மீதும் சோழகோனின் கண்கள் விழுந்தன. இறைவனின் வழிபாட்டிற்கும் கோயில் திருப்பணிகளுக்கும் உதவுமாறு சோழங்கநல்லூர் நிலம் 415 வேலியையும் தேவதான இறையிலியாக்கி ஆணை பிறப்பித்தருளுமாறு வாணாதராயர் வழிச் சோழகோன் மூன்றாம் குலோத்துங்கரிடம் வேண்டுதல் வைத்ததை, ‘இந்நிலம் இத்தேவற்கு பூசைக்குந் திருப்பணிக்கும் உடலாக தேவதான இறையிலியாக நிற்கக் கடவதாகப் பெறவேணுமென்று சோழகோன் சொல்லி வரக்காட்டினானாக வாணாதராயன் நமக்குச் சொன்னமையில் இப்படிச் செய்யக் கடவதாகச் சொன்னோம்.’ என்ற மன்னரின் வாய்மொழி ஆணை தெளிவாகப் படம்பிடிக்கிறது.

அரசரின் இந்த வாய்மொழி ஆணையை ஓலையாக எழுதியவர், திருமந்திரஓலை எனும் பொறுப்பிலிருந்த மீனவன் மூவேந்தவேளார் ஆவார். அரசரின் திருமுகமாக அழைக்கப்பெற்ற இந்த ஓலை, கோயில் ஆட்சியருக்கான அறிவிப்பாக அமைந்தது. இத்திருமுகத்தை மேற்கோள் காட்டிக் கோயில் ஆட்சியருக்கும் கணக்கருக்கும் உயர்அலுவலர் வாணாதராயன் ஓலை அனுப்பினார். ‘வெங்காநத்தமான சோழங்கநல்லூர் நன்செயும் காடும் குளமும் கொல்லையும் நத்தமும் உள்பட திருநாமத்துக்காணியாக விலைகொண்ட நிலம் நானூற்று ஒருபத்தைய் வேலியும் இக்கோயிலுக்குப் பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாகப் பெறவேணுமென்று சோழ கோனார் நாயனார்க்கு விண்ணப்பஞ் செய்கையாலே தேவதான இறையிலியாக நிற்பதாக பிரசாதஞ் செய்தருளி திருமுகம் போந்தது இத்திருமுகப்படியே தேவதான இறையிலியாகக் கைக் கொண்டு பூஜையுந் திருப்பணியும் தாழவுட்டாமல் பண்ணுக’ என்று அவ்வோலை கோயிலாருக்கு வழிகாட்டியது.

பைஞ்ஞீலிக் கோயில் இறைவனின் வழிபாட்டிற்கும் கோயில் திருப்பணிக்குமாய்த் தேவதான இறையிலியாக்கித் தரப்பட்ட திருநாமத்துக்காணியான சோழங்கநல்லூர், மாறவர்மர் வீரபாண்டியர் காலத்தில் (பொ. கா. 1178-1218) மற்றோர் அரசாணைக்கு உட்பட்டது. அவர் ஆட்சிக்காலத்தில் பைஞ்ஞீலிக் கோயிலில் அவரது சிறப்புப் பெயர்களுள் ஒன்றான கலியுகராமன் எனும் பெயரில் சிறப்பு வழிபாடு அமைக்கப்பட்டது.

‘கலியுகராமன் சந்தி’ என்று கல்வெட்டுகள் கொண்டாடும் அச்சிறப்பு வழிபாட்டிற்கான செலவினங்களுக்கும் கோயில் திருநாள்களுக்கும் இறைவனுக்கான நித்த வழிபாடு, படையல் ஆகியவற்றுக்குமாய் மன்னர் தம் 29ஆம் ஆட்சியாண்டின் (பொ. கா. 1449) கார்த்திகைத் திங்கள் முதல் பயன்படுமாறு கோயில் சார்ந்த மூன்று ஊர்களை வரி நீக்கப்பட்ட தேவதானங்களாக மாற்றித்தந்தார். அவற்றுள் சோழங்கநல்லூரும் ஒன்று.

