மு. நளினி, இரா. கலைக்கோவன்

சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ளது திருப்பைஞ்ஞீலி. ‘காதல் செய்பவர் பெறுவதென், சொலும் ஆரணீயவிடங்கரே’ என்று ஏழாம் திருமுறையில் சுந்தரர் கேள்விகேட்டு, மறுமொழிக்காய் நின்றது இவ்வூர் நீலிவனநாதர் கோயிலில்தான். அப்பருக்குச் சோறூட்டியதால் சோறுடைநாயனாராய் அறியப்படுபவரும் இக்கோயில் இறைவன்தான். சம்பந்தரின் பிள்ளைத் திருவடிகளும் இவ்வளாகத்தில் பதிகம் பாடப் பதிந்து சென்றன. தேவார மூவராலும் பாடப்பெற்ற தமிழ்நாட்டின் பெருமை மிகு சில கோயில்களுள் இப்பைஞ்ஞீலிப் பெருங்கோயிலும் ஒன்று.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களின் களஆய்வுகள் இங்குப் பதிவாகியுள்ள 71 கல்வெட்டுகளின் பாடங்களையும் வெளிக் கொணர்ந்துள்ளன. ‘திருப்பைஞ்ஞீலி – கோயிலும் கல்வெட்டுகளும்’ என்ற அம்மையத்தின் அண்மை வெளியீட்டில் கண்கள் பரவிய போதுதான் சோழங்கநல்லூரின் கதை வடிவமானது.
திருப்பைஞ்ஞீலிக் கோயிலில் இரண்டு அம்மன் திருமுன்கள் உள்ளன. இரண்டிலும் நீள்நெடுங்கண்ணி என்ற திருப்பெயருடனேயே இறைவி எழுந்தருளியுள்ளார். புதியவர் வடகிழக்கிலும் பழையவர் வடமேற்கிலும் திருமுன் பெற்றுள்ளனர். சோழங்கநல்லூரின் வரலாறு பேசும் கல்வெட்டுகளுள் இரண்டு, பழைய அம்மன் திருமுன் வடசுவரில் பதிவாகியுள்ளன. தெற்கில் செட்டிமங்கலம், உலகளங்காறநல்லூர் எல்லைகளாக, மேற்கில் சிற்றாம்பூரும் கிழக்கில் பைஞ்ஞீலியும் சோழங்கநல்லூரின் எல்லைகளாக இருந்தன.
இவ்வூரின் வடக்கு எல்லையாகப் பைஞ்ஞீலிக் கோயிலின் தேவதான ஊர்களான குன்றத்தூரும் குளக்குடியும் அமைந்தன. இந்த நான்கு திசை ஊர்களுக்கும் இடையிலிருந்த சோழங்கநல்லூரின் நிலம், குடியிருப்பான நத்தம், குளம் உட்பட்ட அனைத்தும், சுருங்கச் சொல்லின் மொத்த ஊரும் நெடுங்காலத்திற்கு முன்பே இறைவன் பெயரில் திருநாமத்துக்காணியாகக் கோயிலாரால் விலைக்குப் பெறப்பட்டு கோயிலுக்கு உரிமையுடைய ஊராக அவர்கள் பயன்பாட்டில் இருந்தது. வெங்காநத்தம் என்ற இவ்வூரின் பழம்பெயர் சோழங்கநல்லூரானது இந்த விற்பனைக்குப் பிறகுதான். புதிய பெயரேற்றபோதும் வெங்காநத்தம் முன்னொட்டாகவே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது.
இறைவன் பெயரில் கோயில் நிலமாக விளங்கியபோதும் இவ்வூருக்கான வரிகளைக் கோயில் செலுத்தவேண்டியிருந்தது. மூன்றாம் குலோத்துங்கசோழர் ஆட்சிக்காலத்தில் (பொ. கா. 1178-1218) அரசு அலுவலராக இருந்த சோழகோன் என்பார் இக்கோயில் மீது மிகுந்த அக்கறை கொண்டதை இங்குப் பதிவாகியுள்ள கல்வெட்டுகள் சிலவற்றால் அறியமுடிகிறது. அவரே நேரடியாகவும் சில போதுகளில் தம்மினும் அரசருக்கு அண்மையராக இருந்த மற்றோர் உயர் அலுவலரான வாணாதராயர் வழியாகவும் மன்னரிடம் பரிந்துரைத்து இக்கோயில் நிலத்தொகுதிகள் சிலவற்றுக்கு வரி நீக்க ஆணை பெற்றுள்ளார்.

சோழங்கநல்லூர் மீதும் சோழகோனின் கண்கள் விழுந்தன. இறைவனின் வழிபாட்டிற்கும் கோயில் திருப்பணிகளுக்கும் உதவுமாறு சோழங்கநல்லூர் நிலம் 415 வேலியையும் தேவதான இறையிலியாக்கி ஆணை பிறப்பித்தருளுமாறு வாணாதராயர் வழிச் சோழகோன் மூன்றாம் குலோத்துங்கரிடம் வேண்டுதல் வைத்ததை, ‘இந்நிலம் இத்தேவற்கு பூசைக்குந் திருப்பணிக்கும் உடலாக தேவதான இறையிலியாக நிற்கக் கடவதாகப் பெறவேணுமென்று சோழகோன் சொல்லி வரக்காட்டினானாக வாணாதராயன் நமக்குச் சொன்னமையில் இப்படிச் செய்யக் கடவதாகச் சொன்னோம்.’ என்ற மன்னரின் வாய்மொழி ஆணை தெளிவாகப் படம்பிடிக்கிறது.
