மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 15. பார்வைப் பரிசாய்ப் பாசப் பிணைப்பு

அன்புள்ள வாருணிக்கு, உன் மடல் பெற்றேன். மதுரை அழகர்கோயில் மகப்பேற்றுச் சிற்பத்தைப் பார்க்கத் தவறியது குறித்து வருந்தியிருக்கிறாய். அந்தச் சிற்பம் பார்வை பரவக்கூடிய இடத்தில் பதிவாகவில்லை. தேடும் கண்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய வகையில்தான் நம் கோயில்களில் பல அரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இறையகத் தெய்வத்தை மட்டுமே நோக்கி விரியும் பார்வைக்கு இந்த வாழ்வியல் பதிவுகள் பிடிபடா. கோயில் வழிபாட்டிற்கு மட்டுமன்று, வாழ்க்கையைப் பழகவும்தான் என்ற நோக்கோடு, அதை அங்குலம் அங்குலமாக இரசிக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே இத்தகு காட்சிகள் வயமாகும் வாருணி. கோயிலுக்குள் நுழையும்போதே, ‘பசித்திரு, விழித்திரு’ என மனதைப் பழக்கிக் கொண்டால் கருத்துப் பசிக்குக் காட்சி விருந்து தவறாது கிடைக்கும். 

அழகர்கோயில் சிற்பத்தைப் பற்றிப் பேராசிரியர் நளினி தம் ‘பாதைகளைத் தேடிய பயணங்கள்’ நூலில் எழுதியிருக்கிறார். ‘எப்பாடு பட்டாகிலும்’ என்ற பொருத்தமான தலைப்பில் உருவான அந்தக் கட்டுரையில் கருவுற்ற தாயும் உடன்கூட்டச் செவிலியரும் ஒரு கடினமான மகப்பேற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது சிற்பக்காட்சிக்கு ஏற்பச் சிறக்கச் சொல்லப்பட்டுள்ளது. வாய்ப்பமையும்போது படித்துப்பார். அடுத்த முறை அழகர்கோயில் செல்கையில் தவறாமல் அச்சிற்பத்தைப் பார்த்துவிடு.

தமிழர்களின் விலங்கு, பறவை நேயம் பற்றிப் பலமுறை நாம் பேசியிருக்கிறோம். நம்மவர் இலக்கியங்களிலும் சிற்பச் செதுக்கல்களிலும் அவை தவறாமல் இடம்பெற்று விடுகின்றன. தொல்காப்பியத்தில் ஐவகை நிலங்களுக்குமான கருப்பொருள் சுட்டும்போதே, அவ்வந் நிலத்திற்கான பறவையும் விலங்கும் இடம்பெறுவதை நினைத்துப் பார். மனித வாழ்வோடு எத்தனை நெருங்கியனவாய் அவையிருந்தன என்பதைச் சங்கப்பாடல்கள் தெள்ளிதின் காட்டும். பத்திமைப் பாடல்களில்கூட அவை இறைவனை அண்டியே காட்சியாகின்றன. விலங்கோ, பறவையோ உடனிராத இறைக்கோலங்கள் குறைவு.

பல்லவக் குடைவரைகளில்தான் பறவை, விலங்கு நேயக் காட்சிகளை முதன்முதலாகக் காணத் தொடங்குகிறோம். மாமல்லபுரம் சென்றபோது பூதவலபிக்கு மாற்றான வாத்து வலபி (அன்னமென்றும்  சொல்வர்), தாங்கு சிற்பங்களாய் யாளிகள், தூண் ஏந்துவனவாய்ச் சிம்மங்கள், தளம் தாங்குவனவாய் யானைகள் எனப் பலவும் பார்த்துக் களித்ததை நினைவு கொள். முற்சோழர் காலத்தில் இப்படிப் பறவைகளையும் விலங்குகளையும் காட்சிப்படுத்துவது பரவலாக்கப்பட்டது.

புள்ளமங்கை ஆலந்துறையார், பழுவூர் அவனிகந்தர்ப்ப ஈசுவரம் என இந்தப் பட்டியல் நீளமானது வாருணி. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஆய்வுசெய்த சிராப்பள்ளி வடகுடிக் கோயிலின் தாங்குதளத்தில் புலிக்குட்டிகளின் விளையாட்டு கண்டோம். எங்கெல்லாம் வாய்ப்பமைகிறதோ அங்கெல்லாம் பறவைகளையோ, விலங்குகளையோ இயல்புக்கேற்பக் காட்சிப்படுத்துவதைச் சிற்பிகள் தொடர்ந்து கையாண்டுள்ளனர். அழகு பொலியும் மான்இணைகள், பல்வகைக் குறும்புகளில் களிப்படையும் குரங்குகள், இணைந்தும் தனித்தும் அமர்ந்த எருதுகள், தாவ எத்தனிக்கும் சிம்மங்கள், பூதங்களின் விளையாட்டுப் பொருளாய்ப் பாம்புகள் என நீளும் இப்பட்டியலில் பைஞ்ஞீலிப் பதிவு முள்ளம்பன்றியையும் இணைத்துள்ளது.

