அன்புள்ள வாருணிக்கு, தேவதேவிச் சிற்பம் உன்னைப் பெரிதும் கவர்ந்ததாக எழுதியிருக்கிறாய். ஆடும்போது பிள்ளையாரே தம் தேவியை உடன் கொண்டு ஆடுகிறாரே, ஆடல்நாயகராகக் கொண்டாடப்படும் சிவபெருமான் உமையுடன் ஆடுமாறு சிற்பம் உள்ளதா என்று கேட்டிருக்கிறாய். ஒரிசாவிலும் கருநாடகத்திலும் நீ கேட்குமாறு சிற்பங்கள் பலவாக உள்ளன. இருவரும் அருகருகே ஆடுவது போலவும் அம்மையப்பராய் இணைந்தாடுவது போலவும் பல பேரழகுச் சிற்பங்களை அங்குள்ள கோயில்களிலும் அருங்காட்சியகங்களிலும் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டுப் பழங்கோயில்களில் அத்தகு சிற்பங்களைக் காணக்கூடவில்லை.
கரணக்கோலத்தில் உயர்த்திய தொடையில் துணையை அமர்த்தி ஆடும் அந்தப் பேறு மீனாட்சிக் கோயில் பிள்ளையாருக்கென்றே வாய்த்த பெரும் பேறு. அதை உருவாக்கிய நாயக்கச் சிற்பியின் கண்ணோட்டம் எண்ணிப்பார். ஏதோ புதுமை செய்யக் கருதிய வடிவம் அது என்று மட்டும் கருதிவிடாதே. ஒவ்வொரு சிற்பமும் மரபுகளை உடைத்தோ, மீறியோ உருவாக்கம் பெறும்போது அங்குச் சிற்பியின் எண்ணவோட்டமே தலையோங்குகிறது.
ஆகமங்களை உள்ளத்தில் இருத்தியே இது போன்ற படைப்புகள் உருவாகின்றன என்றாலும், ஆங்காங்கே நூலிழைகளில் எல்லைகள் தாண்டப்படுவதையும் கோடுகள் வளைக்கப்படுவதையும் பார்க்கமுடிகிறது. குடந்தைக் கீழ்க் கோட்டத்திலும் நல்லூர் மணவழகரிலும் இடம்பெற்றுள்ள களிநிலைப் பிள்ளையார் சிற்பங்களும் அப்படி வந்தவைதான். முதலில் ஒன்று, ‘புதிது’ என்ற பார்வையோடு பிறக்கிறது. மக்கள் அதை இரசிக்கத் தொடங்கும்போது அந்த வடிவம் இலக்கணமாகிவிடுகிறது. சில வடிவங்கள் இரசிக்கப்பட்டாலும் தனித்துவமாகவே இருந்துவிடுகின்றன. தேவதேவிச் சிற்பம் இரண்டாம் வகையினது.
வெறும் உளியும் அடிப்பானும் பிடித்திருப்பவர்கள் அல்லர் சிற்பிகள். அவர்தம் விரல்களில் படைப்பாற்றல் இருக்கிறது. உள்ளுக்குள் ஆகமங்கள் அலையடித்தாலும் பார்த்ததும் பரவசப்பட்டதுமாய்க் கண்களில் தெறித்துக் கற்பனையில் செறிந்தவை, அந்த அலைகளில் மிதக்கும் படகாய் அவர்தம் படைப்புகளில் நுழைந்துவிடுகின்றன. அதற்குச் சான்றாய் எல்லா மரபுகளிலும் காட்டுகள் உள்ளன. வாருணி, அடுத்தமுறை சந்திக்கையில் அவை குறித்துப் பேசுவோம். இப்போது மீனாட்சி என்னை அழைக்கிறார், என் கோயிலைச் சொல்லத் தொடங்கி, எங்கெங்கோ போகிறாயே என்று.
வீரம் செறிந்த வேட்டைக் காட்சிகள் ஐவகை நிலத்தும் பரவியிருந்ததைத் தமிழிலக்கியங்கள் உணர்த்துகின்றன. விலங்குகளோடு போரிட்டு உயிர் நீத்த வீரமறவர்களின் நடுகற்களும் கிடைத்துள்ளன. ஆனால், வேட்டைக் காட்சிகளைக் கோயில் சிற்பங்களாக நீ கண்டதுண்டா? மதுரை மீனாட்சிக் கோயிலில் ஒன்றல்ல,இரண்டல்ல, பல காட்சிகள் படமாகியுள்ளன. தூண் சிற்பங்களாகவும் துணைத்தளச் செதுக்கல்களாகவும் மரவேலைப்பாடுகளாகவும் அவற்றைக் கண்ணுற்ற நானும் பேராசிரியர் நளினியும் வியந்தோம். அங்கும் இங்குமாய் ஓரிரு வேட்டைக் காட்சிகளைச் சில கோயில்களில் கண்டதுண்டு. ஆனால், ஒரே கோயிலில் இத்தனை வீரக் காட்சிகளா?