வீரபாண்டியரின் இந்த அரசாணைக் கல்வெட்டால், பொ. கா. 15ஆம் நூற்றாண்டில் மக்களிடமிருந்து பெறப்பட்ட 15க்கும் மேற்பட்ட வரியினங்களின் பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் காவேரிக்கரைத் தேவை குறிக்கத்தக்கது. காவிரியாற்றின் கரையைப் பராமரிக்கவும் நாணல் பயிரிட்டு அதை வலிமைப்படுத்தவும் தேவையான ஆள் உழைப்பை இது குறிப்பதாகக் கொள்ளலாம். இத்தகு ஆள் உழைப்புத் தொடர்பான பல வரிகளை முற்சோழர் காலத்திலிருந்தே காணமுடிவது குறிப்பிடத்தக்கது. இவை நீர்நிலைகளைப் பராமரிக்கவும் அவற்றை எப்போதும் பயன்பாட்டில் இருக்குமாறு கண்காணிக்கவும் ஊரவைகளுக்கு உதவின.

இந்தப் பதிவால், மூன்றாம் குலோத்துங்கர் காலத்திலேயே வரிநீக்கம் பெற்றிருந்தபோதும், சோழங்கநல்லூர் பின்னாளைய ஆட்சியர் காலத்தில் மீண்டும் வரிசெலுத்தும் நிலைமைக்கு ஆளாகியிருந்ததும் வீரபாண்டியர் அந்நிலை மாற்றி மீளவும் அவ்வூரை இறையிலித் தேவதானமாக்கியதும் தெரியவருகிறது. கோயில் ஆட்சியருக்கு வழங்கப்பட்ட இந்த அரசாணை அரசின் வருவாய்த் துறையினருக்கும் அனுப்பப்பெற்று அவர்கள் தங்கள் வரிப்பொத்தகங்களில் உரிய மாற்றங்களைச் செய்வதற்கும் வழிவகுத்தது.

ஓர் அரசரின் ஆணை தொடர்ந்து வருபவர்களால் பின்பற்றப்படுவதும் உண்டு. மாற்றத்திற்கு உள்ளாவதும் உண்டு. இது காலந்தோறுமான நடைமுறை என்பதை இப்பைஞ்ஞீலிக் கல்வெட்டுகள் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

கண்டாரே கலக்கப் பெறுக…

இரா. கலைக்கோவன்

பழுவூர் வடவாயில்

சங்க காலத்திலிருந்தே விளக்கேற்றுதல் சிறப்புக்குரிய நிகழ்வாகக் கருதப்பட்டது. பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் கண்சிமிட்டும் விளக்கேற்றல் காட்சிகள்  அந்நாளைய சமூகம் அதற்கு எத்தனை முதன்மை அளித்திருந்தது என்பதைச் சுட்டுகின்றன. குளத்தில் மூழ்கித் தூய்மை பெற்ற பிறகே மகளிர் இறையகத்தில் விளக்கேற்றியதாகப் பட்டினப்பாலை பேசுகிறது.

நந்தாவிளக்கு, கார்த்திகை விளக்கு, மலரணி விளக்கு எனச் சங்கம் சுட்டும் விளக்கு வகைகள் பத்திமைக் காலத்தில் பலவாய்ப் பெருகின. விளக்கேற்றலை அருஞ்செயலாய்ப் போற்றும் அப்பர் பெருமான், இறைவன் அருளைப் பெற உடல் உறுப்புகள் ஆற்றக்கூடிய பணிகளைப் பேசுமிடத்தில், ஒளி உமிழும் விளக்குகளை இயன்றபோதெல்லாம் ஏற்றுவதே விரல்கள் பெற்றதன் பயன் என்கிறார். இவ்விளக்கேற்றும் பணி பல்லவ, பாண்டிய, சோழர் காலத்தில் ஓர் அறமாகவே கைக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களிலுள்ள பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளில் பெரும்பாலன விளக்கேற்றல் பற்றியே பேசுகின்றன.