மனித மகப்பேறு போல விலங்குகள் குட்டியீனும் காட்சிகளும் தமிழ்நாட்டுக் கோயில்களில் செதுக்கப்பட்டுள்ளன. சிராப்பள்ளி மாவட்டம் துடையூர் விஷமங்களேசுவரர் கோயிலில் கண்டபாதச் சிற்பமாக யானை குட்டி ஈன்றிருக்கும் காட்சியைக் காணமுடிந்தது. இந்தக் கோயிலில் மட்டும் ஏழெட்டு இடங்களில் யானைகளின் வாழ்வியல் காட்சிகள் பதிவாகியுள்ளன. யானை ஈனும் மற்றொரு காட்சி நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயிலின் சுற்றுச்சுவரில் அருமையாகப் படமாகியுள்ளது. குட்டி ஈனும் தன் பிடியை அதன் துணைக்களிறு ஆதரவாக நெருங்கி நிற்பதும் செவிலியர் போல இரண்டு யானைகள் கன்று ஈனும் பிடியைத் துளைக்கைகளால் தழுவி ஊக்கமூட்டுவதும் காணக் கண் கோடிவேண்டும் வாருணி.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டபோது எத்தனையோ வியப்பூட்டும் புதுப்புதுக் காட்சிகளைக் கண்ணுற்றபோதும், விலங்கொன்று குட்டு ஈனும் பதிவையும் அங்குக் காணமுடியுமென்று நினைத்தோமில்லை. ஒரு நாள் மதியம் அங்கயற்கண்ணி அம்மை வளாகச் சுற்றில் வலம் வந்தவாறே, மீனாட்சி விமானத்தின் துணைத்தளச் சிற்பங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த அற்புதச் செதுக்கல் கண்களில் விழுந்தது. 

துணைத்தளக் கபோதக்கூட்டில் அந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பாகப் பூப்பதக்கமும் அதிலிருந்து இருபுறத்தும் வளைந்தும் சுருண்டும் விரிந்து பரவும் கருக்கணித் தொங்கல்களும் அத்தொங்கல்களுக்கு இடைப்பட்ட குழிவில் குட்டி ஈனும் நிலையில் மானுமாய் அந்தக் காட்சி கண்களில் படர்ந்தபோது நானும் பேராசிரியர் நளினியும் உடனிருந்த கோயிலாரும் வியப்பில் உறைந்துபோனோம். நேரில் பார்த்திருந்தால் தவிர இப்படியோர் உயிரோட்டமான காட்சியைச் சிற்பி செதுக்கியிருக்க முடியாது. 

வயிற்றுப்பகுதிக்கு அழுத்தம் கொடுத்து ஈனலை எளிதாக்கும் முயற்சியில் மான் இருப்பதை அதன் நான்கு கால்களின் நிலையே மிகத் தெளிவாய் விளங்க வைத்துவிடுகிறது. உயர்த்திய வாலுக்குப் பின் கால்களுக்கு இடைப்பட்டுத் தன் குட்டி வெளிப்படுவதை, அந்த மான் தலை திருப்பிக் கண்ணுறுவதையும் ஈனலை எளிதாக்க மெல்ல வாய் திறந்து அது மூச்சிழுப்பதையும் சிற்பி மிக இயல்பாகக் கண் முன் நிறுத்தியுள்ளார்.

மான்களைப் பல்வேறு நிலைகளில் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணமுடிகிறது. இறைவடிவங்களில் சிவபெருமானுக்கும் கொற்றவைக்கும் மிக நெருங்கிய விலங்கு அது. சிவபெருமானின் ஆலமர்அண்ணல், பிச்சையேற்கும் கோலங்களில் மான்கள் தவறாமல் இடம்பெற்றுள்ளன. ஆலமர்அண்ணலின் ஆகம விரிவுரை கேட்கக் கானக விலங்குகளும் வந்துய்ந்ததை வெளிப்படுத்துமாறு புலி, சிங்கம், பாம்பு ஆகியவற்றுடன் சிற்பிகள் மான் இணைகளையும் காட்டியுள்ளனர். நீ பார்க்கவிரும்பினால் காஞ்சிபுரம் கயிலாசநாதர் போய் வா அற்புதமான மான் இணை கண்ட மகிழ்ச்சி நிறையும். 

பிச்சையேற்கும் கோலத்தில் சிவபெருமான் மானுக்குப் புல்லளித்தவாறே நடப்பது போல்தான் சிற்பங்கள் அமையும். அதில் மான் தன் பின்னிரு கால்களைத் தரையில் ஊன்றி, முன்னிரு கால்களை உயர்த்தித் தாவியவாறு இறைவன் கைப் புல்லைப் பறிக்கும். பல சிவக்கோலங்களில் சிவபெருமானின் பின் கைகள் ஒன்றில், குறிப்பாக இடக்கையில் தாவிய நிலையில் மான் காட்டப்படுகிறது. கொற்றவையின் ஊர்திகளுள் ஒன்றாய்ப் பழஞ்சிற்பங்களில் காட்சியாகும் மான், புள்ளமங்கை ஆலந்துறையார் உள்ளிட்ட மிகச் சில கோயில்களில் அம்மையின்  அடியவர் கயிறுகட்டிப் பிடித்திருக்குமாறும் கண்களில் நிறைகிறது. 

கோயில்களின் பூதவலபிகளிலும் தூண்களின் கட்டுகளிலும் கபோதக்கூடுகளிலும் மான்களைப் பரவலாகக் காணலாம். ஆனால், வாருணி மான் குட்டி ஈனும் அற்புதக் காட்சியைச் சொத்தாகக் கொண்டுள்ள ஒரே கோயில். மதுரை மீனாட்சியம்மன் கோயில்தான். 

அன்புடன், 
இரா. கலைக்கோவன்

பின்னூட்டமொன்றை இடுக