மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 14. குலவிளக்கும் ஒளிவிளக்கும்!

அன்புள்ள வாருணி, தமிழ்நாட்டின் பல கோயில்களோடு நான் கையிணைத்து உறவாடியிருக்கிறேன். ஒவ்வொரு கோயிலும் எனக்காகவே காத்திருந்தாற் போல் அன்போடு வரவேற்பதையும் ஆர்வத்தோடு கதை வளர்ப்பதையும் உள்ளம் குளிரக்குளிர அனுபவித்திருக்கிறேன். கோபுரம் தொடங்கி, சுற்றுகளில் விரிந்து, விமானங்களில் வளர்ந்து, தூண்களில் தொடர்ந்து, கோயிலின் ஒவ்வோர் அணுவும் என்னுடன் உரையாடிய அந்த இனிய போதுகள், அவை தரவுகளா வாருணி? வாழ்ந்தவர்களின் வரலாறு அல்லவா! 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் அப்படித்தான். அதுவாகவே விரும்பி அழைத்து, அமுதம் போல் ஆயிரம் காட்சிகள் காட்டி, மனித வாழ்க்கையின் மகத்தான நுட்பங்களையெல்லாம் நான் அறியச் செய்த அருமையான கோயில் அது. கற்பனைப் பூச்சே இல்லாமல் கண்களில் படர்ந்தவற்றையும் கருத்து வழி அறிந்தவற்றையும் அங்குச் சிற்பங்களாக்கியிருக்கும் அக்காலப் படைப்பாளிகளையும் அவர்தம் கைச் செதுக்கல்களால் சீர்மை  பெற்றிருக்கும் மக்கள் வாழ்க்கையையும் விழையும் உள்ளங்களிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றுதான் தொடர்ந்து எழுதி வருகிறேன். 

நீ புறநானூறு படித்திருக்கிறாய் என்பதறிவேன். பகைவர் நாட்டுக்குப் போருக்குச் சென்ற அரசன் போரைத் தொடங்கும் முன், ‘நான் போர் செய்ய வந்திருக்கிறேன். என் வீரர்கள் உங்கள் மேல் அம்புகளை வீசத் தொடங்கும் முன் இன்னின்னார் இருந்தால் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிடுங்கள்’ என்று அறம் பேசுவதாக அதில் ஒரு பாடல் உண்டு. ‘பாதுகாப்பான இடத்திற்குப் போய்விடுங்கள்’ என்று அந்த அரசர் பட்டியலிட்டவர்களில், ‘பொன் போல் புதல்வர் பெறாதவரையும்’ இணைத்திருந்தார். மகப்பேற்றிற்கு இந்த மண் அளித்த பெருமை அது.

தமிழ்நாட்டின் பல கோயில்களில் மகளிரைக் கருவுற்ற நிலையிலும் கருவுயிர்க்கும் மகப்பேற்றுச் சூழலிலும் சிற்பக் காட்சிகளாகக் கண்டிருப்பாய். மீனாட்சியம்மன் கோயிலிலும் பெண் ஒருவர் மகவு ஈனும் காட்சி திருச்சுற்றுத் தூண் ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வாருணி, தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் கண்டிராத மகப்பேற்றுக் காட்சியை மீனாட்சியம்மன் கோயில் தேரில் நான் பார்க்க நேர்ந்தது. அதைப் பார்த்த அந்த நொடியில் அதில் மின்னலிட்ட புதிய சிந்தனை என் உள்ளத்தை வியப்பின் உச்சியில் ஆழ்த்தியது. என் கண்கள் கண்டதை அப்படியே உனக்கும் காட்டுகிறேன். தேரோட்டத்தின்போது தவறாமல் பார்த்துவிடு.

பொதுவாகக் கோயில்களில் காட்டப்பெறும் இது போன்ற மகப்பேற்றுக் காட்சிகளில் கருவுற்ற தாய் தளர்ந்து காணப்படுவார். அவரது இருபுறமும் அவரைத் தாங்கியவராய்ச் செவிலியர் நிற்பர். அவர்தம் துணையிருப்பும் தாயின் உணர்வுகளும் சிற்பத்திற்குச் சிற்பம் வேறுபடும். தாயிடமிருந்து வெளிப்படும் குழந்தையைப் பிடித்துக்கொள்ள இருவரில் ஒரு செவிலி முயல்வார். அல்லது அதற்கென்றே மூன்றாம் செவிலி காத்திருப்பார். சில நெருக்கடியான மகப்பேறு காட்சிகளைக்கூடச் சிற்பங்களாக நான் கண்டிருக்கிறேன். அழகர்கோயில் சிற்பம் அவ்வகையில் குறிப்பிடத்தக்கது. 