அக்காலத்தே தமிழ்நாட்டிலிருந்த விளக்குகளின் வகைகள், அவை ஏற்றப்பட்ட முறை, விளக்கேற்றலின் நோக்கம், அதற்கெனத் தரப்பட்ட கொடை வகைகள், அதையொற்றி உருவான அறக்கட்டளைகள், அவை செயற்பட்ட ஒழுங்கு – தணிக்கை செய்யப்பட்ட பாங்கு, கொடையாளர்களின் விளக்கேற்றல் தொடர்பான விழைவுகள் என இச்செயல் சமுதாயத்தின் பல்வேறு நம்பிக்கைகள், நடைமுறைகள், ஒழுகலாறுகள் குறித்த வரலாற்று விளக்கமாக விளங்கியதைக் கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன.

‘உலகும் சந்திரரும் ஆதித்தரும் உள்ள அளவும்’ ஒளிர வேண்டும், ‘பூமியும் ஆகாசமும் உள்ள மட்டுக்கெல்லாம்’ வெளிச்சம் தரவேண்டும் என்று வேண்டி நிகழ்ந்த இந்த இறையக விளக்கேற்றல் பேரறமாகக் கருதப்பட்டதால், சமுதாயத்தின் பல தள மக்களும் பல்வேறு நோக்கங்களுக்காகக் காலங்காலமாகக் கோயில்களில் விளக்கேற்றியுள்ளனர். உறவுகளின் நலம் காக்கவும் நீத்தார் நினைவு போற்றவும் நிகழ்வுகளின் சிறப்பு குறிக்கவும் விளக்கேற்றினாற் போலவே குற்றங்களுக்குத் தண்டனையாகவும்கூட விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. கோயில்களில் சுடர்விட்ட இத்தகு விளக்குகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு கதை இருக்கிறது. அவற்றுள், பழுவேட்டரையர் காலத் தரவுகள் குறிக்கத்தக்கவை.

பழுவூர் தென்வாயில்

அரியலூர் மாவட்டப் பழுவூர், பழுவேட்டரையர்கள் எனும் சிற்றரச மரபினரின் கீழ்ச் செழிப்புடன் விளங்கிய பேரூராகும். அங்கு அவர்கள் எடுப்பித்த கலைக்கோயில்களில் பதிவாகியுள்ள கல்வெட்டுகள் சில அக்காலத்தே நேர்ந்த இழப்புகளையும் அவற்றின் விளைவான விளக்குகளையும் படம்பிடிக்கின்றன.

பழுவேட்டரையரின் படை வீரர் பலதேவன் வயிரியும் மல்லூர் கிழவன் நம்பனும் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவின் காரணமாக வாளேந்திச் சண்டையிட, அதில் வயிரி கொல்லப்பட்டார். அதற்கான தண்டனையாகக் கோயில் இறைத்திருமுன் நம்பன் விளக்கேற்ற வேண்டுமென மன்னர் ஆணையிட, வயிரியின் நினைவு நிலைக்குமாறு பழுவூர்க் கோயிலில் நந்தாவிளக்கு ஒளிர்ந்தது.

குஞ்சிரமல்லன் முருக்கனுக்கும் தென்பாளன்பாடி வாழ் ஐயாறன் கானனுக்கும் இடையிலான சச்சரவில் முருக்கன் உயிரிழந்தார். அவ்விழப்பிற்கு ஈடாக, பழுவூர்க் கோயிலில் முருக்கன் நினைவாக ஐயாறன் நந்தாவிளக்கேற்றுமாறு ஆணையிடப்பட்டது. குற்றம் இழைத்தவர் பிடிபடுகையில் தண்டனை உடன் விளைவாகிறது. அதற்கு இவ்விரு நிகழ்வுகளும் சான்று. குற்றவாளி தப்பிவிட்டால் . . . .

