ஆனைமங்கலம் செப்பேடு

இரா. கலைக்கோவன்

‘பரகேசரிவர்மரான இராஜேந்திரசோழனின் சாசனம்’ என்று பொறிக்கப்பெற்ற இலச்சினையுடன் 21 ஏடுகள் கொண்டதாய் விளங்கும் ஆனைமங்கலம் செப்பேடு ஹாலந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியா திரும்பியுள்ளது. சமஸ்கிருதத்திலும் தமிழிலுமாய் அமைந்திருக்கும் இச்செப்பேட்டின் தமிழ்ப்பகுதி கடாரத்து அரசர் சூளாமணிவர்மன் நாகபட்டினத்தில் அமைத்த புத்தவிகாரையைப் பராமரிக்கச் சோழவேந்தர் முதலாம் இராஜராஜர் ஆனைமங்கலம் என்ற ஓர் ஊரையே கொடையளித்த செய்தியைக் கொண்டுள்ளது.

ஐந்து ஏடுகளில் பொறிக்கப்பட்டுள்ள இச்செப்பேட்டின் சமஸ்கிருதப் பகுதி சோழ அரசர்களின் மரபுப் பட்டியலைச் சுட்டுமிடத்துக் கரிகாலன், கோச்செங்கணான், கோக்கிள்ளி ஆகிய இலக்கிய வழி அரசர்களையும் விஜயாலயரில் தொடங்கி முதலாம் இராஜேந்திரர் வரையிலான வரலாற்று வேந்தர்களையும் அடையாளப்படுத்துகிறது. அதன் வழிச் சோழ அரசர்களின் வெற்றிகளும் அவர்தம் கொடைகளும் வெளிச்சமாகின்றன. சோழகுல விளக்காக முதலாம் இராஜராஜரைக் குறிப்பிடும் இப்பகுதி, சூளாமணிவர்மரின் மகனும் ஸ்ரீவிஜயநாட்டின் தலைவருமான மாரவிசயோத்துங்கவர்மர் சூளாமணி விகாரத்தைத் தம் தந்தையின் பெயரால் உருவாக்கிய செய்தியைத் தருவதுடன், அவ்விகாரையில் வீற்றிருக்கும் புத்தருக்கு முதலாம் இராஜராஜர் ஆனைமங்கலம் என்ற ஊரைக் கொடையளித்த தகவலையும் பகிர்ந்துகொள்கிறது.

சமஸ்கிருதத்திலும் தமிழிலும் புத்தவிகாரையின் கட்டுமானம் குறித்துக் கிடைக்கும் தரவுகள் அது சூளாமணிவர்மரால் தொடங்கப்பட்டு அவர் மகனால் முடிக்கப்பெற்றதை உணர்த்துகின்றன. அது போலவே இராஜராஜரால் புத்தவிகாரைக்கு ஆனைமங்கலம் கொடையளிக்கப்பட்டதைத் தமிழ்ப்பகுதியும் அது தொடர்பான நிலையான சாசனம் அவரது மகனும் பேரரசருமான முதலாம் இராஜேந்திரர் காலத்தில் உருவாக்கப்பட்டதை சமஸ்கிருதப் பகுதியும் தெளிவாக்குகின்றன.

இராஜராஜரின் வாய்மொழியாக வெளிப்பட்ட இந்தக் கொடை ஆணை அவரது அலுவலரால் ஓலையாக எழுதப்பெற்று, பல உயர்அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பிறகு ஆனைமங்கலத்தை உள்ளடக்கியிருந்த பட்டினக்கூற்ற ஆட்சியருக்குத் திருமுகமாக அனுப்பப்பெற்றது. அரசரை வரவேற்குமாறு போலவே அவரது திருமுகத்தையும் வரவேற்ற பல்வேறு ஆட்சிக்குழுவினர், அதில் சொல்லியிருந்தாற் போலவே உரியவர்களைக் கொண்டு ஆனைமங்கலத்தின் எல்லைகளை வரையறுத்தனர். அவ்வூர் மீதான அரசு வரிகளைப் பட்டியலிட்ட வருவாய்த்துறையினர் அவற்றை அரசு வரிப்புத்தகங்களில் தவிர்த்து அவ்வரியினங்களை விகாரை பெறுமாறு மாற்றியமைத்தனர்.

ஆனைமங்கலத்தின் 97 வேலி நிலப்பரப்பு அளித்த 8943 கலம் இரண்டு தூணி குறுணி ஒரு நாழி நெல்வருவாய் இராஜராஜரின் ஆணைக்குப் பிறகு புத்தவிகாரையின் வரவானது. ஆண்டுதோறும் தொய்வின்றிக் கிடைத்த இந்தக் கொடைநெல் விகாரையின் பணிகளை வளப்படுத்தியது. அரசாணையை நிறைவேற்றியவர்களின் இத்தகு பல்வேறு செயற்பாடுகள் சோழர் கால நில அமைப்பு, வேளாண்மை, நீர்ப்பாசனம், வரிவருவாய், வருவாய்த்துறையின் இயக்கம், அதன் அலுவல் நிலைகள், வழக்கிலிருந்த பதிவேடுகளின் பெயர்கள் எனப் பல பொருளாதார, சமுதாயச் செய்திகளையும் அக்காலத்தே வழக்கிலிருந்த நாடு, கூற்றம், ஊர் முதலிய வருவாய்ப் பிரிவுகளையும் வெளிப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் இதுநாள்வரை கிடைத்துள்ள செப்பேடுகளில் புத்தவிகாரைக்கான கொடை பற்றிப் பேசும் முதல் செப்பேடு இதுதான். தந்தை தொடங்கிய விகாரையை மகன் முடித்ததும் அதற்குத் தந்தை அளித்த கொடையை மகன் சாசனமாக்கியதுமான இரு வேறு அரசுகளின் இணையான செயல்கள் ஒருசேர உள்ளடங்கிய ஒரே செப்பேடும் இதுதான்.