மீனாட்சித் தேரின் மகப்பேறு அந்தத் தாய்க்குத் தலைப்பேறு போலும். தாங்கொணாத் தளர்ச்சியும் வலியின் உச்சத்திலான மகவின் வெளிப்பாடும் அவரைச் செயலிழக்கச் செய்துள்ளன. தாயின் வலப்புறத்தே நிற்கும் செவிலி தம் வலக்கையால் தாயின் வயிற்றை வருடியவாறே, இடக்கையால் அவ்வம்மையின் முதுகைத் தாங்கலாய்ப் பிடித்துள்ளார். வளமான தலைமுடியைப் பெருங்கொண்டையாக்கியுள்ள செவிலியின் இடையில் பட்டாடையும் இடைக்கட்டும். கைகளில் வளைகள். செவிகளில் தோடுகள்.  

தாயின் கருப்பையிலிருந்து வெளியுலக வாழ்வு காண தலை நீட்டியிருக்கும் புத்துயிரைத் தம் ஆகிவந்த கைகளால் பற்றியவாறே மகப்பேற்று நடைமுறைகளில் கருத்தாயிருக்கும் தலைமைச் செவிலியும் பட்டாடை அணிந்துள்ளார். கொண்டையிட்ட தலைமுடியும் பனையோலைக் குண்டலங்களும் பெற்றுள்ள அவர், தாம் ஈடுபட்டுள்ள செயற்பாட்டுக்கு ஏதுவாகச் சிறு முக்காலியொன்றில் அமர்ந்துள்ளார். அவரது பார்வை கையில் இறங்கும் குழந்தையிடம்தான் என்றாலும், தாயின் நலத்திலும் அடுத்து நிகழ வேண்டுவன சரியாக அமைய வேண்டுமே என்ற கவனத்திலும் தாயுடலை வருடியவாறே பிள்ளையை வாங்குவது கூர்ந்து நோக்கின் விளங்கும். தலைமைச் செவிலியின் நோக்கறிந்தே துணைச் செவிலியும் தாயை அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குத் தடவு மருத்துவத்தாலேயே தழுவி நிற்கிறார். 

இப்போது சற்றே இடப்புறம் பார்ப்போம். இடையில் பட்டாடை, தலையில் தலைப்பாகை எனத் தாடி, மீசையுடன் பறையொலித்து ஆடும் கூத்தர். ஏன், குடும்பத்தின் பெரியவராகவும் இருக்கலாம். ‘எங்கள் குலவிளக்குத் தாயானாள். இல்லத்தில் ஒளிவிளக்குத் தோன்றிவிட்டது’ என்று ஊருக்கே சொல்லி ஓங்காரமிடும் அவரது உற்சாகப் பாட்டின் தாளப்பேரொலி நம் செவிகளில் எதிரொலிக்கிறதல்லவா!

அங்கும் இங்குமாய் மகப்பேறு காட்சிகளைச் சிற்ப வடிவங்களாகப் பலரும் பார்த்திருக்கலாம். ஆனால், தாயிடமிருந்து வெளிப்படும் மகவை முக்காலியில் அமர்ந்தவாறு கைகளில் ஏந்தும் தலைமைச் செவிலியை வேறெந்தச் சிற்பத்திலும் கண்டதுண்டா? அவரது பணிச் சுமையை எளிதாக்கிய அந்தப் பெருமை யாருக்கு? அதுதான் போகட்டும், மகப்பேற்றுக் கொண்டாட்டத்தை இப்படியொரு பறைக்கூத்தாய்த்தான் எங்கேனும் பார்த்திருப்பாயா?

ஒரு படைப்பாளி எப்போது வெளிப்படுகிறார் தெரியுமா வாருணி! ஒன்று போலவே அமையினும் ஒரு கருத்தையே கொள்ளினும் அந்த ஒன்றுகளோடு ஒன்றிவிடாமல் ஒரு படைப்பு ஓங்கி உயர்ந்து தனித்து ஒளிரும்போதுதான் படைப்பாளி நினைக்கப்படுகிறார். அவர் படைப்பும் நிலைபேறு அடைகிறது. மகப்பேற்றுக் காட்சியைப் பலர் படம்பிடித்திருந்தபோதும் இயல்பான நிகழ்விலும் இரு புதுமைகளைப் புகுத்திப் புதுவரவின் கொண்டாட்டத்தில் புத்தொளி பாய்ச்சிய இது போன்ற சிந்தனைகள்தான் காலந்தோறும் கலையை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

பின்னூட்டமொன்றை இடுக