பழுவூரில் வாழ்ந்த சோமன்புவனியைக் கத்தியால் குத்தி உயிரிழக்கச் செய்த அரங்கன்பட்டன், ஊரார் பிடியில் சிக்காமல் தப்பிவிட்டார். தப்பிய அரங்கனை, ஊரார் யார் கண்டாலும் அவர்களே அவனுக்குத் தக்க தண்டனை வழங்கிட ஆணையிட்ட நகராட்சி, இறந்தவர் நினைவு போற்றிப் பழுவூர்க் கோயிலில் நந்தாவிளக்கேற்றும் பொறுப்பைத் தனதாகக் கொண்டது.

குற்றம் செய்தவர் தப்பிவிடுகையில் குற்றத்தின் விளைவால் உயிரிழந்தவருக்காக அரசரே விளக்கேற்றியதையும் பார்க்கமுடிகிறது. முதுகுடியில் வாழ்ந்த வீரக்கலிஅரங்கனும் மாதேவடிகளும் சச்சரவிட்டபோது, வீரக்கலிஅரங்கன் கொலையுண்டார். குற்றம் இழைத்த மாதேவடிகளைக் கண்டுபிடிக்க முடியாத சூழலில், பழுவேட்டரையர் குமரன் மதுராந்தகனே இறந்தவர் நினைவாகக் கோயிலில் நந்தாவிளக்கேற்றியுள்ளார்.

பழுவூர் எண்ணெய் வணிகர் குமிழிமனப்பன் கோலொன்றால் அடிபட்டு இறந்தார். கோலை எறிந்து அவர் உயிரிழக்கக் காரணமானவரை அறியமுடியாத நிலையில், அவர் சார்ந்திருந்த வளஞ்சியர் என்னும் வணிகக் குழுவினர் மனப்பன் நினைவாகக் கோயிலில் நந்தாவிளக்கேற்ற நிதியளித்தனர். குமிழிமனப்பனின் மனை, நிலங்கள் ஆகியவற்றை அவர் துணைவியும் வழியினரும் நிலவும் கதிரும் உள்ளவரை வரி செலுத்தாது அனுபவித்துக்கொள்ள ஊராட்சி துணையானது.

பழுவூர்க் கல்வெட்டுகள் பகிர்ந்துகொள்ளும் இந்த ஐந்து நிகழ்வுகளிலும் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அந்த உயிரிழப்பை நேர்செய்யக் குற்றம் செய்தவர்களோ, ஊராட்சியோ, அரசோ, இறந்தவர் சார்ந்த குழுவினரோ கோயில்களில் விளக்கேற்றியுள்ளனர். இறந்தவரின் ஆன்ம அமைதிக்கான அறமாக இவ்விளக்குகள் சுடர்விட்டன.

எனில், குற்றஞ்செய்து தப்பியவர்களுக்குத் தண்டனை இல்லையா? இந்தக் கேள்விக்கு ஐந்து கல்வெட்டுகளில் ஒன்று தெளிவாக விடைசொல்கிறது. சோமன்புவனி இறக்குமாறு அவனைக் குத்தித் தப்பிய அரங்கன்பட்டனை, ‘கண்டாரே கலக்கப் பெறுக’ என்ற பழுவூர் நகரத்தாரின் ஆணை பொருள் பொதிந்ததல்லவா!