அரசரின் இந்த வாய்மொழி ஆணையை ஓலையாக எழுதியவர், திருமந்திரஓலை எனும் பொறுப்பிலிருந்த மீனவன் மூவேந்தவேளார் ஆவார். அரசரின் திருமுகமாக அழைக்கப்பெற்ற இந்த ஓலை, கோயில் ஆட்சியருக்கான அறிவிப்பாக அமைந்தது. இத்திருமுகத்தை மேற்கோள் காட்டிக் கோயில் ஆட்சியருக்கும் கணக்கருக்கும் உயர்அலுவலர் வாணாதராயன் ஓலை அனுப்பினார். ‘வெங்காநத்தமான சோழங்கநல்லூர் நன்செயும் காடும் குளமும் கொல்லையும் நத்தமும் உள்பட திருநாமத்துக்காணியாக விலைகொண்ட நிலம் நானூற்று ஒருபத்தைய் வேலியும் இக்கோயிலுக்குப் பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாகப் பெறவேணுமென்று சோழ கோனார் நாயனார்க்கு விண்ணப்பஞ் செய்கையாலே தேவதான இறையிலியாக நிற்பதாக பிரசாதஞ் செய்தருளி திருமுகம் போந்தது இத்திருமுகப்படியே தேவதான இறையிலியாகக் கைக் கொண்டு பூஜையுந் திருப்பணியும் தாழவுட்டாமல் பண்ணுக’ என்று அவ்வோலை கோயிலாருக்கு வழிகாட்டியது.
பைஞ்ஞீலிக் கோயில் இறைவனின் வழிபாட்டிற்கும் கோயில் திருப்பணிக்குமாய்த் தேவதான இறையிலியாக்கித் தரப்பட்ட திருநாமத்துக்காணியான சோழங்கநல்லூர், மாறவர்மர் வீரபாண்டியர் காலத்தில் (பொ. கா. 1178-1218) மற்றோர் அரசாணைக்கு உட்பட்டது. அவர் ஆட்சிக்காலத்தில் பைஞ்ஞீலிக் கோயிலில் அவரது சிறப்புப் பெயர்களுள் ஒன்றான கலியுகராமன் எனும் பெயரில் சிறப்பு வழிபாடு அமைக்கப்பட்டது.
‘கலியுகராமன் சந்தி’ என்று கல்வெட்டுகள் கொண்டாடும் அச்சிறப்பு வழிபாட்டிற்கான செலவினங்களுக்கும் கோயில் திருநாள்களுக்கும் இறைவனுக்கான நித்த வழிபாடு, படையல் ஆகியவற்றுக்குமாய் மன்னர் தம் 29ஆம் ஆட்சியாண்டின் (பொ. கா. 1449) கார்த்திகைத் திங்கள் முதல் பயன்படுமாறு கோயில் சார்ந்த மூன்று ஊர்களை வரி நீக்கப்பட்ட தேவதானங்களாக மாற்றித்தந்தார். அவற்றுள் சோழங்கநல்லூரும் ஒன்று.
வீரபாண்டியரின் இந்த அரசாணைக் கல்வெட்டால், பொ. கா. 15ஆம் நூற்றாண்டில் மக்களிடமிருந்து பெறப்பட்ட 15க்கும் மேற்பட்ட வரியினங்களின் பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் காவேரிக்கரைத் தேவை குறிக்கத்தக்கது. காவிரியாற்றின் கரையைப் பராமரிக்கவும் நாணல் பயிரிட்டு அதை வலிமைப்படுத்தவும் தேவையான ஆள் உழைப்பை இது குறிப்பதாகக் கொள்ளலாம். இத்தகு ஆள் உழைப்புத் தொடர்பான பல வரிகளை முற்சோழர் காலத்திலிருந்தே காணமுடிவது குறிப்பிடத்தக்கது. இவை நீர்நிலைகளைப் பராமரிக்கவும் அவற்றை எப்போதும் பயன்பாட்டில் இருக்குமாறு கண்காணிக்கவும் ஊரவைகளுக்கு உதவின.
இந்தப் பதிவால், மூன்றாம் குலோத்துங்கர் காலத்திலேயே வரிநீக்கம் பெற்றிருந்தபோதும், சோழங்கநல்லூர் பின்னாளைய ஆட்சியர் காலத்தில் மீண்டும் வரிசெலுத்தும் நிலைமைக்கு ஆளாகியிருந்ததும் வீரபாண்டியர் அந்நிலை மாற்றி மீளவும் அவ்வூரை இறையிலித் தேவதானமாக்கியதும் தெரியவருகிறது. கோயில் ஆட்சியருக்கு வழங்கப்பட்ட இந்த அரசாணை அரசின் வருவாய்த் துறையினருக்கும் அனுப்பப்பெற்று அவர்கள் தங்கள் வரிப்பொத்தகங்களில் உரிய மாற்றங்களைச் செய்வதற்கும் வழிவகுத்தது.
ஓர் அரசரின் ஆணை தொடர்ந்து வருபவர்களால் பின்பற்றப்படுவதும் உண்டு. மாற்றத்திற்கு உள்ளாவதும் உண்டு. இது காலந்தோறுமான நடைமுறை என்பதை இப்பைஞ்ஞீலிக் கல்வெட்டுகள் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.