சுற்றுத்தரைக்குத் தாழ உள்ள மீனாட்சி அம்மன் விமானத் துணைத்தளத்தில் மூன்று விலங்கு வேட்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூன்றும் மூன்றுவிதமான வேட்டை முறைகளை வெளிப்படுத்துகின்றன. முன்னும் பின்னுமாய் நிற்கும் இருவருக்கிடையே ஒரு காலை உயர்த்திய நிலையில் நிற்கும் விலங்கு சிங்கமாகலாம். முன்னுள்ள ஆடவர் அதை அம்புகளால் தாக்குகிறார். ஓர் அம்பு அதன் முகத்தில் நுழைந்துள்ளது. பின்னுள்ள ஆடவர் கைகளால் இறுகப் பற்றிய வாளை அவ்விலங்கின் பின் வழியே உடலுக்குள் நுழைக்கிறார். துணைத்தளத்தின் பெரும்பகுதியை நிறைத்திருக்கும் இச்செதுக்கல் ஒரு படக்காட்சி போல விரிந்துள்ளது.


இங்குள்ள பிற இரு சிற்பங்களும் புலிவேட்டை காட்டுகின்றன. ஒன்றில், முன்கால்களை உயர்த்திப் பாயும் நிலையில் புலி காட்சிதர, அது தன்னை வாயால் கவ்வாதவாறு தம் இடக்கையால் தடுத்தபடியே, வலக்கை வாளை அதன் கழுத்தில் செலுத்தியுள்ளார் வீரர். கழுத்தைத் துளைத்து வெளிப்பட்டுள்ள வாளும் உணர்வுகளின் களமாய் விளங்கும் வீரரின் முகமும் சூழலின் தன்மை விளக்குகின்றன. இரண்டாம் சிற்பம், காண்போர் மேனியைச் சில்லிடச் செய்கிறது. அதில், கருடாசனத்திலுள்ள வீரரின் வலக்கால் மேல் தன் கால்களை இருத்திச் சீறும் புலி, வீரரின் தலையைக் கவ்வும் நெருக்கத்தில் உள்ளது. அதை எதிர்கொள்ளும் வீரரோ, தம் வலக்கை வாளை அதன் மார்பில் பாய்ச்சி அதைச் செயலிழக்கச் செய்கிறார். காட்சியமைப்பு வீரரின் வெற்றியைக் காட்டுகிறது.

ஆயிரக்கால் மண்டப வாயிலருகே பேரளவினதாய் உள்ள வேட்டைக்காரரின் சிற்பம் குறிப்பிடத்தக்கது. அடர்த்தியான மீசை, கால்களில் தோல்பட்டைகள், இடக்கையில் வில் என நிற்கும் அவரது காலருகே குதிரை. அவரது வலப்புறம் ஏற்கனவே வேட்டையில் அடித்த மானைத் தம் தோளில் ஏந்திய அவரது இளவல். அதே மண்டபத்தின் உட்புறமுள்ள இரண்டு மரச்சிற்பங்களுள் ஒன்றில், தாவி வரும் சிங்கத்தின் வாயில் கத்தியை நுழைத்துக் கொல்லும் வீரர் படமாக, மற்றொன்றில் வேட்டை முடித்துச் செல்லும் மறவர் தம் தோளில் தாங்கலாக இருத்தப்பட்டு வலக்கைப் பிடிப்பிலுள்ள மூங்கிலில் வேட்டையில் கிடைத்த இரண்டு பன்றிகளைத் தொங்கவிட்டுள்ளார். நாயக்கர் கால வேட்டையாள் எப்படி இருந்தார் என்பதற்கு இந்த மரச்சிற்பமும் வாயில் சிற்பமும் சிறந்த காட்டுகளாகும்.

மீனாட்சியம்மன் கோயில் தேரிலும் வீரர் ஒருவர் புலியின் தலையில் ஈட்டியை நுழைத்து அதை உயிரிழக்கச் செய்யும் காட்சி உள்ளது. அதில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் வேட்டை வீரரின் உடல் சுழற்சியும் உணர்வுகளும் காணத்தக்கன வாருணி. அருகில் நிற்கும் அவரது இளவலின் வேல் அந்தப் புலியின் பின்னுடலில் பாய்ந்துள்ளது.
அக்கால வீரமறவர்களின் தோற்றம், உடலமைப்பு, ஆடை அணிகலன்கள், வேட்டையின்போது அவர்கள் கொள்ளும் கருவிகள், அவற்றைக் கையாளும் முறைகள் ஆகியவற்றோடு, கொல்லப்பட்ட விலங்குகளை அவர்கள் கொண்டு சென்ற வகையும் இச்சிற்பங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் சிறப்பு அவர்தம் முகக் குறிப்புகள்தான். இலக்கியம் இத்தகு காட்சிகளைக் காட்டும்போது நாம் அவற்றைக் கற்பனை செய்தே காணமுடிகிறது. இங்கோ, கற்பனைக்கே தேவையின்றி எல்லாமே கண்முன் காட்சியாக. இதுதான் சிற்பங்கள் நமக்கு வழங்கும் வரலாற்றுக் கொடை.
அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