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 12. வீரமறவர்களின் வேட்டைக் காட்சிகள்

அன்புள்ள வாருணிக்கு, தேவதேவிச் சிற்பம் உன்னைப் பெரிதும் கவர்ந்ததாக எழுதியிருக்கிறாய். ஆடும்போது பிள்ளையாரே தம் தேவியை உடன் கொண்டு ஆடுகிறாரே, ஆடல்நாயகராகக் கொண்டாடப்படும் சிவபெருமான் உமையுடன் ஆடுமாறு சிற்பம் உள்ளதா என்று கேட்டிருக்கிறாய். ஒரிசாவிலும் கருநாடகத்திலும் நீ கேட்குமாறு சிற்பங்கள் பலவாக உள்ளன. இருவரும் அருகருகே ஆடுவது போலவும் அம்மையப்பராய் இணைந்தாடுவது போலவும் பல பேரழகுச் சிற்பங்களை அங்குள்ள கோயில்களிலும் அருங்காட்சியகங்களிலும் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டுப் பழங்கோயில்களில் அத்தகு சிற்பங்களைக் காணக்கூடவில்லை.

கரணக்கோலத்தில் உயர்த்திய தொடையில் துணையை அமர்த்தி ஆடும் அந்தப் பேறு மீனாட்சிக் கோயில் பிள்ளையாருக்கென்றே வாய்த்த பெரும் பேறு. அதை உருவாக்கிய நாயக்கச் சிற்பியின் கண்ணோட்டம் எண்ணிப்பார். ஏதோ புதுமை செய்யக் கருதிய வடிவம் அது என்று மட்டும் கருதிவிடாதே. ஒவ்வொரு சிற்பமும் மரபுகளை உடைத்தோ, மீறியோ உருவாக்கம் பெறும்போது அங்குச் சிற்பியின் எண்ணவோட்டமே தலையோங்குகிறது.

ஆகமங்களை உள்ளத்தில் இருத்தியே இது போன்ற படைப்புகள் உருவாகின்றன என்றாலும், ஆங்காங்கே நூலிழைகளில் எல்லைகள் தாண்டப்படுவதையும் கோடுகள் வளைக்கப்படுவதையும் பார்க்கமுடிகிறது. குடந்தைக் கீழ்க் கோட்டத்திலும் நல்லூர் மணவழகரிலும் இடம்பெற்றுள்ள களிநிலைப் பிள்ளையார் சிற்பங்களும் அப்படி வந்தவைதான். முதலில் ஒன்று, ‘புதிது’ என்ற பார்வையோடு பிறக்கிறது. மக்கள் அதை இரசிக்கத் தொடங்கும்போது அந்த வடிவம் இலக்கணமாகிவிடுகிறது. சில வடிவங்கள் இரசிக்கப்பட்டாலும் தனித்துவமாகவே இருந்துவிடுகின்றன. தேவதேவிச் சிற்பம் இரண்டாம் வகையினது.

வெறும் உளியும் அடிப்பானும் பிடித்திருப்பவர்கள் அல்லர் சிற்பிகள். அவர்தம் விரல்களில் படைப்பாற்றல் இருக்கிறது. உள்ளுக்குள் ஆகமங்கள் அலையடித்தாலும் பார்த்ததும் பரவசப்பட்டதுமாய்க் கண்களில் தெறித்துக் கற்பனையில் செறிந்தவை, அந்த அலைகளில் மிதக்கும் படகாய் அவர்தம் படைப்புகளில் நுழைந்துவிடுகின்றன. அதற்குச் சான்றாய் எல்லா மரபுகளிலும் காட்டுகள் உள்ளன. வாருணி, அடுத்தமுறை சந்திக்கையில் அவை குறித்துப் பேசுவோம். இப்போது மீனாட்சி என்னை அழைக்கிறார், என் கோயிலைச் சொல்லத் தொடங்கி, எங்கெங்கோ போகிறாயே என்று.

வீரம் செறிந்த வேட்டைக் காட்சிகள் ஐவகை நிலத்தும் பரவியிருந்ததைத் தமிழிலக்கியங்கள் உணர்த்துகின்றன. விலங்குகளோடு போரிட்டு உயிர் நீத்த வீரமறவர்களின் நடுகற்களும் கிடைத்துள்ளன. ஆனால், வேட்டைக் காட்சிகளைக் கோயில் சிற்பங்களாக நீ கண்டதுண்டா? மதுரை மீனாட்சிக் கோயிலில் ஒன்றல்ல,இரண்டல்ல, பல காட்சிகள் படமாகியுள்ளன. தூண் சிற்பங்களாகவும் துணைத்தளச் செதுக்கல்களாகவும் மரவேலைப்பாடுகளாகவும் அவற்றைக் கண்ணுற்ற நானும் பேராசிரியர் நளினியும் வியந்தோம். அங்கும் இங்குமாய் ஓரிரு வேட்டைக் காட்சிகளைச் சில கோயில்களில் கண்டதுண்டு. ஆனால், ஒரே கோயிலில் இத்தனை வீரக் காட்சிகளா?

சுற்றுத்தரைக்குத் தாழ உள்ள மீனாட்சி அம்மன் விமானத் துணைத்தளத்தில் மூன்று விலங்கு வேட்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூன்றும் மூன்றுவிதமான வேட்டை முறைகளை வெளிப்படுத்துகின்றன. முன்னும் பின்னுமாய் நிற்கும் இருவருக்கிடையே ஒரு காலை உயர்த்திய நிலையில் நிற்கும் விலங்கு சிங்கமாகலாம். முன்னுள்ள ஆடவர் அதை அம்புகளால் தாக்குகிறார். ஓர் அம்பு அதன் முகத்தில் நுழைந்துள்ளது. பின்னுள்ள ஆடவர் கைகளால் இறுகப் பற்றிய வாளை அவ்விலங்கின் பின் வழியே உடலுக்குள் நுழைக்கிறார். துணைத்தளத்தின் பெரும்பகுதியை நிறைத்திருக்கும் இச்செதுக்கல் ஒரு படக்காட்சி போல விரிந்துள்ளது.

இங்குள்ள பிற இரு சிற்பங்களும் புலிவேட்டை காட்டுகின்றன. ஒன்றில், முன்கால்களை உயர்த்திப் பாயும் நிலையில் புலி காட்சிதர, அது தன்னை வாயால் கவ்வாதவாறு தம் இடக்கையால் தடுத்தபடியே, வலக்கை வாளை அதன் கழுத்தில் செலுத்தியுள்ளார் வீரர். கழுத்தைத் துளைத்து வெளிப்பட்டுள்ள வாளும் உணர்வுகளின் களமாய் விளங்கும் வீரரின் முகமும் சூழலின் தன்மை விளக்குகின்றன. இரண்டாம் சிற்பம், காண்போர் மேனியைச் சில்லிடச் செய்கிறது. அதில், கருடாசனத்திலுள்ள வீரரின் வலக்கால் மேல் தன் கால்களை இருத்திச் சீறும் புலி, வீரரின் தலையைக் கவ்வும் நெருக்கத்தில் உள்ளது. அதை எதிர்கொள்ளும் வீரரோ, தம் வலக்கை வாளை அதன் மார்பில் பாய்ச்சி அதைச் செயலிழக்கச் செய்கிறார். காட்சியமைப்பு வீரரின் வெற்றியைக் காட்டுகிறது.

ஆயிரக்கால் மண்டப வாயிலருகே பேரளவினதாய் உள்ள வேட்டைக்காரரின் சிற்பம் குறிப்பிடத்தக்கது. அடர்த்தியான மீசை, கால்களில் தோல்பட்டைகள், இடக்கையில் வில் என நிற்கும் அவரது காலருகே குதிரை. அவரது வலப்புறம் ஏற்கனவே வேட்டையில் அடித்த மானைத் தம் தோளில் ஏந்திய அவரது இளவல். அதே மண்டபத்தின் உட்புறமுள்ள இரண்டு மரச்சிற்பங்களுள் ஒன்றில், தாவி வரும் சிங்கத்தின் வாயில் கத்தியை நுழைத்துக் கொல்லும் வீரர் படமாக, மற்றொன்றில் வேட்டை முடித்துச் செல்லும் மறவர் தம் தோளில் தாங்கலாக இருத்தப்பட்டு வலக்கைப் பிடிப்பிலுள்ள மூங்கிலில் வேட்டையில் கிடைத்த இரண்டு பன்றிகளைத் தொங்கவிட்டுள்ளார். நாயக்கர் கால வேட்டையாள் எப்படி இருந்தார் என்பதற்கு இந்த மரச்சிற்பமும் வாயில் சிற்பமும் சிறந்த காட்டுகளாகும்.

மீனாட்சியம்மன் கோயில் தேரிலும் வீரர் ஒருவர் புலியின் தலையில் ஈட்டியை நுழைத்து அதை உயிரிழக்கச் செய்யும் காட்சி உள்ளது. அதில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் வேட்டை வீரரின் உடல் சுழற்சியும் உணர்வுகளும் காணத்தக்கன வாருணி. அருகில் நிற்கும் அவரது இளவலின் வேல் அந்தப் புலியின் பின்னுடலில் பாய்ந்துள்ளது.

அக்கால வீரமறவர்களின் தோற்றம், உடலமைப்பு, ஆடை அணிகலன்கள், வேட்டையின்போது அவர்கள் கொள்ளும் கருவிகள், அவற்றைக் கையாளும் முறைகள் ஆகியவற்றோடு, கொல்லப்பட்ட விலங்குகளை அவர்கள் கொண்டு சென்ற வகையும் இச்சிற்பங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் சிறப்பு அவர்தம் முகக் குறிப்புகள்தான். இலக்கியம் இத்தகு காட்சிகளைக் காட்டும்போது நாம் அவற்றைக் கற்பனை செய்தே காணமுடிகிறது. இங்கோ, கற்பனைக்கே தேவையின்றி எல்லாமே கண்முன் காட்சியாக. இதுதான் சிற்பங்கள் நமக்கு வழங்கும் வரலாற்றுக் கொடை.

அன்புடன்,

இரா. கலைக்கோவன்.

ஆனைமங்கலம் செப்பேடு

இரா. கலைக்கோவன்

‘பரகேசரிவர்மரான இராஜேந்திரசோழனின் சாசனம்’ என்று பொறிக்கப்பெற்ற இலச்சினையுடன் 21 ஏடுகள் கொண்டதாய் விளங்கும் ஆனைமங்கலம் செப்பேடு ஹாலந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியா திரும்பியுள்ளது. சமஸ்கிருதத்திலும் தமிழிலுமாய் அமைந்திருக்கும் இச்செப்பேட்டின் தமிழ்ப்பகுதி கடாரத்து அரசர் சூளாமணிவர்மன் நாகபட்டினத்தில் அமைத்த புத்தவிகாரையைப் பராமரிக்கச் சோழவேந்தர் முதலாம் இராஜராஜர் ஆனைமங்கலம் என்ற ஓர் ஊரையே கொடையளித்த செய்தியைக் கொண்டுள்ளது.

ஐந்து ஏடுகளில் பொறிக்கப்பட்டுள்ள இச்செப்பேட்டின் சமஸ்கிருதப் பகுதி சோழ அரசர்களின் மரபுப் பட்டியலைச் சுட்டுமிடத்துக் கரிகாலன், கோச்செங்கணான், கோக்கிள்ளி ஆகிய இலக்கிய வழி அரசர்களையும் விஜயாலயரில் தொடங்கி முதலாம் இராஜேந்திரர் வரையிலான வரலாற்று வேந்தர்களையும் அடையாளப்படுத்துகிறது. அதன் வழிச் சோழ அரசர்களின் வெற்றிகளும் அவர்தம் கொடைகளும் வெளிச்சமாகின்றன. சோழகுல விளக்காக முதலாம் இராஜராஜரைக் குறிப்பிடும் இப்பகுதி, சூளாமணிவர்மரின் மகனும் ஸ்ரீவிஜயநாட்டின் தலைவருமான மாரவிசயோத்துங்கவர்மர் சூளாமணி விகாரத்தைத் தம் தந்தையின் பெயரால் உருவாக்கிய செய்தியைத் தருவதுடன், அவ்விகாரையில் வீற்றிருக்கும் புத்தருக்கு முதலாம் இராஜராஜர் ஆனைமங்கலம் என்ற ஊரைக் கொடையளித்த தகவலையும் பகிர்ந்துகொள்கிறது.

சமஸ்கிருதத்திலும் தமிழிலும் புத்தவிகாரையின் கட்டுமானம் குறித்துக் கிடைக்கும் தரவுகள் அது சூளாமணிவர்மரால் தொடங்கப்பட்டு அவர் மகனால் முடிக்கப்பெற்றதை உணர்த்துகின்றன. அது போலவே இராஜராஜரால் புத்தவிகாரைக்கு ஆனைமங்கலம் கொடையளிக்கப்பட்டதைத் தமிழ்ப்பகுதியும் அது தொடர்பான நிலையான சாசனம் அவரது மகனும் பேரரசருமான முதலாம் இராஜேந்திரர் காலத்தில் உருவாக்கப்பட்டதை சமஸ்கிருதப் பகுதியும் தெளிவாக்குகின்றன.

இராஜராஜரின் வாய்மொழியாக வெளிப்பட்ட இந்தக் கொடை ஆணை அவரது அலுவலரால் ஓலையாக எழுதப்பெற்று, பல உயர்அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பிறகு ஆனைமங்கலத்தை உள்ளடக்கியிருந்த பட்டினக்கூற்ற ஆட்சியருக்குத் திருமுகமாக அனுப்பப்பெற்றது. அரசரை வரவேற்குமாறு போலவே அவரது திருமுகத்தையும் வரவேற்ற பல்வேறு ஆட்சிக்குழுவினர், அதில் சொல்லியிருந்தாற் போலவே உரியவர்களைக் கொண்டு ஆனைமங்கலத்தின் எல்லைகளை வரையறுத்தனர். அவ்வூர் மீதான அரசு வரிகளைப் பட்டியலிட்ட வருவாய்த்துறையினர் அவற்றை அரசு வரிப்புத்தகங்களில் தவிர்த்து அவ்வரியினங்களை விகாரை பெறுமாறு மாற்றியமைத்தனர்.

ஆனைமங்கலத்தின் 97 வேலி நிலப்பரப்பு அளித்த 8943 கலம் இரண்டு தூணி குறுணி ஒரு நாழி நெல்வருவாய் இராஜராஜரின் ஆணைக்குப் பிறகு புத்தவிகாரையின் வரவானது. ஆண்டுதோறும் தொய்வின்றிக் கிடைத்த இந்தக் கொடைநெல் விகாரையின் பணிகளை வளப்படுத்தியது. அரசாணையை நிறைவேற்றியவர்களின் இத்தகு பல்வேறு செயற்பாடுகள் சோழர் கால நில அமைப்பு, வேளாண்மை, நீர்ப்பாசனம், வரிவருவாய், வருவாய்த்துறையின் இயக்கம், அதன் அலுவல் நிலைகள், வழக்கிலிருந்த பதிவேடுகளின் பெயர்கள் எனப் பல பொருளாதார, சமுதாயச் செய்திகளையும் அக்காலத்தே வழக்கிலிருந்த நாடு, கூற்றம், ஊர் முதலிய வருவாய்ப் பிரிவுகளையும் வெளிப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் இதுநாள்வரை கிடைத்துள்ள செப்பேடுகளில் புத்தவிகாரைக்கான கொடை பற்றிப் பேசும் முதல் செப்பேடு இதுதான். தந்தை தொடங்கிய விகாரையை மகன் முடித்ததும் அதற்குத் தந்தை அளித்த கொடையை மகன் சாசனமாக்கியதுமான இரு வேறு அரசுகளின் இணையான செயல்கள் ஒருசேர உள்ளடங்கிய ஒரே செப்பேடும் இதுதான்.